About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Monday, September 5, 2016

ஈஸ்டனின் இளிப்பு

அண்ணரின் அலப்பறைகள் - 04

நிறைய நாட்களுக்கு பின்னர் ஒரு நீளமான அண்ணரின் அலப்பறைகளோடு....இதில் வழமையான ஹெட்லைனாய் வரும் "இது சொந்த அண்ணரின் கதையல்ல" என்ற வசனத்தை வெட்டிக்கொள்ளுங்கள்.90% கதையும் அண்ணரின் கலரான வாழ்கையில் நடந்த கறுப்பு உண்மைகள்.

டாம் அன்ட் ஜெர்ரி ஒரு  சில எபிசோடுகளில் ஒற்றுமையாய் சேர்ந்து சில சிக்கலான மிஷன்களை முடித்தது அண்ணருக்கு அவ்வப்போது ஞாபகத்துக்கு வர உடம்பு பூராகவும் லஞ்சத்தை பூசிக்கொண்டுவந்து காலடியில் விழுந்து தொலைப்பார்.நாடும்,வீடும் லஞ்சமே வாங்கக்கூடாதென்றாலும் மனசு கேளாது,அப்படியே கேட்டாலும் கையும்,வாயும் கேளாது.

ஓ /எல் எக்ஸாம் முடிந்து வீட்டில் குத்தி முறிந்த காலத்தில் ஒரு நாள் காலமை விடிந்ததும் விடியாததுமாய் அரைத்தூக்கத்தில் கட்டிலுக்கு முன்னால் அண்ணர் பல்லைக் காட்டிக்கொண்டு நிக்க,தம்பியார் பெட்சீட்டை அமத்தி காலுக்குள் வைத்துக்கொண்டார்.
அப்படி செய்ததுக்கு பின்னால் ஒரு பெரிய கர்ணபரம்பரை கதை இருந்தது, அந்த டைமில  ஆர் முதல் எழும்பினமோ அவர் மற்றவரின்ர பெட்சீட்டையும்,தலகாணியையும் உருவி "நித்திரையில் சித்திரவதை" என்றொரு அட்வென்சர் ஓடிக்கொண்டிருந்தது.அதுக்காக அலார்ம் வைத்து எழும்பிய சம்பவங்களெல்லாம் உண்டு.

இண்டைக்கு அண்ணரின்ர சேவல் வேளைக்கு கூவிட்டு என்டு தெரிய வர, தம்பியர் தலகாணியையும் இறுக்கி அமத்திக்கொண்டு கண்ணை அரைவாசி திறந்து நிலவரத்தை ஆராய, அண்ணர் நடந்து கிட்டவந்து, மெல்லமாய் குனிஞ்சு, காதுக்கு பக்கத்தில வந்து தம்பீ என்டது, காதுக்குள்ள தேனை விட்டது போல சில்லிட்டுது... தம்பியருக்கு.

நிற்க.... அண்ணர் என்ன கேட்டார், தம்பியர் அதை செய்தாரா என்றெல்லாம் பார்க்க முதல் இந்த சம்பவத்தோட சம்பந்தப்பட்ட/படாத சில பந்திகளை கடக்க வேண்டியிருக்கிறது.விரும்பமில்லாவிட்டால் பாலம் போட்டு கடந்து கொள்ளுங்கள்.

#துவிச்சக்கரவண்டியும்_தொலைதூரங்களும்.

அண்ணரின் முதற் கட்ட பாவனைக்கு பின்னர்
எனக்கே எனக்கான மூன்று சில்லு வண்டி உரிமையாகியிருந்த காலகட்டத்தில் அதன் பின்னாலிருந்த கூடை உடைத்து போயிருந்தது.கவலைப்படாமல் அந்த கூடை நிறைய சந்தோசத்தை நிரப்பிக்கொண்டு எனது முதலாவது துவிச்சக்கரவண்டி பயணம் வீட்டுக்குள் ஆரம்பமானது.

அதைவிட கொஞ்சம் பெரிய சைசில் எனக்கென்று புதிதாய் வாங்கி தொலைத்த போது அதற்கு ஒரு சில்லு குறைய அதை ஓடிப்பழகவே ஒரு மாதமானது.அது வரைக்கும் அண்ணர் எடுத்து ஓடிவிடக்கூடாது என்று உருட்டிக்கொண்டே திரிந்தேன்.

சைக்கிள் முதல் முதல் ஓடிப்பழகுவது என்பது வாழ்க்கையில் நடக்க பழகுவதற்கு அடுத்த ஒரு பெரிய தருணம்.
வாகன நடமாட்டம் இல்லாத ஒரு ஒழுங்கையில் இரண்டு முனையிலும் தெரிந்தவர்கள் நின்று விழாமல் பிடித்து விட,அதையும் தாண்டி
நாலுதரம் விழுந்து, ஒரு முழங்கை கல்லில் சிராய்த்து ரத்தம் வர, மனசை தளர விடாமல் திரும்பவும் சைக்கிளை தூக்கி பின்னால் பிடிக்கிறார்கள்தானே என்ற நம்பிக்கையில் கொஞ்சத்தூரம் ஓடி விட்டு திடீரென்று திரும்பிப்பார்த்தால் தூரத்தில் எங்கயோ நின்று கையைத்தட்டினார்கள்.

