About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Friday, May 29, 2015

சுழலில் சிக்கிய சுடர்

இந்த கதைக்கு பின்னால இருக்கின்ற கதையை
இந்த கதைக்கு பின்னாலையே சொல்லுறன்.

So லெட்ஸ் கோ.......


ரீரீ ரீ ர்ர்ர்ர்ர்.....ரீரீரீரீ.நாப்பதாவது நிமிச பாடம் முடியும் போது
முப்பது செக்கன் கேக்கவே நராசமாய் இருக்கும் இந்த பெல் சவுண்ட் அடித்தது.இந்த ஸ்கூலில்
இதையெல்லாம் மாத்த வேணும் என்ற லிஸ்டில் ஒன்பதாவதாய் இருக்கின்றது இதுதான்.
மீதி எட்டும் தனிப்பட்ட முறையில் யாரும் அணுகி கேட்கலாம்.

நிச்சயமாய் இது ப்ரீ பாடம்.நேற்றே ப்சிக்ஸ் ரீச்சர் சொல்லும் போது மனசுக்குள்
சின்னதாய் ஒரு சிக்சரோடு 'கூ' அடித்திருந்தேன்.சிலர் உணர்ச்சி வசப்பட்டு பெரிதாய் யெஸ் சொல்லி வேண்டிக்கொண்டார்கள்.
அட்ஐஸ்ட்மன்டில் யாராச்சும் வருவதற்கிடையில் வகுப்பிலிருந்து வழு(க்)கினேன்.

போகும் போதும் சில ஜெயில்கார்ட்டுக்கள் தடுக்க

"லைப்ரரி" ஒரு வார்த்தை போதுமாயிருந்தது இதற்கு மட்டும்.தங்கு தடையின்றிய மிகுதி பயணம்.
அடுத்து என்னை பற்றி நானே சுப்பீரியர் கொம்பிளாக்ஸுடன் கொஞ்சம்.....

இந்த முடிய போகின்ற எட்டு வருட பாடசாலை வாழ்க்கையில் இந்த நூலகத்தில்
இருந்த நாட்கள் மட்டும் குறைந்த பட்சம் முழுதாய் 365 ஐ தாண்டும்.
பெல் அடிக்க முதல்
அடித்த பின்
அடிக்கும் போது
என்று இங்கே மட்டும் முக்காலத்திலும் வாசம் செய்திருக்கிறேன்.

நான் இருப்பதற்கென்று வாடிக்கையான ஒரு இடமுண்டு.இங்கே.
நுழைந்து லைப்ரரிக்கு பொறுப்பான ரீச்சரோடு நிறைய பழக்கத்தில் கொஞ்சம் கதைத்து
ஒரு புத்தகத்தை எடுத்து வழமை போல இருந்து
புத்தகத்தை திறக்க.....

                                ××××××××××

புத்தகத்தை மூடி வைத்தான்.
நிச்சயமாய் புரிந்தது மாதவ் என்கிற மாதவகிருஸ்ணணுக்கு வாஸ்கொடகாமா
கள்ளிக்கோட்டைக்கு வராமல் இருந்திருந்தால் இலங்கையில் இந்த ஐந்து முக்கிய போரும்
நடந்து இருக்காது.நானும் அது நடந்த ஆண்டு இடம் எல்லாம் தின்ன வேண்டியதாயிருந்திருக்காது.

அண்ணணைப்பார்த்தான்.
புத்தகத்துக்குள் தலையை வைத்திருந்தான்.அவன் நித்திரையாய் இருப்பது தெரியாமல் உலகம்
இந்த வருடம் அவன் எப்படியும் கொழும்புக்கு செலக்ட் ஆவான் என்கிறது.எப்படி புரியவில்லை.
அம்மா அடுப்பில் தொழிலாளி இல்லாத முதலாளியாய் நிற்க

காலை 6.00 மணி
எழும்பி  அஸ்ட லக்ஸமிக்கு கீழிருந்த 29ம் திகதியை கிழித்தான்.சாவதற்கு எத்தனை என்று தெரியாத இத்தனை நாட்களில் ஒரு நாள் குறைந்து விட்டது.
மே 30 சிரித்தது.

                           ××××××××××××

என் பள்ளி லைப்ரரிச்சூழல் அடிக்கடி பச்சோந்தி போல கலர் மாறும்.
இப்போது திடீரென்று சுனாமி அலைகள் உள்ளே வந்தது போலிருந்தது.அந்த அலைகளோடு ஆறேழு
நெத்தலியும் இரண்டு மூன்று சுறாக்களும் உள்ளே வந்து சேர
சிம்பிளாய் சொல்கிறேன் உயிரோடு ஒரு மீன் சந்தை.

