About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Friday, January 14, 2022

கடையப்பா - The man who opens the gates

ஊருக்குள் ஒரு நகர் பகுதி இருக்கிறது. ஏனைய நகர்ப்பகுதிகளை போலத்தான். அதிகாலை நான்கு, நான்கரைக்கெல்லாம் மெதுவாக துயில் எழுந்து கொள்ளும். வீதியிலிருக்கும் மஞ்சள் சோடியம் வெளிச்சங்களை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக்கொள்ளும்.இரவு முழுவதுமாய் வராத அந்தப்பயணி கடைசி நான்கரை டிரெயினில் வந்து இறங்குவான், ஏற்றிக்கொள்ளலாம் என்று அரைத்தூக்கத்தில் இருக்கும் ஆட்டோ டிரைவர்கள், சொத்தையில் கடிக்கும் நுளம்பை ஒரு கையால் அடித்தவாறே முன் சீட்டில் புரண்டு கொள்வார்கள். இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்கும் சில தேநீர்க்கடைகளில் மட்டும் அந்நேரங்களில் கொதிநீராவி போவதற்கு வேறு வழியில்லாமல் வழிய, வழிய கடை வாசலுக்குள்ளாலேயே வெளியே வர எத்தனித்துக்கொண்டிருக்கும்.

வெயில்காலமோ, மழைக்காலமோ எல்லா நகர்ப்புறங்களினதும் அதிகாலைப்பொழுதுகளில் எப்போதும் ஒரு விநோதமான இளங்குளிர் உரோமங்களை விதிர்த்தபடி இருக்கும். அந்த இளங்குளிரை தவிர்த்துக்கொள்வதற்காகவே ஒரு கூட்டம்  அத்தேநீர்கடைகளுக்குள் அடைந்துகொள்ளும். டீ மாஸ்டர்கள் நெற்றியில் வழியும் வியர்வையை சுண்டுவிரலால் துடைப்பதற்கு நேரமில்லாத  பொழுதுகள் அவை. அந்த கூட்டத்தின் ஒரு சாரார் தொலைதூர பயணத்தை எதிர்நோக்கியவர்கள். வயிறு அதிகம் கடிக்காமலும் நிறையப்பசிக்காமலும் இருக்க அளவாய் ஒரு பணிஸின் நடுப்பகுதியை கடித்துக்கொள்வார்கள்.பஸ் வந்து விட்டாலும் என்ற பதை பதைப்போடு ப்ளேன்டீயோ அல்லது டீயோ  கையில் வைத்தவாறு கடைவாசலுக்கு முன்னால் ஆவி பறக்க காத்திருப்பார்கள். 

எந்த அவசரமும் இல்லாதவர்கள் நாவில் இளஞ்சூடான ரொட்டிகளும், சாயாக்களும் இரண்டறக்கலந்து கொள்ளும்.

ஓரிரு பேப்பர் கடைகளின் முன் வாசலில்  ஓடர் பேப்பர் கட்டுக்கள் போடப்பட்டிருக்கும். அதை அண்டிய பகுதிகளில் சிலர் கைகளில், கட்டுக்களிலிருந்து உருவப்பட்ட நாளிதழ்கள் பீடித்துண்டின் வெளிச்சத்தோடு வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அதிகாலை வேளைகளில் யாரும் அரசியல் பேசுவது கிடையாது. ஏன் இப்படி, எதற்கு அப்படி என்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. அந்த நாளுக்கான செய்திகள் பேப்பரின் எடிட்டருக்கு பிறகு முதலில் வாசிக்கப்படுவது அந்த இடத்தில்தான். அப்பகுதியில் ஒரு நிச்சலனம் சூழ்ந்து இருக்கும். வாசித்து முடிந்ததும் பழையபடி அந்த பேப்பர்கள் மடிப்பு குலையாது கட்டுக்குள் செருகப்படும். ஓடருக்காக காத்திருக்க தொடங்கும்.

