About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Wednesday, May 19, 2021

Mr.மியாவ்

வேலை எட்டரைக்கு என்றிருக்கும் போது எட்டு இருபதிற்கு போட வேண்டிய சேட்டின் மீது அயன் பாக்ஸை வைத்து விஷ்க், விஷ்க் என இழுத்து, இரண்டாய், நான்காய். ஆறாய் கையை மடித்து அட்ஜஸ்ட் பண்ணி கால்வின் கிளெயினை காற்றில் கரைத்து அல்சர் வராத அளவிற்கு வயிற்றை நிரப்பி,திறப்பை தேடி, பைக்கை தள்ளி,ஏறி,உட்கார்ந்து புறப்படலாம் என்னும் போது.... வளர்த்த நன்றிக்கடனை வயிற்றில்  கட்டிக்கொண்டு  பூனை  குறுக்காலே ஓடியதும். பகீரென்றிருந்தது.

பூனைகளைப்பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆராய்ந்து எழுதி, முடியாமல் தொங்கி கொண்டிருக்கும் பதிவிலிருந்து ஒரு சில
வரிகளை இந்த பதிவின் சில பகுதிகளில்  காணமுடியும்.

//😼....ஒரு வகை முக்காலமும் உணர்ந்த ஞானிகளாகவே பூனைகள் ஆதிகாலத்திலிருந்து இருந்து வருகின்றன. தங்களிற்கு உணவு போடும் அடிமைகளுக்கு எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினைகள் வரும் எனின்  அதை முற்கூட்டியே அறிந்து எச்சரிப்பதற்காகவே இவ்வாறு குறுக்காலே பாய்ந்தோடுவதாக ஆராய்ச்சி முடிவுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.மேலும் பூனைகள், மனிதர்களை அடிமைகளாகவே பார்ப்பதாக தொண்ணூற்றைந்து சதவீத ஆய்வுகள் சொல்கின்றன, அதற்கான காரணம் ......😼 //

"சனியன் குறுக்கால போகுது,தண்ணி கொண்டு வல்லாம், குடிச்சுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு போ"

இல்லை இப்போதே போகிறேன் என்று வைத்தால் ....என்ன நடந்தாலும் அது சனியின் தலையில்தான் விழும். எதற்கு வீண் வம்பு என்று செக்கன்களை எண்ண வேண்டியிருந்தது.

அந்த சனியன், அண்ணரின்  ஏ/எல்  பைனல் எக்சாம் நாட்களில் ஒரு புலம்பெயர் குட்டி அகதியாக  வீட்டிற்குள்  வந்து சேர்ந்த ஒன்று. எங்கே?  அதை துரத்தினால் நாளை நடக்க இருக்கும் செகண்ட் பார்ட் பிசிக்ஸ் பேப்பர்  கவிட்டு விடுமோ என்ற பயத்தில் கையில் வைத்திருந்த றோசா சேரின் பாஸ் பேப்பர் புத்தகத்தால் அதை பாசமாய் தடவி விட சனி மெதுவாய் சவுண்ட் விட்டது.
மியாவ்....

அடுத்தடுத்த நாட்களில் அந்த சனிக்கு பெயர் வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.சனி  வீட்டின் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து இருந்தது. அடுக்கி வைத்த நெல் மூட்டைகள், அலுமாரியின் அடிப்பக்கங்கள், கட்டில் கரையோரங்கள், முக்கியமாய் சமையல் கட்டின் மூலை விளிம்புகளை வளைத்துக்கொண்டது. சனி மியாவ் என்று சத்தமிட்டதால் அதனை மியாவ் என்றே சில நாட்கள் கூப்பிடலாம் என்று இருக்க வீட்டில் இதுவரை இருந்து இறந்து போன மொத்த மியாவ்கள் 3 உடன் சேர்த்து அதற்கு ஒரு பெயர் சூட்டும் வரைக்கும் மியாவ் - 04 என்று அழைப்பதென முடிவானது.

