About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Sunday, May 27, 2018

முடித்தேங்காய்கள்

அண்ணருக்கும் தேங்காய்க்கும் ஆறு வித்தியாசங்களும் ஒரு ஒற்றுமையும் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஒற்றுமை - இரண்டுமே உரித்து வைத்தால் ஒரே மாதிரி இருக்கும்.
பங்குனி வெயிலும், மழையும் சேர்ந்து வரும் போது ஒரு மப்புக்காலநிலை அடிக்கும். அதை ஒத்த ஒரு நிலையில்  "சந்தைக்கு தேங்காய் விற்று வருகிறேன்" பேர்வழி என்று அண்ணர் ஈஸ்டனில் அரைக்காற்சட்டையும் சேட்டுமாய் காலில் பத்தாம் நம்பர் டி.எஸ்.ஐ பாட்டாவுடன் புறப்பட்டு போவதை பார்க்க கொள்ளை அழகாயிருக்கும்.

இப்போதெல்லாம் சந்தையில் தேங்காய் எருமை விலை போகிறது. அண்ணருக்கும் ஈஸ்டனுக்கும்  ஒரு ரேட்டை போட்டு விற்றால் வரும் காசு அவர் கொண்டு போய் விற்கும் தேங்காய் காசிலும் பார்க்க குறைவாய்தான் இருக்கும். அதனால் அண்ணரிலும் பார்க்க அதிக கவனத்துடன் தேங்காய் பை சைக்கிளின் பின் கட்டப்பட்டிருக்கும். 

கொண்டு சென்றதை விற்று வருவதற்கிடையில் முற்கதை சுருக்கத்திற்கு வரலாம் 

தேங்காய் விற்கின்ற புறசெஸ்  மட்டும்தான் அண்ணரினுடையது. தேங்காய் உரிப்பது  வேறு யாராய் இருக்கும்?.தேங்காய் உரிக்கும் போது தொடராய் பொச்சு எடுப்பது என்பது ஒரு கலை. அண்ணர் ஒவ்வொரு பொச்சாய் கையில் கழட்டி எடுத்துவிட்டு பாரை சரியில்லை ஆடுகின்றது என்று உரித்த ஒரு பொச்சை எடுத்து அதற்கு உண்டு  குடுப்பார். அடுத்த தேங்காயின் மூன்றாவது பொச்சை உரிக்கும் போது முதலாவது பொச்சு அறுந்து விழும். ஒரு விரக்தியோடு தேங்காயை பிரட்டி குத்துவார். பொச்சு பிரியாத வரம் கேட்கும். விரக்தி கோபமாக மாறும். போய்விடுவார். தேங்காய் நாலு  பொச்செடுத்த நிலையில் அரை நிர்வாணமாய் பாரையில் குத்தப்பட்டிருக்கும்.

தேங்காயின் தேவை கருதி அது உரிக்கும் போது கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

கோயிலுக்கு நேர்த்தி வைத்து தேங்காய் அடிப்பதாக இருந்தால், அடிப்பது சிதறு தேங்காயாக இருந்தாலும் அதற்கு தலையில் முடி இருக்க வேண்டும். "சொட்டைத்தேங்காய்களை கடவுள்கள் ஏற்பதில்லை" என்று காவோலை ஏடுகளில் எழுதி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.

அதே காவோலை ஏடுகளின் வேறு சில பக்கங்களில் தேங்காய் தொடர்பாய் இருந்த சில விடயங்கள் வருமாறு,

01.அர்ச்சனை தட்டில் வைக்கும் தேங்காயின் கண் - கண்ணில்  தெரியக்கூடாது 
02.தேங்காய் உடையும் போது சரி பாதி சமனாய் உடைந்தாலும், உடைந்த தேங்காய்க்குள் பூ இருந்தாலும் எண்ணிய காரியம் பழமாகும்.
03.தவறி உடைந்த தேங்காய் அழுகி , முடி கழண்டு போய்விடின்  எல்லாமே நாறிப்போக போகிறது என்று அர்த்தப்படும்.

ஏட்டின் அடியில் காஷ்ரேக் போட்டு இப்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. #எக்காரணம்கொண்டும்உடைத்தபாதிகளை மீண்டும்பொருத்திபார்க்ககூடாது.

                       ************
அண்ணரின் பிஸிக்ஸ் கிளாஸ் பின் வாங்கு (க)விதிகள் பேசும்.காந்தவிதிகளில் வானெழிலியின் கண்கள்  வடமுனைவாயிருக்கும் போது என் கண்கள் தென்முனைவாயிருக்க வேண்டாம், குறைந்தது துருப்பிடித்த தகரமாயிருந்தாலே போதும், கோபாலா கிருஷ்ணா, கோவிந்தா  கவர்ந்து இழுக்க அருள் புரியாயோ! என்று   வைத்த  நேர்த்தியில் வா.னெ.ழி.லி அடிக்கடி பார்ப்பது போலிருக்க அண்ணரால் நம்ப முடியவில்லை. உடனடியாய் முடியாவி்ட்டாலும் இரண்டு நாளுக்குள் செருக்கற் பிள்ளையாருக்கு  தேங்காய் உடைப்பதாக  மனசுக்குள் நினைத்து கொண்டார்.  

