About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Thursday, June 18, 2015

குப்பிவிளக்கு கொலைகள்

வெளிச்சம், அந்தப்பக்கம் யன்னல் அல்லது கதவு, தப்பி விடலாம் எப்படியும்.சுதந்திரம்,சுதந்திரம் விசிலடித்த படி மஞ்சளாய் ஒளி வந்த யன்னலை நோக்கி போய் அதனுள் குபீரென்று நுழைந்து ஆஆஆ... நிச்சயமாய் ஒரு பெரிய அலறல்.உடலெல்லாம் எரிகிறதே என்று பார்பதற்கிடையில் எரிந்து விழுந்து முடிந்து....... இரண்டாவது விட்டில் பூச்சி.ஒரு வேளை முதல் எரிந்ததின் மனைவியாய் இருக்கலாம்,உடன் கட்டை ஏறியிருக்கலாம்.மட பூச்சி பெண்ணடிமைத்தனம் ஒழிந்து ஆண்,பெண் சமத்துவம் கிடைத்த விசயம் தெரியாதோ என்னவோ.ஒளிப்பிழம்பு காத்தடித்த பக்கம் முப்பது டிகிரியில் சாய்ந்து மீண்டும் நிமிர்ந்து நின்றது.பிழைக்க தெரிந்தது.குப்பி விளக்கு எரிந்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருப்பதற்கு மட்டும் போய்விடும் பாதி படிக்கும் நேரத்தில்.



குப்பி விளக்கிலும்,தெருவிளக்கிலும் படித்த எல்லாரும் லிங்கனாகவோ,இல்லை கலாமாயோ ஆவதில்லை.வேண்டுமானால் அவ்வாறு ஆன பின் சொல்லிக்கொள்ளலாம்,"நான் குப்பிவிளக்கில்தான் படித்தேன் என்று".

ஆனால் இந்த குப்பிவிளக்கில் படிப்பதில் மட்டும் ஒரு அலாதியான இனிமை இருக்கிறது.விளக்கு புத்தகம் மட்டும் வெளிச்சமாய் மற்றது எல்லாம் இருட்டாய்....
சண்டையின் போது அனுபவித்த அனேக கஷ்டங்களுள் சில சந்தோசங்கள் இப்படியும் கிடைத்தது.

வால்கட்டைக்கு மேலே உள்ள திரி எரிந்து உருண்டையாய் ஒரு கரி, ஓரத்தில் அதுவும் சேர்ந்து எரிந்து கொண்டிருக்க ரினோட் பேனையின் பின் பக்கத்தால் தட்ட நிலத்தில் விழுந்தது.ஒரு பேனை குறைந்த பட்சம் ஒரு கிழமை தாக்குப்பிடிக்கும்.ஆனால் வாங்கி இரண்டு நாளிலேயே பின்பக்கம் சாதுவாய் உருகி காபனும் ஒட்டிக்கொள்கிறது.இந்த கரிவராமல் இருக்க ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் இல்லை அதை தட்ட ஒரு குச்சியை விளக்கோடு கட்டித்தூக்க வேண்டும்.

விளக்கை வலதுபக்கம் தள்ளி வைத்து விஞ்ஞானத்தை இடதுபக்கம் தள்ளி விட்டு நடுவில் தலகாணி போட்டுக்கொண்டு பிரபஞ்சகனவு காண தயாரகும் போது நேற்று நினைத்து இன்றைக்கு மறந்து நாளைக்கு எப்படியும் தட்டவேண்டும்.அது வரைக்கும் ரசிக்கலாம் கரி படிந்த கருப்பு நிற சிலந்திவலையை,மண்ணெண்ணைய் புகைக்கு இசைவாக்கமடைந்த எட்டுக்கால் குடும்பத்தை.குடியைக்கெடுப்பதா? பிழைத்துப்போகட்டும்.நாளைக்கும் இதை மறந்து போய் விடலாம்.

நாளைக்கு இன்னுமொரு விளக்குசெய்து கொடுக்க வேண்டும் அத்வைதாவுக்கு.அத்வைதா ஒரு சிறிய அறிமுகம்.வீடில்லாத லிஸ்டில் பேரைச்சேர்த்துக்கொண்டு நிறைய நாளாய் தறப்பாளுக்குள் அவிந்து இப்போது யாரோ சொந்த ஊரில் வீடு கட்டி போய் சேர்ந்த புண்ணியத்தில் இருந்த முப்பது வீடுகளில் மூன்றாவதாய் உள்ள வீட்டிற்கு குடி வந்து ஏழாம் நாள் அம்மாவோடும் ஒன்பதாவது நாள் என்னோடும் நட்பு கொண்டாடி நேற்று  விஸ்வரின் கடையில் எருமைமாட்டு விலையில் மெழுகுதிரி வாங்கும் போது

"வீட்டில் லாம்பு இல்லையா?"

