About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Tuesday, December 22, 2015

திருவெம்பாவையும் திரு என் பாவையும்

பெருமாள் தேடிய ஆண்டாள்....

நான் கல்லை உடைத்து அதுக்குள்ளே கடவுளைக்காணும் அளவுக்கு ஒன்றும் தீவிர பக்தன் கிடையாது.இருந்தாலும் காலை ஒரு தரம், மாலை ஒரு தரம் வீட்டிலும் ,போகும் போதும்,வரும் போதும் ரோட்டோரத்தில் இருக்கும் குட்டி பிள்ளையாரையும்,யேசுவையும்,புத்தரையும் என்று ஒன்று விடமால் நெஞ்சிலே கை வைத்து வஞ்சகமில்லாமல் ஒரு தரம் இரண்டு நெடி கண் மூடி வழிபடும் ஒரு பக்தன் அவ்வளவுதான்.

சிவராத்திரி,நவராத்திரி,கந்தசஷ்டி என்று ஒன்று விடமால் எல்லாவற்றிற்கும் கோயிலுக்கு போய் விரதம் பிடித்து 365 நாளில் குறைந்தது 30 நாளாவது சாப்பிடாமல் இருக்கும் ஒரு சாதாரண பக்தன்.கடவுளுக்கு கூட என் கடமை கண்ணியம் கட்டுப்பாடு பிடித்திருக்கலாம்.இத்தனை வயதில் கிடைக்க வேண்டியதெல்லாம் இத்தனையாவது வயதிலேயே கிடைத்தது.கிடைத்தது என்பதற்காக நான் சும்மா விட்டு விடவில்லை வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டேன்,சால்வையால் போத்திக்கொண்டேன்,இருந்தாலும் காலை பனி ஊடுருவியது கைகளுக்குள்ளால்.எட்டி பார்த்தாலே எட்டடி தூரத்த்தில் கோயில் தெரியும்,ஐந்தடுக்கு கோபுரத்துடன் அழகிய சிவன் வீடு.மறந்து செருப்பைக் கொழுவி கேட்டுக்குள் செருகிவிட்டு புறப்பட்டேன்.கோயில் நிர்வாகம் என் தலையில் இல்லை கையில் துண்டைப் போட்டு இந்த தடவை காலையில் காசு சேர்த்து வா மணிமாறா என்று கட்டளையிட நான் என் அதிகாரத்துக்கு கீழிருந்த 5 வயதுக்கு மேற்பட்ட அத்தனை சிறுவர்களையும் நியாயம்,நீதி,தர்மம் பார்க்காமல் வேலைக்கமர்த்தினேன்.ஒருத்தனுக்கு வீபுதி தட்டு,ஒருத்தனுக்கு மணி,ஒருத்தனுக்கு சேமக்கலம்,ஒருத்தனுக்கு சங்கு என்றெல்லாம் கொடுத்து இப்போது அதை ஆரம்பிப்பதற்காக போய் கொண்டிருக்கிறேன்.

உற்சாகமாய் பத்து பேர் கொண்ட குழு பத்து நாள் திருவெம்பாவைக்கு புறப்பட்டது, 5.15 அளவில்,

          "கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
           ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்"

என்று பாடியபடி...
எல்லாமே வாண்டுகள்,பனிக்கே குளிர வைக்க கூடிய பனிக்குட்டிகள்.எல்லாரையும் மேய்க்கும் பொறுப்பு என் தலையில்.ஒருத்தன் காதுக்கு பக்கத்தில் வைத்து சங்கை ஊதுவான்,ஒருத்தன் மணியால் சேமக்கலத்தை அடிப்பான்,களா புளா கலவரமாய் இருக்கும் சிவன் கோயில் வீதி முழுக்க, எந்த கும்பகர்ணணும் இந்த சத்ததில் எழும்பி குந்தியிருப்பான்.அதுதான் மாஜிக், அடிக்கும் மணிச்சத்தத்தில் ஐந்து ரூபாய்க்கு குறையாமல் தட்டில் விழும்.தட்டுக்கு தம்பி பொறுப்பு,தம்பிக்கு நான் பொறுப்பு.எனக்கு யார் பொறுப்பு ?!!

           "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
            நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
            சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
            கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
            ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
            கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே                     நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்"

திருவெம்பாவையில் திருப்பாவை பாடலை பாடி ரசிக்கும் முதலும் கடைசியுமான மடைச்சி நானாய்தானிருப்பேன்.நான் பிறந்தது கூட திருவாதிரை அன்றாம்,அது மறக்ககூடாது என்று காதில் மூன்று தரம் திருக்குழலி,திருக்குழலி,திருக்குழலி என்று சொல்லிவிட்டார்கள்.இந்த பேர் வேண்டாம் என்று நான் அழ குழந்தைக்கு பசிக்கிறது பால் கொடு என்றுவிட்டார்கள்.கடைசியில்
அதுக்கு உடன்பட வேண்டியதாகி இப்போது குழலியை விட்டு விட்டு திரு என்கிறார்கள்,வேறு வழியில்லை கூப்பிடுவருக்கு அல்லது வனுக்கு எல்லாம் ஆமாம் போட வேண்டியதாகிவிட்டது செல்வி.திருக்குழலிக்கு.

திரு அல்லது குழலி எப்படியும் கூப்பிடலாம்.ஆனால் எனக்கு எப்படி கூப்பிட்டாலும் பிடிக்கவில்லை,இந்த பெயரே பிடிக்கவில்லை.
எனக்கு காலை எழுந்ததும் பாட்டு,மதியம் முழுவதும் பாட்டு,மாலையும் பாட்டு,சுருங்க சொன்னால் நான் இசையோடு வாழவில்லை,இசை என்னோடு வாழ்கிறது.

கிணற்றுக்கு ஒரு வீடில்லை அந்த வீதியில் ஒன்பது வீடு.காலையில் ஆறு அடிக்க முதல் ஒன்பது வீட்டிலுள்ள மகளிருக்கும் ஆறுக்கு பின் ஆடவருக்கும் சொந்தமான கிணறு அது.

குழலி குளிக்க போகவும் வரவும் துணையாய் இருவர் போவர்

அதில் தேனு வீட்டு கதவை முணு முணுத்தபடி மு(த)ட்டினாள்

           "முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
             அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
             தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்"

திறக்கவேயில்லை அவள்,நின்றென்ன இனி முழுப்பாட்டுமா பாடமுடியும்.மற்றவளும் அதே கதைதான்.பனியில் பாயை தோண்டி படுத்து விட்டார்கள் இருவரும். பாவம் தனியொருத்தியாய் தலையில் தண்ணி வார்த்தாள் படை இல்லாத தலைவி.
குளித்து முடித்து விட்டு தலைக்கு ஒரு துணியை சுத்தி நெஞ்சுக்கு மேல் இழுத்து பாவடையை கட்டி மேலே பெரிய துவாயை போத்திக்கொண்டு பனிக்கும் பயத்துக்கும் சேர்த்து நடுங்கி கொண்டு எட்டி எட்டி திருக்குழலி நடந்த நேரம் காலை 5.47.வீட்டு ஒழுங்கைக்குள் இறங்கியதும் பனியும் பயமும் பறந்து விட்டது போத்திய துவாயை தூக்கி விசுக்கிய படி,வாய் ஏதோ அசைய

             "செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
              எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
              கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி"

கேட்டை தள்ளவும்.....

இந்த ஒழுங்கைக்குள்ள இருக்கறது ஒரே ஒரு வீடுதாண்ணா.அதுவும் அந்த சங்கீத குடும்பம்.ஒரு ரூபா கூட கிடைக்காது.ஒரு பாட்டு வேணும்னா கிடைக்கும்.பேணிக்குள் பிடிச்சுட்டு வா என்று உண்டியலை தந்துவிட்டு  நாலு பேர் ஒருபக்கமாயும் நாலுபேர் மற்றபக்கமாயும் போய்விட ஏதோ இனம்புரியாத ஒன்று அங்கே போ என்று செலுத்த அந்த ஒழுங்கை வீட்டை அடைந்ததில் பலன் இருந்தது.தட்டில் சங்கீத வாத்தியார் இருபது ரூபாய் போட்டதுக்கு இரண்டு தரம் திருநீறைக் அள்ளிக் கொடுத்து விட்டு
திரும்பி
நடந்து
கேட்டை இழுக்கவும்......

அவனுக்கு 'திக்' கென்றது
அவளுக்கு 'விக்' கென்றது

தலையில் கட்டிய துணியிலிருந்து தவறி சுருண்டு விழுந்த இரண்டு முடி கூட ஒருமுறை நடுங்கியது,அவளுடன்
சட்டென்று சமாளித்து துவாயால் சுத்தி போத்திக்கொண்டாள்.. சரியா?
தன் சால்வையை தூக்கி இவன் மூடிக்கொண்டது.. பிழையா?
இல்லை இதை இப்படி எழுதியது.. முறையா?

அக்கா வீபுதி என்றான் பக்கத்தில் நின்றவன்.
வலக்கை கீழ் இடக்கை வைத்து நீட்டி வாங்கி நெற்றியில் சின்னதாய் இழுத்து சிறிதாய் சிரித்து பெரிதாய் மின்னிவிட்டு போனாற் போலிருந்தது அவனுக்கு."யாருடா இவள்?".
"திரு டீச்சர் அண்ணா.சேரோட பொண்ணு"

வீட்டுக்குள் வந்து ஒருதடவை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.தோளைச் சுத்திய துவாயை தூக்கியெறிந்து விட்டு பார்க்க கண்ணாடி வெட்கத்தை பிடுங்கி தின்றது.

அந்த முழு முகமும் நாள் முழுதும் கண்ணுக்குள் வந்து நின்று கொண்டிருந்தது.திருவை பற்றி தெரிந்தவர்களிடம் துருவினேன்.இருந்தும் முழுப்பெயர் கூட கிடைக்கவில்லை எனக்கு.
திருவெம்பாவைக்கு தினமும் காலை திரு வீட்டிலிருந்துதான் சிவனுக்கு பிட்டவித்துக்கொடுத்தார்கள்.
சிவனுக்கு பதிலாய் நான் மண் சுமக்கவில்லை மாமூட்டை சுமந்து சென்றேன்,அங்கே.

கோதை எப்படி ஆண்டாளானால் என்று பாட்டியிடம்,ஐந்து வயதிலேயே ஆண்டாள் கதை கேட்டு வளர்ந்தவள் நான்.ஆண்டாளை பிடித்ததிலும் பார்க்க அவள் காதல் அதிகம் பிடித்திருந்தது எனக்கு.சிவனுக்கு கொடுத்த பிட்டில் நான் கூட கொஞ்சம் தின்று பார்த்துதான் கொடுத்தேன்.ஆனால் சிவனைக் காதலிக்கவில்லை என் அவனை காதலிப்பதாய் பட்டது. கடந்த இரண்டு,மூன்று,நான்கு,நாட்களாய்,
அதை விட அதிகமாய் ஆண்டாளின் பாடல்கள் அடித்து விட்டிருந்தது என்னை.

            "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
              நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
              பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்
              தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான்"

என்று புலம்பிக்கொண்டிருக்க காரணம் காலையில் தவறாமல் காசு வாங்க வருகின்ற அந்த அவன்.
நெற்றியில் மூன்று குறி,பாதி மறைத்த சால்வைக்குள்ளால் தெரியும் மார்பிலும் வீபுதி.பரம பக்தனாயிருக்கின்றானே.
நிச்சயமாய் எனக்கு தெரிந்தது.சில்லறைத்தனமாய் சில்லறை வாங்க வரவில்லை.பெயர் கூட தெரியாதவன்  மார்கழி நோன்பிருந்து மேற்கொண்ட தவத்துக்கு  வரம் தருவானா கேட்க தயக்கமாயிருந்தது.

சுண்ணாம்பு கேக்க போயி சொக்கத்தங்கம் வாங்கி வந்த கதையில்லையே இது.நேற்று  வீபூதி கொடுக்கும் போது கையில் விரல் பட்ட போது இழுக்கவில்லையே ஏன் காதலா?ச்சீ மடத்தனமான கேள்வி.அத்தனையையும் கொடுத்த கடவுள் இத் துணையை கொடுக்காமல் விட்டு விடுவானோ.சந்தேகம் வந்தது.அவள் பிடித்த வரலக்ஷ்மி விரதம் எனக்காக இல்லையா கடவுளே?
நல்ல புருஷன் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் பிடிக்க மட்டும் எத்தனை விரதங்கள் இருக்குறது.நல்ல மனைவி வேண்டும் என ஏன் எங்களுக்கு அப்படி ஒரு விரதம் கூட இல்லை, இது என்ன நியாயம் கடவுளே? இருந்திருந்தால் பிடித்து தொலைத்திருப்பேனே!

எட்டாவது
ஒன்பதாவது
பத்தாவது நாள் திருவாதிரை
கோலாகலம்....

கோவிலுக்கு
நான் வந்தேனா என்று அவளும்
நான் வந்தேனா என்று அவனும்

தேடிக்கொண்டோம்.

யார் போய் கதைப்பது என்பதில் பிரச்சினை.
முட்டியது,மோதியது.

"அக்கா,மாலை கட்ட தெரியுமா?உனக்கு"
"ம் "
பட்டு வேட்டியும்,பட்டையாய் திருநீறும்,பத்து வயசுப்பையன்
"அப்போ இதைக் கட்டிட்டு கொண்டு வந்து தரச் சொன்னார் அந்த அண்ணா.ஒரு பை நிறைய பூவும் நாரும்"
"யாருடா?"
"அதோ அதில நிக்கிறாரே அவர்தான்."
"அவன்தான்!"


எதிர் பார்த்ததை விட வடிவாய் கட்டிவிட்டு அள்ளிக் கொண்டு போய் அவன் முன் நீட்ட

"என்ன இது?"
"மாலை "
"நான் கேக்கல்லையே?"

"என்னம்மா இங்க கொண்டு வந்து கட்டிட்டியா?நான் வீடு முழுக்க தேடினன் பூவை,கொண்டா இங்க,"
"நீங்களாப்பா கேட்டிங்க,வாய் முணு முணுக்க,நெற்றிசுருக்கி திரும்ப"

அவன் கேட்டான்
அவனே கேட்டான்...

நில்லுங்க....
உங்க பேரு திரு...திரு... திருக்கோதைதானே?
நான் பெருமாள்...திருப்பெருமாள்.

கருவறையினுள் சிவலிங்கத்தை சுத்தியிருந்த பட்டுவேட்டி காற்றில் அசைந்து சிரித்தாற் போலிருந்தது.
 
                     ************








#அற்பபிறவி#

Tuesday, November 17, 2015

ஒரு ஜூரன் போரும் சில அக்கப்போருங்களும்

காலங்காத்தால குண்டுமணி வீட்டடியால் சூரனைக் கொண்டு போகும் போதே வேணுமென்று எக்ஸ்ராவாய் இரண்டு சங்கெடுத்து பலமாய் ஊதிக்கொண்டு, மணியை போட்டு அடித்துக்கொண்டு, போனது ஒடியல் புட்டுத்தின்று கொண்டிருந்த குண்டுமணிக்கு ஓரளவு கேட்டாலும் புட்டின் மயக்கத்தில் அதை சாட்டை செய்யவில்லை."குளத்திலே போட்டாலும் குண்டுமணி கலங்கமாட்டான்" என்றொரு பழமொழியே உருவாகி இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
(குண்டுமணி யார்,அவன் ஏன் ஒடியல் புட்டு தின்கிறான் போன்ற கேள்விகளுக்கு நீங்கள் அவன் பழைய வரலாற்றை என் பழைய போஸ்டுக்களில் கிண்ட வேண்டும்.ஏனென்றால் குண்டுமணியை தெரியாமல் இதை வாசிப்பதில் பயனில்லை."ஐ நாளைக்கு" என்ற பதிவை வாசித்து விட்டு இங்கே வரவும் )

ஏன் இப்படி குண்டுமணி வீட்டால் சூரனை கொண்டு போகும் போது செய்தார்கள்.அவனுக்கும் சூரனுக்கும் அப்படி என்ன பகை என்பதெற்கெல்லாம்  ஒரு பெரிய கர்ணபரம்பரை பிளாஷ்பாக்கே இருக்கிறது.கொஞ்சம் இதில் ஓடட்டும்.

குண்டுமணியின் டீம் அதாவது உண்மையில் கிச்சாவின் டீம் எல்லாம் போவது அவர்களின் பூர்வீக கிரவுண்டுக்கு அருகில் இருக்கும் கந்தசுவாமி முருகன் கோயிலுக்கு.காலையில் சூரன் கொண்டு போனது தம்பாவின் டீம்,சூரன் பழனியாண்டவர் முருகன் கோவிலுடையது.இரண்டு கோவிலும் ஒரு ஐந்நூறு மீற்றருக்குள் இருந்தது அநியாயம்.இதில் இன்னும் அநியாயம் தம்பாவும் குண்டுமணியும் முன்பொரு காலத்தில் ஒரே டீமில்தான் இருந்தார்கள்.அதெல்லாம் பழைய கதை.

வருசாவருசம் சூரனுக்கும் முருகனுக்கும் போர் வருகின்றதோ இல்லையோ இந்த இரண்டு கோயில் டீம்  சூரன்களுக்கும் ஆறாவது நாள் ஒரு குருஷேத்திர யுத்தம் மூளும்.சூரன் பாவம், ஒரு கோயிலில் ஐந்தடிக்கு தூக்கியெறிந்து பிடித்தால் மற்றக்கோயிலில் பத்தடிக்கு சூரன் பறப்பார்.அவங்கள் ஒரு லீற்றர் மண்ணெண்ணையை வாய்க்கை விட்டுத்துப்பினா இவங்கள் லாஂப் காஸை வாய்க்குள் விட்டு துப்பலாமா என்று ஐடியா போடுவார்கள்.அங்க சேலன் மாங்காய் கொட்டினால் இங்கே கறுத்தக்கொழும்பானை கொட்டுவார்கள்.

சாகப்போகிற சூரனுக்கு டெக்குறேசன் சும்மா அள்ளும்.முதல் நாள் இரவே இருந்து வேலை பார்த்து, டிரைக்ரர்ல சூரனை ஏத்தி,எட்டு முழம் பட்டுக்கரை வேட்டி கட்டி எங்கட ஒலிவர் குயின்ர கையில கிடக்கிற அம்பு வில்லை சூரன்ர எரோவ்வோட ஒப்பிட்டா எம்மாத்திரம் அது.ச்சும்மா கலர் பல்பில தக தகப்பார் சூரன் அப்படியே.காலமையே அதைக்கொண்டு சுத்த வெளிக்கிட்டா, ஊருக்குள்ள சூரன் யுத்தப்பிரகடனம் செய்வர்.

சூரனுக்கும்,சூரனுக்கும் சண்டை எங்க முழங்கும் என்டா இரண்டு சூரன்ர டிரைக்டரும் ஏதாவது ஒரு தெருவில் எதிரும் புதிருமாய் சந்திக்கும் போது.அந்த இடத்தில ஒரு கோயிலின் சூரனை சார்ந்தவர்கள் மற்றக்கோயில் சூரன் வைத்து வதைக்க,போன வருசம்
ஆரோ ஒருத்தன் ஆவேசமாய் "உன்ர சூரன் என்ன பெட்டையோடா?சாரி கட்டி வைச்சிருக்கா" என்ற ஆவேசமான தம்பா "காட்டுறன் வா" என்டுட்டு குண்டுமணி இருந்த பெட்டிக்குள் பாய்ந்து அவனை தள்ளிவிழுத்தி விட்டு சூரனுக்கு கட்டியிருந்த வேட்டியை உருவிக்கொண்டு போய்விட்டான்.பாவம் குண்டுமணியும் சூரனும் அந்த இடத்திலே அவமானப்பட்டு கூனிக்குறுகி நின்றார்கள்.சூரன் என்னதான் ஒரு அரக்கனாய் இருந்தாலும் குண்டுமணி ஒரு மனுசன்தானே.