இரண்டாவது நாள், நாலு தேங்காய் முடியில்லாமல் உரித்து ஐந்தாவது அரைவாசி முடியுடன் உரித்து ஆறாவது ஓரளவு முடியோடு உரி்த்தாலும் ஒரு கண் முடிக்குள்ளால் தெரிய அதை பிள்ளையாருக்கு உடைக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்து விடுபட்டு,கண் பார்க்க வேண்டும் என்று வைத்த நேர்த்தி - தேங்காய்க்கு கண் தெரிந்தால் என்ன? கால் தெரிந்தால் என்ன? என்று நினைத்து சிரித்தபடியே விநாயக முற்றத்தில் தேங்காயை சிதறடித்தார்.

ஒரு தடவை விநாயகர் சிவனின் தலையை பலியாக கேட்க, சிவன் தனது சிரசின் அம்சமாக படைத்ததே இந்த தேங்காயாம்.

அன்றிலிருந்து தேங்காய் சிவனின் தலையாகவே கருதப்படுகிறது. என்ன இருந்தாலும் அண்ணர்  அதை பழித்திருக்க கூடாது.

அண்ணரின் அந்த காதலுக்கு கடைசி வாங்கிலேயே கல்லறை கட்டப்பட்டது.

வானெழிலி அண்ணரை கடைசிவரை பார்க்கவில்லை என்ற விசயமே... அண்ணருக்கு கடைசிப்பந்தியில்தான் தெரிய வந்தது.

                          **********

அண்ணர் தேங்காய் உரிப்பதில் எக்ஸ்பேர்ட் ஆகாவிட்டாலும் விற்பதில் ஒரு புறபெசனல் லெவலை தொட்டுவி்ட்டிருந்தார். அவர் படித்த படிப்புக்கும் பார்த்த வேலைக்கும் சம்மந்தமே கிடையாது என்றாலும் எப்படி இவ்வளவு முன்னேற்றம் என்ற ஒரு யோசனை ஆரம்பத்தில் இருந்தே மண்டைக்குள் குறட்டியது.
மேசையில் இரண்டாய் உடைத்து வைத்த தேங்காய் பாதிகளோடு 360டிகிரியில் கமரா சுழர எதிரும் புதிருமாய் இருந்தவாறு கண்ட பேட்டியில்
"சொல்லுங்க மிஸ்டர் தேங்காய்க்கண்ணன் எப்படி உங்களால?"

"தலைமுடியும் தேங்காய் முடியும் ஒண்ணுதான் 
இரண்டுமே நம்மள கேக்காமலே கழண்டுக்கும்"

என்ற ஒரு அருமையான தத்துவத்தோடு

ஒரு மாறுதலுக்காக  இனி வருகின்ற சில பராக்கள் அண்ணரின் வியூவில்...

தேங்காய் விற்கும் படலம் 
நாள் - 01
ஈஸ்டனின் பின் கரியலின் ஒரு பக்க கம்பி ஒட்டு விட்டுப்போயிருந்தது. பத்து தேங்காய்க்கு மேல் கட்டமுடியாவிட்டாலும் ஒரு அவாவில் எக்ஸ்ராவாய் ஐந்தை போட்டதில் காண்டில் ஆட்டம் காட்டியது. "கல்லு ரோட்"  வேண்டுமென்று போராடியதில் கல்லை மட்டும் போட்டுவிட்டு ரோட்டை போடாத ரோட்டில் போகும் போது தேங்காய்கள் ஒன்றோடு ஒன்று முட்டி கடகடத்தது. தேங்காய் உடைந்தாலும் பரவாயில்லை, இளநீர் ஊற்றினால் அவமானமாகிவிடும்.மூளையே கவனம் தேவை என்று மனசு அடித்துக்கொண்டது.

தேங்காய் சந்தைக்குள் நுழைந்து சைக்கிளால் இறங்குவதற்குள் தேங்காய் பை 
தொலைய...
50 கிலோ சிவப்புக்கோடு போட்ட பிறீமா பாக் எங்கே என்று தேடியதில்
ஒரு தேங்காய் வியாபாரியின்  தேங்காய் குவியலோடு கொட்டப்பட்டு 2 டொக், 4டொக், 6டொக், ....14டொக், 15

(வருகின்ற "டொக்"  சத்ததில் இருந்து ஒரு தேங்காய் நல்லதா இல்லை கெட்டதா என்பதை ஒரு புறபெசனல் லெவல் தேங்காய் வியாபாரியால் கண்டு கொள்ள முடியும்.) 

"அறுபது ரூபா தம்பி  இண்டைக்கு  போகுது, அப்ப எண்ணூத்தி நாப்பது ரூபா," 

58 செக்கன்களே தாண்டிய ஒரு இறந்தகால நிகழ்வில் இரண்டு செக்கனை கணக்குபோட எதிர்காலத்திடம் கடன் வாங்க வேண்டியிருந்தது. 