மியாவ் - 04 முன்பு இருந்த மற்ற 03 மியாவ்கள் போலில்லாமல் தனித்துவமாய் விளங்கியது. வெள்ளையும் சாம்பலுமாய் கலந்த கலரில் வெளிர் பச்சை துரு துரு கண்களுடன் வீட்டினுள் உலா வந்தது.

அது சரி முதல் இருந்த 03 மியாவ்களுக்கும் என்ன நடந்தது என்ற சந்தேகம் வரலாம். 

// 😾....பூனைகள் விசித்திரமானவை. வளர்ப்பவர்களை காட்டிலும் வளரும் வீட்டிலேயே அதிக பற்றினை கொண்டிருக்கும். அவற்றிற்கு அந்திமக்காலம் நெருங்குவதை முற்கூட்டியே அறிந்து கொள்கின்ற சக்தி உள்ளதாக அறியப்படுகின்றது. அவ்வாறு முதலே அறிந்து கொண்டவுடன் அவை வீட்டினை விட்டு வெளியேறிவிடும். அது அவற்றின் கைன்ட் ஒஃவ் மக்கா யாத்திரை போல. எங்கே அப்படி போகின்றன என்று யாரும் இதுவரையிலும் கண்டு பிடித்தது கிடையாது. திரும்ப வரவில்லை எனின் அவற்றின் பயணம் முடிந்தது என்ற முடிவுக்கு வரலாம்...😾//

முதலாவது மியாவ் திரும்பி வரவில்லை. ஒரு வயது கூட தாண்டியிருக்காது. அதற்கிடையில் அதன் வாழ்க்கையில் யாத்திரைக்கு என்ன அவசியம் வந்து விட்டிருக்க போகிறது. புரியவில்லை.

03 வதின் விசனில் ஏதோ பிழை நேர்ந்திருக்கிறது. ஒரு நாள் காலை அடித்து பெய்த மழையில் கிணற்றுக்குள் 360 பாகையில் மிதந்தவாறே சுற்றி சுற்றி வந்தது. 

சரி இரண்டாவது எங்கே என்றால் அதுவும் திரும்பி வரவில்லை என்ற எடுகோள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது  டெக்ஸ்ரர் 08 சீசன்களையும் பிஞ் வோட்ச் லிஸ்டில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த சமயம். அண்ணரின்  சந்தேக கண்களை அவதானிக்க முடிந்தது. ஏன் எனக்கே என் மீது ஒரு சந்தேகம் வந்தது.

போகட்டும மியாவ் 4 ற்கு வரலாம்.
மியாவ் - 04 ஐ அடுத்தடுத்த நாட்களில் விழுந்து புரண்டு ஆராய்ச்சி செய்ததில் அது மிஸ்டர் மியாவ் என்பது புலப்பட்டது.

// 😸...கடுவன் பூனைகள் வீட்டில தங்காது. உது பார் கொஞ்ச நாளில வீட்ட விட்டே ஓடிடும்....😸 //

அம்மாவின் அனுபவ  முடிவுகளில் ஒன்று, மிஸ்டர் மியாவ் என ஊர்ஜிதம் செய்த போது வெளியிடப்பட்டது.

அம்மா Vs மியாவ்வுகள்.

மியாவுகளுக்கும் அம்மாவுக்கும் இடையில் காலங்காலமாக பல காத தூர இடைவெளிகளே பேணப்பட்டு வந்தது. எப்போதும் அவற்றின் செயல்கள் அம்மாவிற்கு வெறுப்பூட்டுபவையாகவே இருந்து வந்துள்ளன.

