About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Monday, July 18, 2016

அதிகப்பிரசங்கிகள்.

கோயில் திருவிழா ஆரம்பிப்பதற்கு முதல் வாரம் நிர்வாகக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
பின் வரிசையில் கதிரைகள் இருந்தும் தம்பாவின் குறூப்பும் கிச்சாவின் குறூப்பும் கையைக்கட்டிக்கொண்டு எழும்பி நின்று கொண்டிருந்ததற்கு காரணம் இருந்தது.
கூட்டத்தில் தப்பான முடிவுகள் எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் எல்லாம் குண்டுமணி ஒரு தடவை செருமி புழுக்கொடியலை படக் என்று  முறிக்கும் சத்தம் தலைவருக்கும் செயலாளருக்கும் மட்டும் கேட்டது.
  • சுண்டல்காரர்களுக்கு இந்த தடவை அனுமதி கொடுக்க கூடாது.-படக்.
  • கடலையோடு பூந்தியும் பிரசாதமாய் கொடுக்கலாம்.
  • பூங்காவனம் அன்று கோஷ்டி எதுவும் வேண்டாம்-படக்... படக்க்.
முக்கியமான இந்த கதைக்குரிய ஆலோசனை நடைபெறத்தொடங்கிய போது கண்காணிப்புக்குழு அலேர்டாகியது.
"இந்த தடவை பிரசங்கத்திற்கு யாரை அழைப்பது?"
முன் வைக்கப்பட்ட அபிப்பிராய பட்டியலில் எதிர்பார்க்கப்பட்ட பெயரில்லை.

அவரை வைக்கலாம்,இவரை வைக்கலாம் என்று கொண்டிருந்த போது...அந்த பெயர் கேட்டது.

"புஸ்பமணியம்"
தம்பா தைரியமாய் நின்று கொண்டிருக்க,
ஊசி விழுந்தபோது 'டிங்' என்று சத்தம் கேட்டது.

தலைவர் இங்கிலீசுக்கு மாறினார்.
"யூ மீன் புரோக்கர் புஸ்பமணியம்"
"ம்" விச்சுவா தலையசைக்க,கூட்டம் சலசலத்தது.

புரோக்கர் புஸ்பமணியம் ஒரு சிறு அறிமுகம்.
சப்பச்சி மாவடியடி புரோக்கர் புஸ்பமணியம் என்றால் மாலைதீவில இருக்கிற மடோனோ கூட சொல்லும்
"பு.ம...
யா!.. ஐ நோ கிம் "

பாப்யுலர் என்டா புரோக்கர் பு.ம,
பு.ம என்டா பாப்யுலர் என்டுதான் அவர் வீட்டில் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தார்.

ஐந்தடி இரண்டங்குலமேயான,பு.ம ஒரு கல்யாணப் புரோக்கராய் உருவானது சரியாய் 2005 ஆம் ஆண்டு 04ம் மாதம் 13 ம் தேதி.அவர் முதல் முதலாய் பொருத்தம் பார்த்து கல்யாணம் கட்டி வைத்தது தனக்கும் தன்ர மனுசிக்கும்.அவற்ற வாழ்க்கைல முதலும் கடைசியுமா சொதப்பின ஒரே ஒரு சம்பவம் என்டா அது மட்டும்தான்.

பு.ம ன்ர கையில ஒரு குறிப்பு போனால் அதுக்கு பொருத்தமான ஒரு குறிப்பை எங்க இருந்தென்டாலும் செஞ்சுவைச்சது போல எடுத்துட்டு வாறதுதான் பு.மாவின் தனித்திறமை.அதுக்கு பு.ம க்கு உதவியது அவ்வப்போது பீடி அடித்து அரைவாசி கறுப்பாயிருந்த அவரின் வாய்.

பு.மா வுக்கு ஒரு பரந்த பட்டறிவும் ஓரளவு படிப்பறிவும் இருந்தது.ஆரம்ப காலங்களில் அதாவது புரோக்கர் தொழிலுக்கு வர முன்னர் கோயில்களில் பிரசங்கம் செய்வது பு.ம வின் ஒரு பஷனாக இருந்தது.அவரின் பிரசங்கத்துக்கு அடிமையான ஒரு பதின்ம வயது கூட்டமே இருந்தது. அதை தாண்டிய வயதெல்லாம் அவரின் பிரசங்கத்துக்கு எதிர்ப்பான கூட்டாமயிருந்தது.

