About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Friday, December 1, 2017

கார்த்திகை காதல்கள்

நாளைக்குத்தான் நாள் என்று வாக்கிய பஞ்சாங்க காலண்டர் காட்டும் போது திருக்கணிதம் நாளை மறுநாள்  என்றதில் கோயில் தொட்டு கேணி வரை ஒரு குழப்பம் இருந்தது. திருக்கணிதத்தின் எல்.எச்.எஸ்ஸும் வாக்கியத்தின் ஆர்.எச்.எஸ்ஸும்  அல்ஜீப்ரா கணக்குகளில் பெரும்பாலும் சமனாவதில்லை.அப்படியே ஆனாலும் ஒருபக்கம் காப்பிட்டல் எக்ஸும் மறுபக்கம் சிமோல் எக்ஸுமாய் இருக்கும்.

இருந்தாலும் குண்டுமணி,தம்பா,ராகீ அன்ட் கோ உள்ளடங்கிய ஆலய நிர்வாக சபையின் 1/3 பெரும்பான்மை வாக்கோடு வாக்கியம் வென்றதில் நாளைக்குத்தான் கார்த்திகை விளக்கீடு  என்று முடிவாகியிருந்தது.

முடிவாகி முதல் நாளே சுற்றுவட்டாரத்தில் புழுதி கிளம்பியிருந்தது. வாழைக்குத்திகள் துண்டாகின.அரைக்கொப்பறாவுக்காக தேங்காய் ஓடுகள் முழுக்கவனத்துடன் சில்லிகளாக்கப்பட்டது. தேர்முட்டிக்கு பக்கத்தில் எழுபது வயதில் புதிதாய் ஒரு சிட்டி விளக்கு கடை - "மூன்று எடுத்தால் ஒன்று இலவசத்தோடு"  தலையெல்லாம் எண்ணையாய் கூப்பிட்டது. சுற்றி கூட்டம் அம்மியது.ஒரு வண்டில் தென்னோலை சொக்கப்பனைக்கு இரையாக காத்திருந்தது.தோரணம்,வாழை, இதர பல இத்யாதிகளும் தயாராகிக் கொண்டிருந்தன.

கோயில் பின் கிறவுண்ட் சிரமதானப்பணிகள் தம்பா தலைமையில் செவ்வனே முடிந்திருந்தது. குண்டுமணி மேற்பார்வைக்காக  விலாட்டுமாவின் கீழிருந்து இரண்டாவது கிளையில் காலை இருபக்கமுமாய் தொங்கப் போட்டுக்கொண்டிருந்தான். அதற்கு மேலிருந்த மூன்றாவது கிளை போன மாதம் திடீரென்று முறிந்து போய் விட்டது.அதற்கு மேலிருந்த குண்டுமணிக்கு முழங்கால் சுளுக்கு எடுபட ஒருவாரம் பிடித்தது.

சுளுக்கு போனாலும் அழுக்கு போகாதது போல குண்டுமணி தம்பாவின் டீமிலும் இல்லாமல், கிச்சாவின் டீமிலும் இல்லாமல் கடந்த சில வாரமாகவே தூக்கி எறியப்பட்டிருந்தான். குண்டுமணி அம்பயராக இல்லாமலே மேட்ச் ஆடினார்கள். தேவைப்பட்ட போது அவர்களே கலந்து பேசி அவுட் கொடுத்தார்கள். குண்டுமணி பெட் ரெஸ்டில் இருந்த சில நாட்களினுள்ளேயே தம்பாவும், கிச்சாவும் தங்களது டீம் மீதான முழு ஆதிக்கத்தையும் எடுத்துக் கொண்டார்கள். அதன் பின்னர் கு.மணியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பெரும்பாலும் இரண்டாவது கிளையில் இருந்து நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பான். அவன் இருக்கும் பக்கம் யாரும் திரும்பிக்கூட பார்பதில்லை.

குண்டுமணிக்கு மா ரீதியாய் விழுந்த அடியிலும் பார்க்க மன ரீதியாய் விழுந்த இந்த அடியை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது.

நாளை மாலை தம்பா டீமுக்கும் கிச்சா டீமுக்கும் பத்துக்கு பத்து ஓவர் மேட்ச் இருந்தது. அது முடியவும் கோயில் சொக்கப்பானை எரியத் தொடங்கவும் நேரம் சரியாய் இருக்கும் அதை தொடர்ந்து கேணித்தீபம், மைதானத்தீபம் என்று பக்காவாய் நிகழ்ச்சி நிரல் பிக்ஸாகியிருந்தது.