ஆரம்ப காலத்தில் எந்தவொரு மியாவையும் வளர்ப்பதற்கான அனுமதி வீட்டில் வழங்கப்படவில்லை. அது காலவோட்டத்தில்  அனுமதிக்க பட்டதிற்கு பின்னால் ஒரு வரலாறு இருந்தது. ஒரு தடவை சூட்கேசிற்குள் இருந்த அம்மாவின் ரெட் கலர் டிகிரி சேர்டிபிக்கட் குழலுக்குள் சேர்டிபிக்கட்டானது பசில்ஸ் துண்டுகள் போல குமைந்து கிடந்தது. எடுத்து ஒழுங்கு படுத்தி ஒட்டிய போது அம்மாவின் பெயரின் கடைசி எழுத்தை எங்கு தேடியும் காணவில்லை. அந்த ஆத்திரத்தில் எதிரிக்கு எதிரி நண்பனே என்ற சமாதானத்துடன் மியாவுகளுக்கான அனுமதி வீட்டில்  வழங்கப்பட்டிருந்தது.

இருந்தாலும் அனுமதியையடுத்து வந்த 03 மியாவுகளிற்கும் அம்மாவிற்கும் ஒத்து வரவில்லை. அம்மாவின் சமையல் பாத்திரங்களையும் தலையணைகளையும் கட்டிலையும் அவை ஒரு வித குரோதத்துடனே அணுகியிருந்தன. டஜன் கணக்கில் அவற்றில் தம் முடிகளை கொட்டி திட்டுகளை சம்பாதித்துக் கொண்டன.

அம்மாவின் பாத உரசல்களை தவிர்த்துக்கொண்டன. மறந்தும் உரசும் சந்தர்ப்பங்களில் ஐந்தடி தள்ளி போய் பல்டி அடித்தன. இரவானால்  வீட்டிற்கு வெளியே தள்ளப்பட்டன. மியாவ் -02 இந்த சித்திரவதைகளை தாங்காமல்தான் ஓடி விட்டது என்று அம்மாவின் மீது  குற்றம் சாட்டிக்கொண்டோம்.  

மியாவ் -04 அப்படியான வேலைகளை தவிர்த்தோ என்னவோ அம்மாவை இம்பரஸ் பண்ணியது. சாப்பிடுகின்ற சந்தர்ப்பங்களில் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். மியாவ் என்று ஒரு சத்தம். கவனிக்கவில்லையா.... இரண்டு காலில் தவ்வி முன்னங்கால்களால் ஒரு சின்ன உரஞ்சல். அவ்வளவுதான். மியாவ் தொடர்ந்து வந்த நாட்களில் பழகி கொண்டது, அதுவும் எப்படி இந்த வீட்டில் அம்மாவுடன் சேர்வைவ் பண்ணுவது என்பதை கச்சிதமாக பிடித்துக்கொண்டது.

அதிகாலை வேளைகளில் எழுந்து சமைக்கும் அம்மாவுக்கு அடுப்பங்கரை ஓரங்களில் கம்பனி கொடுக்க தொடங்கியது. பனிக்கால பொழுதுகளில் அடுப்புக்கள் எப்போது மூட்டப்படும் என்று காவல் இருக்க தொடங்கியது. மூட்டப்படும் அடுப்புகளிற்கும் அம்மாவுக்கும் இடையில் இருந்தவாறே குளிர்காய்ந்து கொண்டது. எந்தவொரு மியாவுக்கும் கிடைக்காத வரத்தை எப்படி மியாவ் -04 பெற்றுக்கொண்டது என்பது பெரிய ஒரு மித் ஆக இருந்தது.

பெயர் சூட்டும் படலம்

கிட்டத்தட்ட மியாவ் வீட்டிற்குள் வந்து இரண்டு வருடங்களாக மியாவ் என்ற பெயருடனே சுற்றி திரிந்து . நாங்கள் மட்டும்தான் அதை மியாவ் என்றோமே தவிர அதற்கு ரெஸ்போன்ஸாக அது திருப்பி மியாவவில்லை.