அதன் பிற்பாடுதான் இந்த சண்டை பெரிதானது.அடுத்த முறை சூரனுக்கு காற்சட்டையெல்லாம் போட்டுத்தான் வேட்டி கட்டினார்கள்.நடந்த விசயம் கோயில் பெரிய தலைகளின் காதுக்கு போனதால் இரண்டு இடத்திலும் சம்பந்தபட்டவர்கள் சூரனைக்கொண்டு  போக தடை விதிக்கப்பட்டது.

இருந்தாலும் சூரன்போர் அன்று இரண்டு டீமிலிருந்தும் ஒரு ஒருத்தர் எதிரெதிர் சூரனாட்டத்தை  பார்த்து புள்ளியெல்லாம் போடப்போவார்.அவர்களின் கணக்கெடுப்பில்தான் எந்தக் கோயில் சூரன்போர் சிறப்பாயிருந்தது அந்த வருசம் என்று தீர்மானிக்கப்படும்.இதற்கொன்றும் அங்கே யாரும் கப் கொடுக்கப்போவதில்லை,இருந்தாலும் இது இரண்டு சூரன்களுக்கிடையிலான மானப்பிரச்சினை.
இப்படியான இந்த பிளாஷ்பேக்கில் பாவப்பட்டு போனது இருவர்.ஒன்று அந்தக் கோயில் முருகன்,மற்றது இந்தக் கோயில் முருகன்.

இதோடு அந்தக்குட்டி பிளாஷ்பேக்குக்கு முற்றும் போட்டு நிகழ்கால புள்ளிக்கு வரலாம்.

ராகீ ஆயிரம்தான் தம்பாவின் டீமாய் இருந்தாலும் அவன் வேட்டி கட்டிக்கொண்டு பழனியாண்டவர் கோயிலடியால் எப்படியாவது கந்தசாமி கோயிலின் பின் புறத்துக்கு வந்து விடுவதில் ஒரு விசித்திரமுமே இல்லாத காரணம் அவன் விசித்திரா.

சூரன் போர் நடக்கும் போது சூரன் முருகனை பார்க்றாரோ இல்லையோ,முருகன் அந்தக்கூட்டத்துக்குள்ள வள்ளி நிக்கிறாளோ என்டு தேடுறாரோ இல்லையோ,ம்க்ம் ராகீ விசித்திராவைக்கண்டு பிடிச்சு சரியா அவளுக்கு நேர எதிர்த்திப்புறத்தில கையக்கட்டிக்கொண்டு நின்டு மனசார முருகனை வழிபடுவான்.முருகா நாளைக்கு உன்ர திருக்கல்யாணம் சிறப்பா நடக்கோனும்,அதுக்கு  உவள் சாரில வருவாள்.நீ மட்டும் அவளைப்பார்த்தா வள்ளியைக் கிள்ளி எறிஞ்சாலும் எறிவாய் அதில ஆச்சரியமில்லை.இப்டி ராகீன்ர லைன்ல நிறையப்பேரும் விசித்திராவின்ர லைன்ல நிறையப்பேரும் ஜூரன் ஆடுறதைப்பார்க்க அவையவளுக்கு வேண்டிய கோயிலுக்கு போவினம்.

சூரன் சும்மா சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்,இரண்டு கோவில்களிலும்.இரண்டு இடத்திலும் யட்ச் பண்ணப் போனவர்கள் நோட் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.தூக்கிப்போட்டது எத்தனை தடவை,ஒரு பக்கமாய் சரித்து ஆட்டியது,குத்தி எடுத்தது,எத்தனை தடவை என்றெல்லாம்.

தாரகாசூரன்,சிங்கமுகாசூரன் தலையை எல்லாம் முருகனுக்கு கீழே நின்ற ஐயர் வேலை நீட்ட சூரனுக்கு மேலே நின்றவன் கழட்டி எடுத்தான்.அடுத்ததாய் சூரனின் தலையை மாட்டிக் கொண்டுவர தலையில்லா முண்டத்தை தூக்கிக்கொண்டு வடக்கு வீதிக்கு ஓடினார்கள்,தம்பா அணியினர்.



சிக்கல் அங்கேதான் வந்தது.முருகன் கொடுத்த அடி பலமோ இல்லை இவர்கள் ஆட்டியது பலமோ தெரியாது,சூரனின் கால் ஆட்டம் கண்டது,அதுவும் அது பொருத்தியிருந்த பலகையோடு.
இப்படியே தூக்கி ஆட்டினால் இந்த வருசத்தோடு சூரன் நிசமாகவே சாக வேண்டியதுதான்.அடுத்த வருசத்துக்கு புதுச் சூரன் செய்ய வேண்டி வரும் என்றார்கள்.

தம்பா தலையில் கை வைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.போட்டி அது,இது எல்லாவற்றிற்கும் மேலால் சூரனாட்டவே முடியாது போயிற்றே என்று.நேரம் சுற்றிக்கொண்டிருந்தது.இருட்டிக்கொண்டிருந்தது.முருகன் கம சனம் சூரனை எதிர்பார்த்து பொறுமை இழந்து கொண்டிருக்க...

கொஞ்ச நேரம் போக...
வடக்கு வீதி தலைப்பில் சில தீவட்டிகள் தெரிந்தது.
தம்பாவும் எல்லாரும் எழும்பி நின்று பார்க்க ,வெளிச்சம் நெருங்கியது.வெளிச்சத்தில் சூரன் உயரமாய் தெரிந்தது,
சூரனுக்கு முன்னால் சேட்டும் இல்லாமல் மரண மாஸோடு குண்டுமணி தீவட்டி பிடித்துக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தான்.

"சூரன் உடைஞ்சிடுச்சாமே,தகவல் வந்துச்சு அதான்."

"அதுக்கென்ன இப்போ?"

"ஒண்ணுமில்லை விரும்பினா எங்கட சூரனை ஆட்டலாம் ஆனா ஒரு கண்டிஷன்"

"இவன்,இதோ நிக்கிறானே இவன்,எங்கட சூரனுக்கு முன்னால விழுந்து மன்னிப்பு கேக்கனும்"

குண்டுமணி கூக்குரலிட்டது எட்டுத்திக்கும் எதிரொலித்தது.

எல்லாரும் தம்பாவின் முடிவை அவன் மூஞ்சையில் தேட ...ஒரு நிமிசம் யோசித்தான்.

"ஓகே விழுறன் " என்றதும் தாமதம் குண்டுமணி ஓடிப்போய் சூரனோடு ஒட்டி நிமிர்ந்து நின்று கொண்டான்.
அன்று சூரனும், குண்டுமணியும் பட்ட அவமானம் கரைந்து போனது.போகும் போது கால் முறிந்த சூரனைப்பார்த்து குண்டுமணி ஒரு நமுட்டுச்சிரிப்பு சிரித்ததை யாரும் கவனிக்கவேயில்லை.புழுக்கொடியலின் நுனியை முறித்தெறிந்து விட்டு அடியைக் கடித்துக் கொண்டு குண்டுமணி புறப்பட்டான்

அந்த சூரன் போரில் அதிகமாய் ஆடி நிறைய புள்ளி பெற்றது என்னவோ தம்பாவின் டீம் ஆனால் ஆட்டியது குண்டுமணியின் சூரனை ஆகையால் போர் டை யில் முடிய ராகீ சால்வையை போர்த்திக்கொண்டு விசித்திராவுக்கு பாதுகாப்பாய் அவள் வீடுவரை போய்கொண்டிருந்தான்.

############







#அற்பபிறவி#

Monday, October 5, 2015

கல்லறையிலும் திருத்த முடியாத சில சில்லறைத்தவறுகள்.

வயித்தினுள் தவளை கத்தியது.ஐதான எச்.சி.எல். ஐதாக சுரந்து இரப்பை ரோட்டின் இடப்பக்க கடையில் லஞ்ச்  என்று மூளைக்கே அறிவுரை சொல்லியது.நாலு மணிக்குப்போய் கடையில் சோறென்றால் ஏன்டா இப்படி என்று நிமிர்ந்து பார்ப்பார்கள் வழியில்லை.

சோறு,!
வெச்சா?
முட்டை.

அண்ணைக்கு ஒரு பிளேட் சோறு முட்டையோட.

எல்லா மேசையும் நிரம்பி இடதுபக்க மூலையில் ஒரு கதிரையில் எதிரே இருந்தவனோடு முகம் பார்த்து சம்பிரதாயமாய் சிரித்து வைத்து சோத்தை எதிர்பார்த்து,கோலாவை உறிஞ்சிக்கொண்டிருந்தான்.
வேர்க் பண்றீங்களா?
யா.

அவனாகவே சிரித்தான்,அவனாகவே கதைத்தான்,பசி பிறாண்டியது.சோத்தைக்காணவில்லை இன்னும் அங்கலாய்த்து,
ஐயா! சோறு வரேல்ல இன்னும்,கேட்டும் இரண்டு, மூன்று நிமிடம் கடந்து மேசையில் சோறு வைத்து "தம்பி பசி பயங்கரம் போல" என்ற நிச்சயமாய் அறுபதை தாண்டிய அந்த ஆளின் முகத்தை பார்த்த போது பத்திக்கொண்டு வந்தது.
"மூடிட்டு உன் வேலையை பாத்துட்டு போய்யா !!!" என்றேன்.எதிரே இருந்தவன் பாதி கோலைவை உறிஞ்சி முடித்திருந்தான்.

 கதையை வளர்க்க விரும்பாமல்,சேறு போல குழைந்த சோற்றை கொஞ்சம் வயித்துக்குள்
அனுப்பிய பின்
"கிழத்துக்கு இந்த வயசில இப்படி ஒரு வேலை.அதில என்னோட கடுப்புக்கதை என்றேன்."எதிரில் இருந்தவனை பார்த்து.

"அவர் ஒரு ரிட்டையர்ட் வாத்தியார்"

"நிசமாவா,அப்புறம் ஏன் இங்க வந்து குப்பை கொட்டணும்.?"

"அவர் பள்ளிக்கூடத்திலையே அப்டித்தான்.கடுமையான உழைப்பாளி.இவரை பத்தி நிறைய கதைகள் இருக்கு."

"நீங்களும் அவர் ஸ்கூல்லயா படிச்சீங்க,உங்களுக்கு தெரியுமா என்ன?"

"ம்.ஏ.எல்ல எங்கட வகுப்புக்கு இவர்தான் ,பேரு ஞானசேகரன் ,தமிழ் பாடம்.அப்போ எங்களோட அபிவர்மன் என்டு ஒருத்தன் படிச்சான்.பார்த்தா சாண்டில்யன் கதைல வர்ற பேர் போல இருந்தாலும் ஆளும் சா. கதைல வர்ற ஹீரோ போலத்தான். நிச்சயமாய் நூறு வீதம் ஒரு காசநோவா கரக்டர்.எந்த பெரிய சிடுமூஞ்சு பெண்ணாய் இருந்தாலும் ஏதாவது ஒரு யட்சிணி வேலை பார்த்து மயக்கி,சிரிக்க வைத்து அதோடு முற்றும் போட்டு விடுவான்.

என் வாய்க்குள் சோறு போக அவன் வாயிலிருந்து அபிவர்மன் கதை விரிந்தது.

"ஹாய்!புதுசா?"
"என்ன?"

"சட்டை,சப்பாத்து,ரிப்பன்,நீங்க!"

"ஆமா,ரிப்பன் மட்டும் தங்கைச்சியோடது."

"ஓ,உங்க தங்கைச்சி பூமிலதான் இருக்றாளா,இல்லை ஒவ்வோரு பௌர்ணமிக்கும் தங்க ரத்தில பூமிக்கு வருவாளா?."

"வட் டூ யூ மீன்?"

"இல்லை,நீங்க மேனகை என்டா அவள் ரம்பையா இருக்கணும்."

"ஆர் யூ கிட்டிங் ஓர் பிளட்டரிங்?"

"நோ.ஐ எவர் சே தி ருத்,
மீ, அபி .... அபிவர்மன்,யூ ?"

"சப்தஸ்வரா, கோல் மீ சப்தா"

"சரிகம்பதநி,தட்டினா சங்கீதம் வருமா, அம்மா பேரு அனுராதா ஶஸ்ரீயா?"

"யூ,எகைன்!'
செல்லமாய் சீறிய போது கன்னத்தில் விழ வேண்டிய குழி கழுத்தில் விழுந்ததை கவனிக்காமலே,அவன்
ஓகே சி,யூ லேட்டர் சொல்லி போன போது சப்தாவுக்கும் மற்றவர்களை போல அதே ஸ்பார்க் யாரிவன் என்று நெற்றியில் அழகாய் ஒரு கோடு கீற வைத்தது.

இரண்டு,மூன்று,நாலு,ஐந்தாவது சந்திப்பில் பைத்தியமாகி,ஆறாவதில் நகத்தால் மேசையில் கீறியபடி போட்டில் இருந்த மரபுக்கவிதையை எழுதாமல் நோட்டில் புதுக்கவிதை எழுதினாள்,சப்தா,அவனை பக்கமாய் சாய்ந்து பார்த்துக்கொண்டே.வழமையான அழகான காதல்,

அவன் முன்னாலிருந்த,யாரிவள்,அவளோடு என்ன கதை.அடி வயிறு குறுகுறுக்க இன்டேர்வலுக்கு கேட்க வேண்டும்.

"ஹா....ய்"

"ம்"

"என்ன வரலக்ஷ்மி விரதமா?சோர்ந்து போய்"

"நீ எல்லோரடையும் இப்டிதானா?"

"புரியல்லையே"

"அவள் யாரு ஆ ரக்சியோட இழிச்சு இழிச்சு கதைச்சிட்டு இருந்தா அப்போ,"

"ஆமா,அதுக்கென்ன,ஹே,ஆர் யூ இன் ஜலஸ்,நீ என்ன என்னைய லவ் பண்றியா என்ன?"

தீர்க்கமான பார்வை பார்த்தாள்.
"யெஸ்,ஐ லவ் யூ"

"காமெடி பண்ணாத,சிரித்து விட்டு போனதை பார்த்துக்கொண்டிருந்தாள்"

அதோட சப்தஸ்வரா அந்த ஸ்கூல்ல இருந்தே போய்விட்டாள்,ஆனாலும்...

அவன் சோடா முற்றாய் காலியாகி என் பிளேட்டில் இரண்டு மிளகாய் எஞ்சி இருக்க அப்புறம் என்னாச்சு,இந்தக்கதைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்,என்றேன் அவன் வாயைப்பார்த்து,

"இருக்கு"

"அபிவர்மன்,யாரு இந்த பேரு வைச்சாங்க உனக்கு,நைஸ் நேம்."

அபி, வர்மத்துடன் ஞானசேகரனை பார்த்துக்கொண்டிருக்க,

"உனக்கு சப்தஸ்வராவை தெரியுமா?"
"தெரியும்"
"அவள் உன்னை லவ் பண்ணிணது"
"இல்லை சேர்,அது ஜஸ்ட் இன்பட்சுவேசன்"
"அட அது வழமையாய் நாங்கள் சொல்லும் வசனம்
இல்லை,அபி அவள் உண்மைலயே உன்னை லவ் பண்ணினா,
நீ மத்தவங்களைப்போல அவளோட பழகியிருக்கலாம்,இருந்தாலும் அவள் அப்டியில்லை."

"என் யதார்த்த வாழ்க்கையின் கனவுகளை குலைத்தவன் நீ"

"யார் வசனம் தெரியுமா,இது?"

"சுத்தமாய் தலையை இடம் வலமாய் திருப்பி உதட்டை சுழித்து"

"அவளின் தமிழ் கொப்பியில் நிறைய,நிறைய இருப்பது மையும் நீயும்தான்,பார்"

வாழ்க்கையில் நீ தெரியாமல் நிறைய சில்லறைகளை தவற விடலாம்.அதில் இருக்கின்ற ஒரு சிறிய சில்லறை நிறைய மாற்றத்தை நிச்சயமாய்,ஏற்படுத்தும்,ஒரு வகையான பட்டர்பிளை எபக்ட்.
படிப்பு என்ற ஒரு சின்ன விசயம்....

போதும் சேர்,நான் என்ன...,நீங்கள் வேணும்........ கொஞ்சம் கடுமையான வார்த்தை பிரயோகங்களோடு அபிவர்மன் புறப்பட்டது இல்லாமல் வெளியில் வந்து அவருக்கு விரோதமான ஒரு கதையை பரப்ப ஐம்பது வயதிலேயே அவமானத்தோடு அவர் ரிட்டயர்ட் ஆகி கொஞ்ச பென்சனில் நிறைய வாழ வேண்டி இருக்க, குடும்பசெலவுக்கு இங்கே வேலை செய்வதாய் கேள்விப்பட்டேன்.

"அப்போ, அபிவர்மன் நிலை என்னாச்சு"

அவனா.ஹ்ம்,அவன் விழுத்திய சில்லறைகளில் ஏதோ ஒன்று அவனை நிறையவே பாதித்து நிறையவே மாறி,இவரோடு கதைப்பதற்காக இங்கே அடிக்கடி வந்து நிறைய நேரம் செலவிட்டும் ஒரு தடவை கூட முகத்தைப்பார்த்து, நான்தான் அபிவர்மன் என்று சொல்லி, நேருக்கு நேர் கதைக்க திராணியில்லாமல் போய்விடுவான்.

"அவன் விழுத்திய சில்லறை எது தெரியுமா என்றான்?"

"ம்ஹ்ம்"

"ஞானசேகரன்"என்றான்

சரியென்று பட்டது அவன் புறப்படும் போது

மேசையில் என் பில் 120 என்று ஏப்பம் விட கூடவே எதிரில் ஏதோ சிவப்பாய் ஓ! இதை விட்டுட்டு போய்டாரே என்று திரும்பி தேடி பார்த்து காணமல், அதைப்பார்க்க....
திருமண அழைப்பிதழ்.

யாரோடது?

Abi weds shaptha

                       To: Gnanasekaran sir...

   
#######








#அற்ப பிறவி#

Saturday, September 5, 2015

கண்ணீர் வந்த கதை

கண்ணீர் மிக விசித்திரமான ஒரு விசயம்.
அழுதாலும் கண்ணீர் வரும்
சிரித்தாலும் கண்ணீர் வரும்
கண்ணீரைப்பார்த்தாலே கண்ணீர் வரும்
இதுதான் விசித்திரம்.

01.முதல் கண்ணீர் வந்த கதை.
பேன், பேன் உடம்பு முழுக்க பேன்.
கால்,கை,தலை எல்லா இடமும் ஊருவது போல இருந்தது.நான் நினைக்கிறேன் இது வந்துராவிலிருந்து வந்திருக்க வேண்டும்.அவளோடுதான் நான்கைந்து நாளாய் எல்லா இடமும் சேர்ந்து திரிந்தேன்.ஏன் என்றால் எனக்கு நடக்க தெரியாது,இப்போதுதான் கொப்பைப்பிடித்து தவழப்பழகுகின்றேன்.இனித்தான் நடந்து,பாய்ந்து,வாழப்பழகப்போகின்றேன்.அப்போ வந்துரா யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை என் அம்மா.இப்போது தலையில்,முதுகில் என்று என்னில் கிடக்கும் பேன் எல்லாத்தையும் கட,கட என்று எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் என் அம்மா.
கையில் ஒரு பெரிய பேன் தெறித்து விழ வாயில் எடுத்து போட்டேன்.ச்சீக் பேன் அவ்வளவு நல்லாயில்லையே.இதை எப்பிடி,தின்பது.திரும்பி பார்த்து சிரித்தேன்.அப்பிடியே பாய்ந்து மார்பிலே முகத்தைப்பதித்து முதுகைக்கட்டிக்கொள்ள அம்மா அடுத்த கொப்புக்கு லாவகமாய் பாய்ந்து மற்ற கொப்புக்கு பாயும் போது இது வரை அப்படி நிகழ்ந்ததில்லை,கீழ் நோக்கி,கீழ் நோக்கி போய்க்கொண்டிருந்தேன்.ஒருகையால் என்னை இறுக்கிப்பிடித்தபடி நிலத்தில் முதலில்  அம்மாவும்  அடுத்ததாய் அம்மாவுக்கு மேல் நானும் விழுந்தேன்.என்ன நடந்தது என்று தெரியாது,நிறைய நேரமாகியும் அம்மா திரும்ப எழும்பவயேவில்லை.வேறு யாரோ வந்து என்னை தூக்கிக்கொண்டு போகும் போது இரண்டு கண்ணகளினதும் கீழ் பகுதிகளிலிருந்தும் ஈரமாய் ஏதோ தண்ணீராய் கசிந்தது.என்ன இது?...