கலைந்து விழுந்த கவனத்தை தேடி எடுத்து ஒட்டி மீண்டும் புத்தகத்தோடு
ஒன்ற.......

                          ××××××××××

ஒன்றிய மனத்தோடு வழிப்பிள்ளையாரைக்கும்பிட்டு அம்மாவாயும் சைக்கிளில் இருத்தி மிதிக்க தொடங்கும் போது
காலை மணி 7.00
அம்மாவைக்கொண்டு போய் யாழ்பாணம் பஸ் ஸ்டாண்டில் விட்டு விட்டு அப்படியே ஸ்கூலுக்கு போவதற்கு வழமையாய் பயன்படுத்தும் பாதையில் அவனுக்கு இன்னொரு அரண்மணையை பந்தமாக்கி விட்டு அமரராகும் போது அவன் தந்தை வயது 47 அவன் வயது 9.
யாழ்பாண நூலகம்.அவன் வாழ்க்கையில் நிறைய நேரத்தை எடுத்து பதிலாக நிறைய விடயங்களை அவனுக்கு தானம் செய்திருக்கிறது.

நூலக வாசலை கடக்கும் போது அதன் கேற்றை திறந்து கொண்டு தலையை ஒருபக்கம் சாய்த்து
அவனைப்பார்த்து சிரிக்கின்ற அவள் பெயர் ஸ்வர்ணலோஜி.இவனை விட இரண்டு நிமிசம் வயசில் குறைவு என்பதில் தொடங்கி இன்னும் இந்த மாத ஆனந்த விகடனை வாசிக்கவில்லையே என்பது வரை அவளுக்கு ஏகப்பட்ட மனத்தாங்கல்கள் உண்டு.

அவனும் இந்த அரண்மணையும் எப்படியோ அதைப்போலத்தான் அவனும் அவளும்

பழைய உவமையில் இப்போதைக்கு இருவரும் நகம் சக சதை.

"இரவு வோற்ச்சர் போஸ்ட் புதுசாய் கொடுத்தது உனக்குத்தானா?"வாய் வரை வந்தது.
அப்புறாமாய் கேட்கலாம்.
பின்னால் அம்மா என்பதால்.பதில் புன்னகையோடு முன்னால் கடந்தான்.

                        ××××××××××××

அலைகள் ஓய்வதில்லை.அமைதியாய் அடித்துக்கொண்டு இருந்தது லைப்ரரியினுள்.திடீரென்று பெரிதாய் அடிக்க காரணமாயிருந்தது.நான்கைந்து சகோதரிகளின் வரவு.(இப்படிக் கன்னியமாய் கூறவேண்டும் கதைகளில்)
"உஸ்.... உஸ்....
சைலண்ட்" என்று ரீச்சர் வயலண்டாய் சீற
கொஞ்சம் அடங்கினார்கள்.அந்த குழுவில்.

                       ××××××××××××

வரும் போது துரையப்பா ஸ்டேடியத்தில் பார்த்த அளவு பொலிஸ் பஸ் ஸ்டாண்டிலும் நின்றது.
பஸ் ஸ்டாண்டு முழுவதும் யாழ் மாவட்ட அபிவிருத்தி   தேர்தலுக்கான போஸ்டர்கள்.

"இரண்டு நாள் பாடசாலை லீவு என்பதை தவிர எந்த ஒரு ப்ரோயசனுமும் இல்லாத இந்த இதுக்கு இத்தன பேர் தேவையாம்மா?"

"எல்லா வேலையும் இவங்கதானே பார்க்கணும்"
வகுப்பில் இருந்து யோசித்த போது
அதில் இருந்த இரண்டாவது அர்த்தம் அவனுக்கு பிடிபட்ட நேரம்

காலை 9.00 .

                       ××××××××××××

இன்னும் பத்து நிமிடம்தான் இருக்கிறது.அதற்குள் இதை வாசித்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் நான் புத்தகத்துக்குள் மூழ்க......

                        ××××××××××××

பெல் அடித்தது.இரண்டு நிமிசத்தில் மீண்டும் பெல் அடித்து பாடசாலை விட்ட காரணம் புரியவில்லை.
போகும் போது அப்டியே லைப்ரரிக்குள் நுழைந்தேன்.முன்பு அவன் அப்பா இருந்த கதிரையில்: இப்போது இருந்தவர் அவனைப்பார்த்து வழமையான பரீட்சயத்தால் சிரித்தார்.
உதயனையும்,தினக்குரலையும் தட்டி முடிய வயிறு தட்டியதால் புறப்பட்டான்.