"இருந்துச்சு,சிமினி உடைஞ்சு போயிட்டு."

"வீட்டலயும் இதே பிரச்சினைதான்.கொஞ்ச நாள் உடைஞ்சதை பொருத்தி பேப்பர் வைச்சும் பார்த்தன்.பேப்பர் இரண்டுநாள்ல கருகிட்டுது. இப்ப குப்பிவிளக்குத்தான்.
மெழுகுதிரி காத்தடிச்சா அணைஞ்சுடுமே.எப்படி சமாளிக்றாய்.மேசைவிளக்குள்ள வைச்சா?"

"டக்கெண்டு அணைஞ்சாத்தான் நல்லது"

"ஏன்?வீட்ல சல்பர் கொம்பனி வைச்சிருக்கிறியா,இல்லை கல்லை உரஞ்சினோன்ன நெருப்பு பத்துதா?"
ஒரு நெருப்பெட்டி பன்னன்டு ரூபா,விசுவர் பதினைஞ்சுக்கு விக்கிறார்.நீ எப்படி அணைய, அணைய.."

"அப்ப எனக்கொரு விளக்கு செய்து தார்றியா?"

என்று கேட்டதில்,சைக்கிள் கடையில் வால்கட்டை பொறுக்கி,பரசிற்றமோல் பாணி வந்த கண்ணாடிப்போத்தலைக்கழுவி அதன் மூடியில் வால்கட்டையை அடித்து திரி உருட்டி மண்ணெண்ணைய் விடவில்லை.பூட்டிக்கொண்டு போய் நீட்டினேன்.

"எவ்ளவு தரணும் இதுக்கு?"

"இதுக்கு தரணும்னா,உன்கிட்ட இருக்றது பத்தாதே?"

"இது பாவிக்றதுதில கொஞ்சம் டிரிக்ஸெல்லாம் இருக்கு.கேட்டுக்கோ"

முனைல அடிக்கடி உருண்டை,உருண்டையா கரி வரும்,அதை ரினோ ச்சீ ஏதாச்சும் ஒண்ணால தட்டி விடனும்.

"அப்புறம்,கொஞ்சம் உப்பு எடுத்து உள்ள போட்டுக்க"

"உப்பா!ஏன்?"

"பவரா எரியும்"
அதுமட்டுமில்ல எண்ணெய் முடிஞ்சு அடில கொஞ்சம் நிக்குதுன்னா.."

"தண்ணி விடறதா?"

"ஆமா,அதேதான்."

"கொழுத்திவைச்சுட்டு அதைப்பார்த்துட்டு இருந்தாலே நேரம் போறது தெரியாது.ஆனா கவனம் இதின்ட மூடி பெரிசா டைட்டில்ல.தலைமயிர் போயிடும் அப்புறம்."

"ஏய்,என்ன இது?"

"ஒண்ணுமில்லையே"

"உன் உள்க்கையைக்காட்டு,ஏன் இப்படி?"

"அந்த பார்வை ஒரு வெற்றுப்பார்வை இல்லை தீட்சண்யப்பார்வை பரியவில்லை???"

"இந்த தழும்புக்கு அப்பாக்கு அம்மா 500 ரூபா கொடுத்தாங்க,இதுக்கு 1000,இதுக்கு ம் 700 ,இது கடைசியா வந்ததது இன்னும் காயமல்ல. இப்படித்தான் என் வீட்ல சிம்னி உடையும்.அடுத்த நாள் காலைல புதுசா அப்பாவே வாங்கிட்டு வந்துடுவார்.கடைசியா அம்மா காசு கொடுக்கல்ல லாம்பை எடுத்து ஒளிச்சிட்டாங்க.அதில இருந்து மெழுகுதிரி.
மெழுகுதிரினா டக்கென்னு அணைஞ்சுடும் பெரிசா சுடாது."சிரித்தாள்.

போகும் போது , விளக்கு செய்து கொடுத்தது தப்பாய் பட்டது.

நிறைய விசயங்கள் புரிந்து புரியாமல்.