அதற்கு காரணம் பு.ம வின் பிரசங்க ஸ்டைல்.
இராமயணமா,மகாபாரதமா...கம்பரும், வால்மீகியும் தலையில் விக்ஸ் பூசும்படியாக கதை சொல்லப்படும். நடக்கும் பத்துநாள் திருவிழாவில் எட்டுநாளும் இராமனும்,சீதையும் காதலித்த விதம், அது எப்படி மகாபாரத்ததில்  பாஞ்சாலி,பாண்டவர்களோடு தொடர்புபட்டது, முட்டை இல்லாட்டி கோழி வந்திராது என்பதற்கு மேலால் போய் சேவல் இல்லாட்டி முட்டையே வந்திருக்காது,இராமன் இல்லா விட்டால் கிருஷ்ணன் கிடையாது என்று நிறுவிக்கொண்டு போய் பத்தாம் நாள் சண்டைவந்தது, கதை முடிந்தது என்று சொல்லி முடிக்க கனவுலகத்தில் இருந்த இளைஞ்ஞ,இளைஞ்ஞிகள் ஆரவாரிப்பார்கள். ஒரு கூட்டம் தலை சொறிய ஒரு கூட்டம் எரிச்சலடையும்.

ஒரு தடவை பிரசங்கத்தின் போது சிலப்பதிகாரம் ஓடியது.கண்ணகிக்கும் கோவலனுக்கும் பொருத்தம் பார்த்த போது கோவலனுக்கு ஏழில் கந்தன் நிற்கிறான்,அவனுக்கு இருதாரப்பலனுண்டு என்று சொல்லியும் அதை மதியாமல் - கோவலனும் வெஜ் கண்ணகியும் வெஜ் என்று சொல்லி கல்யாணம்  செய்து வைக்க கடைசியில் மாதவியோடு எப்படி அது நொன்வெஜ் ஆகியது என்று சொல்லி முடித்த போது, நிறையப்பேர் எரிச்சலாகி விட்டார்கள். அன்றிலிருந்து அவரை பிரசங்கத்துக்கு அழைப்பதையும் நிறுத்தி விட...

காலப்போக்கில் பதின்ம வயதுகளின் ஆதரவும் குறைந்த போது பு.ம அந்த தொழிலுக்கே முழுக்கு போட்டு விட்டு புரோக்கர் தொழிலுக்கு நிரந்தரமாகிவிட்டார்.

இப்போது குண்டுமணி,தம்பா போன்றோரின் முயற்சியால் வரலாறு மீள எழுதப்பட இருந்தது.
கூட்டத்தில் பு.ம தான் இந்த தடவை பிரசங்கம் என்று தீர்மானமாகியது.ஆனால் இதிகாசங்கள் எதுவும் இந்த முறை வேண்டாம் கேட்டு அலுத்து விட்டது.புதிதாய் ஏதாவது கொண்டுவரச்சொல்லுமாறு செயலாளர் நசூகலாய் சொல்லிவிட்டிருந்தார்.
இதிகாசங்கள் பு.ம வால் சாகக்கூடாது என்ற பாரிய பொறுப்புணர்வில் மட்டும் அவர் அதை சொல்லவில்லை. இராமயணம், மகாபாரதங்களை விட்டால் பு.ம வுக்கு வேறு ஏதும் தெரியாது.அதனால் பு.ம இந்த பிரசங்க மெதேட்டை ஏற்றுக்கொள்ளவும் மாட்டன்,வரவும் மாட்டான் என்ற சதி நம்பிக்கையில் சொல்லப்பட்ட கூற்று அது.
பு.ம வை அழைத்து வரும் பொறுப்பை தம்பாவின் டீமே ஏற்றுக்கொண்டது.

பு.ம எப்படியும் பிரசங்கத்துக்கு வரமாட்டான்,என்ற நம்பிக்கையில் நிர்வாகக்குழு வேறொரு ஆளையும்  யாருக்கும் தெரியாமல் ஒழுங்கு பண்ணியிருந்தார்கள்.

அவர்கள் போய் பு.ம வை அழைத்த போது பு.ம வந்தாரா இல்லை நிர்வாத்தினரின் சதிச்செயல் வென்றதா என்று பார்க்க முன்...

கோயில் பிரசங்கங்கள் பற்றிய பீலிங் நொஸ்டால்ஜிக் உடனான ஒரு சில பராக்கள்.

                          #########

சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் பெரும்பாலான போக்மன்ஸும் கோயிலடிவாரத்திலேயே சிக்குப்பட்டது. அப்படி சிக்குப்பட்ட பிக்காச்சுகளில் ஒன்றுதான் இந்த பிரசங்கம்.ஊரிலுள்ள எல்லாரையும் வா, வா என்று ஒலிபெருக்கியில் கூப்பிட்டது.

