About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Thursday, January 12, 2017

பொங்காத பொங்கல்கள்

பஸ் கிறீச்ச்டித்து நின்றபோது யார் இறங்கபோகிறார்கள்!? சீட் கிடைக்குமா? என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க டிரைவர் சீட்டை விட்டு இறங்கி பஸ்ஸிற்கு கீழே போய் மேலே வந்து..
"பஸ் பிரேக் டவுன் இதுக்கு மேல போகாது"
என்றவுடன்
"களா, புளா, களா, புளா" சர்வம் சட்டி பானைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொண்டது.

ஒவ்வொருதராய் இறங்க தம்பா,கிச்சா,அம்மாக்கள்,அப்பாக்கள்,விச்சுவா,விசித்திரா,ராகீ கடைசியாய்  குண்டுமணி இறங்கும் போது டிரைவரும்,கொன்டக்டரும பார்த்த பார்வை குண்டுமணிக்கு பிடிக்கவில்லை என்று அப்பட்டமாய் தெரிந்தது.காட்டிக்கொள்ளவில்லை,புழுக்கொடியலை இரண்டாய் உடைத்து வாய்க்குள் போட்டுக்கொண்டான்.

இன்னும் இருபது அல்லது இருபத்தைந்து கிலோமீட்டர் தாண்ட வேண்டியிருந்தது.
விடிவதற்கு  எட்டு மணித்தியலங்கள இருக்க
அதில் இரண்டு நிமிடத்தை வட்டியில்லாமல் கடன்வாங்கி ஐந்து வசனத்தில் ஒரு அரைகுறை பிளாஷ்பேக்.

01.கண்ணன் கோயில்
02.தைபொங்கல்
03.சட்டிகள்,பானைகள்
04.பிளஸ் ஏனைய மேலே குறிப்பிட்ட , குறிப்பிடாத உயிருள்ள மூட்டைகள்.
05.சூர்யோதயம் - தி பேர்பக்ட் பொங்கல் அட் தி பேர்பக்ட் டைம்

தோராயமாய் ஒரு இருபது பேர்.சரியாய் எண்ணவில்லை.புறப்படும் போது செருப்பு போடாததை நினைத்து கால் த(லை)ரையில் அடித்துகொண்டது.
நிலா வெளிச்சத்தில் ஒருவர் முகம் ஒருவருக்கு துல்லியமாய் தெரிந்தது.குண்டுமணி ஒரு கார்டியன் ஏஞ்சலனாய் கடைசியில் வந்து கொண்டிருக்க முன்னால்,அதற்கு முன்னால் தம்பா,கிச்சா தோள் உரசியபடி நடக்க அதற்கு முன்னால் ராகீ,விச்சுவாவின் கையிலிருந்த கடலையை எடுத்து கொறித்தபடி விசித்திராவுக்கு பின்னால்,

பின்னால் -காதில் ஜிமிக்கி,ஈரங்காயாத பின்னலில் நித்தியகல்யாணிச்சரம்,காதோரத்திற்கு கீழ் இரண்டு கேர்கிளிப்

விச்சுவா விசித்திராவை தன் மச்சாள் இல்லை என்று வேம்படி பிள்ளையாருக்கு முன் சத்தியம் செய்து நான்கு மாதம் ஆகிறது.அன்றிலிருந்து,ராகீ கடலை வாங்கியதில் 800 ரூபா மட்டில் கச்சான்காரியிடம் கடன் இருந்தது.

புதையலை அடைய இன்னும் மூன்று ஆபத்துகளை கடக்கவேண்டும்  ,இது இரண்டாவது "மக்கி ரோட்டில் நெருஞ்சி முள்ளு".தம்பா கிசுகிசுத்தது வெளியில் தெளிவாய் கேட்டது.

செருப்பில்லாதவர்கள் எல்லாம் நுனிக்காலால் நடக்க வேண்டியிருந்தது.
விசித்திரா ஒவ்வொரு தடவை இ...ஷ்... என்று உறிஞ்சி தைத்த முள்ளை பிடுங்கி எறியும் போதும், ராகீக்கு தன் இதயத்திற்கு செருப்பு போட வேண்டும் என்ற யோசனை எழுந்தது.(வருடத்தின் மிகக்கேவலமான காதல் வசனம்,தவிர்த்திருக்கலாம்)

நான்கு கி.மீ பாதயாத்திரையின் பின் முச்சந்தி ஒன்றில் வைத்து ஆபத்பாந்தவர்கள் குறுக்கிட்டார்கள் .
நாயன்மார்களுக்கு உதவும் பொருட்டு கடவுள் மாறுவேசத்தில் வந்தது,நான்காம் வகுப்பு சமயப்புத்தகம்,சமயடீச்சர்,திருச்சிற்றம்பலம்,தேவாரம்,இத்யாதி,இத்யாதி எல்லாம் மின்னிவிட்டுப்போனது.

