About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Thursday, March 5, 2015

வெடியன்

இது வெடியனை அறிமுகப்படுத்த வேண்டிய நேரமென எனக்கு படுகிறது.ஏனெனில் அடுத்தடுத்த சில பதிவுகளில் வெடியன் வரும் போது யார் இந்த வெடியன் என்று நீங்கள் மண்டை சொறியக் கூடாது.பாருங்கள்.



ஆப்பிள் விழும் போது அதை பார்த்துட்டு இருந்தது பியூட்டன்.அவருதான் அண்ணண் நியூட்டன் கிட்ட போய் ஆப்பிள் ஏன் இப்படி கீழ விழுந்தது என்டு கேட்க அதுக்கு பிறகு தான் நியூட்டன் அதை ஆராய்ஞ்சு புவியீர்ப்பு விசையை கண்டுபிடிச்சாராம்.அப்புறம் ஆப்பிள் விழுந்தப்போ தான்தான் அந்த இடத்தில இருந்த என்டு கதையை வேற கட்டி விட்டாரம்.

நம்பமுடிகிறதா?இந்தக்கதையை....ஆனால் வெடியன் இந்தக்கதையை உங்களுக்கு சொல்லியிருந்தால் நிச்சயம் நம்பியிருப்பீர்கள்.அதற்கு காரணம் இரண்டு.முதலாவது விழுந்த ஆப்பிளை போய் கேட்க முடியாது நீ விழுந்தப்போ யார் இருந்தது என்று?
அவன் கதைகளுக்கு எதிராக பெரும்பாலும் ஆதாரம் இருக்காது.
இரண்டாவது வெடியன் கதையை சொல்லுகின்ற தொனி.கைகள் இரண்டையும் ஆட்டி கண்புருவங்களை சுருக்கி,பார்க்கும் போது நிஐமா,பொய்யா என யோசிக்க தோன்றாது.அவனை மட்டுமே பார்க்க சொல்லும்.ஏதோ ஒரு வர்ணிக்க முடியாத அப்பாவித்தனம் முகத்தில் ஒட்டியிருக்கும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் அறிமுகமான
வெடியனிடம் எப்போதுமே ஒரு பத்தாம் பசலித்தனமான அறிவு இருக்கும்.பேப்பரில் தலைப்பு செய்தி மட்டும் வாசிப்பான்.படம் என்றால் கிளைமாக்ஸ் மட்டும் .கிரிக்கெட் என்றால் 45-50 ஓவர்.டெஸ்ட் மட்ச் பார்க்கவே மாட்டான்.டொஸ் போடும்போது மட்டும் ஹெட் ஓ ரெயில் சொல்லுவான்."பொன்னியின் செல்வனில்" ஆடித்திருநாள் மட்டும் வாசித்திருப்பான்.

அவன் கோயில் மதிலில் இருந்து  கதை சொல்லும் போது அவனை சுற்றி ஒரு கூட்டம் நின்று வாய்பொத்தி கேட்டுக் கொண்டிருக்கும்.நானும்தான்.அவன் போனாற் பிற்பாடு அந்தகதையை அலசி எல்லாரும் கோரசாய் சொல்லுவது ஒன்றுதான்.
"உவன் வெடியனடா"

ஆனால் சில நாட்களாய் எனக்கு வெடியனின் சிற்சில கதைகளில் நம்பிக்கை வந்திருந்தது.உண்மையாய் இருக்குமோ என்று.

வெடியன் சில கதைகளை எதிர்வு கூறுவான்.பார் எப்படியும் வெகுசீக்கிரத்தில அமெரிக்காகாரன் ஈராக் மேல கட்டாயம் அணுகுண்டு போடுவான்.

எங்களுக்கு குண்டுமணி போடும் குண்டுதான் தெரியும்.அணு குண்டெல்லாம் எங்கே தெரியப்போகிறது அந்த நேரத்தில்.ஆவென்று கேட்பதோடு சரி. எதிர்த்து ஏன் அமெரிக்ககாரனுக்கு தங்கட நாட்டில இடமில்லையா என்டு கேட்க திரணியில்லை யாருக்கும்.

