About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Friday, November 11, 2016

இருவர்

ஒவ்வொரு நாளும் Gif இமேஜ் போல ஓடிக்கொண்டிருக்க,
ஒருமாதம் குறைந்தது ஒரு பதிவாவது போட்டு வதைப்பது என்ற எண்ணத்தில் கடைசி மாதம் கல் விழுந்து விட்டது. இருக்கும் போதும்,நடக்கும் போதும்,கதைக்கும் போதும் மனதில் தோன்றியதையெல்லாம் பட்டென்று To do listல் அட் பண்ணிக் கொண்டதை தவிர உருப்படியாய் மழையில் கூட ஒழுங்காக நனையாமல் சளி பிடித்து காய்ச்சலாக்கி கடைசி மாதத்தை காவு கொண்டு விட்டது.

இனி இருவருக்கு வரலாம்
முதலாவது ஆனந்தன் a.k.a ஒற்றைக்கண்ணன்,இரண்டாவது நாகரஞ்சினி அல்லது நாகம்மா,நாகேஸ்வரி சரியாக தெரியாது also known as ............. ஜ சொல்லுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

ஆனால் இருவரின் வாழ்கையும் பெரும்பாலும் கிடந்து,நடந்து,ஓடித்திரிந்தது தென்மராட்சிக்குள்.

இவன்தான் ஒற்றைக்கண்ணன்!! என்று முதல் முதலாக.... (யார் காட்டியது? நினைவில்லை) காட்டியதிலிருந்து ஒற்றைக்கண்ணனின் படம் துல்லியமான மெகாபிக்சலில் மனதிற்குள் பதிவாகி கொண்டது.நாகம்மா என்றே வைத்துக்கொள்வோம். அவளின் முகமும் அப்படியே.

நான் வளர,வளர இருவருக்கும் வயதாகும் என்று எதிர்பார்த்தது பொய்யாக.எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தார்கள்.

விசாரித்ததில் அம்மாவும்,அப்பாவும் சந்திக்கமுன் - சின்ன வயசிலிருந்த போதே அந்த இருவரும் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இப்பவும் இருக்கிறார்கள் என்று வாக்குமூலம் கிடைக்க., இம்மோட்டல்ஸாய் இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்தது.

ஆனந்தன்  மூலதனம் எதுவும் இல்லாத கடும் உழைப்பாளி. என் வீட்டைச்சுற்றி வர உள்ள வெறுங்காணிகளுக்கு தினமும் காலை எட்டிலிருந்த ஒன்பதுக்குள் ஒரு விசிட்டடிப்பார்.வழியில் கேட்பாரற்று விழுந்து கிடக்கும் தேங்காய்களை ஒரு உரப்பையினுள் பத்திரப்படுத்தி கொள்ளும் போது, யாராவது காணிச்சொந்தக்காரர் அவர் வழியில் குறுக்கிட்டால் குறித்த காணிக்குள் எத்தனை தேங்காய்களை பொறுக்கினாரோ அதை மட்டும் கணக்கு பிசகாமல் திருப்பி கொடுக்கின்ற ஒரு சத்தியவான்.

மீதிதேங்காய்களை வீட்டுக்கு முன்னால் இருக்கும் ஒழுங்கைக்குள்ளால் கொண்டுபோகும் போது வீட்டு வாசலில் இருக்கின்ற என்னைப்பார்த்து ஒரு சிரிப்பு.
ஒரு நாளும் இது யார் தேங்காய்? என்று குறுக்கிட்டதில்லை - அந்த நன்றிக்கடனுக்காய் இருக்கலாம்.

ஒற்றைக்கண் எப்படி தெரியாமல் போனது,ஒரு கால் ஏன் நொண்டுகின்றது என்பதற்கு பின்னாலும் ஏதேனும் கதைகள் இருக்கும்.கேட்டதில்லை.ஒரு பழைய சேர்ட்,ஒரு பிறவுன் கலர் சாரம்.பெரும்பாலும் தாடி.காலை வேளைகளில் நெற்றியில் வீபுதி,சந்தனம்.காதில் பூ. பிச்சை கேட்பது கிடையாது.யாரும் கொடுத்தால் மட்டும் வாங்கி உண்பது வழக்கம்.யாரும் கொடுத்து நான் கண்டதில்லை.
குடிப்பழக்கம் கொஞ்சம் அதிகம்.காலை உழைப்பு முழுவதும் மாலையிலேயே செலவாகி விடும்.

குண்டுமணி,நாங்கள் எல்லாம் ஒன்று கூடும் கோயிலின் ஒதுக்குப்புற ஆலமரத்தின் கீழும் அவ்வப்போது தெருவோரங்களிலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலில்லாத வகையில் விழுந்து கிடப்பார்.யாரும் அவரைக்குழப்புவது கிடையாது. அவரும் யாரையும் குழப்புவது கிடையாது.சொந்தமாய் வீடிருக்கின்றதா,மனைவி,பிள்ளைகள்,நாய்,பூனை எதுவும் இருக்கிறதா? தெரியாது.

எங்காவது தேங்காய் எடுக்கும் போது பிடிபட்டு அடிவாங்கி துரத்தப்படுவதை விட்டுப்பார்த்தால்,
கவலை,கலக்கம் இல்லாத பெயருக்கேற்ற ஆனந்தமான தூக்கம்,உழைப்பு,வாழ்க்கை.

இதனுடன் ஒப்பிடும் போது நாகம்மாவின் வாழ்க்கை கொஞ்சம் பிசிறடித்தது. பஸ்ஸால் இறங்கும் போது பக்கத்தில் நின்ற ஆர்மிக்காரன் கூப்பிட்ட போதுதான் அவள் பெயர் தெரிந்தது.உடனே அவனுக்கு எப்படி தெரியும் என்று கேட்காதீர்கள்.சிக்கல்.

நாகம்மாவின் வாழ்க்கை ஆனந்தனண்ணையின் வாழ்க்கைக்கு முற்றிலும் எதிரானது. நாகம்மாவிற்கு வீடு இருந்தது,குடும்பம்,குழந்தை,ஆடு,மாடு எல்லாம் இருந்தது. முக்கியமாய் ஒரு சைக்கிள் இருந்தது. அந்த சைக்கிளுக்கு காற்றுப்போனால் காசெதுவும் வாங்காமல் ஒட்டிக்கொடுக்க சந்தியில் ஒரு கடை இருந்தது.

நாகம்மாவுக்கும் ஒரு மூலதனமும் கிடையாது.அவள் காணிகளில் குறி வைப்பது கரு வேப்பிலை. வேலியோரத்தில் சைக்கிளை சாய்த்து விட்டு கருவேப்பிலையை பிடுங்கி உரப்பைக்குள் அடைவதை பார்க்கையில் - "கொள்ளை அழகு".
காணிச்சொந்தக்காரன் பார்த்தால் கூட மற்றப்பக்கம் தலையை திருப்பிக்கொண்டு போய் விடுவான்.
கேட்டால் அது நாகம்மாவின் காணி என்று பச்சையாய் பொய் வேறு சொல்வான்.
நாகம்மாவின் நாக்குக்கு  ஊரே பயப்படும்.

நாகம்மாவுக்கு அலர்ஜிக்கான ஒரே ஒரு விடயம் பெண்கள். பெண்கள்.பெண்கள்.
பெண்களை எங்கு கண்டாலும் நாக்கு தடிக்கும்.
அதை விட்டுப்பார்த்தால்...

அன்னதானங்களுக்கு மட்டும் கோயில் பக்கம் ஒதுங்குவாள்.குடிப்பழக்கம் கிடையாது.சுருட்டடிப்பாள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்,பார்த்ததில்லை.பெரும்பாலும் சாம்பல் கலர் மேல்சட்டையும் கறுப்புக்கலர் பாவாடையும் போட்டிருப்பாள்.ஊரடங்கு மற்றும் ஏனைய சட்டங்களுக்கு அப்பாற்பட்டவள்.வயது அன்நோன்.வாகனம் சைக்கிள்.

சைக்கிள் ஓடும் போது நேராய் ஓட மாட்டாள்.ஒரு பக்கம் உலாஞ்சி உலாஞ்சித்தான் ஓடுவாள்.எதிரில் வருபவர்கள் பார்த்து வரவேண்டும்.இடித்து விட்டு எதிர்கேள்வி கேட்பவர்களை நாகம்மாவுக்கு பிடிக்காது.

இந்த இருவரும் ஊரின் அதிபதிகளாக இருந்தார்கள், திரிந்தார்கள்.இரசனை என்கின்ற விசயம் ஒரு வயதிற்கு பிறகுதான் எட்டிப்பார்க்கும்.எனக்கு அது எட்டிப்பார்த்த இத்தனையாவது வயதில் ரசிப்பதற்காக பெட்டிக்குள் போட்டுக் கொண்ட கோடிகளுள் ஒன்றுதான் இந்த இருவர்.

இருவரும் நேருக்கு நேர் பேசி நான் ஒருநாளும் கண்டதில்லை.நாகம்மாவுக்கு கணவனில்லை,ஆனந்தனுக்கு மனைவி இல்லை,

ஒரு கோயிலில் இருவரும் சந்தித்துக்கொள்ளலாம்,கதைத்துக்கொள்ளலாம்.
------------------------------------------------
"எனக்கு ஒரு கண் கிடையாது,பரவாயில்லையா?"

"உனக்கு ஒரு கண்ணுமே கிடையாட்டிக்கூட பரவாயில்லை"
------------------------------------------------
ஒருவருக்கு ஒருவரை பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம்.ஒரு கலப்படமற்ற காதல்.

யாரும் இருவரின் லிவ்விங் டுகேதரை பற்றி சலித்துக் கொள்ளப்போவதில்லை. என்ன நாகம்மாவுக்கு!! இன்னும் நாலைந்து பட்டப்பெயர்கள் கூடியிருக்கும். ஆனந்தனுக்கு ஒரு கை முறிந்திருக்கும்.பெரிய பாதிப்பில்லை.

எனக்கும் இருவருக்கும் ஒரு நல்ல முடிவாய் கொடுக்க கூடியதாய் இருந்திருக்கும்.

எதுவும் நடக்கவில்லை.அத்தனையும் கேயாஸின் கையில்.

ஒரு மழைநாளிரவில் வயற்கரையோர கிணற்றுக்குள் ஆனந்தன் நித்திரையிலோ அல்லது நித்திரைக்காகவோ விழுந்து தொலைக்க அடுத்த நாள் காலையில் தண்ணியள்ள வந்தவர்கள் கிணற்றுக்குள்ளால் தூக்கி, தட்டியெழுப்பினார்கள்.ஒற்றைக்கண்,முகம்,உடம்பெல்லாம் வீங்கியிருந்த்தது.ஆனந்தன் எழும்பவில்லை.

எனக்கு சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்குள் நாகம்மாவின் முகம் மட்டும் தெரிந்தது.

கொஞ்ச நேரம் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
தன்னையொத்த ஒருவனுக்கான மௌன அஞ்சலியா? இருக்கலாம்.

அவள்புறப்பட்டு...
சைக்கிளில் போகும் போது நடந்த
இரண்டு வரிகளில் இருவருக்கும் ஒரு முடிவு  கிடைத்தது.

"ஆனந்தன் நாகம்மாவை வைச்சிருந்தவனாம்.அதான் வந்திட்டு போறாள் பார்."

"நாகம்மா சைக்கிளில் நேராய் போய்கொண்டிருந்தாள்."

என் கண்ணில்தான் பிழை போல இருந்தது.
       
             ________________






#அற்பபிறவி#

Monday, September 5, 2016

ஈஸ்டனின் இளிப்பு

அண்ணரின் அலப்பறைகள் - 04

நிறைய நாட்களுக்கு பின்னர் ஒரு நீளமான அண்ணரின் அலப்பறைகளோடு....இதில் வழமையான ஹெட்லைனாய் வரும் "இது சொந்த அண்ணரின் கதையல்ல" என்ற வசனத்தை வெட்டிக்கொள்ளுங்கள்.90% கதையும் அண்ணரின் கலரான வாழ்கையில் நடந்த கறுப்பு உண்மைகள்.

டாம் அன்ட் ஜெர்ரி ஒரு  சில எபிசோடுகளில் ஒற்றுமையாய் சேர்ந்து சில சிக்கலான மிஷன்களை முடித்தது அண்ணருக்கு அவ்வப்போது ஞாபகத்துக்கு வர உடம்பு பூராகவும் லஞ்சத்தை பூசிக்கொண்டுவந்து காலடியில் விழுந்து தொலைப்பார்.நாடும்,வீடும் லஞ்சமே வாங்கக்கூடாதென்றாலும் மனசு கேளாது,அப்படியே கேட்டாலும் கையும்,வாயும் கேளாது.

ஓ /எல் எக்ஸாம் முடிந்து வீட்டில் குத்தி முறிந்த காலத்தில் ஒரு நாள் காலமை விடிந்ததும் விடியாததுமாய் அரைத்தூக்கத்தில் கட்டிலுக்கு முன்னால் அண்ணர் பல்லைக் காட்டிக்கொண்டு நிக்க,தம்பியார் பெட்சீட்டை அமத்தி காலுக்குள் வைத்துக்கொண்டார்.
அப்படி செய்ததுக்கு பின்னால் ஒரு பெரிய கர்ணபரம்பரை கதை இருந்தது, அந்த டைமில  ஆர் முதல் எழும்பினமோ அவர் மற்றவரின்ர பெட்சீட்டையும்,தலகாணியையும் உருவி "நித்திரையில் சித்திரவதை" என்றொரு அட்வென்சர் ஓடிக்கொண்டிருந்தது.அதுக்காக அலார்ம் வைத்து எழும்பிய சம்பவங்களெல்லாம் உண்டு.

இண்டைக்கு அண்ணரின்ர சேவல் வேளைக்கு கூவிட்டு என்டு தெரிய வர, தம்பியர் தலகாணியையும் இறுக்கி அமத்திக்கொண்டு கண்ணை அரைவாசி திறந்து நிலவரத்தை ஆராய, அண்ணர் நடந்து கிட்டவந்து, மெல்லமாய் குனிஞ்சு, காதுக்கு பக்கத்தில வந்து தம்பீ என்டது, காதுக்குள்ள தேனை விட்டது போல சில்லிட்டுது... தம்பியருக்கு.

நிற்க.... அண்ணர் என்ன கேட்டார், தம்பியர் அதை செய்தாரா என்றெல்லாம் பார்க்க முதல் இந்த சம்பவத்தோட சம்பந்தப்பட்ட/படாத சில பந்திகளை கடக்க வேண்டியிருக்கிறது.விரும்பமில்லாவிட்டால் பாலம் போட்டு கடந்து கொள்ளுங்கள்.

#துவிச்சக்கரவண்டியும்_தொலைதூரங்களும்.

அண்ணரின் முதற் கட்ட பாவனைக்கு பின்னர்
எனக்கே எனக்கான மூன்று சில்லு வண்டி உரிமையாகியிருந்த காலகட்டத்தில் அதன் பின்னாலிருந்த கூடை உடைத்து போயிருந்தது.கவலைப்படாமல் அந்த கூடை நிறைய சந்தோசத்தை நிரப்பிக்கொண்டு எனது முதலாவது துவிச்சக்கரவண்டி பயணம் வீட்டுக்குள் ஆரம்பமானது.

அதைவிட கொஞ்சம் பெரிய சைசில் எனக்கென்று புதிதாய் வாங்கி தொலைத்த போது அதற்கு ஒரு சில்லு குறைய அதை ஓடிப்பழகவே ஒரு மாதமானது.அது வரைக்கும் அண்ணர் எடுத்து ஓடிவிடக்கூடாது என்று உருட்டிக்கொண்டே திரிந்தேன்.

சைக்கிள் முதல் முதல் ஓடிப்பழகுவது என்பது வாழ்க்கையில் நடக்க பழகுவதற்கு அடுத்த ஒரு பெரிய தருணம்.
வாகன நடமாட்டம் இல்லாத ஒரு ஒழுங்கையில் இரண்டு முனையிலும் தெரிந்தவர்கள் நின்று விழாமல் பிடித்து விட,அதையும் தாண்டி
நாலுதரம் விழுந்து, ஒரு முழங்கை கல்லில் சிராய்த்து ரத்தம் வர, மனசை தளர விடாமல் திரும்பவும் சைக்கிளை தூக்கி பின்னால் பிடிக்கிறார்கள்தானே என்ற நம்பிக்கையில் கொஞ்சத்தூரம் ஓடி விட்டு திடீரென்று திரும்பிப்பார்த்தால் தூரத்தில் எங்கயோ நின்று கையைத்தட்டினார்கள்.

