About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Tuesday, February 16, 2016

சூப்பர் ஹீரோ கனவுகள்

போன கிழமை யஸ்டிஸ் லீக்குக்கு நான் எழுதின கடிதத்தை படிச்சுட்டு ஒருத்தர் குசும்புக்கேள்வி ஒன்டு கேட்டார்.நேற்று கிணத்து தண்ணியெல்லாம் மேல வந்துட்டு.ப்ளாஷ் ஊருக்கு வந்திருக்குமோ என்டு.நான் கண்டும் காணாததும் போல நின்டுட்டன்.ஆள் ஒரு நாஸ்திகன்.சுத்தமா சூப்பர் ஹீரோ நம்பிக்கையே இல்லை."கல்லை நம்புவன் கல்க்கை நம்பமாட்டன்" என்டு எட்டூர் கோயில் கற்பூரசட்டி கரியும் கையில பிரள சத்தியம் பண்ணினவர்.உவற்ற நக்கல் கதையளுக்கு நாங்கள் இடம் கொடுக்ககூடாது.

நான் ஆறு வயசில அலாவூதின் கதையை வாச்சிட்டு வந்து வீட்ட சாமிப்படத்துக்கு பக்கத்தில கிடந்த பித்தளை விளக்கை போட்டு உரஞ்சின உரஞ்சில பச்சைக்கலர் விளக்கு தங்ககலருக்கு வந்துட்டு.பூதம் வராட்டியும் அதுதான் அற்புதவிளக்கு என்டு அடிச்சு நம்பினன்.
பித்தளை+எண்ணெய்+வளியுடன் தாக்கமுறும் போது பச்சை வண்ணம் வரும் என்டு எட்டில வாத்தியார் சொல்லேக்கயும் நானும் பூதமும் சேர்ந்து சிரிச்சுக்கொண்டம்.உவருக்கு அற்புத விளக்கின்ர  தியரம் தெரியேல்ல என்டு.

இப்பவும் எங்கயாவது கடற்கரைப்பக்கம் போனா மத்தவங்கள் எல்லாம் சிப்பி பொறுக்கேக்க நான் எங்கயாவது மூடியோட கண்ணாடிப்போத்தலுகள் கிடந்தா போய் நைஸாய் திறந்து பார்கிறது.இரண்டாயிரம் மூவாயிரம் வருசமாய் அடைபட்டு கிடக்கிற ஒரு பூதம் குபு குபு என்டு புகை வர முன்னால தோன்றி "பிரபோ இனி நான் உங்கள் அடிமை" என்டா அய்த்தலக்கடி யம்மா அடிச்சுது அதிஸ்டம்.

முதலாம்,இரண்டாம் ஆண்டுகளில் பெப்ஸி ஸ்பொன்சர் பண்ணினால் சக்திமான் தமிழிலும் கோல்கேட் ஸ்பொன்ஸர் பண்ணினால் சக்திமான் ஹிந்தியிலும் பொதிகையில் கதைத்த போது எனக்கென்னவோ அம்மா அடிக்கும் போதும் அண்ணரோட அடி படும் போதும் சக்திமான் வந்து உதவுவார் என்டு அப்பட்டமாய் நம்பினேன்.வீட்டில் கிடந்த துவாயைத்தூக்கி பின் கொலருக்குள் செருகிவிட்டு உயரமான இடத்தில் இருந்து கீழே பாயும் போது எனக்குள் இருந்த ஜூனியர் ஜீ ஸ்பிலிட் பேர்சனால்டி போல மின்னிவிட்டு சென்றதும் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.சக்திமானும்,ஜூனியர் ஜீ யும் ஹலோ சொல்லிய கால கட்டத்தில் இடம்பெயர்ந்து போய் துன்னாலையில் ஒரு வீட்டில் வசித்த நேரமது.சுத்து வட்டாரத்தில் இருந்த ஒட்டு மொத்த மினியன்ஸும் ஒரு வீட்டில் கூடி இருபத்தோரு இஞ்சி கதோட் ரே டிவிக்கு முன்னால் சப்பாணி கட்டி சக்திமானோ இல்லை ஜூனியர் ஜீ யோ பார்த்து விட்டு எங்கே என்ன பிரச்சினை வந்தாலும் சக்திமான் வருவார் என்று நம்பிக்கொண்டிருந்த காலத்தில் அந்த சோவையே திடீரென்று பான்ட் பண்ணிவிட்டார்கள்.கேட்டால் யாரோ சின்னப் பையன் மேல்மாடியிலிருந்து குதித்திருக்கானாம் சக்திமான் வந்து காப்பாற்றுவார் என்று.லூசுப்பையன் அவர் எங்கே பிசியாய் நின்றாரோ! யாருக்கு தெரியும்.

