About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Wednesday, November 15, 2023

கரையொதுங்கிய பண்பலைகள் 

கடந்த வருட கடைசிப்பகுதியில் ஆரம்பித்த பதிவு. கடையப்பாவிற்கு பிறகு இரண்டு வருடங்களாக போகிறது. இன்னும் சில மாதங்களில் நான் + நீ , இன்ஆக்டீவிட்டி தொடர்பாய் மெயிலில் இருக்கவா? இல்லை அழிக்கவா? என்று கூகுள் கேட்பதற்கான அறிகுறிகள்  இப்போதே தென்படுகின்றன. இதற்குள் இருக்கின்ற இரண்டு மூன்று வாசக பெருந்தகைகள் அவ்வப்போது சந்திக்கும்போது கேட்டுக்கொள்வார்கள். 

"ஏதும் அப்டேட் இல்லையா ?." 

மன்னிக்க.எல்லா அப்டேட்களையும் நேரம் குத்தி கொன்று விடுகின்றது. ப்ரியோரிட்டிகளின் லிஸ்டில் பொழுதுபோக்குகள் எல்லாம் எங்கேயோ போய் ஒளிந்து கொள்கின்றன. வயது ஏற, பொறுப்பு வருகின்றதோ என்று பயமாக வேறு உள்ளது. பார்க்கலாம். 

அண்மையில் நெட்பிளிக்ஸில் "All the light we cannot see" என்று நான்கே எபிசோட்டுகளுடன் ஒரு லிமிட்டட் சீரிஸ் வெளியாகியிருந்தது.  புலிட்சர் விருது பெற்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு சீரிஸ். நிறைய நாட்களின் பின் பிஞ் வோட்சில் பார்த்து  முடியும் போது, அந்தரத்தில் பல்டி அடித்தபடி இருந்த இந்த பதிவுக்கும் .... அடடே என்னும் படியாக ஒரு முடிவு கிடைத்தது. 

சீரிஸ் பார்க்காதவர்கள் பார்த்து விடுங்கள். மஸ்ட் வோட்ச் லிஸ்டில் இருக்க வேண்டியது. ஸ்பாய்லர் இல்லாமல் இரண்டு வரி  கேட்பவர்கள்  - 

"இரண்டாவது உலக யுத்தத்தில், நாஜிகளின் சட்டங்களிற்கு விரோதமாக Frequency 13.10 இல் ஒலிபரப்பாகிய ஒரு வானொலியும் அதனை இரகசியமாய் கேட்கின்றவர்களுமாய் நகர்கிறது." 

########## 

எங்களிடமும் ஒரு காலம் இருந்தது. மொபைல்களிற்கு கவரேஜ் கிடைக்காத காலம் போல வானொலிகளிற்கு அலைவரிசை சிக்காத காலம். அதன் போது வீடும், அங்கிருந்த PANASONIC பிராண்ட் Version 2000 வானொலியும் நிறைய அநியாயங்களை எதிர்கொண்டிருந்தன. 

Panasonic 2000 க்கு என்று வீட்டின் முன் பகுதியில் ஒரு நிரந்தர இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. காலையிலிருந்து இரவு வரை ஓயாது உழைக்கின்ற ஒரு ஜீவனுக்கு ஒரு நிரந்தர இடத்தை வழங்கியதில் என்ன பெரிய உள் நோக்கம் இருந்து விடப்போகிறது. இருந்தது. 

ரேடியோ அண்டெனாவில் இருந்து ஒரு செப்புக்கம்பி கட்டி அதை  கூரை உச்சியின் மேல் தொடுத்து விட்ட போது "உன் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும் " ஆறு மணி என்பதை சரியாக காட்டியது. கொஞ்சம் மீட்டர் கட்டையை சுழட்டினால் "தங்க சூரியனே கேட்டது". அலைவரிசையை செப்புக்கம்பி சரியாக உள்வாங்கி கொண்டது. அது மாட்டிய இடம் சரி என்பதாய் அண்ணர் தம்ஸ் அப் காட்ட, யன்னலில் கால் வைத்து, குனிந்து கொண்டிருந்த அண்ணரின் முதுகில் மற்றக்காலை சமநிலைப்படுத்தி நிலத்தில் லாண்ட் ஆக முடியும். (அண்ணரை உழக்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்து நேற்று காணாமல் போன கத்தரிக்காய் பொரியலை கவலையோடு மனதுக்குள் நினைத்தவாறே ) தொம் என்று தவறுதலாக காலை வைத்து, முதுகில் ஒரு உழக்கு உழக்கி விட்டு மறு காலை நிலத்தில் வைக்க, இடுப்பில் கையை வைத்தவாறு நிமிர்ந்து கொள்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. 

