About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Wednesday, July 8, 2015

கொப்பிக்காதல்கள்

இந்தப்பதிவு தோற்றுப்போன காதல்கதைகளைப் பற்றியோ இல்லை வென்ற காதல் கதைகளைப்பற்றியோ இல்லை.
இது கொப்பிக்காதல் கதைகளைப் பற்றியது.அது தோற்றிருக்கலாம்/வென்றிருக்கலாம்.
தோற்றிருந்தாலோ அல்லது வென்றிருந்தாலோ வெளியுலகிற்கு தெரிந்திருக்கும்
ஆனால் இந்த கொப்பிக்காதல் கதைகள் பெரும்பாலானவை கொப்பியின் சிவப்பு கோட்டோடு முடிந்து விட்டிருக்கும்.
ஆனால் இது அதிலும் கொஞ்சம் வித்தியாசமாய்.....

08/03/2002 - 9ம் ஆண்டில் அண்ணர்.
அண்ணர் (கவனிக்க! இங்கே அண்ணர் என்று குறிப்பிடுவது சொந்த அண்ணரை அல்ல) நிறைய நேரம் இருந்து,படுத்து,உக்காந்து,நடந்து படிக்கிற ஜாதி.அப்பப்ப படிச்சு களைக்கிற போது மைண்டை பூஸ்ட் பண்ணுவார் , எப்டினா புத்தகங்கள்,கொப்பிகள்ள எழுதின இடம் போக மிச்ச சொச்சமா கொஞ்ச இடம் வெள்ளையா இருக்குமில்லயா! அதில படம் கீறுவார்- பேனையாலையே - அப்புறமாய் அதில் ஏதும் எழுதுவாரு,பார்க்கமலே சொல்லலாம் அது கட்டாயம் பேனையைக்கடிச்சபடி பக்கவாட்டில பார்க்கிற ஒரு பொம்பிளை புள்ளையாத்தான் இருக்கும்.நிச்சயமாய் உதட்டோரத்தில் சின்ன மச்சம் இருக்கும்.

கீழ அண்ணரின்ர பேர் அதோட செருகினாற் போல அண்ணின்ர பேரும்.
இப்படி இரண்டு மூண்டு ஒற்றையள்ள எழுத்து சைஸ், பொன்ட் சைஸ் எல்லாம் மாறி இந்த 2 பேரும் இருக்கும்.

02/05/1996 - 3ம் ஆண்டில் அண்ணர்
படிச்சுக்கொண்டு இருந்த போது பக்கத்தில இருந்தவன் இவற்ற பேரையும்,அதே வகுப்பில படிச்ச வாசுமித்திராவின்ர பேரையும் சேர்த்து இவற்ற கொப்பில எழுதினதை பார்த்து கோபப்பட்டு,ஆத்திரப்பட்டு
"வா  சுமித்திரா ரீச்சரிட்ட சொல்லாம்"
என்டு போய் சொல்லி அவனுக்கு அமத்தலாய் அடி வாங்கி கொடுத்தவர்.

இப்போது அந்தக்கொப்பி பரணிலுள்ள செல்பில் மூன்றாவது தட்டில் நாலாவது வரிசையில் கிடந்து கொக்கரித்து சிரிப்பது அண்ணருக்கு தெரியாது.

05/07/2003 - 10ம் ஆண்டில் அண்ணரின் கிஸ்டரி பாடக்கொப்பியில
ஒல்லாந்தர் வருகையோடு கடைசிக்கு முதல் பக்கம் முடிந்து கடைசி பக்கம்
சில செய்கைவழிகள்,சில சமன்பாடுகளோடு இவற்ற பேர் Vs அவவின்ர பேர் போட்டு ஒவ்வொரு எழுத்தா வெட்டி இரண்டு மூண்டு தரம் FLAMES எழுதி அண்ணர் டிரை பண்ணி இருக்கார்.ஒரு தடவைத ப்ரண்ட் வந்து வெட்டியிருக்கார்.மற்றொரு தடவை எனமி வந்திருக்கு அதை வெட்டோ வெட்டென்று வெட்டியதில் மற்ற பக்கத்திலிருந்த ஒல்லாந்தர்கள் தெரிந்தது.
மூன்றாவது தடவை லவ்வர் வந்திருந்தது சரியாய் , எப்படி என்று பார்த்ததில் அண்ணர் தன் பேரில் இருந்த h ஐ உருவி விட்டு எழுத்துகளை வெட்டி இருக்கிறார்.

