About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Tuesday, December 22, 2015

திருவெம்பாவையும் திரு என் பாவையும்

பெருமாள் தேடிய ஆண்டாள்....

நான் கல்லை உடைத்து அதுக்குள்ளே கடவுளைக்காணும் அளவுக்கு ஒன்றும் தீவிர பக்தன் கிடையாது.இருந்தாலும் காலை ஒரு தரம், மாலை ஒரு தரம் வீட்டிலும் ,போகும் போதும்,வரும் போதும் ரோட்டோரத்தில் இருக்கும் குட்டி பிள்ளையாரையும்,யேசுவையும்,புத்தரையும் என்று ஒன்று விடமால் நெஞ்சிலே கை வைத்து வஞ்சகமில்லாமல் ஒரு தரம் இரண்டு நெடி கண் மூடி வழிபடும் ஒரு பக்தன் அவ்வளவுதான்.

சிவராத்திரி,நவராத்திரி,கந்தசஷ்டி என்று ஒன்று விடமால் எல்லாவற்றிற்கும் கோயிலுக்கு போய் விரதம் பிடித்து 365 நாளில் குறைந்தது 30 நாளாவது சாப்பிடாமல் இருக்கும் ஒரு சாதாரண பக்தன்.கடவுளுக்கு கூட என் கடமை கண்ணியம் கட்டுப்பாடு பிடித்திருக்கலாம்.இத்தனை வயதில் கிடைக்க வேண்டியதெல்லாம் இத்தனையாவது வயதிலேயே கிடைத்தது.கிடைத்தது என்பதற்காக நான் சும்மா விட்டு விடவில்லை வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டேன்,சால்வையால் போத்திக்கொண்டேன்,இருந்தாலும் காலை பனி ஊடுருவியது கைகளுக்குள்ளால்.எட்டி பார்த்தாலே எட்டடி தூரத்த்தில் கோயில் தெரியும்,ஐந்தடுக்கு கோபுரத்துடன் அழகிய சிவன் வீடு.மறந்து செருப்பைக் கொழுவி கேட்டுக்குள் செருகிவிட்டு புறப்பட்டேன்.கோயில் நிர்வாகம் என் தலையில் இல்லை கையில் துண்டைப் போட்டு இந்த தடவை காலையில் காசு சேர்த்து வா மணிமாறா என்று கட்டளையிட நான் என் அதிகாரத்துக்கு கீழிருந்த 5 வயதுக்கு மேற்பட்ட அத்தனை சிறுவர்களையும் நியாயம்,நீதி,தர்மம் பார்க்காமல் வேலைக்கமர்த்தினேன்.ஒருத்தனுக்கு வீபுதி தட்டு,ஒருத்தனுக்கு மணி,ஒருத்தனுக்கு சேமக்கலம்,ஒருத்தனுக்கு சங்கு என்றெல்லாம் கொடுத்து இப்போது அதை ஆரம்பிப்பதற்காக போய் கொண்டிருக்கிறேன்.

உற்சாகமாய் பத்து பேர் கொண்ட குழு பத்து நாள் திருவெம்பாவைக்கு புறப்பட்டது, 5.15 அளவில்,

          "கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
           ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்"

என்று பாடியபடி...
எல்லாமே வாண்டுகள்,பனிக்கே குளிர வைக்க கூடிய பனிக்குட்டிகள்.எல்லாரையும் மேய்க்கும் பொறுப்பு என் தலையில்.ஒருத்தன் காதுக்கு பக்கத்தில் வைத்து சங்கை ஊதுவான்,ஒருத்தன் மணியால் சேமக்கலத்தை அடிப்பான்,களா புளா கலவரமாய் இருக்கும் சிவன் கோயில் வீதி முழுக்க, எந்த கும்பகர்ணணும் இந்த சத்ததில் எழும்பி குந்தியிருப்பான்.அதுதான் மாஜிக், அடிக்கும் மணிச்சத்தத்தில் ஐந்து ரூபாய்க்கு குறையாமல் தட்டில் விழும்.தட்டுக்கு தம்பி பொறுப்பு,தம்பிக்கு நான் பொறுப்பு.எனக்கு யார் பொறுப்பு ?!!

           "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
            நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
            சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
            கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
            ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
            கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே                     நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்"

திருவெம்பாவையில் திருப்பாவை பாடலை பாடி ரசிக்கும் முதலும் கடைசியுமான மடைச்சி நானாய்தானிருப்பேன்.நான் பிறந்தது கூட திருவாதிரை அன்றாம்,அது மறக்ககூடாது என்று காதில் மூன்று தரம் திருக்குழலி,திருக்குழலி,திருக்குழலி என்று சொல்லிவிட்டார்கள்.இந்த பேர் வேண்டாம் என்று நான் அழ குழந்தைக்கு பசிக்கிறது பால் கொடு என்றுவிட்டார்கள்.கடைசியில்
அதுக்கு உடன்பட வேண்டியதாகி இப்போது குழலியை விட்டு விட்டு திரு என்கிறார்கள்,வேறு வழியில்லை கூப்பிடுவருக்கு அல்லது வனுக்கு எல்லாம் ஆமாம் போட வேண்டியதாகிவிட்டது செல்வி.திருக்குழலிக்கு.