அப்போதெல்லாம் வீட்டில் ஏணி கிடையாது. அவசரத்திற்கு வீட்டிற்கு மேல் ஏறுவதென்றால் இரண்டு வழிகள்தான் இருந்தது. ஒன்று. நாலு வீடு தள்ளிப்போய் ஏணி கடன் கேட்க வேண்டும்.மேலே ஏறுவது எல்லாருக்கும் பிடிக்காது என்பதால்  அனேகமானோர் ஏணியை கடன் கொடுக்க மாட்டர்கள். சில வேளை கொடுத்து விட்டு ஏறி மேலே நிற்கும் போது, அவசரமாக ஏணி தேவை என்று கீழே இழுத்தி விழுத்தி விட்டு எடுத்து சென்று விடுவார்கள். அப்படி ஒரு தடவை அந்தரித்து நின்ற போது கண்டுபிடித்ததுதான் இந்த இரண்டாவது வழி. மனித ஏணி. எண்ணெய் பரல் மேல் அண்ணர் ஏறி குனிந்து நிற்க அவர் முதுகில் கால் வைத்து ஏறி,இறங்குவது.அந்த வழியை கண்டறிந்த பிறகு மற்ற வீடுகளில் ஏணி வாங்குவதையே தவிர்க்க தொடங்கியிருந்தோம். நாலு வருட மூப்பு கணக்கை காட்டி மனித ஏணியின் அடியில் எப்போதும் அண்ணர் நிற்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. இருந்தாலும் .... அந்த ஏணியும் சில நேரங்களில் தள்ளாட்டம் காட்டிவிடும். மேலே ஏறிய பிறகு முதல் நாள் சம்பவங்களினை நினைவில் வைத்து ஏணி நகர்ந்து விட்டால் ஒரு மணித்தியால வெயிலுக்குள் ஓட்டு சூட்டில் நின்று மாசில் வீணையை அரைகுறையாய் ஒப்பிப்பதற்கு பதிலாய், கீழே குதித்து காலை முறித்து கொள்ளலாம். 

அடடா... ஏணிக்கு ஒரு தனி போஸ்டே போடலாம் போல இருப்பதால், அதை ஸ்கிப் பண்ணிவிடலாம். "சக்தி கொடுவோ அல்லது "தங்க சூரியனோ" முடிவதற்கு சரியாக ஏழு, எட்டு நிமிட கால அளவு பிடிக்கும். அது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்த ஒன்று. இப்போது 90s களின் நொஸ்டால்யா டைப் மீம்களின் வடிவில் சுற்றி திரிகிறது. 

சக்தி எஃப் எம்மும், சூரியன் எஃப் எம்மும்  ஸ்மார்ட் போன்களிற்கு முன்னரான ஒரு காலத்தில் முகப்புத்தகங்களிற்கு முன்னரான ஒரு காலத்தில், ஸ்பொட்டிபைகள், பொட்காஸ்டுகளிற்கு முன்னரான காலத்தில், ஒரு தசாப்த யுகங்களில் நிறைய கதைகளை பேசியிருந்தன. 

2000 ஆண்டிற்கு  பின்னர்  சூரியனும், சக்தியும் fm அலைவரிசைகளில் முடிசூடிக்கொண்ட காலப்பகுதிகள். "ஜனரஞ்சகம்" என்பதை சரியாக உச்சரித்து காட்டின. அது வரைகாலமும் இருந்த வானொலி நிகழ்ச்சிகள், அறிவிப்புக்கள் எல்லாவற்றையும் தூக்கி கடாசி விட்டு புதிதாக ஒரு  வரலாற்றை உருவாக்கயிருந்தன. சக்தி, சூரியனோடு தென்றல் fm  இருந்தது. அரச வானொலி. சீனியோரிட்டியில் மற்ற fm களுக்கு மூப்பு. சிறப்பு என்னவென்றால் அண்டெனா இல்லாவிட்டாலும் கூட கிறிஸ்டல் கிளியராக தென்றல் வீசும். ஆனால் ஐனரஞ்சகம் என்ற வார்த்தையே உச்சரிக்க வராது. அதனால் இதற்கு மேல் தென்றலுக்கு பந்தியில் இடமில்லை. 

