About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Friday, November 11, 2016

இருவர்

ஒவ்வொரு நாளும் Gif இமேஜ் போல ஓடிக்கொண்டிருக்க,
ஒருமாதம் குறைந்தது ஒரு பதிவாவது போட்டு வதைப்பது என்ற எண்ணத்தில் கடைசி மாதம் கல் விழுந்து விட்டது. இருக்கும் போதும்,நடக்கும் போதும்,கதைக்கும் போதும் மனதில் தோன்றியதையெல்லாம் பட்டென்று To do listல் அட் பண்ணிக் கொண்டதை தவிர உருப்படியாய் மழையில் கூட ஒழுங்காக நனையாமல் சளி பிடித்து காய்ச்சலாக்கி கடைசி மாதத்தை காவு கொண்டு விட்டது.

இனி இருவருக்கு வரலாம்
முதலாவது ஆனந்தன் a.k.a ஒற்றைக்கண்ணன்,இரண்டாவது நாகரஞ்சினி அல்லது நாகம்மா,நாகேஸ்வரி சரியாக தெரியாது also known as ............. ஜ சொல்லுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

ஆனால் இருவரின் வாழ்கையும் பெரும்பாலும் கிடந்து,நடந்து,ஓடித்திரிந்தது தென்மராட்சிக்குள்.

இவன்தான் ஒற்றைக்கண்ணன்!! என்று முதல் முதலாக.... (யார் காட்டியது? நினைவில்லை) காட்டியதிலிருந்து ஒற்றைக்கண்ணனின் படம் துல்லியமான மெகாபிக்சலில் மனதிற்குள் பதிவாகி கொண்டது.நாகம்மா என்றே வைத்துக்கொள்வோம். அவளின் முகமும் அப்படியே.

நான் வளர,வளர இருவருக்கும் வயதாகும் என்று எதிர்பார்த்தது பொய்யாக.எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தார்கள்.

விசாரித்ததில் அம்மாவும்,அப்பாவும் சந்திக்கமுன் - சின்ன வயசிலிருந்த போதே அந்த இருவரும் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இப்பவும் இருக்கிறார்கள் என்று வாக்குமூலம் கிடைக்க., இம்மோட்டல்ஸாய் இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்தது.

ஆனந்தன்  மூலதனம் எதுவும் இல்லாத கடும் உழைப்பாளி. என் வீட்டைச்சுற்றி வர உள்ள வெறுங்காணிகளுக்கு தினமும் காலை எட்டிலிருந்த ஒன்பதுக்குள் ஒரு விசிட்டடிப்பார்.வழியில் கேட்பாரற்று விழுந்து கிடக்கும் தேங்காய்களை ஒரு உரப்பையினுள் பத்திரப்படுத்தி கொள்ளும் போது, யாராவது காணிச்சொந்தக்காரர் அவர் வழியில் குறுக்கிட்டால் குறித்த காணிக்குள் எத்தனை தேங்காய்களை பொறுக்கினாரோ அதை மட்டும் கணக்கு பிசகாமல் திருப்பி கொடுக்கின்ற ஒரு சத்தியவான்.

மீதிதேங்காய்களை வீட்டுக்கு முன்னால் இருக்கும் ஒழுங்கைக்குள்ளால் கொண்டுபோகும் போது வீட்டு வாசலில் இருக்கின்ற என்னைப்பார்த்து ஒரு சிரிப்பு.
ஒரு நாளும் இது யார் தேங்காய்? என்று குறுக்கிட்டதில்லை - அந்த நன்றிக்கடனுக்காய் இருக்கலாம்.