எல்லாவற்றையும் போட்டு நான் வெட்டிப்பார்க்க வேண்டும் போலிருந்தது ஆனால்

04/02/2004 - 11 ம் ஆண்டில் அண்ணரின் கணித பாடக்கொப்பியில் ஒரு மூலையில் இதயம் வெடித்தது போல சித்திரம் கதையை முடிவுக்கு கொண்டு வந்தது
என்ன நடந்தது தெரியாது.
இவர் தன் காதலை சொல்லியிருக்கலாம்
அவள் நிராகரிகரித்து இருக்கலாம்.
இல்லை அவள் வேறு யாரையாவது காதலித்திருக்கலாம்

கொப்பிக்காதல் ஆகையால் வெளியில் நடந்த எதுவும் தெரியாது.கொப்பியில் உள்ள விசயங்கள் மட்டும் தான் தெரியும்.

இதோடு கதை முடிந்தது என்று நினைத்தது மகா தப்பு.

07/07/2005 - ஏஎல்லில் அண்ணரின் ப்சிக்ஸ் கொப்பியில்
புதிய சித்திரமும் புதிய பேரும் ஆச்சர்யப்படுத்தியது.ஓ வெயிட்....வெயிட்  படம் மட்டும்தான் இருக்கு பேரில்லை அது டீச்சரோட சைன்.நான் மாறி பார்த்துட்டன். அப்ப பேர் எங்க என்டு தேடினதில் வேணியரின் இடுக்கிக்குள் செருகி எழுதி இருக்கிறார் அண்ணர்.கழண்டு விடாமல் இருக்கோணும் என்டதற்காயிருக்கலாம் யார் கண்டது.

அதே பேரும் அதையொத்தால் போல படமும் கொஞ்ச கொஞ்ச வித்தியாசங்களோடு பெரும்பாலான எல்லாக் கொப்பிகளிலும் தொடர்ந்து வந்த வருடங்களில் காணக்கூடியதாய் இருந்தது.

அதில் குறிப்பாய் 08/05/2006 ல் அண்ணரின் கொப்பியில் இருந்த இரண்டு பேரையும் சிவப்பு பேனையால் சுற்றி வட்டம் போட்டு வெட்டியிருந்தது.கொப்பி எங்கோ ரீச்சரிடமோ இல்லை சேரிடமோ மாட்டுப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் கடைசிக் கொப்பி வரை தேடியதில் எங்கேயுமே அந்த காதலுக்கு இங்கே எழுதக்கூடிய மாதிரியான எந்த முடிவும் சிக்கவில்லை.

தொடர்ந்து அண்ணர் பல்கலையில் படித்த போது இருந்த கொப்பி, புத்தகங்கள் என் பார்வைக்கு சிக்கவில்லை.அதிலும் ஏதாவது பேர் வந்திருக்கலாம்.

அவ்ளோதான்
கதையை முடிக்கலாமா? என்றால் இல்லை.இன்னும் நான்கு வரிகள் இருக்கிறது முடிய,

04/07/2015 - 27 வயதில் அண்ணர்....
இந்த திகதியில் அண்ணர் தன் பேரை கோர்த்து எழுதிய பெரிய கொப்பி ஒன்று என் கண்ணில் மீண்டும் பட்டது.ஆனால் இந்த தடவை அண்ணர் தன் பேரை மட்டும் எழுத அண்ணியே தன் கையால் அந்த திருமண பதிவுக் கொப்பியில்  அண்ணரின் பேருக்கு பக்கத்தில் தன் பேரை எழுதியிருந்தா

வா..சு...மி...த்..தி...ரா  என்று.


        ##########














#அற்பபிறவி#