About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Saturday, September 5, 2015

கண்ணீர் வந்த கதை

கண்ணீர் மிக விசித்திரமான ஒரு விசயம்.
அழுதாலும் கண்ணீர் வரும்
சிரித்தாலும் கண்ணீர் வரும்
கண்ணீரைப்பார்த்தாலே கண்ணீர் வரும்
இதுதான் விசித்திரம்.

01.முதல் கண்ணீர் வந்த கதை.
பேன், பேன் உடம்பு முழுக்க பேன்.
கால்,கை,தலை எல்லா இடமும் ஊருவது போல இருந்தது.நான் நினைக்கிறேன் இது வந்துராவிலிருந்து வந்திருக்க வேண்டும்.அவளோடுதான் நான்கைந்து நாளாய் எல்லா இடமும் சேர்ந்து திரிந்தேன்.ஏன் என்றால் எனக்கு நடக்க தெரியாது,இப்போதுதான் கொப்பைப்பிடித்து தவழப்பழகுகின்றேன்.இனித்தான் நடந்து,பாய்ந்து,வாழப்பழகப்போகின்றேன்.அப்போ வந்துரா யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை என் அம்மா.இப்போது தலையில்,முதுகில் என்று என்னில் கிடக்கும் பேன் எல்லாத்தையும் கட,கட என்று எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் என் அம்மா.
கையில் ஒரு பெரிய பேன் தெறித்து விழ வாயில் எடுத்து போட்டேன்.ச்சீக் பேன் அவ்வளவு நல்லாயில்லையே.இதை எப்பிடி,தின்பது.திரும்பி பார்த்து சிரித்தேன்.அப்பிடியே பாய்ந்து மார்பிலே முகத்தைப்பதித்து முதுகைக்கட்டிக்கொள்ள அம்மா அடுத்த கொப்புக்கு லாவகமாய் பாய்ந்து மற்ற கொப்புக்கு பாயும் போது இது வரை அப்படி நிகழ்ந்ததில்லை,கீழ் நோக்கி,கீழ் நோக்கி போய்க்கொண்டிருந்தேன்.ஒருகையால் என்னை இறுக்கிப்பிடித்தபடி நிலத்தில் முதலில்  அம்மாவும்  அடுத்ததாய் அம்மாவுக்கு மேல் நானும் விழுந்தேன்.என்ன நடந்தது என்று தெரியாது,நிறைய நேரமாகியும் அம்மா திரும்ப எழும்பவயேவில்லை.வேறு யாரோ வந்து என்னை தூக்கிக்கொண்டு போகும் போது இரண்டு கண்ணகளினதும் கீழ் பகுதிகளிலிருந்தும் ஈரமாய் ஏதோ தண்ணீராய் கசிந்தது.என்ன இது?...

எங்கே,எந்தப்புள்ளியில் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதன் வந்ததாய் சொல்லப்படுகிறதோ அந்தப்புள்ளியில் - ஈரமாய் அதன் கண்களில் என்னவென்று தெரியாமல் வந்த ஈரம்தான் முதல் கண்ணீர் வந்தகதை.




02.கொழ,கொழக் கண்ணீர் கதை
எல்லாப்பரிணாமும் அடைந்து கிறிஸ்துவிற்கு பிறகு பிறந்த போது நடந்த கதை.இது.
கதவை சாத்திவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வேலைக்கு போகின்ற அப்பாவை பார்த்து அம்மா,அம்மா என்று கொழ,கொழ கண்ணீரோடு விழுந்து குழறி அழுதிருக்கிறேன்.அதே அப்பா நாலு வயசாவதிற்கிடையிலேயே நேர்சர்ரியில் கொண்டு போய் விட்ட போது அங்கே போக மாட்டேன் என்று கண்ணை மூடிக்கொண்டு கண்ணீரை ஊத்தியிருக்கிறேன்.அண்ணரோட அடிக்கடி சண்டை பிடிச்சு அண்ணர் மெல்லமா தட்டினதுக்கே நிலத்தில விழுந்து கிடந்து அழுதிருக்கிறன்.(அப்பதான் அதைப்பார்த்தாவது அண்ணருக்கு, அடி விழும் என்டு தெரியும்)

அப்படி எல்லாம் அழுத நான் ஒரு முக்கியமான இடத்தில் எல்லாரும் அழுத போது அழாமலே விட்டு விட்டேன்.பரிணாம வளர்ச்சி அடைந்த பின் நான் நினைக்கின்றேன் சில தானக சுரக்க வேண்டிய இடங்களில் கண்ணீர் சுரப்பது நின்று விட்டது என்று.

03.கண்ணீரை அடக்கிய கதைகள்.
நிறைய இடங்களில் கண்ணீரை கஸ்டப்பட்டு கண்ணுக்குள்ளயே தேக்கியிருக்கிறேன்.
முக்கியமாய் நிஐத்திலே நடக்காத கற்பனையிலேயே பின்னப்பட்ட கதைகளை வாசித்து விட்டும் படங்களை பார்த்து விட்டும்.