இப்போதைய மின் வெட்டுக்களை கொடுப்புக்குள் வைக்ககூடிய  அளவில், போரின் பின்னரான 2000 - 2004 காலப்பகுதிகள் இருந்தது.  இருபத்தி நான்கு மணி நேரத்தில் இரண்டு மணி நேரமே ஊருக்குள் இரவு வேளைகளில் மின்சாரம்  பாய்ந்தது. மிகுதி நேரங்கள் அந்தர் விளக்கொளிகள் உடனான சம்பாசனைகளும், இந்த FM கள் எக்ஸ்ரா அட் ஒன்ஸ்களாகவும் இருந்தன. விளக்கு வெளிச்சத்தில் தொலைக்காட்சி தெரிந்தாலும், தொ.கா வை பார்த்து ரேடியோக்கள் பெருமையோடு இரண்டு அல்லது நான்கு எவரெடி பற்றறிகளுடன் பாடிக்கொண்டிருந்தன. 

பற்றரியின் வானொலியுடனான ஆயுட்காலம் என்பது மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு மூன்று வாரம்தான். மூன்றாவது வாரத்தின் இறுதி பகுதியில் மழைக்குள் நனைந்து தொண்டை கட்டியது போல கர கரக்க ஆரம்பிக்கும். ஹாரிஸ், யுவனின் பேஸ், பீட்டுகளை எல்லாம் சுவாசிக்க முடியாது சேடம் இழுக்கும். அநிருத் மட்டும் அப்போது இருந்திருந்தால் "ஹூக்கும்" என்பதுதான் panasonic 2000 ன் இறுதி வார்த்தையாக இருந்திருக்கும். 

பற்றறி சேடம் இழுக்கும் போது சக்தியோடு  தென்றல் வந்து சாம்பாராகி ஒரே நேரத்தில் இரண்டு RJ கள் கலந்து பேசுவார்கள். சூரியன் வழமைக்கு மாறாக நாலு ஸ்டேசன் தள்ளி போய் நின்று உதிக்கும் . இவையெல்லாம் எவரெடிகள் இறுதி மணிதுளிகளிற்கு தயாராகி விட்டன என்பதற்கான அறிகுறிகள். மாதத்திற்கு இரண்டு அல்லது  நான்கு பற்றறிகள் மட்டுமே, கோட்டா என்று கொண்டிசனுடன் வாழ்பவர்களிற்கு மூன்றாவது வாரப்பகுதி மிக குறூசியலான ஒன்றாக இருக்கும். 

இப்போதைய கரண்டு பில்களும் அப்போதைய பற்றரி பில்களும் LHS = RHS கள். இலகுவாக சமன்படுத்த கூடியவை.தட்டுப்பாடே இல்லாத ஒவ்வொரு யாழ்ப்பாணத்தானின் ஸ்டொக் குடோனுக்குள்ளும் அரிசி, சோப்பு, பருப்புக்களுடன் நிறைய, நிறைய பற்றரிகளும்  இருக்கும்.  மாதம் இவ்வளவுதான் என்று பற்றறி கோட்டா கட்டுப்பாட்டுடன் வாழ்பவர்கள், காலை, மதியம் இரவு நேர செய்தி கேட்பதற்கு மட்டுமே  வானொலியினை இயக்கி எங்கே அதிகம் சத்தம் வைத்தால் பற்றறி தேய்ந்து விடுமோ என்று காதுக்கு பக்கத்தில் தோளில் வைத்து ஒருவர் மட்டும் கேட்டு மற்றவர்களுக்கு செய்தியை பின்னர் பார்சல் செய்வார்கள். அவர்களை பற்றறி கஞ்சன்கள் என்று அழைப்பர். 