கோயில் வசந்தமண்டபங்களிலோ இல்லை வெளியில் இருக்கும் வேப்பமரத்துக்கு கீழோ அத்தனை பேரும் இருக்க பிரசங்கத்துக்கேயான அந்த தனித்தொனியில் முழங்கும் போது,...
ஆரம்பத்தில் அது முடியத்தான் பிரசாதம் தருவார்கள் என்று சொல்லி மடக்கி வைத்திருந்த அப்பாவைத்தாண்டி காலப்போக்கில் பிரசாதத்துக்கு எழுந்த அப்பாவை நான் மடக்கி வைக்குமளவுக்கு பிரசங்கங்கள் ஈர்த்திருந்தது.

கம்பர் ராமாயணம், வால்மீகி மகாபாரதம் என்பதிலும் பார்க்க பிரசங்கம் செய்வோரின் பெயரிலேயே அந்த ஊர் ராம,ராவணனை அறிந்து சகுனி மேல் கோபம் கொண்டு சந்திரமதி மேல் பரிதாபம் கொண்டிருந்தது.

ஒருவரின் வாயை மட்டும் ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேல் பார்த்துக்கொண்டிருக்க முடியும் என்று நிரூபித்த அனேக பிரசங்கிகளை கண்ணால் பாத்திருக்கிறேன்.பிரசங்கம் என்பது ஒரு தனி உலகம்.பிரசங்கிகள் அதற்கான சாரதிகள்.

சாதாரண பத்து நாள் திருவிழாக்களையும் அத்தியாயங்களினால் அலங்கரிப்பவர்கள்.
படித்த காலத்தில் இரண்டு,மூன்று கோயில்களில் பிரசங்கம் செய்கின்ற ஆசிரியர்ளோடு நேரடி பழக்கம் இருந்தது. அவர்கள் இரண்டு நிமிட நற்சிந்தனைக்கு மேடையில் கால் வைக்க முதலே ஒரு அமைதி நிலவும்.அதுதான் அவர்களுக்கு கிடைத்த அரிய வெகுமதி.

"அண்ணலும் நோக்கினாள்,அவளும் நோக்கினாள்" என்று சொல்லி
விசித்திரா ராகீயையும்,பெருமாள் ஆண்டாளையும் பரஸ்பரம் பார்த்து கொள்வதற்கு ஒரு சிறிய வினாடி இடைவெளி விட்டு தொண்டையை கனைத்து அவர்களை தன்பக்கம் திருப்புகின்ற பிரசங்கிகளும் இப்போது தொலைந்து விட்டார்கள். அப்படி பார்த்து கொள்கின்ற அடியவர்களும் ம(ை) றந்து விட்டார்கள்.

இதற்கு பு.ம போன்றவர்கள் பிரசங்கங்களை விட்டு விட்டு பிற தொழில்களுக்கு போனது ஒரு காரணம். போக்மன்ஸ் வேறு இடங்களுக்கு சிதறி ஓடியது இன்னுமொரு காரணம்.

                            ##########

இதை மாற்றுவதற்காகதான் தம்பா போயிருந்தான்.

இனி.....

முதலாம் நாள் திருவிழா.
ஆரம்ப கட்ட பூஜைகள் முடிந்து பிரசங்க வேளை ஆரம்பமாகிவிட்டிருந்தது.
தம்பா வென்று விட்டிருந்தான்.
பு.ம வந்திருந்தார்.தலைவரும் செயலாளரும் வேட்டியை இறுக்கி கொண்டார்கள்.மகாபாரதத்தையும்,இராமயணத்தையும் விட்டு விட்டு பு.ம என்னத்தை சொல்லி கிழித்து விடப்போகிறான் என்ற இறுமாப்புடன் பரஸ்பரம் அவர்கள் சிரித்துக்கொள்ள
பு.ம ஆதரவுக்கூட்டம் ஆரவாரத்தோடு வந்தமர்ந்திருந்தது.ஒரு பகுதி எழும்பி போய்விட்டது. ஒரு தரப்பு காதை பு.ம வின் பக்கம் திருப்பிக்கொண்டு பிள்ளையாரைப் பார்த்தபடி இருந்தது.

பு.ம ஒரு புன்முறுவலோடு தொண்டையை செருமிக்கொண்டு வணக்கம் சொல்லி குறித்த அந்த தொனியிலே ஆரம்பித்தார்..

"திருமுனைப்பாடி நாட்டிலே,தில்லைக்கு மேற்கே இரண்டுகாத தூரத்திலே பரந்து விரிந்திருக்கின்ற வீரநாரயண ஏரி என்று பெயர் கொண்ட அந்த ஏரியை நோக்கி ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்திலே ஒரு வாலிப வீரன் குதிரையிலே வந்து கொண்டிருக்கின்றான்."
                                             ___________________________










#அற்பபிறவி#

No comments:

Post a Comment