படங்கள் என்று பார்த்தால் அலேர்ட்டாக இருக்க வேண்டியது முக்கியமாய் இரண்டு பேரிடம்.ஒன்று உலக நாயகன்,இரண்டாவது பிரபு சாலமனின் கடைசியாய் வந்த சில படங்கள்.
இரண்டு பேருமே மெய் மறந்து இருக்கு பட்சத்தில் வாயில் உப்புக்கரிக்க வைக்ககூடியவர்கள்.
பேய் படங்களை மியூட் பண்ணி பார்பது போல இவர்களின் படங்களை தனிய இருந்துதான் பார்க்க வேண்டும்.
பதினாறு வயதினிலே தொடங்கி உத்தமவில்லன் வரை கமல் இதை ஒரு ஆயுதமாய் பயன்படுத்துவதில் ஏன் என்பது இன்னுமொரு பத்து வருடங்கள் போன பின் விளங்கலாம்.
அன்பே சிவம்.கண் தெரியாதவன்,காது கேட்காதவன் கூட அழுவான்.

ஒவ்வொரு துளியும்,
ஒவ்வொரு துளியும்,
உயிரில் வேர்கள்,
குளிர்கிறதே,

எல்லாம் துளியும்,
குளிரும்போது,
இரு துளி மட்டும்,
சுடுகிறதே,

நந்தகுமாரா,
நந்தகுமாரா,
மழை நீர் சுடாது,
தெரியாதா?

கன்னம் வழிகிற,
கண்ணீர் துளிதான்,
வென்னீர் துளி என,
அறிவாயா?

சுட்ட மழையும்,
சுடாத மழையும்,
ஒன்றாய் கண்டவன்,
நீதானே,

கண்ணீர் மழையில்,
தண்ணீர் மழையில்,
குளிக்க வைத்தவன்,
நீதானே…

வைரமுத்துவினதும் கமலினதும் கோ வேர்க்தான் மேல இருக்கின்ற கண்ணீர் கவி..

இதை தவிரவும் அழ வைப்பதெற்கென்றே எய்ம் பண்ணி எடுத்த படங்கள் நிறைய இருக்கிறது.எல்லாம் இங்கே எழுத முடியாதே.

கதைகளில் கண்ணீர் வர வைத்தவர்கள் நிறையப்பேர்.
நரேந்திர பல்லவன் சிவகாமியை விட்டு விட்டு போகும் போதும் அருள் மொழி வர்மன் பூங்குழலியை விட்டுப் போகும் போதும் கண்ணோரங்களில் பனி படர்ந்தது போலிருந்தது.கோபத்தில் கல்கிக்கு நாக்கைப்புடுங்குகின்றது போல நாலு கேள்வி கேட்டு ஒரு லெட்டர் போடலாமா என்று யோசித்தேன்.அட்ரஸ் கிடைக்கவில்லை.

இதே போல போட்டுத்தாக்கிய இன்னுமொரு இடம்
ஜீனோ கடைசியாய் கவிதை சொல்லும் இடம்.

"அழகைப்பார்,அழுக்கைப்பார்
பழகிப்பார் படுத்துப்பார்
.......
......
வித்துப்பார் வாங்கிப்பார்
பத்துப்பேரைக் குத்திப்பார்
தேடிப்பார் தேடிப்பார்
திறமை இருந்தால்
செத்துப்பார்..."

ஒரு நாய்,அதுவும் ரோபோட் நாய் அதுக்காக அழ வைத்து விட்ட சுஜாதாவையும் என்னால் வஞ்சம் தீர்க்க முடியவில்லை.

04.கடைசியாய் கண்ணீர் வந்த கதை.
சில சம்பவங்கள்,காட்சிகளை பார்க்கும் போது கண்றாவிக்கண்ணீர் கிளிசரீன் பூசினது போல கொட்டும்.இதற்கெல்லாம் இவன் அழுகிறானே என்று நினைப்பார்கள்.நினைத்து விட்டு போங்கள் நான் அழுது விட்டு போகிறேன்.என்னால் அழவாவது முடிகிறதே,உன்னால் அது கூட முடியவில்லை.

ஒரு சனியன் ரோட்டில் நின்ற நாயை கல்லால் எறிந்து நாய் நொண்டிய போது அழுகை வந்தது.
மொட்டை வெயிலுக்குள் குழந்தையை தூக்கிகொண்டு சாம்பிராணி பெட்டி வித்தவளை பார்த்த போது அழுகை வந்தது.
கடைசியாய் கரையொதுங்கிய மூன்று வயது ஜலானை பார்த்த போது கண்ணைக்கசக்கி கொண்டேன்.

என்னடா? எதிரில் இருந்தவன் கேட்க

"கண்ணுக்குள்ள ஏதோ விழுந்துட்டுது
அதான் கண்ணீர் வருது"



            #######













#அற்பபிறவி#