இதன் பின் இரண்டுநாள் போய் இரவு,
இந்த கதையின் கிளைமாக்ஸ் நடந்து கொண்டிருந்த போது,என் வீட்டில்
குப்பி விளக்கொளி காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்க
இரண்டு விட்டில்பூச்சிகள் மீண்டும்,வெளிச்சத்தை நோக்கி வேகமாய் வந்து
ஆனால் இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாய்
ஒன்று நெருப்புக்குள் விழ,மற்றது சமாளித்து விலகி பறக்க.......

எல்லா வெளிச்சமும் தப்பிச்செல்வதற்கு ஏதோ ஒரு வழியை காட்டுகிறது.

ம்ம்.


##########












#அற்பபிறவி#

Thursday, June 4, 2015

மிடில் விக்கெட்

நீண்ட நாட்களாகி விட்டது.
இந்த வருடத்திற்கான "நெருப்புக்கிண்ண" மட்ச் புளியடி ரீமோடு தொடங்குவதற்கு இன்னும் நான்கைந்து நாட்கள்தான் இருக்கும் வேளையில் புகை வடிவாய் ஒரு பூதம் வந்திருந்தது.
அதற்கு முதல் அது என்ன நெருப்புக்கிண்ணம்?

ஆஸ்ரேலியா இங்கிலண்ட்டின் சாம்பல்கிண்ணத்துக்கு போட்டியாய் அதைப்போலவே எங்கள் ரீமுக்கும் புளியடி ரீமுக்கும் தொடங்கிய தொடர்.இந்தக்கால கட்டத்தில் மட்டும் டாம் அண்ட் ஜெர்ரி சண்டைகளை மறந்து குண்டுமணியும், கிச்சாவும், தம்பாவும் தோளில் கை போட்டுக்கொண்டு புளியடி ரீமை எதிர் கொள்ள.மட்ச் நடக்கும் தொடர்ந்து மூன்று நாட்கள் மாலை 3 தொடக்கம் பட்ஸ்மனுக்கு பந்து தெரியும் வரை நடக்கும்.

எங்கள் கிரவுண்டில்தான் மட்ச்.மட்ச் நடக்கும் போது கிரவுண்ட் மூலைக்கு ஓடிப்போய் கண்ணைக்கசக்கி விட்டு பார்த்தீர்களானால் அதில் நிற்கிற விலாட்டு மாமரத்தின் கீழ்க்கொப்பில் சணல்கயிறு போட்டு பல இடங்களில் நெருப்பு பிடித்த அடையாளத்துடன் ஒரு பெரிய சம்பியன் கப் தொங்கும்.அதுதான் நெருப்புக்கிண்ணம்.நடந்தது இதுதான் - முதல் முதல் தடவை மட்ச் போட்டு நாங்கள் வென்ற போது கப்பை கடையில் வாங்கி அதை நெருப்பில் காட்டி எரித்து விட்டு தந்தது புளியடி ரீம். அடுத்த தடவை  தோற்ற போது அதே கப் நெருப்பில் வாட்டிக்கொடுக்கப்பட்டது.
இதுதான் நெருப்புக்கிண்ணம் வந்த சுருக்கமான வரலாறு.

இந்த தடவை யார் அதை நெருப்பில் காட்டுவது என்பதற்கு மேலால் வேறு ஒரு பிரச்சினை.நேற்று குழுக்கூடி நின்ற போது கிரவுண்டுக்கு பக்கத்தில் இருந்த கோயில் ஐயர் வந்திருந்தார்.ஐயர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருந்தார்-பட்டி பூணூல் தொடங்கி தொந்தி வரை.ஆள் கொஞ்சம் கறார் .அவ்வப்போது அவர் செய்யும் அமுதில் கை வைத்ததாய் இருக்கலாம். இல்லை .......வேண்டாம்.
அதனால் ஆள் நந்திக்கு பூசை முடிந்தவுடன் பலிபீடத்திலிருக்கும் புக்கையை காகத்துக்கு போட்டுவிட்டு அது வந்து தின்னும்வரை காவல் இருப்பார்-வைரவருக்கு பக்கத்தில்.

அவ்வப்போது வடை மோதகம் தருகின்றார் என்றால் அன்று போகும் போது கோயில் கழுவ வேண்டும் என்றர்த்தம்.
நேற்று வெறுங்கையோடு வந்தவர்...

"நாளை இண்டைக்கு கோயில் திருவிழா தொடங்குது.அது முடியும் வரை இதில விளையாடேலா!"

"ஏன்?"
விச்சுவாக்கு தோள்துடித்தது.