இப்போதெல்லாம் அப்படி அற்புதங்களை நிகழ்த்த வருவதில்லை.
காரணம், கடவுள் மனுஷநம்பிக்கை இழந்து நாஸ்திகனாகி விட்டிருந்தார்.

இது தெரியாமல்....சிரிப்பு வந்தது.இருந்தாலும் அவநம்பிக்கையில் ஆபத்பாந்தவர்களை ஒரு தடவை உற்றுபார்த்துக்கொள்ள

"கன தூரமோ"
"கண்ணன் கோயில்,பஸ் பிரேக் டவுனாயிட்டு" ராகீயின் மாமா முறுவலித்து கொண்டார்.
"இன்னும் பன்னன்டு மைலுக்கு மேல போகனுமே? குரலுக்கு அறுபதுக்கு மேல் வயது காட்டியது.
விரும்பினா எங்களோட வரலாம்,கோயில் தாண்டித்தான் வயல் வரும்"

மூன்று வண்டியும் நிறைந்து விட்டது.
ஆறு மாடுகளும் அழுது கொண்டன.

இருபதை தாண்டாத அனைவரும்,இருந்த பலகையை தடவிப்பார்த்துக்கொண்டார்கள்.
மாட்டுவண்டி என்பதையும் தாண்டி அதில் எதிர்பாராத பயணம், ஜீரணிக்க முடியாமல் இருந்தது.
இடது,வலது என்று ஏறி இறங்கி ஒரு ரிதத்தில் வண்டி ஊர்ந்தது.குண்டுமணி பீட்டாவின் முன்னோடி, மாட்டுக்கு நோகக்கூடாது என்று வண்டிக்கு பின்னால் நடந்தே வருகிறேன் என்று விட்டான். எப்படியும் பாதி வழியில் ஏறி விடுவான்.தூரத்தில் பட்சி ஏதோ கத்தியது.

ஒவ்வொரு வண்டியின் அடிப்பகுதியிலும் பாதி கரிப்பிடித்த சிமினியோடு ஒரு லாம்பு அசைந்தது. எந்த அலட்டலோ,உறுத்தலோ இல்லததால்  ஆறு ஜீவனும் அமைதியாய் மிதவேகத்தில் அசைந்தது.இருந்தநிலையிலேயே நித்திரை தூங்கி பாதி குறட்டை வேறு விட இரண்டாவது வண்டியில் இருவர் மட்டும் இருவருக்கும் மட்டும் கேட்கும் குரலில் பேசிக்கொண்டது - மேலே சொன்ன அற்புதங்களில் ஒன்று.

"இதுக்கு முதல் போயிருக்கிறியா"
"ம்..என்ன" ராகீக்கு சட்டென்று குரல் வர மறுத்தது.
"இந்தமாதிரி... மாட்டுவண்டில இதுக்குமுதல்.." அடித்த மெல்லிய காற்றில் ஒரிரு முடி காதோராமாய் அசைந்தது.
"நினைவு தெரிஞ்சு இல்ல... அம்மாவோட போயிருக்கலாம்... வயித்துக்குள்ள இருக்கும் போது.. இப்ப கேட்கமுடியாது"
வெளியே தொங்கப்போட்ட கால் இரண்டையும் தூக்கி ராகீக்கு பக்கத்தில்  நீட்டிக்கொண்டாள்.
நுனி விரல் பட்டது. வெள்ளிக்கொலுசுகள் இரண்டும் சிலிர்த்துக்கொண்டது.

"நல்லா இருக்குதில்ல இப்படி போறது" கதைக்க வேண்டும்.நிறைய...நிறைய
"ம்ம்...ஒரு கதை போல...,காத்து,நிலா,மாட்டுவண்டி,அம்மா,அப்பா,ப்ரெண்ட்ஸ்,அந்த அசையிற லாம்பு இனியொரு தடவை கிடைக்காத  கலவை.
வழமையாய் இதெல்லாம் ரசிக்கிற ஜாதி கிடையாது.நெற்றிப்பொட்டு கொஞ்சம் அரங்கியிருந்தது.சொல்லலாமா? விடலாமா?..பாரதி கண்ட புதுமைப்பெண் எல்லாம் வீட்டில் கறையான் தின்று,படிக்க முடியாமல் போய்விட்டது.சிரித்துக்கொண்டாள். இன்னொரு தடவை சிரிக்கக்கூடாது.தொடர்ந்து கதைக்க முடியாது"