ஊமையாக இருக்குமோ என்ற சந்தேகம் அடிக்கடி துளை விட்டது. சாப்பாட்டு நேரத்திற்கு மட்டும் கத்தி தொலைப்பதனால்,  அந்த சந்தேகமும் தவிடு பொடியானது.இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தவிடு ஏற்கனவே பொடிநிலைதானே என்றொரு சந்தேகமும் அடிக்கடி வருவதுண்டு.

எந்த பெயரை வைத்து அழைத்தாலும் திரும்பி பின்பக்கத்தை காட்டியபடி செல்லும் மியாவ் -04 ஐப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. வைபரில் ப்ரெடி தி பொக்ஸ் என்றொரு ஸ்டிக்கர் செட் அறிமுகமாகியிருந்த நேரம் அது.  அந்த ஸ்டிக்கரில் இருந்த ப்ரெடியை பார்த்துவிட்டு ப்ரெடி என்ற போது மியாவ் திரும்பி பார்த்து...

"மியாவ்"

என்றதும் ஆச்சரியமாக இருந்தது.

எதற்கும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று விட்டு மீண்டுமொரு தடவை  ப்ரெடி என்ற போது

"மியாவ்"

யெஸ்.

// ...😼 பூனைகளிற்கு நீங்கள் நினைத்த மாத்திரத்தில் பெயர் வைத்து விட்டு செல்ல முடியாது. எல்லா பெயர்களிற்கும் அவை ஆம் சொல்வது கிடையாது. "பூஸ்" என்ற பொது பெயரை மட்டுமே இது வரைக்கும் அதிகளவான பூனைகள் ஏற்றுக்கொண்டதாகவும் அறிய முடிகிறது. சில பூனைகள் அதற்கு கூட பதிலளிப்பதில்லை. வாலை மட்டுமே ஆட்டிக்காட்டுகின்றன எனவும் அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும்...😼//

ப்ரெடி ... ப்ரெடி...ப்ரெடி என்று மூன்று தரம் காதுக்கு பக்கத்தில் சொன்ன போது கன்னத்தை உரசி விட்டு சென்றது.

சோ தட்ஸ் இட். மிஸ்டர் மியாவ், மிஸ்டர் ப்ரெடியாக ரெஜிஸ்டரான ஆண்டு 2012 ன் ஏதோ ஒரு நாளில்.

நாளடைவில் வாழ்க்கையின் வழமையான ரூட்டின்களோடு மிஸ்டர் ப்ரெடியும் ஒன்றாகியது. காலை வேளைகளில் குடிக்கும் பாலின் ஒரு பங்கு சொந்த கப்பிலிருந்து போக தொடங்கியது. அண்ணர் வீட்டில் நிற்கும் நாட்களில் பால்பங்கு அவருக்கும் இருந்தது.

மாலை வேளைகளில் மிக்சர், பிஸ்கட் என்பன இருவர் தரப்பிலிருந்தும் அடாவடி வரியாக அறவிடப்பட்டதுடன் புட்டுக்கு மாக்குழைக்கும் சந்தர்ப்பங்களிலும், மற்றும் தேங்காய் திருவும் நேரங்களிலும் அம்மாவுக்கு பக்கத்தில் அமைதியாய் அமர்ந்து கொண்டும் தன் தேவைகளை நசூக்காக நிறைவேற்றிக்கொண்டது.

சோறு வைத்தால் திருப்பியும் பார்க்காதது, மீனை சோற்றோடு குழைத்து வைத்தால் மோர்ந்து பிடித்து, தேர்ந்தெடுந்து மீன் துண்டுகளை மட்டும்  கவ்வியது.

அம்மாவின் சேர்டிபிக்கட்டுக்கு காரணமாயிருந்த அத்தனை பேரும் தினந்தோறும் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அறை மூலைகளில் எஞ்சிய வால்களாக வீசி எறியப்பட்டிருந்தது.

சந்தோசத்தில் அம்மாவின் புட்டுமாப்பங்கு அதிகமாகவே மிஸ்டர் ப்ரெடி கொழுக்க தொடங்கியிருந்தார்.