திரு அல்லது குழலி எப்படியும் கூப்பிடலாம்.ஆனால் எனக்கு எப்படி கூப்பிட்டாலும் பிடிக்கவில்லை,இந்த பெயரே பிடிக்கவில்லை.
எனக்கு காலை எழுந்ததும் பாட்டு,மதியம் முழுவதும் பாட்டு,மாலையும் பாட்டு,சுருங்க சொன்னால் நான் இசையோடு வாழவில்லை,இசை என்னோடு வாழ்கிறது.

கிணற்றுக்கு ஒரு வீடில்லை அந்த வீதியில் ஒன்பது வீடு.காலையில் ஆறு அடிக்க முதல் ஒன்பது வீட்டிலுள்ள மகளிருக்கும் ஆறுக்கு பின் ஆடவருக்கும் சொந்தமான கிணறு அது.

குழலி குளிக்க போகவும் வரவும் துணையாய் இருவர் போவர்

அதில் தேனு வீட்டு கதவை முணு முணுத்தபடி மு(த)ட்டினாள்

           "முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
             அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
             தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்"

திறக்கவேயில்லை அவள்,நின்றென்ன இனி முழுப்பாட்டுமா பாடமுடியும்.மற்றவளும் அதே கதைதான்.பனியில் பாயை தோண்டி படுத்து விட்டார்கள் இருவரும். பாவம் தனியொருத்தியாய் தலையில் தண்ணி வார்த்தாள் படை இல்லாத தலைவி.
குளித்து முடித்து விட்டு தலைக்கு ஒரு துணியை சுத்தி நெஞ்சுக்கு மேல் இழுத்து பாவடையை கட்டி மேலே பெரிய துவாயை போத்திக்கொண்டு பனிக்கும் பயத்துக்கும் சேர்த்து நடுங்கி கொண்டு எட்டி எட்டி திருக்குழலி நடந்த நேரம் காலை 5.47.வீட்டு ஒழுங்கைக்குள் இறங்கியதும் பனியும் பயமும் பறந்து விட்டது போத்திய துவாயை தூக்கி விசுக்கிய படி,வாய் ஏதோ அசைய

             "செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
              எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
              கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி"

கேட்டை தள்ளவும்.....

இந்த ஒழுங்கைக்குள்ள இருக்கறது ஒரே ஒரு வீடுதாண்ணா.அதுவும் அந்த சங்கீத குடும்பம்.ஒரு ரூபா கூட கிடைக்காது.ஒரு பாட்டு வேணும்னா கிடைக்கும்.பேணிக்குள் பிடிச்சுட்டு வா என்று உண்டியலை தந்துவிட்டு  நாலு பேர் ஒருபக்கமாயும் நாலுபேர் மற்றபக்கமாயும் போய்விட ஏதோ இனம்புரியாத ஒன்று அங்கே போ என்று செலுத்த அந்த ஒழுங்கை வீட்டை அடைந்ததில் பலன் இருந்தது.தட்டில் சங்கீத வாத்தியார் இருபது ரூபாய் போட்டதுக்கு இரண்டு தரம் திருநீறைக் அள்ளிக் கொடுத்து விட்டு
திரும்பி
நடந்து
கேட்டை இழுக்கவும்......

அவனுக்கு 'திக்' கென்றது
அவளுக்கு 'விக்' கென்றது

தலையில் கட்டிய துணியிலிருந்து தவறி சுருண்டு விழுந்த இரண்டு முடி கூட ஒருமுறை நடுங்கியது,அவளுடன்
சட்டென்று சமாளித்து துவாயால் சுத்தி போத்திக்கொண்டாள்.. சரியா?
தன் சால்வையை தூக்கி இவன் மூடிக்கொண்டது.. பிழையா?
இல்லை இதை இப்படி எழுதியது.. முறையா?

அக்கா வீபுதி என்றான் பக்கத்தில் நின்றவன்.
வலக்கை கீழ் இடக்கை வைத்து நீட்டி வாங்கி நெற்றியில் சின்னதாய் இழுத்து சிறிதாய் சிரித்து பெரிதாய் மின்னிவிட்டு போனாற் போலிருந்தது அவனுக்கு."யாருடா இவள்?".
"திரு டீச்சர் அண்ணா.சேரோட பொண்ணு"

வீட்டுக்குள் வந்து ஒருதடவை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.தோளைச் சுத்திய துவாயை தூக்கியெறிந்து விட்டு பார்க்க கண்ணாடி வெட்கத்தை பிடுங்கி தின்றது.