சைக்கிள் ஓடுவதையும் நம்பிக்கைத்துரோகத்தையும் ஒரே நேரத்தில் கற்று தந்த இடமது.

சமநிலை குலையாமல் பெடலை உழக்க,சில்லு சுத்த, நான் விழலைலடா!! என்று மனசுக்குள் மனசு சந்தோசப்பட,மறக்காமல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டி ஆயிரத்தில் ஒரு கணமது.

ஓடத்தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் சைக்கிளின் அரைவாசி டயர் அந்த ஒழுங்கையிலேயே தேய்ந்து போயிருக்கும்.அந்த ஒழுங்கையைத்தாண்டி தெருவுக்குள் இறங்குவது என்பது சிந்துபாத்தின் எட்டாவது கடல்பயணத்துக்கு ஒப்பானது. தொடக்கத்தில் முன்னால்  அப்பாவோ,அம்மாவோ இல்லை பக்கத்து வீடோ ஹைட்டாக வந்து ஒழுங்காக ஓடுகின்றேன் என்று நம்ப வைப்பதற்குள் இரண்டு வருசம் கடந்து விடும்.

அந்த இரண்டு வருசம் கடந்த பின் வருவதுதான் நிஜமான துவிச்சக்கரவண்டிப்பயணங்கள்.இந்த பயணங்கள் பின்னர் எனக்கு இரண்டு வகையையாய் பிரிந்தது.
முதலாவது தனி(மை)ப்பயணங்கள். 
மோட்டார்சைக்கிள்,ரயில்,பஸ்,வான்,கார் இதெல்லாவற்றிலும் போகும் போது வரும் சந்தோசத்தையும்,சைக்கிளில் போகும் போது வரும் சந்தோசத்தையும் ஒப்பிட முடியாது. எப்போதும் முதலாவதை விட இரண்டாவது தான் எனக்கு அதிகமாக இருந்தது.
சைக்கிளிங் என்பது, ஒரு த்திரில்லர்,மிஸ்டரி ஜேனர் கதை போல,காடு,மலை,காற்று,மழை,குண்டு,குழி இன்ப,துன்பம் எல்லாமிருக்கும் அதில்.இதை சொல்வதை விட அனுபவித்தால் மட்டும் புரியும்.வீட்டில் சைக்கிள் இருந்து அதற்கு பிரேக் இருந்தால் அதை கழட்டி விட்டு நாளைக்கே ஓடிப்பாருங்கள்,அந்த சந்தோசம் புரியும்.

இரண்டாவது கூட்டுப்பயணங்கள்.
பாடசாலை முடிந்தோ இல்லை ரியூசன் முடிந்தோ வீட்டுக்கு வரும் போது கட்டாயம் நாலு பேராவது அந்த ரூட்டில் சைக்கிளில் வருவார்கள்.அந்த சைக்கிள்களில் பின்னாலும் முன்னாலும் நாலு பேராவது ஏறி வருவார்கள்.அது ஒருவித மெதுவான பயணமாயிருக்கும்.காரணம் முன்னால் ஆகாயக்களும்,அதிசயாக்களும் சைக்கிளில் போக அந்த சைக்கிள்களை முந்தாமலும்,அதற்கு பின்னாலே மாறா வேகத்திலும் போவதென்பது சைக்கிளோடுவதை கால் நுனியில் தெரிந்து வைத்திருப்பவனால் மட்டுமே முடியும்.

இந்த இடத்தில் துவி.ச.வண்டி புராணத்தை  நிறுத்தி,தொடக்க பிரச்சினைக்கு போகலாம்.

அண்ணர் கேட்டது ஒரு சிம்பிளான விசயம் - சைக்கிளில் அவரோட கூடப்போகணும்.
ஏன்? எதுக்கு? என்டதை போகேக்கதான் போட்டுடைச்சார்.அதுக்கு முதல் அண்ணருக்கும் தம்பியரைப்போல சைக்கிளிங் என்டுறது ஒரு பிடிச்ச விசயமாயிருந்தது.இப்பவும் ஊருக்கு வாற நேரங்களில எண்பதாம் ஆண்டுகால ஈஸ்டன் சைக்கிளில (டைனோசர்களோடு சேர்ந்து இந்த சைக்கிள் கொம்பனியும் அழிந்துபோய்  விட்டது) காதுக்கு இரண்டு இயர்பிளக்கை செருவிக்கொண்டு ஊரைச்சுத்தி வருவார்.

அண்ணர் தன்ர காரியத்துக்கு தம்பியரை கூட்டிக்கொண்டு போறதால தம்பியர் பின்னால ஹாயாக இருக்க... அண்ணர் முக்கி முக்கி சைக்கிளை உழக்கிக்கொண்டு போற காரியத்தை விளக்கினார்.

பஸ் ஸ்டாண்ட் தாண்டி நாற்சந்தி வரும் அதுக்கங்கால ஒரு கராஜ் இருக்கு அது தாண்டி அடுத்ததா வாற பஸ் கோட்டில என்னை இறக்கி விட்டுட்டு நீர் போலாம் என்ட...தம்பியர் மறிச்சு குறுக்கு கேள்வி கேட்டார். ஏன் பஸ் ஸ்டாண்டில நின்டே பஸ் ஏறலாமே!?

பதில் ஒன்டும் வரேல்ல என்ட உடன தம்பியருக்கு விஷயம் வெளிக்கத்தொடங்கிச்சுது.இதான் சந்தர்ப்பம் என்டு  அண்ணருக்கு அட்வைசை அடிச்சு விட்டார்.

"இங்கபார் 'காதலில விழுறது' என்டுதான் எல்லாரும் சொல்லுவினம்,'காதல்ல மிதக்கிறது' என்டு ஒருதருமே சொல்றேல்ல.ஏன் என்டா 'விழுறது' என்டுறது பயங்கரமான ஒன்டு,'மிதக்கிறது' என்டுறது கனவு காணறது போல ஒன்டு.போலிங்குக்கும் புளோட்டிங்குக்கும் வித்தியாசம் விளங்குதா உனக்கு? விளங்கினா நீ தப்பிடுவா!"

திரும்பி ஒருக்கா முறைச்சுப்பார்த்தார்.
தம்பியர் அமந்துட்டார்.

இந்த திட்டத்தை எத்தனை நாளாய் மழை,வெயில் பாராமல் அலைஞ்சு திரிஞ்சு அமுல் படுத்தினவர் என்டு அண்ணருக்கு மட்டும்தான் தெரியும்.

அண்ணரிட்ட அவற்ற ஆளைப்பற்றிக்கேட்டால் தேவதைக்கு எழுத்துக்கூட்டுவார் என்டுதெரியும் அதால அத தம்பியர் தவிர்த்துகொண்டார்.

போற போக்கில அப்படியே பஸ்ஸ்டாண்டை திரும்பி ஒரு நோட்டம் விட....

"ஓ ஷிட்!"

"சைக்கிளில போகேக்க அதுகளை பாத்து மிதிக்காம போகோனும்."

போற வழில ரோட்டோரமா இருந்த பிள்ளையாரை,பிள்ளையார்தானே என்டு அண்ணர் கவனிக்கவே இல்லை.அதுதான் காரணமோ தெரியாது அண்ணற்ற ஸ்கெட்சில ஓட்டை விழுந்தது.

அந்த ஓட்டைக்குள்ளால கராஜ் தாண்டி சந்தி தாண்டி சந்திக்க வேண்டிய ஆள் பஸ் ஸ்டாண்டிலயே தெரிய.... பக்கத்திலேயே ஆரது? தெரியேல்ல!!.

ஷிட்..ஷிட்...ஷிட் என்டு காண்டிலைப்போட்டு குத்தினார்.

அண்ணர் நிக்கவே இல்லை இறுக்கி உழக்கினார்.கொஞ்ச தூரம் போய் வெட்டி உள்பாதைக்குள்ளால வீட்டுப்பக்கம் சைக்கிளைத்திருப்பேக்க கூட நின்ட தங்கைச்சிக்காரியை திட்டினார்.அண்ணர் மனம் வேதனைப்படுறது தெரிஞ்சுது.

ஆழ்ந்து யோசிச்சு
தங்கைச்சியார் வாற நாளுகளில பஸ் ஸ்டாண்டில நின்டு ஏறுதுகள் என்டதை கண்டு பிடிச்சார்.

அதுக்குத்தக்கதாய் புதுசா பிளானை போடத்தொடங்கினார்.

சுபம்

#######

என்று இது... முடித்திருக்க வேண்டும்., இருந்தாலும் ஒரு வாரம் கழித்து அதே கிழமை,அதே இடம்,அதே நேரத்தில் ...

அண்ணர் பின்னால காலையாட்டிக்கொண்டு இருக்க தம்பியர் முக்கி,முக்கி சைக்கிளை உழக்கி கொண்டிருந்தார்.

"என்னை பஸ் ஸ்டாண்டில இறக்கி விட்டுட்டு நீர் போலாம்" என்டு தம்பியர் சொன்னதைக்கேட்டு
ஈஸ்டன் சில்லைக்காட்டி இளித்தது.

                         _______________








#அற்பபிறவி#

Wednesday, July 27, 2016

காதல் இல்லாமல்....2.0

அதிசயாவின் தலை மட்டும் கேபினுக்குள்ளால் தெரிந்தது.அவ்வப்போது பென்சில் காதோரப்பக்கம் போய் வருவது தெரிந்தது.பிங் கலரில் அலிஸ்பாண்ட் போட்டிருந்தது தெரிந்தது.தலை முடியை பின்னாமல் லூஸ் கேராய் விட்டிருக்கின்றாள் என்று தெரிந்தது.கொஞ்சம் எட்டிப்பார்த்தால் லைட் புளூ கலரில் டீசார்ட்  போட்டிருப்பது தெரிந்தது.
காதலிக்கின்றாளா! இல்லையா என்பது மட்டும் தெரியவில்லை.

கடந்த மாசி மாதம் 14ம் திகதி ஒரு டைம்லைனில் இருக்கிற பூங்கிளிக்கு சிங்கா என்கிற சிங்கண்ணன் கடற்கரையோரமாய் வைத்து புறப்போஸ் பண்ணியபோது இன்னுமொரு டைம்லைனில் இருக்கிற விசித்திராவுக்கு ராகீ கோயிலடியில் வைத்து புறப்போஸ் பண்ணிய போது இதோ இந்த  டைம்லைனில் இருக்கிற அதிசாயவுக்கு எப்படி புறப்போஸ் பண்ணுவது என்று தெரியாமல் விக்கித்து நின்று கொண்டிருந்த போது எங்கேயோ ஒரு குறித்த டைம்லைனில் ஜீரோன் ஆலியாவை மறித்து,  மறைத்துக்கொண்டு வந்த பெட்டியை கையில் கொடுத்து,

"ஆலியா"

நிமிர்ந்து நேரே பார்க்க..
காற்றுக்கு வலித்திருக்காது.நிச்சயம்.

வாழ்நாளின் கடைசித்தருணங்களுக்காய் அந்த பார்வையை மின்அலைகளாய் மாற்றி மூளைக்குள் பதித்துக் கொண்ட ஜீரோன் ஆயிரம் தடவைக்கு மேல் மனதுக்குள் சொல்லிக்கொண்டதை வெளியுலகத்துக்கு இல்லை தன் உலகத்துக்கு சொன்னான்

"I want to say somthing!"

"Ok."

"What I'm about to say is probably the most selfish think I have ever said in my life."

"What is it"

"I love u"

"எகைன்! ஆலியா அன்ட் ஜீரோன் வேற கதைக்கருவே இல்லை கரக்டர்ஸோ உனக்கு கிடையாதா?"

"எடிட்டர் கேட்ட அதே கேள்வியை அதிசயாவும்  கேட்க!"

தோளை உயர்த்தி வாயை சுளித்து மேசையில் கிடந்த ஓயில் கலரை எடுத்து பேப்பரில் கோலம் போட்டுக்கொண்டே பார்த்தேன்.

கார்ட்டூனிஸ்டும், "சிக்கல் கேள்விகளும் விக்கல் விடைகளும்" பகுதிக்கு பதில் எழுதுகின்றதும் போன காதலர் தினமன்று வெளியான "காதல் இல்லாமல்..." கதையின் ஒரு கதாநாயகியும் ஆன அதிசயாவின்  இடது காதோரத்துக்கும் கழுத்துக்கும் இடையில் பட்டனளவு ஒரு மச்சம் இருந்தது.கவனித்துக் கொண்டேன்.அடுத்த கதையில் பயன் படுத்திக்கொள்ளலாம்.

"வாய்க்குள்ள என்ன பேர்கரா?!
வாயைத்தொறக்கமாட்டீயா"

"Some times questions are simple
But, answers are complicated!"

அதிசாயவின் ஒரு கண்  சிரித்தது.
அதிசயா ஆச்சரியப்படும் போது அப்படித்தான் கண் சிரிக்கும்.

"எங்க சுட்டா  இதை?"

"இதுவா!!. சீயஸோடது.
ஒரு படத்தில இந்த பிலோசஃபியை  சொல்லியிருக்க அதுக்கு விமர்சனம் எழுதினவன் நல்ல முயற்சி. நல்லா வசனம் எழுதியிருக்கு என்டு இத கோட் பண்ணி எழுதியிருந்தான்.அது அப்படியே ஞாபகம் நிக்குது"

"விமர்சனம்!  
என்னக்கறுமத்துக்கு அதெல்லாம் வாசிக்கறாய்"
விமர்சனங்களை பற்றி விமர்சனம் பண்றதே எனக்கு பிடிக்காது"

அதிசயாவின் பயோ டேட்டாவில் இதையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.அதிசயா- just an admirer.

பத்திரிகையின் இருபத்தி நாலாம் பக்கத்தில் இடது மூலையில் வாராவாரம் வந்து கொண்டிருந்த விமர்சன பகுதி- கடந்த ஆண்டு இரண்டாம் மாதம் முதலாம் திகதி அதிசயாவுக்கு வெல்க்கம் பார்ட்டி வைத்தபின் வெளியாவது நின்று போனது.அன்றிலிருந்து சீஃப் எடிட்டர் அவ்வப்போது அதிசயாவை கூப்பிட்டு ஆலோசனை கேட்டுக்கொள்வார்.நவ் சீ இஸ் தி கார்டூனிஸ்ட் அன்ட் அட்வைசர் ஒப் தி நியூஸ்பேப்பர்.

இது அலுவலகத்தில் இருந்த சிலருக்கு அடி வயிற்றில் 5600 கெல்வினில் எரிந்தது.அந்தக்கூட்டம் அதிசயாவை "ஒரு ஓவியச்சி" என்று திட்ட அதிசயவை ஆதரித்தவர்கள் ஓவியா என்று அழைத்துக்கொள்ள..அதீ! என்று அழைக்க அனுமதி மறுக்கப்பட்டாலும் அதை மறந்து அவ்வப்போது அழைத்துக்கொள்ளுகின்ற ஒரே ஒரு ஜீவன் இப்போது..

"என்ன கேட்டாய்..."

"எதுவும் கேட்கல்லை.சொன்னான். சுழல் கதிரையில் சுழன்று கொண்டே பேசுகிறாள் என்றால் நல்ல மூடில் இருக்கிறாள் என்றர்த்தம்.அவதானித்த அடிப்படையில் எல்லோரிடமும் இப்படி கதைப்பது கிடையாது. "இது காதல் இல்லாமல வேறு என்ன?! " என்று கேட்டால் சட்டென்று நாலு கோடு இழுத்து காதலுக்கெதிராய் ஒரு கேலிச்சித்திரம் கீறி காட்டுவாள்.ஒரு பைல் நிறைய அதெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன். மொத்தம் ஒரு நூற்று நாப்பத்திரண்டு, இன்றோடு சேர்த்து.

என் கதைகளுக்கு ஓவியம் போடும் பொறுப்பு அதிசயாவிடம் போய் இரண்டாவது வாரம் இருக்கும்.

காவலுக்கு நின்ற தைரியத்தை துணைக்கு கூட்டிக்கொண்டு போய் மூச்சை வாய்க்குள்ளாலும் குரலை
மூக்குக்குள்ளாலும் விட்டு..

"அதிசயா! உன்னால.. என் வாழ்க்கை கதைக்கு ஓவியம் போட முடியுமா என்று கேட்டேன்"

சட்டென்று ஒரு பேப்பரை உருவி பென்சிலால் நாலு இழுவை இழுத்து சேக் பண்ணி தந்தாள்.
வாங்கிப்பார்த்தேன் "பிய்ந்த செருப்பின் படம்" எட்டாம் நம்பர் சைஸ் இருக்கும்.
பத்திரப்படுத்திக்கொண்டேன்.

