About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Monday, April 25, 2016

மருதாணி

மினிபஸ்ஸினுள் கூட்டம்,மெகா சைஸில் இருந்தது.நாலாவது வரிசை வின்டோ சீட் வீசிய காற்றில்
அறுபது வயதை தாண்டிய நரையை தழுவி
முகத்தில் பட்ட காற்று போதவில்லை இடது காதோரத்தில் வழிந்த வியர்வையை ஆவியாக்க.
ஒரு பக்கம் கழுத்தை திருப்ப முடியவில்லை.
சீட்டுக்கு பக்கத்தில் நின்றவனின் இருபது கிலோ  தோளில் இறங்கியிருந்தது.
ஒரு ஹெர்குலிஸ்ஸாய் வானத்தை தூக்கி கொண்டு மன்னிக்க அவன் மானத்தை தாங்கி கொண்டு சீட்டில் இருந்த போது மற்றப்பக்க தோளில் நரை விழுந்து எழும்பி மீண்டும் விழுந்து தூங்கியது.
கூட்டம் ஒவ்வோரு ஸ்டாப்பிலும் குறைவதற்கு பதிலாய் பத்தின் பளுவில் கூடியது.

பஸ்ஸில் போகின்ற போது வாழ்க்கையை அனுபவிக்கலாம்,அதொரு தனி சொர்க்கம்,காற்று உன்னுடன் கதை பேசும் என்று கதைகளில் எழுதுகின்றவனுக்கெல்லாம் மரண அடி கொடுக்க வேண்டும்.எங்கோ ஏரோப்பிளேனில் போய் விட்டு நம்மூர் மினி பஸ்ஸுகளை அதோடு இணைத்து எழுதியிருக்க வேண்டும்.

மூச்சுக்காற்றுக்கூட பக்கத்தில் கடன் வாங்கி விட்டுக்கொண்டு இருக்க
டிரைவர் இளையராஜா எய்டிஸீல் ஸ்டீயரிங்கை சுற்றிக்கொண்டிருக்க,
காண்டக்டர் "வளையோசை கல கலவென" கம்பியில் தொங்கி கொண்டு நிற்க
பின்னாலிருந்து "அடுத்த சந்தி இறக்கம்" எனும் போது

அந்தக்கை தெரிந்தது.
மருதாணி பூசிய அந்தக்கை தெரிந்தது.

                                           #########

சின்னவயசில் இருந்து மருதாணி மேல் ஒரு கிரஷ் இருந்தது.கையில் ஐந்து விரலுக்கும் அப்பி ஆரஞ்சு கலரில் அனுச்சித்திரா கொண்டு வந்து "எவ்வளவு கழுவினாலும் இது போகாது" என்று கழுவிக்காட்டும் போது 'ஆ' என்று வாயை பிளந்து கொண்டிருந்த காலமது.ஐந்து விரலின் நுனியிலும், கைக்கு நடுவில் குட்டியாய் வட்டாமாய் ஒரு டிசைனும் போட்டுக்கொண்டு வருவாள்.கேட்டால் "அக்காச்சி அரைச்சு போட்டுவிட்டுச்சு" என்பாள்.
எல்லாக்கைகளுக்கும் மருதாணி செட்டாவதில்லை.சில கைகளுக்கு மருதாணி போட்டு விட்டால் யானைக்காலுக்கு வரியடித்தது போல இருக்கும்.

பள்ளியில்
பத்து பதினொன்றுகளில் ஒரு மருதாணி மீண்டும் கண் முன் டாலடித்து திரிந்தது.எவ்ளோ டிரை பண்ணியும் கடைசி வரைக்கும் அந்த மருதாணியின் பேர் தெரியாமலே போய் விட்டது.கடைசியில் செல்லமாய் மருதாணி என்று வைத்திருந்த பேரை
வெறுப்பில் எருசாணி என்று மாத்திவிட்டேன்.

அதை மாத்தி இரண்டு மூன்று மாதங்களில் இங்கிலிஸ் படிப்பிச்ச டீச்சருக்கு கல்யாணமாகி வெளிநாடு போகப்போகிறேன், என்று சொல்லி குட் பாய் காட்டும் போது மீண்டும் அதே மருதாணி இடக்கையில் இருந்து சிரித்தது.

வடஇந்தியாவில் கல்யாண வீடுகளில் நடக்கும் மகந்தி பங்சனை டிவிக்குள்ளால்  கேபிள் கனெக்சன் வயரிலிருந்த காக்கா கொத்திக்கொண்டு வந்து இங்கேயும் போட்டு விட- மணப்பெண்ணுக்கு விரல் நுனியிலிருந்து தோள்மூட்டு வரை ப்ரவுன் கலரில் ஏதோ இழுத்து விட்டிருந்தார்கள்.கேட்டால் மருதாணியாம். அட அட அட.ஆனால் அந்த ஆர்டிபிசல் மருதாணிக்கும் அனுச்சித்திரா அரைச்சு போட்டுக்கொண்டுவந்த மருதாணிக்கும் இடையில் பெரிய கருந்துளை விழுந்திருந்தது.யாரும் கண்டிருக்க வாய்ப்பில்லை.அனுவுக்கு பிற்பட்ட காலத்தில் சில சீதாக்களும், சில கீதாக்களும் அம்மியில் அரைச்சு  மருதாணி போட்டுக்கொண்டாலும் காலப்போக்கில்  பாரதி கண்ட புதுமைப்பெண்களாய் புறங்கையில் "நிமோ மீன்" ஐ டாட்டூவாக குத்திக்கொண்டார்கள்.

