About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Tuesday, March 15, 2016

ஒரு பங்குனித்திங்களும் ஒன்பதாவது கிடாரமும்...

முழங்காலளவுக்கு வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, நெஞ்சை முறுக்கி கொண்டு, தயார் நிலையில் இருந்த அத்தனை இளமாறன்களும்,இதயச்சந்திரன்களும், ஆவி பறக்க சோறு நிரம்பிக்கிடந்த இருபது கிடாரங்களுக்குள் குறிப்பாக  அந்த ஒன்பதாவது கிடாரத்தை மட்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு நிமிர்ந்து தங்களுக்குள்ளே பார்த்து 'டிங்' என்று கண்ணடித்துக்கொண்ட அந்த செக்கனில்....டைம்லைனில் கொஞ்சம் பின்னுக்கு போய்வரலாம்.

இது ஒரு வருடாந்த மகோற்சவம் என்பதால் வழமையான கதைகளை போல வன்ஸ் அப் ஒன் எ டைம் என்று தொடங்காது.சின்ன வயசில் ஒவ்வொரு வருச பங்குனி திங்களும் நாலு இலை அதில் சோறு,அது முடிய வயிறு முட்ட தண்ணிப்பந்தலில் மோர், அது முடிந்தால் மணிக்கடையில் ஒரு தண்ணித்துப்பாக்கி,இல்லாவிட்டால் போல்ஸ் துவக்கு, போகும் போது ஒரு கோன் ஐஸ்,கையில் ஒரு பை கச்சானோடு முடிந்து விட்டுக்கொண்டிருந்தது.

ஏஎல்லுக்கு வந்த பின் பங்குனித்திங்கள் நாகரீகம் வேறு மாதிரியிருந்தது.இலையும்,சோறும் ஒன்றாய் இருந்தாலும் டேஸ்ட் வேற லெவலில் இருந்தது.மனசு போல்ஸ் துவக்குக்கு அலையாமல் கேர்ள்ஸ் சிரிப்புக்கு அலைந்தது.

இரண்டாவது பங்குனித் திங்கள் மணியம் சேரின்ர, என்று முதல் திங்களே புழுதி கிளம்பியிருந்தது வகுப்புக்குள்.முற்றத்தில் காயப்போட்ட விறகு அதை ரிமைண்டர் பண்ணியது.

என் மனசுக்குள் சிறு வயது முதல் இருந்த, இரண்டாவது பந்தியில் விவரித்த மொத்த கட்டமைப்பும் உருக்குலைந்தது இங்கேதான்.மூன்றாவது பந்தியில் சொன்ன புது நாகரீகம் பிறந்ததும் இங்கேதான்.

சேரின் பூசைக்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை அத்தனை வேலைக்குள்ளாலையும் வந்து தேர்மோவில இரண்டு கணக்கை போட்டில போட்டு செய்ய சொல்லிட்டு ஆள் போயிட்டாலும்,கை சும்மா பரபரத்து கொண்டிருந்தது.முதல் நாளே குகன் சேரிட்டகோரஸ் பாடி கிளாஸை கட் பண்ணி விட்டிருந்த விசயம் எப்படியும் சேருக்கு தெரிய வர நேரமாகும்.அதற்கிடையில் களத்திலிறங்கி விட வேண்டும் என்றிருக்க கணக்கு செய்து முடிச்சாக்களை மட்டும் வரட்டாம் என்று செக்கி அக்கா சொல்ல...

அப்பதான் எக்ஸ் அச்சு போட்ட பக்கத்தில இருந்தவனே போகேக்க வை அச்சும் கீறின நான் போக கூடாதே....

அறுபதில் அறுபதும் முன் கோலில் ஆஜராகி விரித்திருந்த படங்கில் வட்டமடித்திருந்து குவிச்சு வைச்சிருந்த வெங்காயத்தை கண்ணீரால கழுவி உரிச்சுக்கொண்டிருக்க டீயும் பிஸ்கட்டும் வந்தது.