தி கிரேட் பு.ம என்கிற புஸ்பமணியம் சிறப்பு பூசையின் பின்னரான பிரசங்கத்திற்காக தயாராகி கொண்டிருந்தார். நட்சத்திராவில் அறிமுகமாகிய பு.மவின் மகள் அபிஜிதாவுக்கு இந்த பதிவில் ஒரேயொரு சந்தர்ப்பத்தில்,  தூண்டாமணி விளக்கோடு கேணிக்கரையில் மஞ்சளும்,வெளிர் பச்சையும் கலந்த கலர் தாவணியில் வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

கடந்த வருடம் விளக்கீட்டின் போது, தங்கள் வீட்டு கிணற்றுத்தண்ணீரில்தான் விளக்கு ஏற்றியதாய் வெடியன் கூறிய போது - எல்லோரும் அரைவட்ட வடிவில் இருந்து நாடியில் கைவைத்து கேட்டுக்  கொண்டிருந்தார்கள். "வேண்டுமானால் அடுத்த வருடமும் ஏற்றிக்காட்டுகிறேன் பார்" என்று கூறி முடிப்பதற்குள் ஒரு வருடம் உருளாமல் நேராகவே ஓடியிருந்தது.

முழு இருளுக்குள் விசித்திரா கையில் வைத்திருக்கும் தட்டிலுள்ள அகல் விளக்கு சிறிது சிறிதாய் பிரகாசம் கூடுகிறது, பொன்னிறத்தில் ஒரு பெண்ணாய் விசித்திரா வலக்கை பெருவிரலால் திரியை தூண்டிவிடும்போது - முழுநிலவொளி மஞ்சளா? வெள்ளையா? என்ற நீண்ட கால சந்தேகத்திற்கு விடை கிடைத்ததோடு ராகீயின் நான்குமணி நடுச்சாமக்கனவு விழித்துக்கொண்டது.

திருவிளக்கு நாள்.

மாலையாகும் போது பெரும்பாலான வீடுகளின் கேட் வாசலில் அரை வாழைக்குத்திகளுக்கு மேல் கொப்பறாவுக்குள் எண்ணெய் நிரம்பி வழிய பருத்தி திரியோடு சிரட்டை விளக்குகள் தயாராகி இருந்தன.காணிக்குள் பெரும்பாலான இடங்களில் முட்கிளுவை தடியில் துணி சுற்றி எண்ணெயில் நனைத்து பந்தங்கள் ஊன்றப்பட்டிருந்தது. வீட்டுக்கு முன்னால் அகல் விளக்குகள் எல்லாம் அடுக்கடுக்காய் வரிசை கட்டி வைக்கப்பட்டு, ஆறு மணி தாண்டி இருள் கவ்வும் போது அற்புதம் நிகழ்த்த காத்திருந்தன.

ஆயிரம் அகல் விளக்குகளுக்கும்  ஐந்நூறு வாட்ஸ் போகஸ் லைட் வெளிச்சத்துக்கும் இடையில் தொளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது விளக்கொளிகள் வித்தியாசமாய் இருக்கும். அதற்கு மேலால் விளக்கொளியை மூடி இருக்கும், முற்றாய் விலகாத இருள் ஒன்று எப்போதும் போகஸ் லைட்டுகளை பார்த்து அழகாய் சிரி்த்தபடி இருக்கும். "ஒளியை மூடும் இருளழகு"  கான்சாப்ட் அங்கே கி்டைப்பதில்லை என்பதற்காய் இருக்கலாம்.

கோயில் முன்னால் பத்தடி உயரத்தில் சொக்கப்பானை எழுந்து நின்றது. உள்ளே வாழை உயிர் கொடுக்க தயாராய் இருந்தது. சிறப்பு பூசைகள் சிறப்பு தீபங்களுடன் ஆரம்பமாகி இருந்தது.

மேட்ச் முடிய இன்னும் இரண்டு ஓவர்கள் மிச்சமிருந்தது. குண்டுமணியை கிரவுண்டில் எங்கேயுமே காணக்கிடைக்கவில்லை. யாரும் அதை பெரிதுபடுத்தவும் இல்லை. இதை ஒரு பிரக்டீஸ் மேட்ச்சாகத்தான் இரண்டு டீமும் எடுத்துக்கொண்டது. காரணம் வரும் வாரத்தில் புளியடி டீமுடன் பெரியளவிலான மேட்ச் ஒன்று பிக்சாகியிருந்தது. புளியடி டீமை இரகசியமாய் "மண்டான் டீம்" என்று ஊரில் கூப்பி்டுவார்கள். பேரைச் சொல்லும் போதே குழல் நடுக்கத்தில் குரலும்.

