About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Sunday, June 12, 2016

ஒரு பட்டாம்பூச்சியின் பள்ளிக்கால டயரிக்குறிப்புக்கள் - 04

(கடைசி எபிசோட்...
அதால கொஞ்சம் இல்லை நிறையவே லென்ந்த் கூட சகித்துக்கொள்ளவும்)

இதுக்கு டைட்டில் "ஜன்னலோரம்" என்று வைத்து விட்டு,

பஸ்ஸில போவது என்பது விருப்ப பட்டியலின் 7வது இடத்தில் இருக்கிறது.

சின்ன பிள்ளைல அம்மாவோட பஸ்ஸில ஏறி மேல இருக்கிற கம்பி எனக்கு எப்போடா எட்டும் அதை நானும் பெரியாக்கள் மாதிரி பிடிச்சுட்டு போறதுக்கு என்டு கொட்டாவி விட்டு கைக்கெட்டின அம்மாவோட முந்தானைய பிடிச்சுட்டு யன்னலுக்கு வெளியால பார்க்கும் போது ,
பஸ் ஓடுறதுக்கு எதிர் திசைல எல்லாம் ஓடும்.அதை பார்க்க பயங்கர சந்தோசமா இருக்கும்.

"அதுக்கு காரணம் சார்பியக்கமடப்பா" என்டு அதை சயன்ஸ் வாத்தி எனக்கு விளங்கப்படுத்தின வயசில அதைப் பார்க்கறதில இருக்கிற சந்தோசம் கொஞ்சம் தேஞ்சு போயிருந்தாலும்
இப்பவும் யன்னல் கரை சீட் என்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள்ல ஒண்ணுதான்.

"மயில் தோகையின் நடுவிலும்
பஸ்ஸில் ஐன்னலோரமும்"
எப்போதும் இரசிக்கத்தக்கவை.

என்று 'சிகரங்களை நோக்கி'யில் வைரமுத்து கிறுக்கியதை பார்க்க சந்தோசமாயிருந்தது.
சாவகச்சேரில இருந்து யாழ்பாணம் எத்தனையோ தரம் பிறந்ததில இருந்து போயிருந்தாலும் ஒவ்வொரு முறை போகும் போதும் புதிதாய் தெரியும் இருபக்க கரையும்,நாவற்குழி பாலமும்,விளம்பர பலகைகளும்,இதர பிற இத்யாதி அம்சங்களும்.

அதற்கு பஸ்ஸும் நல்ல கொண்டிசன்ல இருந்து டிரைவரும் ஒரு நல்ல ரசிகனாய் இருக்கும் பட்சத்தில், ஏ.ஆரோ அல்லது இளையராஜாவோ செவி வழி துணை செய்ய, அந்த பஸ் என்னை பொறுத்தவரை ஒரு நகரும் சொர்க்கம்.

சீட்டுக்காக,
நடக்கும் ஐஞ்சு வயசு குழந்தையை தோளில் தூக்கிகொண்டு ஏறும் அம்மாவிலிருந்து,அடிக்கும் காற்றில் நெற்றியில் விழும் ஓரிரு முடியையும் அழகாய் இழுத்து பின் காதில் செருவி விடுகின்ற பெயர் தெரியாத அந்த அவள் வரை ஒவ்வொன்றுமே அழகாய் தெரிவது இந்த பயணங்களின் போதுதான்.

நெரிச்சல் இருக்கும் வேளைகளில் இதையெல்லாம் ரசிக்க சாத்தியமில்லைதான்.

ஆனால், "அம்மா பின்னால போம்மா, அண்ணை தள்ளி நில்லுங்கோ" என்று ஆட்களை அடையும் கொண்டக்டரை,
கூட இருக்கும் ப்ரெண்ட்ஸ்ஸோடு சேர்ந்து கலாய்த்து புஃட்போட்டில் தொங்கிக்கொண்டு போகும் போது அந்த நெரிச்சல் தெரிவதில்லை.

சாதாரணமாய் இப்படி சின்ன பயணத்தை கூட ரசித்த எனக்கு .
மொத்த வகுப்புமாய்
வழிதுணையா நாலைஞ்சு சேர் மாரும் ரீச்சர்ஸ்ஸும்.
ஐந்து நாட்களையும் செதுக்கி
நாட்டை சுத்தி ஒரு ரவுண்ட்,
அடித்து முடித்த போது பிறந்தபயனை அடைந்ததாய் ஒரு உணர்வு வந்தது.

