About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Friday, April 17, 2015

ஆவ்வ்....குட்டி...குட்டி தூக்கங்கள்


சூட்டனின் இன்னுமொரு பகுதி நிலமும் இன்று பறி போய் விட்டது.சூட்டன் ஒரு கறுப்பன்.பல் மட்டும் கொஞ்சம் காவி படிந்த வெள்ளை.வெள்ளை! இந்த சொல்லைக்கேட்டாலே சூட்டனுக்குப் பிடிக்காது.மண்டேலா சுதந்திரம் வாங்கி கொடுத்தும் எந்த பிரயோசனுமுமே இல்லாமல் போய் விட்டது.ஜோஜிம் ஒரு வெள்ளையன். அவனுக்கு அவனிடமே பிடிக்காத ஒரு விடயம்-கண்ணிலே உள்ள கறுப்பு முழி.

சூட்டனிடம் இருந்தது கொஞ்சம் வனப்பான பகுதி. சுற்றி வர பச்சைப்பசேல்.ஏகப்பட்ட உணவு வகைகள் இலகுவாக கிடைத்தது.யாரிடமும் உணவுக்காக போய் வழிய வேண்டிய அவசியமே இல்லை.நேற்றைய தினம்,விடிந்து ஒரு இரண்டு மணித்தியாலங்கள்தான் போயிருக்கும்,ஜோஜிம் தனது பரிவாரங்களோடு சுற்றிப்பார்ப்பது போல வந்து பண்ணிய அட்டூழியங்கள்....,நினைக்கவே சூட்டனுக்கு பத்திக்கொண்டு வருகிறது இப்பவும்.ஆனால் ஒன்றுமே பண்ண முடியாது.

"எலிசபெத்துக்களின் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே போகிறது.வெள்ளையரின் எண்ணம் மட்டும் மாறவே மாறாது."என்பது அவனுக்கு புரிந்தது.

எதிர்த்து போரடுவதற்கு சூட்டனுக்கு பலம் காணாது என்றில்லை. பலம் உள்ளது,போதியளவு அவன் இனமும் உள்ளது அவன் பக்கமாய்.ஆனால் எதிர்க்க முடியாது,எதிர்த்தால் தோற்றுப்போவோமோ என்றொரு பயத்தை உருவாக்கியிருந்தார்கள்.காலம் காலமாகவே
எல்லா இடத்திலும் ஒடுக்கப்பட்டவன் கதையும் ஒடுக்கியவன் கதையும் இதேதான்.

இனியொரு மகாத்மாவோ அல்லது மண்டேலாவோ அல்லது ........ வரப்போவதில்லை என்பது திண்ணம்.

திருப்பி அடிக்க வேண்டும்.எவ்வளவு நாள் அடங்கி போயிருப்பது.குறைந்தது அந்த வெள்ளை நாய் ஜோஜிம் ஆவது பழிவாங்க வேண்டும் என்ற வெறியில் சூட்டன் தூங்க தொடங்க...

"சொன்ன டைம்க்கு சரியாய் ஜாமுன்னு வந்துட்டாய்"

"நீ ஏதோ முக்கிய விசயம் பேசணும்ணியே!"

அழகான ஆதர்ஷயா இன்று தன் காதலை சொல்லப்போகிறாள்.அதுதான் அந்த முக்கியமான விடயம்.இவ்வளவு சீக்கிரமா?
அதுக்கென்ன கூடாதா?.நானே சொல்லலாமா என்று யோசிக்கும் போது அவள் முடிவே எடுத்து விட்டாள். இது தான் "மேட் போர் ஈச் அதரா?"

கமோன் சொல்லு.ஆதர்ஷயா.படங்கள் போல இனி கோல்ட் கொஃபி எல்லாம் ஓடர் பண்ணி அத மணிக்கணக்காய் வைச்சு உறிஞ்சி ....கமோன். மனசு கிடந்து கதறியது.

டேய்! இதை நான் எப்பிடி சொல்றதுனு புரியல்ல பட்.....

சூட்டன் திட்டம் போடுவதற்குள் மீண்டும் ஜோஜிம்மின் ஆக்கிரமிப்பு.வந்து நிற்கிறான். வேறு வழியே இல்லை இந்த தடவை மோதியே ஆக வேண்டும்.தனியாகவேணும்.