அன்றிலிருந்து,அவ்வப்போது இந்த கதைக்கு எப்படி முடிவு கொடுக்கலாம்,அந்த கதைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்கும் சாக்கில் அதிசயாவின் கேபின் மேசையில் கிடக்கும் கலர் பென்சில்களை கூர் தீட்டியிருக்கிறதா என்று பார்த்து கொள்வேன்.அதன் அடிப்படையில்

இப்ப வந்திருக்கிறது பெரிய பிரச்சினை அதீ..
ம்ம்
இந்தக்கதையோட முடிவு இருக்கு. தொடக்கம் இல்லை.

"ஜீரோன் ஆலியாக்கு போய் புறப்போஸ் பண்ணுறதோட கதை முடியுது. தொடக்கம் கிடையாது."

"அதேதான்"

"சோ, ஒரு கதைக்கு தொடக்கம் இல்லாட்டியும் பிரச்சனை தான்."

அதிசயாவின் கை குறுகுறுத்தது.பென்சிலை இடம் வலமாய் ஆட்டிக்கொண்டாள்.நெற்றியில் விழுந்த முடியை இழுத்து காதோரம் செருவிக்கொண்டாள்.
வேக வேகமாய் எழுதத்தொடங்கியது.-அற்புதப்பென்சில்.

ஜீரோன்,காதலே இல்லாத டைம்லைனில் ஏவாளை கண்டுபிடித்த ஆதாம்.காதலை சொல்வதற்காய் ரொம்பவே கஷ்டப்பட்டு, ஏழு மலை, கடல் ,குளம் தாண்டி கொடுப்பதற்காய் ஆப்பிளுக்கு சரி நிகரான ஒரு பொருளை கண்டு பிடித்து மெல்லிய பெட்டிக்குள் வைத்து பூட்டிக்கொண்டான்.மேலே எதுவும் எழுதலாமா என்று யோசித்து நிராகரித்தான்.ஆலியா வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவள்.

பெட்டியைக் கொடுத்தான்.

வாங்கிக்கொண்டாள்.

"தட்ஸ் இட்!."

அவ்வளவுதானா.இதுக்கும், முடிவுக்கும் என்ன சம்பந்தம்.

"வட்ஸ் இன் தி பொக்ஸ்?"
"வெய்ட்!,"
கண்ணாடியை அட்ஐஸ்ட் பண்ணிக்கொண்டாள்
அற்புதப்பென்சில் மீண்டும் கீறியது.

அதிசயா கீறியதை கொடுக்க...
ஆலியா ஜீரோனிடம் பெட்டியை வாங்கி திறந்து பார்த்தாள்.

ஒரு ஓவியம்.
இரு செருப்புக்கள்.கொஞ்சம் வித்தியாசமான சோடியாக...
இடப்பக்கம் ஒரு எட்டாம் இலக்க செருப்பும்-வலப்பக்கம் ஒரு பெரிய பத்தாம் இலக்க செருப்பும்.
கறுப்பு வெள்ளையில் பென்சிலால் சேக் பண்ணி
மூலையில் 
(அதீ!! 2016/07/27)கிறுக்கியிருந்தது.

ஆலியா சிலிர்த்துக்கொண்டாள்

"OMG! It's dated 2016/07/27.!!
what an antique painting?,
Where did u get it?"

From the story "without love...2.0" 
by....

                ____________________






#அற்பபிறவி#

Monday, July 18, 2016

அதிகப்பிரசங்கிகள்.

கோயில் திருவிழா ஆரம்பிப்பதற்கு முதல் வாரம் நிர்வாகக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
பின் வரிசையில் கதிரைகள் இருந்தும் தம்பாவின் குறூப்பும் கிச்சாவின் குறூப்பும் கையைக்கட்டிக்கொண்டு எழும்பி நின்று கொண்டிருந்ததற்கு காரணம் இருந்தது.
கூட்டத்தில் தப்பான முடிவுகள் எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் எல்லாம் குண்டுமணி ஒரு தடவை செருமி புழுக்கொடியலை படக் என்று  முறிக்கும் சத்தம் தலைவருக்கும் செயலாளருக்கும் மட்டும் கேட்டது.
  • சுண்டல்காரர்களுக்கு இந்த தடவை அனுமதி கொடுக்க கூடாது.-படக்.
  • கடலையோடு பூந்தியும் பிரசாதமாய் கொடுக்கலாம்.
  • பூங்காவனம் அன்று கோஷ்டி எதுவும் வேண்டாம்-படக்... படக்க்.
முக்கியமான இந்த கதைக்குரிய ஆலோசனை நடைபெறத்தொடங்கிய போது கண்காணிப்புக்குழு அலேர்டாகியது.
"இந்த தடவை பிரசங்கத்திற்கு யாரை அழைப்பது?"
முன் வைக்கப்பட்ட அபிப்பிராய பட்டியலில் எதிர்பார்க்கப்பட்ட பெயரில்லை.

அவரை வைக்கலாம்,இவரை வைக்கலாம் என்று கொண்டிருந்த போது...அந்த பெயர் கேட்டது.

"புஸ்பமணியம்"
தம்பா தைரியமாய் நின்று கொண்டிருக்க,
ஊசி விழுந்தபோது 'டிங்' என்று சத்தம் கேட்டது.

தலைவர் இங்கிலீசுக்கு மாறினார்.
"யூ மீன் புரோக்கர் புஸ்பமணியம்"
"ம்" விச்சுவா தலையசைக்க,கூட்டம் சலசலத்தது.

புரோக்கர் புஸ்பமணியம் ஒரு சிறு அறிமுகம்.
சப்பச்சி மாவடியடி புரோக்கர் புஸ்பமணியம் என்றால் மாலைதீவில இருக்கிற மடோனோ கூட சொல்லும்
"பு.ம...
யா!.. ஐ நோ கிம் "

பாப்யுலர் என்டா புரோக்கர் பு.ம,
பு.ம என்டா பாப்யுலர் என்டுதான் அவர் வீட்டில் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தார்.

ஐந்தடி இரண்டங்குலமேயான,பு.ம ஒரு கல்யாணப் புரோக்கராய் உருவானது சரியாய் 2005 ஆம் ஆண்டு 04ம் மாதம் 13 ம் தேதி.அவர் முதல் முதலாய் பொருத்தம் பார்த்து கல்யாணம் கட்டி வைத்தது தனக்கும் தன்ர மனுசிக்கும்.அவற்ற வாழ்க்கைல முதலும் கடைசியுமா சொதப்பின ஒரே ஒரு சம்பவம் என்டா அது மட்டும்தான்.

பு.ம ன்ர கையில ஒரு குறிப்பு போனால் அதுக்கு பொருத்தமான ஒரு குறிப்பை எங்க இருந்தென்டாலும் செஞ்சுவைச்சது போல எடுத்துட்டு வாறதுதான் பு.மாவின் தனித்திறமை.அதுக்கு பு.ம க்கு உதவியது அவ்வப்போது பீடி அடித்து அரைவாசி கறுப்பாயிருந்த அவரின் வாய்.

பு.மா வுக்கு ஒரு பரந்த பட்டறிவும் ஓரளவு படிப்பறிவும் இருந்தது.ஆரம்ப காலங்களில் அதாவது புரோக்கர் தொழிலுக்கு வர முன்னர் கோயில்களில் பிரசங்கம் செய்வது பு.ம வின் ஒரு பஷனாக இருந்தது.அவரின் பிரசங்கத்துக்கு அடிமையான ஒரு பதின்ம வயது கூட்டமே இருந்தது. அதை தாண்டிய வயதெல்லாம் அவரின் பிரசங்கத்துக்கு எதிர்ப்பான கூட்டாமயிருந்தது.

அதற்கு காரணம் பு.ம வின் பிரசங்க ஸ்டைல்.
இராமயணமா,மகாபாரதமா...கம்பரும், வால்மீகியும் தலையில் விக்ஸ் பூசும்படியாக கதை சொல்லப்படும். நடக்கும் பத்துநாள் திருவிழாவில் எட்டுநாளும் இராமனும்,சீதையும் காதலித்த விதம், அது எப்படி மகாபாரத்ததில்  பாஞ்சாலி,பாண்டவர்களோடு தொடர்புபட்டது, முட்டை இல்லாட்டி கோழி வந்திராது என்பதற்கு மேலால் போய் சேவல் இல்லாட்டி முட்டையே வந்திருக்காது,இராமன் இல்லா விட்டால் கிருஷ்ணன் கிடையாது என்று நிறுவிக்கொண்டு போய் பத்தாம் நாள் சண்டைவந்தது, கதை முடிந்தது என்று சொல்லி முடிக்க கனவுலகத்தில் இருந்த இளைஞ்ஞ,இளைஞ்ஞிகள் ஆரவாரிப்பார்கள். ஒரு கூட்டம் தலை சொறிய ஒரு கூட்டம் எரிச்சலடையும்.

ஒரு தடவை பிரசங்கத்தின் போது சிலப்பதிகாரம் ஓடியது.கண்ணகிக்கும் கோவலனுக்கும் பொருத்தம் பார்த்த போது கோவலனுக்கு ஏழில் கந்தன் நிற்கிறான்,அவனுக்கு இருதாரப்பலனுண்டு என்று சொல்லியும் அதை மதியாமல் - கோவலனும் வெஜ் கண்ணகியும் வெஜ் என்று சொல்லி கல்யாணம்  செய்து வைக்க கடைசியில் மாதவியோடு எப்படி அது நொன்வெஜ் ஆகியது என்று சொல்லி முடித்த போது, நிறையப்பேர் எரிச்சலாகி விட்டார்கள். அன்றிலிருந்து அவரை பிரசங்கத்துக்கு அழைப்பதையும் நிறுத்தி விட...

காலப்போக்கில் பதின்ம வயதுகளின் ஆதரவும் குறைந்த போது பு.ம அந்த தொழிலுக்கே முழுக்கு போட்டு விட்டு புரோக்கர் தொழிலுக்கு நிரந்தரமாகிவிட்டார்.

இப்போது குண்டுமணி,தம்பா போன்றோரின் முயற்சியால் வரலாறு மீள எழுதப்பட இருந்தது.
கூட்டத்தில் பு.ம தான் இந்த தடவை பிரசங்கம் என்று தீர்மானமாகியது.ஆனால் இதிகாசங்கள் எதுவும் இந்த முறை வேண்டாம் கேட்டு அலுத்து விட்டது.புதிதாய் ஏதாவது கொண்டுவரச்சொல்லுமாறு செயலாளர் நசூகலாய் சொல்லிவிட்டிருந்தார்.
இதிகாசங்கள் பு.ம வால் சாகக்கூடாது என்ற பாரிய பொறுப்புணர்வில் மட்டும் அவர் அதை சொல்லவில்லை. இராமயணம், மகாபாரதங்களை விட்டால் பு.ம வுக்கு வேறு ஏதும் தெரியாது.அதனால் பு.ம இந்த பிரசங்க மெதேட்டை ஏற்றுக்கொள்ளவும் மாட்டன்,வரவும் மாட்டான் என்ற சதி நம்பிக்கையில் சொல்லப்பட்ட கூற்று அது.
பு.ம வை அழைத்து வரும் பொறுப்பை தம்பாவின் டீமே ஏற்றுக்கொண்டது.

பு.ம எப்படியும் பிரசங்கத்துக்கு வரமாட்டான்,என்ற நம்பிக்கையில் நிர்வாகக்குழு வேறொரு ஆளையும்  யாருக்கும் தெரியாமல் ஒழுங்கு பண்ணியிருந்தார்கள்.

அவர்கள் போய் பு.ம வை அழைத்த போது பு.ம வந்தாரா இல்லை நிர்வாத்தினரின் சதிச்செயல் வென்றதா என்று பார்க்க முன்...

கோயில் பிரசங்கங்கள் பற்றிய பீலிங் நொஸ்டால்ஜிக் உடனான ஒரு சில பராக்கள்.

                          #########

சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் பெரும்பாலான போக்மன்ஸும் கோயிலடிவாரத்திலேயே சிக்குப்பட்டது. அப்படி சிக்குப்பட்ட பிக்காச்சுகளில் ஒன்றுதான் இந்த பிரசங்கம்.ஊரிலுள்ள எல்லாரையும் வா, வா என்று ஒலிபெருக்கியில் கூப்பிட்டது.

கோயில் வசந்தமண்டபங்களிலோ இல்லை வெளியில் இருக்கும் வேப்பமரத்துக்கு கீழோ அத்தனை பேரும் இருக்க பிரசங்கத்துக்கேயான அந்த தனித்தொனியில் முழங்கும் போது,...
ஆரம்பத்தில் அது முடியத்தான் பிரசாதம் தருவார்கள் என்று சொல்லி மடக்கி வைத்திருந்த அப்பாவைத்தாண்டி காலப்போக்கில் பிரசாதத்துக்கு எழுந்த அப்பாவை நான் மடக்கி வைக்குமளவுக்கு பிரசங்கங்கள் ஈர்த்திருந்தது.

கம்பர் ராமாயணம், வால்மீகி மகாபாரதம் என்பதிலும் பார்க்க பிரசங்கம் செய்வோரின் பெயரிலேயே அந்த ஊர் ராம,ராவணனை அறிந்து சகுனி மேல் கோபம் கொண்டு சந்திரமதி மேல் பரிதாபம் கொண்டிருந்தது.

ஒருவரின் வாயை மட்டும் ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேல் பார்த்துக்கொண்டிருக்க முடியும் என்று நிரூபித்த அனேக பிரசங்கிகளை கண்ணால் பாத்திருக்கிறேன்.பிரசங்கம் என்பது ஒரு தனி உலகம்.பிரசங்கிகள் அதற்கான சாரதிகள்.

சாதாரண பத்து நாள் திருவிழாக்களையும் அத்தியாயங்களினால் அலங்கரிப்பவர்கள்.
படித்த காலத்தில் இரண்டு,மூன்று கோயில்களில் பிரசங்கம் செய்கின்ற ஆசிரியர்ளோடு நேரடி பழக்கம் இருந்தது. அவர்கள் இரண்டு நிமிட நற்சிந்தனைக்கு மேடையில் கால் வைக்க முதலே ஒரு அமைதி நிலவும்.அதுதான் அவர்களுக்கு கிடைத்த அரிய வெகுமதி.

"அண்ணலும் நோக்கினாள்,அவளும் நோக்கினாள்" என்று சொல்லி
விசித்திரா ராகீயையும்,பெருமாள் ஆண்டாளையும் பரஸ்பரம் பார்த்து கொள்வதற்கு ஒரு சிறிய வினாடி இடைவெளி விட்டு தொண்டையை கனைத்து அவர்களை தன்பக்கம் திருப்புகின்ற பிரசங்கிகளும் இப்போது தொலைந்து விட்டார்கள். அப்படி பார்த்து கொள்கின்ற அடியவர்களும் ம(ை) றந்து விட்டார்கள்.

இதற்கு பு.ம போன்றவர்கள் பிரசங்கங்களை விட்டு விட்டு பிற தொழில்களுக்கு போனது ஒரு காரணம். போக்மன்ஸ் வேறு இடங்களுக்கு சிதறி ஓடியது இன்னுமொரு காரணம்.

                            ##########

இதை மாற்றுவதற்காகதான் தம்பா போயிருந்தான்.

இனி.....

முதலாம் நாள் திருவிழா.
ஆரம்ப கட்ட பூஜைகள் முடிந்து பிரசங்க வேளை ஆரம்பமாகிவிட்டிருந்தது.
தம்பா வென்று விட்டிருந்தான்.
பு.ம வந்திருந்தார்.தலைவரும் செயலாளரும் வேட்டியை இறுக்கி கொண்டார்கள்.மகாபாரதத்தையும்,இராமயணத்தையும் விட்டு விட்டு பு.ம என்னத்தை சொல்லி கிழித்து விடப்போகிறான் என்ற இறுமாப்புடன் பரஸ்பரம் அவர்கள் சிரித்துக்கொள்ள
பு.ம ஆதரவுக்கூட்டம் ஆரவாரத்தோடு வந்தமர்ந்திருந்தது.ஒரு பகுதி எழும்பி போய்விட்டது. ஒரு தரப்பு காதை பு.ம வின் பக்கம் திருப்பிக்கொண்டு பிள்ளையாரைப் பார்த்தபடி இருந்தது.

பு.ம ஒரு புன்முறுவலோடு தொண்டையை செருமிக்கொண்டு வணக்கம் சொல்லி குறித்த அந்த தொனியிலே ஆரம்பித்தார்..