எங்கே,எந்தப்புள்ளியில் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதன் வந்ததாய் சொல்லப்படுகிறதோ அந்தப்புள்ளியில் - ஈரமாய் அதன் கண்களில் என்னவென்று தெரியாமல் வந்த ஈரம்தான் முதல் கண்ணீர் வந்தகதை.




02.கொழ,கொழக் கண்ணீர் கதை
எல்லாப்பரிணாமும் அடைந்து கிறிஸ்துவிற்கு பிறகு பிறந்த போது நடந்த கதை.இது.
கதவை சாத்திவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வேலைக்கு போகின்ற அப்பாவை பார்த்து அம்மா,அம்மா என்று கொழ,கொழ கண்ணீரோடு விழுந்து குழறி அழுதிருக்கிறேன்.அதே அப்பா நாலு வயசாவதிற்கிடையிலேயே நேர்சர்ரியில் கொண்டு போய் விட்ட போது அங்கே போக மாட்டேன் என்று கண்ணை மூடிக்கொண்டு கண்ணீரை ஊத்தியிருக்கிறேன்.அண்ணரோட அடிக்கடி சண்டை பிடிச்சு அண்ணர் மெல்லமா தட்டினதுக்கே நிலத்தில விழுந்து கிடந்து அழுதிருக்கிறன்.(அப்பதான் அதைப்பார்த்தாவது அண்ணருக்கு, அடி விழும் என்டு தெரியும்)

அப்படி எல்லாம் அழுத நான் ஒரு முக்கியமான இடத்தில் எல்லாரும் அழுத போது அழாமலே விட்டு விட்டேன்.பரிணாம வளர்ச்சி அடைந்த பின் நான் நினைக்கின்றேன் சில தானக சுரக்க வேண்டிய இடங்களில் கண்ணீர் சுரப்பது நின்று விட்டது என்று.

03.கண்ணீரை அடக்கிய கதைகள்.
நிறைய இடங்களில் கண்ணீரை கஸ்டப்பட்டு கண்ணுக்குள்ளயே தேக்கியிருக்கிறேன்.
முக்கியமாய் நிஐத்திலே நடக்காத கற்பனையிலேயே பின்னப்பட்ட கதைகளை வாசித்து விட்டும் படங்களை பார்த்து விட்டும்.

படங்கள் என்று பார்த்தால் அலேர்ட்டாக இருக்க வேண்டியது முக்கியமாய் இரண்டு பேரிடம்.ஒன்று உலக நாயகன்,இரண்டாவது பிரபு சாலமனின் கடைசியாய் வந்த சில படங்கள்.
இரண்டு பேருமே மெய் மறந்து இருக்கு பட்சத்தில் வாயில் உப்புக்கரிக்க வைக்ககூடியவர்கள்.
பேய் படங்களை மியூட் பண்ணி பார்பது போல இவர்களின் படங்களை தனிய இருந்துதான் பார்க்க வேண்டும்.
பதினாறு வயதினிலே தொடங்கி உத்தமவில்லன் வரை கமல் இதை ஒரு ஆயுதமாய் பயன்படுத்துவதில் ஏன் என்பது இன்னுமொரு பத்து வருடங்கள் போன பின் விளங்கலாம்.
அன்பே சிவம்.கண் தெரியாதவன்,காது கேட்காதவன் கூட அழுவான்.

ஒவ்வொரு துளியும்,
ஒவ்வொரு துளியும்,
உயிரில் வேர்கள்,
குளிர்கிறதே,

எல்லாம் துளியும்,
குளிரும்போது,
இரு துளி மட்டும்,
சுடுகிறதே,

நந்தகுமாரா,
நந்தகுமாரா,
மழை நீர் சுடாது,
தெரியாதா?

கன்னம் வழிகிற,
கண்ணீர் துளிதான்,
வென்னீர் துளி என,
அறிவாயா?

சுட்ட மழையும்,
சுடாத மழையும்,
ஒன்றாய் கண்டவன்,
நீதானே,

கண்ணீர் மழையில்,
தண்ணீர் மழையில்,
குளிக்க வைத்தவன்,
நீதானே…

வைரமுத்துவினதும் கமலினதும் கோ வேர்க்தான் மேல இருக்கின்ற கண்ணீர் கவி..

இதை தவிரவும் அழ வைப்பதெற்கென்றே எய்ம் பண்ணி எடுத்த படங்கள் நிறைய இருக்கிறது.எல்லாம் இங்கே எழுத முடியாதே.

கதைகளில் கண்ணீர் வர வைத்தவர்கள் நிறையப்பேர்.
நரேந்திர பல்லவன் சிவகாமியை விட்டு விட்டு போகும் போதும் அருள் மொழி வர்மன் பூங்குழலியை விட்டுப் போகும் போதும் கண்ணோரங்களில் பனி படர்ந்தது போலிருந்தது.கோபத்தில் கல்கிக்கு நாக்கைப்புடுங்குகின்றது போல நாலு கேள்வி கேட்டு ஒரு லெட்டர் போடலாமா என்று யோசித்தேன்.அட்ரஸ் கிடைக்கவில்லை.

இதே போல போட்டுத்தாக்கிய இன்னுமொரு இடம்
ஜீனோ கடைசியாய் கவிதை சொல்லும் இடம்.

"அழகைப்பார்,அழுக்கைப்பார்
பழகிப்பார் படுத்துப்பார்
.......
......
வித்துப்பார் வாங்கிப்பார்
பத்துப்பேரைக் குத்திப்பார்
தேடிப்பார் தேடிப்பார்
திறமை இருந்தால்
செத்துப்பார்..."

ஒரு நாய்,அதுவும் ரோபோட் நாய் அதுக்காக அழ வைத்து விட்ட சுஜாதாவையும் என்னால் வஞ்சம் தீர்க்க முடியவில்லை.

04.கடைசியாய் கண்ணீர் வந்த கதை.
சில சம்பவங்கள்,காட்சிகளை பார்க்கும் போது கண்றாவிக்கண்ணீர் கிளிசரீன் பூசினது போல கொட்டும்.இதற்கெல்லாம் இவன் அழுகிறானே என்று நினைப்பார்கள்.நினைத்து விட்டு போங்கள் நான் அழுது விட்டு போகிறேன்.என்னால் அழவாவது முடிகிறதே,உன்னால் அது கூட முடியவில்லை.

ஒரு சனியன் ரோட்டில் நின்ற நாயை கல்லால் எறிந்து நாய் நொண்டிய போது அழுகை வந்தது.
மொட்டை வெயிலுக்குள் குழந்தையை தூக்கிகொண்டு சாம்பிராணி பெட்டி வித்தவளை பார்த்த போது அழுகை வந்தது.
கடைசியாய் கரையொதுங்கிய மூன்று வயது ஜலானை பார்த்த போது கண்ணைக்கசக்கி கொண்டேன்.

என்னடா? எதிரில் இருந்தவன் கேட்க

"கண்ணுக்குள்ள ஏதோ விழுந்துட்டுது
அதான் கண்ணீர் வருது"



            #######













#அற்பபிறவி#







Tuesday, August 11, 2015

அது எனக்கு,இது உனக்கு

அண்ணரின் அலப்பறைகள்.
பாகம்-2

எங்கடா பாகம் 1 ன்னு கேட்டுட்டு வார்றவங்க முதலில் பேய் ச்சீ போய் கொப்பிக்காதல்களை வாசிக்கவும்.அதான் பாகம் ஒண்ணு.
அண்ணரோட அக்கப்போருங்களையும்,அலப்பறைங்களையும் இத்தூண்டு ஒரு பாகத்தில கொட்டமுடியுமா என்ன??.
அதால இதுவும் தொடரும்...

அடுத்தது,மீண்டும்,மீண்டும் வலியுறுத்துவது இங்கே அண்ணர்,அண்ணர் என்று குறிப்பிடுவது சொந்த அண்ணரை அல்ல.
இத வாசிக்கிற நீங்க ஒரு தம்பியரா இருந்த இதில இருக்கிற அண்ணர் உங்களுக்கும் அண்ணர்தான். அண்ணர் என்று ஒரு ஆள் இருந்தால் நிச்சயம் தம்பியரும் இருக்க வேண்டும்.இருக்கு.

அண்ணர் முழுங்கியெண்டா தம்பியர் மொடா முழுங்கி.
அண்ணர் வில் என்டா தம்பியர் அம்பு
அண்ணர் செம்பு என்டா தம்பியர் தண்ணி
இப்பிடி என்டா அப்புடி என்டு கொண்டு வந்து கடைசில.....
.....
.....
.....
.....
அண்ணர் பீப் என்டா தம்பியர் பீப்...பீப்

ஐஞ்சு வயசாயிருக்கும் அண்ணருக்கு.அவரு கோகிலா டீச்சரிட்ட நேர்சரிக்கு போய் கொண்டு இருந்த காலம். ஒரு நாள் திரும்பி வரேக்க அண்ணற்ற கழுத்தில புது டிரிங் போத்தல் தொங்கிச்சு.
அந்த மாதிரியான டிரிங் போத்தலை இப்ப காணக்கிடைக்கிறதில்ல பெருசா.சிவப்பு,கறுப்பு என்டு ஏதாவது ஒரு கலர்ல நீள வார்.லைட்டா சின்ன வயசில பால் குடிச்ச சூப்பி போத்தலையே மொடி பை பண்ணி உருவாக்கின போத்தல்.

அண்ணர் அதை வாங்கி மூண்டு நாளுக்கு கிட்ட
அ.நித்திரைல இருந்து
ஆ.ஆய் போறது வரை
வாரை கழுத்தில போட்டபடிதான் திரிஞ்சார்.

இதில தம்பியருக்கு இரண்டு விசயத்தில வயித்தெரிச்சல்.
முதலாவது போத்தலை வைச்சு அண்ணரு இப்படி பண்ணிண அலப்பறைகள்.

இரண்டாவது இரண்டு வருசம் கழிச்சு வந்த பெர்ர்ரிய பிரச்சினை.
தம்பியர் அதே கோகிலா ரீச்சரிட்ட அதே போத்தலை கொழுவிக்கொண்டு போகும்போது அனுச்சித்திரா-"இதே போல உங்க அண்ணாவும் ஒரு போத்தல் வைச்சிருந்தவரோடா?" என்டு கேட்டது

இது தம்பியருக்கு வீட்ல உலக மகா பிரச்சினையா உருவாச்சுது.
அண்ணர் பாவிச்ச சூப்பி போத்தல்ல இருந்த அ.வெ தவிர மீதி அத்தனையையும் ரீசைக்கிள் பண்ணி தம்பியரிட்ட தள்ளி விட்டது.
கேட்டால் பூமி இப்படித்தான் சுத்துது என்டு கையை உருட்டிக்காட்டினார்கள்.

மூண்டு சில்லு சைக்கிள் தம்பிருக்கு இரண்டு சில்லா வந்திச்சு.
பென்டென் வோற்சில வெளிக்கண்ணாடி இல்ல.
ஸ்பைடர்மேன் பொம்மைல நூலைக்காணேல்ல.கேட்டால் அது அமேசிங் ஸ்பைடர்மானாம் என்டு விளக்கம்.

இதெல்லாத்துக்கும் மேலால உச்ச பட்ச எரிச்சல் கிளப்பின விசயம் தம்பியருக்கு
நடந்துச்சு.
ஒரு நாள் அண்ணர்.
பன்னிரன்டு கலர் கிளேயை உருட்டி கலரே இல்லாத ஒரு கலரில் மாவு உருண்டை போல மொத்தமாய் திரட்டி வைத்து விட்டு உனக்கு கிளே வேணுமாடா விளையாட என்றது?

கிளேயை எடுத்து இப்பவாய் இருந்தால் அண்ணரின் மூஞ்சிலையே அப்பி விட்டிருப்பர் தம்பியார்.
அண்டைக்கு கொக்கோ கலரில் கேக் செய்தார் அதில்.

தம்பியருக்கு உலகம் எப்புடி சுத்துகின்றது என்டு பிடிபடத்தொடங்கின நாளில் இரண்டாம்பட்ச பாவனைக்கு எதிர்ப்பு கிளப்பி புது ரூல்ஸ் ஒண்டை அடிச்சு விட்டார்.
இனிமே வீட்ல யார் என்ன வாங்கி வந்தாலும் ஆர் அதை முதல்ல எடுக்கினமோ அவையளுக்குதான் அதோட முழு உரிமையும்.அவரு விரும்பினா மட்டும் மத்தவருக்கு கொடுக்கலாம்.சரிபாதி சமத்துவத்திற்கு சான்சே இல்லை.சர்வதிகாரம் மட்டுமே.
இன்று வரை அந்த விதி மாறவில்லை.

ஆனா இந்த ரூல்சால அண்ணர் நிறைய இழந்துட்டார்.
அப்பா வாங்கிட்டு வருவார் என்டு அண்ணர் கேட்டில நிண்டா தம்பியர் ஒழுங்கைலயே அப்பாவை மடக்கிடுவர்.அண்ணர் ஒழுங்கைல என்டா தம்பியர் அப்பாவோடதான் கடைல இருந்து வாறதாவே இருக்கும்.இதால அண்ணருக்கு நிறையச்சாமான் லொஸ்ட் அடிக்க தொடங்கிச்சு.

ஆனாலும் தம்பியரிட்ட இருந்த ஒரு வீக்நெஸை அண்ணர் கண்டுபிடிச்சுட்டார்.
தம்பியார் எதையுமே தடவிக்குடுத்து பாசமா கேட்டா கொடுத்துடுவாரு.அண்ணரிட்ட இருந்த ஒரே ஒரு பலம் இரண்டு கையும் ஒரு வாயும்.

அதால அண்ணர்தான் தொடர்ந்தும் பர்ஸ்ட் யூசராயும் தம்ப..யர் தொடர்ந்தும் செக்கணட யூசராயும இருக்கிறாஙக.இப்புடிததான இநத கொம்பியூட்டரோட கீ போட்ல இடைக்கிடை விசறி,குத்து அடிக்கற படடன எலலாம வேலை செயதாது.தருததனும பாரபபம.

தொடரும.....




அடுத்த பதிவு
அண்ணருக்கு ஆப்பு
பளிவாங்கல் புரோக்கிராம்:ஒரேஞ் கலர் ரிவென்ச்

Wednesday, July 8, 2015

கொப்பிக்காதல்கள்

இந்தப்பதிவு தோற்றுப்போன காதல்கதைகளைப் பற்றியோ இல்லை வென்ற காதல் கதைகளைப்பற்றியோ இல்லை.
இது கொப்பிக்காதல் கதைகளைப் பற்றியது.அது தோற்றிருக்கலாம்/வென்றிருக்கலாம்.
தோற்றிருந்தாலோ அல்லது வென்றிருந்தாலோ வெளியுலகிற்கு தெரிந்திருக்கும்
ஆனால் இந்த கொப்பிக்காதல் கதைகள் பெரும்பாலானவை கொப்பியின் சிவப்பு கோட்டோடு முடிந்து விட்டிருக்கும்.
ஆனால் இது அதிலும் கொஞ்சம் வித்தியாசமாய்.....

08/03/2002 - 9ம் ஆண்டில் அண்ணர்.
அண்ணர் (கவனிக்க! இங்கே அண்ணர் என்று குறிப்பிடுவது சொந்த அண்ணரை அல்ல) நிறைய நேரம் இருந்து,படுத்து,உக்காந்து,நடந்து படிக்கிற ஜாதி.அப்பப்ப படிச்சு களைக்கிற போது மைண்டை பூஸ்ட் பண்ணுவார் , எப்டினா புத்தகங்கள்,கொப்பிகள்ள எழுதின இடம் போக மிச்ச சொச்சமா கொஞ்ச இடம் வெள்ளையா இருக்குமில்லயா! அதில படம் கீறுவார்- பேனையாலையே - அப்புறமாய் அதில் ஏதும் எழுதுவாரு,பார்க்கமலே சொல்லலாம் அது கட்டாயம் பேனையைக்கடிச்சபடி பக்கவாட்டில பார்க்கிற ஒரு பொம்பிளை புள்ளையாத்தான் இருக்கும்.நிச்சயமாய் உதட்டோரத்தில் சின்ன மச்சம் இருக்கும்.

கீழ அண்ணரின்ர பேர் அதோட செருகினாற் போல அண்ணின்ர பேரும்.
இப்படி இரண்டு மூண்டு ஒற்றையள்ள எழுத்து சைஸ், பொன்ட் சைஸ் எல்லாம் மாறி இந்த 2 பேரும் இருக்கும்.

02/05/1996 - 3ம் ஆண்டில் அண்ணர்
படிச்சுக்கொண்டு இருந்த போது பக்கத்தில இருந்தவன் இவற்ற பேரையும்,அதே வகுப்பில படிச்ச வாசுமித்திராவின்ர பேரையும் சேர்த்து இவற்ற கொப்பில எழுதினதை பார்த்து கோபப்பட்டு,ஆத்திரப்பட்டு
"வா  சுமித்திரா ரீச்சரிட்ட சொல்லாம்"
என்டு போய் சொல்லி அவனுக்கு அமத்தலாய் அடி வாங்கி கொடுத்தவர்.

இப்போது அந்தக்கொப்பி பரணிலுள்ள செல்பில் மூன்றாவது தட்டில் நாலாவது வரிசையில் கிடந்து கொக்கரித்து சிரிப்பது அண்ணருக்கு தெரியாது.

05/07/2003 - 10ம் ஆண்டில் அண்ணரின் கிஸ்டரி பாடக்கொப்பியில
ஒல்லாந்தர் வருகையோடு கடைசிக்கு முதல் பக்கம் முடிந்து கடைசி பக்கம்
சில செய்கைவழிகள்,சில சமன்பாடுகளோடு இவற்ற பேர் Vs அவவின்ர பேர் போட்டு ஒவ்வொரு எழுத்தா வெட்டி இரண்டு மூண்டு தரம் FLAMES எழுதி அண்ணர் டிரை பண்ணி இருக்கார்.ஒரு தடவைத ப்ரண்ட் வந்து வெட்டியிருக்கார்.மற்றொரு தடவை எனமி வந்திருக்கு அதை வெட்டோ வெட்டென்று வெட்டியதில் மற்ற பக்கத்திலிருந்த ஒல்லாந்தர்கள் தெரிந்தது.
மூன்றாவது தடவை லவ்வர் வந்திருந்தது சரியாய் , எப்படி என்று பார்த்ததில் அண்ணர் தன் பேரில் இருந்த h ஐ உருவி விட்டு எழுத்துகளை வெட்டி இருக்கிறார்.

எல்லாவற்றையும் போட்டு நான் வெட்டிப்பார்க்க வேண்டும் போலிருந்தது ஆனால்

04/02/2004 - 11 ம் ஆண்டில் அண்ணரின் கணித பாடக்கொப்பியில் ஒரு மூலையில் இதயம் வெடித்தது போல சித்திரம் கதையை முடிவுக்கு கொண்டு வந்தது
என்ன நடந்தது தெரியாது.
இவர் தன் காதலை சொல்லியிருக்கலாம்
அவள் நிராகரிகரித்து இருக்கலாம்.
இல்லை அவள் வேறு யாரையாவது காதலித்திருக்கலாம்

கொப்பிக்காதல் ஆகையால் வெளியில் நடந்த எதுவும் தெரியாது.கொப்பியில் உள்ள விசயங்கள் மட்டும் தான் தெரியும்.

இதோடு கதை முடிந்தது என்று நினைத்தது மகா தப்பு.

07/07/2005 - ஏஎல்லில் அண்ணரின் ப்சிக்ஸ் கொப்பியில்
புதிய சித்திரமும் புதிய பேரும் ஆச்சர்யப்படுத்தியது.ஓ வெயிட்....வெயிட்  படம் மட்டும்தான் இருக்கு பேரில்லை அது டீச்சரோட சைன்.நான் மாறி பார்த்துட்டன். அப்ப பேர் எங்க என்டு தேடினதில் வேணியரின் இடுக்கிக்குள் செருகி எழுதி இருக்கிறார் அண்ணர்.கழண்டு விடாமல் இருக்கோணும் என்டதற்காயிருக்கலாம் யார் கண்டது.