இருந்தாலும் இப்ப பார்க்க ரசிக்கத்தோணுது."
"இரசனையும்,காதலும் நனோமீட்டர் தூர சொந்தங்கள்.எதிர்பார்க்கமால்தான் வரும்"
"ஓ..நல்லாருக்கே...நிறைய வாசிப்பியா"
"இதுவரைக்கும் வாச்சதும் இன்டைக்கு உன்னோட கதைச்சதும் ஏறத்தாழ சமன்தான்"
"பச்...அதால..."
"உன்னோட நிறைய கதைக்கனும்னு யோசிக்றன்"

கோயில் கோபுரம்  தூரத்தில் தெரிந்தது.நான்கரைக்கே கொலுப்பலகைக்கு பக்கத்தில் ராகீ டிரைவரோடு ஒட்டிக்கொண்டு விட்டான்.கதைத்ததிலிருந்து நிச்சயமாய் கடவுள் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டான்.வயலுக்குள் பொங்கி படைக்க போய்கொண்டிருக்கின்ற ஒரு சாதரண விவசாயி, பஸ்ஸிலோ,வானிலோ இதுவரை ஏறியது கிடையாது.நுகத்தடியின் வலப்பக்க மாட்டுக்கு பெயர் 'நட்டி' மற்றயது வாங்கி ஒருவாரம்தானாகிறது.பெயர் யோசிக்கவில்லை.

தைப்பொங்கலின் கொள்கைகளில் ஏதோ பிழையிருப்பதாக கூறிக்கொண்டார். இதுவரை செய்த உதவிக்கெல்லாம் நன்றிகளை பெற்றுக்கொள்ள இழுத்துக்கொண்டு போகிறதே நட்டி சுயநலக்காரன்தானே என்று சொல்லி சிரித்து கொண்டார்.

இந்த நூற்றாண்டின் இறுதி சொச்ச ஆச்சரியங்களோடு கோயில் வாசலில் குதித்த போது ஜந்து அரைக்கு அடித்துக்கொண்டது.

அடித்த பனியில் கேணித்தண்ணீர் தலையில் சில்லிட்டது.கோயிலுக்கு எதிரே  இடம் பிடித்து,பாய் விரித்து மூன்று,ஆறு,ஒன்பது கற்களில் மூன்று பானைகள் வரிசையாய் ஏறிக்குந்திக்கொண்டன.
முதல்பானையை சுத்தி தம்பா,கிச்சாவும் இரண்டாவது விசித்திரா பிளஸ் அப்பாவும் மூன்றாவது குண்டுமணியின் மேற்பார்வையிலும் இருந்தது.இரண்டு மாதங்களாய் குண்டுமணிக்கும் தம்பாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை கிடையாது.ஒரு பனிப்போர் நடந்துகொண்டிருந்தது விளைவு இருவருக்கும் நடுவில் ஒரு பானை வைக்ககூடியளவு ஹப். அந்த இடைவெளியில்தான் அடுப்பு சொல்லாமலேயே மூண்டுகொண்டது.

விசித்திரா தொங்கிய தாவணியை இடுப்பில் செருகிவிட்டு சாணியால் மெழுகிய(து -ராகீ) இடத்தில் எதிர்பாராத மூலையில் எல்லாம் புள்ளிவைத்து கோலம்போட்டுக்கொண்டிருந்தாள்,சாட்சாத் சகலகலாவல்லி.

வடக்குப்பக்கமாயிருந்த தலைவாழையிலை கிழக்குப்பக்கமாய் திரும்பிக்கொண்டது.பூரண கலசம் - நிறைகுடம். ஒற்றைப்படையாய் ஒன்பது வாழைப்பழங்களில் நடுவிலிருந்த பழத்தின் வயிற்றில் ஐந்து ஓட்டைகள் போடப்பட்டு புகை வடிவில் சாம்பிராணி அழுது கொண்டிருந்தது. பழத்தை காகம் தூக்காமல் ஒரு காவல் போடப்பட்டிருந்தது.

சூர்யோதயம் - தி பேர்பக்ட் பொங்கல் அட் தி பேர்பக்ட் டைம். மூன்று பானைகளில் எது கோபரத்தின் கிழக்கு பகுதியால் சூரியன் எட்டிபார்க்கும் போது  பொங்கி வழிகிறதோ அந்த பானைக்கு வெற்றி.(ரசிக்க கூடிய ஒரு மூடநம்பிக்கை)

பானையை ஒரு பக்கமாய் சரித்து வைப்பது,ஒரு பக்கம் அதிகமாய் விறகு வைத்து எரிப்பதெல்லாம் போங்காட்டத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்படும்.