எங்கள் வீடு கொஞ்சம் பேராசைக்கார வீடு. ஒரு நாளில் தூங்கும் நேரம் தவிர மற்றைய நேரம் முழுவதும் ஏ.ஆர் அல்லது ராஜா இதமான சத்ததில் வேண்டும் என்கின்ற அளவுக்கு ஒரு பேராசை. அந்த பேராசைக்கு எல்லாம் "பற்றறி கோட்டா" கிழமைக்கு ஒன்று என தேவையாக இருந்தது. எங்களையொத்த பேராசைக்கார யாழ்வாசிகள் அதனை ஸ்கிப் பண்ணிய முறை மிக அலாதியானது. 

அந்த அடிமுறை வருமாறு - சித்திரவதையில் சாக போகிற நிலையில் விட்டு விடுவார்கள் என்றால் இங்கே பற்றரிகளிற்கான சாவு வேளை நெருங்கும் போது அவற்றிற்கான சித்தரவதை ஆரம்பித்திருக்கும். அது மரணத்திலும் கொடியதாக இருக்கும். முதலில் பற்றரியின் நடுவில் இருக்கும் காபன் எலக்ரோட் உடையாத அளவிற்கு  சுட்டியலால் சுற்றிவர  இரண்டு தட்டு தட்ட வேண்டும். (வலிமையான வாயுள்ள சிலர் பல்லையும் , சிலர் கதிரைக்காலின் அடிப்பகுதியையும் பயன்படுத்துவார்கள்)  பின்னர் அதனை ஒரு இரண்டு, மூன்று நாள் முப்பது டிகிரி வெயிலுக்குள்( தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பது) காயவிடுவதன் மூலம் அந்த பற்றரிகளிற்கு மேலும் ஒரு கிழமைக்கு உயிர் பிச்சை கொடுக்க முடியும். 

இப்படியான யுக்திகளுடன்,  Panasonic பிராண்ட் 2000 version இன் காலவோட்டத்தில் ஒவ்வொரு நட்டாக இழ(க்)க தொடங்கியிருந்தது. அவ்வளவு கடுமையாக ஒவ்வொரு நாட்களும் உழைத்தது காரணமாக இருக்கலாம், அல்லது, வேறு பல நிகழ்வுகளும் காரணமாகியிருக்கலாம். 

2003 ன் ஒரு மழைக்கால நாளில்..... அண்டெனாக்கம்பியை அண்ணரும் நானும் ஆளுக்கு பாதியாக பிரித்து எடுத்துக்கொண்டோம். ஏன் எதற்கு என்றெல்லாம் சரியாக ஞாபகமில்லை. அண்ணர் எரிந்த "மலை" என்றால் நான் "லாவா" என அடியில் நின்று, இருந்த காலப்பகுதிகள் அவை. அவருக்கு சூரியன் என்றால் எனக்கு சக்தி என்று இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டையும் ஒரு வானொலியில் கேட்க முடியாத ஒரு நிலையில் மீட்டர் கட்டையின் ரிபன் ஒரு தடவை அறுக்கப்பட்டது. கணேஷ் மெக்கானிக்கின் ரிப்பேர் கடைக்கு panasonic 2000 போய் வந்தது. அதன் பின்னரான ஒருங்கிணைப்பு பேச்சு வார்த்தைகளின் மூலம் இரண்டு அண்டனாக்களையும் இணைத்து கொழுவி ஒரு செடூலில் சக்தியும் சூரியனும் மாறி மாறி ஒலித்துக்கொண்டாலும், சில குருஷேத்திர நிலைகளில் அண்டனா கம்பிகள் இரண்டாகி, பின்னர் ஒன்றாகின. 

ஒரு நியூக்கிளியர் மிசைலை லோஞ் பண்ணுவதற்கு மிலிட்டரி டாப் காமண்டர்களிருவரின் திறப்புக்களும் ஒரே நேரத்தில் செருவப்படுவது போன்ற ஒரு உணர்வை panasonic 2000 காலை வேளைகளில் அனுபவித்துக்கொண்டிருந்தது. 