ஆங்காங்கே கடைகளின் வாசல் கதவுகளோடு இரண்டாக, மூன்றாக நாய்கள் சுருண்டு படுத்திருக்கும். இரவு முழுவதும் நகரை காவல் காத்த களைப்பாய் இருக்கலாம். அதன் பக்கத்தில் போய் சுரண்டினாலும் கூட "ஏன் நாயே" என்று எவையும் நிமிர்ந்து பார்க்காது, மேலும்  சுருட்டிக்கொள்ளும் நேரமது.

ஒரு நகரம் முற்றாக விழித்துக்கொள்வது என்பது அந்நகர சந்தையின் கதவுகள் கிறீச்சிடும் போதாக இருக்கும். எந்த நகரத்தினதும் center of the maze சந்தையாகத்தானிருக்கும்.

இந்த நகரத்திற்கும் ஒரு சந்தை இருக்கிறது, அதற்கென்று  மிகப்பெரிய இரும்புக்கதவுகள் இருக்கிறது. தினந்தோறும் நகரின் தெற்கே இருக்கும் பள்ளிவாசல் மணி ஐந்து அடித்ததும், அதை திறந்து வைப்பதற்காக கடையப்பா எங்கிருந்தோ நேரம் தவறாது வருவார்.

கடையப்பா சந்தைக்காவலாளியாக இருப்பார் என்று உடனடியாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். சந்தைக்கு ராக்கண்ணன் என்ற பெயரில் ஒரு காவலாளி இருக்கிறான்.

சந்தைக்கதவுகளிற்கு அண்மித்ததாய் ஒரு கால் நெளிந்த இரும்புக்கதிரை. முதுகுக்கு இதமாய் வைத்த பழுப்பேறிய தலகாணி சகிதமாய் யாரும் ராக்கண்ணனை சந்தித்துக்கொள்ளலாம். ராக்கண்ணன் பக்கத்தில் கூட ஒரு நாய் சுருண்டு படுத்திருக்கும். அதற்கு முழிப்பான் என்று ராக்கண்ணன் பெயர் வைத்திருந்தான். கடையப்பாவை கண்டதும் ராக்கண்ணன் அரைத்தூக்கத்தோடு தலையை மெதுவாக ஆட்டி கொள்வான். இருந்தபடியே இடுப்பில் கொழுவியிருக்கும் சாவியை எடுத்து கடையப்பாவிடம் கொடுப்பான். மறுபடியும் அரைக்கண்களை மூடிக்கொள்வான். சந்தையின் கதவுகள் கிறீச்சிடுவது ராக்கண்ணன் காதுக்கு சரியாக இரண்டு நிமிடத்தினுள் கேட்கும்.

கால காலமாக கடையப்பாவை தவிர வேறு யாரும் அந்த சந்தையின் கதவுகளை திறப்பது கிடையாது. துரதிஷ்டம், அப்படி திறந்த நாளின் ஒரு இரவில், சந்தைக்குள் மின் ஒழுக்கு ஏற்பட்டது. சாதாரண ஒழுக்காய் இருந்தால் சட்டி வைத்திருக்கலாம், என்ன செய்ய. சந்தை பகுதியளவில் பற்றிக்கொண்டது. பயர் பிரிகேட் டிங்கடித்து வரும்போது சாம்பல் காற்றில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஓரிரு துகள்கள், காய்ச்சலோடு போர்வையை தலைக்கு மொட்டாக்கு போட்டுக்கொண்டு, பராக்கு பார்க்க வந்து நின்ற கடையப்பாவின் கண்களிலும் விழுந்தது.

கடையப்பாவிற்கு ஒரு இன்ரோ.

