About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Tuesday, May 19, 2015

இன்றைய தின வாழ்த்துக்கள்

நான் உன்னோட கோபம் இனி....

" கண்ணை கட்டி கோபம் , பாம்பு வந்து கடிக்கும், கண்ணாடி வந்து குத்தும் ......
செத்தாலும் பரவாயில்லை செத்த வீட்டுக்கும் வரமாட்டேன்....."

ஐந்து வயதில் இடக்கை ஆட்காட்டி விரலையும், வலக்கை ஆட்காட்டி விரலையும் கோத்து
அனு உட்பட நெறைய பேருக்கு எதிரா பாடின கவிதை அது.

இப்போது நான்  உன்னோட  டூ என்டு புளொக் பட்டனோடு கடந்து போய்விடுகிறது அந்த கவிதை.

கோபம் போடுறது ரெம்ப ஈசியான ஒன்று.
நேசம் போடுறது  தான் படா கஷ்டம்.
வலக்கை ஆட்காட்டி விரலுக்கு மேல நடு விரலை  வச்சு ரவுண்டாக்கி  ஆரோட டூ போட்டமோ அவருக்கு முன்னால கொண்டு போய் நீட்ட சிலர் உடனை இரண்டு விரலையும்  அமர்த்தி
நேசம் போட்டிடுவாங்கள்.
சிலருக்கு இதுதான் ஈகோ என்டு தெரியாத ஈகோ தடுக்கும்.
"இவரோடய நான் மாட்டன்"   என்டு அமத்தலா இருப்பினம்.
அடுத்த நாள் அவையளுக்கும் சேர்த்து தோசை கட்டிக் கொண்டு போனால்...சம்பல தொட்டு சாப்பிட்டுக்கொண்டே அமத்தி விடுவினம் விரலை.

ஆனாலும் சிலர் தோசைக்கும் மசிய மாட்டாங்கள். விரலைக்காட்டின உடனயே அதை அறுத்து விட்டிடுவாங்கள்.

கோபம்.
ஐந்து வயசு தொடக்கம் ஆறடி பெட்டி வரை வாற ஒரு  விசயம்.அதிலயும் பல வகைகள்.
சிலது போய் தோசைல முடிஞ்சுடும்.சிலது போய் கொலையில் முடியும்.

சில கோபங்கள் விரோதிகளை தோற்றுவிக்கும். சிலது ஜென்ம விரோதங்களை தோற்றுவிக்கும்
(ஜென்ம விரோதிகளின்  ஜீன்கள் மாறுவதில்லையா???) .

தலைப்பிற்குள் வரலாம்.

" மழையின் நீர் வாங்கி
மலையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி
தனயன் அழுவானோ
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானா

ஏஏஏ......
தங்கம் போலே இருந்தவள் தான்
சருகை போலே ஆனதனால்
சிங்கம் போல இருந்த மகன்
செவிலியை போல ஆவானா"

காலைல எழும்பும் போது சக்தி  எப்.ம் ல போய் கொண்டு இருந்தது.வழமையாய் ஏ.ஆரின் மூச்சு விடாத ஆஆஆ என்ற இழுவைதான் அதிகம் பிடித்தது.
இன்று அதை ரசிப்பதற்கு மேலால் வேறு ஒன்று கலண்டரை கிழிக்கும் போது இளித்து கொண்டு இருந்தது.
அன்னையர் தினம்.

இரண்டு நாளாய் வீட்டில்  ஒரு வித அஷிம்சை ரீதியான மௌன போராட்டம் ஓடிக்கொண்டிருந்தது.அம்மாவை பற்றி என் பக்கங்களில் அதிகம் சொல்லியிருக்க மாட்டேன். ஏன் என்று கேட்காதீர்கள்.
கலண்டரை பார்த்து என்ன செய்வது என யோசித்தேன்.வாழ்த்து சொல்லுவதா விடுவதா?

இவவோடயா கதைப்பதா மக்கும்.....

என்று மனசுக்குள் பத்து ரிச்டர் அளவில் பூகம்பம் வெடித்து முப்பது உயர அடியில் சுனாமி அடித்துக்கொண்டு இருந்தது.

போன் அடிக்க, அம்மா எடுக்க

"ஹலோ"

"........"

"ம்ம் தாங்ஸ்"

தெளிவாய் புரிந்தது.அண்ணர்தான்.

 பேஸ்புக் சுவர் முழுவதும் எல்லாரும் ஏகத்துக்கு வாழ்த்து அடிச்சு அதில இரண்டு பேர் மதர்ஸ் டே என்டு போட்டோ போட்டு
எனக்கு ரக் பண்ணி வேற விட்டிருந்தார்கள்......வந்த கோபத்துக்கு

"நான் என்ன ? உனக்கு அன்னையாடா நொன்னை!"  என்டு இன்போக்ஸ்  பண்ணுவமா என யோசித்து விட்டு வேண்டாம் என்று அன் பாலோ பட்டனை தட்டி விட்டேன்.
மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.

இப்படிலாம் வாழ்த்தணுமா?   மனசில அன்பிருந்தாலே காணும் என்டு மனது சொல்ல, அதே இதுதான் என்டு தெரியாத அது தடுக்க.சொல்லணுமா ச்சீ..
தேவை இல்லை...
இல்லை தேவை.

தாங்ஸ் என்ற வார்த்தை சிலரை அந்நியமாக்கும் சிலரை நெருக்கமாக்கும். அதுதான் யாரும் அம்மாக்களுக்கு  அதை சொல்வதில்லை.

ஈபிள் டவர் உயரத்துக்கு யோசித்து கொண்டு இருக்க....

பக்கத்தில் வந்து

"தோசைக்கு எண்ணை விட்டு தரவா
இல்லை சம்பல் அரைக்கிறதா?"

அம்மாவும் ஐந்து வயதைக்கடந்து வந்தவ என்பது ஆத்மார்த்தமான அந்த கேள்வியில் தெரிய

டக் என்டு இரண்டு விரல்களையும் நானாகவே அமர்த்தி
அடிச்சு விட்டேன்,

"அம்மா"

"ம்"

"இன்றைய தின வாழ்த்துக்கள்"......



தந்தானி னானே தானே னானோ....

                         ##########















#நீங்கள் யோசிக்கும் அதே அற்பபிறவி#

No comments:

Post a Comment