About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Tuesday, November 17, 2020

"S" MEANS HOPE

கந்தசஷ்டி ஆரம்பித்திருந்தது. அண்ணர் அதை அனுஷ்டிக்க தொடங்கியிருந்தார். அடுத்த ஆறு நாட்களும், வீடு விரதகோலம் காணும். அண்ணர் அவிழாமல் வேஸ்டி கட்டி, அமைதியாய் கோயிலுக்குள் நின்று சாமி கும்பிடுவதற்கும், இடையில் எச்சில் கூட விழுங்காமல் விரதம் இருப்பதற்கும் எங்கேயோ பழகிக்கொண்டார். 

அதை குழப்ப வந்த ரம்பனாகவோ அல்லது ஊர்வசனாகவோ அவ்வப்போது  மரவள்ளிகிழங்கு பொரியல் பாக்கட்டையோ அல்லது மிக்சர் பாக்கட்டையோ உடைத்து கடக், மொடக் என்று சத்தம் கேட்கக்கூடியதாக 
மூன்றடி தள்ளியிருந்து சாப்பிட்டுக்
கொள்வேன். 

"விரதம் இருப்பவர்கள் பார்த்துக்கொண்டிருக்க சாப்பிடக்கூடாது, அது மகா பாவம்" என அந்நேரத்தில் முணு முணுத்துக்கொண்டால்..."

"சொல்லுங்க விஸ்வாமித்திரரே உங்க விரத பலனை எல்லாம் சாபம் கொடுத்து அநியாயம் ஆக்க போறிங்களா? என்று கேட்டால் கம்மென்று அடங்கி விடுவார்"

விரதத்தை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த எனக்கு, சுட்டுப்போட்டாலும் விரதம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எந்த சந்தர்ப்பத்திலும் வரவில்லை. அதற்கு என்ன காரணம் என்று யோசித்து பார்த்ததன் விளைவுதான் இந்த பதிவு.

சமய பாடம் என்பது சாதாரண தரங்களில் முதுகை சுற்றி மூக்கை தொடுவதான ஒரு பாடம். நான்கு முக்கிய நாயன்மார்களையும் அவர்களின் டிராவலிங் கிஸ்டரியும், டிராவலிங்கின் போது அவர்கள் பொழுது போக்கிற்காக ஒவ்வொரு இடங்களில் பாடிய பாடல்களையும் கொஞ்சமாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டாலே போதுமானது. நூற்றுக்கு ஐம்பது புள்ளிகளை ஜாம் என்று எடுத்து விடலாம். மிகுதி ஐம்பதிற்கும் அலைய வேண்டும். காரைக்கால் அம்மையாரை பிரக்டிஸ் பண்ணிக்கொள்ள வேண்டும். தலையால் நடப்பது என்ன சாதாரண விடயமல்ல. 

தலங்களும் தல விருட்சங்களும் அந்த காலங்களில் சமய பரீட்சைகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றதாக அமைந்தது. சைவ பரிபாலன சபை, மார்கழி மாத விடாத மழைக்குள்ளும் அடாது எக்சாம் வைத்து அதற்கு மூன்று மாதம் கழித்து A கிரேட்டா , F கிரேட்டா என்று போட்டு சேர்டிபிக்கேட் அனுப்பி வைக்கும். அதில் C கிரேட்டில் சித்தி எடுத்தாலே அருகில் இருப்பவன் சுரண்டி கேட்பான்.

 "எப்டிடா"

அதை சிம்பிளாக ஒரு வார்த்தையில் கிருபை என்று சொல்லி முடித்து விட முடியாது. உண்மையிலேயே அது டலண்டால் கிடைத்தது.

சைவ பரிபாலான சபை பெரிதும் டார்கெட் பண்ணிக்கேள்விகளை கேட்பது ஆறுமுக நாவலரை மையமாக வைத்துக்கொண்டு அவரது இயற்பெயர், பிறந்த இடம் பண்ணிய தொண்டுகள் என்று வரிசையில் வந்து கடைசியாய் கட்டாயம் ஆ.மு.நாவலர் விரதம் என்றால் என்ன என்று கூறியுள்ளார் என்ற கேள்வியை திணிக்காமல் ஒரு எக்சாம் பேப்பரை முடிக்க மாட்டார்கள். பிட் எல்லாம் அடிக்காமல் ஆன்சர் பண்ணுகின்ற  ஒரே கேள்வி அதுதான்.

" மனம் பொறி வழிப்போகாதற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் ப்ளா, ப்ளா, ப்ளா... என்று ஒரு மூன்று வரிக்கு முழக்கி எழுதி விட்டால் போதும் ஐந்து மார்க்ஸை  சுளையாக போடுவார்கள். 

சோ, ஆரம்பத்தில் நாயன்மார்களை வைத்து திரட்டிய 50 இங்கே ஒரு 5, பிளஸ் பண்ணினால்  மொத்தமாய் 55 . சிம்பிளாய் ஒரு சித்தி வித் C கிரேட்.

கிரிப்டோனில் "S" MEANS HOPE  என்பது போல,எங்களூரில், சின்ன வயதில் சமய பாடம் என்பது ஒரு "S"  ஐ போன்று காட்சியளித்தது. நாயன்மார்களை எல்லாம் சூப்பர் ஹீரோக்களாக ஏற்றுக்கொண்ட காலம் அது. 
தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்பதில் தொடங்கி, செய்யவிட்டால் கற்கண்டு போட்டு ஞானப்பால் கூட கிடைக்கலாம் என்பது வரைக்கும் அது நம்பிக்கையூட்டியிருக்கிறது. எட்டு வயதில் படிக்கும் போது,  முதலை வாய்க்குள் போய் விட்டால் தப்பி விடலாம் என்பதும், மலையை ஒற்றை விரலால் தூக்கலாம் என்பதும் பிஞ்சு மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்துக்கொண்ட அதிசயங்கள். அந்த அதிசயங்களை அப்பட்டமாக ஏற்றுக்கொண்டதற்கு காரணம் நம்பிக்கை. 