"திருமுனைப்பாடி நாட்டிலே,தில்லைக்கு மேற்கே இரண்டுகாத தூரத்திலே பரந்து விரிந்திருக்கின்ற வீரநாரயண ஏரி என்று பெயர் கொண்ட அந்த ஏரியை நோக்கி ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்திலே ஒரு வாலிப வீரன் குதிரையிலே வந்து கொண்டிருக்கின்றான்."
                                             ___________________________










#அற்பபிறவி#

Sunday, June 12, 2016

ஒரு பட்டாம்பூச்சியின் பள்ளிக்கால டயரிக்குறிப்புக்கள் - 04

(கடைசி எபிசோட்...
அதால கொஞ்சம் இல்லை நிறையவே லென்ந்த் கூட சகித்துக்கொள்ளவும்)

இதுக்கு டைட்டில் "ஜன்னலோரம்" என்று வைத்து விட்டு,

பஸ்ஸில போவது என்பது விருப்ப பட்டியலின் 7வது இடத்தில் இருக்கிறது.

சின்ன பிள்ளைல அம்மாவோட பஸ்ஸில ஏறி மேல இருக்கிற கம்பி எனக்கு எப்போடா எட்டும் அதை நானும் பெரியாக்கள் மாதிரி பிடிச்சுட்டு போறதுக்கு என்டு கொட்டாவி விட்டு கைக்கெட்டின அம்மாவோட முந்தானைய பிடிச்சுட்டு யன்னலுக்கு வெளியால பார்க்கும் போது ,
பஸ் ஓடுறதுக்கு எதிர் திசைல எல்லாம் ஓடும்.அதை பார்க்க பயங்கர சந்தோசமா இருக்கும்.

"அதுக்கு காரணம் சார்பியக்கமடப்பா" என்டு அதை சயன்ஸ் வாத்தி எனக்கு விளங்கப்படுத்தின வயசில அதைப் பார்க்கறதில இருக்கிற சந்தோசம் கொஞ்சம் தேஞ்சு போயிருந்தாலும்
இப்பவும் யன்னல் கரை சீட் என்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள்ல ஒண்ணுதான்.

"மயில் தோகையின் நடுவிலும்
பஸ்ஸில் ஐன்னலோரமும்"
எப்போதும் இரசிக்கத்தக்கவை.

என்று 'சிகரங்களை நோக்கி'யில் வைரமுத்து கிறுக்கியதை பார்க்க சந்தோசமாயிருந்தது.
சாவகச்சேரில இருந்து யாழ்பாணம் எத்தனையோ தரம் பிறந்ததில இருந்து போயிருந்தாலும் ஒவ்வொரு முறை போகும் போதும் புதிதாய் தெரியும் இருபக்க கரையும்,நாவற்குழி பாலமும்,விளம்பர பலகைகளும்,இதர பிற இத்யாதி அம்சங்களும்.

அதற்கு பஸ்ஸும் நல்ல கொண்டிசன்ல இருந்து டிரைவரும் ஒரு நல்ல ரசிகனாய் இருக்கும் பட்சத்தில், ஏ.ஆரோ அல்லது இளையராஜாவோ செவி வழி துணை செய்ய, அந்த பஸ் என்னை பொறுத்தவரை ஒரு நகரும் சொர்க்கம்.

சீட்டுக்காக,
நடக்கும் ஐஞ்சு வயசு குழந்தையை தோளில் தூக்கிகொண்டு ஏறும் அம்மாவிலிருந்து,அடிக்கும் காற்றில் நெற்றியில் விழும் ஓரிரு முடியையும் அழகாய் இழுத்து பின் காதில் செருவி விடுகின்ற பெயர் தெரியாத அந்த அவள் வரை ஒவ்வொன்றுமே அழகாய் தெரிவது இந்த பயணங்களின் போதுதான்.

நெரிச்சல் இருக்கும் வேளைகளில் இதையெல்லாம் ரசிக்க சாத்தியமில்லைதான்.

ஆனால், "அம்மா பின்னால போம்மா, அண்ணை தள்ளி நில்லுங்கோ" என்று ஆட்களை அடையும் கொண்டக்டரை,
கூட இருக்கும் ப்ரெண்ட்ஸ்ஸோடு சேர்ந்து கலாய்த்து புஃட்போட்டில் தொங்கிக்கொண்டு போகும் போது அந்த நெரிச்சல் தெரிவதில்லை.

சாதாரணமாய் இப்படி சின்ன பயணத்தை கூட ரசித்த எனக்கு .
மொத்த வகுப்புமாய்
வழிதுணையா நாலைஞ்சு சேர் மாரும் ரீச்சர்ஸ்ஸும்.
ஐந்து நாட்களையும் செதுக்கி
நாட்டை சுத்தி ஒரு ரவுண்ட்,
அடித்து முடித்த போது பிறந்தபயனை அடைந்ததாய் ஒரு உணர்வு வந்தது.

அடுத்தது
‪#‎ஓட்டையைப்பெரிசாக்கவும்‬...#

கோயில் திருவிழா அப்டி என்ற விஷயத்துக்குள்ள குறிப்பா குறிப்பிடக்கூடிய ஒரு விசயம் இருக்கு.

பத்து வயசா இருக்கேக்க,

வீட்டுக்கு பக்கத்தில கொஞ்சம் தள்ளி ஒரு முருகன் கோயில் இருக்கு.
அப்ப என்ன நாம ஆள் பார்க்கவா போகிறோம்.கஸ்ரப்பட்டு அங்க இங்க என்டு ஆக்கினை கொடுத்ததில ஒரு ஐஞ்சோ பத்தோ தந்திருக்குங்கள்.

அதையும் அங்க போன உடன செலவழிக்க விடாதுகள்.
"இப்ப வாங்கி திண்டா அப்புச்சாமி கண்ணை குத்தும்டா" எனும் போது வருகின்ற பெரிய சந்தேகம்
"கண்ணைக்குத்தினா அது எப்டி அப்புறம் அப்புச்சாமி ஆகும்"

இப்பவும் அம்மா அப்டி கோயிலுக்குள்ள இழுத்து எங்கயும் போக விடாம மடில வைச்சிருந்தா அந்தக்கேள்வியை கேட்டிருப்பன்.இரண்டுமே நடக்கேல்ல.

வீட்ல தண்டினது சில்லறை என்டா கஸ்ரம்.தாளா இருந்தா அப்பர் கட்டி விட்ட இடுப்பில நிக்காத வேட்டின்ர விளிம்பில பெரியாக்கள் மாதிரி அந்த தாளை செருகிட்டு கச்சான் விக்கிற ஆச்சிக்கு முன்னால போய் இடுப்பில கை வைச்சுட்டு நிக்க

"என்னடா தம்பி வோணும்.?"

"அந்த போத்தலுக்க கிடக்கிறது."

"ஒண்டு பத்து ரூவ"

"அப்ப அது?"

"மூண்டு பத்து ரூவ"

அப்ப ....
"நீ எவ்வளவு வைச்சிருக்கா?"

"அவனுக்கு நீ பத்து ரூவாக்கு கச்சான் குடனை காணும்."

வழமையப்போல அந்த உருண்டை ரொபின்ட விலை கேட்கிறதுக்குள்ள குழப்பிப்விட்ட  அப்பா.

எனக்கு கொஞ்சம் வளர்ந்த பிறகு தான் பிடிபட்டது.நான் அந்த உருண்டை ரொபிக்கோ அல்லது கச்சான் கம கடலைக்கோ அப்போ ஆசைப்பட்டிருக்கவில்லை.அதை விற்ற ஆச்சி.அந்த இடத்தில் நின்ற நான்.அந்த இரண்டு விசயங்கள்தான் உண்மையில் பிடித்திருந்தது.

இரண்டாவதா குறிப்பிடற விசயம் வளர்ந்தாப்பிறகு வாறது.கோயிலுக்கு
சின்னனா இருக்கேக்க கடலை வாங்க போறது இப்ப போட போறது ஜஸ்ட் ஒரே ஒரு சொல்தான் மாற்றலாகியிருக்க

ஏண்டா தாவணில அதுவும் கோயில்ல மட்டும் எல்லாருமே அழகா தெரியுறாங்க?

"அதான்டா ஆண்டவனோட கிருபைங்கிறது"

அந்த சின்ன வயசில கச்சான் வாங்க ஆசைப்பட்ட அந்த ஆச்சி.
பெரிசானப்புறம் ரசிச்ச தாவணி,கிருபை
இரண்டையும் ஒரே கல்லில அடிக்க முடிந்தது.
இங்கே..
ஸ்கூல்ல இன்ரேவல் ரைம்ல பின் கேற் வழியா  வந்து அப்ப நான் ஆசைப்பட்ட உருண்டை ரொபில இருந்து கடலை, கச்சான், மிக்சர் என்று எல்லாமே வித்த ஆச்சி.ஆச்சி ரேஞ்சுக்கு அவவுக்கு வயசில்லா விட்டாலும் அப்புறம் உங்களை ஏன் ஆச்சி என்டுறாங்கள் என்ற போது  தான் விற்பதற்கு முதல் தன் தாய் இப்படி இதே இடத்தில் விற்றதாக.அதன் பின் ஒன்று மட்டும் புரிந்தது, ஆச்சி நாங்கள் வாங்குவதால் வருகின்ற வருமானத்தில் வாழவில்லை.தன் தாயைப்போல தானும் எங்களோடு வாழ வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே.அந்த எண்ணத்தில் தீப்பிடித்தது.
யாரோ ஒரு கிருதாரி பள்ளிக்கூடம் முடியிறக்கிடல அவசரப்பட்டு அந்த கேற்றை மேலால தாவ அநியாயம் தகரம் வைச்சு, கேற்றை அடைதது சமூகம்.

இருந்தாலும் எங்களால ஆச்சியை விட முடியல்ல .ஆச்சியாலையும் எங்கள விட முடியேல்ல.
கை போறளவுக்கு தகரத்தில் ஓட்டை போட்டோம்.
இம்மியும் பிசகாம மிச்சக்காசையும் கேட்ட சாமானையும் சரியா முகத்தை பார்க்காமலே கையில வைக்கிற அவவோட சாமர்த்தியத்தை கடைசி வரை ரசித்தோம்.

சந்தோசம்.
இனி இருப்பவர்களிடம் ஓர் வேண்டுகோள் ஆச்சியின் முகம் பார்க்குமளவுக்கு அந்த ஓட்டையை பெரிசாக்கவும்.

அடுத்தது ஆச்சிக்கு அடுத்ததாய் பலர் போகுமிடம்
டான்னு 10 டொட் 55 க்கு பள்ளிக்கூடத்தில ஒரு பெல்லு அடிக்கும்.
அதுக்கு முதல் ப்ரீயா இருக்கிற பாடத்துக்கே வீட்டுல இருந்து கொண்டுவந்ததை தின்னுட்டு இன்டேர்வலுக்கு போறது...

இந்த இடத்தை திகில் கதை பாணில வர்ணிச்சா
மண்டபத்தின் ஒரு பக்க சுவரிலுள்ள ஓட்டைகள்,முழுதும் ஒட்டடைகள் கறுப்பாய் புகை படிந்து அந்த அறையினுள் இரண்டு மேசையுடன் ஒரு காலில்லாத வாங்குகள்.
அதைத்தாண்டி மற்றைய அறையினுள் புகை மண்டலம். நிறைய உருவங்கள் அருஉருவமாய்.
அந்தப் பெட்டி.அதை உன்னிப்பாய் கவனித்தேன் ஒன்றுமே தெரியவில்லை.கண் வேறு எரிந்தது.மீண்டும் கண்ணைக்கசக்கி தைரியமாய் பார்த்தேன் இரண்டு மூன்று உருண்டைகள்.

"மச்சி வாய்ப்பன் கிடக்கடா!!"

"வாங்கடா வாங்கு "

"ம்.காசு?"

"பத்து ரூபாய் நாலாய் மடித்து நீட்டியது அந்த கஞ்சப்பிசினாரி"

வேறு வழியில்லாமல் எல்லாம் செலவழிச்சு மிச்சமா இருந்த எக்ஸ்ஸாமுக்கு கட்ட வைச்சிருந்ததை காசு பொக்கட்டுக்குள்ளால தோண்டி எடுத்தன்.ஐம்பது ரூபா. காசை அவனிட்டயே கொடுத்து

"இரண்டு வாய்ப்பன்
இரண்டு ரீ"
இதுதான் கன்ரீன்.

இன்ரேவல் ரைம் இந்த ஏரியா பொடியளின்ர ராஜ்ஜியம்.இந்த ஒரு இடம் கம நேரத்திலதான் பொடியள் தைர்யமாய் நிமிர்ந்து நிண்டு கதைச்சுட்டு இருக்கேக்க வாத்திமாருக்கு மட்டும் தலை சுளுக்கு வந்து குனிஞ்சு கொண்டு போற இடம்.ஏன்? அதில ஒருத்தன் ஒற்றைக்காலால சுவருக்கு உண்டு குடுத்துட்டு நிக்கேக்க வந்த வாத்தியார் யாராவது மாறி நிமிர்ந்து பார்த்து முறைச்சா ஏ!இந்தடா ஓசி ரீ என்பான், பக்கத்தில் நிற்பவனை பார்த்து.தேவையா இந்த அசிங்கம் என்று குனிஞ்சுட்டே போய் விடுவார்கள்.பெரும்பாலானவர்கள் அந்த பாதையை பயன்படுதாதுவதே இல்லை.

அவன் வாங்கி வந்த
ரீ சுட்டுது.அதனால் கப்பும் சுட்டுது. வாங்கி தூண்ல வைச்சுட்டு வாய்பனை கடிக்.

"நட்பு சொல்லாம கொள்ளாம வந்திருக்கா?"

இரண்டு பேர்.

பரவால்ல வாங்கினதுக்கு ஒரு வாயச்சும் தின்னமே.ஆறுதலாய் தூணைப்பார்க்க.

"என்ன டீயிடா இது ,சீனியும் இல்லை ஒரு மண்ணுமில்லை"
நான் வாங்கின டீயின் அடித்தேயிலைக்கட்டையை எந்த வஞ்சகமும் இல்லாம டேஸ்ட் பண்ணிப்பார்க்க தந்தாங்கள்.
நட்புக்காக பொறுத்துக்கொண்ட ஆயிரங்களுள் இதுவும் போய் புதையட்டும்

இந்த உலகத்தில சாப்பிட்றவங்களை இரண்டாப் பிரிக்கலாம்.
ஒண்ணு-வாங்கிச் சாப்பிட்றவங்கள்
இரண்டு-வாங்கினதை வாங்கி சாப்பிடறவங்கள்.

"நமது கன்ரீனில் உணவுக்கூட்டணி.
அதில் நட்பின் ருசி"

பள்ளிக்கூடத்தில கால் வைச்ச நாள் முதல் புதுசா பெரிசா கன்ரீன் கட்டுறம் என்டு கதை அடிக்கடி அடி பட்டாலும் அங்க இருந்து வெளிக்கிடும் வரை மெயின் கோல்ல இருக்கிற ஒரு பக்க யன்னல் வச்ச சுவருக்குள்ளால புகை வந்து கொண்டுதான் இருந்தது.
நாங்களும் சைக்கிள் பார்க்கில நிக்கிற பெட்டையளின்ர சைக்கிள் கூடையளுக்கையும்,கரியல்கள்ளையும் குடிச்ச தேத்தண்ணி பேணியளை செருவி விட்டுட்டு வாறதையும்தான் வழமையா வைச்சிருந்தம்.
பாவம் அதுகள் வீட்டை பேணி கழுவ வேண்டியிருந்தது, இங்க பேணியை எடுத்துட்டு சைக்கிளைக் கழுவேண்டியிருந்தது.

இன்டேர்வல் முடிய வகுப்புக்கு போனா அங்க வகுப்பு காப்ரேசன் வண்டி மாதிரி கிடக்க.
ஐஞ்சு பேரும் மட்டும்தானிருந்து வம்பளக்கிறளவை.டவுட் வர டைம்டேபிளைப் பார்த்தா இங்கிலிஸ்.புரிஞ்சுட்டுது.உவங்கள் எளியவங்கள் என்னை விட்டுட்டு பறந்திட்டாங்கள்.
வாங்குக்கு கீழ கிடந்த சுத்துற கொப்பியை எடுத்துக்கொண்டு லைப்ரரிக்கு வெளிக்கிட்டன்.

போகேக்க ஐஞ்சோடயும் கொம்பிரிமைஸ் ஆகி நாங்கள் ஒருதரும் இண்டைக்கு வரேல்ல என்டு ஆர் கேட்டாலும் சொல்லச் சொல்ல நகுல,சகாதேவ,தரும,அர்ச்சுனன் எல்லாம் பேசாம இருக்கா உந்த ஐஞ்சாவது ஆள் இருக்கொல்லோ
அது மட்டும்
"முடியாது,
அப்டி சொல்லலே."என்டுச்சு

எனக்கு கடுப்பு.
தருமனே பொய் சொல்லேக்கே உனக்கு என்னத்துக்கு உவ்வளவு அதப்பு? என்டு கேட்க பாத்தனன்.ஆனா
பேந்து துரியோதனனுக்கு என்ன நடந்தது என்டு ஞாபகம் வர பக்கத்தில ஆக்களும் சப்போட்டுக்கு இல்லை என்டறாதல வாயை மூடிட்டு லைப்ரரிக்கு போனன்.