அதே பேரும் அதையொத்தால் போல படமும் கொஞ்ச கொஞ்ச வித்தியாசங்களோடு பெரும்பாலான எல்லாக் கொப்பிகளிலும் தொடர்ந்து வந்த வருடங்களில் காணக்கூடியதாய் இருந்தது.

அதில் குறிப்பாய் 08/05/2006 ல் அண்ணரின் கொப்பியில் இருந்த இரண்டு பேரையும் சிவப்பு பேனையால் சுற்றி வட்டம் போட்டு வெட்டியிருந்தது.கொப்பி எங்கோ ரீச்சரிடமோ இல்லை சேரிடமோ மாட்டுப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் கடைசிக் கொப்பி வரை தேடியதில் எங்கேயுமே அந்த காதலுக்கு இங்கே எழுதக்கூடிய மாதிரியான எந்த முடிவும் சிக்கவில்லை.

தொடர்ந்து அண்ணர் பல்கலையில் படித்த போது இருந்த கொப்பி, புத்தகங்கள் என் பார்வைக்கு சிக்கவில்லை.அதிலும் ஏதாவது பேர் வந்திருக்கலாம்.

அவ்ளோதான்
கதையை முடிக்கலாமா? என்றால் இல்லை.இன்னும் நான்கு வரிகள் இருக்கிறது முடிய,

04/07/2015 - 27 வயதில் அண்ணர்....
இந்த திகதியில் அண்ணர் தன் பேரை கோர்த்து எழுதிய பெரிய கொப்பி ஒன்று என் கண்ணில் மீண்டும் பட்டது.ஆனால் இந்த தடவை அண்ணர் தன் பேரை மட்டும் எழுத அண்ணியே தன் கையால் அந்த திருமண பதிவுக் கொப்பியில்  அண்ணரின் பேருக்கு பக்கத்தில் தன் பேரை எழுதியிருந்தா

வா..சு...மி...த்..தி...ரா  என்று.


        ##########














#அற்பபிறவி#

Thursday, June 18, 2015

குப்பிவிளக்கு கொலைகள்

வெளிச்சம், அந்தப்பக்கம் யன்னல் அல்லது கதவு, தப்பி விடலாம் எப்படியும்.சுதந்திரம்,சுதந்திரம் விசிலடித்த படி மஞ்சளாய் ஒளி வந்த யன்னலை நோக்கி போய் அதனுள் குபீரென்று நுழைந்து ஆஆஆ... நிச்சயமாய் ஒரு பெரிய அலறல்.உடலெல்லாம் எரிகிறதே என்று பார்பதற்கிடையில் எரிந்து விழுந்து முடிந்து....... இரண்டாவது விட்டில் பூச்சி.ஒரு வேளை முதல் எரிந்ததின் மனைவியாய் இருக்கலாம்,உடன் கட்டை ஏறியிருக்கலாம்.மட பூச்சி பெண்ணடிமைத்தனம் ஒழிந்து ஆண்,பெண் சமத்துவம் கிடைத்த விசயம் தெரியாதோ என்னவோ.ஒளிப்பிழம்பு காத்தடித்த பக்கம் முப்பது டிகிரியில் சாய்ந்து மீண்டும் நிமிர்ந்து நின்றது.பிழைக்க தெரிந்தது.குப்பி விளக்கு எரிந்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருப்பதற்கு மட்டும் போய்விடும் பாதி படிக்கும் நேரத்தில்.



குப்பி விளக்கிலும்,தெருவிளக்கிலும் படித்த எல்லாரும் லிங்கனாகவோ,இல்லை கலாமாயோ ஆவதில்லை.வேண்டுமானால் அவ்வாறு ஆன பின் சொல்லிக்கொள்ளலாம்,"நான் குப்பிவிளக்கில்தான் படித்தேன் என்று".

ஆனால் இந்த குப்பிவிளக்கில் படிப்பதில் மட்டும் ஒரு அலாதியான இனிமை இருக்கிறது.விளக்கு புத்தகம் மட்டும் வெளிச்சமாய் மற்றது எல்லாம் இருட்டாய்....
சண்டையின் போது அனுபவித்த அனேக கஷ்டங்களுள் சில சந்தோசங்கள் இப்படியும் கிடைத்தது.

வால்கட்டைக்கு மேலே உள்ள திரி எரிந்து உருண்டையாய் ஒரு கரி, ஓரத்தில் அதுவும் சேர்ந்து எரிந்து கொண்டிருக்க ரினோட் பேனையின் பின் பக்கத்தால் தட்ட நிலத்தில் விழுந்தது.ஒரு பேனை குறைந்த பட்சம் ஒரு கிழமை தாக்குப்பிடிக்கும்.ஆனால் வாங்கி இரண்டு நாளிலேயே பின்பக்கம் சாதுவாய் உருகி காபனும் ஒட்டிக்கொள்கிறது.இந்த கரிவராமல் இருக்க ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் இல்லை அதை தட்ட ஒரு குச்சியை விளக்கோடு கட்டித்தூக்க வேண்டும்.

விளக்கை வலதுபக்கம் தள்ளி வைத்து விஞ்ஞானத்தை இடதுபக்கம் தள்ளி விட்டு நடுவில் தலகாணி போட்டுக்கொண்டு பிரபஞ்சகனவு காண தயாரகும் போது நேற்று நினைத்து இன்றைக்கு மறந்து நாளைக்கு எப்படியும் தட்டவேண்டும்.அது வரைக்கும் ரசிக்கலாம் கரி படிந்த கருப்பு நிற சிலந்திவலையை,மண்ணெண்ணைய் புகைக்கு இசைவாக்கமடைந்த எட்டுக்கால் குடும்பத்தை.குடியைக்கெடுப்பதா? பிழைத்துப்போகட்டும்.நாளைக்கும் இதை மறந்து போய் விடலாம்.

நாளைக்கு இன்னுமொரு விளக்குசெய்து கொடுக்க வேண்டும் அத்வைதாவுக்கு.அத்வைதா ஒரு சிறிய அறிமுகம்.வீடில்லாத லிஸ்டில் பேரைச்சேர்த்துக்கொண்டு நிறைய நாளாய் தறப்பாளுக்குள் அவிந்து இப்போது யாரோ சொந்த ஊரில் வீடு கட்டி போய் சேர்ந்த புண்ணியத்தில் இருந்த முப்பது வீடுகளில் மூன்றாவதாய் உள்ள வீட்டிற்கு குடி வந்து ஏழாம் நாள் அம்மாவோடும் ஒன்பதாவது நாள் என்னோடும் நட்பு கொண்டாடி நேற்று  விஸ்வரின் கடையில் எருமைமாட்டு விலையில் மெழுகுதிரி வாங்கும் போது

"வீட்டில் லாம்பு இல்லையா?"

"இருந்துச்சு,சிமினி உடைஞ்சு போயிட்டு."

"வீட்டலயும் இதே பிரச்சினைதான்.கொஞ்ச நாள் உடைஞ்சதை பொருத்தி பேப்பர் வைச்சும் பார்த்தன்.பேப்பர் இரண்டுநாள்ல கருகிட்டுது. இப்ப குப்பிவிளக்குத்தான்.
மெழுகுதிரி காத்தடிச்சா அணைஞ்சுடுமே.எப்படி சமாளிக்றாய்.மேசைவிளக்குள்ள வைச்சா?"

"டக்கெண்டு அணைஞ்சாத்தான் நல்லது"

"ஏன்?வீட்ல சல்பர் கொம்பனி வைச்சிருக்கிறியா,இல்லை கல்லை உரஞ்சினோன்ன நெருப்பு பத்துதா?"
ஒரு நெருப்பெட்டி பன்னன்டு ரூபா,விசுவர் பதினைஞ்சுக்கு விக்கிறார்.நீ எப்படி அணைய, அணைய.."

"அப்ப எனக்கொரு விளக்கு செய்து தார்றியா?"

என்று கேட்டதில்,சைக்கிள் கடையில் வால்கட்டை பொறுக்கி,பரசிற்றமோல் பாணி வந்த கண்ணாடிப்போத்தலைக்கழுவி அதன் மூடியில் வால்கட்டையை அடித்து திரி உருட்டி மண்ணெண்ணைய் விடவில்லை.பூட்டிக்கொண்டு போய் நீட்டினேன்.

"எவ்ளவு தரணும் இதுக்கு?"

"இதுக்கு தரணும்னா,உன்கிட்ட இருக்றது பத்தாதே?"

"இது பாவிக்றதுதில கொஞ்சம் டிரிக்ஸெல்லாம் இருக்கு.கேட்டுக்கோ"

முனைல அடிக்கடி உருண்டை,உருண்டையா கரி வரும்,அதை ரினோ ச்சீ ஏதாச்சும் ஒண்ணால தட்டி விடனும்.

"அப்புறம்,கொஞ்சம் உப்பு எடுத்து உள்ள போட்டுக்க"

"உப்பா!ஏன்?"

"பவரா எரியும்"
அதுமட்டுமில்ல எண்ணெய் முடிஞ்சு அடில கொஞ்சம் நிக்குதுன்னா.."

"தண்ணி விடறதா?"

"ஆமா,அதேதான்."

"கொழுத்திவைச்சுட்டு அதைப்பார்த்துட்டு இருந்தாலே நேரம் போறது தெரியாது.ஆனா கவனம் இதின்ட மூடி பெரிசா டைட்டில்ல.தலைமயிர் போயிடும் அப்புறம்."

"ஏய்,என்ன இது?"

"ஒண்ணுமில்லையே"

"உன் உள்க்கையைக்காட்டு,ஏன் இப்படி?"

"அந்த பார்வை ஒரு வெற்றுப்பார்வை இல்லை தீட்சண்யப்பார்வை பரியவில்லை???"

"இந்த தழும்புக்கு அப்பாக்கு அம்மா 500 ரூபா கொடுத்தாங்க,இதுக்கு 1000,இதுக்கு ம் 700 ,இது கடைசியா வந்ததது இன்னும் காயமல்ல. இப்படித்தான் என் வீட்ல சிம்னி உடையும்.அடுத்த நாள் காலைல புதுசா அப்பாவே வாங்கிட்டு வந்துடுவார்.கடைசியா அம்மா காசு கொடுக்கல்ல லாம்பை எடுத்து ஒளிச்சிட்டாங்க.அதில இருந்து மெழுகுதிரி.
மெழுகுதிரினா டக்கென்னு அணைஞ்சுடும் பெரிசா சுடாது."சிரித்தாள்.

போகும் போது , விளக்கு செய்து கொடுத்தது தப்பாய் பட்டது.

நிறைய விசயங்கள் புரிந்து புரியாமல்.

இதன் பின் இரண்டுநாள் போய் இரவு,
இந்த கதையின் கிளைமாக்ஸ் நடந்து கொண்டிருந்த போது,என் வீட்டில்
குப்பி விளக்கொளி காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்க
இரண்டு விட்டில்பூச்சிகள் மீண்டும்,வெளிச்சத்தை நோக்கி வேகமாய் வந்து
ஆனால் இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாய்
ஒன்று நெருப்புக்குள் விழ,மற்றது சமாளித்து விலகி பறக்க.......

எல்லா வெளிச்சமும் தப்பிச்செல்வதற்கு ஏதோ ஒரு வழியை காட்டுகிறது.

ம்ம்.


##########












#அற்பபிறவி#

Thursday, June 4, 2015

மிடில் விக்கெட்

நீண்ட நாட்களாகி விட்டது.
இந்த வருடத்திற்கான "நெருப்புக்கிண்ண" மட்ச் புளியடி ரீமோடு தொடங்குவதற்கு இன்னும் நான்கைந்து நாட்கள்தான் இருக்கும் வேளையில் புகை வடிவாய் ஒரு பூதம் வந்திருந்தது.
அதற்கு முதல் அது என்ன நெருப்புக்கிண்ணம்?

ஆஸ்ரேலியா இங்கிலண்ட்டின் சாம்பல்கிண்ணத்துக்கு போட்டியாய் அதைப்போலவே எங்கள் ரீமுக்கும் புளியடி ரீமுக்கும் தொடங்கிய தொடர்.இந்தக்கால கட்டத்தில் மட்டும் டாம் அண்ட் ஜெர்ரி சண்டைகளை மறந்து குண்டுமணியும், கிச்சாவும், தம்பாவும் தோளில் கை போட்டுக்கொண்டு புளியடி ரீமை எதிர் கொள்ள.மட்ச் நடக்கும் தொடர்ந்து மூன்று நாட்கள் மாலை 3 தொடக்கம் பட்ஸ்மனுக்கு பந்து தெரியும் வரை நடக்கும்.

எங்கள் கிரவுண்டில்தான் மட்ச்.மட்ச் நடக்கும் போது கிரவுண்ட் மூலைக்கு ஓடிப்போய் கண்ணைக்கசக்கி விட்டு பார்த்தீர்களானால் அதில் நிற்கிற விலாட்டு மாமரத்தின் கீழ்க்கொப்பில் சணல்கயிறு போட்டு பல இடங்களில் நெருப்பு பிடித்த அடையாளத்துடன் ஒரு பெரிய சம்பியன் கப் தொங்கும்.அதுதான் நெருப்புக்கிண்ணம்.நடந்தது இதுதான் - முதல் முதல் தடவை மட்ச் போட்டு நாங்கள் வென்ற போது கப்பை கடையில் வாங்கி அதை நெருப்பில் காட்டி எரித்து விட்டு தந்தது புளியடி ரீம். அடுத்த தடவை  தோற்ற போது அதே கப் நெருப்பில் வாட்டிக்கொடுக்கப்பட்டது.
இதுதான் நெருப்புக்கிண்ணம் வந்த சுருக்கமான வரலாறு.

இந்த தடவை யார் அதை நெருப்பில் காட்டுவது என்பதற்கு மேலால் வேறு ஒரு பிரச்சினை.நேற்று குழுக்கூடி நின்ற போது கிரவுண்டுக்கு பக்கத்தில் இருந்த கோயில் ஐயர் வந்திருந்தார்.ஐயர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருந்தார்-பட்டி பூணூல் தொடங்கி தொந்தி வரை.ஆள் கொஞ்சம் கறார் .அவ்வப்போது அவர் செய்யும் அமுதில் கை வைத்ததாய் இருக்கலாம். இல்லை .......வேண்டாம்.
அதனால் ஆள் நந்திக்கு பூசை முடிந்தவுடன் பலிபீடத்திலிருக்கும் புக்கையை காகத்துக்கு போட்டுவிட்டு அது வந்து தின்னும்வரை காவல் இருப்பார்-வைரவருக்கு பக்கத்தில்.

அவ்வப்போது வடை மோதகம் தருகின்றார் என்றால் அன்று போகும் போது கோயில் கழுவ வேண்டும் என்றர்த்தம்.
நேற்று வெறுங்கையோடு வந்தவர்...

"நாளை இண்டைக்கு கோயில் திருவிழா தொடங்குது.அது முடியும் வரை இதில விளையாடேலா!"

"ஏன்?"
விச்சுவாக்கு தோள்துடித்தது.

"நீங்கள் சாமி ஊர்வலம் வரேக்க பந்தை விசுக்கிவியள். அவரும் கூட வந்து விளையாடத்தொடங்கினா, ஆருக்கு அர்ச்சனை செய்றது. ஆருக்கு நைவேத்தியம் படைக்கிறது.அந்த சொத்தி தடிகளுக்கா, விக்கெட் வெட்கத்தில் சிவந்தது.!"
பெரிய ஹாஸ்யம் போல கொடுப்பு சூத்தை தெரிய சிரித்து எந்த நிராகரிப்புக்களையும் கேட்காமல் பின் தொந்தி அசைய நடந்த போது பூதம் தெரிந்தது.

வரட்டும் ஆள்,  கோயில் வேலையளுக்கு.அப்ப தெரியும் கூட ஆர் விளையாடுறது என்டு!?.

"இந்த முறை மாம்பழத்திருவிழாக்கு நீ பிள்ளையாராப் போகதையடா!!
உவர் எங்க இருந்து ஆளைப்புடிக்றார் பார்ப்பம்"

குண்டுமணி ராகீயை முறைத்தான்.(மாம்பழத்திருவிழா கதை வேறொரு பதிவில் வரும்)

இப்போது மீண்டும் கிரவுண்டுக்கு திண்டாட்டம்.

அதற்கு அடுத்த நாள் கிரவுண்ட் தேடிய முயற்சியில் கிடைத்தது கோயிலுக்கு மேற்கால் கொஞ்சம் தள்ளி நிறைய பற்றை ஓரிரு மரங்கள் என்று என்று ஒரு பெரிய இடம்.ஆனால் பிரச்சினை அதை துப்பரவாக்க குறைந்தது எல்லாரும் சேர்ந்தாலும் ஒரு கிழமை போய் விடும்.ஒரு நாள் மட்ச்சை பின்னுக்கு தள்ள கேட்டாலே புளியடிக்காரங்கள் பளீச்சா காட்டி பயம் என்டுவாங்கள்.தாங்க முடியாது.

வேறு ஏதாவதுதான் செய்ய வேண்டும் என்று மண்டையை குடைந்ததில் அடுத்தநாள் கோயில் அறிவித்தற்பலகையில் ஒரு மட்டை
தொ
ங்
கி

து.

*கோயில் திருவிழாவை முன்னிட்டும்
கோயில் சூழலை சுத்தமாக்கும் நோக்கில் - சிரமதானம்.
*ஜூன் 5 காலை 8.00 மணியளவில் அயலவர்கள் அனைவரும் கோயிலடியில் ஒன்று கூடவும் தேவையான கருவிகளுடன்"
*சிற்றுண்டி,குளிர்பான உதவிகளையும் வழங்குங்கள்.
   
"முருகன் சூழலை சுத்தம் செய்து முக்தியின்பம் பெற வாரீர்"
           
                                                                              -கோயில் நிர்வாகம்.

கூர்ந்து பார்த்தால் கோயில் நிர்வாகம்  என்று எழுதிய இடத்தில் வெடியனின் சிரித்த முகம் தெரியும்.

ஜூன் 5
எதிர்பார்த்தது போலவே முக்தி பெற நிறைய பேர் ஆசைப்பட்டு கத்தி,கோடலி மண்வெட்டிகளுடன் வந்திருந்தனர். அத்தனைபேரையும் சாய்த்துக்கொண்டு போய் முதலில் காட்டிய இடம்-நெருப்புக்கிண்ணம் நடைபெறப்போகின்ற இடம்.

முப்பதுபேரோடு எங்களில் பத்தும் சேர்ந்து பத்தைகளை வெட்டித்தள்ள விசித்திராவின் வீட்டிலிருந்து விசித்திராவே காரணமெதுவும் இல்லாமல் நெல்லிக்கிறஸ்ஸும் மஞ்சி பிஸ்கட்டும் கொண்டு வந்தாள்.

ராகீக்கு கவிதை வந்தது.
"நெல்லியடி நானுனக்கு
கிறஷ்ஸடி நீ எனக்கு
நொருக்கி விடாதே என் இதயத்தை மஞ்சிபிஸ்கட்டாய்"

ராகீ அதை ஓடிப்போய் வாங்கி.....ஏதோ....கதைத்து...ஏதோ சொல்லி விட்டு வந்து கொண்டிருந்தான். இரண்டாவது ரவுண்ட் வந்த போது, பக்கத்தில் நிற்க கதைத்தது இல்லை கவிதை சொன்னதும் காதில் விழுந்தது. 

"அன்பே கேவலம் நம் காதலையும்
ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்புக்குள் அடக்கி
பட்டர்பிளை எபக்ட் என்பதா?
முடியவே முடியாது....

ஆக்ராக்கு கொண்டுபோய் அங்கே
இன்னுமொரு தாஜ்மகால்
கட்டி அடக்கலாமா?

இல்லை எகிப்து பிரமிட்டுக்களுக்கு
இடையில் தோண்டி மம்மியொன்றோடு
புதைத்து விடலாமா?