கடைசி ஓவரில் முதல் பந்தை வீசும் போது கிரவுண்டுக்குள் விச்சுவா மூச்சிரைக்க ஓடி வருவது தெரிந்தது. ஓடி வந்த வேகத்திலேயே
"பப்பை காணல்லை, பப்பை காணல்ல" என்று அலறியது மைதானத்தினுள் எதிரொலித்தது.

"என்னடா பப்"

"ப...ப் இல்லை கப்"
மூச்சு வாங்கிவிட்டு தெளிவாய் உளறினான்.

"புளியடி டீமிட்ட தோத்தா கொடுக்கிறதுக்கு என்டு வாங்கி வைச்சிருந்த சாம்பியன் கப்பை பெட்டிக்குள்ள காணல்ல."

அனைவரும் சம்பவ இடத்துக்கு கால் தெறிக்க ஓடினார்கள்.

விச்சுவாதான் பந்துகள், விக்கெட்கள், துடுப்புக்கள் என்று எல்லாவற்றையும் வைத்துப்பூட்டுகின்ற ஆயுதப்பெட்டியின் காவலன். ஆக மொத்ததில் அவன் சொன்னால் விடயம் உண்மையாய்த்தான் இருக்கும்.

இருந்தாலும் அவன் கழுத்து நூலில் பெட்டியின் திறப்பு தொங்கும் போது பெட்டிக்குள் இருந்த கப் அதுவும் புது கப் எப்படி காணாமல் போகும்.

தம்பா,கிச்சாவையும்
கிச்சா,தம்பாவையும்
சந்தேக கண்ணோடு ஒரு மில்லி செக்கன் பார்த்து்க் கொண்டார்கள்.

மண்டான் டீமை நினைக்க இருவருக்கும் குலை நடுங்கியது.உடனடியாய் கப் வாங்கவும் முடியாது. கப் இல்லை என்று மேட்ச்சை நிறுத்தவும் முடியாது. வென்றால் பிரச்சினை இல்லை. தோற்று விட்டால் ....

"எப்படி காணமல் போகும்"  தம்பா கையை முறுக்கி, முணுமுணுக்க

விச்சுவா தயங்கித்தயங்கி பெட்டிக்குளிருந்து எடுத்து,

புழுக்கொடியலில் சுத்தியிருந்த அந்த பேப்பரை விரித்துக்காட்டினான்.
அதில்
                           "கப் வேண்டுமா?
                           நான் வேண்டுமா?"
                                                       - குண்டுமணி

அதனர்த்தம் உடனடியாகவே தம்பாவுக்கும், கிச்சாவுக்கும் புரிந்தது. குண்டுமணியை தேடிப்பிடிப்பது சுலபம். கப்பை தேடிப்பிடிப்பது கஷ்டம். இருந்தாலும் கர்வம் தலைக்கேறிய நிலையில் இருந்த தம்பாவும் கிச்சாவும் கப்பை தேடிப்பிடிப்பது என்று முடிவு செய்து கொண்டார்கள். அவரவரின் டீமோடு தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.

ஆறுமணி டாணடித்தது...
மின்சாரம் இல்லாமல் போக வேண்டும் என்று விரும்பி வேண்டிக்கொள்கின்ற அந்த கணப்பொழுதுகள் ஆரம்பமாகியிருந்தது. எல்லா வீடுகளிலும் சின்ன சின்ன சுடர்கள் மின்னத் தொடங்கியிருந்தது.

அனைவரும் பிரிந்து ஒவ்வொரு வீடாய் தட்டி கு.மணி கப்போடு வந்தானா என்று விசாரிக்க தொடங்கினார்கள்.

"ஆண்டாள் வீட்டில் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டுக்கொண்டிருந்தாள்."

"வெடியன் வீட்டில் சொன்னது போலவே தண்ணீரில் விளக்கெரிந்தது."

"குண்டுமணியை மதியம் கோயிலுக்கு அண்மையில் வைத்து ஒரு பெரிய பையோடு கண்டதாய்". கேணிக்கரையில் அபிஜிதா தூண்டாமணி விளக்கோடு ராகீக்கு  ஒரு சிறிய துப்புக்கொடுத்தாள்.

