About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Saturday, October 21, 2017

நட்சத்திரா

இந்த மாத தொட்டுக்க ஊறுகாயாய் வந்திருக்க வேண்டிய பதிவு,கடைசியில் அனுமார் வாலாகி விட வழமையைப்போல் ஒரு மங்கையின் நாமம் தேடிப்பிடித்து தனி டைட்டிலோடு வருகிறது.ஓ/எல்லின் இங். லிட்ரேச்சரில் வில்லியம் வேட்ஸ்வோர்த்தின் "she dewlt among the untrodden ways?" ல் Lucy அறிமுகமாயிருந்த நேரமது. படித்த இருபது பொயத்தினுள்ளும் அது மட்டும் ஆல் டைம் பேவரிட்டாக இன்று வரை இருக்கிறது. "WHO IS LUCY ?" என்ற கேள்விக்கு முந்நூறு சொல்லுக்கு குறையாமல் அப்ரிசியேட் பண்ணி தொலைத்திருக்கிறேன். She may be the nature,forests,mossy stones,trees,doves etc,etc என்று கொண்டு வந்து கடைசியில் மே பி அது வி.வேட்ஸ்வேர்த்தின் ஒரு தலை காதலியாக இருக்கலாம், (செட்டாகாததால்) அன்புத்தங்கையாய் இருக்கலாம் என்பது வரைக்கும்,சேரின் நோட்ஸை அப்படியே காப்பி,டீ அடித்து எழுதியிருக்கிறேன்.

ஆனால் யாரென்றே தெரியாத லூசியின் மிஸ்டரி பிடித்து போய் விட்டது. எங்கே இருந்து பார்த்தாலும் மோனலிசா சிரிப்பது போல எதை ஒப்பிட்டாலும் லூசி பொருந்தியது. கையில் மருதாணி வைத்தவள், காதில் ஜிமிக்கி போட்டவள், பின்னலில் நித்தியகல்யாணி செருகியவள். ஆலியா,ஆகாயா,அபூர்வா,சப்தஸ்வரா, ஏன் இந்த நட்சத்திரா எல்லாமே லூசியின் நிஜ உலக வேர்சன்களாய் படுகின்றது.

"Fair as a star, when only one
Is shining in the sky."

இரவில் உழுது விட்ட பரந்த வயலுக்குள் மல்லாக்காய் கிடந்து வானம் பார்ப்பதிலும்
ஒராயன்,ஸ்கோர்ர்பியன் தாண்டி மம்மத், டைனோர்களையெல்லாம் உடுத்தொகுதிக்குள் உருவாக்குவதிலும் வருகின்ற சந்தோசம் இரவு பன்னிரண்டு மணிக்கு கனவில் வரும் கவிதை போன்றது.


வானம் ஒரு புள்ளி வைத்த சாணித்தரை இஷ்டத்துக்கு கோடு இழுத்து கோலம் போட்டுக்கொள்ளலாம். தண்ணீர் எல்லாம் அதுவாகவே தெளித்துக்கொள்ளும். தேவைப்பட்டால் பூப்பூவாய் வெள்ளியெல்லாம் சிரித்துக்கொள்ளும்.

இரவு நேரங்களில்  குலு மாடுகள் கூட்டமாய் படுத்துக்கிடந்து அசை போடுவதற்கு கண்டுபிடித்த இடங்களில் ஒன்று  வயல்வெளி. இரவு ஏழிலிருந்து பத்து வரை நேரமெல்லாம் வயலுக்குள் உரமாகியது.குழுவின் ஒட்டு மொத்தமான கர்ணகொடூரக்கதைகளில் அடுத்த விதைப்புக்கு அந்த இடத்தில் மட்டும் நெல்லு முளைக்காத அளவுக்கு ஒரு நெகட்டிவ் எனர்ஜி உருவாகியிருந்தது.