இன்னும் நான்கு அல்லது ஐந்து நிமிடத்தில் பன்னிரு குதிரையும் ரதத்துடன் வந்து விடும் என்று வெளிச்சம் தகவல் சொல்லியது.

4.30 - நிமிடம்
விசித்திரா கையிலிருந்த ஐம்பொன் மோதிரத்தை காணவில்லை என்று கோலம் போட்ட இடம் முழுக்க தேடிக்கொண்டிருக்க,
"கிரகத்துக்கு போட்டது, இப்ப கிரகம் சரியில்லை,மோதிரம் போய்விட்டது"
அடுப்பை ஊதி ஊதி சிவந்த கண்களுடன் விசித்திராவின் தகப்பன் சொல்லிக்கொண்டிருக்க

3.30 - நிமிடம்
பால் விட்டது போதாதென்று ராகீ தேங்காய் திருவ,
குண்டுமணி களவாய் ஒரு பிடி சர்க்கரையை அள்ளி பானைக்குள் போட்டுக்கொண்டிருக்க
தம்பா அடுப்பைச்சுற்றி ஒரு குட்டி புயலே வருமளவுக்கு ஊதிக்கொண்டிருந்தான்.

2.30 - நிமிடம் - டிக்,டிக்

1.30 - நிமிடம்
மோதிரம் கிடைக்கவில்லை,புறங்கையால் நெற்றியில் அரும்பிய வேர்வையை துடைத்துகொண்டாள்.எரிந்து வெளியில் வந்த பாளையை தள்ளி விட்டாள்.

இறுதி வினாடிகள்....கோபுரம் ஒளிப்பிளம்பாகிகொண்டிருந்தது.

56.....57...58...

யார் பானை பொங்கப்போகிறது, ஜெயிக்கப்போகிறது என்பதில் பதட்டம் நிலவியது.குண்டுமணி வெற்றி நிச்சயம் என்பது போல அனாயசமாய் இருக்க மொத்த பார்வையாளர்களும் மூன்று பானை மூடிகளையும் விழி மூடாமல் பார்த்த படி இருக்க

59...60....00


குண்டுமணியின் பானை மூடி மெதுவாய் தூக்கியது.வெளியே பொ....ங்...கி......வருவதற்கிடையில் தம்பாவின் அடுப்பு பொங்கிய பாலால் அணைந்து உஷ்..ஷ் ...என்று புகை வந்தது. தம்பாவும் கிச்சாவும் வெற்றிப்பெருமிதமாய் ஒரு ஹை பைவ் போட்டுக்கொண்டார்கள். சீனாவெடி இரண்டு கொழுத்தி எறிந்தார்கள்...இரண்டவதாய் விசித்திராவினுடையதும் மூன்றாவதாய் குண்டுமணியின் அடுப்பும் சத்தம் போட்டுக்கொண்டது.

குண்டுமணி அலட்டிக்கொள்ளவில்லை, தோல்வியின் விரக்தியில் சிரிப்பதாய் பட்டது.

மூன்று பானைப்பொங்கல்களும் தனித்தனி இலைகளில் போட்டு, கரும்பு,பழம் சகிதமாய் படையலிட்டு, முதலில் கலைத்த காக்காய்களையே திருப்பி கூப்பிட்டு கொஞ்சம் எல்லாவற்றிலும் கிள்ளி வைத்து,  தண்ணி தெளித்து கைதட்டி நன்றிக்கடன் நிறைவேற்றப்பட்டது.

அவரவர்கள் தங்கள் தங்கள் பானை பொங்கல்களை இலைக்குள் ஏந்திக்கொண்டு மரத்துக்கு கீழ் இருந்து சாப்பிடத்தொடங்கிய போது.தம்பா,ராகீ,குண்டுமணியின் வாய்களுக்குள் ஏதோ கடிபட்டது.கஜுவா?? இருக்காது.. போடவில்லையே!? என்ற சந்தேகத்துடன்....

மூவரும்  கையில் எடுத்து பார்த்த போது மூன்றும் வெவ்வேறு பொருட்கள், முறையே
01.புழுக்கொடியலின் அடிக்கட்டை     02.ஐம்பொன் மோதிரம்     03.கரையாத சர்க்கரை கட்டி.


##########
















#அற்பபிறவி#