அடுத்தது
‪#‎ஓட்டையைப்பெரிசாக்கவும்‬...#

கோயில் திருவிழா அப்டி என்ற விஷயத்துக்குள்ள குறிப்பா குறிப்பிடக்கூடிய ஒரு விசயம் இருக்கு.

பத்து வயசா இருக்கேக்க,

வீட்டுக்கு பக்கத்தில கொஞ்சம் தள்ளி ஒரு முருகன் கோயில் இருக்கு.
அப்ப என்ன நாம ஆள் பார்க்கவா போகிறோம்.கஸ்ரப்பட்டு அங்க இங்க என்டு ஆக்கினை கொடுத்ததில ஒரு ஐஞ்சோ பத்தோ தந்திருக்குங்கள்.

அதையும் அங்க போன உடன செலவழிக்க விடாதுகள்.
"இப்ப வாங்கி திண்டா அப்புச்சாமி கண்ணை குத்தும்டா" எனும் போது வருகின்ற பெரிய சந்தேகம்
"கண்ணைக்குத்தினா அது எப்டி அப்புறம் அப்புச்சாமி ஆகும்"

இப்பவும் அம்மா அப்டி கோயிலுக்குள்ள இழுத்து எங்கயும் போக விடாம மடில வைச்சிருந்தா அந்தக்கேள்வியை கேட்டிருப்பன்.இரண்டுமே நடக்கேல்ல.

வீட்ல தண்டினது சில்லறை என்டா கஸ்ரம்.தாளா இருந்தா அப்பர் கட்டி விட்ட இடுப்பில நிக்காத வேட்டின்ர விளிம்பில பெரியாக்கள் மாதிரி அந்த தாளை செருகிட்டு கச்சான் விக்கிற ஆச்சிக்கு முன்னால போய் இடுப்பில கை வைச்சுட்டு நிக்க

"என்னடா தம்பி வோணும்.?"

"அந்த போத்தலுக்க கிடக்கிறது."

"ஒண்டு பத்து ரூவ"

"அப்ப அது?"

"மூண்டு பத்து ரூவ"

அப்ப ....
"நீ எவ்வளவு வைச்சிருக்கா?"

"அவனுக்கு நீ பத்து ரூவாக்கு கச்சான் குடனை காணும்."

வழமையப்போல அந்த உருண்டை ரொபின்ட விலை கேட்கிறதுக்குள்ள குழப்பிப்விட்ட  அப்பா.

எனக்கு கொஞ்சம் வளர்ந்த பிறகு தான் பிடிபட்டது.நான் அந்த உருண்டை ரொபிக்கோ அல்லது கச்சான் கம கடலைக்கோ அப்போ ஆசைப்பட்டிருக்கவில்லை.அதை விற்ற ஆச்சி.அந்த இடத்தில் நின்ற நான்.அந்த இரண்டு விசயங்கள்தான் உண்மையில் பிடித்திருந்தது.

இரண்டாவதா குறிப்பிடற விசயம் வளர்ந்தாப்பிறகு வாறது.கோயிலுக்கு
சின்னனா இருக்கேக்க கடலை வாங்க போறது இப்ப போட போறது ஜஸ்ட் ஒரே ஒரு சொல்தான் மாற்றலாகியிருக்க

ஏண்டா தாவணில அதுவும் கோயில்ல மட்டும் எல்லாருமே அழகா தெரியுறாங்க?

"அதான்டா ஆண்டவனோட கிருபைங்கிறது"

அந்த சின்ன வயசில கச்சான் வாங்க ஆசைப்பட்ட அந்த ஆச்சி.
பெரிசானப்புறம் ரசிச்ச தாவணி,கிருபை
இரண்டையும் ஒரே கல்லில அடிக்க முடிந்தது.
இங்கே..
ஸ்கூல்ல இன்ரேவல் ரைம்ல பின் கேற் வழியா  வந்து அப்ப நான் ஆசைப்பட்ட உருண்டை ரொபில இருந்து கடலை, கச்சான், மிக்சர் என்று எல்லாமே வித்த ஆச்சி.ஆச்சி ரேஞ்சுக்கு அவவுக்கு வயசில்லா விட்டாலும் அப்புறம் உங்களை ஏன் ஆச்சி என்டுறாங்கள் என்ற போது  தான் விற்பதற்கு முதல் தன் தாய் இப்படி இதே இடத்தில் விற்றதாக.அதன் பின் ஒன்று மட்டும் புரிந்தது, ஆச்சி நாங்கள் வாங்குவதால் வருகின்ற வருமானத்தில் வாழவில்லை.தன் தாயைப்போல தானும் எங்களோடு வாழ வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே.அந்த எண்ணத்தில் தீப்பிடித்தது.
யாரோ ஒரு கிருதாரி பள்ளிக்கூடம் முடியிறக்கிடல அவசரப்பட்டு அந்த கேற்றை மேலால தாவ அநியாயம் தகரம் வைச்சு, கேற்றை அடைதது சமூகம்.