வெங்காயமே சாப்பிடாத சில வெங்காயமெல்லாம் வெங்காயம் உரித்தற்கும், எதிரில் இருந்து
மூக்கு கண்ணெல்லாம் எரிய பச்சை மிளகாய் காம்பு உடைத்த சில செத்தல் மிளகாய்களுக்கும்   இடையில் ஒரு இரசாயனத்தாக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.கேட்டா அதான்ய்யா கெமிஸ்ரி..ம்பாங்கா தேவையா நமக்கு இதெல்லாம்.இத தவிர டீக்குள்ள வெங்காயத்தை போட்டு குடிக்க கொடுத்ததும், மிளகா வெட்டின கையை கண்ணுக்குள்ள வைச்சதும், வைச்சு விட்டதும் அந்த இடத்தில நடந்த வாயால சொல்லக்கூடிய சில அட்டூழியங்கள்.

 

இதெல்லாம் முடிய அன்டைக்கு மாலையில் கோயில் சுத்து வட்டாரம் தூய்மையாக்கல் பணி.தென்மராட்சியை கூகுள் மேப்பில பார்த்தா ஒரு இடம் மட்டும் கரும்பச்சையா ஏதோ ஈர வலய காடு போல தெரியும்.அதுதான் சோலை அம்மன் கோவில்.

கோவிலுக்கு முன்னால போக மட்டும் கொஞ்சம் பெரிய வழி இருக்கு.சுத்தி வர மரம்,மரம்,மரம்.பங்குனித்திங்கள் தவிர்ந்த பிற நாட்களில அதுக்குள்ள போனா திரும்பி வாரது கஸ்டம். "சோலை அம்மன் டிரை ஆங்கிள்" இருக்கு என்று கதைத்துக்கொண்டார்கள்.சின்ன வயசு 'யங்கிள் புக்' கனவுகள் நிறைய இங்கே  புதைந்து கிடந்தது.

அந்த சோலைக்குள் சந்தன மரம் எல்லாம் நிக்குது,ஆனால் கோயில் ஐயாவுக்கு மட்டும் தான் அது எங்க நிக்குது என்டு தெரியும் என்றெல்லாம் கதை அடிபட்டது.இருந்தாலும்,அந்த ஐயா இன்னும் ஒரு சாலி மோட்டர் சைக்கிளில்தான் கோயிலுக்கு வந்து போய்கொண்டிருந்தாரகையால் நான் உட்பட நிறையப்பேர் அந்த கதையை நம்பவில்லை. சந்தன வாசம் மட்டும் அப்பப்ப சோலைக்குள்ளால் வந்துகொண்டிருந்தது.

அந்த சோலைக்குள் கோயிலை சுத்திக்கிடந்த குப்பையெல்லாம் கூட்டிக்குவிச்சு அடுத்தநாள் கிடாரம் வைக்க கிடங்கு கிண்டி தென்னங்குத்தியெல்லாம் தாட்டு கொண்டிருக்க கோயில் கழுவிய மகளிர் அணி எங்கள் வேலையின் கொடூரத்தை மன்னிச்சூ.. கடூரத்தை பார்த்து உச் கொட்டி வியந்து கொண்டிருந்தது.



அடுத்த நாள் காலை அந்த அகாலப்பனிக்குள்ளயும் தலைல தண்ணி வார்த்து வெளிக்கிட்ட என்னை, அம்மா நான்தானா அது?! டேய்,தம்பி என்று கூப்பிட்டு பார்த்து டெஸ்ட் பண்ணியதை கவனிக்காமல் விழுந்தடித்து வந்து சேர்ந்தாலும் கூர்க்கத்தியும் இருக்க பலகையும் கிடைக்கவில்லை.இந்தா வெட்டு என்று பூசணிக்காயை தூக்கி போட்டான் ஒருத்தன்.

ஒரு குறூப் பூசணிக்காயும்,ஒரு குறூப் வாழைக்காயுமாய் வெட்டித்தள்ளிக்கொண்டிருக்க,வெட்டியது வெட்டாததுக்கான டிரான்ஸ் போட்டெல்லாம் அந்தரத்தில் வளித்தடையோடு நடந்து கொண்டிருந்தது.குபீரென்று எந்த பக்கத்திலிருந்தாவது ஒரு வாழைக்காய் வந்து மடியில் விழும்,கண்டுகொள்ளக்கூடாது,திருப்பி கதைச்சா முதல் தெரியாமல் செஞ்ச அந்த நன்னாரிப்பயல் அப்புறம் தெரிஞ்சே செய்வான்.அதை எடுத்து அமைதியாய் தோலுரிக்க வேண்டியதுதான்
                                                                 