நான்கு,அவனோடு சேர்த்து ஐந்து பேர்.தனியனாக சூட்டன்.என்ன செய்வது.மோதலா?
விட்டுப் பிடிக்கலாமா?
இது நல்ல முடிவு.

சடாரென்று சூட்டன் சமாதான முடிவெடுத்து வாலை எடுத்து கால்களுக்குள் வைத்துக் கொண்டு பின்னால் திரும்பி ஓட ஜோஜிம்மும் கூட வந்த கூட்டாளிகளும் சூட்டனின் பின் புறத்தை குறி வைத்துப் பாய சூட்டன்

"ஐயோ! ஐயோ!" என்று குழற

 "இல்லை சொல்லு என்னவாயிருந்தாலும்."

"அது வந்துடா"

"வவ்., வவ்., வவ்.."

எல்லாமே ஒரு முறை கலங்கி.இது கனவா.ஐயோ!இல்லை.கண்ணை மீண்டும் இறுக்கி மூடி பார்க்க ஒன்றுமே தோன்றவில்லை உள்ளுக்குள்.போச்சு.
பத்து நிமிச குட்டித்தூக்கத்தில் ஒரு சோட் பிலிம் ரேஞ்சுக்கு கனவு காண எளிய நாயே எல்லாத்தையுமே கெடுத்து "ஆதர்ஷயா நீ என்ன சொன்னேங்கிறதை நான் எங்கடி போய் கேட்க இனி!"

வந்த கோபத்தில் செருப்பை தூக்கி சூட்டன் பால் விட்டெறிந்தேன். "வள்" என்றது ஒரு முறை.சுற்றி முற்றிப் பார்த்தது.வாலை சுருட்டி காலுக்கிடையில் வைத்துக்கொண்டது. இதுவும் ஏதாவது கனவு கண்டிச்சோ ஏன் இப்புடி மிரளுது??

புரியவில்லை எனக்கு.நித்திரை போயே விட்டது.
இனி அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான்.

"எப்போதுமே
கனவுகள்-நினைவிருக்கும்.ஆனால் முடிவிருக்காது "

ஒவ்வோரு கனவின் சிறப்புமே அதுதான்.எப்போதும் முடிவை எட்டுவதில்லை.

இங்கே நான் எழுத வந்தது பிரதானமாய் கனவை பற்றி  இல்லை.கனவை புரடியூஸ் பண்ணுகின்ற தூக்கத்தை பற்றி.மனுசன் முதல் விலங்கு வரை தூங்கும் போது... மனுசாளுக்கு மட்டும் தான் கனவு வருமா? விலங்குகளுக்கு வராதா? என்ட ஐயத்தை போக்றதுக்காக இரண்டையுமே கோர்த்து எழுதினதுதான் மேல உள்ள சூட்டனோட கனவு.

இனி தூக்கம் பற்றி....



இதில் எல்லாருமே இரவில் அடிப்படையாக கொள்ளுகின்ற அந்த பெரிய தூக்கத்தை பற்றி கதைப்பதற்கு ஒன்றுமே இல்லை.
ஆங்காங்கே ஐந்தோ,பத்தோ,இல்லை ஒரு நிமிடமோ கொள்ளுகின்ற குட்டி,குட்டி தூக்கங்களை பற்றித்தான் நிறையவே சொல்ல வேண்டும்.

கடந்த வாரம் யாழ்பாணத்திலிருந்து சாவகச்சேரிக்கு பஸ்ஸில் வரும் போது அம்மாவின் தோளிலே தூங்கி வழிந்த எட்டு வயது குட்டிப் பெண்ணும் என் தோளில் தூங்கி வழிந்த அறுபது வயது பெரியவருமா! இந்த போஸ்ட் எழுத காரணம் என்று கேட்டால்? நிச்சயமாய் இல்லை.அதற்கு மேல் நிறைய காரணங்கள் உண்டு.