"நீங்கள் சாமி ஊர்வலம் வரேக்க பந்தை விசுக்கிவியள். அவரும் கூட வந்து விளையாடத்தொடங்கினா, ஆருக்கு அர்ச்சனை செய்றது. ஆருக்கு நைவேத்தியம் படைக்கிறது.அந்த சொத்தி தடிகளுக்கா, விக்கெட் வெட்கத்தில் சிவந்தது.!"
பெரிய ஹாஸ்யம் போல கொடுப்பு சூத்தை தெரிய சிரித்து எந்த நிராகரிப்புக்களையும் கேட்காமல் பின் தொந்தி அசைய நடந்த போது பூதம் தெரிந்தது.

வரட்டும் ஆள்,  கோயில் வேலையளுக்கு.அப்ப தெரியும் கூட ஆர் விளையாடுறது என்டு!?.

"இந்த முறை மாம்பழத்திருவிழாக்கு நீ பிள்ளையாராப் போகதையடா!!
உவர் எங்க இருந்து ஆளைப்புடிக்றார் பார்ப்பம்"

குண்டுமணி ராகீயை முறைத்தான்.(மாம்பழத்திருவிழா கதை வேறொரு பதிவில் வரும்)

இப்போது மீண்டும் கிரவுண்டுக்கு திண்டாட்டம்.

அதற்கு அடுத்த நாள் கிரவுண்ட் தேடிய முயற்சியில் கிடைத்தது கோயிலுக்கு மேற்கால் கொஞ்சம் தள்ளி நிறைய பற்றை ஓரிரு மரங்கள் என்று என்று ஒரு பெரிய இடம்.ஆனால் பிரச்சினை அதை துப்பரவாக்க குறைந்தது எல்லாரும் சேர்ந்தாலும் ஒரு கிழமை போய் விடும்.ஒரு நாள் மட்ச்சை பின்னுக்கு தள்ள கேட்டாலே புளியடிக்காரங்கள் பளீச்சா காட்டி பயம் என்டுவாங்கள்.தாங்க முடியாது.

வேறு ஏதாவதுதான் செய்ய வேண்டும் என்று மண்டையை குடைந்ததில் அடுத்தநாள் கோயில் அறிவித்தற்பலகையில் ஒரு மட்டை
தொ
ங்
கி

து.

*கோயில் திருவிழாவை முன்னிட்டும்
கோயில் சூழலை சுத்தமாக்கும் நோக்கில் - சிரமதானம்.
*ஜூன் 5 காலை 8.00 மணியளவில் அயலவர்கள் அனைவரும் கோயிலடியில் ஒன்று கூடவும் தேவையான கருவிகளுடன்"
*சிற்றுண்டி,குளிர்பான உதவிகளையும் வழங்குங்கள்.
   
"முருகன் சூழலை சுத்தம் செய்து முக்தியின்பம் பெற வாரீர்"
           
                                                                              -கோயில் நிர்வாகம்.

கூர்ந்து பார்த்தால் கோயில் நிர்வாகம்  என்று எழுதிய இடத்தில் வெடியனின் சிரித்த முகம் தெரியும்.

ஜூன் 5
எதிர்பார்த்தது போலவே முக்தி பெற நிறைய பேர் ஆசைப்பட்டு கத்தி,கோடலி மண்வெட்டிகளுடன் வந்திருந்தனர். அத்தனைபேரையும் சாய்த்துக்கொண்டு போய் முதலில் காட்டிய இடம்-நெருப்புக்கிண்ணம் நடைபெறப்போகின்ற இடம்.

முப்பதுபேரோடு எங்களில் பத்தும் சேர்ந்து பத்தைகளை வெட்டித்தள்ள விசித்திராவின் வீட்டிலிருந்து விசித்திராவே காரணமெதுவும் இல்லாமல் நெல்லிக்கிறஸ்ஸும் மஞ்சி பிஸ்கட்டும் கொண்டு வந்தாள்.

ராகீக்கு கவிதை வந்தது.
"நெல்லியடி நானுனக்கு
கிறஷ்ஸடி நீ எனக்கு
நொருக்கி விடாதே என் இதயத்தை மஞ்சிபிஸ்கட்டாய்"

ராகீ அதை ஓடிப்போய் வாங்கி.....ஏதோ....கதைத்து...ஏதோ சொல்லி விட்டு வந்து கொண்டிருந்தான். இரண்டாவது ரவுண்ட் வந்த போது, பக்கத்தில் நிற்க கதைத்தது இல்லை கவிதை சொன்னதும் காதில் விழுந்தது. 

