About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Tuesday, November 17, 2015

ஒரு ஜூரன் போரும் சில அக்கப்போருங்களும்

காலங்காத்தால குண்டுமணி வீட்டடியால் சூரனைக் கொண்டு போகும் போதே வேணுமென்று எக்ஸ்ராவாய் இரண்டு சங்கெடுத்து பலமாய் ஊதிக்கொண்டு, மணியை போட்டு அடித்துக்கொண்டு, போனது ஒடியல் புட்டுத்தின்று கொண்டிருந்த குண்டுமணிக்கு ஓரளவு கேட்டாலும் புட்டின் மயக்கத்தில் அதை சாட்டை செய்யவில்லை."குளத்திலே போட்டாலும் குண்டுமணி கலங்கமாட்டான்" என்றொரு பழமொழியே உருவாகி இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
(குண்டுமணி யார்,அவன் ஏன் ஒடியல் புட்டு தின்கிறான் போன்ற கேள்விகளுக்கு நீங்கள் அவன் பழைய வரலாற்றை என் பழைய போஸ்டுக்களில் கிண்ட வேண்டும்.ஏனென்றால் குண்டுமணியை தெரியாமல் இதை வாசிப்பதில் பயனில்லை."ஐ நாளைக்கு" என்ற பதிவை வாசித்து விட்டு இங்கே வரவும் )

ஏன் இப்படி குண்டுமணி வீட்டால் சூரனை கொண்டு போகும் போது செய்தார்கள்.அவனுக்கும் சூரனுக்கும் அப்படி என்ன பகை என்பதெற்கெல்லாம்  ஒரு பெரிய கர்ணபரம்பரை பிளாஷ்பாக்கே இருக்கிறது.கொஞ்சம் இதில் ஓடட்டும்.

குண்டுமணியின் டீம் அதாவது உண்மையில் கிச்சாவின் டீம் எல்லாம் போவது அவர்களின் பூர்வீக கிரவுண்டுக்கு அருகில் இருக்கும் கந்தசுவாமி முருகன் கோயிலுக்கு.காலையில் சூரன் கொண்டு போனது தம்பாவின் டீம்,சூரன் பழனியாண்டவர் முருகன் கோவிலுடையது.இரண்டு கோவிலும் ஒரு ஐந்நூறு மீற்றருக்குள் இருந்தது அநியாயம்.இதில் இன்னும் அநியாயம் தம்பாவும் குண்டுமணியும் முன்பொரு காலத்தில் ஒரே டீமில்தான் இருந்தார்கள்.அதெல்லாம் பழைய கதை.

வருசாவருசம் சூரனுக்கும் முருகனுக்கும் போர் வருகின்றதோ இல்லையோ இந்த இரண்டு கோயில் டீம்  சூரன்களுக்கும் ஆறாவது நாள் ஒரு குருஷேத்திர யுத்தம் மூளும்.சூரன் பாவம், ஒரு கோயிலில் ஐந்தடிக்கு தூக்கியெறிந்து பிடித்தால் மற்றக்கோயிலில் பத்தடிக்கு சூரன் பறப்பார்.அவங்கள் ஒரு லீற்றர் மண்ணெண்ணையை வாய்க்கை விட்டுத்துப்பினா இவங்கள் லாஂப் காஸை வாய்க்குள் விட்டு துப்பலாமா என்று ஐடியா போடுவார்கள்.அங்க சேலன் மாங்காய் கொட்டினால் இங்கே கறுத்தக்கொழும்பானை கொட்டுவார்கள்.

சாகப்போகிற சூரனுக்கு டெக்குறேசன் சும்மா அள்ளும்.முதல் நாள் இரவே இருந்து வேலை பார்த்து, டிரைக்ரர்ல சூரனை ஏத்தி,எட்டு முழம் பட்டுக்கரை வேட்டி கட்டி எங்கட ஒலிவர் குயின்ர கையில கிடக்கிற அம்பு வில்லை சூரன்ர எரோவ்வோட ஒப்பிட்டா எம்மாத்திரம் அது.ச்சும்மா கலர் பல்பில தக தகப்பார் சூரன் அப்படியே.காலமையே அதைக்கொண்டு சுத்த வெளிக்கிட்டா, ஊருக்குள்ள சூரன் யுத்தப்பிரகடனம் செய்வர்.