########

இப்படி மருதாணியில் புரட்சி நடந்து நீண்டகாலத்துக்கு பின்...., 
அந்தக்கை தெரிந்தது.
மருதாணி பூசிய அந்தக்கை தெரிந்தது.
மீண்டும் அதே பழைய ஸ்டைலில் மருதாணி போட்டுக்கொண்டு  சீட்டை பிடித்து கொண்டிருக்கும் அந்த கைக்குரிய ம்ம்.. முகம் மட்டும் தெரியல்ல. அவ்வளவு கூட்டத்துக்குள்ளாலும் ஒரு பாதி பின் பக்க தலை மட்டும்தான் தெரிந்தது.

மனசு சட்டென்று ஒரு படம் வரைந்தது.இந்த முகம் இப்படித்தான் இருக்கும் என்று.
நரையை தட்டி எழுப்பி விட்டு நிமிர்ந்து இருந்து,ஒரு பக்கம் சாய்ந்து,ஒரு தடவை எம்பியும் பார்த்தாயிற்று.தெரியவில்லை,தெரியவில்லை,..
டிரைவருக்கு முன்னால் இருந்த கண்ணாடி, யன்னல் கண்ணாடி எதிலும் முகம் தெரியவில்லை.

என்ன கொடுமை இது...
இடக்கையில் ஒரு வாட்ச்,அது உள் பக்கமாய் வாட்ச் பண்ணிக்கொண்டிருந்தது..
வலக்கையில் மஞ்சள் கலர் நூல்,கொஞ்சம் மேலேறி முழங்கைக்கு மேல் மூன்று சுற்றில் சிவப்பு நூல்.கௌரி காப்பாயிருக்கும்.
சோ....சைவம்தான்.

காற்றில் இரண்டு,மூன்று முடி பறந்தது,
ஒற்றை ஜடை,அதில்
ஒரு நித்தியகல்யாணி தாவி தற்கொலை செய்ய தயாராயிருந்தது.
முகம் மட்டும் தெரியவில்லை.

"இறக்கமிருக்கு" எவனோ பின்னாலிருந்த கத்த மனம் ஒரு(க்)கால் தவ்வியது.ஆட்கள் நகரும் போது எப்படியும் முகம் தெரியும்.
மருதாணி இன்னும் சிவப்பானது போல தெரிந்தது.
பார்க்க தயாராகி ,கற்பனையில் கொடுத்து வைத்திருந்த முகத்தை மிஞ்சியதாய் அதை விஞ்சியதாய் ஒரு முகத்தை எதிர்பார்த்து கதிராளியை சுருக்கி காத்திருக்க

கூட்டம் அசைந்து,நெருங்கி,நெருக்கி
அட ராமா!
தெரிந்த தலையையையும் இப்போது காணோம்.
ஒரு கை மட்டும் கம்பியை பிடித்தபடி இருந்தது.

இவ்வளவு நேரமும் தோளில் விழுந்த நரை மீதும்,இருந்த பாரத்தின் மீதும் கோபம் கொப்புளிக்க ஒரு இடறு இடற இரண்டு தோளும் ஒழுங்காகியது.அந்த கை மட்டும் கண்ணுக்குள் வந்து நின்றது..அந்த ஆரஞ்சு கலரடித்த ஐந்து விரல்,உள்ளங்கை.
ம்ம் அவ்வளவுதான் ஆடிக்காற்று.எழும்பி முன்னால் போகலாமா என்றால் கூட்டம் எழும்பவே விடவில்லை.

இப்போ முகத்தை பார்க்காவிட்டால் என்ன செத்தா போய்விடுவோம் என்று சமாதானமாகி ஒரு தடவை நிமிர்ந்து பார்த்து பச்,பச்.தெரியல்ல..
கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

அடுத்த கோட் இறக்கத்தில்
அரைவாசி காலியாக
அந்த அரைவாசிக்குள் அந்த கையும் காலியாயிருக்க வேண்டும்.
காணவில்லை.
பஸ் தெளிவாகி  நின்றது.

இரண்டு மூன்று இருபதுகளும் சீட் கொடுக்கப்படாத கைக்குழந்தையும் மட்டும் எஞ்சியிருந்த பஸ்ஸுக்குள் 
வெய்ட்,வெய்ட்...

இல்லை.இறங்கேல்ல.சப்த நாடிகளும் சிலிர்க்க தலையை நிமிர்த்தி
கண்ணை விரித்து பார்க்க..
அத்தனையும் நிற்க...

இளையராஜா. 
வன்... 
டூ.. 
த்ரீ.

"பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க..
காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க."

          _________________________________________













பி.கு

#அற்பபிறவி#
மேற்குறித்த பாடலை இது வரை பார்க்காதவர்கள் கீழுள்ள லிங்கை அமர்த்தி பார்த்து உய்யவும்.

https://youtu.be/yKfwk8Atd1