அன்று ஆச்சரியங்கள் அதிகமான நாள்
ஆ....
லைப்ரரி
மௌனங்கள் பேசுமிடம்.

மௌனம் எப்புடி பேசும் என்டு குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கப்படாது கவிதை என்றால் அப்படித்தான்.

ஆனா எங்கட பள்ளிக்கூட லைப்ரரி இருக்கே இங்க மௌனம் பேசாது மத்த எல்லாம் பேசும்

இந்த இடத்து கூத்தை எழுதுறதுக்கு கிட்டமுட்ட இரண்டு மூண்டு எபிசோட் வேணும்.

என்னோட வழில வந்த மற்ற மூண்டும் மரத்தடி நிண்டுட்டுதுகள்.
அவங்களுக்கும் படிப்புக்கும் வெகுதூரமாம் அதான் எனி தாங்கள் வரேல்ல என்டுடாங்கள்.

ஆனா எனக்கு கொஞ்சம் லைப்ரரி என்டா பிடிக்கும்.வீட்ல பாஃன் போட்டுத்தான் நித்திரை கொள்ளுறது.

சரி என்டு அதுக்குள்ள காலை வைச்சா  விசர் வந்துட்டுது.
அங்க வேலைய்யிறது ஒரே ஒரு பாஃன்தான்.
அதையும் தும்புக்கட்டை தடியாலான் சுழட்டி ஸ்டாட் பண்ண  ர்ர்ர் என்ட சத்தத்தோட வேலையஃய தொடங்கும்.
லூசுகள் ஆரோ அதுக்கு பக்கத்தில ப்ளீஸ்
சைலண்ட் என்டு எழுதி ஒட்டியிருக்குதுகள்.
அதைப்பார்க்கற நேரமெல்லாம் சிரிப்பு வரும்.பின்ன என்ன பாஃனுக்கு இங்கிலிஷ் தெரியுமே எங்கையாவது.

அதுக்கு கீழ, எனக்கு அண்டைக்குத்தான் தெரியும் உந்த வாத்தியும் வீட்டல பாஃன் போட்டுத்தான நித்திரை கொள்ளுறது என்டு.

வேற வழியில்லாம அடைஞ்சு வைச்ச புத்தக குவியலுக்குள்ள ஒண்டை ரண்டமா இழுத்துகொண்டு போய் ஒரு இடத்தில இருந்து பார்த்தன்.

சுஜாதாவின்ர "ஆ" என்ட புத்தகம்.ஏற்கனவே வாசித்தாலும்
பரவாயில்லை எத்தனை தடவையும் வாசிக்கலாம் என்டுட்டு திரும்பவும் 'ஆ' என்டு வாசிக்க தொடங்கினான்.

போன ஜென்மத்துக்கதை எல்லாம் அவனுக்கு ஞாபகம் வருது.
கதையின்ர ஒவ்வொரு செப்டரும் 'ஆ' என்டு முடியும்.
உண்மைல கதையில மூழ்கி போனன்.

மீனலோஜினி டீச்சர் தட்டி "சுழலில் சிக்கிய சுடர் " நல்லா இருக்கு தாமோதரனில் போட்டுடலாம்
எனும் போது

தற்செயலாய் பக்கவாட்டில் பார்க்க 'ஆ' அவள்தான்.

முந்தி ஒரு,சில இடங்களில்  காட்டியிருப்பேன். இன்ரேவல் ரைம் மற்றது விளையாட்டுப்போட்டி மூட்டம் 'ஆ' மா
அந்த பெயர் தெரியாத வியப்புக்குறியே.

இவள் எப்ப வந்தாள்?
எப்ப இருந்தாள் கொஞ்சம் தள்ளி முன்னால.
ஒண்டுமே தெரியாது.

பக்கத்தில அவளின்ர அல்லக்கை இருந்து இழிச்சுது வழமை போல.அதுக்கு என்னை அடிக்கடி பாத்து பழக்கம்.

நீங்கள் பார்த்தால்  அந்த அல்லக்கைதான் வடிவு என்டு சொல்லுவியள் எனக்கு தெரியும்.
ஆனா இதையே நான் அந்த அல்லக்கைய பார்க்றன் என்டா மாறி சொல்லுவியள்.
அதான் உலக நியதி, தெரியும்.

திரும்பவும் நான் சுஜாதவின் "ஆ" வை ஆ என்டு பார்க்க டிரை பண்ணிணண் முடியேல்ல.
அவளை ஆ வென்டு பார்க்கிறதும் சரியில்லை.
வழிஞ்சாலும் துடைக்க கூடின மாதிரி இருக்கோனும்.

அப்டியே புத்தகத்தை பார்கற மாதிரி அவள் என்னய்றாள் என்டு பார்த்தன் மண்டுவம் சுடோகு நிரப்புது.

'ஆ' னா எனக்கு வடிவா தெரியும்
வேணுமென்டுதான் உதிலை வந்து இருக்கிறாள் என்டு.

டக் கெண்டு நிமிர்ந்தன் ஆள் 'ஆ' வென்டுது.
கள்ளம் பிடிபட்டது.
என்னைப்பார்த்துக்கொண்டுருந்தது
சிரிப்பு வந்துட்டுது.

எந்த மூஞ்சையில காலமை முழிச்சானன்.யோச்சன்.

அவள் தொடர்ந்து நிரப்பிக்கொண்டு இருந்தாள் நான் விட்டு விட்டு பார்க்கேக்க.

அடடா.
ரகுமான் டக்கென்டு சிட்டிவேசன் போட்டார்.

அக்டோபர் மாதத்தில்
அந்தி மழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்.

ஓ பப்பாரிப
ஆ பப்பாரிப

அன்று கண்கள் பார்த்துக்கொண்டோம்.....

அப்டியே சங்கர் மகாதேவன் மண்டைக்குள் இறங்கி நிண்டு பாடினார்.
கால் ஆடிச்சுது தன்னிச்சையாய்.

அவளும் சிரிச்சு சிரிச்சு
பக்கத்தில இருக்கிறவளிட்ட ஏதோ கேட்டாள் பேப்பரைக்காட்டி

என்னவாயிருக்கும் நானும் எட்டாம எட்டி பார்த்தன்.

வேணுமெண்டு "அரக்கி" வைச்சாள் சிறுக்கி கொஞ்சம் இஞ்சால நான் பார்க்க கூடின மாரி.

உண்மைல உவள் அரக்கியோ என்டு எனக்கு டவுட் வந்துட்டுத்து.
பின்ன முழுப்பெட்டியும் நிரப்பிட்டள் ஒரு மூண்டு பெட்டி மட்டும் மிஞ்சி கிடந்துது.

கோதாரி விழுந்தது நான் நேசரி படிக்கேக்க ஒண்டு, இரண்டு கூட ஒழுங்க எழுத மாட்டன் என்டு கோகிலா ரீச்சர் கொப்பியை சுழட்டி எறிஞ்சு அவ்வளவு பெட்டையளுக்கு முன்னாலையும் அப்ப என்ன அவமானப்படுத்தினவ.

சத்தியமா இப்ப அவளை பார்க்க எனக்கு கோகிலா ரீச்சர் மாதிரிதான் கிடந்தது.

விடக்கூடாது.
எனக்கு தான் சவால் விட்றாள் கண்டு பிடிக்க சொல்லி.
கண்டு பிடிச்சா இதை சாட்டா வைச்சு கதைக்கலாம்.
கண்டு பிடிக்காட்டி அவ்வளவுதான்
ஆ.

பார்த்தன்
அங்கால அந்தப்பெட்டி இந்தப்பெட்டி
மூண்டு வரேல்ல
இஞ்சால ஒன்பது வந்துட்டு
ரேம் எக்ஸாமுக்கு கூட இவ்வளவு யோசிக்கேல்ல.
கடவுள் இருக்கனுமே.

இரண்டு போட்டிருக்காள்
அந்தப்பெட்டி ஓகே மண்டைய பினைஞ்சு,

ஓ யெஸ்!! யெஸ்!
கண்டு பிடிச்சிட்டன்.

கேட்டன் மெதுவா.
நான் என்ன வரும் என்டு சொல்லலாமா.?
நாக்கு நர்த்தனமாடிச்சுது.பின்ன முதல் முதலா கதைக்கிறன்.இதைவிட சும்மா பார்த்துட்டு இருக்குறது ஈசி மாரி கிடந்துது.

ம். என்றாள்
ஸ்ரேயா கோசலுக்கு தங்கைச்சியும் இருக்கு,
முதலாவது பெட்டிக்குள்ள ஒண்டு வரும்
அப்டியே தொடர்ந்து இரண்டு இல்லை இல்லை நாலும் கடைசிப்பெட்டிக்குள்ள மூண்டும்  வரும்

வாவ்......
சரியா கண்டு பிடிச்சிட்டிங்க.
இந்தாங்க நிரப்பி நீங்களே வைச்சுடுங்க அதில.
"என் கிஃப்ட்" என்று  விட்டு விர்ரென்று போய் விட்டாள் மின்னல்லாய் அருகில் இருந்த இடி(ம்பி)யோட.
எனக்குள் மழை.

ம்
இண்டைக்கு இவ்வளவுதான் நம்ம லக்குன்னு யோச்சுட்டு அவள் கிப்ட்டா தந்த பேப்பரை ஆட்டைய போடுவம் என்டு நினைச்சுக்கொண்டே எஞ்சிய நிரப்பாத
பெட்டிக்குள் நம்பர்களை போட்டேன் .

1........4........3

அவள் கிப்ஃட்

"ஆ"


‪#‎மீண்டும்‬....முடிவில்லாத ஒரு முடிவில்

வாழ்க இந்துக்கல்லூ......ரி ......
ரெடியாகுடா மாப்பிள பிரளயம் நடக்கப்போகுது.
அலாரம் என் மண்டைக்குள்ள அடித்தது.பக்கத்தில் நின்டவன்.அங்கால
அதுக்கங்கால.....எல்லார் மண்டையினுள்ளும் அதே.

இரு.இரு என்டு மூளை தகவலை கால்ப்பக்கம் கடத்துவற்கு இடையில் பின்னால்,பக்கத்தில்,மூலைப்பக்கமாய் மும்முனைத்தாக்குதலாய் முட்ட முன்னால் விளையுளை நான் பிரயோகிக்கும் போதுதான் பார்த்தன். காலை வி வடிவத்தில் வைத்து கை முஸ்டிகளை மடக்கி வைத்துக்கொண்டு ஆறாம் வகுப்பு சுகாதாரப்பாடத்தில் சொல்லிக்குடுத்ததை இன்னும் அப்டியே

சனியனே அமர்ந்து இருடா....
இருந்த பிறகு....
வாழ்கவே... பாடி முடிந்தது.

கடுப்பாய் இருந்தது
கூடவே கால் நுனியில் கடித்தது.

"டேய்
என் இடக்கால்ல சொறிஞ்சு விடு"

"என்னட்ட வலக்கால்தான் கிடக்கு "

தட்டிக்காட்டினான்.சரிதான்.

இடக்கால் எங்கே கிடக்கிறது பார்த்து தட்டி அண்ணா இரண்டு பாறங்கல்லு ஒரு கோரைப்புல்லு மேல கிடக்குது.அது பாவம் ஒண்ணையாச்சும் தரைல உருட்டி விடுங்களேன் ப்ளீஸ் பளிச்சுன்னு இழுத்துக்குவன்.

ஐயராத்து பையன்னாய் இருக்கும் போல. பழி பாவத்துக்கு அஞ்சி நகர்ந்தாலும் எனக்கு காலை இழுக்க இடமில்லை.

ஐயோ பேசி அறுத்து இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் போகுமபோது
புல்லை புத்தகத்துக்குள்ள வைச்சு அமர்த்தியது போல கிடந்தது கால்.

படம் தொடங்கும்...
ஒரு பெரிய மைதானத்தில இருக்கிற ஒரு மேடைல கொஞ்சம் நரைச்ச தலைமுடியோட
ஒரு ஆளோட பின்பக்கம் மட்டும்.

"இது வாழ்கையை வென்ற ஒரு சாமனியனோட கதை அப்டி "

அந்த ஆள் சொல்ல தொடங்கும் போது பிளாக் அன்ட் வைட் சீன் கலராகி அபிஷேக் திரும்ப

எத்தனை வாட்டி பார்த்தாலும் அலுக்காத கொஞ்சப்படங்களுள் ஒன்று
அபிஷேக்
ஐஸ்
ஏ.ஆர்
மாதவன்,வித்தியாபாலன் தாண்டி வேற ஏதோ ஒண்டு இருக்குறதான் இந்தப்படமும் இங்கே சொல்லக் காரணம்.

2006ல்
"டேய் இந்த சேட்டைப்போடு"

"போம்மா அது எனக்கு பெரிசா கிடக்கு"

"இண்டைக்கு போடு பேந்து மாத்தி தைப்பம்."

வீட்ட போட்ட சண்டையில் நேரம் டபாய்த்து 101 ஆம் நம்பர் ரோக்கன் கிடைத்து ஸ்கூல் போக

கடவுளே நமக்கு முன்னால இன்னும் நூறு பேர் அட்மிஷனுக்கு இருக்கிறாங்கள்.இது அம்மா.

பார்த்தேன்.சில தெரிஞ்ச சில தெரியாத அம்மாக்களோடோ அல்லது அப்பக்களோட என்னைப்போல் காலாட்டிக்கொண்டு மண்டபத்துக்குள் பலர்.

இனி வரப்போகும் ஏழு வருடங்களில் நிறைய சந்தோசம் கொஞ்சம் அவஸ்தை என்று நிறைய தருணங்களில் இங்கேதான் செப்ரர் வன் என்று அப்போது தெரியாது.

நேரம் போக அலுப்படித்தது.சும்மா இருக்க.
நிமிர்ந்து பார்த்
அம்மாடி எம்மாம் பெரிய உயரம்.கூரை முன்னால மேடை.
அதில ஒரு சரஸ்வதிப்படம் தேர் மாதிரி ஒன்டுக்குள்ள.
மேல ஏதோ பேர் எழுதிக்கிடக்கே.கண்ணில பட்டதையும் வாசிக்கிற பழக்கம் அப்ப தொடங்கி இருந்தது.

"சுப்ரமணியம் அரங்கு"

கட்டியது.செப்பனிட்டது.
செப்பனிட்றது என்னா பத்து வயதில் விளங்க கஸ்ரமான வார்த்தை.

தோள் மூட்டால் வழிந்த சேர்ட் கையை இழுத்து விட்டு வெளியில் நழுவி முன் பக்கமாய் வந்து மண்டபத்தின் கிரவுண்ட் பக்கமாய் இருந்த மேடையில் ஏறி நின்று பார்த்தேன்.பள்ளிக்கூடம் முழுவதும் தெரிந்தது.
(கனவு தெரிந்தது.
இந்த வசனம் வடிவா இருக்கு என்ரறதுக்காக மட்டும் இதில சேர்க்க வேண்டி இருக்குது.)

அண்டைக்கு நான் என்ன யோச்சன் என்று நினைவில்லை.ஆனால் ஏஎல் எக்ஸாம் எழுதி விட்டு அந்த கடோசி நாள் முடிவில் அதே இடத்தில் நின்ற போது

என்னை நானே எல்லா இடத்திலும்
ஒரு விதமான ஹலுஸினேசன்.போல

அதெல்லாத்துக்கும் மேலால அந்த படத்தை ஒவ்வோரு தபா பார்க்கும் போதும் அந்த மேல சொன்ன சீன் போகும் போது எனக்கு ஞாபகம் வருவது.... என் உருவமும் இந்த இடமும் தான்.

புதுசு எப்டி இருக்கும்.
பழசுக்கு என்ன நடக்கும்.

"இரண்டாயிரம் பேர் இருக்கையுடன் கூடிய புதிய கலை மண்டபத்துக்கு அடிக்கல்.அண்மையில் நாட்டப்பட்டது."

இனி என்னவோ இரண்டிலும் நாங்கள் இருக்கப்போவதில்லை என்பதில் கவலை .
புதிய மண்டபம் என்பதில் சந்தோசம்.