பெரும்பாலும் பஸ்ஸிலோ,ரயிலிலோ ஒரு நல்ல தூக்கம் வரும்.நான் தூங்கி கொண்டிருக்கிறேன்.இன்னும் மூன்று ஸ்டாப் கழித்து இறங்க வேண்டும் என்று உள்ளுக்குள் நாமாகவே உணரக்கூடிய தூக்கம்.உணராமல் விட்டால் ஐயப்பருக்கு "அரோகரா" சொல்லி ஆறாவது ஸ்டாப்பில இறங்கி பாத யாத்திரைதான் வீடுவரை.

அடுத்தது இன்னுமொரு வகை.எல்லாருமே அனுபவிச்சு இருக்க கூடின ஒரு வகை.வாத்தியார் கருமமே கண்ணாய் படிப்பிக்கும் போது கண்ணை மின்னி தானகவே முக்கால் வாசி மூடுப்பட்டு மிஞ்சி இருக்கிற கால்பங்கிற்கு இடையால நப்தலீனோட மூலக்கூற்று வடிவத்துக்கிடையில தொலுயீன் வந்து கொழுவி நடுவில இருக்கிற வளையத்துக்குள்ள ஆகாயாவோ இல்ல அனுச்சித்திராவோ இல்ல விசித்திராவோ தெரிய

உயரத்தில நிக்கிற வாத்தியாருக்கு கீழ ஆர் கண் மின்னுறது எண்டு சரியா தெரியும்.

"அட உங்களுக்கு எத்தினை தரம் சொன்னாலும் விளங்காதே! அணுவை வெறுங்கண்ணால எல்லாம் பார்க்கேலாது.
அதெல்லாம் நுணுக்குகாட்டியளாலதான் பார்க்கலாம்.நீங்கள் கண்ணை சுருக்கி பார்த்து எல்லாம் கஸ்டப்படாதேங்கோடா!."

அவருக்கெங்க தெரிய போகுது உவங்கள் 'அணுவுக்குள்ள அனுவை' பார்க்றது.நித்திரை கொள்ளுறாங்கள் என்டது மட்டும்தான் தெரியும்.

ஆனா இந்த "அணுவுக்குள்ள அனு" என்ற அந்தவொரு விசயம் கிளாசில போடுற அந்த குட்டித்தூக்கத்திலதான் தெரியும்.வேற எங்கயுமே தெரியாது.இந்த குட்டித்தூக்கத்திற்கான காலவெல்லை ஒரு மில்லி செக்கன் தொடங்கி இரண்டு மூன்று செக்கன் வரை.

அடுத்தது
போன ரேம் மார்க்ஸ் குறைஞ்சிட்டுது.இந்த 
ரேம் பார் பிரிச்சு மேஞ்சு விட்றன் என்டு சத்திய பிரமாணம் எல்லாம் எடுத்துட்டு புத்தகத்தை எடுத்து கொஞ்ச நேரம் படிக்க முதல் பசிக்கும். சரி சாப்பிட்டு படிப்பம் என்டுட்டு முதல் சாப்பிட்றது.பிறகு வந்து இருக்க ஐஞ்சே ஐஞ்சு நிமிசம் இதிலயே படுத்துட்டு எழும்பி படிப்புத்தான் இரவு முழுக்க என்ட வைராக்கியத்தோட படுக்கிற ஒவ்வோருத்தனுமே எழும்புறது காலைல கட்டில்லதான் - Somnambulism

மற்றது
ஆபிஸீல வேலை செய்யும் போதும் ஒரு குட்டித்தூக்கம் வரும்.அதில் எனக்கு அனுபவமில்லை!.

இதை தவிர மத்தியானம் மொங்கிப் போட்டு சும்மா இருந்தாலே போதும்.
அந்த நேரத்தில
கண்ணைக்கட்டிக்கொண்டு வரும்.அப்படியே கதிரைல இருந்த படியே ஒரு தூக்கம். அது ஒரு.......

ம்ம் ஆவ்வ்...

அடச்சே!!!

இவ்வளவு நேரமும் நான் கண்டது கனவா?



இந்த பதிவு
என் கடோசி குட்டித்தூக்க கனவு.கனவுகளுக்கு முடிவில்லையே,

ங்ஙே.....









#அற்பபிறவி#

No comments:

Post a Comment