About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Friday, March 13, 2015

கெமிஸ்ரி


Practical no 1 - அறிமுகம்

கெமிஸ்ரிக்கும் எனக்கும் நல்லதொரு கெமிஸ்ட்டரி நிலவியது என்றால் இது வெடியனின் மீதி தொடரா என்று சனம் நினைக்கும்.அப்படி இல்லை.

உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பில் ஐந்து அன்னயனோட பேரை பட் பட் என்று சொன்னேன்.ஆனால் கற்றயனோட ஒரு பேர் கூட ஞாபகம் இருக்கவில்லை .

இதை விட இன்னுமொரு வகையான கெமிஸ்ரி யும் இதோடு சேர்ந்தது.

இரசாயன தாக்கமோ கருத்தாக்கமோ இல்லாத ஒரு வினோத தாக்கமுடைய கெமிஸ்ரி.

"Some people have it.An attraction that can't be quantified or explained."-dexter

முதலில் சொன்ன கெமிஸ்ரிக்கும் எனக்கும் இருந்த அந்த துக்கடாவான தொடர்பை சொல்ல வேன்டும்.

பத்தாம் ஆண்டில இருக்கும் போது "ஹலோ கீ லைக் பென்ஸ்ஸில் பத்மினி சோப் போடேக்க " எண்டது பொட்டாசியம்,சல்பர் ஐ  ரிஃபர்  பண்ணுது என்டது மட்டும் பட்டையடிச்சு ஞாபகம் நிண்டது.

எக்சாமில அணுக்கொள்கையை கேட்க

அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ட டால்ரனை நிராகரித்து

"அனுவை பார்க்கவோ, மறக்கவோ முடியாது" இனி என்டு எழுதின ஆள் நான்.

அனு-அனுச்சித்திரா.நேர்சரி படிக்கேக்க கனக்க தரம் எனக்கு குண்டூசியால எல்லாம் குத்தினவள். எட்டாம் ஆண்டில குத்தின குண்டூசிய தந்துட்டு போனபோது விரசமில்லாத அந்த நட்பு.காதலில்லை.
 அடிக்கடி இப்படியான வசனங்களில் என்னையறியாமல் வெளிப்பட்டதா? சந்தேகம்.

பதினோரவதாண்டில் பேனாக்குள் இருந்த பிட்டும் முன்னால் இருந்தவன் கீறிய லூயியின் போன்டும் காப்பாற்றிவிட்டது.

ஏஎல்லுக்கு போன போது கொக்காவில் ரவர் உச்சியில் ஏறி நின்று கொண்டு - கீழே விழுந்தால் வலிக்குமா? என்று கேட்க வைத்தது இந்த கெமிஸ்ரி.

தொடக்கத்தில்
அன்னயன் மட்டும் எப்போதும் ஞாபகம் நின்றதற்கு மிக முக்கிய காரணமே எல்லாம் அதில் மைனஸ் பாயிண்ட் என்பதுதான்.
கற்றயன் + ஆச்சே.

முதல் பிரக்டிக்கலில் குறூப் பிரித்து விட்டு இரண்டாவது பிரக்டிக்கலில் கூம்புக்குடுவையை குனிந்து பார்த்துக்கொண்டிருந்த போது அதை சரக் என்று இழுத்து

"இது என்ன வைச்சு வடிவு பார்க்கவா உனக்கு தந்திருக்கு"

"இவள் என் குறூப்பா?"
திடீரென்று என் கொக்காவில் ரவரின் உயரம் இன்னும் கொஞ்சம் கூடியது.

முழுப்பெயர் - ஆகாயா.
எல்லாரும் இவளை ஆகா! ஆகா! என்று போற்ற வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு பேரை வைத்திருக்கலாம்.
அதற்கேற்றது போலவே லந்தனைட்ஸ் அக்டி னைட் வரிசை மூலகம் கூட முதல் நாள் கிளாசில் சொன்னாள்.ஊர் பாரட்டியது ஆகா! என்ன அறிவு என்று.
நான் அன்றிலிருந்து நிமிர்ந்து கூட பார்பது கிடையாது.

"இல்லை அடில கிளாஸ் வெடிச்சது போல இருக்கு"

"உனக்கு என்ன கழுத்துக்குள்ள பிடிப்பா? இல்லை வேணுமென்டே என்னை சதாய்கிறியா? மூணு வாங்கு தள்ளி நிற்கிற அவனை பார்.முப்பாதாவது தடவையா இங்க பார்கிறான்.நீ வந்ததில இருந்து குனிஞ்சிட்டு இருக்கா.நான் சுமாரா ஆச்சும் இல்லையா?"

