About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Thursday, March 26, 2015

காமிக்ஸோடு ஒரு காதல்

இந்த பதிவுக்கு முதல் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து வைத்திருந்த தலைப்பு
  
    "காமிக்ஸோடு ஒரு கள்ளக்காதல்"

தலைப்பை பார்த்தவுடன் வாசிக்க வேண்டும் என்றே சில தலைப்பை வைத்திருப்பார்கள்.குமுதமோ ஆனந்த விகடனோ சரியாய் நினைவில்லை .அதில் "ப்ளீஸ் இந்த பக்கத்தை படிக்காதீர்கள்"  என்ற தலைப்பின் கீழ் கடைசிப்பக்கத்தில்  கிசு கிசு  வரும்.புத்தகத்தை எடுத்து கடைசி பக்கத்திலிருந்துதான் நான் வாசிக்க தொடங்குவேன்
தும்பு நடிகைக்கும் கம்பு நடிகருக்கும் இடையில் நடந்தது என்ன? என்று எழுதி இருப்பார்கள்.அது யார் என்று கண்டுபிடிப்பதில் ஐயாவுக்கு ஒரு த்ரில் .

அதைப்போல இந்த தலைப்பை பார்த்து  விட்டு லிங்கை கிளிக் பண்ணி ஒரு எதிர்பார்போடு  உள்ளே வருகின்ற சில
வாசக நெஞ்சங்களுக்கு உள்ளீடு சப்பையாய் தோன்றலாம்.

ஏனென்றால் இது இன்றைய காலகட்டத்தில் இருக்கும் எல்லாருக்கும் பிடிக்காது.ஏன் சிலருக்கு இது என்ன இழவு என்றே தெரியாமல் இருக்கும். ஆனால் என்னை போலவே ஒன்றிரண்டு இருக்கும் என்று எனக்கு தெரியும்.அந்த அவர்களுக்காக மட்டும்.மற்றும்படி இதில் சொந்தகதை,சுயபுராணம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமே.

கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு தலையில் தொப்பியோடும் கோட்டோடும் ஒரு அநாயசமான நடை நடக்கின்ற அந்த மனிதன் நகருக்குள் பயன்படுத்துகின்ற பெயர் Walker. கூடவே ஒரு நாயும்-பெயர் டெவில்.பின்னால் நின்று யாராவது துப்பாக்கி தூக்கினாலும் மின்னல் வேகத்தில் சுழன்று அந்த மனிதனின் இரண்டு துப்பாக்கிகளும் முழங்கும்.சாவே அற்ற மனிதன்-மாயாவி.




அமெரிக்கப்பதிப்பகம் ஏதோ  ஒன்றின் படைப்பு.தமிழில் ராணிக்காமிக்ஸினூடாய் என் ஜனனத்துக்கு சில தசாப்த்தங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருந்தது .எனக்கு அறிமுகமாகியது-2003 என்று நினைக்கின்றேன்.மாயாவிதான் அறிமுக ஹீரோ

மாயாவி என்ற கரெக்டரோடு சேர்த்து அதற்கு பின்புலமாய் நிறைய விசயங்கள் படைக்கப்பட்டிருந்தது.மண்டையோட்டுக்குகை.ஈடன் தீவு,தங்ககடற்கரை,மரவீடு,நான்கு இனத்தவர்கள்.மனைவி டயானா.மகன் ரெக்ஸ்.குதிரை ஹீரோ. நாய் டெவில்.

கோதாரி விழுந்தது.இதை வாசித்த மயக்கத்தில் அந்த நேரத்தில் வீட்டில் வளர்த்த ஒரு பெட்டை நாய்க்கு டெவில் என்ற பேர் வைத்திருந்தேன்.அதுக்கு பேர் பிடிக்கவில்லையோ அல்லது இங்கிலிஷ் விளங்கவில்லையோ தெரியாது.உஞ்சு எண்டால் மட்டும் திரும்பி பார்க்கும்.கொஞ்ச நாட்களில் அது பக்கத்து வீட்டு 'சோட்டா பீமோடு' ஓடிப்போய் விட்டது. நன்றி கெட்டது.

அந்த பின்புலங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்கவோ அல்லது நல்லவர்களுக்கு உதவி செய்வதற்காகவோ மாயாவி என்ற சூப்பர் ஹீரோ வருவார்.

இதன் ஒரிஜினல் வடிவம் எட்டாம் ஆண்டு படிக்கும் போது பந்தம்.(Phantom) என்ற பேரில் கலர் ப்ரிண்டில் ஸ்கூல் லைப்ரரியில் எனக்கு கிடைத்த போது புரிந்தது.ராணிக் காமிக்ஸ் நிறையை பக்கங்களை கட் பண்ணி விட்டிருந்தது.

ராணியில் வெளி வந்த இதர பிற இத்யாதி ஹீரோக்களில் அடுத்து அதிகம் பிடித்தது என்னவோ பிளாஷ்கார்டனின் விண்வெளி சாகசங்கள்.இது தவிர 007,கார்த்,மாடஸ்தி என்று நிறைய.வீட்டிலேயே ஒரு நூறு புத்தகத்துக்கு கிட்ட சேர்த்து வைத்திருந்தேன் அப்போது.கறையான் வாசித்து தள்ளி விட்டது.