கடைசியாய் கடவுளின் துகள்கள்
என்று கண்டுபிடித்தார்களே
அதற்குள் அமுக்கி விடலாமா?"

ராகீ சொல்லி முடிப்பதற்கிடையில் விசித்திரா போய் விட்டாள்.கடைசி ரவுண்ட் வந்த போது ஏதோ ஒற்றையில் எழுதிக்கொண்டுவந்து கொடுத்து விட்டு போனாள்.

ராகீ வெளியே கேட்க கூடிய வாறு படித்தான்.

"ஆருயிரே!
உன் இழவு காதலைக் கொண்டுபோய்
உன் வீட்டு இடியப்ப உரலிலே அடக்கி பிழி
தட்டிலே வரும் நெளி
அதிலே எனைப் பார்த்துக் கழி"

செமையா எழுதியிருக்காளில்ல

ம்ம்.பித்தம் தலைமயிருக்கு ஏறிவிட்டிருந்தது

மத்தியானத்திற்கிடையில் எல்லாப்பற்றையும் வெட்டி மண் தெரிந்தது.
காணியின் மத்திய பகுதியில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இஞ்சியளவு தடிப்புள்ள வேப்பமரம் நிற்க, கத்தியை தூக்கி கொண்டு குண்டுமணி போக, ராகீ அதை வெட்ட வேண்டாம் என்று இடையில் போய் நிற்க, போர் வருமா என்று அமெரிக்கா வட கொரியாவிடம் கேட்டது.

"இது இருந்த எப்படி விளையாடுறது" குண்டுமணி கோபத்தில் மரத்தை உலுப்பியதில் அதிலிருந்த குருவிக்குஞ்சு நிலத்தில் விழுந்து கீச்சு மாச்சு என்று பறக்க முடியாமல் கத்த தாய்க்குருவி மேலிருந்து கத்த
எல்லாரும் அந்த இடத்தில் கூட
ஒரு மாதிரியாகி விட்டது குண்டு மணிக்கு.

ஒரு நிமிட மரண அமைதி நிலவியது

"சொறிடா"
குண்டுமணி மன்னிப்புக்கேட்டது முதல் ஆச்சரியம்
"நானே இதை பத்திரமா மேலே ஏறி வைச்சு விடுறன்"
என்றது இரண்டாவது ஆச்சரியம்.
குண்டு மணி மேலே ஏறும் போது அவனை மரம் தாங்கினால் முதலிரண்டிலும் பெரிய ஆச்சரியம் மூன்றாவது.

"உனக்கு முதலே தெரியுமா"

ஒற்றையை காட்டினான்

மேலே இருந்த அந்தக்கருமக்கவிதையின் கீழ் ஒரு அருமையான கவிதை

"தயவு செய்து யாரையும் இந்த மரத்தை வெட்ட விடாதே. - எனக்காக "

"எனக்கும் இந்த குருவிக்கூடு இருக்கிறது தெரியாது.நான் இதுக்காகத்தான் இந்த மரத்தை வெட்ட வேண்டாம்னு சொல்றாள் என்டல்லோ யோச்சன். ராகீ முகத்தில் நெல்லிக்கிறஸ் வழிந்தது.

"எதுக்காக?"

ராகீ கைகாட்டிய திசையில்


சின்னதாய், மரத்தில் விசீ + ராகீ சுற்றி வர இதயம் எழுதப்பட்டு இல்லை, இல்லை செதுக்கப்பட்டு இருந்தது.
குருவிக்காக ஒரு காதல்.

சிரமதானம் இனிதே நிறைவேறியது.

                              ××××××××

இன்றோடு நெருப்புக்கிண்ண மட்சின் இரண்டாவது நாள் முடிவு.
நாளைக்கு முடிவு தெரியும் யார் கிண்ணத்தை எரிப்பது என்று.
ஆனால் ஒன்று இதுவரைக்கும் ஏன் இனிக் கூட யாரலுமே விழுத்த முடியாது
அந்த
             "மிடில் விக்கெட்டை"




           #################



















#அற்பபிறவி#

Friday, May 29, 2015

சுழலில் சிக்கிய சுடர்

இந்த கதைக்கு பின்னால இருக்கின்ற கதையை
இந்த கதைக்கு பின்னாலையே சொல்லுறன்.

So லெட்ஸ் கோ.......


ரீரீ ரீ ர்ர்ர்ர்ர்.....ரீரீரீரீ.நாப்பதாவது நிமிச பாடம் முடியும் போது
முப்பது செக்கன் கேக்கவே நராசமாய் இருக்கும் இந்த பெல் சவுண்ட் அடித்தது.இந்த ஸ்கூலில்
இதையெல்லாம் மாத்த வேணும் என்ற லிஸ்டில் ஒன்பதாவதாய் இருக்கின்றது இதுதான்.
மீதி எட்டும் தனிப்பட்ட முறையில் யாரும் அணுகி கேட்கலாம்.

நிச்சயமாய் இது ப்ரீ பாடம்.நேற்றே ப்சிக்ஸ் ரீச்சர் சொல்லும் போது மனசுக்குள்
சின்னதாய் ஒரு சிக்சரோடு 'கூ' அடித்திருந்தேன்.சிலர் உணர்ச்சி வசப்பட்டு பெரிதாய் யெஸ் சொல்லி வேண்டிக்கொண்டார்கள்.
அட்ஐஸ்ட்மன்டில் யாராச்சும் வருவதற்கிடையில் வகுப்பிலிருந்து வழு(க்)கினேன்.

போகும் போதும் சில ஜெயில்கார்ட்டுக்கள் தடுக்க

"லைப்ரரி" ஒரு வார்த்தை போதுமாயிருந்தது இதற்கு மட்டும்.தங்கு தடையின்றிய மிகுதி பயணம்.
அடுத்து என்னை பற்றி நானே சுப்பீரியர் கொம்பிளாக்ஸுடன் கொஞ்சம்.....

இந்த முடிய போகின்ற எட்டு வருட பாடசாலை வாழ்க்கையில் இந்த நூலகத்தில்
இருந்த நாட்கள் மட்டும் குறைந்த பட்சம் முழுதாய் 365 ஐ தாண்டும்.
பெல் அடிக்க முதல்
அடித்த பின்
அடிக்கும் போது
என்று இங்கே மட்டும் முக்காலத்திலும் வாசம் செய்திருக்கிறேன்.

நான் இருப்பதற்கென்று வாடிக்கையான ஒரு இடமுண்டு.இங்கே.
நுழைந்து லைப்ரரிக்கு பொறுப்பான ரீச்சரோடு நிறைய பழக்கத்தில் கொஞ்சம் கதைத்து
ஒரு புத்தகத்தை எடுத்து வழமை போல இருந்து
புத்தகத்தை திறக்க.....

                                ××××××××××

புத்தகத்தை மூடி வைத்தான்.
நிச்சயமாய் புரிந்தது மாதவ் என்கிற மாதவகிருஸ்ணணுக்கு வாஸ்கொடகாமா
கள்ளிக்கோட்டைக்கு வராமல் இருந்திருந்தால் இலங்கையில் இந்த ஐந்து முக்கிய போரும்
நடந்து இருக்காது.நானும் அது நடந்த ஆண்டு இடம் எல்லாம் தின்ன வேண்டியதாயிருந்திருக்காது.

அண்ணணைப்பார்த்தான்.
புத்தகத்துக்குள் தலையை வைத்திருந்தான்.அவன் நித்திரையாய் இருப்பது தெரியாமல் உலகம்
இந்த வருடம் அவன் எப்படியும் கொழும்புக்கு செலக்ட் ஆவான் என்கிறது.எப்படி புரியவில்லை.
அம்மா அடுப்பில் தொழிலாளி இல்லாத முதலாளியாய் நிற்க

காலை 6.00 மணி
எழும்பி  அஸ்ட லக்ஸமிக்கு கீழிருந்த 29ம் திகதியை கிழித்தான்.சாவதற்கு எத்தனை என்று தெரியாத இத்தனை நாட்களில் ஒரு நாள் குறைந்து விட்டது.
மே 30 சிரித்தது.

                           ××××××××××××

என் பள்ளி லைப்ரரிச்சூழல் அடிக்கடி பச்சோந்தி போல கலர் மாறும்.
இப்போது திடீரென்று சுனாமி அலைகள் உள்ளே வந்தது போலிருந்தது.அந்த அலைகளோடு ஆறேழு
நெத்தலியும் இரண்டு மூன்று சுறாக்களும் உள்ளே வந்து சேர
சிம்பிளாய் சொல்கிறேன் உயிரோடு ஒரு மீன் சந்தை.

கலைந்து விழுந்த கவனத்தை தேடி எடுத்து ஒட்டி மீண்டும் புத்தகத்தோடு
ஒன்ற.......

                          ××××××××××

ஒன்றிய மனத்தோடு வழிப்பிள்ளையாரைக்கும்பிட்டு அம்மாவாயும் சைக்கிளில் இருத்தி மிதிக்க தொடங்கும் போது
காலை மணி 7.00
அம்மாவைக்கொண்டு போய் யாழ்பாணம் பஸ் ஸ்டாண்டில் விட்டு விட்டு அப்படியே ஸ்கூலுக்கு போவதற்கு வழமையாய் பயன்படுத்தும் பாதையில் அவனுக்கு இன்னொரு அரண்மணையை பந்தமாக்கி விட்டு அமரராகும் போது அவன் தந்தை வயது 47 அவன் வயது 9.
யாழ்பாண நூலகம்.அவன் வாழ்க்கையில் நிறைய நேரத்தை எடுத்து பதிலாக நிறைய விடயங்களை அவனுக்கு தானம் செய்திருக்கிறது.

நூலக வாசலை கடக்கும் போது அதன் கேற்றை திறந்து கொண்டு தலையை ஒருபக்கம் சாய்த்து
அவனைப்பார்த்து சிரிக்கின்ற அவள் பெயர் ஸ்வர்ணலோஜி.இவனை விட இரண்டு நிமிசம் வயசில் குறைவு என்பதில் தொடங்கி இன்னும் இந்த மாத ஆனந்த விகடனை வாசிக்கவில்லையே என்பது வரை அவளுக்கு ஏகப்பட்ட மனத்தாங்கல்கள் உண்டு.

அவனும் இந்த அரண்மணையும் எப்படியோ அதைப்போலத்தான் அவனும் அவளும்

பழைய உவமையில் இப்போதைக்கு இருவரும் நகம் சக சதை.

"இரவு வோற்ச்சர் போஸ்ட் புதுசாய் கொடுத்தது உனக்குத்தானா?"வாய் வரை வந்தது.
அப்புறாமாய் கேட்கலாம்.
பின்னால் அம்மா என்பதால்.பதில் புன்னகையோடு முன்னால் கடந்தான்.

                        ××××××××××××

அலைகள் ஓய்வதில்லை.அமைதியாய் அடித்துக்கொண்டு இருந்தது லைப்ரரியினுள்.திடீரென்று பெரிதாய் அடிக்க காரணமாயிருந்தது.நான்கைந்து சகோதரிகளின் வரவு.(இப்படிக் கன்னியமாய் கூறவேண்டும் கதைகளில்)
"உஸ்.... உஸ்....
சைலண்ட்" என்று ரீச்சர் வயலண்டாய் சீற
கொஞ்சம் அடங்கினார்கள்.அந்த குழுவில்.

                       ××××××××××××

வரும் போது துரையப்பா ஸ்டேடியத்தில் பார்த்த அளவு பொலிஸ் பஸ் ஸ்டாண்டிலும் நின்றது.
பஸ் ஸ்டாண்டு முழுவதும் யாழ் மாவட்ட அபிவிருத்தி   தேர்தலுக்கான போஸ்டர்கள்.

"இரண்டு நாள் பாடசாலை லீவு என்பதை தவிர எந்த ஒரு ப்ரோயசனுமும் இல்லாத இந்த இதுக்கு இத்தன பேர் தேவையாம்மா?"

"எல்லா வேலையும் இவங்கதானே பார்க்கணும்"
வகுப்பில் இருந்து யோசித்த போது
அதில் இருந்த இரண்டாவது அர்த்தம் அவனுக்கு பிடிபட்ட நேரம்

காலை 9.00 .

                       ××××××××××××

இன்னும் பத்து நிமிடம்தான் இருக்கிறது.அதற்குள் இதை வாசித்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் நான் புத்தகத்துக்குள் மூழ்க......

                        ××××××××××××

பெல் அடித்தது.இரண்டு நிமிசத்தில் மீண்டும் பெல் அடித்து பாடசாலை விட்ட காரணம் புரியவில்லை.
போகும் போது அப்டியே லைப்ரரிக்குள் நுழைந்தேன்.முன்பு அவன் அப்பா இருந்த கதிரையில்: இப்போது இருந்தவர் அவனைப்பார்த்து வழமையான பரீட்சயத்தால் சிரித்தார்.
உதயனையும்,தினக்குரலையும் தட்டி முடிய வயிறு தட்டியதால் புறப்பட்டான்.

போகும் போது வளைவிலிருந்த அலங்காரக்கல் முட்டி கொஞ்சம் சதை பிய்ந்து ரத்தம் வந்த நேரம்

மதியம் 1.30.

நோ எதுவும் இல்லததால் காயத்தை அலட்சியம் செய்து வீடு போகும் போது தெருவில் மயான அமைதி என்பது இப்படித்தான் இருக்கும் என்பது அவனுக்கு புரிய கொஞ்ச நேரம் எடுத்தது.

வீட்டு வாசலில் அண்ணண்.
"ஏன்னா ஏதாவது புயல் வருதா என்ன?"

"எங்க நிண்டுட்டு வாறாய்"
"இரண்டு பொலிஸை சந்திலயே சுட்டாச்சு.
ஊரே அடங்கி போயிருக்கு"

"அதான் ஸ்கூலு வேளைக்கு விட்டிச்சா?
நான் வர்ற வழில லைப்ரரிக்கு போனேன்"

இரவு அதி துரிதமாய் படிப்பு + நித்திரை என்று ஓடியது.

மே 31.
காலை 6.00 மணி

அடித்து எழுப்பினான்.
"டேய் மாதவ் எழும்படா"

"கண்ணை அரைவாசி திறந்து
என்ன?"

"லைப்ரரியை இராவு எரிச்சுட்டாங்களாம்"
மண்டைக்குள் எங்கோ அடித்தது போலிருக்க

மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க
லைப்ரரியை நோக்கி அண்ணணோடு ஓடினான்.

நுழைந்தான்.
அவன் அரண்மணை கரிக்காடாய் கிடந்தது.
எரியாத பக்கங்கள் காற்றில் பறந்து.....கதறி அழ வேண்டும் போல கிடந்தது.
முடியவில்லை.
தலை சுற்ற தள்ளாடிய படி நடக்க அவன் காலில் பாதி கருகிய பலகை தணியாத தணலாய் தட்டியது.
"இங்கே புகைத்தல் தடை செ"
மீதி இல்லை அதில் ஏனோ.

இந்த தடவை ரத்தம் வரவில்லை.ஆனால் நிறைய வலித்தது அவனுக்கு.

                    ××××××××××××

சரியாய் பெல் அடித்தது.நான் வாசித்து முடிக்க .மூடி வைத்தேன்.
"யாழ் நூலக வரலாறு"

1981 மே 31 அன்று சிங்கள காடையர் குழு ஒன்று நூலகத்துக்கு தீ வைத்தது.காக்க வேண்டிய பொலீஸே கண்ணைக்குத்தியது.
அதற்கு காரணம் மதியம் சுடப்பட்ட இரண்டு போலிஸ்காரர்கள் என்று அவர்கள் காரணம் காட்டினாலும் இலங்கையின் தலையான யாழ்பாணத்தின் மூளையை குத்தி குதறுவது உள் நோக்கமாயிருந்தது.

விளைவு தெற்காசியாவின் தலை சிறந்த நூலகம்.அதனுள் இருந்த அரிய ஓலைச்சுவடிகள் அத்தனையும் கருகியது.

மீண்டும் பீனிக்ஸாய் இப்போது எழுந்தாலும் அதன் உடலில் ஒட்டிய சாம்பல் அப்படியேதான் உள்ளது.தட்ட முடியவில்லை அதை.
                   ××××××××××××

வகுப்பிற்கு போகும் போது கோபமும் சோகமும் பரஸ்பரம் பேசிக்கொண்டது.

ஒரு வகையில் இந்த கதைதான் நான் + நீ யின் maiden effort.
அதன்பின் இது ஸ்கூல் மகசினில் வந்தது. எழுத தட்டிக்கொடுத்த மீனலோஜினி டீச்சருக்கு சமர்பணங்கள்

இந்த மே 31 மீண்டும் இதை தூசு தட்டி,அப்டேட் பண்ணி இங்கே போட்டதுதான் கதை வந்த கதை.












#அற்பபிறவி#

Friday, May 22, 2015

நானொரு நாய்



காவல் என்ற சுயநலத்தில
நாய்க்கு பிஸ்கட்டும்
பிஸ்கட் என்ற சுயநலத்தில
நாய் காவலும் இருக்க....

இடையில் 'நன்றி' எங்கே என்று நிறைய
நாளாய் தேடினேன்

தேடிக்கண்டுகொண்டேன்.

எல்லா பிஸ்கட்டுக்களிலும்
செல்பிஷ்கிறீம் அப்பியிருக்கிறது.

எல்லா வால்களிலும்
கிறட்டிறியூட் ஒட்டியிருக்கிறது.

நடந்தது இதுதான்.
இது "முன்பொரு காலத்தில்
என்று" என்று தொடங்க வேண்டிய கதை.

ஆதாம்,ஏவாள் ஐ படைத்து விட்டு
கடவுள் மிஞ்சியிருந்த தசை துண்டுகளை
சேர்த்து ஆறறிவு, உயிர் கொடுக்க வந்தது நாய்.

"நீ நன்றியோடு இருப்பாய்?"

"யாருக்கு?"

"அது உன் விருப்பம்!"

"நாய் யோசித்து தலையாட்டியது."

நன்றியுள்ள நாயை படைத்த விசயம்
நன்றி கெட்ட சாத்தானுக்கு தெரியாது.

கிச்சிலி பழத்தில் சூனியம் வைத்து
தின்று பார் கிளு கிளுப்பாய் இருக்கும் என்று
ஏவாளிடம் நீட்ட

அந்தக்கிச்சலியை எச்சில் படுத்தி
ஆதாமோடு சேர்ந்து சாப்பிடும் போது
நாய் வந்தது இடையில்.

சாத்தான் பயந்தான் திட்டம பலிக்காதோ என்று...

நாய் கெஞ்சுவது போலிருக்க
எஞ்சியதைப்போட்டான் ஆதாம்.

நிலத்தில் கிடந்த அப்பிள்
நேரே நின்ற மனிதர்கள்
மறைந்து நின்ற சாத்தான்.
மூன்றையும் பார்த்த நாய்
பழத்தை தின்றது.

தின்று முடிய கடவுள் வர
தொடர்ந்தது,
வழக்கு நடந்தது.

ஆதாமையும் ஏவாளையும் விசாரித்து
தண்டனையாய் அவர்களுக்கு ஆயுள் வழங்கப்பட்டு
நன்றி பிடுங்கப்பட்டது.

நாயிடம் வந்த கடவுள்.விசாரித்தார்.
"ஏன்?"

"நீங்கள் படைத்த மனிதர்களே அதை தின்றார்கள்.
உங்களுக்கு நன்றியாயுள்ளவர்களுக்கு நான் நன்றியாய் இருந்தேனே
நன்றிதான் என் படைப்பின் முக்கியம்"

யோசித்த கடவுள் நாயிடம்
நன்றியை விட்டுவிட்டு
ஆறாவது அறிவை மட்டும் பிடுங்கி கொண்டு
போகும் போது சொன்னார் கோபத்தில்

"நீ ஒரு நாய்"
"நீயும் செத்து விடுவாய் ஒரு கட்டத்தில்"

நாய் எண்ணிச் சிரித்துக்கொண்டது.

"நானொரு நாய்"

        ######











#அற்பபிறவி#








Tuesday, May 19, 2015

இன்றைய தின வாழ்த்துக்கள்

நான் உன்னோட கோபம் இனி....