நிஜப்பெயர் தெரியாது. வயது அறுபத்தைந்துக்கு மேலாகிறது. சரியான வயது அவருக்கு மட்டுமே தெரியும். முழங்கால் வரை மடித்துக்கட்டப்பட்ட சறம், முழங்கை தாண்டி கொஞ்சம் நீண்ட கை வைத்த தடிப்பான ஸ்வெட்டர். அதனுள் ஒரு கசியோ வோட்ச். காதுக்குள் குளிர் ஊடுருவாது சுத்திக்கட்டப்பட்ட துவாய். பத்தாம் நம்பர் பாட்டா சிலிப்பர். இரண்டில் ஏதோ ஒன்றின் அடிப்பக்கத்தில் ஊசி குத்தி இருப்பதால், சீமேந்து தரையில் நடக்கும் போது சர்க் சர்க் என்று ஒரு சத்தம் வந்து கொண்டிருக்கும்  . எப்போதுமே மூன்று நாள் மழிக்காத தாடி. இரண்டு பக்கமும் கொஞ்சமாய் கொடுப்புக்குள் குழி விழத்தொடங்கியிருந்த கன்னம். அதிகம் கதைப்பது கிடையாது. ஏன் "அதிகம்".  வேண்டாம். கதைப்பதே கிடையாது என்பது போதும்.

இத்தனை காலத்தில்  வேறு யாரும் சந்தைக்கதவுகளை திறந்தது கிடையாது என்றால்..

உடனே, ஏன்?

என்று கேட்காதீர்கள் அது அப்படித்தான் என்பார்கள் சிலர். வேறு சிலர் அது அவர் பரம்பரைக்கு உரிமையான சந்தை, அவர்தான் தினம் திறக்க வேண்டும் என்பது விதி என்பார்கள். ஒரு சிலர் அவர் திறக்காவிட்டால் ஏதும் கெட்டது நடந்துவிடும் என்பார்கள். இன்னும் சிலர் அவர் திறந்து வைப்பதால்தான் அந்த சந்தையில் எல்லா வியாபாரிகளுக்கும் நல்ல வியாபாரம், நல்ல லாபம் கிடைக்கிறது என்பார்கள். வெல்!கடைசி இரண்டு காரணத்தினையும் அனேகர் அதிகம் ஏற்றுக்கொண்டார்கள்.

கடையப்பா சந்தையைத்திறந்து விட்டு அதன் ஈசானமூலையில் இருக்கும் கட்டில்லாத கிணற்றில் போய் முகத்தை ஒரு அலசு அலசிக்கொள்வார். அப்படியே பேப்பர்கடையடிக்கு ஒரு நடை போவார். கடையப்பாவைக்கண்டதும் பீடிக்கள் காலடியில் நசுக்கப்படும்.

கடையப்பாவிற்கு பிடிக்காத விடயங்கள் சில இருந்தன

01.ஓசியில் பேப்பர் படிப்பவர்கள். 02.பீடியுடன் பேப்பர் படிப்பவர்கள்.

பீடி இல்லாத பேப்பர் ருசியில்லாது போகவே கட்டுக்குள் செருகிவிட்டு அனைவரும் நழுவிக்கொள்வர்கள்.

பேப்பர்கட்டுக்கள்  எல்லாம் வந்துவிட்டதா என்று ஒரு நோட்டம் விட்டுக்கொள்வார். அப்படியே நேரே வழமையாய் போகும் யோகுவின் தேநீர்கடைக்கு ஒரு நடை. அங்கே ஒரு ப்ளேன்டியையும் மூன்று ரொட்டியும் ஓடர் செய்து கொள்வார். வாங்கிக்கொண்டு சந்தை வாசலுக்கு போய் வழமையாய் இருக்கும் மாடிப்படியில் இருந்து கொண்டு ரொட்டியை கடிக்கும் போது, நகரம் கல கலக்க தொடங்கியிருக்கும். அந்த வினோதக்குளிர் அமைதியோடு சேர்ந்து காணாமல் போயிருக்கும்.

மெதுவாக சந்தையை சூழ இருக்கும் கடை முதலாளிகள் நெற்றியில் பட்டையடித்தபடி ஆறரைவாக்கில் வரத்தொடங்குவார்கள். தங்களது கடைக்கு முன்னாலே நின்ற படியே "கடையப்போ" என்று அவர் இருக்கும் திசையை பிடித்துக்கத்துவார்கள்.யார் அவசரப்பட்டாலும் இரண்டு ரொட்டியை விழுங்காமல் கடையப்பா எழுந்திருக்க மாட்டார். எழும்போது மீதமிருக்கும் ஒரு ரொட்டியை  ராக்கண்ணன் பக்கத்தில் இருக்கும் முழிப்பானுக்கு போடவே அதுவும் அதற்காகவே காத்திருந்தது போல முழித்துக்கொள்ளும். முழிப்பான் ஒருநாளில் முழித்து இருக்கின்ற சொற்ப நிமிடங்களினுள் அந்த ரொட்டியை கடிக்கின்ற கணங்களும் அடங்கும்.

