About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Saturday, March 25, 2017

வீட்டு வருத்தம்

இரண்டாவது வாரத்தின் இறுதி நாளுக்கு வரும் போது வயிறு ஒரு தடவை குளிர்ந்து சிறு குடல் உள்ளுக்குள் முறுகி கொள்வது போல இருந்தது.கை கடித்தது. உள்ளங்காலில் சொறிந்தது.அறைக்குள் இருந்த பொருள் எல்லாம் அந்தரத்தில் எழுந்து ஆடுவதாய் ஒரு கருமாந்திர ஹலுசினேசன்.நாளாக ஆக அறை சுவர் எல்லாம் உள்ளுக்குள் வருவது போல தோன்றும். சாப்பாடு எதுவும் இறங்காது. வெளியில் போக மனசு வராது. நோய் நிலமை கூடும்.

அறையை பூட்டி விட்டு அடைக்கோழியாய் நேற்றிலிருந்து உள்ளுக்குள் இருக்க, இன்னும் ஒரு நாள் இப்படியே போனால், பைத்தியம் பஸ்ஸில் பிடிக்க வந்து கொண்டிருப்பதாய் சொல்லியது.

பின்புற கதவை திறந்து கொண்டு எட்டாவது மாடியின் பல்கனிக்கு காலையிலோ, மாலையிலோ வந்தால் தங்கச் சூரியன் தகதகக்கும். அறுநூறு மீட்டர் தூரத்தில் அலையடிக்கும். கடல் காற்று காதோரமாய் போகும்.

கீழே எட்டிப்பார்த்தால் தலை நகரத்தின் அவசரமான வீதி அசையாமல் இருக்க,

வலதுபக்கத்து பல்கனியில்  காலை வேளைகளில் முழுகிவிட்டு தலை ஈரம் போக துவாயை சுத்திக்கொண்டு மூன்று வயது குழந்தையின் உடைகளையும் முப்பது வயது கணவனின் உடைகளையும் சமாந்தரமாய் காயப்போட்டு தன்னுடையதை போட இடமில்லாம் தவிக்கும் ஒரு குடும்ப பெண். பெயர் - கீதாவாயோ, சீதாவாயோ இருக்கலாம்.

இடது பக்க பல்கனியில் மாலை வேளைகளில் எதிரில் இருக்கும் கடலை பார்த்தபடி அறுபது பாகை சரிவுள்ள ஆர்ம்சேரில் கையில் புத்தகம், மூக்கில் கண்ணாடியோடு
"முதுமைக்கு நன்றி சொல்வது எப்படி?"  என்று எழுதியது தெரிய கூடிய தூரத்தில் பேரனோ,பேர்த்தியோ விளையாடிக்கொண்டிருக்கலாம். பக்கங்கள் தட்டுப்பட்டதாய் தெரியவில்லை, கிருஷ்ணபிள்ளை, தம்பிப்பிள்ளை நேம்,ஏஜ் ஜெனரேசனை சேர்ந்த ஒரு பெயர் தெரியாத முதியவர்.

கடந்த இரண்டு வாரங்களாய் இரண்டு பக்க பல்கனிகளிலும்   அவதானித்தது.மாலையானால் கடற்கரைக்கு போய் மேற்கு வெட்கத்தில் சிவந்து, இருட்டி, பார்ப்பது நான்காம் பிறையா இல்லை ஜந்தா என்று சந்தேகம் வரும் வரை வழமையான பாறையில் இருந்து விட்டு அறைக்கு திரும்பி, படுத்து காலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து விட்டு எழும்பி காலை-வேலை-மாலை திரும்பவும் அதே காட்சிகள் பிழையில்லாமல் ஓட...
Retyping and retyping and retyping and retyping.

அத்தனை காட்சிகளும் வந்ததிலிருந்து இன்றுவரை அலுப்படிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சின்ன,சின்ன மாற்றங்களோடு ஒரே காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.