வரம்பில் தலை வைத்து வானம் பார்க்கும் போது ஒரு வசதி - கிட்டத்தட்ட ஈசிசேரில் இருந்து டீவி பார்ப்பது போல். உச்சியிலிருந்து சர்ரென்று தென்மேற்கு திசையில் ஒரு வெள்ளி - எரிந்து - விழுந்து - - செத்தது. குடும்ப பிரச்சினையில் தற்கொலையாய் இருக்கலாம், ஏன் கொலையாய் கூட இருக்கலாம். வெள்ளி எரிந்து விழுவதை பார்க்ககூடாது, தவறிப்பார்த்தால் துர்சம்பவம் நடக்கும் என்பது வீட்டு நம்பிக்கையாய் இருக்க, வெள்ளி எரிந்து விழும்போது மூன்று பால்மரங்களை நினைத்துக்கொண்டால் எண்ணிய காரியம் நடக்கும் என்பது வரம்பு நம்பிக்கையாய் இருந்தது.அலரி,பலா,எருக்கலை ஏன் முட்கள்ளியை கூட அடிக்கடி இப்போது நினைத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

பார்த்துக்கொண்டிருக்கும் போதே, இன்னுமொரு வெள்ளி கிழக்காலே விழுந்து தொலைக்க..... "Make A Wish"....

"நாளைக்கு தைரியமாய் போய் அவளிடம் கேட்டுத் தொலைக்க வேண்டும்"
"ஆம் என்று வாய் திறக்கவெல்லாம் வேண்டாம். ம் என்று தலையாட்டினாலே போதும்."

தேமா,பலா, .......தென்னை 
தென்னை பால்மரமா என்ன? திடீரென்று மனசு குழம்பியது.பால்மரம்தான். தென்னங்கள்ளு பால்தானே.வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் மனசு சமாதானமானது.

                       ××××××××××××

நட்சத்திரங்கள் வாழ்க்கையில் "டக்கோ டிக்கோ டொஸ்" விளையாடுவதால் திருமணத்திற்கு முன்பாக ஒரு பிரபல ஜோசியரைக்கொண்டு பையன் நட்சத்திரத்தையும், பெண்ணின் நட்சத்திரத்தையும் ஒன்றாய் வைத்து இன்டர்வியூ எடுப்பார்கள்.

"ஸ்வாதி உனக்கு மகத்தை பிடித்திருக்கிறதா,"
"இறுதி வரை அவன் இன்பத்திலும் துன்பத்திலும் சேர்ந்திருப்பாயா?"
"ஆமென்."

"மகம் உனக்கு ஸ்வாதியை பிடித்திருக்கிறதா?"
"இறுதி வரை ?! அவளை....."
"மாட்டேன்" என்கிறாயா?
மகம் வாயைச்சுளித்து விட்டால் அவ்வளவுதான்....புஸ்ஸென்றாகிவிடும்

ஸ்வவேதிக்கு டாட்டா காட்டி விட்டு வேறு நட்சத்திரம், வேறு வாழ்க்கை.

மகத்திற்கு திருவாதிரை மீதோ, அல்லது ஆயிலியம் மீதோ கண்ணென்று கதைத்துக்கொள்வார்கள்.

பிரபஞ்சத்தில் நட்சத்திர பொருத்தமெதுவுமில்லாமல் கல்யாணம் செய்து கொண்ட ஒரே ஒரு ஜீவன் சந்திரன். எப்படி சாத்தியமானது என்று விக்கிபீடியாவில் தேடிப்பார்த்தால் கட்டிக்கொண்டது - இருபத்தேழு நட்சத்திரங்களையும்.

இருபத்தேழு இருந்தாலும் சந்திரனுக்கு ரோகிணி மீது மட்டும் ஒரு அதி உன்னதக்காதல்.இருபத்தாறுக்கும் கல்யாண் ஜீவல்லர்ஸில் சாதாரண நெக்லெஸ் வாங்கிவிட்டு ரோகிணிக்கு மட்டும் ஜொஸ் அலுக்காஸில் டயமன்ட் ஒட்டியாணம் வாங்குமளவுக்கு - மனிதர் உணர்ந்து கொள்ளமுடியாத நிலாக்காதல்.

ஒரு நட்சத்திரம் பொருத்தமில்லாவிட்டாலே புரட்டி போடும் வாழ்க்கையில் இருபத்தாறும் சேர்ந்து செய்த சம்பவத்தில் கிடு,கிடு என்று ஒவ்வொரு பிறையாக தேயத்தொடங்கி விட, விளைவு மோசமாகி விட்டது என்பதை உணர்ந்த சந்திரன் கடைசியில் ஒரு மியூட்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கில் ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரத்தின் வீட்டிற்கு போவது என்று முடிவு செய்து கொண்டது.