"அன்பே கேவலம் நம் காதலையும்
ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்புக்குள் அடக்கி
பட்டர்பிளை எபக்ட் என்பதா?
முடியவே முடியாது....

ஆக்ராக்கு கொண்டுபோய் அங்கே
இன்னுமொரு தாஜ்மகால்
கட்டி அடக்கலாமா?

இல்லை எகிப்து பிரமிட்டுக்களுக்கு
இடையில் தோண்டி மம்மியொன்றோடு
புதைத்து விடலாமா?

கடைசியாய் கடவுளின் துகள்கள்
என்று கண்டுபிடித்தார்களே
அதற்குள் அமுக்கி விடலாமா?"

ராகீ சொல்லி முடிப்பதற்கிடையில் விசித்திரா போய் விட்டாள்.கடைசி ரவுண்ட் வந்த போது ஏதோ ஒற்றையில் எழுதிக்கொண்டுவந்து கொடுத்து விட்டு போனாள்.

ராகீ வெளியே கேட்க கூடிய வாறு படித்தான்.

"ஆருயிரே!
உன் இழவு காதலைக் கொண்டுபோய்
உன் வீட்டு இடியப்ப உரலிலே அடக்கி பிழி
தட்டிலே வரும் நெளி
அதிலே எனைப் பார்த்துக் கழி"

செமையா எழுதியிருக்காளில்ல

ம்ம்.பித்தம் தலைமயிருக்கு ஏறிவிட்டிருந்தது

மத்தியானத்திற்கிடையில் எல்லாப்பற்றையும் வெட்டி மண் தெரிந்தது.
காணியின் மத்திய பகுதியில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இஞ்சியளவு தடிப்புள்ள வேப்பமரம் நிற்க, கத்தியை தூக்கி கொண்டு குண்டுமணி போக, ராகீ அதை வெட்ட வேண்டாம் என்று இடையில் போய் நிற்க, போர் வருமா என்று அமெரிக்கா வட கொரியாவிடம் கேட்டது.

"இது இருந்த எப்படி விளையாடுறது" குண்டுமணி கோபத்தில் மரத்தை உலுப்பியதில் அதிலிருந்த குருவிக்குஞ்சு நிலத்தில் விழுந்து கீச்சு மாச்சு என்று பறக்க முடியாமல் கத்த தாய்க்குருவி மேலிருந்து கத்த
எல்லாரும் அந்த இடத்தில் கூட
ஒரு மாதிரியாகி விட்டது குண்டு மணிக்கு.

ஒரு நிமிட மரண அமைதி நிலவியது

"சொறிடா"
குண்டுமணி மன்னிப்புக்கேட்டது முதல் ஆச்சரியம்
"நானே இதை பத்திரமா மேலே ஏறி வைச்சு விடுறன்"
என்றது இரண்டாவது ஆச்சரியம்.
குண்டு மணி மேலே ஏறும் போது அவனை மரம் தாங்கினால் முதலிரண்டிலும் பெரிய ஆச்சரியம் மூன்றாவது.

"உனக்கு முதலே தெரியுமா"

ஒற்றையை காட்டினான்

மேலே இருந்த அந்தக்கருமக்கவிதையின் கீழ் ஒரு அருமையான கவிதை

"தயவு செய்து யாரையும் இந்த மரத்தை வெட்ட விடாதே. - எனக்காக "

"எனக்கும் இந்த குருவிக்கூடு இருக்கிறது தெரியாது.நான் இதுக்காகத்தான் இந்த மரத்தை வெட்ட வேண்டாம்னு சொல்றாள் என்டல்லோ யோச்சன். ராகீ முகத்தில் நெல்லிக்கிறஸ் வழிந்தது.

"எதுக்காக?"

ராகீ கைகாட்டிய திசையில்


சின்னதாய், மரத்தில் விசீ + ராகீ சுற்றி வர இதயம் எழுதப்பட்டு இல்லை, இல்லை செதுக்கப்பட்டு இருந்தது.
குருவிக்காக ஒரு காதல்.

சிரமதானம் இனிதே நிறைவேறியது.

                              ××××××××

இன்றோடு நெருப்புக்கிண்ண மட்சின் இரண்டாவது நாள் முடிவு.
நாளைக்கு முடிவு தெரியும் யார் கிண்ணத்தை எரிப்பது என்று.
ஆனால் ஒன்று இதுவரைக்கும் ஏன் இனிக் கூட யாரலுமே விழுத்த முடியாது
அந்த
             "மிடில் விக்கெட்டை"




           #################



















#அற்பபிறவி#