இருந்தாலும் எங்களால ஆச்சியை விட முடியல்ல .ஆச்சியாலையும் எங்கள விட முடியேல்ல.
கை போறளவுக்கு தகரத்தில் ஓட்டை போட்டோம்.
இம்மியும் பிசகாம மிச்சக்காசையும் கேட்ட சாமானையும் சரியா முகத்தை பார்க்காமலே கையில வைக்கிற அவவோட சாமர்த்தியத்தை கடைசி வரை ரசித்தோம்.

சந்தோசம்.
இனி இருப்பவர்களிடம் ஓர் வேண்டுகோள் ஆச்சியின் முகம் பார்க்குமளவுக்கு அந்த ஓட்டையை பெரிசாக்கவும்.

அடுத்தது ஆச்சிக்கு அடுத்ததாய் பலர் போகுமிடம்
டான்னு 10 டொட் 55 க்கு பள்ளிக்கூடத்தில ஒரு பெல்லு அடிக்கும்.
அதுக்கு முதல் ப்ரீயா இருக்கிற பாடத்துக்கே வீட்டுல இருந்து கொண்டுவந்ததை தின்னுட்டு இன்டேர்வலுக்கு போறது...

இந்த இடத்தை திகில் கதை பாணில வர்ணிச்சா
மண்டபத்தின் ஒரு பக்க சுவரிலுள்ள ஓட்டைகள்,முழுதும் ஒட்டடைகள் கறுப்பாய் புகை படிந்து அந்த அறையினுள் இரண்டு மேசையுடன் ஒரு காலில்லாத வாங்குகள்.
அதைத்தாண்டி மற்றைய அறையினுள் புகை மண்டலம். நிறைய உருவங்கள் அருஉருவமாய்.
அந்தப் பெட்டி.அதை உன்னிப்பாய் கவனித்தேன் ஒன்றுமே தெரியவில்லை.கண் வேறு எரிந்தது.மீண்டும் கண்ணைக்கசக்கி தைரியமாய் பார்த்தேன் இரண்டு மூன்று உருண்டைகள்.

"மச்சி வாய்ப்பன் கிடக்கடா!!"

"வாங்கடா வாங்கு "

"ம்.காசு?"

"பத்து ரூபாய் நாலாய் மடித்து நீட்டியது அந்த கஞ்சப்பிசினாரி"

வேறு வழியில்லாமல் எல்லாம் செலவழிச்சு மிச்சமா இருந்த எக்ஸ்ஸாமுக்கு கட்ட வைச்சிருந்ததை காசு பொக்கட்டுக்குள்ளால தோண்டி எடுத்தன்.ஐம்பது ரூபா. காசை அவனிட்டயே கொடுத்து

"இரண்டு வாய்ப்பன்
இரண்டு ரீ"
இதுதான் கன்ரீன்.

இன்ரேவல் ரைம் இந்த ஏரியா பொடியளின்ர ராஜ்ஜியம்.இந்த ஒரு இடம் கம நேரத்திலதான் பொடியள் தைர்யமாய் நிமிர்ந்து நிண்டு கதைச்சுட்டு இருக்கேக்க வாத்திமாருக்கு மட்டும் தலை சுளுக்கு வந்து குனிஞ்சு கொண்டு போற இடம்.ஏன்? அதில ஒருத்தன் ஒற்றைக்காலால சுவருக்கு உண்டு குடுத்துட்டு நிக்கேக்க வந்த வாத்தியார் யாராவது மாறி நிமிர்ந்து பார்த்து முறைச்சா ஏ!இந்தடா ஓசி ரீ என்பான், பக்கத்தில் நிற்பவனை பார்த்து.தேவையா இந்த அசிங்கம் என்று குனிஞ்சுட்டே போய் விடுவார்கள்.பெரும்பாலானவர்கள் அந்த பாதையை பயன்படுதாதுவதே இல்லை.