சைக்கிள் ஓடுவதையும் நம்பிக்கைத்துரோகத்தையும் ஒரே நேரத்தில் கற்று தந்த இடமது.

சமநிலை குலையாமல் பெடலை உழக்க,சில்லு சுத்த, நான் விழலைலடா!! என்று மனசுக்குள் மனசு சந்தோசப்பட,மறக்காமல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டி ஆயிரத்தில் ஒரு கணமது.

ஓடத்தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் சைக்கிளின் அரைவாசி டயர் அந்த ஒழுங்கையிலேயே தேய்ந்து போயிருக்கும்.அந்த ஒழுங்கையைத்தாண்டி தெருவுக்குள் இறங்குவது என்பது சிந்துபாத்தின் எட்டாவது கடல்பயணத்துக்கு ஒப்பானது. தொடக்கத்தில் முன்னால்  அப்பாவோ,அம்மாவோ இல்லை பக்கத்து வீடோ ஹைட்டாக வந்து ஒழுங்காக ஓடுகின்றேன் என்று நம்ப வைப்பதற்குள் இரண்டு வருசம் கடந்து விடும்.

அந்த இரண்டு வருசம் கடந்த பின் வருவதுதான் நிஜமான துவிச்சக்கரவண்டிப்பயணங்கள்.இந்த பயணங்கள் பின்னர் எனக்கு இரண்டு வகையையாய் பிரிந்தது.
முதலாவது தனி(மை)ப்பயணங்கள். 
மோட்டார்சைக்கிள்,ரயில்,பஸ்,வான்,கார் இதெல்லாவற்றிலும் போகும் போது வரும் சந்தோசத்தையும்,சைக்கிளில் போகும் போது வரும் சந்தோசத்தையும் ஒப்பிட முடியாது. எப்போதும் முதலாவதை விட இரண்டாவது தான் எனக்கு அதிகமாக இருந்தது.
சைக்கிளிங் என்பது, ஒரு த்திரில்லர்,மிஸ்டரி ஜேனர் கதை போல,காடு,மலை,காற்று,மழை,குண்டு,குழி இன்ப,துன்பம் எல்லாமிருக்கும் அதில்.இதை சொல்வதை விட அனுபவித்தால் மட்டும் புரியும்.வீட்டில் சைக்கிள் இருந்து அதற்கு பிரேக் இருந்தால் அதை கழட்டி விட்டு நாளைக்கே ஓடிப்பாருங்கள்,அந்த சந்தோசம் புரியும்.

இரண்டாவது கூட்டுப்பயணங்கள்.
பாடசாலை முடிந்தோ இல்லை ரியூசன் முடிந்தோ வீட்டுக்கு வரும் போது கட்டாயம் நாலு பேராவது அந்த ரூட்டில் சைக்கிளில் வருவார்கள்.அந்த சைக்கிள்களில் பின்னாலும் முன்னாலும் நாலு பேராவது ஏறி வருவார்கள்.அது ஒருவித மெதுவான பயணமாயிருக்கும்.காரணம் முன்னால் ஆகாயக்களும்,அதிசயாக்களும் சைக்கிளில் போக அந்த சைக்கிள்களை முந்தாமலும்,அதற்கு பின்னாலே மாறா வேகத்திலும் போவதென்பது சைக்கிளோடுவதை கால் நுனியில் தெரிந்து வைத்திருப்பவனால் மட்டுமே முடியும்.

இந்த இடத்தில் துவி.ச.வண்டி புராணத்தை  நிறுத்தி,தொடக்க பிரச்சினைக்கு போகலாம்.

அண்ணர் கேட்டது ஒரு சிம்பிளான விசயம் - சைக்கிளில் அவரோட கூடப்போகணும்.
ஏன்? எதுக்கு? என்டதை போகேக்கதான் போட்டுடைச்சார்.அதுக்கு முதல் அண்ணருக்கும் தம்பியரைப்போல சைக்கிளிங் என்டுறது ஒரு பிடிச்ச விசயமாயிருந்தது.இப்பவும் ஊருக்கு வாற நேரங்களில எண்பதாம் ஆண்டுகால ஈஸ்டன் சைக்கிளில (டைனோசர்களோடு சேர்ந்து இந்த சைக்கிள் கொம்பனியும் அழிந்துபோய்  விட்டது) காதுக்கு இரண்டு இயர்பிளக்கை செருவிக்கொண்டு ஊரைச்சுத்தி வருவார்.