என்ன இருந்தாலும் அந்த நிலத்தில் இருந்து மா அரைத்து நிகழ்ச்சி முடிந்து விறைத்த காலுடன் எழும்பி போகும் போது சாம்பல் கலந்த நீலக்காற்சட்டையை பட்டு பட்டு என்னு பின்னால தட்ட தூசி கிளம்பும்.அந்த சந்தோசம் இனி பலருக்கு கிடையாது என்கிற ஆதங்கம்.

ஸ்கூலில் பெரும்பாலான இடங்களைப்பற்றி ஆங்காங்கே சொல்லியாகிவிட்டது. சில ஹைட் அவுட்டுகளை மட்டும் மறைத்து விட்டேன். இனி வரும் காலத்தில் என்னைப்போன்ற எங்களைப்போன்றவர்கள் பயன் பெறட்டும் என்று.
தாய் நாட்டில் இல்லாத பற்றொன்று ( ங்கே! அது எங்க இருக்கு ) சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மீது இருந்தது.

அதன் ஒவ்வோரு மூலையிலும் ஒரு ஹேலோகிராம் விம்பமாய் நான் நின்றேன்.என்னோடு நிறையப்பேர்.ஒரு பாடசாலை வாழ்வை அணு அணுவாய் அனுபவித்த திருப்தி

இப்டி நிறையவே
இன்னும் எழுதாத ,சில எழுத முடியாத கதைகளோடு இந்த டயரியை முடிக்கப்போகின்றேன்.

இத்துடன் இந்த முடிவில்லாத முடிவுரையையும் முடித்துக்கொள்கிறேன்.

இப்படி அனுபவித்த,அனுபவிக்காத அத்தனை பேருக்கும் இந்த டயரியின் பக்கங்கள் சமர்பணங்கள் ஆகட்டும்

Bye...bye.


இவனும் ஓர் ஏகலைவன்தான்

இவனும் ஓர்
ஏகலைவன் தான்

ஒவ்வொருதனும் மற்றவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் செய்ய மாட்டான்
ஆனால் ஒரு குறித்த நபர் சொல்லும் போது மட்டும் என்ன பிடிக்காத விடயமாக இருந்தாலும் அதை செய்வோம்
அந்த நபர்
நண்பனாக,
அம்மாவாக ,
அப்பாவாக,
காதலியாக ,
என்று வேறுபடும்

அந்த வகையில்
அவனுக்கு அவர்.

அவனின் எதிர்காலத்திற்கான பயணத்தை இறந்த காலத்தில் மாற்றி எழுதியவர்.

காரில் போகும் போது பார்த்தான்
ரொம்பவே அவன் ஊர் மாறியிருந்தது
ரயில் பாதைகள் திருத்தி
ஸ்டேசன்கள் கட்டப்பட்டு
இருந்த கடைகள் இல்லாமல் போய் புதிதாய் சில தோன்றி
புதிய சாவகச்சேரியை தாண்டினான்

அவன்
சற்றே பாடசாலையில் அதிகமாக கவனிக்கப்பட்டவன்
அதிபர் அலுவலகங்களிலும் ஆசிரியர் ஓய்வறைகளிலும்

அவன் பாடசாலைக்கு போன நாட்களில் பாதி நாட்கள் அப்பாவுடன்தான் போனான்

அவன் அப்பா கூட ஒரு கட்டத்தில் அவனை அத்தனை ஆசிரியர்கள் முன் முதலாவது தரம் அறைந்து இரண்டாம் தரம் அறைய கை தூக்கிய போது அதனை தடுத்தவர் அவர்தான் அவன் பாடசாலையில் மதித்த ஒரே ஒரு நபர்
அவனை இந்த உலகத்திலே புரிந்து கொண்ட ஒரே நபர்.

எந்த பாடமும் அவரிடம் படிக்கவில்லை அவன் .
ஆனால் அவருக்கு நேரம் கிடைத்த போதெல்லாம் அவனுடன் கதைத்தார்
அவர் சொல்வதை மட்டும் அவன் செய்தான்.
அவர் சொல்லாமல் அவன் செய்தவற்றுக்கு அவரும் அதிபர் அலுவலகத்தில் கூட நின்றார் அவனோடு.

கடைசியாக பள்ளி நிர்வாகம் அவனை நிராகரித்தது.
அவன் அவளை பார்த்ததும்,
அவள் அவனை பார்த்ததும்,
அனைவரும் அவர்களிருவரையும் பார்த்ததும் காரணமாகியது .

பாடசாலையின் கதவை தாண்டும் போது கூட வந்த அவர் ,
அவனை தனியே கதைப்பதற்காக அப்பாவை பார்க்க ,
அப்பாவும் விலகி கொண்ட போது அவர் அவள் அவன் மூன்று பேர் பார்வையும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொண்ட போது ,
அவர் அவனுக்கு வழமையாக சொல்வதை சொன்னார் .
"நேசிப்பது கிடைக்கும் வரை
நீ நேசிப்பதை விட்டு விடாதே"

காரைப் பார்க் பண்ணி
நடந்து
அறையொன்றினுள்
அமர்ந்து
சிறிது நேரத்தில் ஒருவர்
வந்து மேசையில் அமர்ந்தார்.

உங்களோட பேர் ?
சொல்ல எழுதினார்

நீங்கள் கூட்டிட்டு போறதுக்கு அவர் ஓம் எண்டுட்டார்

பட் நீங்க அவருக்கு?

அவன் என்னோட பிள்ளை!

எழுந்து சென்று அவர் கால் தொட அவர் அவனை மூச்சு முட்ட கட்டி பிடித்து கொண்டார்.

காரில் அமர்ந்து
வெளியில் போகும் போது
பார்த்தான்
............ ன் அணுசரனை யுடன் முதியோர் தினம் என்ற பனர் காற்றில் பறந்து கொண்டிருந்தது

சேர் " இண்டைக்கு ஆசிரியர் தினம் உங்களுக்கு வாழ்த்துக்கள்"
அவள் கூற
நன்றிம்மா நீ எப்படி இருக்கா?
"பைன் "சேர்

வீட்டை அடைந்த போது அவர் அவனை மீண்டும் கேட்டார்
உனக்கேன்பா வீண் சிரமம் நான் அங்க சுகமாத்தான் இருக்கிறன். அவர் அவனை மூச்சு முட்ட கட்டி பிடித்து கொண்டார்.

நீங்கள் எங்களோட வந்து இருந்தா எங்களுக்கு இன்னும் சுகமா இருக்கும்

"நேசிப்பது கிடைக்கும் வரை
நீ நேசிப்பதை விட்டு விடாதே"

மூன்று பேரும் வாசலில் எழுதி இருந்த வசனத்தை வாழ்வின் இரண்டாம் தடவையாக ஒன்றாக வாசித்தனர்

இனி தினம் தினம் வாசிப்பார்கள்.

ஒரு பட்டாம் பூச்சியின் பள்ளிக்கால டயரிக்குறிப்புக்கள் - 03

வழமையான நேரத்தில் பின் வாசலில் கால் வைக்க ...
வார்ச்சர் கேற்றுக்கு சங்கிலி போட்டு பூட்டை கொழுவ ...

தள்ளினேன் கேற்றை .
துணைக்கு இரண்டு மூன்று பேர் கூட நின்றார்கள்.

என்ன இருந்தாலும் எவனும் தான் செய்யும் வேலையில் எந்த இடத்தில் தன் அதிகாரத்தை பிரயோகிக்க முடியுமோ அத் தருணத்திற்காக காத்திருப்பான்.

"பெஸ்ட் பெல் அடிச்சு ஐஞ்சு நிமிசமாச்சு சுத்தி முன் கேற்றால வாங்கோ எல்லோரும்"
ஆள் ஒரு நரியன்.இரண்டு மூன்டு தரம் அவனோட கொழுவி வேற இருக்கறதால எவ்ளவு கேட்டாலும் திறக்கமாட்டன் என்டு தெரியும்.தூய பட்டினத்து தமிழ் வார்த்தைகளை அவன் பால் உமிழ்ந்து விட்டு முன்னால போக,இன்னுமொரு பிரகண்டத்துக்குள்ளால தப்ப வேண்டுமே.லேட்டா வர்றவங்களை  மறிச்சு வைச்சு அறுக்க ஒரு அறுவை வாத்தி கேட்டுக்கு பொறுப்பாய் நிக்கும்..
முன் கேற்றை அடைந்து மதில் ஓட்டைக்குள்ளால் நிலமையை ஆராய்ந்த போது,
என்ன இண்டைக்கு புதன் கிழமை தானே. ஏன்? லைன் கட்டி மெயின் கோலுக்கு போறாங்கள் யோசித்தவாறு வகுப்பு நோக்கி நடக்...

"தம்பி இதில பாக்கை வைச்சுட்டு கோலுக்கு போம்."

நல்ல காலம். நல்ல மூட்ல நிக்கிறார் இண்டைக்கு,அவற்ற மனுசிக்கு மனசுக்குள்ள நன்றி தெரிவிச்சுக்கொண்டு

என்னவாயிருக்கும்?
கோலை எட்டிய போது எங்கட வகுப்பு லைனும் சரியாக வர இடைச்செருகலாகினேன்.

ஏன்டா இண்டைக்கு இங்க வாறம்?

தோரணம் சோடித்திருந்தது,கோலை சுற்றி
மேடையில் மாக்கோலம் .
வேட்டி கட்டி சிலர் .
சரஸ்வதிக்கு வழமைக்கதிகமான மாலைகள்.
ஒரு பூசாரி ஐயா
தேவாரம் பாடும் கும்பல்.

இண்டைக்கு சரஸ்வதி பூசை தொடக்கம்
இனி, பத்து நாளும் இங்க தான்டா!!!

Title:God is great

சரஸ்வதி பூஜை நான்காம் நாள்.

தின ஒழுங்கு படி இன்று ஒன்பதாம் ஆண்டின் பூஜை

போட்டீன் என்கிற அந்த ரீன் ஏஜ்.

வேட்டியை கட்டி சேட்டை கழட்ட மனமில்லாமல்,கையை கட்டிக்கொண்டு மேடையில் ஒரு கூட்டம் .
பாதி பேர் அதில் மாலை போட்ட சரஸ்வதியை பார்க்காமல் பாமாலை பாடும் லக்ஷ்மி(கா) ஐ பார்த்தது கும்பிட்ட படி

சாம்பிராணி புகை மணம் மண்டபம் முழுக்க.

தேவாரம்,சகலகலாவல்லி மாலை ஓதுங்கோ!
ஐயர் ஆணையிட
அதிபர் கீழே அமர்த்தி கையை காட்ட
எல்லாரும் அடித்து பிடித்து அமைதியாக இருப்பதற்குள்
தேவாரம் முடிந்திருந்தது.

வெண்டாமரைக்கன்றி நின்பதந்தாங்க......

"டேய் உண்மைலயே கடவுள் இருக்காருடா"
ஏன்டா?
பாருடா நம்ம ஆளை நமக்கு நேர கொண்டு வந்து நிப்பாட்டி இருக்காரு.

கடவுள்!
எக்ஸாம் டைமில் மட்டும் கண்ணுக்கு தெரிபவர்
சிலருக்கு அதுவும் தாண்டி ரிசல்ட் வரும் போது மட்டும் தெரிபவர்

பிச்சைக்காரனுக்கு தட்டில் காசு விழும் போதும்...
டொக்டர்ஸ்க்கு ஆப்ரேசன் முடிவிலயும்..
ஆக்ஸிடண்டல உயிர் தப்பும் போதும்....

இதெல்லாம் தாண்டி எனக்கு பக்கத்தில நிக்கிற இந்த பேமானி மாதிரியானவங்களுக்கு
தன் ஆளை காட்டும் போது மட்டும் கடவுள் கண் முன் தோன்றுவார்.

"எனக்கு உங்களை மாதிரில்ல
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு"

"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்டு யார் சொன்னது"

"ஓ திடீருன்னு உங்களுக்கு கடவுள் நம்பிக்கை வந்திடுச்சா?
அப்ப சொல்லுங்க யார் கடவுள்"

நீங்கதான்
Look. I don't understand ur joke.

Becz,it's not a joke.

"முன்ன பின்ன தெரியாத அந்த பொடியனுக்காக இரத்தம் கொடுத்தீங்களே
அதான் கடவுள்!"

என்ன திடீர் பணிவு.
ஏன்னா? நானும் கடவுள்.

அதானே பார்த்தேன். யார் சொன்னா நீங்க கடவுள்னு?
"மலை மேல கடை வச்சிருக்கிற ஒரு அம்மா"

"எனக்கு புரியல்ல"

"புரியக்கூடாது அதுதான் கடவுள்."

அன்பே சிவம்.
கமல் காட்டிய கடவுள்.

படம் பார்த்து முடிந்த போது தெளிவாய் இருந்த பாதிப்பேர் குழம்பியும் குழம்பிய பாதிப்பேர் தெளிந்தும் இருப்பார்கள்.
DOG ஐ திருப்பி போட்டாக்கூட GOD ன்னு வருதில்ல..
உலக நாயகனின் மாயாஜாலம்.


எதுவுமே மனசில நினைக்காம, வேண்டாம உன்னால கடவுளை கும்பிட முடியுமா?

அது எப்படிடா?

"ஒண்டுமே வேண்டாட்டி ,ஒண்டுமே நினைக்காட்டி ,அப்புறம் என்னண்டு கும்பிட்றது.,எதைக் கும்பிட்றது
கடவுள் இல்லைண்டு ஆயிடாது."

"சிவனுக்கு ஒரு ராத்திரி அது சிவராத்திரி சக்திக்கு ஒன்பது ........
...............
..............
எனவே இத் திருநாளில் வீரத்தை வேண்டி வழி படுவோமாக."
நன்றி.

அந்த வழமையான வசனம் பேசி முடித்து கரகோசம் பெற்று போகும் போது ஒன்று புரிந்தது.

வேண்டுதல்களும்.
பயங்களும்.
எதிர்பார்ப்புக்களும்தான்

நாம் படைத்த
நம்மை படைத்த
கடவுள்.

தொடர்ந்து வந்த டீச்சர்ஸ் டேக்கு மனசுக்குள் சந்தோசமாய் சிலருக்கும் வெறுப்போடு பலருக்கும் கை கொடுத்து மாலை போட்டு வாழ்த்துச்சொல்லிக் கொண்டாடி முடித்து
அன்றைய தின டயரியின் பக்கத்தில் எழுதியது இது.
"இவனும் ஒரு ஏகலைவன்தான்"
(அது தனிப்பதிவாய் போடப்பட்டுள்ளது)

அந்த கூத்துகளோட அந்த தவணை வழமையான அதே எக்சாம் சபதத்தோட முடிஞ்சு அடுத்த தவணை அவங்களே விளையாட்டோட ஆரம்பிக்க அதுக்கப்புறம் கீழே
வி

வு
ம்

லீவு முடிஞ்சு முதல் நாள் பள்ளிக்கூடம் போகேக்க ஒரு புளுகு வரும்.
கன நாள் போகேல்ல என்டுறது ஒரு காரணம்.
எல்லாரையும் கன நாள் பாத்து என்றது இன்னோரு காரணம்.
என்னதான் வெளியிடங்களில் கண்டு தொலைத்தாலும்
அந்த வைட் அண்ட் வைட் யூனிபோர்மில்
பைப்டியிலோ இல்லை வகுப்புக்கு வெளியில் வரும் போதோ வைத்து பார்க்கும் போது...
டாமிட்
வாட் அன் ஏஞ்சல் சீ இஸ் ?

சின்ன வகுப்பென்டா, புது வருசம் என்டா,
புது வகுப்பு,புதுக்கொப்பி,
எல்லாம் புதுசு.
ஏ எல்லில் சிஸ்டம் கரப்ட் ஆகி விட்டது.
இனித்தான் போய் வகுப்புக் கபேட்டுக்குள்ள போன ரேம் வைச்ச கொப்பியளை தேடி எடுக்க வேண்டும்.

எதுக்கும் வெறுங்கையோட போகக்கூடாது என்டு கையில சுத்திக்கொண்டு போக ஒரு கொப்பியையும் எடுத்துக்கொண்டு போறது வழமை.கொப்பியை சுத்துறதும் ஒரு சீனாய் இருக்கும் ஆரெண்டாலும் கொப்பி விரல்ல சுத்துது என்டா ஒருக்கா ஆளையும் பார்த்து கொப்பியையும் பார்ப்பினம்.

அது உண்மைல "சுத்துற" கொப்பிதான். அதில எல்லாம் கிடக்கும் .
வராததுக்கு என் எழுத்தில் அம்மாவின் கடிதம்.
பென்சீன் வளையம் போட்டு மாற்றீடு.
பிஸிக்ஸில குவிவு வில்லைக்கு பிழையா குழிவு வில்லைன்ர வரிப்படம்.
மற்சில சட்டப்படல்
இது எல்லாத்துக்கும் மேலால பயோப்பொடியளும் அந்தக்கொப்பியை அப்பப்ப யூஸ் பண்றாதால கோதாரி விழுந்தது அதில அண்டைக்குத்தான் பார்த்தன் நாங்கள் அம்பு போட்டு அழகா கீறுற இதயத்தை அவங்கள் நாலு அறையா பிரிச்சு வைச்சு கீறியிருக்காங்கள்.