" கண்ணை கட்டி கோபம் , பாம்பு வந்து கடிக்கும், கண்ணாடி வந்து குத்தும் ......
செத்தாலும் பரவாயில்லை செத்த வீட்டுக்கும் வரமாட்டேன்....."

ஐந்து வயதில் இடக்கை ஆட்காட்டி விரலையும், வலக்கை ஆட்காட்டி விரலையும் கோத்து
அனு உட்பட நெறைய பேருக்கு எதிரா பாடின கவிதை அது.

இப்போது நான்  உன்னோட  டூ என்டு புளொக் பட்டனோடு கடந்து போய்விடுகிறது அந்த கவிதை.

கோபம் போடுறது ரெம்ப ஈசியான ஒன்று.
நேசம் போடுறது  தான் படா கஷ்டம்.
வலக்கை ஆட்காட்டி விரலுக்கு மேல நடு விரலை  வச்சு ரவுண்டாக்கி  ஆரோட டூ போட்டமோ அவருக்கு முன்னால கொண்டு போய் நீட்ட சிலர் உடனை இரண்டு விரலையும்  அமர்த்தி
நேசம் போட்டிடுவாங்கள்.
சிலருக்கு இதுதான் ஈகோ என்டு தெரியாத ஈகோ தடுக்கும்.
"இவரோடய நான் மாட்டன்"   என்டு அமத்தலா இருப்பினம்.
அடுத்த நாள் அவையளுக்கும் சேர்த்து தோசை கட்டிக் கொண்டு போனால்...சம்பல தொட்டு சாப்பிட்டுக்கொண்டே அமத்தி விடுவினம் விரலை.

ஆனாலும் சிலர் தோசைக்கும் மசிய மாட்டாங்கள். விரலைக்காட்டின உடனயே அதை அறுத்து விட்டிடுவாங்கள்.

கோபம்.
ஐந்து வயசு தொடக்கம் ஆறடி பெட்டி வரை வாற ஒரு  விசயம்.அதிலயும் பல வகைகள்.
சிலது போய் தோசைல முடிஞ்சுடும்.சிலது போய் கொலையில் முடியும்.

சில கோபங்கள் விரோதிகளை தோற்றுவிக்கும். சிலது ஜென்ம விரோதங்களை தோற்றுவிக்கும்
(ஜென்ம விரோதிகளின்  ஜீன்கள் மாறுவதில்லையா???) .

தலைப்பிற்குள் வரலாம்.

" மழையின் நீர் வாங்கி
மலையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி
தனயன் அழுவானோ
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானா

ஏஏஏ......
தங்கம் போலே இருந்தவள் தான்
சருகை போலே ஆனதனால்
சிங்கம் போல இருந்த மகன்
செவிலியை போல ஆவானா"

காலைல எழும்பும் போது சக்தி  எப்.ம் ல போய் கொண்டு இருந்தது.வழமையாய் ஏ.ஆரின் மூச்சு விடாத ஆஆஆ என்ற இழுவைதான் அதிகம் பிடித்தது.
இன்று அதை ரசிப்பதற்கு மேலால் வேறு ஒன்று கலண்டரை கிழிக்கும் போது இளித்து கொண்டு இருந்தது.
அன்னையர் தினம்.

இரண்டு நாளாய் வீட்டில்  ஒரு வித அஷிம்சை ரீதியான மௌன போராட்டம் ஓடிக்கொண்டிருந்தது.அம்மாவை பற்றி என் பக்கங்களில் அதிகம் சொல்லியிருக்க மாட்டேன். ஏன் என்று கேட்காதீர்கள்.
கலண்டரை பார்த்து என்ன செய்வது என யோசித்தேன்.வாழ்த்து சொல்லுவதா விடுவதா?

இவவோடயா கதைப்பதா மக்கும்.....

என்று மனசுக்குள் பத்து ரிச்டர் அளவில் பூகம்பம் வெடித்து முப்பது உயர அடியில் சுனாமி அடித்துக்கொண்டு இருந்தது.

போன் அடிக்க, அம்மா எடுக்க

"ஹலோ"

"........"

"ம்ம் தாங்ஸ்"

தெளிவாய் புரிந்தது.அண்ணர்தான்.

 பேஸ்புக் சுவர் முழுவதும் எல்லாரும் ஏகத்துக்கு வாழ்த்து அடிச்சு அதில இரண்டு பேர் மதர்ஸ் டே என்டு போட்டோ போட்டு
எனக்கு ரக் பண்ணி வேற விட்டிருந்தார்கள்......வந்த கோபத்துக்கு

"நான் என்ன ? உனக்கு அன்னையாடா நொன்னை!"  என்டு இன்போக்ஸ்  பண்ணுவமா என யோசித்து விட்டு வேண்டாம் என்று அன் பாலோ பட்டனை தட்டி விட்டேன்.
மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.

இப்படிலாம் வாழ்த்தணுமா?   மனசில அன்பிருந்தாலே காணும் என்டு மனது சொல்ல, அதே இதுதான் என்டு தெரியாத அது தடுக்க.சொல்லணுமா ச்சீ..
தேவை இல்லை...
இல்லை தேவை.

தாங்ஸ் என்ற வார்த்தை சிலரை அந்நியமாக்கும் சிலரை நெருக்கமாக்கும். அதுதான் யாரும் அம்மாக்களுக்கு  அதை சொல்வதில்லை.

ஈபிள் டவர் உயரத்துக்கு யோசித்து கொண்டு இருக்க....

பக்கத்தில் வந்து

"தோசைக்கு எண்ணை விட்டு தரவா
இல்லை சம்பல் அரைக்கிறதா?"

அம்மாவும் ஐந்து வயதைக்கடந்து வந்தவ என்பது ஆத்மார்த்தமான அந்த கேள்வியில் தெரிய

டக் என்டு இரண்டு விரல்களையும் நானாகவே அமர்த்தி
அடிச்சு விட்டேன்,

"அம்மா"

"ம்"

"இன்றைய தின வாழ்த்துக்கள்"......



தந்தானி னானே தானே னானோ....

                         ##########















#நீங்கள் யோசிக்கும் அதே அற்பபிறவி#

Friday, April 17, 2015

ஆவ்வ்....குட்டி...குட்டி தூக்கங்கள்


சூட்டனின் இன்னுமொரு பகுதி நிலமும் இன்று பறி போய் விட்டது.சூட்டன் ஒரு கறுப்பன்.பல் மட்டும் கொஞ்சம் காவி படிந்த வெள்ளை.வெள்ளை! இந்த சொல்லைக்கேட்டாலே சூட்டனுக்குப் பிடிக்காது.மண்டேலா சுதந்திரம் வாங்கி கொடுத்தும் எந்த பிரயோசனுமுமே இல்லாமல் போய் விட்டது.ஜோஜிம் ஒரு வெள்ளையன். அவனுக்கு அவனிடமே பிடிக்காத ஒரு விடயம்-கண்ணிலே உள்ள கறுப்பு முழி.

சூட்டனிடம் இருந்தது கொஞ்சம் வனப்பான பகுதி. சுற்றி வர பச்சைப்பசேல்.ஏகப்பட்ட உணவு வகைகள் இலகுவாக கிடைத்தது.யாரிடமும் உணவுக்காக போய் வழிய வேண்டிய அவசியமே இல்லை.நேற்றைய தினம்,விடிந்து ஒரு இரண்டு மணித்தியாலங்கள்தான் போயிருக்கும்,ஜோஜிம் தனது பரிவாரங்களோடு சுற்றிப்பார்ப்பது போல வந்து பண்ணிய அட்டூழியங்கள்....,நினைக்கவே சூட்டனுக்கு பத்திக்கொண்டு வருகிறது இப்பவும்.ஆனால் ஒன்றுமே பண்ண முடியாது.

"எலிசபெத்துக்களின் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே போகிறது.வெள்ளையரின் எண்ணம் மட்டும் மாறவே மாறாது."என்பது அவனுக்கு புரிந்தது.

எதிர்த்து போரடுவதற்கு சூட்டனுக்கு பலம் காணாது என்றில்லை. பலம் உள்ளது,போதியளவு அவன் இனமும் உள்ளது அவன் பக்கமாய்.ஆனால் எதிர்க்க முடியாது,எதிர்த்தால் தோற்றுப்போவோமோ என்றொரு பயத்தை உருவாக்கியிருந்தார்கள்.காலம் காலமாகவே
எல்லா இடத்திலும் ஒடுக்கப்பட்டவன் கதையும் ஒடுக்கியவன் கதையும் இதேதான்.

இனியொரு மகாத்மாவோ அல்லது மண்டேலாவோ அல்லது ........ வரப்போவதில்லை என்பது திண்ணம்.

திருப்பி அடிக்க வேண்டும்.எவ்வளவு நாள் அடங்கி போயிருப்பது.குறைந்தது அந்த வெள்ளை நாய் ஜோஜிம் ஆவது பழிவாங்க வேண்டும் என்ற வெறியில் சூட்டன் தூங்க தொடங்க...

"சொன்ன டைம்க்கு சரியாய் ஜாமுன்னு வந்துட்டாய்"

"நீ ஏதோ முக்கிய விசயம் பேசணும்ணியே!"

அழகான ஆதர்ஷயா இன்று தன் காதலை சொல்லப்போகிறாள்.அதுதான் அந்த முக்கியமான விடயம்.இவ்வளவு சீக்கிரமா?
அதுக்கென்ன கூடாதா?.நானே சொல்லலாமா என்று யோசிக்கும் போது அவள் முடிவே எடுத்து விட்டாள். இது தான் "மேட் போர் ஈச் அதரா?"

கமோன் சொல்லு.ஆதர்ஷயா.படங்கள் போல இனி கோல்ட் கொஃபி எல்லாம் ஓடர் பண்ணி அத மணிக்கணக்காய் வைச்சு உறிஞ்சி ....கமோன். மனசு கிடந்து கதறியது.

டேய்! இதை நான் எப்பிடி சொல்றதுனு புரியல்ல பட்.....

சூட்டன் திட்டம் போடுவதற்குள் மீண்டும் ஜோஜிம்மின் ஆக்கிரமிப்பு.வந்து நிற்கிறான். வேறு வழியே இல்லை இந்த தடவை மோதியே ஆக வேண்டும்.தனியாகவேணும்.

நான்கு,அவனோடு சேர்த்து ஐந்து பேர்.தனியனாக சூட்டன்.என்ன செய்வது.மோதலா?
விட்டுப் பிடிக்கலாமா?
இது நல்ல முடிவு.

சடாரென்று சூட்டன் சமாதான முடிவெடுத்து வாலை எடுத்து கால்களுக்குள் வைத்துக் கொண்டு பின்னால் திரும்பி ஓட ஜோஜிம்மும் கூட வந்த கூட்டாளிகளும் சூட்டனின் பின் புறத்தை குறி வைத்துப் பாய சூட்டன்

"ஐயோ! ஐயோ!" என்று குழற

 "இல்லை சொல்லு என்னவாயிருந்தாலும்."

"அது வந்துடா"

"வவ்., வவ்., வவ்.."

எல்லாமே ஒரு முறை கலங்கி.இது கனவா.ஐயோ!இல்லை.கண்ணை மீண்டும் இறுக்கி மூடி பார்க்க ஒன்றுமே தோன்றவில்லை உள்ளுக்குள்.போச்சு.
பத்து நிமிச குட்டித்தூக்கத்தில் ஒரு சோட் பிலிம் ரேஞ்சுக்கு கனவு காண எளிய நாயே எல்லாத்தையுமே கெடுத்து "ஆதர்ஷயா நீ என்ன சொன்னேங்கிறதை நான் எங்கடி போய் கேட்க இனி!"

வந்த கோபத்தில் செருப்பை தூக்கி சூட்டன் பால் விட்டெறிந்தேன். "வள்" என்றது ஒரு முறை.சுற்றி முற்றிப் பார்த்தது.வாலை சுருட்டி காலுக்கிடையில் வைத்துக்கொண்டது. இதுவும் ஏதாவது கனவு கண்டிச்சோ ஏன் இப்புடி மிரளுது??

புரியவில்லை எனக்கு.நித்திரை போயே விட்டது.
இனி அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான்.

"எப்போதுமே
கனவுகள்-நினைவிருக்கும்.ஆனால் முடிவிருக்காது "

ஒவ்வோரு கனவின் சிறப்புமே அதுதான்.எப்போதும் முடிவை எட்டுவதில்லை.

இங்கே நான் எழுத வந்தது பிரதானமாய் கனவை பற்றி  இல்லை.கனவை புரடியூஸ் பண்ணுகின்ற தூக்கத்தை பற்றி.மனுசன் முதல் விலங்கு வரை தூங்கும் போது... மனுசாளுக்கு மட்டும் தான் கனவு வருமா? விலங்குகளுக்கு வராதா? என்ட ஐயத்தை போக்றதுக்காக இரண்டையுமே கோர்த்து எழுதினதுதான் மேல உள்ள சூட்டனோட கனவு.

இனி தூக்கம் பற்றி....



இதில் எல்லாருமே இரவில் அடிப்படையாக கொள்ளுகின்ற அந்த பெரிய தூக்கத்தை பற்றி கதைப்பதற்கு ஒன்றுமே இல்லை.
ஆங்காங்கே ஐந்தோ,பத்தோ,இல்லை ஒரு நிமிடமோ கொள்ளுகின்ற குட்டி,குட்டி தூக்கங்களை பற்றித்தான் நிறையவே சொல்ல வேண்டும்.

கடந்த வாரம் யாழ்பாணத்திலிருந்து சாவகச்சேரிக்கு பஸ்ஸில் வரும் போது அம்மாவின் தோளிலே தூங்கி வழிந்த எட்டு வயது குட்டிப் பெண்ணும் என் தோளில் தூங்கி வழிந்த அறுபது வயது பெரியவருமா! இந்த போஸ்ட் எழுத காரணம் என்று கேட்டால்? நிச்சயமாய் இல்லை.அதற்கு மேல் நிறைய காரணங்கள் உண்டு.

பெரும்பாலும் பஸ்ஸிலோ,ரயிலிலோ ஒரு நல்ல தூக்கம் வரும்.நான் தூங்கி கொண்டிருக்கிறேன்.இன்னும் மூன்று ஸ்டாப் கழித்து இறங்க வேண்டும் என்று உள்ளுக்குள் நாமாகவே உணரக்கூடிய தூக்கம்.உணராமல் விட்டால் ஐயப்பருக்கு "அரோகரா" சொல்லி ஆறாவது ஸ்டாப்பில இறங்கி பாத யாத்திரைதான் வீடுவரை.

அடுத்தது இன்னுமொரு வகை.எல்லாருமே அனுபவிச்சு இருக்க கூடின ஒரு வகை.வாத்தியார் கருமமே கண்ணாய் படிப்பிக்கும் போது கண்ணை மின்னி தானகவே முக்கால் வாசி மூடுப்பட்டு மிஞ்சி இருக்கிற கால்பங்கிற்கு இடையால நப்தலீனோட மூலக்கூற்று வடிவத்துக்கிடையில தொலுயீன் வந்து கொழுவி நடுவில இருக்கிற வளையத்துக்குள்ள ஆகாயாவோ இல்ல அனுச்சித்திராவோ இல்ல விசித்திராவோ தெரிய

உயரத்தில நிக்கிற வாத்தியாருக்கு கீழ ஆர் கண் மின்னுறது எண்டு சரியா தெரியும்.

"அட உங்களுக்கு எத்தினை தரம் சொன்னாலும் விளங்காதே! அணுவை வெறுங்கண்ணால எல்லாம் பார்க்கேலாது.
அதெல்லாம் நுணுக்குகாட்டியளாலதான் பார்க்கலாம்.நீங்கள் கண்ணை சுருக்கி பார்த்து எல்லாம் கஸ்டப்படாதேங்கோடா!."

அவருக்கெங்க தெரிய போகுது உவங்கள் 'அணுவுக்குள்ள அனுவை' பார்க்றது.நித்திரை கொள்ளுறாங்கள் என்டது மட்டும்தான் தெரியும்.

ஆனா இந்த "அணுவுக்குள்ள அனு" என்ற அந்தவொரு விசயம் கிளாசில போடுற அந்த குட்டித்தூக்கத்திலதான் தெரியும்.வேற எங்கயுமே தெரியாது.இந்த குட்டித்தூக்கத்திற்கான காலவெல்லை ஒரு மில்லி செக்கன் தொடங்கி இரண்டு மூன்று செக்கன் வரை.

அடுத்தது
போன ரேம் மார்க்ஸ் குறைஞ்சிட்டுது.இந்த 
ரேம் பார் பிரிச்சு மேஞ்சு விட்றன் என்டு சத்திய பிரமாணம் எல்லாம் எடுத்துட்டு புத்தகத்தை எடுத்து கொஞ்ச நேரம் படிக்க முதல் பசிக்கும். சரி சாப்பிட்டு படிப்பம் என்டுட்டு முதல் சாப்பிட்றது.பிறகு வந்து இருக்க ஐஞ்சே ஐஞ்சு நிமிசம் இதிலயே படுத்துட்டு எழும்பி படிப்புத்தான் இரவு முழுக்க என்ட வைராக்கியத்தோட படுக்கிற ஒவ்வோருத்தனுமே எழும்புறது காலைல கட்டில்லதான் - Somnambulism

மற்றது
ஆபிஸீல வேலை செய்யும் போதும் ஒரு குட்டித்தூக்கம் வரும்.அதில் எனக்கு அனுபவமில்லை!.

இதை தவிர மத்தியானம் மொங்கிப் போட்டு சும்மா இருந்தாலே போதும்.
அந்த நேரத்தில
கண்ணைக்கட்டிக்கொண்டு வரும்.அப்படியே கதிரைல இருந்த படியே ஒரு தூக்கம். அது ஒரு.......

ம்ம் ஆவ்வ்...

அடச்சே!!!

இவ்வளவு நேரமும் நான் கண்டது கனவா?



இந்த பதிவு
என் கடோசி குட்டித்தூக்க கனவு.கனவுகளுக்கு முடிவில்லையே,

ங்ஙே.....









#அற்பபிறவி#

Wednesday, April 8, 2015

இரட்டைப்பின்னல்காரி

யாரிந்த இரட்டைப்பின்னல்காரி? என்று கேட்பதற்கு முன்னர்
இது ஒரு திட்டமிடப்படாத திடீர் பதிவு.அதற்கு காரணமாய் அமைந்தது.

ஒரு வித
*துக்கமான
*துக்கடாவான
*விசேட
*செய்தி.

ஜெஸ்ஸின்ர ஹேர் ஸ்டைல் தொடங்கி மெஸ்ஸின்ர ஹேர் 
ஸ்டைல் வரை ஏன்
சமந்தா என்டா கேர்ளிங் கேர் அமைரா என்டா ஸ்ரெய்டான கேர் என்டு டெவலப் ஆக ஆக அதையெல்லாம் பார்த்து ரசிச்ச எனக்கு சொறி எங்களுக்கு எப்பவுமே எனி டைம் பேஃவரிட்டாய் ஒரு ஹேர் ஸ்டைல் இருந்தது என்டா அது இரட்டைப்பின்னல்தான்.

கேர்ளிங்கோ,ஸ்ரெய்டோ,குட்டையோ,நெட்டையோ,கறுப்போ,செம்பட்டையோ,
இரட்டைப்பின்னலை இன,மத,ஜாதி பேதமின்றி எல்லாருமே போட்ட இடம் ப்பள்ளிக்கூடம்.

நேர்சரி படிக்கேக்க ஒரு கேர் ஸ்டைல் இருந்தது.சின்ன வயசுதானே.அதால கொஞ்சமாய்தான் முடி இருக்கும் அனு என்கிற அனுச்சித்திராவுக்கு.அதை சுத்திவர வழிச்சு இழுத்து விட்டு உச்சியின் இரண்டு பக்கமும் ஒரு கைபிடியளவுக்கு முடியை திரட்டி அதுக்கு வூல்பாண்டை சிவப்போ,நீலமோ ஏதாச்சும் ஒரு கலர்ல அவள் அம்மா அடிச்சு விட்டு இருப்பாள்.முன் பக்கம் இரண்டு வண்டுக்கிளிப் குத்தியிருக்கும்.அதுக்கு பேர் கீரைப்பிடி கேர் ஸ்டைல்.