அவன் வாங்கி வந்த
ரீ சுட்டுது.அதனால் கப்பும் சுட்டுது. வாங்கி தூண்ல வைச்சுட்டு வாய்பனை கடிக்.

"நட்பு சொல்லாம கொள்ளாம வந்திருக்கா?"

இரண்டு பேர்.

பரவால்ல வாங்கினதுக்கு ஒரு வாயச்சும் தின்னமே.ஆறுதலாய் தூணைப்பார்க்க.

"என்ன டீயிடா இது ,சீனியும் இல்லை ஒரு மண்ணுமில்லை"
நான் வாங்கின டீயின் அடித்தேயிலைக்கட்டையை எந்த வஞ்சகமும் இல்லாம டேஸ்ட் பண்ணிப்பார்க்க தந்தாங்கள்.
நட்புக்காக பொறுத்துக்கொண்ட ஆயிரங்களுள் இதுவும் போய் புதையட்டும்

இந்த உலகத்தில சாப்பிட்றவங்களை இரண்டாப் பிரிக்கலாம்.
ஒண்ணு-வாங்கிச் சாப்பிட்றவங்கள்
இரண்டு-வாங்கினதை வாங்கி சாப்பிடறவங்கள்.

"நமது கன்ரீனில் உணவுக்கூட்டணி.
அதில் நட்பின் ருசி"

பள்ளிக்கூடத்தில கால் வைச்ச நாள் முதல் புதுசா பெரிசா கன்ரீன் கட்டுறம் என்டு கதை அடிக்கடி அடி பட்டாலும் அங்க இருந்து வெளிக்கிடும் வரை மெயின் கோல்ல இருக்கிற ஒரு பக்க யன்னல் வச்ச சுவருக்குள்ளால புகை வந்து கொண்டுதான் இருந்தது.
நாங்களும் சைக்கிள் பார்க்கில நிக்கிற பெட்டையளின்ர சைக்கிள் கூடையளுக்கையும்,கரியல்கள்ளையும் குடிச்ச தேத்தண்ணி பேணியளை செருவி விட்டுட்டு வாறதையும்தான் வழமையா வைச்சிருந்தம்.
பாவம் அதுகள் வீட்டை பேணி கழுவ வேண்டியிருந்தது, இங்க பேணியை எடுத்துட்டு சைக்கிளைக் கழுவேண்டியிருந்தது.

இன்டேர்வல் முடிய வகுப்புக்கு போனா அங்க வகுப்பு காப்ரேசன் வண்டி மாதிரி கிடக்க.
ஐஞ்சு பேரும் மட்டும்தானிருந்து வம்பளக்கிறளவை.டவுட் வர டைம்டேபிளைப் பார்த்தா இங்கிலிஸ்.புரிஞ்சுட்டுது.உவங்கள் எளியவங்கள் என்னை விட்டுட்டு பறந்திட்டாங்கள்.
வாங்குக்கு கீழ கிடந்த சுத்துற கொப்பியை எடுத்துக்கொண்டு லைப்ரரிக்கு வெளிக்கிட்டன்.

போகேக்க ஐஞ்சோடயும் கொம்பிரிமைஸ் ஆகி நாங்கள் ஒருதரும் இண்டைக்கு வரேல்ல என்டு ஆர் கேட்டாலும் சொல்லச் சொல்ல நகுல,சகாதேவ,தரும,அர்ச்சுனன் எல்லாம் பேசாம இருக்கா உந்த ஐஞ்சாவது ஆள் இருக்கொல்லோ
அது மட்டும்
"முடியாது,
அப்டி சொல்லலே."என்டுச்சு

எனக்கு கடுப்பு.
தருமனே பொய் சொல்லேக்கே உனக்கு என்னத்துக்கு உவ்வளவு அதப்பு? என்டு கேட்க பாத்தனன்.ஆனா
பேந்து துரியோதனனுக்கு என்ன நடந்தது என்டு ஞாபகம் வர பக்கத்தில ஆக்களும் சப்போட்டுக்கு இல்லை என்டறாதல வாயை மூடிட்டு லைப்ரரிக்கு போனன்.

அன்று ஆச்சரியங்கள் அதிகமான நாள்
ஆ....
லைப்ரரி
மௌனங்கள் பேசுமிடம்.

மௌனம் எப்புடி பேசும் என்டு குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கப்படாது கவிதை என்றால் அப்படித்தான்.

ஆனா எங்கட பள்ளிக்கூட லைப்ரரி இருக்கே இங்க மௌனம் பேசாது மத்த எல்லாம் பேசும்

இந்த இடத்து கூத்தை எழுதுறதுக்கு கிட்டமுட்ட இரண்டு மூண்டு எபிசோட் வேணும்.