OBSERVING . சம்பந்தமே இல்லாத மனித அசைவுகளை பார்த்து கொண்டிருத்தல்.சிவப்புச்சட்டை பத்து ரூபா பிச்சை போடுகிறது. பிச்சைக்காரன் குருடனா,? இல்லை. அவ்வளவுதான். இனி ஒரு சந்தர்ப்பத்தில் அதே சிவப்புசட்டையையும் பிச்சைக்காரனையும் காணலாம்,காணாமல் போகலாம் யார் கண்டது.

"SOMETIMES IT IS THE QUIET OBSERVER WHO SEE THE MOST"

நேற்று மூன்று வயது பையன் தோளில் நித்திரையாயிருக்க அதே சீ/கீதா டீக்கப்போடு நின்று சிரித்ததை பார்த்த போது வயிற்றுக்குள் இருந்த குறு குறுப்பு கொஞ்சம் அடங்கியது.மாலையில் அதே மூன்று வயது பையன் அதே ஆர்ம்சேரில் முதியவரின் மடியில் இருந்து சிரிக்க இன்னும் இரண்டு நாட்களுக்கு இருக்கலாம் என்று தோன்றியது

பெரும்பாலும் தனிமையையும், நேரத்தையும் ஒன்றாய் போக்கிக்கொள்வதற்கு பயன்படுத்துகின்ற ஒரே ஆயுதமாய் ஒப்சேர்விங் இருந்தது.

"ஒன்றில் படைப்பவனாக இருக்க வேண்டும்
அல்லது பார்ப்பவனாக இருக்க வேண்டும்"

இரவாக திரும்பவும் முதலாவது பந்தி பெயர் சொல்லிக்கத்தியது. அத்தனையும் இருந்தும்,எங்கேயோ பிசிறடித்தது .வருத்தம் முத்திவிட்டது. நாளை வரை - வந்த வேலை முடியும் வரை தாக்குப்பிடிக்க வேண்டும். அதற்கிடையில்

Homesick.
வீட்டுவருத்தத்தை பற்றி சொல்ல முதல் வீட்டை பற்றி சொல்ல வேண்டும்.

மேலே சொன்ன மாடிகள், பல்கனிகள், கடற்கரைகள் எதையும் கண்ணுக்கெட்டின தூரம் வரை பார்க்காத கட்டாந்தரையில் கட்டியெழுப்பிய வீடு. முந்நூற்றி  ஐம்பது பாகையிலும் மரம் வளர்த்து போக, வர பத்தடியில் பாதை விட்ட காணி. சீதாக்களும், கீதாக்களும்  ஒரு வளவு தாண்டி இருந்தார்கள்.பக்கத்தில் இருந்த கிருஷ்ணப்பிள்ளை போன பஞ்சமியில் போய் சேர்ந்து விட அது பேய் வீடாகியிருந்தது.

வாசலுக்கு முன் வந்தவுடன் வாலையாட்ட ஒரு நாய். வீட்டுக்குள் பசித்தால் காலையுரஞ்ச ஒரு பூனை. ஆடு,மாடுகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

கதவு மூலையில் உள்ள ஆணியில் ஐனவரி இரண்டுக்கு பிறகு கிழிக்கப்படாத அஷ்டலக்மி. ஒரு சுவாமி அறை, நிறைய சுவாமிகள்.

பின்பக்கம் தேங்காய்கள், பழைய புத்தகங்கள், சகோதரத்துடனான பங்குச்சண்டையில  சேதமான பிளாஸ்ரிக் கதிரைகள்,கண்ணாடிகளை போட ஒரு டம்பிங் ரூம். அது தாண்டி  ஈரப்பலாவின் நிழலுக்குள் வாளி,கப்பியோடு கிணறு. சரிவரத் தண்ணி விடாமல் படப்போகும் நிலையில் உள்ள தேசிமரம். தண்ணியோடும் வாய்கால் முடிவில் ஒட்டுச்செவ்வரத்தை. சுத்திவர நான்கு செவ்விளநி மரம்.

மழை பெய்தால் கூரையின் பீலி நீளத்துக்கு  நான்கு இடங்களில்  ஒழுகும். அப்போது வெளியில் வந்து நின்று பார்த்தால் குட்டிக்கேரளா கண்ணுக்கு தெரியும்.