என்ற போது நிமிர்ந்து பார்க்க வேண்டியிருந்தது.இவள் பெண்ணா?என்று..
ஆகா-பெண்தான்

Practical no-4 கழுத்து பிடிப்பு குறைந்து
practical no-5 நிமிர்ந்து இருக்க வைத்தாள்.

நேற்றிரவு 11.50 க்கு ஒரு அலார்ம்.11.55 க்கு ஒரு அலார்ம் என்டு இரண்டு அலார்ம் செற் பண்ணி போனுக்கு மேலதான் படுத்து நித்திரை கொண்டேன் .12க்கு  எழும்போணும் என்டு.
இருந்தாலும் எழும்பி பார்க்கேக்க 1.30. அலார்ம்   அடித்ததா என்று யோசிக்காமல் கோல் பண்ண அவசரத்தில்

கோல் போய் முதல் ரிங்கிலேயே கட்டானதில் தெளிவாய் புரிந்தது இரண்டு விடயங்கள்.முதலாவது இன்னும் முழித்திருக்கிறாள் இரண்டாவது தொலைந்தது என் கதை.

மெசேஜ் ல் ரைப் பண்ண தொடங்கினேன்

Practical no -9 திரிபுர சக்தி

பரிசோதனைக்குழாய்குள்ள சல்பூரிக் அமிலத்தை எடுக்க,கொஞ்சம் பிங்க கலர் அடிக்கிறது. முதல் யாரோ எதையோ எடுத்து,கழுவாமல் காய வைத்திருக்கிறான்.வேறு ப.குழாய் இருக்கிறதா என்று பார்க்க சூடு


காட்டிக்கொண்டிருந்த பன்சன் சுவாலை பக் பக் என்றது.காற்று நுழையும் வழியை பெரிதாக்க நீல நிறம் கூடியது.

குனிந்து சுவாலையினூடு பார்க்க நெருப்பாய் தெரிந்த முகம்.கோபக்கனல் வீசியது.திரிபுரம் எரித்தது சிவனா? இவளா ? என்பது ஆயிரத்தி எட்டாவது சந்தேகம்.ஆயிரத்தேழாவது கொஞ்சம் சொல்ல முடியாத சங்கடமான ஒன்று.மிச்சம் 1006ம் நீ முட்டாளா? இல்லை அப்பாவியா? என்று அவளே கேட்டது

பக்கத்தில் போனால் பத்தலாம் இருந்தாலும் போகாமல் இருக்க முடியாது.

"வேற ப.குழாய் இருக்க? . இது கழுவி வைக்கல்ல  போல இருக்கு".
ஸ்டிக்கர் பொட்டு மேல் சின்னதாய் வீபுதி கீறு

"ஏன்?"

"சொரி கொஞ்சம் லேற் ஆயிட்டு இரவு விஷ் பண்ண." இப்ப நேர சொல்லட்டுமா.!
"விஷ் யூ எ ஹப்பி"

"1.30 மணித்தியாலங்கிறது .கொஞ்சம் இல்ல"

"இல்ல."

"இதில நிக்காத அசிட்டை எடுத்து மூஞ்சைல ஊத்திடுவன்.வாற கோபத்தில.ஒரு லவ் பண்ற பொண்ணுக்கு 12 மணிக்கு முழிச்சிருந்து பேத்டே விஸ் சொல்ல தெரியாத நீ எப்டி ?"

கோபத்தில் நெற்றி சுருங்கி கொஞ்ச வீபுதி மூக்கில் கொட்டியது.

"எக்ஸாமுக்கெல்லாம் படிக்க போறாய்?"

"இல்ல அலார்மெல்லாம் வைச்சன் சரியா .ஆனா மு.ப , பி.ப   வ பார்க்காம விட்டுட்டன்.அது மாறி இருந்திருக்கு"

கடைவாய் சிரிப்பை மறைத்து
"நீ முட்டாள இல்ல அப்பாவியா?" -1009வது


இடைல மூணு பிரக்டிக்கல் எழுதாம கள்ளம் அடிக்க பார்த்துக்கான காரணம் இதான்

Practical no - 6 லவ் புறப்போசல் .

ஆகாயா காதல் சொன்ன விதமே ஒரு வில்லங்கமான வழியில்

லாப்பிலிருந்து வெளியில் வரும் போது ஆவர்த்தன அட்டவணையை நீட்டினாள்.
"இதை கவனமா இரவு படிச்சுட்டு வந்து நாளைக்கு பதில் சொல்லு."

Practical no - 7 ஹோம்ஸுனா?கொக்காவா?
முகத்தில் அடிக்காமல் சொல்லி விட்டு போயிருக்கிறாள்.படி என்று.