கடையப்பா நூல்பிடித்தாற்போல் முதலாவதாய் கூப்பிட்டவரின் கடைக்கு போய் கடையை திறப்பார். பக்கத்தில் அடுத்த கடை, அதற்கு அடுத்த கடை என திறந்துகொண்டே செல்வார். கடையப்பாவினால் கடை திறக்கப்பட வேண்டும் எனக்காத்திருப்பவர்களே அந்நகர்ப்பகுதியில் அதிகம். கடை திறந்ததும் அவர் ஸ்வெட்டர் பொக்கட்டினுள் இருபதோ, ஐம்பதோ சுருட்டி வைப்பார்கள். கடையப்பா அதனை கண்டு கொள்வதில்லை. ஆனால் கடையப்பா கடையை திறக்க வேண்டுமாயின் எழுதப்படாத விதிகள் இருந்தன. கடைவாசல் தண்ணி தெளித்து சுத்தமாக இருக்க வேண்டும். திறப்பை வாங்கிக்கொண்டு சுற்றி ஒரு நோட்டம் விடுவார். கதவுப்பூட்டை வாஞ்சையோடு தடவிப்பார்ப்பார். திறப்பை அதனுள் செருகி திறந்துவிட்டு கடை முதலாளியை பார்த்து ஒரு தலையசைப்பு அவ்வளவுதான்.

சிலர் கடைகளை கடையப்பா திறப்பது கிடையாது. அந்த கடைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கடையப்பாவின் காரணம் இருக்கும். சாராயக்கடைக்கு பக்கத்துக்கடைகளைக்கூட திறக்க செல்வதில்லை. அதனால் அந்த கடைகளை விட்டு வேறு இடம் மாறி சென்றவர்கள் தொகை எண்ணிலடங்கா. ஆனாலும் அதற்கெல்லாம் மையமான சாராயக்கடை மட்டும் எந்த நட்டமும் இல்லாமல் தொடர்ந்தும் இயங்கிகொண்டிருந்தது. சாராயக்கடை - விதிவிலக்கின் உதாரணமாக நகருக்குள் திகழ்ந்தது. இருந்தாலும் சாராயக்கடைக்கு கடையப்பா மீது ஒரு கறள் இருக்கவே செய்தது. கடையப்பா கடை திறக்காமலேயே இவ்வளவு லாபம் வருகிறதே, திறந்து வைத்தால் என்ற கேள்விக்குறி கனவில் அடிக்கடி வந்து சுருண்டு கொண்டது.

"நகருக்குள் கடையப்பா திறக்காத கடைகள் எவையுமிருப்பின், அவை காலவோட்டத்தில் பொலிவிழந்து, நலிவடைந்து போய்விடும்" என்ற நம்பிக்கையை பட்டயத்தில் எழுதாமல்  காதுவழியாக மட்டும் கடத்தி வைத்திருந்தார்கள்.

புதிதாக யாரும் கடைதிறக்கிறார்கள் என்றால் அவர்கள் கடை முன் முதல் நாளன்று கொஞ்ச நேரம் கடையப்பா ஊசாடுவார். அடுத்தநாள் காலையில் அந்த கடையை திறக்க வந்தால் உண்டு. இல்லை என்றால் எவ்வளவு காலத்தினுள் அந்தக்கடையை இழுத்து பொட்டலம் கட்டுவார்கள் என்று ஆட்டோ டிரைவர்கள் இரவு நேரத்தில் பந்தயம் பிடிப்பார்கள். ஆரம்ப அறிகுறியாய் சொற்ப நாட்களினுள் கடையின் பெயர் பலகை காணாமல் போய்விடும். அதனால் அந்த நகரத்தினுள் யாரவது புதிதாய் கடை திறக்கிறார்கள் என்றால் எல்லாரும் கடையப்பாவின் கடை நிலை என்ன என்பதனை உன்னிப்பாய் கவனிப்பார்கள்.