அப்டி விதம் விதமான கலர்ல போட்டுட்டு வந்து பக்கத்தில இருக்கிற அனுவோட வூல்பாண்டையும் கிளிப்பையும் பிடுங்கி கழட்டுறதுதான் நேர்சரில என்னோட முதலாவது முக்கிய தொழில் ஆயிருந்தது.அதைப்பார்த்து விட்டு அம்மாக்காரி அலிஸ்பாண்ட் போட்டு அனுப்ப தொடங்கினாள் பின்னர் வந்த நாட்களில்.அதோடு கீரைப்புடி மிஸ்ஸானது.நான் அலிஸ்பாண்டையும் விட்டுவைக்கவில்லை.

கடோசியாய் அனுவை அண்மையில் கண்ட போது நிறைய தலைமயிர் இருந்தது. ஆனால் கழட்டுவதற்கு ஒரு சின்ன கேர் கிளிப்பை கூட காணவில்லை.சுதந்திரமாய் பறக்கவிட்டிருந்தாள் காற்றில்.முப்பது செக்கண்டுக்கு ஒரு தடவையாவது நெற்றியில் விழுந்த இரண்டு முடியை இழுத்து விட்டுக்கொண்டு...

வூல்பாண்ட் போடுவதில்லையா? என்று கேட்டேன் பிடுங்குவதற்கு நீயில்லையே!!! என்றாள் சிரித்துக்கொண்டே.குறும்புக்காரி.

பிறைமறியில் ஓரிரு பேரை கீரைப்புடியில் பார்த்தது ஞாபகம் இருக்கிறது.ஆனால் அதையெல்லாம் அப்போது பார்த்து ரசிப்பதற்கு பக்குவம் கிடையாது.

பார்த்து ரசிக்கும் பக்குவமான வயசு(க்கு) வந்த போது எல்லாருமே இரட்டைஐடை போட்டுக்கொண்டிருக்க அதிலே இருந்த ஒருவிதமான அழகு தெரிந்தது.ஒரு சிறு பிள்ளைத்தனம் இருந்தது.நாற்பது வயது பெண் இந்த இரட்டை ஜடை போட்டால் நிச்சயமாய் பத்து வயதாவது குறைத்து காட்டும்,காட்டியது.

இரட்டைப்பின்னலை போட்டு விட்டு சிலர் ஒன்றை தூக்கி முன்பக்கம் விட்டும் சிலர் இரண்டையும் முன்னாலே தூக்கிப்போட்டும் கொண்டு வருவதிலிருந்து நிறைய விடயங்களை மறை முகமாய் ஊகிக்க முடிந்தது.அந்த வேளைகளில்.

பின்னல் தொடங்கி இரண்டாவது சுருக்கில் ஒரு நித்தியகல்யாணி இருந்தால் அது அவள்தான்.

கனகாம்பரம் இருந்தால்?
அது உவள் !!

அப்போ ரோசா இருந்தால்?
இரட்டைப்பின்னலுக்கு ரோசா வைப்பதில்லையாம்.யாரோ சொன்னார்கள் என் தேடலின் போது.

இப்படி அதிலேயும் ஒரு தனித்துவம்.

ரீசன்டாய் கோயில் திருவிழா மூட்டம் ராகீ  அடி வாங்க காரணமும் இந்த இரட்டைப்பின்னல்தான்.சிங்கன் இடப்பக்க பின்னல்ல பூ செருவியிருந்தது பார்த்துட்டு விஷீ! என்டு பின்னால போய் கூப்பிட அவள் திரும்பேல்ல .
காதுக்கு பக்கத்தில போய் எடியே? விசித்திரா என்டு பெரிசா கத்தியிருக்கிறார்.
மூக்கால ரத்தம் வரேக்கான் சிங்கனுக்கு தெரிஞ்சிருக்கு அது குண்டுமணின்ர தங்கச்சியார் என்டு.உவருக்கு நல்லா வேணும்.பின்ன என்ன இரட்டைப்பின்னல்ல இடப்பக்கம் பூவைச்சிருந்தா அது உவற்ற ஆளே.மிச்சத்துக்கு விசயத்தை கேள்விப்பட்டு விசித்திராவும் பேந்து மொங்கியிருப்பள் எப்பிடியும்.

இப்படி ஒவ்வோரு இரட்டைப்பின்னலுக்கு பின்னாடியும் ஒருத்தனின் இரத்தக்கதை இருக்கும்.

ஆனால் பெரும்பாலான பொண்ணுங்களுக்கு நாங்கள் இந்த இரட்டைப்பின்னலை ரசிக்கின்ற அல்லது ரசித்த விடயம் தெரியாது என்று நினைக்கின்றேன்.ஸ்கூல் முடிந்து ரியூசன் வரும் போது பத்தில் எட்டாச்சும் பின்னலை ஒற்றையாக்கியோ அல்லது விரித்து விட்டோ நேர் வகிடை கன்னப்பக்கம் சாய்த்தோ அல்லது கோணலாக்கியோ கொண்டுவர முகத்தில் இருந்த மொத்த தேஜஸ்ஸும் மாயமாகி இரவு பார்த்த இங்கிலிஸ் கொரர் மூவி ஞாபகம் வருவது அதுகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.

பெண்கள் இரட்டைப்பின்னல் போட்டால் குடும்பம் இரண்டு படும் என்று ஒரு சுப்பரிஸஸ் தியரியை அந்த டைம்ல யாரோ ஒரு ரிஷி அடிச்சு விட்டுட்டு வேற போயிருக்கிறார்.இந்த இரட்டை ஜடை மறைய அதுவும் ஒரு மகத்தான காரணமாய் அமைந்தது

இந்த இடத்திலே எனக்கொரு டவுட் கனம் கோர்ட்டார் அவர்களே?!!
இரண்டா பிரிச்சா இரண்டுபடும் என்கிறீர்களே!?
அப்போ  Full ஆ விரிச்சு விட்டால் OMG,.mind blowing.

மண்டுவமே!!! இரட்டை பின்னலை பற்றி இவ்ளோ கதைக்கிறியே உனக்கெங்க தெரியப்போகுது அத பின்றதில இருக்கிற கஸ்டம் என்று ஒரு சைட் கேட்கும்.உனக்கு பின்ன தெரியுமான்னு இன்னொரு சைட் கேட்கும்.எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில்
ஆமாதான்.இதெல்லாம் அம்மா முடியை பிடிச்சு - போட்ட பின்னலை அவிழ்கிறது தொடங்கி திரும்பி பின்றது வரைக்கும் எப்பவோ பழகிட்டனாக்கும்.

இப்போது இந்த பதிவுக்கு காரணம் "இருந்த ஒரு வடையும் போச்சே" என்கிறது மாதிரியான ஒரு நியூஸ்.

அண்மையில் எங்கள் பள்ளிக்கூடத்தில் கொண்டு  வரப்பட்ட பல புதிய சட்ட கம திட்டங்களுள் இந்த இரட்டைப்பின்னலை பிரித்து ஒற்றையாக்க வேண்டும் என்பதும் ஒன்றென்று தெரியவந்தது.அப்படி செய்யக்கூடாது என்று இனி என்ன எதிர்பைக்கிளப்பி போராட்டமா நடத்த முடியும்.?.அதுக்கென்று ஏகப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறது நாட்டில்.

We'll miss it. என்று அடித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான்.

இனி பொண்ணுங்களுக்கு ஒற்றைப்பின்னலை தூக்கி முன்னால விடுறதும் கஸ்டம்
பசங்களுக்கு பின்னா(ல்)ல இருந்தே யாருன்னு கண்டு பிடிக்றதும் கஸ்டம்.

"We all will miss that இரட்டைப்பின்னல்காரி"










By:அற்பபிறவி.


Wednesday, April 1, 2015

காமிஸோடு ஒரு காதல்


தொடர்ச்சி....

கௌபாய் ஸ்பெசலுக்கு பின்னர் வாங்க வேண்டும் என்று பேராசைப்பட்ட மிக பெரியயய்ய காமிக்ஸ் இரத்தப்படலத்தின் கொம்பிளீட் கலக்சன்.800 பக்க இராட்சதம்-ஐம்போ ஸ்பெசல் என்று லயன் வெளியிட்டது. வில்லியம் வான்சின் துல்லியக்கைவண்ணம்.Bourne மூவி சீரிஸின் கதை இதுதான்.இன்று வரை வாசிக்கவில்லை.சாவதற்கு இடையில் வாசித்து விடுவேன்-வைராக்கியம்.



காமிக்ஸ் என்ற அந்த இரண்டாம் உலகம் என் வாழ்க்கையில் அதிகமாய் உருண்ட இடம் வீட்டை தொடர்ந்து பள்ளிக்கூடம்தான்.

இந்த இடத்திலே விபுலன் அண்ணாவுக்கு ஒரு பெரிய ஷொட்டு வைக்க வேண்டும் அடுத்த பாகத்தின் ஹைலைட்டை வேளைக்கே Fb கொமண்ட் பாரில் ரிவீல் பண்ணியதற்காக.-வெல் பிரிடிக்சன்.

லயன்,முத்து காமிக்ஸுகளில் ரசிக்க கூடிய மிக முக்கியமான விடயம் ஒரு மசாலா பட ரேஞ்சுக்கு ஹீரோக்களை கைவசம் வைத்திருந்தது.அக்சன்,த்திரில்லர்,சயன்ஸ்பிக்சன்,காமெடி என்று ஒரு மஜாவான கலவை.

அக்சன் டிரக்கிற்கு அடுத்து அதிகம் இரசித்தது காமெடி.அதில் அடித்து தூள் கிளப்பியது லக்கி லூக் வித் ஜாலிஐம்பர்-லக்கியின் செல்லக்குதிரை,பேசக்கூடியது.ஆனால் லக்கியோடு மட்டும்தான் .தடாலடியான கார்ட்டூன் கௌபாய்.லூக்கின் பிரதான எதிரிகளாய் நாலு மொள்ளமாரிகள் கதையில் ஊடுருவுவார்கள் எப்போதுமே-டால்டன் பிரதர்ஸ்.



லக்கியிற்கு அடுத்த கோமாளிக் குறூப் ஆக வருவது வுட்சிட்டியின் சிக்பில் அன்ட் கோ குறூப்.இவர்களின் பின்புலம் கொஞ்சம் பெரிசு.இதைவிட மதியில்லா மந்திரி,ஜாலி என்று ஏகப்பட்ட காமெடி ஹீரோக்கள்.

இதையெல்லாம் ரசித்து சிரித்த தலையாய இடத்தில்,இனம் இனத்தோடதான் சேரும் என்ற வாசகத்தை பொய்யாக்ககூடாது என்ற கொள்கையில் ஆறாம் ஆண்டிலே
எனக்கென்றொரு சோத்தாங்கையும் பீச்சாங்கையும் எக்ஸ்ராவாய் வந்து சேர
இந்த இரண்டு கைகளினூடக என் கைகளுக்கும் என் கைகளினூடாக அந்த கைகளுக்கும் காமிக்ஸ் பரிமாற்றம் பக்காவாய் நடைபெற்றது.

அதே அரதப்பழசான டெக்னிக்தான்.
தொண்ணூறு டிகிரியில் நடப்பு பாடத்துக்கான புத்தகத்தை மேசையில் நிறுத்தி அதனுள் காமிக்ஸை வைத்து கண்ணியமாய் படிப்பது.

இதில் ஒரு சில பாரிய பிரச்சினைகள்.அதற்கு முதல் முக்கியமான இரண்டு ஹீரோ,ஹீரோயின் பற்றி எழுத வேண்டும்.

காங்கோ ஸ்பெசலிஸ்ட் மாடஸ்தி,அன்ட கத்தி ஸ்பெசலிஸ்ட் வில்லி கார்வின்.



இரண்டு பேரும் லவ்ர்ஸ் என்ற பாணியில் ராணியின் பக்கங்களும் நண்பர்கள் என்ற ரீதியில் லயனும் கதைகளை வெளியிட்டதில் எனக்கு எது உண்மை என்பதில் இன்னும் சந்தேகம்.படிப்பில கூட இப்பூடி வந்ததில்லை.

"வாசிக்காதே வயலென்ஸ் என்று வாத்தியார் சொன்னாலும் வைரம் கடத்துறத விட காமிக்ஸ் கடத்துறத மிக துல்லியமாக செய்தம் வகுப்பில"

அருமையாக சொன்னீர் அண்ணரே.!!
வாத்தியாருக்கு அதில வயலன்ஸ் இருந்தது மட்டும்தான் தெரியும் சயன்டிபிஃக் ஹீரோ மார்டினையெல்லாம் தெரிஞ்சிருக்க நியாயமே இல்லை.(ம்க்கும்)

அதால நாங்களும் வாங்குகளுக்கு கீழாலும் பாடப்புத்தகங்களுக்குள்ளாயும் சிமக்ளிங்கில் பெரிய ஜீனியஸ் ஆனாலும் அவ்வப்போது கஸ்டொம் ஆபிசில் சில புத்தகங்கள் மாட்டிக்கொண்டது என்னவோ துரதிஷ்டம்தான்.

வந்த ஒரு சில பிரச்சினைகளுள்
*முதலாவது புத்தகத்துக்குள் வைத்து வாசிக்கும் போது வெளியில் இருக்கும் புத்தகம் சமநிலை குழம்பி விழுந்துபோகும்.அதுவும் தெரியாமல் வாத்தியார் வந்ததும் தெரியாமல் ஒரு ஆழ்மயக்க நிலையில் வாசித்துக்கொண்டிருக்க

"பளார்" என்று அறையும் போது நிஜவுலகம் தெரியும்.குறைந்தது இரண்டு தடவையாவது இப்படி மாட்டுப்பட்டு அறைவாங்கியிருப்பேன்.

ஓ.எல்லுக்கு கீழ இங்கிலிஸ் படிப்பிக்றதுக்கு ஒரு சேர் இருந்தார் (ஏன் இப்படி எழுத்திலே ஒரு பய+பக்தி என்பது போக போக தெரியும்.)
அந்தாள் பார்த்தாலே பின்பக்கம் இரண்டும் நோகும்.அப்புடி ஒரு நோக்குவர்மம் தெரிஞ்ச ஆள். வகுப்பு கொரிடோரால் நடந்து போகும் போது மயான அமைதி குடி கொள்ளும்.மொனிட்டரின்ர காச்சட்டைதான் கூட நடுங்கும்.ஏதாவது குழப்படி என்டா முதல்ல சிங்கன்ர கன்னம்தான் வீங்கும்.

விதி வலியது.எட்டாம் ஆண்டில பாடம் எடுக்க வந்தா பரவாயில்ல.வகுப்பு  வாத்தியாரயும் அந்தாளுக்கு புரமோசன் கொடுத்து விட.

கொஞ்சநாள் அமுங்கி இருந்து விட்டு ஒரு கிழமை போக புத்தகத்துக்குள்ள புத்தகம் வைக்க தொடங்க
அடுத்த நாளே டெக்ஸின் "பயங்கர பயணிகள்" மாட்டிக்கொண்டது.அடிவாங்க முதலே அழலாமா? என்று திட்டம் போட.
பாடம் முடிந்து பெல் அடிக்க
அடி விழவில்லை.புத்தகம் போய்விட்டது.இதற்கு அடித்துவிட்டு புத்தகத்தை தந்திருக்கலாம்.

அடுத்த நாள்.கூப்பிட்டார்.
எதையும் தாங்கும் இதயத்தோடு போனேன்.

முதலாவது ஆச்சர்யம்.
புத்தகத்தை தந்தார்!

"டோன்ட் ரீட் இற் வென் ரீச்சர் இஸ் இன் த கிளாஸ்.டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?"

இதுக்கு புத்தகத்தை தராமலே விட்டிருக்கலாமே.ஐயோ இப்ப என்ன சொல்றது.யெஸ் ஆ நோவா? நோகுதே.அப்ப நோவா?

தலையை இடதும் வலதுமாய் அசைத்து மேலும் கீழுமாய் ஆட்டி ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க .

கிட்ட கூப்பிட்டு மெல்லமாய் தமிழ்லயே கேட்டார்.

""இது முதலாம் பாகமடா!
இதின்ர இரண்டாம் பாகம் வைச்சிருக்கிறியோ?"

     !!!!!!!!!




Thursday, March 26, 2015

காமிக்ஸோடு ஒரு காதல்

இந்த பதிவுக்கு முதல் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து வைத்திருந்த தலைப்பு
  
    "காமிக்ஸோடு ஒரு கள்ளக்காதல்"

தலைப்பை பார்த்தவுடன் வாசிக்க வேண்டும் என்றே சில தலைப்பை வைத்திருப்பார்கள்.குமுதமோ ஆனந்த விகடனோ சரியாய் நினைவில்லை .அதில் "ப்ளீஸ் இந்த பக்கத்தை படிக்காதீர்கள்"  என்ற தலைப்பின் கீழ் கடைசிப்பக்கத்தில்  கிசு கிசு  வரும்.புத்தகத்தை எடுத்து கடைசி பக்கத்திலிருந்துதான் நான் வாசிக்க தொடங்குவேன்
தும்பு நடிகைக்கும் கம்பு நடிகருக்கும் இடையில் நடந்தது என்ன? என்று எழுதி இருப்பார்கள்.அது யார் என்று கண்டுபிடிப்பதில் ஐயாவுக்கு ஒரு த்ரில் .

அதைப்போல இந்த தலைப்பை பார்த்து  விட்டு லிங்கை கிளிக் பண்ணி ஒரு எதிர்பார்போடு  உள்ளே வருகின்ற சில
வாசக நெஞ்சங்களுக்கு உள்ளீடு சப்பையாய் தோன்றலாம்.

ஏனென்றால் இது இன்றைய காலகட்டத்தில் இருக்கும் எல்லாருக்கும் பிடிக்காது.ஏன் சிலருக்கு இது என்ன இழவு என்றே தெரியாமல் இருக்கும். ஆனால் என்னை போலவே ஒன்றிரண்டு இருக்கும் என்று எனக்கு தெரியும்.அந்த அவர்களுக்காக மட்டும்.மற்றும்படி இதில் சொந்தகதை,சுயபுராணம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமே.

கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு தலையில் தொப்பியோடும் கோட்டோடும் ஒரு அநாயசமான நடை நடக்கின்ற அந்த மனிதன் நகருக்குள் பயன்படுத்துகின்ற பெயர் Walker. கூடவே ஒரு நாயும்-பெயர் டெவில்.பின்னால் நின்று யாராவது துப்பாக்கி தூக்கினாலும் மின்னல் வேகத்தில் சுழன்று அந்த மனிதனின் இரண்டு துப்பாக்கிகளும் முழங்கும்.சாவே அற்ற மனிதன்-மாயாவி.




அமெரிக்கப்பதிப்பகம் ஏதோ  ஒன்றின் படைப்பு.தமிழில் ராணிக்காமிக்ஸினூடாய் என் ஜனனத்துக்கு சில தசாப்த்தங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருந்தது .எனக்கு அறிமுகமாகியது-2003 என்று நினைக்கின்றேன்.மாயாவிதான் அறிமுக ஹீரோ

மாயாவி என்ற கரெக்டரோடு சேர்த்து அதற்கு பின்புலமாய் நிறைய விசயங்கள் படைக்கப்பட்டிருந்தது.மண்டையோட்டுக்குகை.ஈடன் தீவு,தங்ககடற்கரை,மரவீடு,நான்கு இனத்தவர்கள்.மனைவி டயானா.மகன் ரெக்ஸ்.குதிரை ஹீரோ. நாய் டெவில்.

கோதாரி விழுந்தது.இதை வாசித்த மயக்கத்தில் அந்த நேரத்தில் வீட்டில் வளர்த்த ஒரு பெட்டை நாய்க்கு டெவில் என்ற பேர் வைத்திருந்தேன்.அதுக்கு பேர் பிடிக்கவில்லையோ அல்லது இங்கிலிஷ் விளங்கவில்லையோ தெரியாது.உஞ்சு எண்டால் மட்டும் திரும்பி பார்க்கும்.கொஞ்ச நாட்களில் அது பக்கத்து வீட்டு 'சோட்டா பீமோடு' ஓடிப்போய் விட்டது. நன்றி கெட்டது.