சந்திரன் போகும் வீடு அன்றைய நாளின் நட்சத்திரமாகியது. அந்த நாளில் பிறந்தவர்களுக்கு அதுவே ஜனன நட்சத்திரமும் ஆகியது. ஆக மொத்ததில் எவன் வீட்டோ குடும்ப சண்டை என் தலையில் திருவோண நட்சத்திரம் எழுதி வைத்து விட்டது போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கேட்டால் திருவோணம் ஒரு கோணம் ஆளும் என்கிறார்கள். அது கூர்ங்கோணமா இல்லை அல்லது பின்வளைகோணமா என்பதையே இன்னும் தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது.

                      ××××××××××××

பிறந்த நட்சத்திரத்தையே பெயராக வைத்து விடுகின்ற ஒரு பாரம்பரியத்தில் நிறைய ரோகிணிகளும்,உத்தராக்களும்,ஸ்வாதிக்களும், உலாவித் திரிகின்றன.

கூடப்படித்த ஒருத்தி அபிஜிதா என்று பெயர் வைத்திருந்தாள்,வகுப்பில் எல்லாரும் அவளை "அதிஸ்டக்காரி அபிஜிதா" என்றுதான் கூப்பிடுவார்கள். நாற்பது MCQ கேள்வியுள்ள பேப்பரை கொடுத்து கண்ணை கட்டி விட்டு கீறச்சொன்னால் முப்பதுக்கு சரியான விடையையும் மீதி பத்துக்கும் சரியான விடைக்கு பக்கத்து விடைகளையும் கீறியிருப்பாள்.

ஒரு தடவை  பெயருக்கு விளக்கம் கேட்ட போது வெடிகுண்டு தயாரிக்க தேவையான அளவுக்கு விளக்கம் சொன்னாள்.

"உண்மையில் நட்சத்திரங்களின் லிஸ்டில் 28 நட்சத்திரங்கள் இருந்ததாம். புளூட்டோவை சூரியக்குடும்பம் தலைமுழுகி தள்ளி வைத்தது போல இருபத்தேழின் சதியில் தூக்கியெறியப்பட்ட ஒரு நட்சத்திரம்தான் அபிஜித், உத்தரட்டாதியின் இறுதி நான்கு பங்கும் திருவோணத்தின் முதல் பதினைந்து பங்கும்தான் இந்த அபிஜித்.,என் அப்பாக்கு இந்த அஸ்ட்ரோலஜி எல்லாம் அத்துப்படிங்கிறதால நான் பிறந்தது இந்த நட்சத்திரத்திலதானம்ங்கிறதை சரியா கணிச்சு இந்த பேரை வைச்சார்"

"உன் அப்பா பேரு"

"புஸ்ப மணியம்"

இரண்டு மாதத்திற்கு பிறகு, இன்று, அதே அதிஷ்டக்காரி அபிஜிதாவிடம் மேசையில் எதிரும் புதிருமாய் இருந்த போது இன்னுமொரு கேள்வியையும் கேட்டுவைக்க வேண்டியிருந்தது.

உங்க அப்பா மிஸ்டர் பு.ம ..... புஸ்பமணியம்,பெரிய ஜோசியர்தானே?
கொப்பியிலிருந்து நிமிர்ந்து பார்க்கமலே 'ம்' கொட்டினாள்.
"அவரிட்ட ஒரு விஷயம் கேட்டுச் சொல்லுவியா?"
'ம்'
இந்த அபிஜித் நட்சத்திரத்துக்கும் திருவோண நட்சத்திரத்துக்கும் திருமணப்பொருத்தம் இருக்கான்னு?

                ××××××××××××

பூமியில் மனிதக்காதல்களுக்கு முன்பாக வானத்தில் நட்சத்திரக்காதல்கள் தொடங்கிவிடுகின்றது, மனிதக்கண்களுக்கு முன்பாக நட்சத்திரக்கண்கள் பார்க்கத்தொடங்கிவிடுகின்றது.

இதற்கு மேலுள்ள பந்தியில் அபிஜித்தோடு பொருந்துமா என்று கேட்ட திருவோணமும்,அந்த பந்தியோடு சம்பந்தமேயில்லாத அஸ்வினியுமாக பால்வீதியில் உள்ள காஃபி சொப்பில்  நூற்றி எண்பது டிகிரியில் எதிரும் புதிருமாய் இருந்து மில்க் சேக்கோ, காப்ச்சீனோவோ ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருக்கிறன. 