இருக்கும் கொஞ்ச நேரத்துக்குள் எடுத்து வாசிக்க நிறையப்புத்தகங்கள். சின்ன தொ.கா மற்றும் ஒரு வானொலி.

வெயில் எல்லை மீறும் போது ஒதுங்குவதற்கு ஒரு மாமரம் அதைச்சுற்றி பந்தலில்லாத ஒரு அலரி.அதை தொடர்ந்து,மரம், சுற்றி வர பல மரம், பலாமரம்.  அதன் கீழ் அடிக்கடி அரட்டை.
குப்பையாய் இருந்தாலும்  அழகாய் தெரியும் எக்ஸோரா,குறோட்டன்கள்.

இது எல்லாமாக சேர்ந்து வீட்டுவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. வீட்டை விட்டு எந்த இடத்துக்கு போனாலும் மூன்று, நான்கு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிப்பதில்லை. இரண்டு கிழமை - பெரிய ஆச்சரியம். நான்கு வயதுக்கு வந்த போது இந்த வருத்தம் இருப்பது தெரிய வந்தது. கோகிலாதேவி டீச்சரும்- நேர்சரியும் நோய்க்காரணங்களாகி இருந்தன." அம்மா!... வீட்டை போவம்" என்பது நோயறிகுறி.

வயது ஏற ஏற நோய் தாக்க எடுக்கும் கால அளவு கூடியதே ஒழிய முற்றாய் ஒழிந்ததாய் தெரியவில்லை. நாக்கு புளிப்பது போல் இருக்க மினரல் வாட்டரில் ஒரு மிடறு உள்ளுக்குள் போனது. அம்மன் கோவில் தண்ணீரை அள்ளிக் குடிக்க வேண்டும் போல இருந்தது. இரவு எதுவும் சாப்பிடவில்லை.நித்திரையை தேடிப்பிடிப்பதற்குள் விடிந்து விட்டது. நரகம்.

டிப்பிரசன் தாங்காமல் ஸ்பெசலாய் ஒரு Dr க்கு காசு கொடுத்து ஆலோசனை கேட்டாயிற்று....

"HOME SICK" IS NOT A DISEASE
"IT IS A STATE  OF MANNER "

"இனி எல்லாம் ஆண்டவன் கையில்தான் இருக்கு" என்று அவரும் முடித்து விட காகம் எங்கிருந்தோ கரைந்தது. நாய் ஊளையிட்டது.

வந்த வேலை முடியவில்லை, முதல் நாளே புறப்பட தயராகி செக்கன் செக்கனாய் குப்பைக்குள் அனுப்பி, இரவு ரயிலேறி ஊருக்கு வந்து  ஸ்டேசனில் இறங்கிய பிறகு மூச்சு வந்தது.அதே தங்கச்சூரியன் தகதகத்தது. குறுகுறுப்பு அடங்கிவிட்டது

பரீட்சயமான ரோட்டின் தலைப்பில் ரமணியின் கடை இன்னும் திறக்கவில்லை.கொப்பியில் இரண்டாயிரம் கடன் நிற்கிறது. ராசன் மாமா முற்றம் கூட்டியவாறே தலையாட்ட, அடையாளம் தெரியாமல் ஜிம்மி குரைத்தது.ரத்தினம் மாமி லட்சுமிக்கு வைக்கோல் போடுவது தெரிந்தது. கையோடு பாலை வாங்கி கொண்டு போகலாமா?.வேண்டாம்.

ஒழுங்கைக்குக்குள் இறங்கும் போது முருகன் கோயில் மணி ஆறடித்தது. வேம்பு இலையுதிர்த்தது.

கேட்டுக்குள் நாய் பாய்ந்து சந்தோச சத்தம் போட்டது
கதவடியில் பூனை.மியாவ்.
வீடு சிரித்தது.

வேலிக்குள்ளால்  சீதா அக்கா எட்டிப்பார்த்து,..

"போன காரியம் என்னாச்சுடா? விசா கிடைச்சுதா?!"

"இல்லைக்கா!!"




#########








#அற்பபிறவி#