"அண்ணை 15 தர 60 என்டா 900 எல்லோ. "

"ஓம் தம்பி! 15வது சின்னத்தேங்காய் அத கழிச்சு விட்டு பாருங்கோ"

(லெசன் நம்பர் - 01 பெரிய தேங்காயையும் சின்ன தேங்காயையும் ஒன்டா கலந்து விக்க கொண்டு  போக கூடாது.)

தேங்காய் விற்கும் படலம்
நாள் -05

இறங்க முதலே பையை இறுக்க பிடித்துக்கொண்டேன். 

ஒரே சைசில் இருந்த பதினைந்து தேங்களையும் நிலத்தில் கொட்டிய போது,சுற்றி கூட்டம் அம்மியது.

"நாப்பது படி எத்தினை பதினைஞ்சே கிடக்குது"

"இல்ல"

நாப்பத்தைஞ்சுக்கு எடுக்கட்டே"

"மக்கும்"


"இன்டைக்கு  ஐம்பதுதான் ஆக கூட, நான் ஐம்பத்திரண்டுக்கு எடுக்கறன்." 

"அண்ணை பேக்காட்டுப்படாதீங்கோ. ஐம்பத்தைஞ்சென்டா தாங்கோ, இனி உங்கட விருப்பம்"

ஐம்பத்திரண்டு கேட்டவனை பார்த்து சிரித்துக்கொண்டே ஐம்பதைஞ்சுக்கு தலையாட்ட - சோல்ட்.டொட்

ஒரு விடயம் மட்டும் புரியவில்லை ஐம்பத்தைஞ்சுக்கு வாங்கியவன் தேங்காய் பையை ஏன் ஐம்பத்திரண்டுக்காரன் தூக்கி கொண்டு போக வேண்டும்.

(லெசன் நம் - 02 உன்னையும் கொண்டு போற தேங்காயையும் தவிர வேற எவனையும் நம்பாத)


தேங்காய் விற்கும் படலம் 
நாள் 08

சந்தை நிறையவே அடித்து போட்டது. 
தேங்காயின் வளைவு நெளிவுகள், பெருப்ப சிறுப்பங்கள் ஒவ்வொன்றாய் புரிய ஆரம்பித்தது.
நிறைய விடயங்களை ஸ்கிப் பண்ண பழகியிருந்தேன்.

அறுநூற்றி இருபது கணக்கிற்கு அறுநூறை தந்து சமாளித்த பல்செட்டில் காவி படிந்த கிழவி.

இருபது ரூபா வரிக்காசிற்கு டிக்கெட் கிழிக்காத வரிய(இ)றுப்பாளர்

கழிக்கப்பட்ட பதினைந்தாவது தேங்காய் வீடு போகும் போது கூடைக்குள் இருந்தது. ஐம்பத்திரண்டு, ஐம்பத்தைந்துக்காரர்களை கண்டு கொள்வதே இல்லை. 

தேங்காய் விற்கும் படலம் - எத்தனையாவதோ நாள்.

ஒரே சைசில் உள்ள தேங்காய்ளோடு கழித்து விடுவதற்கு எந்த சந்தர்ப்பமும் கொடுக்காமல் தேங்காயை கொட்டி விட்டு நிமிர எதிரே

"வானெழிலி"

பத்து தேங்காய் நாளைக்கு செருக்கலுக்கு ... கொஞ்சம் பொறு .... 

நெற்றியில் குங்கும பொட்டு.!
"கல்யாணமாகி விட்டதா என்ன?
கேட்க வேண்டாம்!.

"என்னை தெரியுமா? 
உன் கூடத்தான் படித்தேன் "
படித்த நூறு பேருக்குள் என் முகமா? ஞாபகம் இருக்கும்.
கேட்க வேண்டாம்.

"இப்பொழுது என்ன செய்கிறாய்?"
கேட்க வேண்டாம்!

"தெரிந்தும் தெரியாதது  போல் காட்டிக்கொள்கிறாளா. படிக்கும் போது அடிக்கடி பார்த்து தொலைப்பாயே"

என்ன கேட்பது என்று தெரியவில்லை. 

"தேங்காய் என்ன விலை?"
அவளே கேட்க ஆரம்பித்தாள்.

முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.
நடிக்கி்றாளா,இல்லை.

"நாப்பது ரூபா"
படித்த போது இருந்ததை விட முகத்தில் ஒரு முதிர்ச்சி தெரிந்தது. இருந்தாலும் எங்கே ........

"குறைக்கேலாதா"

"முப்பத்தைஞ்சு"

காசை இரண்டு தடவை எண்ணி தந்தாள்.
தேங்காயை பைக்குள் எண்ணி போட்டுக்கொண்டாள்

...........பார்க்கிறாள். புரியவில்லை.

போகும் போது சிரித்தாள்.


"வானெழிலி உனக்கு வாக்குகண்ணா?"
"கேட்கவில்லை"



########











#அற்பபிறவி#