ஒரு கட்டத்தில்  வீட்டிற்கு வெளியிலும் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருந்ததுடன் பாலங்கட்டப்போய் கொண்டிருந்த அணில்களிற்கும் பேராபத்து வர தொடங்கியது.

மிஸ்டர் ப்ரெடி அணில்களிற்காக காத்திருந்த போது எங்கே இப்படியே போனால் சீதையை மீட்க முடியாதோ என்ற குழப்பத்தில் அவர் காத்திருப்பதை குழப்புவதே ஒரு வேலையாக இருந்தது. அந்த நேரத்தில்.

தினந்தோறும் சோம்பல் முறிப்புகள் புகைப்படங்களாக மாற்றப்பட்டு பெருமளவு மெகாபைட் மெமரிகளை அடைத்துக்கொண்டது.



காலம் கட்டாயம் உருண்டோடத்தான் வேணுமா? எக்ஸ்பிரஸிலும் போகும்.  2017  ஆம் ஆண்டளவில் ஒரு நாள் ப்ரெடியை காணவில்லை. ......
யாத்திரைக்கு போய் விட்டதோ என்ற எண்ணம் வந்தது. அம்மா கடுவன் பூனை ஆராய்ச்சி முடிவை மீண்டும் மேற்கோள்காட்டினார்.

ஒரு நாள் ....வரவில்லை,
இரண்டு நாள்....வரவில்லை,
மூன்று நாள்...வரவில்லை,

எனி வராது என்ற முடிவுக்கு வந்தாயிற்று.

அவ்வளவுதானா என்றிருந்தது. வாழ்க்கையில் ஏழு வருடங்கள் வீட்டின் எல்லா இடங்களிலும் கூடவே இருந்திருக்கிறது என்பது சாதாரணமில்லை.ஒவ்வொரு நாளின் உணவுண்ணும் வேளைகளும், நித்திரையால் எழும்பும் தருணங்களும் அதனோடுதான் நிழ்ந்திருக்கிறது. இருந்தாலும் இது போதாது இன்னும் இருந்திருக்கலாமோ என்று மனது குறுகுறுத்துக்கொண்டது. ஒரு வெற்றிடம் வந்து நிரவிக்கொண்டது.

தினம், தினம் தொடர்கின்ற சில காரியங்கள் அந்த நேரங்களில் அற்பமாக தெரிந்தாலும், அது தவிர்க்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மனதுக்குள் ஒரு தவிப்பு இருந்தால் அங்கேயே உணர்ந்து கொள்ளுங்கள், அதனை எவ்வளவு தூரம் நேசித்துள்ளீர்கள் என்று.

நாலாம் நாள் முடிவில் காலையில் பால் குடித்துக்கொண்டிருந்த போது காலை உரசியது போல இருந்தது. மூன்று நாட்களும் இப்படியான பிரமை தொடர்ந்து கொண்டே இருந்தது.எங்கெல்லாம் சுருண்டு படுத்துக்கொள்ளுமோ அந்த இடங்களில் எல்லாம் இருப்பது போன்று தோன்ற தொடங்கியிருந்தது. மறுபடியும் உரசியது. பிரமையில்லை நிஜம் என்றது மனது.

இருக்கும் கதிரைகளிற்கு கீழேயே அடிக்கடி தேடிப்பாருங்கள். நீங்கள் தொலைத்த அதிசயங்கள் நிறைய அங்கேதான் அதிகமாய் கொட்டிக்கிடக்கின்றன.

கொஞ்சமாய் மெலிந்து போயிருந்தது. கண்களில் அதே துறு துறுப்பு இருந்ததாலும் ஏதோ ஒரு மூலையில் சோர்வு தெரிந்தது. மூன்று நாட்கள் சாப்பிடவில்லையாய் இருக்கலாம் அல்லது வயது போகின்றது என்ற எண்ணம் வர தொடங்கியிருக்கலாம். எங்கே யாத்திரை போனது தெரியவில்லை. அங்கிருந்து திரும்பி வந்தது அதை விட ஆச்சரியமாயிருந்தது.