என்னோட வழில வந்த மற்ற மூண்டும் மரத்தடி நிண்டுட்டுதுகள்.
அவங்களுக்கும் படிப்புக்கும் வெகுதூரமாம் அதான் எனி தாங்கள் வரேல்ல என்டுடாங்கள்.

ஆனா எனக்கு கொஞ்சம் லைப்ரரி என்டா பிடிக்கும்.வீட்ல பாஃன் போட்டுத்தான் நித்திரை கொள்ளுறது.

சரி என்டு அதுக்குள்ள காலை வைச்சா  விசர் வந்துட்டுது.
அங்க வேலைய்யிறது ஒரே ஒரு பாஃன்தான்.
அதையும் தும்புக்கட்டை தடியாலான் சுழட்டி ஸ்டாட் பண்ண  ர்ர்ர் என்ட சத்தத்தோட வேலையஃய தொடங்கும்.
லூசுகள் ஆரோ அதுக்கு பக்கத்தில ப்ளீஸ்
சைலண்ட் என்டு எழுதி ஒட்டியிருக்குதுகள்.
அதைப்பார்க்கற நேரமெல்லாம் சிரிப்பு வரும்.பின்ன என்ன பாஃனுக்கு இங்கிலிஷ் தெரியுமே எங்கையாவது.

அதுக்கு கீழ, எனக்கு அண்டைக்குத்தான் தெரியும் உந்த வாத்தியும் வீட்டல பாஃன் போட்டுத்தான நித்திரை கொள்ளுறது என்டு.

வேற வழியில்லாம அடைஞ்சு வைச்ச புத்தக குவியலுக்குள்ள ஒண்டை ரண்டமா இழுத்துகொண்டு போய் ஒரு இடத்தில இருந்து பார்த்தன்.

சுஜாதாவின்ர "ஆ" என்ட புத்தகம்.ஏற்கனவே வாசித்தாலும்
பரவாயில்லை எத்தனை தடவையும் வாசிக்கலாம் என்டுட்டு திரும்பவும் 'ஆ' என்டு வாசிக்க தொடங்கினான்.

போன ஜென்மத்துக்கதை எல்லாம் அவனுக்கு ஞாபகம் வருது.
கதையின்ர ஒவ்வொரு செப்டரும் 'ஆ' என்டு முடியும்.
உண்மைல கதையில மூழ்கி போனன்.

மீனலோஜினி டீச்சர் தட்டி "சுழலில் சிக்கிய சுடர் " நல்லா இருக்கு தாமோதரனில் போட்டுடலாம்
எனும் போது

தற்செயலாய் பக்கவாட்டில் பார்க்க 'ஆ' அவள்தான்.

முந்தி ஒரு,சில இடங்களில்  காட்டியிருப்பேன். இன்ரேவல் ரைம் மற்றது விளையாட்டுப்போட்டி மூட்டம் 'ஆ' மா
அந்த பெயர் தெரியாத வியப்புக்குறியே.

இவள் எப்ப வந்தாள்?
எப்ப இருந்தாள் கொஞ்சம் தள்ளி முன்னால.
ஒண்டுமே தெரியாது.

பக்கத்தில அவளின்ர அல்லக்கை இருந்து இழிச்சுது வழமை போல.அதுக்கு என்னை அடிக்கடி பாத்து பழக்கம்.

நீங்கள் பார்த்தால்  அந்த அல்லக்கைதான் வடிவு என்டு சொல்லுவியள் எனக்கு தெரியும்.
ஆனா இதையே நான் அந்த அல்லக்கைய பார்க்றன் என்டா மாறி சொல்லுவியள்.
அதான் உலக நியதி, தெரியும்.

திரும்பவும் நான் சுஜாதவின் "ஆ" வை ஆ என்டு பார்க்க டிரை பண்ணிணண் முடியேல்ல.
அவளை ஆ வென்டு பார்க்கிறதும் சரியில்லை.
வழிஞ்சாலும் துடைக்க கூடின மாதிரி இருக்கோனும்.

அப்டியே புத்தகத்தை பார்கற மாதிரி அவள் என்னய்றாள் என்டு பார்த்தன் மண்டுவம் சுடோகு நிரப்புது.

'ஆ' னா எனக்கு வடிவா தெரியும்
வேணுமென்டுதான் உதிலை வந்து இருக்கிறாள் என்டு.