ஏஜ் கூடக்கூட ஏகப்பட்ட சூப்பர் ஹீரோக்கள் அறிமுகமாகத்தொடங்கினார்கள்.வாங்கின பென்சில் எல்லாம் ஜீபூம்பா பென்சிலானது.இஸ்டத்துக்கு விரும்பின பொருளெல்லாம்  உண்மையிலேயே உயிரோடு தோன்றும் என்று கீறித்தள்ளினேன்.ஒன்று கூட உண்மையான பொருளாகவில்லை. வரவில்லை.ஜந்தாம் ஆண்டில் கூடப்படித்த ஸ்வர்ணலோஜியின் மேல் ஒரு இது இருந்தது.அப்பவே சோடப்புட்டி கண்ணாடி போட்டிருப்பாள்.கீழ் நாடியில் ஒரு வெட்டிருக்கும்.ஆறாம் ஆண்டில் வேறு வேறு வகுப்புக்கு போன பின்னர் என் ஜீ பூம்பா பென்சிலால் அவள் போல அச்சு அசலாய் ஒரு படம் கீறி..,பார்த்தால் கலியுக மோனாலிசா என்றே சொல்லுமளவுக்கு கீறிவிட்டு உயிரோடு வரும் என்று பா(கா)த்துக்கொண்டிருந்தேன்.வரவில்லை.லேட்டாய்த்தான் விசயம் பிடிபட்டது.நாடியில் இருந்த வெட்டுக்கு பக்கத்தில் கறுப்பாய் ஒரு மச்சம்.நான் அதை படத்தில் போடவில்லை.சோ.. தப்பு என் பேரில்தான் ஜீ பூம்பா பென்சிலில் இல்லை என்று புரிந்தது.புரியும் போது அந்த பென்சில் முடிந்துவிட்டது.

பார்லே ஜீ பிஸ்கட் பக்கட்டுக்குள்ளால் சூப்பர்மேன்,பாட்மேன் இருவரும் காமிக்ஸாய் பிஸ்கட் சைசில் வந்து விழுந்தபின் எனக்கு அடிமைப்பட்டிருந்த அத்தனை பூதம்,பூம்பாவுக்கும் சுதந்திரமளித்து விட்டேன்.சூப்பர் ஹீரோ என்றால் அது சூப்பர்மேன்தான் என்று  நம்பிக்கொண்டிருக்க இடையில் பார்க்கருக்கு சிலந்தி கடித்து கையிலிருந்து கம் விட்டு ஸ்பைடர்மேனாய் பில்டிங் பில்டிங்காய் தாவ,வீட்டு சுவர் மூலையில் கிடந்த சிலந்திவலைக்குள் கொண்டு போய் கையை விட்டு விட்டு கடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

டப்பிங் படங்களுக்கு அடிமைப்பட்டு "அது நம்மளை நோக்கித்தான் வருது,பதுங்குங்க" என்டு பதுங்கிட்டு இருந்த காலத்தில் சூப்பர்,ஸ்பைடர்,பேட் மேன் ஜ தவிர வேறு சூப்பர் ஹியூமன்களே கண்ணில் படவிவ்லை.



வாழ்க தமிழ்,வளர்க ஆங்கிலம் என்று ஒரிஜினல் வேர்சனில் படமும்,புத்தகமும் பார்க்க ,படிக்க தொடங்கிய பின் கனவு விரியத்தொடங்கியது.
தெரிந்த சூப்பர் ஹீரோக்களின் எண்ணிக்கையும் பெருகத்தொடங்கியது.இங்கே எனக்கு கனவு காண கற்றுத் தந்தது அப்துல்கலாம் கிடையாது,அண்ணர்.அவற்ற மைன்டை ரீட் பண்ணி ஆள் என்னென்ன பார்க்குது,படிக்குது என்டு பார்த்து,கதைச்சு சண்டை பிடிச்சு...பெரும்பாலும் நான் வூல்வறின் என்டா அவர் மக்னட்டோ.பாவம் புரபசர் சார்லஸ் சேவியர்(அம்மா).

இப்போது எந்த சூப்பர் ஹீரோவை பிடிக்கறது என்பதற்கு அப்பால் போய் அவென்ஜர்ஸா,எக்ஸ் மேன்ஸா,இல்லை யஸ்டிஸ் லீக்கா என்று எந்த குறூப்பை பிடிக்கிறது எனும் அளவுக்கு ஒரு பெரிய லிஸ்டே கிடக்கிறது.