எங்கயும் கயர் பிரள்ர வேலை, காய்ஸுக்குத்தான் என்றது
ஐன்ஸ்டீனோட எழுத்தில இல்லாத நாலாவது விதி.
சிலம்புடைக்காத கண்ணகிகளெல்லாம் கயர் பிரளாமல் கத்தரிக்காய் வெட்டிக்கொண்டிருக்க,கொஞ்சம் தள்ளி கிடாரத்துக்குள் மூட்டை மூட்டையாய் அரிசியை கொட்டி அவியல் ஆரம்பமாகியிருந்தது.நெருப்பு புகையில் பலருக்கு ஆனந்தக்கண்ணீர் வந்தது.

எல்லா வேலையும் முடிய வீட்டுக்கு போய் தமிழர் பண்பாடு குலையாத தமிழன்களாய் வேட்டி,சால்வையிலும், பாவாடை,தாவணி என்று எழுத ஆசைதான் அது கொஞ்சம் அப்டேட் ஆகி பஞ்சாபி,கா(f)ப் சாரியில் தமிழிச்சிகளாயும் வந்து பூஜை பார்த்துக்கொண்டிருந்தோம் என்றால் அது அப்பட்டமான பொய் என்று தெரியும்.

மஞ்சள் கடலை என்ன விலை என்று விவாதித்துக்கொண்டிருந்தோம்.நாட்டில் கடலை விலை ஏறிய விசயம் நிறையப்பேருக்குதெரியாது.அதிசயாவைக்கண்டால் இந்த விசயத்தை சொல்லலாம் என்று பார்த்தால் ஆளை காணவில்லையே இன்னும்.கண்ணிமைக்கு கறுப்பு மை பூச வேண்டிய அவசியம் இல்லை.அப்புறம் ஏன் ம்ம்...

பூஜை முடிந்து படையல் ஆரம்பமாக அழைப்பு வந்தது வரச்சொல்லி.வேட்டி கட்டாமல் வந்த சில இளஞ்சிங்கங்கள் சில அதை சாட்டாய் வைத்து வராமல் நிற்க, இருபத்தைந்து வேட்டி பார்சலில் வந்திறங்கியது.
"இந்தாங்கடா வேட்டி!! எல்லாரும் இப்ப கட்டிட்டு போகேக்க கழட்டி தந்திட்டு போகோனும்.அப்பதான் அடுத்த முறை உங்களை போல ஆக்களுக்கு கட்டக்கொடுக்கலாம். கட்டத்தெரியாதவெனெல்லாம் இங்கால வா!!"

கொடிமரத்துக்கு கீழிருந்த குட்டிப்பிள்ளையாருக்கு முன்னால் எட்டுப்பாய் விரித்து அதில் அவிச்ச சோறெல்லாம் மலை போல கொட்டி கறியை மேலே ஊத்தி குழைத்து தயிர் மோர் எல்லாம் விட்டு மட்டமாக்கி படைத்ததில், ஒரு வாய் கூட சாப்பிடவில்லை அந்த குட்டிப்பிள்ளையார்.எங்கயாச்சும் தலையை மோதி நம்பியாண்டார் நம்பியாகி பிள்ளையாரை ப்ளாக்மெயில் பண்ணுவம் என்றால் தோதாய் ஒரு கல்லும் கிடைக்கவில்லை.அதற்கிடையில் அவசரபட்டு மூன்று தரம் கை தட்டி படையலை முடித்து விட்டார்கள்.

மேலே கிடக்கும் சோறுதான் மகா ருசியாயிருக்கும்.அடிச்சோறுக்கு குழைக்கும் போது கறி போயிருங்காது பெரிதாய். பெரிய கரண்டிகளால் அள்ளி கிடாரத்துக்குள் போட்டு கொடுக்க ரெடியாக்கிய போது பெரும்பாலான மேல் சோறெல்லாம் வழித்துப்போட்டது ஒன்பதாவது கிடாரத்தில்.அதைப்பார்த்துதான் அந்த டிங் என்ற பரஸ்பரக்கண்ணடிப்பு.

