About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Thursday, June 18, 2015

குப்பிவிளக்கு கொலைகள்

வெளிச்சம், அந்தப்பக்கம் யன்னல் அல்லது கதவு, தப்பி விடலாம் எப்படியும்.சுதந்திரம்,சுதந்திரம் விசிலடித்த படி மஞ்சளாய் ஒளி வந்த யன்னலை நோக்கி போய் அதனுள் குபீரென்று நுழைந்து ஆஆஆ... நிச்சயமாய் ஒரு பெரிய அலறல்.உடலெல்லாம் எரிகிறதே என்று பார்பதற்கிடையில் எரிந்து விழுந்து முடிந்து....... இரண்டாவது விட்டில் பூச்சி.ஒரு வேளை முதல் எரிந்ததின் மனைவியாய் இருக்கலாம்,உடன் கட்டை ஏறியிருக்கலாம்.மட பூச்சி பெண்ணடிமைத்தனம் ஒழிந்து ஆண்,பெண் சமத்துவம் கிடைத்த விசயம் தெரியாதோ என்னவோ.ஒளிப்பிழம்பு காத்தடித்த பக்கம் முப்பது டிகிரியில் சாய்ந்து மீண்டும் நிமிர்ந்து நின்றது.பிழைக்க தெரிந்தது.குப்பி விளக்கு எரிந்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருப்பதற்கு மட்டும் போய்விடும் பாதி படிக்கும் நேரத்தில்.



குப்பி விளக்கிலும்,தெருவிளக்கிலும் படித்த எல்லாரும் லிங்கனாகவோ,இல்லை கலாமாயோ ஆவதில்லை.வேண்டுமானால் அவ்வாறு ஆன பின் சொல்லிக்கொள்ளலாம்,"நான் குப்பிவிளக்கில்தான் படித்தேன் என்று".

ஆனால் இந்த குப்பிவிளக்கில் படிப்பதில் மட்டும் ஒரு அலாதியான இனிமை இருக்கிறது.விளக்கு புத்தகம் மட்டும் வெளிச்சமாய் மற்றது எல்லாம் இருட்டாய்....
சண்டையின் போது அனுபவித்த அனேக கஷ்டங்களுள் சில சந்தோசங்கள் இப்படியும் கிடைத்தது.

வால்கட்டைக்கு மேலே உள்ள திரி எரிந்து உருண்டையாய் ஒரு கரி, ஓரத்தில் அதுவும் சேர்ந்து எரிந்து கொண்டிருக்க ரினோட் பேனையின் பின் பக்கத்தால் தட்ட நிலத்தில் விழுந்தது.ஒரு பேனை குறைந்த பட்சம் ஒரு கிழமை தாக்குப்பிடிக்கும்.ஆனால் வாங்கி இரண்டு நாளிலேயே பின்பக்கம் சாதுவாய் உருகி காபனும் ஒட்டிக்கொள்கிறது.இந்த கரிவராமல் இருக்க ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் இல்லை அதை தட்ட ஒரு குச்சியை விளக்கோடு கட்டித்தூக்க வேண்டும்.

விளக்கை வலதுபக்கம் தள்ளி வைத்து விஞ்ஞானத்தை இடதுபக்கம் தள்ளி விட்டு நடுவில் தலகாணி போட்டுக்கொண்டு பிரபஞ்சகனவு காண தயாரகும் போது நேற்று நினைத்து இன்றைக்கு மறந்து நாளைக்கு எப்படியும் தட்டவேண்டும்.அது வரைக்கும் ரசிக்கலாம் கரி படிந்த கருப்பு நிற சிலந்திவலையை,மண்ணெண்ணைய் புகைக்கு இசைவாக்கமடைந்த எட்டுக்கால் குடும்பத்தை.குடியைக்கெடுப்பதா? பிழைத்துப்போகட்டும்.நாளைக்கும் இதை மறந்து போய் விடலாம்.

நாளைக்கு இன்னுமொரு விளக்குசெய்து கொடுக்க வேண்டும் அத்வைதாவுக்கு.அத்வைதா ஒரு சிறிய அறிமுகம்.வீடில்லாத லிஸ்டில் பேரைச்சேர்த்துக்கொண்டு நிறைய நாளாய் தறப்பாளுக்குள் அவிந்து இப்போது யாரோ சொந்த ஊரில் வீடு கட்டி போய் சேர்ந்த புண்ணியத்தில் இருந்த முப்பது வீடுகளில் மூன்றாவதாய் உள்ள வீட்டிற்கு குடி வந்து ஏழாம் நாள் அம்மாவோடும் ஒன்பதாவது நாள் என்னோடும் நட்பு கொண்டாடி நேற்று  விஸ்வரின் கடையில் எருமைமாட்டு விலையில் மெழுகுதிரி வாங்கும் போது

"வீட்டில் லாம்பு இல்லையா?"