படங்களில் பார்த்தது தாண்டி எரோவ்,ப்ளாஷ்,டயர்டேவில் என்று எல்லாம் சீரிஸாக சீசன் சீசனாக வரத்தொடங்கி விட்டது.

மார்வலும்,டீசி யும் அறிமுகமான பின் என் கனவு வேற லெவலுக்கே போய் விட்டது.

இப்படி இருந்த போதுதான் சுஜாதாவின் ஸ்ரீ ரங்கத்து தேவதைகளில்
கோவிந்து ரங்குவின் டீக்கடையில் வைத்து 
"காட்
கேர் ஒஂப் வைகுண்டா
கெவன்"
என்று அட்ரஸ் போட்டு கடவுளுக்கு கடிதம் எழுதியது ஞாபகம் வந்து தொலைக்க
நாம ஏன் சூப்பர் ஹீரோக்களுக்கு கடிதம் எழுதக் கூடாது என்று ஐடியா வந்தது.விளைவு

"கேப்டின் ஒஂப் யஸ்டிஸ் லீக்
காடியன்ஸ் ஒவ் தி வேர்ல்ட்
அமெரிக்கா"

நாலு வில்லன்களை உங்களுக்கென்டே கிரியேட் பண்ணி வச்சுட்டு அமெரிக்காவுக்குள்ளயே சங்கம் கட்டி சுத்திகிட்டிருக்கும் யஸ்டிஸ் லீக் மெம்பர்ஸ்ஸூக்கு அடியேன் அன்புடன் எழுதிக்கொள்வது,

நாடு நாசமா போய்க்கிட்டிருக்குது லே நம்மூருக்கும் ஒருக்கா விசிட்டடிக்கிறது.குறைந்த பட்சம் டீமிலிருந்து ஒருத்தரையாச்சும் அனுப்பி விடவும்.சூப்பர்மேனை மட்டும் அனுப்ப வேண்டாம்.நம்மூர் சுண்ணாம்புக்கல்லு கிரிப்டனைட்டை விட பவர் புல்லானது.அவரு வந்தா தண்ணி கூட குடிக்க முடியாது.அதிலயே நிறய சுண்ணாம்பு இருக்கு.அவர் பவர் போறதுக்கு முதலே கல்லடைசல் வந்துடும்.

பாட்மேனை அனுப்பி வைக்கலாம்.நாட்டிலே ஜோக்கர்ஸ் தொல்லை கூடிப்போச்சு.வௌவால் எல்லாம் பகல்லயே பறந்து திரிகிறது.
வொன்டர் வுமன் சான்சே இல்ல அவுங்களுக்கும்.நம்ம நாட்டில சாதா வுமனே இல்ல எல்லாருமே வொன்டர்தான்.இத விட்டா அக்குவாமேன், கன்டர் க்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு.

இங்க meta human யாருமே இல்ல.இருந்தாலும் நிறைய விசித்திர கியூமன்ஸ் இருக்கு.அதால ப்ளாஷையும் முடிந்தால் அனுப்பி விடவும்.

வெக்கையில் நாடு சூடு பறக்கிறது.குயிக் சில்வர்க்கும் கடிதம் எழுதியிருக்கிறேன் கவலை வேண்டாம்.
அடுத்த வாரம் அவென்ஜ்ர்ஸ்க்கும் கடிதம் எழுதுவதாக இருக்கிறேன்.சிவில் வோரில் பிசியாய் இருப்பதால் வருகிறார்களோ தெரியவில்லை.

எதற்கும் நீங்கள் வருவதாக இருந்தால் முற்கூட்டியே எனக்கு டெலிபதி மூலம் தகவல் அனுப்பவும்.
இல்லா விட்டால் எக்ஸ்மேன்ஸை அழைப்பதாகவும் இருக்கிறேன்.

இப்படிக்கு
சூப்பர் பவர் எதுவுமே இல்லாத
ஒரு டூப்பர்மேன்

என்று எழுதி தள்ளி விட்டேன்.



கடிதம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் போல..

தொடக்கத்தில  அந்த குசும்புக் கேள்வி கேட்டவர் உட்பட ஊரே நம்பிட்டு இருக்கு  யோசிதவ மைத்திரிதான் உள்ள  தூக்கி  போட்டது என்டு.

ஹக்கு...ம் இந்த தடவை
நானும் ப்ரூஸ் வையினும் சிரிச்சுக்கொண்டம்.
                     #######










#அற்பபிறவி#