அதைப்பாத்து பயங்கர கடுப்பாயிட்டுது.
பின்ன என்ன நாங்கள் ஒரு இதயத்துக்குள்ள ஒரு ஆளை வைச்சிருக்கிறதுக்கே எவ்வளவு கஸ்ரப்படுறம் உவங்கள் நாலாப்பிரிச்சு என்ன என்ன விளையாட்டு உது???

அடுத்த நாள் கேட்கோனும் என்டு இருந்தாலும் விளையாட்டுப்போட்டி மீட்டிங்கில அது மறந்தே போச்சு.

சின்ன வகுப்பில வகுப்பு பிரதிநிதியா தெரிவு செய்யப்பட்டாலே பெரிசாக கெத்துக்காட்டும்
மனசு.இந்த முறை விளையாட்டுப்போட்டி தலமை பொறுப்பே எங்களுக்குத்தான் என்கிற நிலையில்
கின்னஸில் பெயர் போடும் போது K க்கு பதில் G போட வேண்டும்.யோசித்துக்கொண்டேன்.
மற்ற கவுஸுகளை கிடக்கட்டும், என் கவுஸை பத்தி முதல்ல சொல்லணும்.

சத்தியமா எப்புடி என்ர கவுஸுக்கு கன்னை பிரிச்சாங்கள் தெரியா.
நான் வந்து பள்ளிக்கூடத்தில சேர்ந்தம் பிறகு நானறிஞ்சு ஒருக்கா கூட எங்கட கவுஸ் முதல் மூண்டுக்குள்ள வரேல்ல.என்னை ஏன் இந்த கவுஸில போட்டவங்கள் என்டு தொடக்கத்தில ஒரு சந்தேகம்.இப்ப யோச்சா சரி என்டுதான் பட்டது.
இந்த தடவையும் கடைசியாய் வந்தால்,நேருவுக்கு சிறையில் இருந்தபோது கூட இப்படி ஒரு அவமானம் நேர்ந்திராது.

ஆறு,ஏழு,எட்டில்,படிக்கும் போதெல்லாம்,ஏய் இந்த முறை நம்ம கவுஸ்தான்டா பெர்ஸ்டா வரும் என்டு கத்தி கதறிய பெரும்பாலனவன்கள் இப்ப அவனவன் கவுசிலேயே இல்லாததுதான் உண்மை.

தெஸ்தெஸ்தரோனின் இது என்ன மாயம்.

கூட்டம் பெரும்பாலும் நிக்கிறது ஸ்ரீ சுமங்கலவுக்குள்ளதான்.கேட்டா அதெல்லோடா கவுஸ் என்டுவாங்கள்.நான் இன்னும் எந்தக்கவுசுக்குள்ள நிக்கறது என்டு கண்டுபிடிக்கேல்ல. ஐ மீன் ம்க்க்கும் எந்தக்கவுஸ் என்டே கணிடுபிடிக்கேல்ல. இனித்தான் தேடோனும்.

போட்டிகள் தொடங்கி
அந்த இடத்தில யம்பிங்
நாவலுக்கு கீழ நீளம்
அங்கால கொஞ்சம் தள்ளி குண்டு
ரான் மண்டப பக்கம் தட்டு கிரவுண்டுக்கு குறுக்க ஓட்டம்

எல்லாம் பிரிஞ்சு தங்கட உச்சபட்ச திறமையை காட்டி தெரிவு செய்யப்படோனும் என்டறதில முனைப்பா இருக்க
அப்படியே வானத்தில இருந்து கமராவை ஜூம் பண்ணிட்டு வந்தால்  ஆறாவதா ஒரு கவுஸ் ஒன்டு கிரவுண்ட்டுக்கு நடுவிலயும் இல்லாம ஆகலும் தள்ளியும் இல்லாம இரண்டுக்கும் இடைல நிக்குது அந்த கவுஸுக்குத்தான் இடைக்கிட ஸ்பெஷல் அறிவிப்பு வரும் மைக் மூலமா

"மாணவர்கள் அவர் அவர்களுக்குரிய இல்லங்களில் நிற்குமாறு வேண்டப்படுகிறார்கள்" அதைக்கேட்டுட்டு அங்கால கொஞ்சம் தள்ளி நின்டா சரி.

ஏன்டா எங்கடா கோபி?
ம், அவங்கட கவுஸில இருக்கிற ஆரோ ஒரு மோடையன் குண்டா இருக்கிறவன் எல்லாம் குண்டெறியோனும் என்டு சொன்னதால ஆள்  இப்ப நாவலுக்கு கீழ நிக்குது.

ஏன்டா அப்ப ஒல்லி....பீப்...பீப்

சென்சார் போர்டு கட் பண்ணி விட்டது அந்த வசனத்தை

என்ர கண் கட்குழிக்குள்ள நின்டு சுழன்டுது.
எங்கட கவுஸ் உயரம் பாயுது.

பொடியள் எல்லாம் காப் பனை உயரத்தில கம்பத்தை விட்டுட்டு மெத்தை இல்லாம பாஞ்சு விழுந்து கொண்டிருக்க,அங்கால மெத்தைன்ர உயரத்தில கம்பத்தை விட்டுட்டு அதை கஸ்ரப்பட்டுப்பாய்ற மாதிரி பவ்லா காட்டுறாளவையள்,பார்க்க சிரிப்பு வந்தது.

பக்கத்தில சும்மா பார்த்து கொண்டு நின்ட வாத்தியாரிட்ட கேட்டன்.
ஏன்? பொடியளுக்கு எலும்பு ச்சீ மெத்தை இல்லையோ சேர்.

"அது கவுஸ் கப்டனிட்ட போய் கேள் தம்பி."
ஒரு மெத்தைதான் கிடந்ததாம்.
எடுத்துட்டு வரேக்க அவளவை தங்களுக்கு தரச்சொல்லி கேட்டுதுகளாம்.
குடுத்துட்டு வந்து நிக்கிறன்.

காலம் காலமா பொடியள் இப்டி எல்லாத்தையும் குடுத்து குடுத்தே நிலத்தில விழுந்து மண்டைய உடைக்கிறாங்கள்.
உவளவை மட்டும் மெத்தைல விழுந்து தப்பிட்றாளவை.

என்னடா??

ஓம்.,சேர்.
ஓமோம்.
ஐயா! எங்கையோ மெத்தை இல்லாம பாய்ஞ்சு இருக்கார் என்டு விளங்கிச்சுது.

மெல்ல நழுவும் போது தற்செயலாய் சரஸ்வதி பூசையில் மாமா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
"கடவுள் இருக்காருடா"

அந்த கூட்டத்துக்குள்ள பாயுறது.
ஓவ் உச் கொண்டிக்கொண்டேன்.

ஓடிப்போய்
பாஞ்சு
மெத்தைல விழுந்து முன்னால வந்த பின்னலை பின்னால எடுத்து விட்டுட்டு,
கட்டை விரலை தூக்கி காட்டி
ஐஞ்சு போட்டு
சின்னப்பிள்ளையள் மாதிரி சிரிச்சு
ஐயோ!

உந்த வாத்திக்கு விசர்
அவளவ கீழ விழுந்து மண்டை உடைச்சா உவரே பொறுப்பு.என்ன இருந்தாலும்
அவன் செஞ்சதுதான் சரி.அதுவும்
உந்த உயரத்தில இருந்து விழுந்தா! நினைச்சுப்பார்கவே நடுங்குது.
என்ர கவுஸே எனக்குத்தான்.

விளையாட்டுப்போட்டிக்கான முகூர்த்த நேரம் எல்லாம் குறிச்சாச்சு.
3 நாளா தெரிவுப்போட்டி என்டு பந்தா காட்டி அதுவும் எல்லாம் முடிஞ்சுது.
மூண்டாம் நாள் முடிவில அனேக பேரோட எதிர்பார்ப்புக்களுக்கேற்ப எங்கட கவுஸ் 5வது இடத்தில இருந்துச்சு

ஆனா அண்டைக்கு முடிவிலயும் எங்கட கவுஸ் பொறுப்பாளர் வீரமா பேசினார்.

"பிள்ளையள்
இப்பவும் ஒண்டும் குறைஞ்சு போகல்ல நாளைக்கு விளையாட்டுப்போட்டில கொஞ்சம் கஸ்டப்பட்டம் என்டாலே நாலாவது இடத்துக்கு வந்துடலாம்".

"நாங்கள் சாம்பால்ல இருந்து எழும்புற பீனிக்ஸ்ஸா இருக்கோனும்."
மைண்ட் வாய்ஸ் அலறியது.
"நாளைக்குப்பார் அடி வாங்கி கொண்டு குப்புற கிடக்கேக்க கிடக்கிற சாம்பல் எல்லாம் காத்தில பறக்குதோ இல்லையோ என்டு."

நாளை.

கிறவுண்டுக்கு நடுவில ஒரு கம்பம் குத்தி சுத்திவர கயிறு கட்டி அதில கலர்கலரா கொடி கட்டி
வண்ணமயம்.
ஜகஜோதியாய் இருந்தது.

ஐஞ்சு கவஸும் தங்கட பேர் போட்டுக்கு கீழ அடைஞ்சு போய் இருந்தது.

அந்த அண்டையான் ஹை யம்ப் நிகழ்ச்சிக்கு பிறகு நான் வேற கவுஸுகளுக்கை போய் நிக்கிறேல்ல
என்ன இருந்தாலும் எங்கட "சொந்தக்கவுஸுக்கு" சப்போர்ட் பண்ணுற மாதிரி வராது.
இப்ப வரேக்கயும் கூப்பிட்டவங்கள் தாமோதரத்துக்குள்ள சர்பத் கொடுக்கிறாங்களாம் என்டு,நாக்கு போகச்சொல்லிச்சு ஆனா நான் போகேல்ல.
"கவுஸ்தான்" முக்கியம் என்றதில ஒரு வைராக்கியமிருந்தது.

எங்களின லெப்ட் ரைட் ரீம் ரெடியாய் வெளிக்கிட்டு நிண்டுது.
கோழிக்கு கொண்டை வைச்சது மாதிரி தலையிலயும் ஏதோ வைச்சு மேக்கப்போடு வெளிக்கிடுத்தி கிடந்துது.

சின்னப்பிள்ளைல உது அடிக்கிறதுக்கு பயந்தோடி ஒளிஞ்ச காலம் ஒன்டு இருந்தது.
இப்ப அதைப்பற்றி கவலை இல்லை.
என்ன விட சின்னப்பொடியள் கன பேர் இருக்கிறதால.நான் கேர்ள்ஸ் ரீம்ல ஏதாவது உதவி தேவையா என்டு பார்கறதில முனைப்பா இருந்தன்.

நேரம் தடதடத்து கொஞ்சம் கடந்து எல்லாம் தொடங்க நாசமா போனவங்கள் இரண்டு பேர் பொத்து, பொத்து என்டு மயங்கி விழுந்து போனாங்கள்.
உடனடியான ஆள் பற்றாக்குறை.அந்த நேரம் பார்த்து மற்றவங்களும் எல்லாம் ஒளிய பொறுப்பு எனக்கு முன்னால வந்து நின்டார்.

நீர் உம்மட கவுஸுக்கு ஒரு பொயிண்ட் எடுத்து தாரதுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு

பெக்கோ விட்டு கிண்டினது போல ஒரு பள்ளம்.

கண்டு கொள்ளாம நானும் தலையில கொண்டையை குத்திக்கொண்டு இறங்கி நிண்டன்.

இரண்டாவது ஆளுக்குகாக ஒருதனை கொண்டு வந்து விட்டாங்கள்.அவன் வலது பக்க மூலைல கடைசி ஆள். ஜஸ் ரைட் சொல்லோணும்,நாசமா போனது அடிக்கடி என்னை நோண்டி என்ன அண்ணா சொல்லோணும் நீங்க இதில வாங்களன், என்டு கொண்டிருந்தான்.அவனுக்கு வாயில் ஐஸ் வரவே இல்லை.
நான் எங்கட இங்கிலிஸ் சேரை மானசீகமா நினைச்சுக்கொண்டு
அவன் ஞாபகம் வைச்சுக்கொள்ளுக்கூடின மாரி சொல்லிக்கொடுக்க அது சிக்கலாப்போச்சு.

சரியா விசிட்டர்ஸ்க்கு முன்னால போகேக்க நான் மெல்லமா சைகை காட்ட கத்தினான் பெரிய குரல்ல

ஐ...ஸ்...வ...ர்யா
கேட்ட எல்லாம் திகைச்சுப்போச்சுதுகள்.

நான் ஐஸ்வர்யா ராயில வர்யாவை எடுத்துட்டு ஐஸ் ராய் என்டு மெல்லமா சொல்லுடா அது எல்லாம் சரியா கேட்குமென்ட சொல்ல எல்லாத்தையும் மாத்திப்போட்டு கத்திப்போட்டான்.
அதுக்குள்ள சொல்லிட்டு என்னை திரும்பி பார்த்து எப்படி?? என்டு ஒரு வெற்றிச் சிரிப்பு வேற.
அந்த கடுப்போட கை வீசிக்கொண்டு போகேக்கதான் பார்த்தன் என்ர "கவுஸ்" என்ர "கவுஸ்" என்டு நான் உருகின கவுஸே வேற கவுஸுக்குள்ள நிண்டு கை தட்டிச்சுது.
எல்லாக்கடுப்பையும் கொண்டுபோய் அவன்ல காட்டி கும்மினது மட்டும்தான் அந்த முறை புதுசா நடந்தது,
மற்றதெல்லாம் வழமை போல கிழக்கில உதிச்சு மேற்கில மறைஞ்சது.

லாஸ்ட் எபியில் சந்திக்கலாம்.....

ஒரு பட்டாம்பூச்சியின் பள்ளிக்கால டயரிக்குறிப்புக்கள் - 02

சேர், எக்ஸ் கியூ...

என்னம்மா?

"உங்களை அதிபர் வரட்டாம்."
"இப்பவோ?"
"ஓ"

அவர் வெளிக்கிட அடுத்த பெல் இன்டேர்வல்
சோ லெட்ஸ் டேக் ஏ பிரேக்....

வீட்டில் சுத்தி வர மாமரம் நிக்கும்
அதில உள்ள மாங்காய குரங்கு பிடுங்கினாலும் ஏன் குரங்கே? என்டும் பார்க்கத அதே நான் மணியம் சேர் வீட்டு சேலன் மாங்காய்க்கு கிங்கொங்காய் அடிபட்டிருக்கிறேன்.

வீட்டில் கடலை அவித்து கொட்டுவார்கள்.தின்னுடா! புரதம் என்டு.நாய் கூட எனக்கு தாற முழுதையும் தின்ன மாட்டுது
ஆனால் கோயிலில் தரும் அந்த ஒரு பிடி கடலைக்காக அடிபட்டு தின்னும் போது மனம் யோசிக்கும் ஐயரை போல உதுகளுக்கு ஒரு நாளும் சமைக்க தெரியாது.

அதை போல வீட்டில் வெறுத்துப்போன புட்டும்,தோசையும்,இடியப்பத்துக்காகவும் இங்கே நானும் சக போரளிகளும் நடத்த போகும் மினி உலக யுத்தம்தான் இந்த இன்டேர்வல்.

3 மேசைய சுத்தி வர எல்லோரும் கதிரைய போட்டோம்
"எடுத்து வைங்கடா பார்சல்களை எல்லோரும்"
யெஸ்! அந்தக்குரல் சாப்பாட்டுக்கு பொறுப்பான சாட்சத் நம்ம ................

இல்ல நான் இதில பேர் எழுதக்கூடாது எழுதினா ஐங்கி அடிப்பான்.
உப்புடித்தான் முதல் ஒருக்கா ஐங்கி என்டு எழுதறதுக்கு பதிலா ஜங்கி என்டு மாறி எழுதினதில ஆளுக்கு பயங்கர கடுப்பு.

எல்லோரும் சாப்பாட்டு பார்சலை மேசையில் வைத்தோம்.
ஒருத்தரும் இப்ப தொடாத, கொஞ்சம் பொறு .
எல்லோரும் அவன்  மூஞ்சிய பார்த்தோம் !!
என்ன இது "அன்னம் பாலிக்கும்...."
பாட போகிறானா ரூல்ஸ் ல அதல்லாம் இல்லையே அப்புறம் ஏன்?