டக் கெண்டு நிமிர்ந்தன் ஆள் 'ஆ' வென்டுது.
கள்ளம் பிடிபட்டது.
என்னைப்பார்த்துக்கொண்டுருந்தது
சிரிப்பு வந்துட்டுது.

எந்த மூஞ்சையில காலமை முழிச்சானன்.யோச்சன்.

அவள் தொடர்ந்து நிரப்பிக்கொண்டு இருந்தாள் நான் விட்டு விட்டு பார்க்கேக்க.

அடடா.
ரகுமான் டக்கென்டு சிட்டிவேசன் போட்டார்.

அக்டோபர் மாதத்தில்
அந்தி மழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்.

ஓ பப்பாரிப
ஆ பப்பாரிப

அன்று கண்கள் பார்த்துக்கொண்டோம்.....

அப்டியே சங்கர் மகாதேவன் மண்டைக்குள் இறங்கி நிண்டு பாடினார்.
கால் ஆடிச்சுது தன்னிச்சையாய்.

அவளும் சிரிச்சு சிரிச்சு
பக்கத்தில இருக்கிறவளிட்ட ஏதோ கேட்டாள் பேப்பரைக்காட்டி

என்னவாயிருக்கும் நானும் எட்டாம எட்டி பார்த்தன்.

வேணுமெண்டு "அரக்கி" வைச்சாள் சிறுக்கி கொஞ்சம் இஞ்சால நான் பார்க்க கூடின மாரி.

உண்மைல உவள் அரக்கியோ என்டு எனக்கு டவுட் வந்துட்டுத்து.
பின்ன முழுப்பெட்டியும் நிரப்பிட்டள் ஒரு மூண்டு பெட்டி மட்டும் மிஞ்சி கிடந்துது.

கோதாரி விழுந்தது நான் நேசரி படிக்கேக்க ஒண்டு, இரண்டு கூட ஒழுங்க எழுத மாட்டன் என்டு கோகிலா ரீச்சர் கொப்பியை சுழட்டி எறிஞ்சு அவ்வளவு பெட்டையளுக்கு முன்னாலையும் அப்ப என்ன அவமானப்படுத்தினவ.

சத்தியமா இப்ப அவளை பார்க்க எனக்கு கோகிலா ரீச்சர் மாதிரிதான் கிடந்தது.

விடக்கூடாது.
எனக்கு தான் சவால் விட்றாள் கண்டு பிடிக்க சொல்லி.
கண்டு பிடிச்சா இதை சாட்டா வைச்சு கதைக்கலாம்.
கண்டு பிடிக்காட்டி அவ்வளவுதான்
ஆ.

பார்த்தன்
அங்கால அந்தப்பெட்டி இந்தப்பெட்டி
மூண்டு வரேல்ல
இஞ்சால ஒன்பது வந்துட்டு
ரேம் எக்ஸாமுக்கு கூட இவ்வளவு யோசிக்கேல்ல.
கடவுள் இருக்கனுமே.

இரண்டு போட்டிருக்காள்
அந்தப்பெட்டி ஓகே மண்டைய பினைஞ்சு,

ஓ யெஸ்!! யெஸ்!
கண்டு பிடிச்சிட்டன்.

கேட்டன் மெதுவா.
நான் என்ன வரும் என்டு சொல்லலாமா.?
நாக்கு நர்த்தனமாடிச்சுது.பின்ன முதல் முதலா கதைக்கிறன்.இதைவிட சும்மா பார்த்துட்டு இருக்குறது ஈசி மாரி கிடந்துது.

ம். என்றாள்
ஸ்ரேயா கோசலுக்கு தங்கைச்சியும் இருக்கு,
முதலாவது பெட்டிக்குள்ள ஒண்டு வரும்
அப்டியே தொடர்ந்து இரண்டு இல்லை இல்லை நாலும் கடைசிப்பெட்டிக்குள்ள மூண்டும்  வரும்

வாவ்......
சரியா கண்டு பிடிச்சிட்டிங்க.
இந்தாங்க நிரப்பி நீங்களே வைச்சுடுங்க அதில.
"என் கிஃப்ட்" என்று  விட்டு விர்ரென்று போய் விட்டாள் மின்னல்லாய் அருகில் இருந்த இடி(ம்பி)யோட.
எனக்குள் மழை.