அண்ணர் தன்ர காரியத்துக்கு தம்பியரை கூட்டிக்கொண்டு போறதால தம்பியர் பின்னால ஹாயாக இருக்க... அண்ணர் முக்கி முக்கி சைக்கிளை உழக்கிக்கொண்டு போற காரியத்தை விளக்கினார்.

பஸ் ஸ்டாண்ட் தாண்டி நாற்சந்தி வரும் அதுக்கங்கால ஒரு கராஜ் இருக்கு அது தாண்டி அடுத்ததா வாற பஸ் கோட்டில என்னை இறக்கி விட்டுட்டு நீர் போலாம் என்ட...தம்பியர் மறிச்சு குறுக்கு கேள்வி கேட்டார். ஏன் பஸ் ஸ்டாண்டில நின்டே பஸ் ஏறலாமே!?

பதில் ஒன்டும் வரேல்ல என்ட உடன தம்பியருக்கு விஷயம் வெளிக்கத்தொடங்கிச்சுது.இதான் சந்தர்ப்பம் என்டு  அண்ணருக்கு அட்வைசை அடிச்சு விட்டார்.

"இங்கபார் 'காதலில விழுறது' என்டுதான் எல்லாரும் சொல்லுவினம்,'காதல்ல மிதக்கிறது' என்டு ஒருதருமே சொல்றேல்ல.ஏன் என்டா 'விழுறது' என்டுறது பயங்கரமான ஒன்டு,'மிதக்கிறது' என்டுறது கனவு காணறது போல ஒன்டு.போலிங்குக்கும் புளோட்டிங்குக்கும் வித்தியாசம் விளங்குதா உனக்கு? விளங்கினா நீ தப்பிடுவா!"

திரும்பி ஒருக்கா முறைச்சுப்பார்த்தார்.
தம்பியர் அமந்துட்டார்.

இந்த திட்டத்தை எத்தனை நாளாய் மழை,வெயில் பாராமல் அலைஞ்சு திரிஞ்சு அமுல் படுத்தினவர் என்டு அண்ணருக்கு மட்டும்தான் தெரியும்.

அண்ணரிட்ட அவற்ற ஆளைப்பற்றிக்கேட்டால் தேவதைக்கு எழுத்துக்கூட்டுவார் என்டுதெரியும் அதால அத தம்பியர் தவிர்த்துகொண்டார்.

போற போக்கில அப்படியே பஸ்ஸ்டாண்டை திரும்பி ஒரு நோட்டம் விட....

"ஓ ஷிட்!"

"சைக்கிளில போகேக்க அதுகளை பாத்து மிதிக்காம போகோனும்."

போற வழில ரோட்டோரமா இருந்த பிள்ளையாரை,பிள்ளையார்தானே என்டு அண்ணர் கவனிக்கவே இல்லை.அதுதான் காரணமோ தெரியாது அண்ணற்ற ஸ்கெட்சில ஓட்டை விழுந்தது.

அந்த ஓட்டைக்குள்ளால கராஜ் தாண்டி சந்தி தாண்டி சந்திக்க வேண்டிய ஆள் பஸ் ஸ்டாண்டிலயே தெரிய.... பக்கத்திலேயே ஆரது? தெரியேல்ல!!.

ஷிட்..ஷிட்...ஷிட் என்டு காண்டிலைப்போட்டு குத்தினார்.

அண்ணர் நிக்கவே இல்லை இறுக்கி உழக்கினார்.கொஞ்ச தூரம் போய் வெட்டி உள்பாதைக்குள்ளால வீட்டுப்பக்கம் சைக்கிளைத்திருப்பேக்க கூட நின்ட தங்கைச்சிக்காரியை திட்டினார்.அண்ணர் மனம் வேதனைப்படுறது தெரிஞ்சுது.

ஆழ்ந்து யோசிச்சு
தங்கைச்சியார் வாற நாளுகளில பஸ் ஸ்டாண்டில நின்டு ஏறுதுகள் என்டதை கண்டு பிடிச்சார்.

அதுக்குத்தக்கதாய் புதுசா பிளானை போடத்தொடங்கினார்.

சுபம்

#######

என்று இது... முடித்திருக்க வேண்டும்., இருந்தாலும் ஒரு வாரம் கழித்து அதே கிழமை,அதே இடம்,அதே நேரத்தில் ...

அண்ணர் பின்னால காலையாட்டிக்கொண்டு இருக்க தம்பியர் முக்கி,முக்கி சைக்கிளை உழக்கி கொண்டிருந்தார்.

"என்னை பஸ் ஸ்டாண்டில இறக்கி விட்டுட்டு நீர் போலாம்" என்டு தம்பியர் சொன்னதைக்கேட்டு
ஈஸ்டன் சில்லைக்காட்டி இளித்தது.

                         _______________








#அற்பபிறவி#