அந்த முழு முகமும் நாள் முழுதும் கண்ணுக்குள் வந்து நின்று கொண்டிருந்தது.திருவை பற்றி தெரிந்தவர்களிடம் துருவினேன்.இருந்தும் முழுப்பெயர் கூட கிடைக்கவில்லை எனக்கு.
திருவெம்பாவைக்கு தினமும் காலை திரு வீட்டிலிருந்துதான் சிவனுக்கு பிட்டவித்துக்கொடுத்தார்கள்.
சிவனுக்கு பதிலாய் நான் மண் சுமக்கவில்லை மாமூட்டை சுமந்து சென்றேன்,அங்கே.

கோதை எப்படி ஆண்டாளானால் என்று பாட்டியிடம்,ஐந்து வயதிலேயே ஆண்டாள் கதை கேட்டு வளர்ந்தவள் நான்.ஆண்டாளை பிடித்ததிலும் பார்க்க அவள் காதல் அதிகம் பிடித்திருந்தது எனக்கு.சிவனுக்கு கொடுத்த பிட்டில் நான் கூட கொஞ்சம் தின்று பார்த்துதான் கொடுத்தேன்.ஆனால் சிவனைக் காதலிக்கவில்லை என் அவனை காதலிப்பதாய் பட்டது. கடந்த இரண்டு,மூன்று,நான்கு,நாட்களாய்,
அதை விட அதிகமாய் ஆண்டாளின் பாடல்கள் அடித்து விட்டிருந்தது என்னை.

            "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
              நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
              பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்
              தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான்"

என்று புலம்பிக்கொண்டிருக்க காரணம் காலையில் தவறாமல் காசு வாங்க வருகின்ற அந்த அவன்.
நெற்றியில் மூன்று குறி,பாதி மறைத்த சால்வைக்குள்ளால் தெரியும் மார்பிலும் வீபுதி.பரம பக்தனாயிருக்கின்றானே.
நிச்சயமாய் எனக்கு தெரிந்தது.சில்லறைத்தனமாய் சில்லறை வாங்க வரவில்லை.பெயர் கூட தெரியாதவன்  மார்கழி நோன்பிருந்து மேற்கொண்ட தவத்துக்கு  வரம் தருவானா கேட்க தயக்கமாயிருந்தது.

சுண்ணாம்பு கேக்க போயி சொக்கத்தங்கம் வாங்கி வந்த கதையில்லையே இது.நேற்று  வீபூதி கொடுக்கும் போது கையில் விரல் பட்ட போது இழுக்கவில்லையே ஏன் காதலா?ச்சீ மடத்தனமான கேள்வி.அத்தனையையும் கொடுத்த கடவுள் இத் துணையை கொடுக்காமல் விட்டு விடுவானோ.சந்தேகம் வந்தது.அவள் பிடித்த வரலக்ஷ்மி விரதம் எனக்காக இல்லையா கடவுளே?
நல்ல புருஷன் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் பிடிக்க மட்டும் எத்தனை விரதங்கள் இருக்குறது.நல்ல மனைவி வேண்டும் என ஏன் எங்களுக்கு அப்படி ஒரு விரதம் கூட இல்லை, இது என்ன நியாயம் கடவுளே? இருந்திருந்தால் பிடித்து தொலைத்திருப்பேனே!

எட்டாவது
ஒன்பதாவது
பத்தாவது நாள் திருவாதிரை
கோலாகலம்....

கோவிலுக்கு
நான் வந்தேனா என்று அவளும்
நான் வந்தேனா என்று அவனும்

தேடிக்கொண்டோம்.

யார் போய் கதைப்பது என்பதில் பிரச்சினை.
முட்டியது,மோதியது.

"அக்கா,மாலை கட்ட தெரியுமா?உனக்கு"
"ம் "
பட்டு வேட்டியும்,பட்டையாய் திருநீறும்,பத்து வயசுப்பையன்
"அப்போ இதைக் கட்டிட்டு கொண்டு வந்து தரச் சொன்னார் அந்த அண்ணா.ஒரு பை நிறைய பூவும் நாரும்"
"யாருடா?"
"அதோ அதில நிக்கிறாரே அவர்தான்."
"அவன்தான்!"


எதிர் பார்த்ததை விட வடிவாய் கட்டிவிட்டு அள்ளிக் கொண்டு போய் அவன் முன் நீட்ட

"என்ன இது?"
"மாலை "
"நான் கேக்கல்லையே?"

"என்னம்மா இங்க கொண்டு வந்து கட்டிட்டியா?நான் வீடு முழுக்க தேடினன் பூவை,கொண்டா இங்க,"
"நீங்களாப்பா கேட்டிங்க,வாய் முணு முணுக்க,நெற்றிசுருக்கி திரும்ப"

அவன் கேட்டான்
அவனே கேட்டான்...

நில்லுங்க....
உங்க பேரு திரு...திரு... திருக்கோதைதானே?
நான் பெருமாள்...திருப்பெருமாள்.

கருவறையினுள் சிவலிங்கத்தை சுத்தியிருந்த பட்டுவேட்டி காற்றில் அசைந்து சிரித்தாற் போலிருந்தது.
 
                     ************








#அற்பபிறவி#