அதன் பின் லயன்,முத்து காமிக்ஸ் அறிமுகமான போது ராணியின் தரம் புரிந்தது.

லயனும் முத்துவும் ஒரே மரத்தின் இரு கிளைகள்.கதைக்கு சுவாரசியமாய் எடிட்டர் விஐயனின் ஹாட்-லைன் இருக்கும்.



லயன் டெக்ஸ்வில்லரை கொண்டுவர முத்து டைகரை கொண்டு வந்திருந்தது.கௌபாய்களின் தலையாய தலைவர்களாய்.
மாயவியின் முகமூடி இல்லாவிடில் அது டெக்ஸ் என்பது போல இரவுக்கழுகு வின் கரெக்டர் கிரியேட்டாகியிருந்தது அரிஸோனாவின் பாலைவனத்தில்.
கூடவே கிட் கார்ஸன் ஆஸ் வெள்ளி முடித்தலையார்.கிட் ஆஸ் சின்ன கழுகார்.இவர்களுடன் டைகர் ஜாக்.இதன் கிரியேட்டர்-Sergio Bonelli



அபேச்சோக்களும்,செவ்விந்தியர்களும் அடிபடும் போது நவஜோ தலைவர் நடுவில் நிற்பார்.

முத்துவில் வெளியான டைகரும் ஒரு தலைசிறந்த கௌபாய்.ஆனால் ரியாலிட்டியான கௌபாய்.டெக்ஸை போல அசாத்தியமான சில வேலைகள் டைகரின் ப்ரேமுக்குள் வருவதில்லை.டைகரின் பிண்ணனி முற்றிலுமே வேறுபட்ட ஒன்று.எப்போதுமே

இதில் பக்காவான காமெடி என்னவென்றால் வீட்டிலுள்ள என்னை விட நாலு வயசு மூத்தது இப்பவும் சில வேளைகளில் தான் இரவுக்கழுகு என்ற ரீதியிலும் நான் டைகர் என்ற ரீதியிலும் கொழும்பிலிருந்து என் எல்லைக்குள் வர வைபரினூடாய் புகைசமிஞ்சை அனுப்பி அனுமதி கேட்பதுதான்.
நானும் பாவம் என்று நிராயுதபாணியாய் வர சில வேளைகளில் அனுமதி கொடுப்பதுண்டு.

ஏழாம் ஆண்டுக்கு பின்னர் வந்த கால கட்டத்தில் தான் பெரும்பாலான எல்லா லயன் முத்து கதைகளையும் சொந்தமாக வாங்க தொடங்கினேன்.அதுக்கு முதலே வாங்கி இருக்கலாம்.யாழ்பாணக்கடைகளில் இருந்த விசயம் தெரியாது.கையில் காசும் கிடையாது.

வீட்டில் அதை வாசிப்பதுக்கு தடையில்லாவிட்டாலும் காசுகொடுத்து வாங்குவதற்கு பகிரங்கமாக தடை விதிக்கபட்டிருந்தது.அண்ணண் ஏனைய விசயங்களில் போட்டுக்கொடுத்தாலும் இதில் அமர்த்தி வாசிக்க காரணம்.ஆளுக்கு நான் வாங்கிய புத்தகத்தை வாசிக்க குடுக்க மாட்டன் என்று தெளிவாய் தெரியும்.

இதனால் நான் ஒவ்வொரு தடவையும் களவாய் வாங்கிய காமிக்ஸின் எண்ணிக்கை என் லைப்ரரியில் கூடியது.

பெரும்பாலான எல்லா புத்தகமும் வாங்கி முடிய மிஞ்சியிருந்தது ஒரே ஒரு ராட்சத சைஸ் பெரிய புத்தகம்-கௌபாய் ஸ்பெஷல்-என் ஒட்டு மொத்த உலகமும் அதில் இருக்க.விலையும் அந்த நேரத்தில் எனக்கு ராட்சத விலையாயிருக்க


ஒவ்வொரு தடவை அந்தக்கடைக்கு போகும் போதும் அதை தூக்கி!

" "அண்ணே! இது என்ன விலை?"

"....."

மறக்காமல் ஒரு பைசா குறைக்காமல் அதே விலையை சொல்லுவான்.

ஒரு தடவை பொறுக்க முடியாமல் இருந்த காசெல்லாம் ஒன்று திரட்டி வாங்கி விட்டேன் அதை .வீட்டுக்கு கொண்டு வந்து அண்ணருக்கு பாதி விலையை சொன்னேன்.அம்மாவுக்கு அவனுக்கு சொன்னதில் பாதியை சொன்னேன்.

இரண்டு பேரும் நம்பினார்களா.?நம்பினாற் போல நடித்தார்களா !?தெரியாது.

ஆனால் இன்று வரை அதன் நிஜ விலை இருவருக்கும் தெரியாது.(அன்பு அண்ணரே இதை நீர் வாசிக்கும் போது உள்ளுக்குள் கறுவலாம்.ஆனால் நினைவில் கொள்ளவும்.புதிதாய் இரண்டு புத்தகம் நேற்று வாங்கினேன்.)

இப்படி இன்னுமொரு சம்பவமும்.இன்னும் நிறைய ஹீரோக்களும் இருப்பதால்

இந்த காமிக்ஸோடு ஒரு கள்ளக்காதல் அடுத்தவாரமும் தொடரும்......


No comments:

Post a Comment