ஒற்றைக்கண் எப்படி தெரியாமல் போனது,ஒரு கால் ஏன் நொண்டுகின்றது என்பதற்கு பின்னாலும் ஏதேனும் கதைகள் இருக்கும்.கேட்டதில்லை.ஒரு பழைய சேர்ட்,ஒரு பிறவுன் கலர் சாரம்.பெரும்பாலும் தாடி.காலை வேளைகளில் நெற்றியில் வீபுதி,சந்தனம்.காதில் பூ. பிச்சை கேட்பது கிடையாது.யாரும் கொடுத்தால் மட்டும் வாங்கி உண்பது வழக்கம்.யாரும் கொடுத்து நான் கண்டதில்லை.
குடிப்பழக்கம் கொஞ்சம் அதிகம்.காலை உழைப்பு முழுவதும் மாலையிலேயே செலவாகி விடும்.

குண்டுமணி,நாங்கள் எல்லாம் ஒன்று கூடும் கோயிலின் ஒதுக்குப்புற ஆலமரத்தின் கீழும் அவ்வப்போது தெருவோரங்களிலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலில்லாத வகையில் விழுந்து கிடப்பார்.யாரும் அவரைக்குழப்புவது கிடையாது. அவரும் யாரையும் குழப்புவது கிடையாது.சொந்தமாய் வீடிருக்கின்றதா,மனைவி,பிள்ளைகள்,நாய்,பூனை எதுவும் இருக்கிறதா? தெரியாது.

எங்காவது தேங்காய் எடுக்கும் போது பிடிபட்டு அடிவாங்கி துரத்தப்படுவதை விட்டுப்பார்த்தால்,
கவலை,கலக்கம் இல்லாத பெயருக்கேற்ற ஆனந்தமான தூக்கம்,உழைப்பு,வாழ்க்கை.

இதனுடன் ஒப்பிடும் போது நாகம்மாவின் வாழ்க்கை கொஞ்சம் பிசிறடித்தது. பஸ்ஸால் இறங்கும் போது பக்கத்தில் நின்ற ஆர்மிக்காரன் கூப்பிட்ட போதுதான் அவள் பெயர் தெரிந்தது.உடனே அவனுக்கு எப்படி தெரியும் என்று கேட்காதீர்கள்.சிக்கல்.

நாகம்மாவின் வாழ்க்கை ஆனந்தனண்ணையின் வாழ்க்கைக்கு முற்றிலும் எதிரானது. நாகம்மாவிற்கு வீடு இருந்தது,குடும்பம்,குழந்தை,ஆடு,மாடு எல்லாம் இருந்தது. முக்கியமாய் ஒரு சைக்கிள் இருந்தது. அந்த சைக்கிளுக்கு காற்றுப்போனால் காசெதுவும் வாங்காமல் ஒட்டிக்கொடுக்க சந்தியில் ஒரு கடை இருந்தது.

நாகம்மாவுக்கும் ஒரு மூலதனமும் கிடையாது.அவள் காணிகளில் குறி வைப்பது கரு வேப்பிலை. வேலியோரத்தில் சைக்கிளை சாய்த்து விட்டு கருவேப்பிலையை பிடுங்கி உரப்பைக்குள் அடைவதை பார்க்கையில் - "கொள்ளை அழகு".
காணிச்சொந்தக்காரன் பார்த்தால் கூட மற்றப்பக்கம் தலையை திருப்பிக்கொண்டு போய் விடுவான்.
கேட்டால் அது நாகம்மாவின் காணி என்று பச்சையாய் பொய் வேறு சொல்வான்.
நாகம்மாவின் நாக்குக்கு  ஊரே பயப்படும்.

நாகம்மாவுக்கு அலர்ஜிக்கான ஒரே ஒரு விடயம் பெண்கள். பெண்கள்.பெண்கள்.
பெண்களை எங்கு கண்டாலும் நாக்கு தடிக்கும்.
அதை விட்டுப்பார்த்தால்...

அன்னதானங்களுக்கு மட்டும் கோயில் பக்கம் ஒதுங்குவாள்.குடிப்பழக்கம் கிடையாது.சுருட்டடிப்பாள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்,பார்த்ததில்லை.பெரும்பாலும் சாம்பல் கலர் மேல்சட்டையும் கறுப்புக்கலர் பாவாடையும் போட்டிருப்பாள்.ஊரடங்கு மற்றும் ஏனைய சட்டங்களுக்கு அப்பாற்பட்டவள்.வயது அன்நோன்.வாகனம் சைக்கிள்.