போகும் போது வளைவிலிருந்த அலங்காரக்கல் முட்டி கொஞ்சம் சதை பிய்ந்து ரத்தம் வந்த நேரம்

மதியம் 1.30.

நோ எதுவும் இல்லததால் காயத்தை அலட்சியம் செய்து வீடு போகும் போது தெருவில் மயான அமைதி என்பது இப்படித்தான் இருக்கும் என்பது அவனுக்கு புரிய கொஞ்ச நேரம் எடுத்தது.

வீட்டு வாசலில் அண்ணண்.
"ஏன்னா ஏதாவது புயல் வருதா என்ன?"

"எங்க நிண்டுட்டு வாறாய்"
"இரண்டு பொலிஸை சந்திலயே சுட்டாச்சு.
ஊரே அடங்கி போயிருக்கு"

"அதான் ஸ்கூலு வேளைக்கு விட்டிச்சா?
நான் வர்ற வழில லைப்ரரிக்கு போனேன்"

இரவு அதி துரிதமாய் படிப்பு + நித்திரை என்று ஓடியது.

மே 31.
காலை 6.00 மணி

அடித்து எழுப்பினான்.
"டேய் மாதவ் எழும்படா"

"கண்ணை அரைவாசி திறந்து
என்ன?"

"லைப்ரரியை இராவு எரிச்சுட்டாங்களாம்"
மண்டைக்குள் எங்கோ அடித்தது போலிருக்க

மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க
லைப்ரரியை நோக்கி அண்ணணோடு ஓடினான்.

நுழைந்தான்.
அவன் அரண்மணை கரிக்காடாய் கிடந்தது.
எரியாத பக்கங்கள் காற்றில் பறந்து.....கதறி அழ வேண்டும் போல கிடந்தது.
முடியவில்லை.
தலை சுற்ற தள்ளாடிய படி நடக்க அவன் காலில் பாதி கருகிய பலகை தணியாத தணலாய் தட்டியது.
"இங்கே புகைத்தல் தடை செ"
மீதி இல்லை அதில் ஏனோ.

இந்த தடவை ரத்தம் வரவில்லை.ஆனால் நிறைய வலித்தது அவனுக்கு.

                    ××××××××××××

சரியாய் பெல் அடித்தது.நான் வாசித்து முடிக்க .மூடி வைத்தேன்.
"யாழ் நூலக வரலாறு"

1981 மே 31 அன்று சிங்கள காடையர் குழு ஒன்று நூலகத்துக்கு தீ வைத்தது.காக்க வேண்டிய பொலீஸே கண்ணைக்குத்தியது.
அதற்கு காரணம் மதியம் சுடப்பட்ட இரண்டு போலிஸ்காரர்கள் என்று அவர்கள் காரணம் காட்டினாலும் இலங்கையின் தலையான யாழ்பாணத்தின் மூளையை குத்தி குதறுவது உள் நோக்கமாயிருந்தது.

விளைவு தெற்காசியாவின் தலை சிறந்த நூலகம்.அதனுள் இருந்த அரிய ஓலைச்சுவடிகள் அத்தனையும் கருகியது.

மீண்டும் பீனிக்ஸாய் இப்போது எழுந்தாலும் அதன் உடலில் ஒட்டிய சாம்பல் அப்படியேதான் உள்ளது.தட்ட முடியவில்லை அதை.
                   ××××××××××××

வகுப்பிற்கு போகும் போது கோபமும் சோகமும் பரஸ்பரம் பேசிக்கொண்டது.

ஒரு வகையில் இந்த கதைதான் நான் + நீ யின் maiden effort.
அதன்பின் இது ஸ்கூல் மகசினில் வந்தது. எழுத தட்டிக்கொடுத்த மீனலோஜினி டீச்சருக்கு சமர்பணங்கள்

இந்த மே 31 மீண்டும் இதை தூசு தட்டி,அப்டேட் பண்ணி இங்கே போட்டதுதான் கதை வந்த கதை.












#அற்பபிறவி#

Friday, May 22, 2015

நானொரு நாய்



காவல் என்ற சுயநலத்தில
நாய்க்கு பிஸ்கட்டும்
பிஸ்கட் என்ற சுயநலத்தில
நாய் காவலும் இருக்க....

இடையில் 'நன்றி' எங்கே என்று நிறைய
நாளாய் தேடினேன்

தேடிக்கண்டுகொண்டேன்.

எல்லா பிஸ்கட்டுக்களிலும்
செல்பிஷ்கிறீம் அப்பியிருக்கிறது.