இரவு.விரித்து வைத்து விட்டு பார்த்தேன்.இதில் எதை படிக்க .கூட்டமா ? ஆவர்த்தனமா?

"இரண்டு நம்பர் மட்டும் மேல பெரிதாய் எழுதி கேள்வி குறி போட்டு ஏன்."என்ன எழுதி இருக்கிறாள்?"

கொஞ்ச காலம் நம்பர் 222B பேக்கரி வீதில உள்ள வீட்டில தான் நாங்கள் இருந்தனாங்கள் என்டதால எனக்கு கொஞ்சம் மூளை வேலை செய்யும் உப்புடி விசயங்கள்ள

எழுதினதை பார்த்தன்.

   "53   71 "

  " 92- ???"

நம்பர் குறிப்பது அணு எண்ணா இருக்கலாம்.அதால நம்பருகளை எழுதி மூலகங்ளை எதிர எழுத

"53 என்ன? அயடின்.71-லற்றேற்றியம்.92- யுரேனியம்."

ம்ம் குறியீடை போட்டால்

53-I
71-Lu
 
92- u ????

அதாவது    " I l u "
                      "U????"
மண்டைக்குள் ஏதோ கிர் கிர் என்றது.

Practical no - 8 ரிப்ளை.

அதிலயே எழுதிக்கொண்டு போய் கொடுத்தேன்.மறுநாள்.

"53  71      2 !!"
சிரித்தாள்.

Practical no 13-20 பிரேக் அப்.
என்ன காரணம் என்று தெரியவில்லை.கதைப்பதை நிறுத்தி விட்டாள்.இவ்வளவு தான் இவளின் இழவுக் காதலா? என்று விட்டு  இலட்சிய வெறி அது இது என்றில்லாமல் சாதரண படிப்பு ஓடியது.

இருபத்தோரவது பிரக்டிக்கலில்
"எதுக்கு அவளோட அவ்ளவு நேரம் நேற்று கதைச்சிட்டு நின்டாய்?
நான் உன்னோட கதைக்காட்டி நீ யாரோட வேணும்னாலும் கதைப்பியா?"

"ஆகா! என்ன வகையான கோபம் இது"

அதன் பின்
மீண்டும் 20 - 29வது பிரக்டிக்கல் வரை அவள் கதைக்க வந்த சில சந்தர்ப்பங்களையும் நான் தவிர்த்தேன்.

Last practical - கிளைமாக்ஸ்

பைனல் எக்ஸாமுக்கு முதல் கிழமை கடைசி வகுப்பில் போகும் போது மறித்தாள்.
ஏதோ ஒரு துளி கோபம் என் மூளையின் ஒரு மூலையில் ஊற

"நீ எப்பாவது நான் ஏன் உன்னை லவ் பண்ணிணன் னு கேட்டிருக்கியா?"

"மண்டைய ஆட்டாமல் பதில் சொல்லு"

"இல்லை"

"இப்பவாச்சும் கேள் ?"

"ஏன்"

"உன்னை முதல் நாள் முதல் தடவை பார்த்து வேணுமென்றால் சாதரணமாய் இருக்கலாம்.ஆனால் இரண்டாந் தடவை ஏன் திரும்பி பார்த்தேன் என்ட அந்த விடை தெரியாத கேள்வி தான் காரணம்.விடை-நீ என்று மூன்றாம் தடவை பார்த்த போது புரிந்தது."

"இந்தக்காதல் சாமான்ய பிரச்சினைகளால் தோற்க கூடாது.சாகும் வரை தொடர வேண்டும்."

"இரவு என்ன அப்துல் ரகுமான் வாச்சியா?"மனதுக்குள் கேட்டுக்கொண்டேன்.

"நான் உன்னோட கதைச்சா நீ படிக்க மாட்டாய் என்டு தெரியும்.அதோட கொஞ்ச செல்பிஷ்ம்தான்.நானும் படிக்கேலாதே.அதான்".

"ஆனா எக்சாம் முடிஞ்சாப்புறமும் இப்டியே இருந்திடலாம்னு நினைக்காதே."

பார்த்து கொண்டிருந்தேன்.
பார்த்து கொண்டிருந்தாள்.

"நான் கதைக்காமல் விட்ட காரணத்தை அவள் சொல்கிறாள். என்ன இது"

"அப்போ ,நீ இன்னும் என்ன லவ் பண்றியா?"

"நீ முட்டாளா இல்லை அப்பாவியா?"

"ஆகா! இதுதான் உனக்கும் எனக்குமான
கெமிஸ்ரியா.......?"



           #####









அற்பபிறவி
பி.கு-இது 100/100 கலப்படமற்ற கற்பனை (ப்பா....)



No comments:

Post a Comment