ஆனா ஒருத்தரும் தொடல்ல.

இந்த பங்குச்சந்தைக்கு அவன்தான் லீடர்
அவன் வைச்சதுதான் சட்டம்.
1.இருக்கிற எல்லாரும் சாப்பிடணும்.
2.இயன்றவரை எல்லாரும் சாப்பாட்டு பார்சல் கொண்டரோனும்
★கட்டாயம் கொண்டறத மேசைல வைக்கணும்
3.சாப்பிட முதல் கை கழுவுறதும் கழுவாம விட்றதும் அவன் அவன் இஷ்டம்
4.பட் கழுவிட்டு வாறதுக்குள்ள சாப்பாடு முடிஞ்சா அதுக்கு சந்தை பொறுப்பேற்காது

இப்ப என்ன பிரச்சினை .
10 பேர் 9 பார்சல்.எல்லாரும் குனிய திலகர் கவட்டுக்குள்ள தன்ர புட்டுப்பார்சலை ஒளிச்சு வைச்சிருக்க அதைப்புடுங்கி மேசைல வைச்சுட்டு தலைவர் ஒரு பார்சலை ரன்டமா செலக்ட் பண்ணி ஓப்பன் பண்ண பாய்ஞ்சு .எல்லா கைக்குள்ளயும் என்
கைய விட்டன் .
தோசை.
இழுத்தன்.
பாதி இட்டலியாய் பினைஞ்சு வந்தது கையில்.
வாய்க்குள்ள அடைஞ்சு கொண்டு
" சம்ப...ல் கொண்ட...ரல்ல..யோடா"

திலகர் புட்டு போன விரக்தியில் வெறும் சம்பலை மட்டும் தின்டு கொண்டு இல்லை என்டு தலையாட்டிச்சு.
ஏனைய
9 பார்சல்களின்
கதையும் மேற்கூறிவாறு போக..
உயிர் வாழ்றதுக்காக சாப்பிட்றவங்கள் ஒரு வகை.
சாப்பிட்றதுக்காக உயிர் வாழ்றவங்கள் இன்னொரு வகை.
2 வது வகையை பிரதிநிதித்துவப்படுத்தினது எங்கட வகுப்பு.

20 நிமிட இடைவெளியில் 5 நிமிசம் சாப்பிட்டு பாக்கி பதினைஞ்சு நிமிசம் என்ன பண்ணுறது  என்டா காதல்.
சாப்பிட்டு கை கழுவிட்டு
அப்படியே பப்படி ல இருந்து சிலர் கழண்டு போவாங்க.

இதுக்குள்ள தனி தனியாக போறன்களே இவங்களுக்கு ஆங்காங்கே அவங்க பச்சை கொடி காட்டிட்டு இருப்பாங்க எங்கயாவது நிண்டு.இது வலு டீப்பான லவ் ஆ இருக்கும்

இன்னொரு வகை இருக்கு அது .வன் சைட்.
இது கட்டாயம் கூட ஒருத்தனை துணைக்கு கூட்டிட்டு போகும்.

இப்ப போறது நான் என்டு வைங்களேன்.அட ச்சும்மா ஒரு உ+ம் தான்.
கண் தேடும் எங்க எங்க என்டு.கூட வாறது ஈசியா முதல்ல கண்டு பிடிச்சுக்காட்டும்.

காதினுள் கிசு கிசுக்கும்
என்னடா?
உன் ஆள் வாறடா!!!

சகலமும் விழிப்புற்றது உடலில்
இதய துடிப்பு எகிறியது
அதிரலீன் அதிகம் சுரந்தது
நெல்லி மர இலைகள் அதிகமாக உதிர்ந்தன.

இண்டைக்கு பார்பாளா?
நேற்று பார்த்தாளே திரும்பி!!


எங்கடா?

பைப்படில தண்ணி குடிச்சுட்டு போறாள் பார்.பார்த்துக்கொண்டு

நின்றேன்.
திரும்பவில்லை
நின்றேன்.
திரும்பவில்லை.
பார்த்தேன் ........ம்க்கும்.
போவம் என்று திரும்பும் போது பின்னால் திரும்பி

பக்கத்தில் கதைத்து கொண்டே பார்த்தாள்ள்ள்......

காதலும் சரி
கத்தரிக்காயும் சரி
டேஸ்ட்டா இருக்கிறது ஸ்கூல் ரைம்ல மட்டும்தான்...

எதிர்பார்ப்புக்கள் எதுவும் இல்லாம காதல் வரக்கூடிய ஒரே ஒரு இடம் இங்கே மட்டும்தான்,

ஆனால் வெளியுலகம் அதை இன்பட்சுவேர்சன் என்டு அடிச்சுவிடும்.ப்ளடி இடியட்ஸ்.

பிரச்சினை எதுவுமே இல்லாம ஒரு சினிமா படம் எடுத்தா எப்டி இருக்கும் என்டொரு நினைப்பு நிறையநாளா ஓடிட்டு இருந்தது.
படம் புல்லா சந்தோசமான சீன் மட்டும்தான்வில்லன் இருக்க கூடாது.
ஹீரோ,ஹீரோயினை லவ் பண்ணணும், அவங்களை யாரும் பிரிக்க படாது. முக்கியமா அவங்களாவே பிரிஞ்சு அப்புறம் கடைசில சேர்ர மாதிரி பந்தா காட்டக்கூடாது அப்புறம் அதுக்கு இன்னுமொரு அன்ரி கிளைமாக்ஸ் வச்சு அவங்களை சாக்காட்ட கூடாது.ஆக ஒன்லி இரண்டு பேரும் ஹப்பியா இருக்கிறதை மட்டும்தான் காட்டணும்.

உதாரணத்துக்கு தலைவரோட ஓகே கண்மணி ரகப்படங்கள்.அது கூட மேலே சொன்ன எல்லா வரையறைகளையும் திருப்தி படுத்தியதா என்றால் கிடையாது.கொஞ்சம்..கொஞ்சம்தான்...

ஆனா பிரச்சினை இல்லாம மணிரத்னம் போல ஒரு சிலரால மட்டும்தான் இன்ரஸ்ட்டா படம் எடுக்க முடியும்.ஏன்னா பிரச்சினை இல்லாட்டி படமும் சரி பள்ளிக்கூட லைவ்வும் சரி பிளாப்பாயிடும்.

பந்தி பந்தியா நிறைய பிரச்சினை எழுதலாம்.இருந்தாலும் அதில்லை இந்த டயரியோட நோக்கம் அதுக்கு மேல இருக்கிற ஓகே கண்மணி டைப்.அதால வந்த பிராப்ளம்ஸ் எல்லாத்தையும் ப்பூ என்டு ஊதி தள்ளினதில முதலாவதா பறந்த தூசி எக்ஸாம்.
எக்சாம் எழுதி பேப்பர் தரேக்க
எவன் மூஞ்சிலயாச்சும் எக்ஸாம் ஊத்திக்கிட்ட மாதிரி கவலையே இருக்காது.இருக்கிறது போல காட்டிக்குவான்.

என்ரா?
மாக்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கே மம்மி கேட்டா என்னடா சொல்லறது

"நீ கொஞ்சம் மூடுறியா நானே கவலைல இருக்கன்."

"விடுறா  இந்த முறை  பெரிசா படிக்கல்லத்தானே "

"நாங்க சின்னனாயாச்சும் படிக்கலையே!!"

இந்த ஜாலி கொன்பெரன்ஸ் மீட்டிங்கை பின்னால நின்டு கோபமாக்கேட்டுட்டு இருந்த சியாமா டீச்சருக்குக்கே சிரிப்பு  வந்தாலும், காட்டிக்கொள்ளவில்லை.நாங்கள் கண்டு கொள்ளவில்லை.

டீச்சருக்கு திருத்த வேற  வகுப்பு பேப்பர் இருந்தாலும் முதல் எடுத்து திருத்திறது எங்கட வகுப்பு பேப்பரைத்ததான்.நல்லா எழுதினவன் பேப்பரையும் நல்லாவே எழுதாதவன் பேப்பரையும் ஈசியாத்திருத்திடலாம்.அதால எழுதி அடுத்த நாளே பேப்பர் கையிலையும் பேச்சு காதிலையும் விழும்.
அந்த நேரத்திலதான் தலையை குனிஞ்சு போன வருசம் செத்த பக்கத்து வூட்டு ஆயாவுக்கு ஆத்ம அஞ்சலி கொடுக்குறது
நிமிர்ந்து பார்த்தா பேர் சொல்லி பேச்சு விழும்.

அதுக்குள்ள ஒருத்தர் இரண்டுபேர் மடாக்காய் யோசிப்பினம்.
எஸ் ஆக வழியே இல்லையா?

ரீச்சர் தண்ணி குடிச்சுட்டு ....
மாக்ஸ் எடுத்த திறத்தில பச்சை தண்ணி குடிக்கிறதுக்கே நீங்கள் வெட்கப்படோனுமடா.

அவமானம்.

அவர் இருக்க எனக்கு சிரிப்பு.

நீ
தண்ணி குடிக்க முதல்
போய் முகத்தை கழுவுடா!
ஒரே கரியா கிடக்கு முகமெல்லாம்.

இரண்டு மணித்தியாலம் ஒரே தோசைய போட்டு பிரட்டி பிரட்டி எடுக்கிறது போல எங்களை ஆவ்வ்வ்....
இப்படி யாரச்சும் பேசினா ஒரு இரண்டு மணித்தியாலத்துக்கு பொத்திக்கொண்டு ரோசம் வந்துடும்.அப்டி வரேக்க,பேப்பரை கையில் வைத்த படி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்

பேப்பரில் பெரும்பாலான இடங்களில் ஒரு பெரிய முட்டை கருக்கட்டி  தனக்குள் சின்ன முட்டை போட்டிருந்தது.
இயற்கைக்கு மாறான செயல்.
எல்லோரின்
மனசுக்குள்ளும்
"அடுத்த தவணை படிப்பு
படிப்பு
படிப்பு தான்
என்ற சபதம் ஓடிக்கொண்டிருந்தது.

இருந்தாலும் எடுத்தது சபதம்தானே
சத்தியம் கிடையாதே.

அத மீறப்போறாதால ஒரு நசுட்டமும் வரப்போறதில்லை.மற்றது மீறுறதுக்கு காரணம் நாங்களில்லை என்டதால கடவுள் கண்ணைக்குத்தமாட்டார் என்டதும் உண்மை.

தவணை முடிந்து
ஒரு மாதம் லீவு விடும் போது ஒரு நெஸ்டால்ஜிக் பீலிங் வரும்

"கருவறை எங்களுக்கு வேறாக இருந்தாலும்
வகுப்பறை என்னவோ ஒன்றுதான்."

லீவு முடிஞ்சாச்சு,
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
சீரியஸ்ஸா படிக்க தொடங்கிலாம். போனதவணை சபதம் பண்ணிணாங்கள் ஆயிற்றே,இருந்தாலும் ஆடின கால் ஆடாம இருக்காது ஆடத்தான் செய்யும்.
அதால வெளி உலகத்துக்கு தெரியாம வகுப்புக்குள்ள மட்டும் சின்ன சின்னதா சம்பவங்கள செஞ்சாலும்
இரண்டு மூண்டு நாளால எங்களை பத்தி கதைக்க
ஸ்டாவ் மீட்டிங் போட்டார் பிரின்சிப்பல்.
..........

வகுப்பினுள் மட்டும் குழப்படி .
எப்படி செய்வது

தேவையான பொருட்கள்
டஸ்ரர்,சோக் துண்டுகள்
சாப்பாட்டு கடதாசி
இதர பிற எறி கருவிகள்
உரத்த குரல் வளம் Etc,

டேய் எறியாத!
பிளாக் போட்டை  அழித்து
அப்படியே சுழட்டி வீச..
டஸ்ரர் பறந்தது

அதிலிருந்து தப்ப
மேசையின் கீழ் அதிரடியாக பாய்ந்தான்
கோபி (நொட் குண்டுக்கோபி இது மத்த கோபி.குண்டுக்கோபி பாயறதுக்கு வகுப்பில தடை வதிச்சிருக்கு. )

கதிரையை இழுத்து பின்னால்
விட்டு எல்லாரும் எழுந்து நின்றனர்
இருங்கோ.
ஜீன்ஸை கொஞ்சம் மேல இழுத்து விட்டு ,
மைக் முன்னால் நின்று
ஊஷ்.. ஷ்... ஷ்
வழமையான வளி மீதான விசை பிரயோகம்.

இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் உப அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு
இந்த தவணை நிறைய நிகழ்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கு
ரீச்சர்ஸ் டே
நவராத்திரி
.....................
......................
வழமையாய் அதிகம் கதைக்கும் அதிபர்
நேரடியாய் பிரதான கருவுக்கு வந்தார்.

பக்கத்தில் பெரிய சோக் துண்டு கிடந்தது அதை இரண்டாக முறித்து திப்புவுக்கு
எய்ம் பண்ணி
எறிய
அது பறந்து., பறந்து மேலலால போய்....

சொத்திக்கையா நான் இங்க நிக்கிறன் பக்கத்து வகுப்புக்குள்ள எறியிறாய்?

என்ன ஞானப்பழம் சேர் உங்கட வகுப்பு வலுத்த மோசமா கிடக்கு
பக்கத்து வகுப்புக்குள்ள சோக், டஸ்ரர்
மட்டுமில்லாம திண்ட சாப்பாட்டு பார்சல்லையும் எறியிறாங்களாம்.

கதிரைக்கு மேலால் ஏறி தொம் என்று தரையில் கால் வைத்து ஐங்கியை அவன் எட்டி பிடிக்க
வாங்கு அப்பதான் தப்பான கோணத்தில் லாண்ட் ஆகியது.நியூட்டன் இஸ் கிரேட்.

அது மட்டுமில்லை சேர் கீழ் வகுப்பில பாடம் எடுக்கேலாமா கிடக்கு
அவங்கள் மேல நிண்டு எந்தநேரமும் கடா ,புடா, கடா, புடா எண்டு உழுந்தரைக்கிறாங்கள்

ஏன்? சேர் நீங்கள் வகுப்பை வடிவா பார்கிறதில்லையா.
என்ன?
இல்லை, சே...ர்

நான் பார்க்கேக்க,
வடிவாத்தான் இருக்கிறாங்கள்.

உனக்கு,
தண்ணி போத்தலை தூக்கி எறிய
அதன் மூடி க....ழ......ண்.......டு
புவி ஈர்ப்பு ஆர்முடுகலுடன்
போத்தல் முதல் விழ

அது மட்டுமில்ல
மேல இருந்து தண்ணியை ஊத்துறாங்கள்

என்ன "தண்ணி "

"பச்சை தண்ணி" சேர்

என்ன.,...

..............................
..............................
அந்த இடத்தில் ஞானப்பழம் சேர் கண்ணில் தூசி விழுந்து கண் கலங்கியது அடுத்த நாள் எங்களுக்கு தெரிய வந்த போது

எவ்ளவோ பேச்சு வாங்கியிருக்கிறோம்
எல்லாரிடமும்
சிலரிடம் ஏதாவது ஒரு காரணத்துக்காக
சிலரிடம் எந்த வித காரணமும் இல்லாமல்.

எதுவும் பாதித்ததில்லை

ஆனால்,
அன்று ஞானப்பழம் சேர் எங்களுக்காக சிரித்துக்கொண்டே ,அழுத போது
அடி வயிற்றை எதுவோ பிசைந்தது.

அது மட்டுமே இல்லாமல் மீட்டிங்கில் ஒட்டு மொத்த உயர் மட்டமும் ஆலோசித்து பண்ணிய வேலை

வேற வழியில்லை ,உதுகளை வெட்டி விட்ரோணும்.
வர வர வளர்ந்து கொண்டே, போகுதுகள்.

அடுத்த நாள்,
காலை ,
அதிர்ச்சி.

வகுப்புக்கு முன்னால் நின்ற பச்சை மரத்தை கொன்றுவிட்டார்கள், இனி காத்தடிச்சா கண்ணில மண் விழாது மண்ணாங்கட்டியே விழும் என்கிற நிலை.முட்டுக்கால்ல வகுப்புக்குள்ள நின்டாலே அதிபருக்கு அங்க ஒபிஸூக்குள்ள எங்கள வடிவா தெரியும் என்ட நிலை.
ஆனா இவங்களை ஒரு மாதிரி அடக்கியாச்சு என்டு அவையள் அங்க இருந்து கொக்கலிக்கேக்க கொஞ்சம் மேலால எட்டிப்பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும்,
நாங்கள் ஒருத்தரும் வகுப்புக்குள்ள இல்லை என்ட விசயம்.

அடுத்த நாள்


அடுத்த எபிசோட்டுக்கு தாவவும்......