எல்லா வால்களிலும்
கிறட்டிறியூட் ஒட்டியிருக்கிறது.

நடந்தது இதுதான்.
இது "முன்பொரு காலத்தில்
என்று" என்று தொடங்க வேண்டிய கதை.

ஆதாம்,ஏவாள் ஐ படைத்து விட்டு
கடவுள் மிஞ்சியிருந்த தசை துண்டுகளை
சேர்த்து ஆறறிவு, உயிர் கொடுக்க வந்தது நாய்.

"நீ நன்றியோடு இருப்பாய்?"

"யாருக்கு?"

"அது உன் விருப்பம்!"

"நாய் யோசித்து தலையாட்டியது."

நன்றியுள்ள நாயை படைத்த விசயம்
நன்றி கெட்ட சாத்தானுக்கு தெரியாது.

கிச்சிலி பழத்தில் சூனியம் வைத்து
தின்று பார் கிளு கிளுப்பாய் இருக்கும் என்று
ஏவாளிடம் நீட்ட

அந்தக்கிச்சலியை எச்சில் படுத்தி
ஆதாமோடு சேர்ந்து சாப்பிடும் போது
நாய் வந்தது இடையில்.

சாத்தான் பயந்தான் திட்டம பலிக்காதோ என்று...

நாய் கெஞ்சுவது போலிருக்க
எஞ்சியதைப்போட்டான் ஆதாம்.

நிலத்தில் கிடந்த அப்பிள்
நேரே நின்ற மனிதர்கள்
மறைந்து நின்ற சாத்தான்.
மூன்றையும் பார்த்த நாய்
பழத்தை தின்றது.

தின்று முடிய கடவுள் வர
தொடர்ந்தது,
வழக்கு நடந்தது.

ஆதாமையும் ஏவாளையும் விசாரித்து
தண்டனையாய் அவர்களுக்கு ஆயுள் வழங்கப்பட்டு
நன்றி பிடுங்கப்பட்டது.

நாயிடம் வந்த கடவுள்.விசாரித்தார்.
"ஏன்?"

"நீங்கள் படைத்த மனிதர்களே அதை தின்றார்கள்.
உங்களுக்கு நன்றியாயுள்ளவர்களுக்கு நான் நன்றியாய் இருந்தேனே
நன்றிதான் என் படைப்பின் முக்கியம்"

யோசித்த கடவுள் நாயிடம்
நன்றியை விட்டுவிட்டு
ஆறாவது அறிவை மட்டும் பிடுங்கி கொண்டு
போகும் போது சொன்னார் கோபத்தில்

"நீ ஒரு நாய்"
"நீயும் செத்து விடுவாய் ஒரு கட்டத்தில்"

நாய் எண்ணிச் சிரித்துக்கொண்டது.

"நானொரு நாய்"

        ######











#அற்பபிறவி#








Tuesday, May 19, 2015

இன்றைய தின வாழ்த்துக்கள்

நான் உன்னோட கோபம் இனி....

" கண்ணை கட்டி கோபம் , பாம்பு வந்து கடிக்கும், கண்ணாடி வந்து குத்தும் ......
செத்தாலும் பரவாயில்லை செத்த வீட்டுக்கும் வரமாட்டேன்....."

ஐந்து வயதில் இடக்கை ஆட்காட்டி விரலையும், வலக்கை ஆட்காட்டி விரலையும் கோத்து
அனு உட்பட நெறைய பேருக்கு எதிரா பாடின கவிதை அது.

இப்போது நான்  உன்னோட  டூ என்டு புளொக் பட்டனோடு கடந்து போய்விடுகிறது அந்த கவிதை.

கோபம் போடுறது ரெம்ப ஈசியான ஒன்று.
நேசம் போடுறது  தான் படா கஷ்டம்.
வலக்கை ஆட்காட்டி விரலுக்கு மேல நடு விரலை  வச்சு ரவுண்டாக்கி  ஆரோட டூ போட்டமோ அவருக்கு முன்னால கொண்டு போய் நீட்ட சிலர் உடனை இரண்டு விரலையும்  அமர்த்தி
நேசம் போட்டிடுவாங்கள்.
சிலருக்கு இதுதான் ஈகோ என்டு தெரியாத ஈகோ தடுக்கும்.
"இவரோடய நான் மாட்டன்"   என்டு அமத்தலா இருப்பினம்.
அடுத்த நாள் அவையளுக்கும் சேர்த்து தோசை கட்டிக் கொண்டு போனால்...சம்பல தொட்டு சாப்பிட்டுக்கொண்டே அமத்தி விடுவினம் விரலை.