2004 அளவில் ரெக்கோடர் வேலை செய்யாமல் போனது. திருத்துவதற்கு முயற்சித்து முடியாது என்றானபோது,கசட்டில் சேகரிக்கப்பட்டு இருந்த, எப்போதாவது அரிதாக ஒலிபரப்பாகும் சில பாடல்களை  தலை முழுக வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த மிக்ஸ்ரேப்களில் ஒன்று கூட இப்போது ஆயிரமாயிரம் ஸ்பொட்டிஃபை பிளேலிஸ்டுகள் தரமாட்டாத ஒரு திருப்தியை தந்தன. அதற்கு காரணம் பாடல்களுடன் கிடைத்த அறிவிப்பு. ஒவ்வொரு பாடலுக்கு இடையிலும் நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் Talk time இருக்கும். பெரும்பாலும் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்ற விதம், 

நேரம் 07.59.57 

வன்

டூ 

த்ரீ. 

வெளிச்சம் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறும் போது கண்மணி என்கிற கண்மணியாளின் குரலினை ஒலிவாங்கி விழுங்கி கொண்டது. 

"நேயர்கள் அனைவருக்கும் கண்மணியின் இனிய காலை நேர வணக்கங்கள் ....மீண்டும் ஒரு திங்களின் காலை வேளைகளில் ....." 

கண்மணியாளுடன் காலை நேரத்தை ஆரம்பிக்கின்ற ஆயிரமாயிரம் பேர்களுக்கு கண்மணியாளின் முகம் தெரிந்திருக்க நியாயமில்லை. குரலிற்கு மட்டுமே அடையாளம் கிடைத்திருந்தது . நேரே பார்த்து, நீதான் இந்த உலகில் தி பெஸ்ட் ஆர்.ஜே என்று சொல்பவர்களுக்கு, நீ மற்ற வானொலிகள் ஏதும் கேட்பதில்லையா? என கேட்டு சமாளித்து கொள்கின்ற ஒரு சபையடக்கக்காரி. 

கண்மணியாளின் குரலில் வானொலி ஒலிபரப்பு என்பது பனித்துளி மழையாய் பெய்து அதற்குள் நனைவதை போன்றது. காலை 08 மணிக்கு அந்த குரல் வரவில்லை என்றால் என்னவோ, ஏதோ என்று பதைபதைக்கின்ற அளவுக்கு இருந்த எதிர்பார்ப்புத்தான் அந்த குரலுக்கான அடையாளம். 

முகப்புத்தமே இல்லாத அக்காலப்பகுதியில், அறிவிப்பாளர்களின் talk time என்பது  fb நியூஸ் பீட்களிற்கு ஒப்பானதாக இருந்ததது. இசையுடனான ஒரு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை  சூரியனும், சக்தியும் செவ்வனே செய்து காட்டின. சூரியனின் வானொலி நாடகங்களான "அரங்கம்" எல்லாம் டாப் நொட்ச் லிஸ்ட்களில் ஒன்று.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஏதோ ஒரு விடயம் புதுமையாக கிடைத்தது. உலக விடயங்களில் ஒரு பகுதி வானொலி மூலமாகவே வீட்டினுள் வந்தது. 

2010 வரையிலும் Panasonic நின்று பாடியது. கடைசிக்காலங்களில் செப்புக்கம்பி தேவையில்லை என்னுமளவுக்கு frequency நன்றாக அப்டேட் ஆகியிருந்தது. 

ஸ்மாட் போன்களிற்கு பின்னர், ரியல் நியூஸ் பீட்கள் இரசனையை மாற்றத்தொடங்கின. பல fm களின் talk time மழுங்கடிக்கப்பட்டது. பாட்டு , ஒரு விளம்பர இடைவேளை, மறுபடியும் பாட்டு. அட இதற்கு ஸ்பொட்டிபைக்களே பரவாயில்லை என்னுமளவிற்கு முதல் நிகழ்ச்சியில் கேட்ட அதே பாட்டு அடுத்த நிகழ்ச்சியில். நிகழ்ச்சி தொகுப்புக்கள் எல்லாம் fb நேரலையில் வர, வானொலியை கேட்கவா இல்லை பார்க்கவா என்ற சந்தேகம் வரத்தொடங்கியது. ஒரு குரலுக்கு முகம் தெரியாத போது கொடுக்கப்பட்ட இரசனையை fb நேரலைகள் தின்றொழித்து கொண்டிருக்கின்றன. 