சிலநாட்களின் முன் ஒருதடவை இராசபூபதியின் உரக்கடைக்கு முன்னால் சிவப்பையும் செம்மஞ்சளையும் கலந்த நிறத்தில் வெற்றிலை துப்பியிருந்தது.  பூபதிக்கு உடம்பு முழுவதும் கொழுப்பிருந்தது. அதில் கொஞ்சம் திமிரால் வந்தது, அதிகம் பன்றி இறைச்சியால் வந்தது. பன்றிக்கொழுப்பில் ஊறிப்போயிருந்த பூபதியின் உடம்பு, வந்த அவசரத்தில் கடையை கூட்டும் பஞ்சியுடன்  கடையப்பாவிடம் திறப்பை கொடுத்து விட்டது. சுற்றி சுழன்ற கடையப்பா எதுவும்  சொல்லாமல் திறப்பை வெற்றிலை துப்பிய பக்கமாய் எறிந்து விட்டு நடக்க தொடங்கினார். பூபதிக்கு சுருக்கென்று ஏறிவிட்டது. கடையப்பாவை அந்த இடத்தில் வைத்து சங்கோஜ வார்த்தைகளால் கடைந்து எடுத்து விட்டான். கடையப்பா அதை கண்டுகொள்ளவில்லை ஆனால் அன்றிலிருந்து அந்த கடைப்பக்கம் செல்வதை கைவிட்டார். அன்றிரவு, இராசபூபதியை நினைத்து அந்த நகரத்து ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் பரிதாபப்பட்டுக்கொண்டனர்.

கடையப்பாவினை பகைத்துக்கொண்டவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் நட்டப்பட்டுக்கொண்டார்கள். அதற்கு காரணமாய் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காக்கா Vs பனம்பழ தியரியை கைகாட்டினார்கள். கடையப்பாவிற்கு எதிராக அவர் திறக்காத கடைகள் எல்லாம் இணைந்து ஒரு சங்கமாக வலுப்பெற்றுக்கொண்டு வந்தது. சாராயக்கடை, அதற்கு தலைமை வகித்தது. அதில் இறுதியாக இராசபூபதி இணைந்து கொண்டான். அதன் பின்னர் மாலை வேளைகளில் தண்ணீர் கலக்காமல் என்ன செய்வதென்று பேசினார்கள். தொட்டு நாவில் வைக்க கூடியதாய்  சதித்திட்டம் போட்டார்கள்.

அடுத்ததாய் நடந்த வர்த்தக சங்க கூட்டத்தில் பூபதி தலைமையில் இருபதுக்கு மேற்பட்டோர் கடையப்பாவிற்கு எதிராய் ஒரு கண்டன போராட்டம் நடத்தினார்கள். போராட்டங்கள் தொண்றொன்பது சதவீத நிகழ்தகவுகளில் வெற்றியடைவதில்லை. ஈற்றில் அவையாகவே சமரசமடைந்து கொள்ளும். எனவே பூபதியை பார்த்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை.

"கடையப்பா இறந்த பின்னர்  என்ன செய்ய போகிறாய் கடைகளின் சமுதாயமே? யார் உன் கடையை திறக்கபோகிறார்கள்?"

என்று பலகையில் கொட்டை எழுத்துக்களில் கறுப்பு பெயின்டால் எழுதி கையில் பிடித்துக்கொண்டு நின்றார்கள். ஆர்ப்பாட்டத்தின் முதல் நாள் மாலையில் சாராயக்கடை இலவசமாய் இயங்கியிருந்தது. பூபதி "டிரிங்ஸ் ஒன் மீ" என்று அரை குறை ஆங்கிலத்தில் அலறியிருக்க, அதற்கு தெளியாத நன்றிக்கடனாய் கண்டன ஆர்பாட்டடம் கனதியாய் இருந்தது. 