இருந்தாலும் ராகீக்கு கொடுத்த அந்த துப்பு, விசித்திரா என்கிற அழகிய தப்பால் வீணாகிப்போனது.

விசித்திரா கேணிப்படிகளில் சிட்டி விளக்கேற்றிக்கொண்டிருந்தாள். காலைக்கனவுகள் மாலையில் நனவாகலாம்.

ராகீ கிடைத்த துப்பையும் மறந்து அப்படியே ஒரு படியில் இருந்து விட்டான். காதல் கண்ணை மறைத்து எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தது.

வீதிகள், வீடுகள் என்று விளக்கொளியில் சல்லடை போடப்பட்டது. கப் மட்டும் கண்ணுக்கு தெரியவில்லை.

மழை வரும் போல இருந்தது. முழுநிலவை மேகம் பாதியாய் மறைத்தது.

குண்டுமணி கோயிலுக்கு முன்னால் இருந்த பிரசங்க கூட்டத்தில் முன்வரிசையில் இருந்தான்.

சொக்கபானை கொழுந்துவிட்டு எரியத்தொடங்கவும், பு.ம தொண்டையை செருமிக்கொண்டு பிரசங்கத்தை ஆரம்பித்தார். முன்பொரு காலத்தில் பிரம்மா பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற கேள்வி வந்தது. அவர்கள் சிவனிடம் போக சிவன் ஒரு ஜோதிப்பிழம்பாக தோன்றி இதன் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் தேடிப்பிடிக்கிறாரோ அவரே பெரியவர் என்ற,

தம்பா அன்னப்பறவை போல ஒவ்வொரு மரம் மரமாய் பறந்து தேடினான்.
கிச்சா வராகமாய் மண்ணை எல்லாம் கிண்டி தேடினான்.
எங்கேயுமே கப் கிடைக்கவில்லை.

தம்பாவும், கிச்சாவும் தோல்விக்களைப்போடு திரும்ப
சொக்காப்பானை எரிந்து முடிந்தது.
வாழை துண்டானது.

தம்பா சிரித்தபடியே விழுந்து துண்டாகிய வாழையை இழுத்துக்கொண்டு புறப்பட்டான்.

                   ××××××××××××××

இந்த இடத்தில் முற்றும் போட வேண்டும்.

ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அந்தப்பாவம் எனக்கும் வேண்டாம்.

ஆகவே முடிவுரைக்கு போகலாம்.

வெடியன் வீட்டில் இந்த தடவையும் கிணற்றுத்தண்ணீரில் விளக்கெரிந்ததற்கான விளக்கம் - இன்னும் ஓரிரு மாதங்களில் "கிணற்றுத்தண்ணீரில் ஆயில் கலந்திருக்கிறதா?" என்ற பாரிய பிரச்சினையோடு ஆரம்பித்து தீர்வு கோரி போராட்டம் வரை நடக்கும். அடுத்த வருடம் அனைவர் வீட்டிலும் தண்ணீரில் விளக்கெரியலாம்.

குண்டுமணி இழுத்துக்கொண்டு போன வாழைக்குள் ஆங்காங்கே சில எரிகாயங்களுடன் கப் இருந்தது. அந்தக்கப் மறுநாள் புளியடி டீமுக்கு அரைவிலையில் இரகசியமாய் குண்டுமணியால் விற்கபடும்.

'குண்டுமணியே பரம்பொருள்' என்று தம்பாவும்,கிச்சாவும் ஏற்றுக்கொண்டு, புளியடி டீமுடனான மேட்சுக்கு முதல் நாள் போய் காலில் விழுவார்கள். அவர்களுக்கு குண்டுமணியிடமிருந்து எந்த கப்பும் கிடைக்காது. இருந்தாலும் அனைவரும் ஒன்றாகி மேட்சை வின் பண்ணுவார்கள். அதன் போது கர்மா பூமராங் ஆகி, புளியடி டீம் எரிகாயங்களுடன் கொடுக்கின்ற அந்த கப் "நெருப்புக்கிண்ணம்" என்று  கால காலத்துக்கும் அழைக்கப்படும்.

(ஆக மொத்ததில் மக்களே, இது "மிடில்விக்கெட்" என்ற முந்திய பதிவுக்கு ஒரு spin off story" - அதன் லிங் கீழே கொடுக்க முடியாது. வேண்டுமானால் தேடி வாசிக்கவும்.)

               ###############













"ஹாவ் பன்
ஹாப்பீ கார்த்திகை விளக்கீடு"
அன்புடன் அற்பபிறவி