ஒன்றைப்பின்பற்றுவதும், பின்பற்றாமல் விடுவதும் அவர் அவர்களின் தனிப்பட்ட மன நிலையை பொறுத்தது. ஆனால் அது இப்படித்தான் இருந்தது, இருக்கின்றது என்பதை காலங்களினூடாக கடத்துவதற்கு ஒரு ஊடகம் தேவை. அந்த வேலையை சிறு பராயங்களில் பார்த்துக்கொண்டது இந்த சமய பாடம்தான். சுருங்க சொன்னால் நம்பிக்கை என்ற ஒற்றை சொல்லைத்தான் பாடத்தின் எல்லா அத்தியாயங்களும் ஒவ்வொரு விதமாய் சொல்லிச்சென்றிருக்கிறது. 

அதை எல்லாம் புரியாமலேயே படித்து முடித்து வாழ்க்கையின் பல பள்ளங்களில் விழுந்து, பல பள்ளங்களை தோண்டிய பின்,

ஒருவன் கடவுள் இருக்கிறது என்பான். ஒருவன் இல்லை என்பான். இன்னுமொருவன் இருந்தால் நன்றாய் இருக்கும் என்பான். அந்தக்குழுக்களையெல்லாம் விட்டு விடுங்கள். எட்டவாக இன்னுமொருத்தன் நின்று அடடா இப்படி சொல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது, அப்படி சொல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது என்று எல்லாவற்றையும் இரசித்துக்கொண்டே  கொடியை தூக்கி பிடிக்கின்ற அவனை யாராவது பார்த்திருக்கிறீர்களா?. 

நிச்சயமாய் பார்த்திருப்பீர்கள். உங்கள் பக்கத்திலேயே இருந்திருக்க கூடும். சிறு வயதில் விரதம் என்று இருக்கும் போது, கையில் டொபி கிடைத்தால், யாரும் பார்க்கவில்லை என்ற தைரியத்தில், எடுத்து மெதுவாக வாய்க்குள் போட்டுக்கொண்டு எதிரே காலண்டரில் இருக்கும் முருகனையோ, பிள்ளையாரையோ பார்த்து திரு திரு வென்று முழித்து விட்டு, மன்னிச்சுக்கோ... கடவுளே, அடுத்த தடவை இப்படி டொபி கிடைச்சா, சாப்பிடவே மாட்டேன் என ஓர்மமாய் மனதுக்குள் கங்கணம் கட்டிக்கொள்கின்ற....வகையறாக்கள்  தான் அவர்கள்.

அவர்களுக்கு மீண்டும் மீண்டும் டொபி கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அவர்களும் சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள. ஆனாலும் சாமி அவர்களை ஒண்ணும் செய்யல பார்த்தீர்களா !. 

சின்ன வயசு. சாமி மன்னித்து விட்டிருக்கலாம் அல்லது வயது போக அந்த பக்குவம் வரும். இந்த குழுவிற்குள்  இருக்காமல் வேறு ஏதாவது குழுவிற்குள் நிரந்தரமாய் மாறிப்போய் விடுவார்கள், அப்போது கவனித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சாமியே அவர்களை விட்டு வைத்திருக்கலாம். 

நாவலரை விட்டு விடுங்கள். ஒற்றை வார்த்தையில் கேட்டால் விரதங்களும் அந்த "S"  யே அடையாளம் காட்டும். இங்கே எல்லா வழிகளும் "S" ஐ நோக்கியே டைவேர்ட் பண்ணப்பட்டால் ? "S" தான் கடவுளா? மூன்று வரியில் எல்லாம் எழுதாமல் சிம்பிளாக "S" என்று எழுதி விட்டு வரலாம். திருத்துபவர் புரிந்து கொண்டால் 10 மாக்ஸ் கூட கிடைக்கும் இல்லா விட்டால் ஸீரோ.

எல்லாருமே ஆரம்பத்தில் சொன்ன "S" மேல்தான் நிற்கின்றார்கள். அது பல சந்தர்ப்பங்களில் வளைந்த பகுதிகளினூடாக சறுக்கி வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றது. சறுக்கினாலும் சிலர் மீண்டும் மேலே ஏறி "S" ன் மேலேயே ஆணி அடித்து விட்டு உட்கார்ந்து கொள்கின்றார்கள். சிலர் எங்கேயோ ஏதோ ஒரு புள்ளியில் சறுக்கினால், விழுந்து உடைந்து போனால், தாங்கள் நின்ற "S" யும் உடைத்து விட்டு வேறு எழுத்துக்களிற்கு தாவிக்கொள்கின்றார்கள். 

முடிவு.எல்லா விரதங்களுமே பிடித்திருக்கின்றது. ஆனாலும் அவற்றை பிடிப்பதற்குதான் மனம் இன்னும் பக்குவப்படவில்லை. அல்லது அதற்கான தேவை வரவில்லை என தோன்றுகின்றது. காரணம் விழுந்த பள்ளங்கள் போதாததாய் இருக்கலாம். இன்னும் அந்த மெர்ச்சியூரிட்டி லெவலை தாண்டாமல் இருக்கலாம். அது  வரைக்கும் "S" ன் மேலேயே இருந்து கொள்கின்றேன். டொபி கிடைத்தால் உடைத்து வாய்க்குள் போட்டுக்கொள்கின்றேன். சாமி மன்னித்துக்கொள்ளட்டும். 

                       #######