இன்றளவில் ஆரம்பத்தில் இருந்த இரசனையில் பெரிதாக மாற்றமில்லாமல் முக்கியமாக ஒவ்வொரு பாடல்களிற்கு இடையிலும் நல்ல ஒரு talk time உடன் சக்தி fm ஒலிபரப்பாகின்றது. ஏனைய fm கள் அப்டேட் என்ற பெயரில்... உதாரணத்திற்கு ஒரு அறிவிப்பு 

இந்த பாட்டு உங்களிற்கு பிடிந்திருந்தால்  எமது fb பேஜ்ஜில் லைக் பண்ணுங்க, கமண்ட் பண்ணுங்க... யூ டியூபில்... 

முகப்புத்தகம் போய் பாடலை லைக் பண்ணி கமண்ட் பண்ணுவதற்கு எதற்கு வானொலி கேட்க வேண்டும் என்று புரியவில்லை. ஜன ரஞ்சகத்தின் சரியான உச்சரிப்பு என்பது மீண்டும் எதிர்பார்ப்பாகி போனது. 

ஆனால் இந்த ஜனரஞ்சகங்கள் எல்லாவற்றிற்கு மத்தியில் 90களின் ஆரம்பத்தில் இருந்து எங்களிடம் ஒரு குரல் இருந்தது. அந்த குரலை சுதந்திரமாக இரசிப்பதற்கோ, கேட்பதற்கோ, பேசுவதற்கோ உரிமை இருக்கவில்லை. ஒரு 13.10 அலைவரிசை.

லிங்கத்தார் பங்கரின் கிழக்கு மூலைக்குள் கால்களை மடக்கியபடி தோளில் வானொலியை வைத்தது டியூன் செய்தார். 

நேரம் 07.59.57 

வன்

டூ 

த்ரீ. 

"நேயர்கள் அனைவருக்கும் கண்மணியின் இனிய காலை நேர வணக்கங்கள் ....மீண்டும் ஒரு திங்களின் காலை வேளையில், அலைவரிசை 13.10 ஊடாக உங்களோடு பேசிக்கொள்வதில் மகிழ்ச்சி. அலைவரிசையினை நேரலையாக வழங்குவதில் நிறைய இடர்கள். களத்திலிருந்து செய்தி வழங்குபவர்களை தொடர்பு கொள்வதில் சிரமங்கள் என கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது...." 

லிங்கத்தாரின் காதினுள் கண்மணியின் குரல் கேட்டதும் ஒரு புன்னகை ததும்பியது. "அக்கா என்னவாம்" என்று இளையவள் காதும் லிங்கத்தாரின் தோள் பக்கத்தில் வந்தது.

இங்கே தோளில் வைத்து வானொலி கேட்பதற்கு காரணம் பற்றறி தேய்ந்து விடும் என்பது அல்ல. அந்த குரலுக்கான அடையாளம் அது.  

கண்மணியின் குரல் தொடர்ந்து ஊடுருவியது. லிங்கத்தாருக்கு குரல் சொல்லும் விடயமல்ல செய்தி. தொடர்ந்து கேட்கும் குரல்தான் செய்தி. 

She is safe until now.

A message within a message. 

குரல் தொடர்ந்தது....  

"என் அப்பா அடிக்கடி சொல்வார். பேச முடியாதவர்கள் மட்டுமல்ல, பேச முயற்சிக்காதவர்களும் ஊமைகள்தானாம். கண்மணி ஊமையல்ல. தொடர்ந்தும் உங்களுடன் பேசிக்கொள்வேன். ஒரு செய்தியாளர் களத்திலிருந்து நேரடியாக.... அவரை இணைத்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்...." 

"பூம்ம்..." 

சில நிமிடங்கள் 13.10 ஊடாக எந்த சத்தமும் வரவில்லை. லிங்கத்தார் தோளிலிருந்த வானொலியினை எடுத்து நிறுத்தி விட்டு அமைதியாக சாய்ந்து கொண்டார்.    

"The most important light, is the light you cannot see." 


#########




#அற்பபிறவி