ம்
இண்டைக்கு இவ்வளவுதான் நம்ம லக்குன்னு யோச்சுட்டு அவள் கிப்ட்டா தந்த பேப்பரை ஆட்டைய போடுவம் என்டு நினைச்சுக்கொண்டே எஞ்சிய நிரப்பாத
பெட்டிக்குள் நம்பர்களை போட்டேன் .

1........4........3

அவள் கிப்ஃட்

"ஆ"


‪#‎மீண்டும்‬....முடிவில்லாத ஒரு முடிவில்

வாழ்க இந்துக்கல்லூ......ரி ......
ரெடியாகுடா மாப்பிள பிரளயம் நடக்கப்போகுது.
அலாரம் என் மண்டைக்குள்ள அடித்தது.பக்கத்தில் நின்டவன்.அங்கால
அதுக்கங்கால.....எல்லார் மண்டையினுள்ளும் அதே.

இரு.இரு என்டு மூளை தகவலை கால்ப்பக்கம் கடத்துவற்கு இடையில் பின்னால்,பக்கத்தில்,மூலைப்பக்கமாய் மும்முனைத்தாக்குதலாய் முட்ட முன்னால் விளையுளை நான் பிரயோகிக்கும் போதுதான் பார்த்தன். காலை வி வடிவத்தில் வைத்து கை முஸ்டிகளை மடக்கி வைத்துக்கொண்டு ஆறாம் வகுப்பு சுகாதாரப்பாடத்தில் சொல்லிக்குடுத்ததை இன்னும் அப்டியே

சனியனே அமர்ந்து இருடா....
இருந்த பிறகு....
வாழ்கவே... பாடி முடிந்தது.

கடுப்பாய் இருந்தது
கூடவே கால் நுனியில் கடித்தது.

"டேய்
என் இடக்கால்ல சொறிஞ்சு விடு"

"என்னட்ட வலக்கால்தான் கிடக்கு "

தட்டிக்காட்டினான்.சரிதான்.

இடக்கால் எங்கே கிடக்கிறது பார்த்து தட்டி அண்ணா இரண்டு பாறங்கல்லு ஒரு கோரைப்புல்லு மேல கிடக்குது.அது பாவம் ஒண்ணையாச்சும் தரைல உருட்டி விடுங்களேன் ப்ளீஸ் பளிச்சுன்னு இழுத்துக்குவன்.

ஐயராத்து பையன்னாய் இருக்கும் போல. பழி பாவத்துக்கு அஞ்சி நகர்ந்தாலும் எனக்கு காலை இழுக்க இடமில்லை.

ஐயோ பேசி அறுத்து இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் போகுமபோது
புல்லை புத்தகத்துக்குள்ள வைச்சு அமர்த்தியது போல கிடந்தது கால்.

படம் தொடங்கும்...
ஒரு பெரிய மைதானத்தில இருக்கிற ஒரு மேடைல கொஞ்சம் நரைச்ச தலைமுடியோட
ஒரு ஆளோட பின்பக்கம் மட்டும்.

"இது வாழ்கையை வென்ற ஒரு சாமனியனோட கதை அப்டி "

அந்த ஆள் சொல்ல தொடங்கும் போது பிளாக் அன்ட் வைட் சீன் கலராகி அபிஷேக் திரும்ப

எத்தனை வாட்டி பார்த்தாலும் அலுக்காத கொஞ்சப்படங்களுள் ஒன்று
அபிஷேக்
ஐஸ்
ஏ.ஆர்
மாதவன்,வித்தியாபாலன் தாண்டி வேற ஏதோ ஒண்டு இருக்குறதான் இந்தப்படமும் இங்கே சொல்லக் காரணம்.

2006ல்
"டேய் இந்த சேட்டைப்போடு"

"போம்மா அது எனக்கு பெரிசா கிடக்கு"

"இண்டைக்கு போடு பேந்து மாத்தி தைப்பம்."

வீட்ட போட்ட சண்டையில் நேரம் டபாய்த்து 101 ஆம் நம்பர் ரோக்கன் கிடைத்து ஸ்கூல் போக

கடவுளே நமக்கு முன்னால இன்னும் நூறு பேர் அட்மிஷனுக்கு இருக்கிறாங்கள்.இது அம்மா.

பார்த்தேன்.சில தெரிஞ்ச சில தெரியாத அம்மாக்களோடோ அல்லது அப்பக்களோட என்னைப்போல் காலாட்டிக்கொண்டு மண்டபத்துக்குள் பலர்.