சூரனுக்கும்,சூரனுக்கும் சண்டை எங்க முழங்கும் என்டா இரண்டு சூரன்ர டிரைக்டரும் ஏதாவது ஒரு தெருவில் எதிரும் புதிருமாய் சந்திக்கும் போது.அந்த இடத்தில ஒரு கோயிலின் சூரனை சார்ந்தவர்கள் மற்றக்கோயில் சூரன் வைத்து வதைக்க,போன வருசம்
ஆரோ ஒருத்தன் ஆவேசமாய் "உன்ர சூரன் என்ன பெட்டையோடா?சாரி கட்டி வைச்சிருக்கா" என்ற ஆவேசமான தம்பா "காட்டுறன் வா" என்டுட்டு குண்டுமணி இருந்த பெட்டிக்குள் பாய்ந்து அவனை தள்ளிவிழுத்தி விட்டு சூரனுக்கு கட்டியிருந்த வேட்டியை உருவிக்கொண்டு போய்விட்டான்.பாவம் குண்டுமணியும் சூரனும் அந்த இடத்திலே அவமானப்பட்டு கூனிக்குறுகி நின்றார்கள்.சூரன் என்னதான் ஒரு அரக்கனாய் இருந்தாலும் குண்டுமணி ஒரு மனுசன்தானே.

அதன் பிற்பாடுதான் இந்த சண்டை பெரிதானது.அடுத்த முறை சூரனுக்கு காற்சட்டையெல்லாம் போட்டுத்தான் வேட்டி கட்டினார்கள்.நடந்த விசயம் கோயில் பெரிய தலைகளின் காதுக்கு போனதால் இரண்டு இடத்திலும் சம்பந்தபட்டவர்கள் சூரனைக்கொண்டு  போக தடை விதிக்கப்பட்டது.

இருந்தாலும் சூரன்போர் அன்று இரண்டு டீமிலிருந்தும் ஒரு ஒருத்தர் எதிரெதிர் சூரனாட்டத்தை  பார்த்து புள்ளியெல்லாம் போடப்போவார்.அவர்களின் கணக்கெடுப்பில்தான் எந்தக் கோயில் சூரன்போர் சிறப்பாயிருந்தது அந்த வருசம் என்று தீர்மானிக்கப்படும்.இதற்கொன்றும் அங்கே யாரும் கப் கொடுக்கப்போவதில்லை,இருந்தாலும் இது இரண்டு சூரன்களுக்கிடையிலான மானப்பிரச்சினை.
இப்படியான இந்த பிளாஷ்பேக்கில் பாவப்பட்டு போனது இருவர்.ஒன்று அந்தக் கோயில் முருகன்,மற்றது இந்தக் கோயில் முருகன்.

இதோடு அந்தக்குட்டி பிளாஷ்பேக்குக்கு முற்றும் போட்டு நிகழ்கால புள்ளிக்கு வரலாம்.

ராகீ ஆயிரம்தான் தம்பாவின் டீமாய் இருந்தாலும் அவன் வேட்டி கட்டிக்கொண்டு பழனியாண்டவர் கோயிலடியால் எப்படியாவது கந்தசாமி கோயிலின் பின் புறத்துக்கு வந்து விடுவதில் ஒரு விசித்திரமுமே இல்லாத காரணம் அவன் விசித்திரா.

சூரன் போர் நடக்கும் போது சூரன் முருகனை பார்க்றாரோ இல்லையோ,முருகன் அந்தக்கூட்டத்துக்குள்ள வள்ளி நிக்கிறாளோ என்டு தேடுறாரோ இல்லையோ,ம்க்ம் ராகீ விசித்திராவைக்கண்டு பிடிச்சு சரியா அவளுக்கு நேர எதிர்த்திப்புறத்தில கையக்கட்டிக்கொண்டு நின்டு மனசார முருகனை வழிபடுவான்.முருகா நாளைக்கு உன்ர திருக்கல்யாணம் சிறப்பா நடக்கோனும்,அதுக்கு  உவள் சாரில வருவாள்.நீ மட்டும் அவளைப்பார்த்தா வள்ளியைக் கிள்ளி எறிஞ்சாலும் எறிவாய் அதில ஆச்சரியமில்லை.இப்டி ராகீன்ர லைன்ல நிறையப்பேரும் விசித்திராவின்ர லைன்ல நிறையப்பேரும் ஜூரன் ஆடுறதைப்பார்க்க அவையவளுக்கு வேண்டிய கோயிலுக்கு போவினம்.