"இருந்துச்சு,சிமினி உடைஞ்சு போயிட்டு."

"வீட்டலயும் இதே பிரச்சினைதான்.கொஞ்ச நாள் உடைஞ்சதை பொருத்தி பேப்பர் வைச்சும் பார்த்தன்.பேப்பர் இரண்டுநாள்ல கருகிட்டுது. இப்ப குப்பிவிளக்குத்தான்.
மெழுகுதிரி காத்தடிச்சா அணைஞ்சுடுமே.எப்படி சமாளிக்றாய்.மேசைவிளக்குள்ள வைச்சா?"

"டக்கெண்டு அணைஞ்சாத்தான் நல்லது"

"ஏன்?வீட்ல சல்பர் கொம்பனி வைச்சிருக்கிறியா,இல்லை கல்லை உரஞ்சினோன்ன நெருப்பு பத்துதா?"
ஒரு நெருப்பெட்டி பன்னன்டு ரூபா,விசுவர் பதினைஞ்சுக்கு விக்கிறார்.நீ எப்படி அணைய, அணைய.."

"அப்ப எனக்கொரு விளக்கு செய்து தார்றியா?"

என்று கேட்டதில்,சைக்கிள் கடையில் வால்கட்டை பொறுக்கி,பரசிற்றமோல் பாணி வந்த கண்ணாடிப்போத்தலைக்கழுவி அதன் மூடியில் வால்கட்டையை அடித்து திரி உருட்டி மண்ணெண்ணைய் விடவில்லை.பூட்டிக்கொண்டு போய் நீட்டினேன்.

"எவ்ளவு தரணும் இதுக்கு?"

"இதுக்கு தரணும்னா,உன்கிட்ட இருக்றது பத்தாதே?"

"இது பாவிக்றதுதில கொஞ்சம் டிரிக்ஸெல்லாம் இருக்கு.கேட்டுக்கோ"

முனைல அடிக்கடி உருண்டை,உருண்டையா கரி வரும்,அதை ரினோ ச்சீ ஏதாச்சும் ஒண்ணால தட்டி விடனும்.

"அப்புறம்,கொஞ்சம் உப்பு எடுத்து உள்ள போட்டுக்க"

"உப்பா!ஏன்?"

"பவரா எரியும்"
அதுமட்டுமில்ல எண்ணெய் முடிஞ்சு அடில கொஞ்சம் நிக்குதுன்னா.."

"தண்ணி விடறதா?"

"ஆமா,அதேதான்."

"கொழுத்திவைச்சுட்டு அதைப்பார்த்துட்டு இருந்தாலே நேரம் போறது தெரியாது.ஆனா கவனம் இதின்ட மூடி பெரிசா டைட்டில்ல.தலைமயிர் போயிடும் அப்புறம்."

"ஏய்,என்ன இது?"

"ஒண்ணுமில்லையே"

"உன் உள்க்கையைக்காட்டு,ஏன் இப்படி?"

"அந்த பார்வை ஒரு வெற்றுப்பார்வை இல்லை தீட்சண்யப்பார்வை பரியவில்லை???"

"இந்த தழும்புக்கு அப்பாக்கு அம்மா 500 ரூபா கொடுத்தாங்க,இதுக்கு 1000,இதுக்கு ம் 700 ,இது கடைசியா வந்ததது இன்னும் காயமல்ல. இப்படித்தான் என் வீட்ல சிம்னி உடையும்.அடுத்த நாள் காலைல புதுசா அப்பாவே வாங்கிட்டு வந்துடுவார்.கடைசியா அம்மா காசு கொடுக்கல்ல லாம்பை எடுத்து ஒளிச்சிட்டாங்க.அதில இருந்து மெழுகுதிரி.
மெழுகுதிரினா டக்கென்னு அணைஞ்சுடும் பெரிசா சுடாது."சிரித்தாள்.

போகும் போது , விளக்கு செய்து கொடுத்தது தப்பாய் பட்டது.

நிறைய விசயங்கள் புரிந்து புரியாமல்.

இதன் பின் இரண்டுநாள் போய் இரவு,
இந்த கதையின் கிளைமாக்ஸ் நடந்து கொண்டிருந்த போது,என் வீட்டில்
குப்பி விளக்கொளி காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்க
இரண்டு விட்டில்பூச்சிகள் மீண்டும்,வெளிச்சத்தை நோக்கி வேகமாய் வந்து
ஆனால் இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாய்
ஒன்று நெருப்புக்குள் விழ,மற்றது சமாளித்து விலகி பறக்க.......

எல்லா வெளிச்சமும் தப்பிச்செல்வதற்கு ஏதோ ஒரு வழியை காட்டுகிறது.

ம்ம்.


##########












#அற்பபிறவி#

No comments:

Post a Comment