இனி வரப்போகும் ஏழு வருடங்களில் நிறைய சந்தோசம் கொஞ்சம் அவஸ்தை என்று நிறைய தருணங்களில் இங்கேதான் செப்ரர் வன் என்று அப்போது தெரியாது.

நேரம் போக அலுப்படித்தது.சும்மா இருக்க.
நிமிர்ந்து பார்த்
அம்மாடி எம்மாம் பெரிய உயரம்.கூரை முன்னால மேடை.
அதில ஒரு சரஸ்வதிப்படம் தேர் மாதிரி ஒன்டுக்குள்ள.
மேல ஏதோ பேர் எழுதிக்கிடக்கே.கண்ணில பட்டதையும் வாசிக்கிற பழக்கம் அப்ப தொடங்கி இருந்தது.

"சுப்ரமணியம் அரங்கு"

கட்டியது.செப்பனிட்டது.
செப்பனிட்றது என்னா பத்து வயதில் விளங்க கஸ்ரமான வார்த்தை.

தோள் மூட்டால் வழிந்த சேர்ட் கையை இழுத்து விட்டு வெளியில் நழுவி முன் பக்கமாய் வந்து மண்டபத்தின் கிரவுண்ட் பக்கமாய் இருந்த மேடையில் ஏறி நின்று பார்த்தேன்.பள்ளிக்கூடம் முழுவதும் தெரிந்தது.
(கனவு தெரிந்தது.
இந்த வசனம் வடிவா இருக்கு என்ரறதுக்காக மட்டும் இதில சேர்க்க வேண்டி இருக்குது.)

அண்டைக்கு நான் என்ன யோச்சன் என்று நினைவில்லை.ஆனால் ஏஎல் எக்ஸாம் எழுதி விட்டு அந்த கடோசி நாள் முடிவில் அதே இடத்தில் நின்ற போது

என்னை நானே எல்லா இடத்திலும்
ஒரு விதமான ஹலுஸினேசன்.போல

அதெல்லாத்துக்கும் மேலால அந்த படத்தை ஒவ்வோரு தபா பார்க்கும் போதும் அந்த மேல சொன்ன சீன் போகும் போது எனக்கு ஞாபகம் வருவது.... என் உருவமும் இந்த இடமும் தான்.

புதுசு எப்டி இருக்கும்.
பழசுக்கு என்ன நடக்கும்.

"இரண்டாயிரம் பேர் இருக்கையுடன் கூடிய புதிய கலை மண்டபத்துக்கு அடிக்கல்.அண்மையில் நாட்டப்பட்டது."

இனி என்னவோ இரண்டிலும் நாங்கள் இருக்கப்போவதில்லை என்பதில் கவலை .
புதிய மண்டபம் என்பதில் சந்தோசம்.

என்ன இருந்தாலும் அந்த நிலத்தில் இருந்து மா அரைத்து நிகழ்ச்சி முடிந்து விறைத்த காலுடன் எழும்பி போகும் போது சாம்பல் கலந்த நீலக்காற்சட்டையை பட்டு பட்டு என்னு பின்னால தட்ட தூசி கிளம்பும்.அந்த சந்தோசம் இனி பலருக்கு கிடையாது என்கிற ஆதங்கம்.

ஸ்கூலில் பெரும்பாலான இடங்களைப்பற்றி ஆங்காங்கே சொல்லியாகிவிட்டது. சில ஹைட் அவுட்டுகளை மட்டும் மறைத்து விட்டேன். இனி வரும் காலத்தில் என்னைப்போன்ற எங்களைப்போன்றவர்கள் பயன் பெறட்டும் என்று.
தாய் நாட்டில் இல்லாத பற்றொன்று ( ங்கே! அது எங்க இருக்கு ) சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மீது இருந்தது.

அதன் ஒவ்வோரு மூலையிலும் ஒரு ஹேலோகிராம் விம்பமாய் நான் நின்றேன்.என்னோடு நிறையப்பேர்.ஒரு பாடசாலை வாழ்வை அணு அணுவாய் அனுபவித்த திருப்தி

இப்டி நிறையவே
இன்னும் எழுதாத ,சில எழுத முடியாத கதைகளோடு இந்த டயரியை முடிக்கப்போகின்றேன்.

இத்துடன் இந்த முடிவில்லாத முடிவுரையையும் முடித்துக்கொள்கிறேன்.

இப்படி அனுபவித்த,அனுபவிக்காத அத்தனை பேருக்கும் இந்த டயரியின் பக்கங்கள் சமர்பணங்கள் ஆகட்டும்

Bye...bye.


No comments:

Post a Comment