சூரன் சும்மா சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்,இரண்டு கோவில்களிலும்.இரண்டு இடத்திலும் யட்ச் பண்ணப் போனவர்கள் நோட் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.தூக்கிப்போட்டது எத்தனை தடவை,ஒரு பக்கமாய் சரித்து ஆட்டியது,குத்தி எடுத்தது,எத்தனை தடவை என்றெல்லாம்.

தாரகாசூரன்,சிங்கமுகாசூரன் தலையை எல்லாம் முருகனுக்கு கீழே நின்ற ஐயர் வேலை நீட்ட சூரனுக்கு மேலே நின்றவன் கழட்டி எடுத்தான்.அடுத்ததாய் சூரனின் தலையை மாட்டிக் கொண்டுவர தலையில்லா முண்டத்தை தூக்கிக்கொண்டு வடக்கு வீதிக்கு ஓடினார்கள்,தம்பா அணியினர்.



சிக்கல் அங்கேதான் வந்தது.முருகன் கொடுத்த அடி பலமோ இல்லை இவர்கள் ஆட்டியது பலமோ தெரியாது,சூரனின் கால் ஆட்டம் கண்டது,அதுவும் அது பொருத்தியிருந்த பலகையோடு.
இப்படியே தூக்கி ஆட்டினால் இந்த வருசத்தோடு சூரன் நிசமாகவே சாக வேண்டியதுதான்.அடுத்த வருசத்துக்கு புதுச் சூரன் செய்ய வேண்டி வரும் என்றார்கள்.

தம்பா தலையில் கை வைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.போட்டி அது,இது எல்லாவற்றிற்கும் மேலால் சூரனாட்டவே முடியாது போயிற்றே என்று.நேரம் சுற்றிக்கொண்டிருந்தது.இருட்டிக்கொண்டிருந்தது.முருகன் கம சனம் சூரனை எதிர்பார்த்து பொறுமை இழந்து கொண்டிருக்க...

கொஞ்ச நேரம் போக...
வடக்கு வீதி தலைப்பில் சில தீவட்டிகள் தெரிந்தது.
தம்பாவும் எல்லாரும் எழும்பி நின்று பார்க்க ,வெளிச்சம் நெருங்கியது.வெளிச்சத்தில் சூரன் உயரமாய் தெரிந்தது,
சூரனுக்கு முன்னால் சேட்டும் இல்லாமல் மரண மாஸோடு குண்டுமணி தீவட்டி பிடித்துக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தான்.

"சூரன் உடைஞ்சிடுச்சாமே,தகவல் வந்துச்சு அதான்."

"அதுக்கென்ன இப்போ?"

"ஒண்ணுமில்லை விரும்பினா எங்கட சூரனை ஆட்டலாம் ஆனா ஒரு கண்டிஷன்"

"இவன்,இதோ நிக்கிறானே இவன்,எங்கட சூரனுக்கு முன்னால விழுந்து மன்னிப்பு கேக்கனும்"

குண்டுமணி கூக்குரலிட்டது எட்டுத்திக்கும் எதிரொலித்தது.

எல்லாரும் தம்பாவின் முடிவை அவன் மூஞ்சையில் தேட ...ஒரு நிமிசம் யோசித்தான்.

"ஓகே விழுறன் " என்றதும் தாமதம் குண்டுமணி ஓடிப்போய் சூரனோடு ஒட்டி நிமிர்ந்து நின்று கொண்டான்.
அன்று சூரனும், குண்டுமணியும் பட்ட அவமானம் கரைந்து போனது.போகும் போது கால் முறிந்த சூரனைப்பார்த்து குண்டுமணி ஒரு நமுட்டுச்சிரிப்பு சிரித்ததை யாரும் கவனிக்கவேயில்லை.புழுக்கொடியலின் நுனியை முறித்தெறிந்து விட்டு அடியைக் கடித்துக் கொண்டு குண்டுமணி புறப்பட்டான்

அந்த சூரன் போரில் அதிகமாய் ஆடி நிறைய புள்ளி பெற்றது என்னவோ தம்பாவின் டீம் ஆனால் ஆட்டியது குண்டுமணியின் சூரனை ஆகையால் போர் டை யில் முடிய ராகீ சால்வையை போர்த்திக்கொண்டு விசித்திராவுக்கு பாதுகாப்பாய் அவள் வீடுவரை போய்கொண்டிருந்தான்.

############







#அற்பபிறவி#