வர்த்தக சங்கம் கூடிப்பேசியது. சமரசத்திற்கு பூபதியை அழைத்தது. பூபதி அசரவில்லை. போரட்டம் தொடர்ந்தது. கடையப்பா இல்லாவிட்டால் என்ன செய்வது. அதன் பின்னரான கடைகள், சந்தையின் நிலைமை என்பவற்றை நினைத்து பார்க்கவே வர்த்தக சங்கத்திற்கும் கூட கொஞ்சம் வெல வெலப்பாயிருந்திருக்கலாம். இந்த நிலைமை தொடரக்கூடாது என்று முடிவெடுத்தார்கள். இருக்கும் போதே இல்லாத ஒன்றிற்காக இயைபாக்கமடைந்து கொள்ள திட்டமிட்டுக்கொண்டார்கள்.

Sometimes destiny plays in the name of change.

சந்தையை திறக்கும் பொறுப்பு இனி ராக்கண்ணன் உடையது. கடையப்பாவைக்கொண்டு தனி நபர்கள் யாரும் தமது கடையை திறக்கக்கூடாது. திறந்தால் சங்கத்தில் அவர்கள் அங்கம் பறி போகும் என தீர்மானித்துக்கொண்டார்கள்.

உள்ளூர கடை வர்த்தகர்களுக்கு நடுக்கம் எடுத்தது. சிலர் தமது எதிர்ப்பை பகிரங்கமாக காட்டினாலும், பூபதியின் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அடங்கி போனர்கள். பூபதி எகத்தாள சிரிப்போடு சாராயக்கடையின் தோளில் கை போட்டபடி கூட்டம் முடிய வெளியேறினான்.

இன்னுமொரு நாளின் அதிகாலை பொழுது. நகரம் மறுபடியும் மறக்காமல் 

விழிக்க தொடங்கியிருந்தது. வழமைக்கு மாறாக ராக்கண்ணன் குறுக்கும் மறுக்குமாய் திரிந்தான். பள்ளி வாசல் மணி டிங்கியது. ஐந்து ஒன்று, இரண்டு, மூன்று முப்பதாகியும் கடையப்பா வரவில்லை. சந்தை வியாபாரிகள் கதவு திறக்க காத்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் ராக்கண்ணனுக்கு புரிந்து விட்டது,  கடையப்பா இனி வரமாட்டார். சந்தை கதவுகள் ஒரு வித நடுக்கத்துடன் கிறீச்சிட்டுக்கொண்டன. முழிப்பான் கூட முழித்திருந்தது. அன்றைய தினத்தில் சிலர் தாமாகவே கடையை திறந்து கொள்ள, சிலர் கடையை திறக்காமலேயே திரும்பியிருந்தார்கள். நகரத்தை சூனியம் பிடித்துக்கொண்டது போல இருந்தது. மாலையில் சாராயக்கடையில் வாடிக்கையான கூட்டம் கூடியது. அவர்களுக்கு "டிரிங்ஸ் ஒன் தி கவுஸ்" சலுகை வழங்கப்பட்டது.

இரவின் மையப்பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதி சூழ்ந்திருந்தது.

தொடர்ந்து வந்த நாட்களில் மீண்டும் நகரம் கடையப்பாவை மறந்து வழமை போல இயங்க தொடங்கியது. பீடிகள் பட்டு சில பேப்பர்கள் கருகியிருந்ததை தவிர, எதுவுமே வழமைக்கு மாறாமல், நாட்கள் வாரங்களாகிய போது முற்றாகவே கடையப்பாவை மறந்து விட தொடங்கியிருந்தது. நகரம்.

இரண்டு வாரங்கள் தாண்டியிருக்கும். பயந்தது போலவே, காகம் மீண்டும் பனையில் வந்து இருந்து கொண்டது. இந்ததடவை பனம் பழத்திற்கு கொரோனா என்று பெயர் வைத்து  நகருக்குள் உருட்டி விட்டது. பனம்பழம் எங்கும் லொக் டவுன் போட்டது. சந்தையை தூக்கி சமூக இடைவெளி என்ற பெயரில் வீதியோரங்களில் காய விட்டது.