திருவோணத்தின் கருவிழிக்குள் அஸ்வினியும் அஸ்வினியின் கண்மணிக்குள் திருவோணமும் தெரிகிறது. 

ஆர்டர் பண்ணியது இன்னும் வரவில்லை.

ஒன்றை ஒன்று பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க!

காலக்ஸி விதிகளின் படி - நட்சத்திரங்களின் முறைப்படி திருவோணம் அஸ்வினியிடம் புறப்போஸ் பண்ணுகிறது. 

"எனக்கு உன்னை பிடித்திருக்கிறது."
இருவரும்  ஒரு தடவை அருந்ததியின் வீட்டுக்கு போய் வரலாமா?"

                     ×××××××××××

அபிஜிதா
கேட்டுச்சொல்கிறேன் என்றாள். நிமிர்ந்து பார்க்கவில்லை.
பொருத்தமில்லாவிட்டால் கழட்டி விட்டு விடுவாயா? என்றாள்.

இல்லை.
பெயரையும், நட்சத்திரத்தையும் மாற்றிக்கொள்ளலாம் என்று மனசுக்குள் நினைத்துக்கொள்ள.....

மேலே பால் வீதியில் திருவோணத்திற்கு அஸ்வினி தலையாட்டி சம்மதம் தெரிவித்தது

இந்த இடத்தில் நிறுத்தி, வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேள்வி கேட்டு
தொலைக்கிறது

☆."Make A Wish" பகுதியில் நினைத்துக்கொண்டது அபிஜிதாவின் சம்மதத்துடன் நடந்தேறியது என்றால் வெள்ளி எரிந்து விழும் போது ஏதாவதொன்றை மனதில் நினைத்துக்கொண்டால், அது நடக்கும்.

☆.பூமியில் அபிஜித்துக்கும் திருவோணத்திற்கும் பொருந்தும் போது வானத்தில் அஸ்வினிக்கும் திருவோணத்திற்கும் பொருத்தமாகின்றது என்றால் நட்சத்திரங்கள் தொடர்பான கணக்குகள்,கட்டங்கள்,ஜோசியம் எல்லாமே பொய்யென்றாகி விடும்.

விக்கிரமாதித்தா! உனக்கு மூன்று ஆப்சன்கள் தருகிறேன். பொருத்தமானதை தெரிவு செய்யாவிட்டால் டாஷ்...டாஷ்..டாஷ்  உனக்கே தெரியும். 

01.இந்த நட்சத்திர கருமங்கள் எல்லாமே பொய். அபிஜிதா அவனுடனேயே சந்தோசமாக வாழ்வாள்

02.இல்லை இதெல்லாம் உண்மை, அபிஜிதாவிற்கு அவனுடன் பிரேக் அப் ஆகும். அவனுக்கு பின்னர் அஸ்வினி நட்சத்திரக்காரி ஒருத்தியுடன்தான் திருமணம் நடக்கும்

03.வேறு 

விக்கிரமாதித்தன் வேறுக்கு கீழ் தயக்கமே இல்லாமல் கோடிழுக்கிறான். வேதாளம் காரணம் கேட்கிறது.

முழுக்கதையையும் ஓட்டை இல்லாத வகையில் அடைக்க கூடிய அந்த பதில் புஸ்பமணியத்தின் வாய் வழியாய் கிடைக்கிறது.

                    ×××××××××

மிஸ்டர் பு.ம உதட்டை சுழித்துக் கொண்டே திருவோண நட்சத்திரம் சம்பந்தமாய் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார். 
இடையில் டீ கொண்டு வந்த மனுசியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.

"ஏங்க"
"ம்"
"நீங்க சொன்ன நேரத்திற்கு டாக்டர் சிசேரியன் பண்ணியிருக்காட்டி நம்ம பொண்ணு என்ன நட்சத்திரத்தில பிறந்திருப்பா?"

"தெளிவாய் சொல்ல முடியாது... அனேகமாய்

அஸ்வினியாய்தான்


இருக்கும்"


             ############








#அற்பபிறவி#

No comments:

Post a Comment