//...😾 உலகிலுள்ள எல்லாப்பூனைகளும் ஒரே மாதிரியானவை கிடையாது. இது இப்படித்தான் என்ற வகைக்குள் அவற்றை அடக்க முடியாது. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனித்துவக்குணங்களே காணப்படுகிறது. இருந்தாலும் கடுமையான ஆராய்ச்சிகளின் மூலமாக சில முடிவுகளிற்கு வரக்கூடியதாகவிருந்தது. அது தொடர்பாக எழுதி வைத்திருந்த தாளில் எப்படியோ தெரியவில்லை, டீகப் சரிந்து ஊற்றியுள்ளதுடன் எழுதியது யாவும் அழிந்த நிலையில் உள்ளது. இரண்டு மூன்று நாட்களாக இங்கே ஒரு பூனை அலைந்து திரிகிறது. அதிலிருந்து இந்த ஆராய்ச்சியை தொடர ....😾//

வாரணே அவசியமுண்டு என்ற மலையாளப்படத்தில் சொன்னது நினைவுக்கு வந்தது.

"எப்போதும் திரும்பி வருவதற்கு ஒரு வீடு இருக்க வேண்டும் அப்போதுதான்
போகின்ற பயணங்கள்  அழகாக  இருக்கும்" 

மிஸ்டர் ப்ரெடிக்கும் யாத்திரையின் நடுவழியில் அது புரிந்திருக்கலாம். அதனால் கூட திரும்பியிருக்கலாம்.

2018 மற்றும் 2019 களையும் ப்ரெடி சில ஊசிகளுடனும் பல மருந்துகளுடனும் கடந்தது. வேட்டைக்காக காத்திருக்கும் கால அளவு சுருகியது. அதிக நேரங்களை நெல் மூட்டைகளின் மேலேயே செலவழித்தது.

அடுப்பளவு உயரத்திற்கு தாவி பாய்வதற்கான சக்தியை கால்கள் இழந்திருந்தது. அதிகாலை வேளைகளில் அடுப்புக்கள் விருப்பமின்றியே நெருப்பிக் கொண்டன.

எல்லாவற்றிலும் விநோதமாய் மதிய நேரங்களில் வெறும் சோறு சாப்பிட்டது.

2020 . ப்ரெடியின் பத்தாவது வயதில் பெருமளவு சாம்பல் கலர் முடிகள் பிரவுன் கலருக்கு மாறியிருந்தன. கண்களில் சில நேரங்களில் ஏனோ தெரியவில்லை கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. இன்பெக்சன்னாய் இருக்கலாம் என்று, கண்களில் விடுவதற்கு பெட் கேரில் ஐ டொரப் தந்தார்கள்.பிஸ்கட், மிக்சர்களை போன்ற கரடு, முரடு பொருட்களை தொலைவில் இருந்தே தவிர்த்துக்கொண்டது. பற்களையும் இழந்திருக்கலாம்.

நிறைய நாட்கள் எதுவுமே உண்ணாமல் நோன்பாகவும், சில நாட்களில் மட்டும் சாப்பிடுவதுமாக கழித்துக்கொண்டது. 

இருந்தாலும் தவறாமல் எப்போதும் காலை நேரங்களில்  தன் பால்பங்கிற்காக காத்திருந்தது மட்டும் ஒரு ஆறுதலாக இருந்தது.

அதனால்தான் என்னவோ அதன் பால்பங்கு மட்டும் இன்று வரையிலும் தினமும் கப்பின் அடிப்பாகங்களில் தேங்கி நிற்கின்றது.

ஆனால் 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் இறுதி வார நாட்களில்,
ஒரு நாளில்...

ப்ரெடி இறந்து போயிருந்தது.


########






#அற்பபிறவி