கடைகளை அரைக்கதவுகளில் திறக்க வைத்தது. தொட்ட இடமெல்லாம் கடைகளில் நட்டம் சத்தம் போட்டது.

அந்த நகரச்தில் மட்டும் எல்லாருக்கும் திடீரென்று அப்படியாயிருக்குமோ என்ற சந்தேகம் துளிர் விட்ட போது, இராக்கண்ணனும் முழிப்பானும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். மீண்டும் கடையப்பா ஞாபகத்தில் வரத்தொடங்கினார். கடையப்பாவை தேட தொடங்கினார்கள். அவர் மீண்டும் வந்து திறந்து வைத்தால் இதெல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினார்கள். சந்தையின் சுவர்களின் பல இடங்களில் "கடையப்போ, வீ வோன்ட் யூ பேக்" என்று, யாரோ இரவோடு இரவாக கரித்துண்டால் எழுதி வைத்தார்கள்.

கடையப்பாவிற்கு தகவல் எப்படியும் போகும். நிச்சயமாக திரும்பி வருவார் என்று நகரம் நம்பியது.

நம்பிக்கை வீண் போகவில்லை. எழுதி வைத்த மூன்றாவது நாளில் கடையப்பா திரும்ப வந்திருந்தார். யாரும் இல்லா விட்டாலும் சந்தையை திறந்து வைத்தார். அரைக்கதவுகளை நகர்த்தி விட்டார்.

சொற்ப நாட்களினுள் பனம்பழம் போதுமென்ற அளவுக்கு நகருக்குள் உருண்டு விட்டு வேறு இடங்களுக்கு நகர தொடங்கியதும் நகரம் வழமைக்கு வந்தது. எல்லாம் கடையப்பா வந்த நேரம் என்று ஆட்டோ டிரைவர்கள் பேசிக்கொண்டார்கள்.

சாராயக்கடை மற்றும் பூபதியின் கடைகளை தவிர, கடையப்பாவினால் வழமை போல மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பூபதியின் பொறுமையாறு உடைப்பெடுத்த ஒரு நாளில்,

"எண்ணி மூன்று நாட்களுக்குள் கடையப்பா வந்து தன் கடையை திறந்து வைக்க வேண்டும். இல்லா விட்டால் யார் கடையையும் மீண்டும் திறக்க முடியாமல் பண்ணுவேன்"

என்று பகிரங்கமாக சவால் விட்டான். ஆட்டோ டிரைவர்கள் ஒரு வித மிரட்சியுடன் சிரித்து கொண்டார்கள். நகரம் மீண்டும் கலக்கம் அடைந்தது.

சவாலின் முதலாவது நாளின் முடிவில், பூபதி எரிச்சலின் உச்சத்தில் கடைக்கு ஓடர் போட்டு விட்டு, கடையப்பாவிற்கெதிராக என்ன செய்யலாம் என்று குழப்பத்தினை சாராயக்கடை மேசையில் பரப்பி வைத்திருந்தான்.

இரண்டாவது நாள் முடிவில் முதல் நாள் போட்ட ஓடருக்கு காத்திருந்து விட்டு, வராத லொறி காரனை 'து'வில் ஆரம்பித்து திட்டியவாறு கடையை இழுத்து சாத்தி விட்டு நடக்க தொடங்கியிருந்தான்.

அப்போது பூபதிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. 

நாளை கடையப்பா வரப்போவதில்லை. அப்படியே மனம் மாறி வந்தாலுமே கூட, கடை திறக்கப்பட போவதில்லை என்று.

மீண்டும் ஒரு நாளின் அதிகாலை பொழுதில், நகரம் துயில் எழ ஆரம்பித்த கணங்களில், பீடித்துண்டுக்களின் பிரகாசத்தில் பிரபல நாளிதழின் தலைப்பு செய்தி தெளிவாக தெரிந்தது.

"உர இறக்குமதிக்கு தடை ."


            ##########