அந்த பின்புலங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்கவோ அல்லது நல்லவர்களுக்கு உதவி செய்வதற்காகவோ மாயாவி என்ற சூப்பர் ஹீரோ வருவார்.

இதன் ஒரிஜினல் வடிவம் எட்டாம் ஆண்டு படிக்கும் போது பந்தம்.(Phantom) என்ற பேரில் கலர் ப்ரிண்டில் ஸ்கூல் லைப்ரரியில் எனக்கு கிடைத்த போது புரிந்தது.ராணிக் காமிக்ஸ் நிறையை பக்கங்களை கட் பண்ணி விட்டிருந்தது.

ராணியில் வெளி வந்த இதர பிற இத்யாதி ஹீரோக்களில் அடுத்து அதிகம் பிடித்தது என்னவோ பிளாஷ்கார்டனின் விண்வெளி சாகசங்கள்.இது தவிர 007,கார்த்,மாடஸ்தி என்று நிறைய.வீட்டிலேயே ஒரு நூறு புத்தகத்துக்கு கிட்ட சேர்த்து வைத்திருந்தேன் அப்போது.கறையான் வாசித்து தள்ளி விட்டது.

அதன் பின் லயன்,முத்து காமிக்ஸ் அறிமுகமான போது ராணியின் தரம் புரிந்தது.

லயனும் முத்துவும் ஒரே மரத்தின் இரு கிளைகள்.கதைக்கு சுவாரசியமாய் எடிட்டர் விஐயனின் ஹாட்-லைன் இருக்கும்.



லயன் டெக்ஸ்வில்லரை கொண்டுவர முத்து டைகரை கொண்டு வந்திருந்தது.கௌபாய்களின் தலையாய தலைவர்களாய்.
மாயவியின் முகமூடி இல்லாவிடில் அது டெக்ஸ் என்பது போல இரவுக்கழுகு வின் கரெக்டர் கிரியேட்டாகியிருந்தது அரிஸோனாவின் பாலைவனத்தில்.
கூடவே கிட் கார்ஸன் ஆஸ் வெள்ளி முடித்தலையார்.கிட் ஆஸ் சின்ன கழுகார்.இவர்களுடன் டைகர் ஜாக்.இதன் கிரியேட்டர்-Sergio Bonelli



அபேச்சோக்களும்,செவ்விந்தியர்களும் அடிபடும் போது நவஜோ தலைவர் நடுவில் நிற்பார்.

முத்துவில் வெளியான டைகரும் ஒரு தலைசிறந்த கௌபாய்.ஆனால் ரியாலிட்டியான கௌபாய்.டெக்ஸை போல அசாத்தியமான சில வேலைகள் டைகரின் ப்ரேமுக்குள் வருவதில்லை.டைகரின் பிண்ணனி முற்றிலுமே வேறுபட்ட ஒன்று.எப்போதுமே

இதில் பக்காவான காமெடி என்னவென்றால் வீட்டிலுள்ள என்னை விட நாலு வயசு மூத்தது இப்பவும் சில வேளைகளில் தான் இரவுக்கழுகு என்ற ரீதியிலும் நான் டைகர் என்ற ரீதியிலும் கொழும்பிலிருந்து என் எல்லைக்குள் வர வைபரினூடாய் புகைசமிஞ்சை அனுப்பி அனுமதி கேட்பதுதான்.
நானும் பாவம் என்று நிராயுதபாணியாய் வர சில வேளைகளில் அனுமதி கொடுப்பதுண்டு.

ஏழாம் ஆண்டுக்கு பின்னர் வந்த கால கட்டத்தில் தான் பெரும்பாலான எல்லா லயன் முத்து கதைகளையும் சொந்தமாக வாங்க தொடங்கினேன்.அதுக்கு முதலே வாங்கி இருக்கலாம்.யாழ்பாணக்கடைகளில் இருந்த விசயம் தெரியாது.கையில் காசும் கிடையாது.

வீட்டில் அதை வாசிப்பதுக்கு தடையில்லாவிட்டாலும் காசுகொடுத்து வாங்குவதற்கு பகிரங்கமாக தடை விதிக்கபட்டிருந்தது.அண்ணண் ஏனைய விசயங்களில் போட்டுக்கொடுத்தாலும் இதில் அமர்த்தி வாசிக்க காரணம்.ஆளுக்கு நான் வாங்கிய புத்தகத்தை வாசிக்க குடுக்க மாட்டன் என்று தெளிவாய் தெரியும்.

இதனால் நான் ஒவ்வொரு தடவையும் களவாய் வாங்கிய காமிக்ஸின் எண்ணிக்கை என் லைப்ரரியில் கூடியது.

பெரும்பாலான எல்லா புத்தகமும் வாங்கி முடிய மிஞ்சியிருந்தது ஒரே ஒரு ராட்சத சைஸ் பெரிய புத்தகம்-கௌபாய் ஸ்பெஷல்-என் ஒட்டு மொத்த உலகமும் அதில் இருக்க.விலையும் அந்த நேரத்தில் எனக்கு ராட்சத விலையாயிருக்க


ஒவ்வொரு தடவை அந்தக்கடைக்கு போகும் போதும் அதை தூக்கி!

" "அண்ணே! இது என்ன விலை?"

"....."

மறக்காமல் ஒரு பைசா குறைக்காமல் அதே விலையை சொல்லுவான்.

ஒரு தடவை பொறுக்க முடியாமல் இருந்த காசெல்லாம் ஒன்று திரட்டி வாங்கி விட்டேன் அதை .வீட்டுக்கு கொண்டு வந்து அண்ணருக்கு பாதி விலையை சொன்னேன்.அம்மாவுக்கு அவனுக்கு சொன்னதில் பாதியை சொன்னேன்.

இரண்டு பேரும் நம்பினார்களா.?நம்பினாற் போல நடித்தார்களா !?தெரியாது.

ஆனால் இன்று வரை அதன் நிஜ விலை இருவருக்கும் தெரியாது.(அன்பு அண்ணரே இதை நீர் வாசிக்கும் போது உள்ளுக்குள் கறுவலாம்.ஆனால் நினைவில் கொள்ளவும்.புதிதாய் இரண்டு புத்தகம் நேற்று வாங்கினேன்.)

இப்படி இன்னுமொரு சம்பவமும்.இன்னும் நிறைய ஹீரோக்களும் இருப்பதால்

இந்த காமிக்ஸோடு ஒரு கள்ளக்காதல் அடுத்தவாரமும் தொடரும்......


Friday, March 13, 2015

கெமிஸ்ரி


Practical no 1 - அறிமுகம்

கெமிஸ்ரிக்கும் எனக்கும் நல்லதொரு கெமிஸ்ட்டரி நிலவியது என்றால் இது வெடியனின் மீதி தொடரா என்று சனம் நினைக்கும்.அப்படி இல்லை.

உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பில் ஐந்து அன்னயனோட பேரை பட் பட் என்று சொன்னேன்.ஆனால் கற்றயனோட ஒரு பேர் கூட ஞாபகம் இருக்கவில்லை .

இதை விட இன்னுமொரு வகையான கெமிஸ்ரி யும் இதோடு சேர்ந்தது.

இரசாயன தாக்கமோ கருத்தாக்கமோ இல்லாத ஒரு வினோத தாக்கமுடைய கெமிஸ்ரி.

"Some people have it.An attraction that can't be quantified or explained."-dexter

முதலில் சொன்ன கெமிஸ்ரிக்கும் எனக்கும் இருந்த அந்த துக்கடாவான தொடர்பை சொல்ல வேன்டும்.

பத்தாம் ஆண்டில இருக்கும் போது "ஹலோ கீ லைக் பென்ஸ்ஸில் பத்மினி சோப் போடேக்க " எண்டது பொட்டாசியம்,சல்பர் ஐ  ரிஃபர்  பண்ணுது என்டது மட்டும் பட்டையடிச்சு ஞாபகம் நிண்டது.

எக்சாமில அணுக்கொள்கையை கேட்க

அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ட டால்ரனை நிராகரித்து

"அனுவை பார்க்கவோ, மறக்கவோ முடியாது" இனி என்டு எழுதின ஆள் நான்.

அனு-அனுச்சித்திரா.நேர்சரி படிக்கேக்க கனக்க தரம் எனக்கு குண்டூசியால எல்லாம் குத்தினவள். எட்டாம் ஆண்டில குத்தின குண்டூசிய தந்துட்டு போனபோது விரசமில்லாத அந்த நட்பு.காதலில்லை.
 அடிக்கடி இப்படியான வசனங்களில் என்னையறியாமல் வெளிப்பட்டதா? சந்தேகம்.

பதினோரவதாண்டில் பேனாக்குள் இருந்த பிட்டும் முன்னால் இருந்தவன் கீறிய லூயியின் போன்டும் காப்பாற்றிவிட்டது.

ஏஎல்லுக்கு போன போது கொக்காவில் ரவர் உச்சியில் ஏறி நின்று கொண்டு - கீழே விழுந்தால் வலிக்குமா? என்று கேட்க வைத்தது இந்த கெமிஸ்ரி.

தொடக்கத்தில்
அன்னயன் மட்டும் எப்போதும் ஞாபகம் நின்றதற்கு மிக முக்கிய காரணமே எல்லாம் அதில் மைனஸ் பாயிண்ட் என்பதுதான்.
கற்றயன் + ஆச்சே.

முதல் பிரக்டிக்கலில் குறூப் பிரித்து விட்டு இரண்டாவது பிரக்டிக்கலில் கூம்புக்குடுவையை குனிந்து பார்த்துக்கொண்டிருந்த போது அதை சரக் என்று இழுத்து

"இது என்ன வைச்சு வடிவு பார்க்கவா உனக்கு தந்திருக்கு"

"இவள் என் குறூப்பா?"
திடீரென்று என் கொக்காவில் ரவரின் உயரம் இன்னும் கொஞ்சம் கூடியது.

முழுப்பெயர் - ஆகாயா.
எல்லாரும் இவளை ஆகா! ஆகா! என்று போற்ற வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு பேரை வைத்திருக்கலாம்.
அதற்கேற்றது போலவே லந்தனைட்ஸ் அக்டி னைட் வரிசை மூலகம் கூட முதல் நாள் கிளாசில் சொன்னாள்.ஊர் பாரட்டியது ஆகா! என்ன அறிவு என்று.
நான் அன்றிலிருந்து நிமிர்ந்து கூட பார்பது கிடையாது.

"இல்லை அடில கிளாஸ் வெடிச்சது போல இருக்கு"

"உனக்கு என்ன கழுத்துக்குள்ள பிடிப்பா? இல்லை வேணுமென்டே என்னை சதாய்கிறியா? மூணு வாங்கு தள்ளி நிற்கிற அவனை பார்.முப்பாதாவது தடவையா இங்க பார்கிறான்.நீ வந்ததில இருந்து குனிஞ்சிட்டு இருக்கா.நான் சுமாரா ஆச்சும் இல்லையா?"

என்ற போது நிமிர்ந்து பார்க்க வேண்டியிருந்தது.இவள் பெண்ணா?என்று..
ஆகா-பெண்தான்

Practical no-4 கழுத்து பிடிப்பு குறைந்து
practical no-5 நிமிர்ந்து இருக்க வைத்தாள்.

நேற்றிரவு 11.50 க்கு ஒரு அலார்ம்.11.55 க்கு ஒரு அலார்ம் என்டு இரண்டு அலார்ம் செற் பண்ணி போனுக்கு மேலதான் படுத்து நித்திரை கொண்டேன் .12க்கு  எழும்போணும் என்டு.
இருந்தாலும் எழும்பி பார்க்கேக்க 1.30. அலார்ம்   அடித்ததா என்று யோசிக்காமல் கோல் பண்ண அவசரத்தில்

கோல் போய் முதல் ரிங்கிலேயே கட்டானதில் தெளிவாய் புரிந்தது இரண்டு விடயங்கள்.முதலாவது இன்னும் முழித்திருக்கிறாள் இரண்டாவது தொலைந்தது என் கதை.

மெசேஜ் ல் ரைப் பண்ண தொடங்கினேன்

Practical no -9 திரிபுர சக்தி

பரிசோதனைக்குழாய்குள்ள சல்பூரிக் அமிலத்தை எடுக்க,கொஞ்சம் பிங்க கலர் அடிக்கிறது. முதல் யாரோ எதையோ எடுத்து,கழுவாமல் காய வைத்திருக்கிறான்.வேறு ப.குழாய் இருக்கிறதா என்று பார்க்க சூடு


காட்டிக்கொண்டிருந்த பன்சன் சுவாலை பக் பக் என்றது.காற்று நுழையும் வழியை பெரிதாக்க நீல நிறம் கூடியது.

குனிந்து சுவாலையினூடு பார்க்க நெருப்பாய் தெரிந்த முகம்.கோபக்கனல் வீசியது.திரிபுரம் எரித்தது சிவனா? இவளா ? என்பது ஆயிரத்தி எட்டாவது சந்தேகம்.ஆயிரத்தேழாவது கொஞ்சம் சொல்ல முடியாத சங்கடமான ஒன்று.மிச்சம் 1006ம் நீ முட்டாளா? இல்லை அப்பாவியா? என்று அவளே கேட்டது

பக்கத்தில் போனால் பத்தலாம் இருந்தாலும் போகாமல் இருக்க முடியாது.

"வேற ப.குழாய் இருக்க? . இது கழுவி வைக்கல்ல  போல இருக்கு".
ஸ்டிக்கர் பொட்டு மேல் சின்னதாய் வீபுதி கீறு

"ஏன்?"

"சொரி கொஞ்சம் லேற் ஆயிட்டு இரவு விஷ் பண்ண." இப்ப நேர சொல்லட்டுமா.!
"விஷ் யூ எ ஹப்பி"

"1.30 மணித்தியாலங்கிறது .கொஞ்சம் இல்ல"

"இல்ல."

"இதில நிக்காத அசிட்டை எடுத்து மூஞ்சைல ஊத்திடுவன்.வாற கோபத்தில.ஒரு லவ் பண்ற பொண்ணுக்கு 12 மணிக்கு முழிச்சிருந்து பேத்டே விஸ் சொல்ல தெரியாத நீ எப்டி ?"

கோபத்தில் நெற்றி சுருங்கி கொஞ்ச வீபுதி மூக்கில் கொட்டியது.

"எக்ஸாமுக்கெல்லாம் படிக்க போறாய்?"

"இல்ல அலார்மெல்லாம் வைச்சன் சரியா .ஆனா மு.ப , பி.ப   வ பார்க்காம விட்டுட்டன்.அது மாறி இருந்திருக்கு"

கடைவாய் சிரிப்பை மறைத்து
"நீ முட்டாள இல்ல அப்பாவியா?" -1009வது


இடைல மூணு பிரக்டிக்கல் எழுதாம கள்ளம் அடிக்க பார்த்துக்கான காரணம் இதான்

Practical no - 6 லவ் புறப்போசல் .

ஆகாயா காதல் சொன்ன விதமே ஒரு வில்லங்கமான வழியில்

லாப்பிலிருந்து வெளியில் வரும் போது ஆவர்த்தன அட்டவணையை நீட்டினாள்.
"இதை கவனமா இரவு படிச்சுட்டு வந்து நாளைக்கு பதில் சொல்லு."

Practical no - 7 ஹோம்ஸுனா?கொக்காவா?
முகத்தில் அடிக்காமல் சொல்லி விட்டு போயிருக்கிறாள்.படி என்று.

இரவு.விரித்து வைத்து விட்டு பார்த்தேன்.இதில் எதை படிக்க .கூட்டமா ? ஆவர்த்தனமா?

"இரண்டு நம்பர் மட்டும் மேல பெரிதாய் எழுதி கேள்வி குறி போட்டு ஏன்."என்ன எழுதி இருக்கிறாள்?"

கொஞ்ச காலம் நம்பர் 222B பேக்கரி வீதில உள்ள வீட்டில தான் நாங்கள் இருந்தனாங்கள் என்டதால எனக்கு கொஞ்சம் மூளை வேலை செய்யும் உப்புடி விசயங்கள்ள

எழுதினதை பார்த்தன்.

   "53   71 "

  " 92- ???"

நம்பர் குறிப்பது அணு எண்ணா இருக்கலாம்.அதால நம்பருகளை எழுதி மூலகங்ளை எதிர எழுத

"53 என்ன? அயடின்.71-லற்றேற்றியம்.92- யுரேனியம்."

ம்ம் குறியீடை போட்டால்

53-I
71-Lu
 
92- u ????

அதாவது    " I l u "
                      "U????"
மண்டைக்குள் ஏதோ கிர் கிர் என்றது.

Practical no - 8 ரிப்ளை.

அதிலயே எழுதிக்கொண்டு போய் கொடுத்தேன்.மறுநாள்.

"53  71      2 !!"
சிரித்தாள்.

Practical no 13-20 பிரேக் அப்.
என்ன காரணம் என்று தெரியவில்லை.கதைப்பதை நிறுத்தி விட்டாள்.இவ்வளவு தான் இவளின் இழவுக் காதலா? என்று விட்டு  இலட்சிய வெறி அது இது என்றில்லாமல் சாதரண படிப்பு ஓடியது.

இருபத்தோரவது பிரக்டிக்கலில்
"எதுக்கு அவளோட அவ்ளவு நேரம் நேற்று கதைச்சிட்டு நின்டாய்?
நான் உன்னோட கதைக்காட்டி நீ யாரோட வேணும்னாலும் கதைப்பியா?"

"ஆகா! என்ன வகையான கோபம் இது"

அதன் பின்
மீண்டும் 20 - 29வது பிரக்டிக்கல் வரை அவள் கதைக்க வந்த சில சந்தர்ப்பங்களையும் நான் தவிர்த்தேன்.

Last practical - கிளைமாக்ஸ்

பைனல் எக்ஸாமுக்கு முதல் கிழமை கடைசி வகுப்பில் போகும் போது மறித்தாள்.
ஏதோ ஒரு துளி கோபம் என் மூளையின் ஒரு மூலையில் ஊற

"நீ எப்பாவது நான் ஏன் உன்னை லவ் பண்ணிணன் னு கேட்டிருக்கியா?"

"மண்டைய ஆட்டாமல் பதில் சொல்லு"

"இல்லை"

"இப்பவாச்சும் கேள் ?"

"ஏன்"

"உன்னை முதல் நாள் முதல் தடவை பார்த்து வேணுமென்றால் சாதரணமாய் இருக்கலாம்.ஆனால் இரண்டாந் தடவை ஏன் திரும்பி பார்த்தேன் என்ட அந்த விடை தெரியாத கேள்வி தான் காரணம்.விடை-நீ என்று மூன்றாம் தடவை பார்த்த போது புரிந்தது."

"இந்தக்காதல் சாமான்ய பிரச்சினைகளால் தோற்க கூடாது.சாகும் வரை தொடர வேண்டும்."

"இரவு என்ன அப்துல் ரகுமான் வாச்சியா?"மனதுக்குள் கேட்டுக்கொண்டேன்.

"நான் உன்னோட கதைச்சா நீ படிக்க மாட்டாய் என்டு தெரியும்.அதோட கொஞ்ச செல்பிஷ்ம்தான்.நானும் படிக்கேலாதே.அதான்".

"ஆனா எக்சாம் முடிஞ்சாப்புறமும் இப்டியே இருந்திடலாம்னு நினைக்காதே."

பார்த்து கொண்டிருந்தேன்.
பார்த்து கொண்டிருந்தாள்.

"நான் கதைக்காமல் விட்ட காரணத்தை அவள் சொல்கிறாள். என்ன இது"

"அப்போ ,நீ இன்னும் என்ன லவ் பண்றியா?"

"நீ முட்டாளா இல்லை அப்பாவியா?"

"ஆகா! இதுதான் உனக்கும் எனக்குமான
கெமிஸ்ரியா.......?"



           #####









அற்பபிறவி
பி.கு-இது 100/100 கலப்படமற்ற கற்பனை (ப்பா....)