ஆனாலும் சிலர் தோசைக்கும் மசிய மாட்டாங்கள். விரலைக்காட்டின உடனயே அதை அறுத்து விட்டிடுவாங்கள்.

கோபம்.
ஐந்து வயசு தொடக்கம் ஆறடி பெட்டி வரை வாற ஒரு  விசயம்.அதிலயும் பல வகைகள்.
சிலது போய் தோசைல முடிஞ்சுடும்.சிலது போய் கொலையில் முடியும்.

சில கோபங்கள் விரோதிகளை தோற்றுவிக்கும். சிலது ஜென்ம விரோதங்களை தோற்றுவிக்கும்
(ஜென்ம விரோதிகளின்  ஜீன்கள் மாறுவதில்லையா???) .

தலைப்பிற்குள் வரலாம்.

" மழையின் நீர் வாங்கி
மலையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி
தனயன் அழுவானோ
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானா

ஏஏஏ......
தங்கம் போலே இருந்தவள் தான்
சருகை போலே ஆனதனால்
சிங்கம் போல இருந்த மகன்
செவிலியை போல ஆவானா"

காலைல எழும்பும் போது சக்தி  எப்.ம் ல போய் கொண்டு இருந்தது.வழமையாய் ஏ.ஆரின் மூச்சு விடாத ஆஆஆ என்ற இழுவைதான் அதிகம் பிடித்தது.
இன்று அதை ரசிப்பதற்கு மேலால் வேறு ஒன்று கலண்டரை கிழிக்கும் போது இளித்து கொண்டு இருந்தது.
அன்னையர் தினம்.

இரண்டு நாளாய் வீட்டில்  ஒரு வித அஷிம்சை ரீதியான மௌன போராட்டம் ஓடிக்கொண்டிருந்தது.அம்மாவை பற்றி என் பக்கங்களில் அதிகம் சொல்லியிருக்க மாட்டேன். ஏன் என்று கேட்காதீர்கள்.
கலண்டரை பார்த்து என்ன செய்வது என யோசித்தேன்.வாழ்த்து சொல்லுவதா விடுவதா?

இவவோடயா கதைப்பதா மக்கும்.....

என்று மனசுக்குள் பத்து ரிச்டர் அளவில் பூகம்பம் வெடித்து முப்பது உயர அடியில் சுனாமி அடித்துக்கொண்டு இருந்தது.

போன் அடிக்க, அம்மா எடுக்க

"ஹலோ"

"........"

"ம்ம் தாங்ஸ்"

தெளிவாய் புரிந்தது.அண்ணர்தான்.

 பேஸ்புக் சுவர் முழுவதும் எல்லாரும் ஏகத்துக்கு வாழ்த்து அடிச்சு அதில இரண்டு பேர் மதர்ஸ் டே என்டு போட்டோ போட்டு
எனக்கு ரக் பண்ணி வேற விட்டிருந்தார்கள்......வந்த கோபத்துக்கு

"நான் என்ன ? உனக்கு அன்னையாடா நொன்னை!"  என்டு இன்போக்ஸ்  பண்ணுவமா என யோசித்து விட்டு வேண்டாம் என்று அன் பாலோ பட்டனை தட்டி விட்டேன்.
மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.

இப்படிலாம் வாழ்த்தணுமா?   மனசில அன்பிருந்தாலே காணும் என்டு மனது சொல்ல, அதே இதுதான் என்டு தெரியாத அது தடுக்க.சொல்லணுமா ச்சீ..
தேவை இல்லை...
இல்லை தேவை.

தாங்ஸ் என்ற வார்த்தை சிலரை அந்நியமாக்கும் சிலரை நெருக்கமாக்கும். அதுதான் யாரும் அம்மாக்களுக்கு  அதை சொல்வதில்லை.

ஈபிள் டவர் உயரத்துக்கு யோசித்து கொண்டு இருக்க....

பக்கத்தில் வந்து

"தோசைக்கு எண்ணை விட்டு தரவா
இல்லை சம்பல் அரைக்கிறதா?"

அம்மாவும் ஐந்து வயதைக்கடந்து வந்தவ என்பது ஆத்மார்த்தமான அந்த கேள்வியில் தெரிய

டக் என்டு இரண்டு விரல்களையும் நானாகவே அமர்த்தி
அடிச்சு விட்டேன்,

"அம்மா"

"ம்"

"இன்றைய தின வாழ்த்துக்கள்"......



தந்தானி னானே தானே னானோ....

                         ##########















#நீங்கள் யோசிக்கும் அதே அற்பபிறவி#