சைக்கிள் ஓடும் போது நேராய் ஓட மாட்டாள்.ஒரு பக்கம் உலாஞ்சி உலாஞ்சித்தான் ஓடுவாள்.எதிரில் வருபவர்கள் பார்த்து வரவேண்டும்.இடித்து விட்டு எதிர்கேள்வி கேட்பவர்களை நாகம்மாவுக்கு பிடிக்காது.

இந்த இருவரும் ஊரின் அதிபதிகளாக இருந்தார்கள், திரிந்தார்கள்.இரசனை என்கின்ற விசயம் ஒரு வயதிற்கு பிறகுதான் எட்டிப்பார்க்கும்.எனக்கு அது எட்டிப்பார்த்த இத்தனையாவது வயதில் ரசிப்பதற்காக பெட்டிக்குள் போட்டுக் கொண்ட கோடிகளுள் ஒன்றுதான் இந்த இருவர்.

இருவரும் நேருக்கு நேர் பேசி நான் ஒருநாளும் கண்டதில்லை.நாகம்மாவுக்கு கணவனில்லை,ஆனந்தனுக்கு மனைவி இல்லை,

ஒரு கோயிலில் இருவரும் சந்தித்துக்கொள்ளலாம்,கதைத்துக்கொள்ளலாம்.
------------------------------------------------
"எனக்கு ஒரு கண் கிடையாது,பரவாயில்லையா?"

"உனக்கு ஒரு கண்ணுமே கிடையாட்டிக்கூட பரவாயில்லை"
------------------------------------------------
ஒருவருக்கு ஒருவரை பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம்.ஒரு கலப்படமற்ற காதல்.

யாரும் இருவரின் லிவ்விங் டுகேதரை பற்றி சலித்துக் கொள்ளப்போவதில்லை. என்ன நாகம்மாவுக்கு!! இன்னும் நாலைந்து பட்டப்பெயர்கள் கூடியிருக்கும். ஆனந்தனுக்கு ஒரு கை முறிந்திருக்கும்.பெரிய பாதிப்பில்லை.

எனக்கும் இருவருக்கும் ஒரு நல்ல முடிவாய் கொடுக்க கூடியதாய் இருந்திருக்கும்.

எதுவும் நடக்கவில்லை.அத்தனையும் கேயாஸின் கையில்.

ஒரு மழைநாளிரவில் வயற்கரையோர கிணற்றுக்குள் ஆனந்தன் நித்திரையிலோ அல்லது நித்திரைக்காகவோ விழுந்து தொலைக்க அடுத்த நாள் காலையில் தண்ணியள்ள வந்தவர்கள் கிணற்றுக்குள்ளால் தூக்கி, தட்டியெழுப்பினார்கள்.ஒற்றைக்கண்,முகம்,உடம்பெல்லாம் வீங்கியிருந்த்தது.ஆனந்தன் எழும்பவில்லை.

எனக்கு சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்குள் நாகம்மாவின் முகம் மட்டும் தெரிந்தது.

கொஞ்ச நேரம் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
தன்னையொத்த ஒருவனுக்கான மௌன அஞ்சலியா? இருக்கலாம்.

அவள்புறப்பட்டு...
சைக்கிளில் போகும் போது நடந்த
இரண்டு வரிகளில் இருவருக்கும் ஒரு முடிவு  கிடைத்தது.

"ஆனந்தன் நாகம்மாவை வைச்சிருந்தவனாம்.அதான் வந்திட்டு போறாள் பார்."

"நாகம்மா சைக்கிளில் நேராய் போய்கொண்டிருந்தாள்."

என் கண்ணில்தான் பிழை போல இருந்தது.
       
             ________________






#அற்பபிறவி#