ஆ ..கொடுங்கோடா இனி !! என்று அந்த சிம்மக்குரல் கேட்ட உடன இரண்டு கிண்ணியை தூக்கி கிடாரத்துக்குள் போட்டு விட்டு தூக்கி கொண்டு தொங்கல் லைனுக்கு பலன்ஸ் குலையாமல் ஓட வேண்டும்.அங்கிருந்துதான் அன்னதானம் ஆரம்பம்.தாமரை இலையோட சனம் ரெடியா நிக்கும். சிலதுகள் எக்ஸராவாய் ஒரு பையை நீட்டுங்கள்.கையெல்லாம் சுடச்சுட, சோத்தை அள்ளிப் போடேக்க ஒரு சந்தோசம் வரும் பாருங்க..அதான் சேர் கடவுள்.

இப்டி சோறு போடேக்க அவனவன் தனக்கு வேண்டிய லைனை கவர் பண்ணப்பார்ப்பான்.இதில ஒரு சிக்கல் வரும், அதிசயா ஒரு லைன்லையும் சேர்ந்து கிடாரம் தூக்குரவன்ர ஆள் அடுத்த லைன்லையும் இருந்தா....

சோத்துக் கிடாரங்கள தூக்கிட்டு போகேக்க எல்லாரும் அந்த ஒன்பதாவது கிடாரத்தை தவிர்த்து விட்டுட்டு மற்றதுகளைத்தான் தூக்கி கொண்டு போய்கொண்டிருந்தம்.அது எங்களுக்கு!! அப்டி என்று ஒரு கணக்கு இருந்தது.சோறு கொடுக்றதால வாற புண்ணியம்தான் உந்த ஒன்பதாவது என்று ஓர் அதீத நம்பிக்கை.ஆனால் எல்லாம் கொடுத்து முடிய வந்து நாங்கள் சாப்பிடுவம் என்டு பார்த்தா!!

வேர் இஸ் தி நைன்த் கிடாரம்?
(எழுதேக்க கிடாரத்துக்கு இன்னடா இங்கிலிசு? என்டு அண்ணரிட்ட கேட்ட, அவர் கிடாரத்துக்க என்ன கிடக்கு என்டு கேக்றார், இடியட்!?)

ஊழ்வினை உருண்டு வந்து உதைக்கும் என்டது மகா உண்மை.இருந்தாலும் எங்களுக்கு ஸ்பெசலாய் படைத்த புக்கை, வடை, மோதகம் எல்லாம் கிடைத்தது.கொடுத்த பானைகளுக்குள் எஞ்சியிருந்த சோறெல்லாம் வழிச்சு போட்டு தின்றதில் வயிறு நிரம்பிவிட்டது.பரவாயில்லை அதுவும் ஒரு டேஸ்டாய்தான் இருந்தது. எல்லாம் முடிய எதிர்பார்த்து காத்திருந்த கிடாரம் கழுவும் பணி.




எல்லாரும்
கிடாரத்துக்க விழுந்து கிடந்து கழுவினம். மண்ணையும் தண்ணியையும் கலந்து ஊத்தி ஆளாளை கழுவின பிறகு தொட்டிக்குள்ள அடியார்கள் குழு தீர்த்தமாடியது.

வெளிக்கிடேக்க குகன் சேர் ஐஸ்கிறீமுக்கு பொறுப்பெடுக்க, மணியம் சேர் கச்சான் காரிட்ட பேரம் பேசி மொத்த கச்சானையும் வாங்க

அதெல்லாம் குடித்து, தின்டு முடிய
இந்த சோத்துக்கிடாரத்தை டிரைக்டர்ல ஏத்தி விடுங்கோடா! பக்கத்து வீடுகளுக்கு கொடுக்கோனும் என்டு கோயில் அறைக்கதவை திறக்க, உள்ளே,நிலத்தில்....
ஒன்பதாவது கிடாரம்
'டிங்'
என்று கண்ணடித்தது.

           #######



நீதி:தெருத் தேங்காயை தூக்கி வழிப்பிள்ளையாருக்கு உடைச்சாலும் அதோட புண்ணியம் என்னவோ தென்னையை வளர்த்தவனுக்குத்தான் போகும்.

                       ________________________________________















#அடுத்த திங்களை எதிர்பார்த்துக்கொண்டு ஒரு
அற்பபிறவி#