காரணம் அவன் எங்கள் வட்டத்துக்குள் தனக்கென்று ஒரு கெத்தை உருவாக்கியிருந்தது.
நோக்கியா 1110 ஐ அறிமுகப்படுத்திய போது அதை அவன் வீட்டில் வாங்கியிருக்க ஒரு நாள் எங்களுக்கு அதை காட்ட கொண்டு வந்திருந்தான்.அன்றுதான் என் கையில் முதல் முதலாய் கைபேசி பட்ட நாள்.அமர்த்தி பார்ப்பதற்குள் கிச்சா பறித்து விட்டான்.விச்சூ மட்டும் அதில் மங்கி கேம் விளையாடிக்காட்டினான்.

இதை வைத்து கடவுளோடும் கதைக்கலாம் என்றான்.கேட்டுக்கொண்டிருந்தார்கள் எல்லோரும்.

வெடியனின் சில கதைகள் மட்டும் வெடி என்று உடனடியாகவே தெரியும்.அதுவும் பெரும்பாலும் எங்கள் ரீமை சேர்ந்தவனாக பற்றிய கதை என்றால் அவன் இல்லாத போது சொல்லுவான்.
நேற்று நானும் குண்டுமணியும் ஒரே இலைலதான் அன்னதானச்சோறு சாப்பிட்டனாங்கள்.என்பான் பச்சை பொய் - என்பது வெளிப்படை உண்மை.

குண்டுமணி இலையை சாப்பிடுவானே ஒழிய இலையில் சாப்பிடுவதில்லை.அவன் சாப்பிடும்போது அவன் அப்பா கூட பக்கத்திலிருந்து சாப்பிட மாட்டார் என்று அதை நிறுவ முடியும்.ஆனால் அவன் போனபின் சொல்வதோடு சரி
"உவன் வெடியனடா"

இப்படி இருந்த ஒரு நாளில்.
கோயில் தெருவுக்கு நாலு தெரு தள்ளி இருபது வயது பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டது என்ற விடயம்  கோயில் மதிலடியில் அலசப்பட அந்தக்கணத்தில் வெடியன்:
"எங்க அப்பா ஒரு மீடியமடா"என்ற போது

கிச்சா பெருமையாய்
"எங்க அப்பா லார்ஜ்டா என்றான்.

அதில்லைடா எருமை! எங்கப்பா பேயோட எல்லாம் கதைக்க தெரியும்.மேசைல தண்ணி யெல்லாம் வைச்சு கதைப்பாரு.அதைத்தான் மீடியங்கிறது.

"தண்ணியோடயா?"

"குழப்பாதே.அம்மாக்கும் இதெல்லாம் தெரியும் ஆனா அப்பாக்கு கெல்ப் பண்றதோட சரி.கதைக்க எல்லாம் மாட்டா"

"நாங்கல்லாம் ஒரு நாள் வந்து பார்க்லாமாடா."
"இப்ப முடியாது.பேந்து ஒரு நாள் கூட்டிட்டு போறன்"

வெடியனின் கணக்கிடமுடியாத வெடிகளில் இந்த "பேய் வெடியும்" போய் சேர்ந்தது.
ஆனால் அது உண்மையில் தொடரும் என்று நினைக்கவில்லை.

எல்லாம் இந்த தம்பா,ராகீ,கிச்சாவால் வந்த வினை.என்னையும் இழுத்துக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தாண்டிய பின் சொன்னார்கள்.

"வெடியன் வீட்டை போகின்றோம்."
வெடவெடத்தது ஒரு(க்)கால்.

"எதுக்குடா?"

"வெடியன் சொன்னது நிசமா,பொய்யான்னு பார்க்கிறதுக்கு"

"எது?"
"எல்லாம்தான்."

"அவன் வீட்ட காரு நிக்குதா?கொம்பியூட்டர் இருக்குதா? அவங்கப்பா வோட துவக்கு!அது.இதுன்னு ஆ அப்புறம் அந்த பேயோட கதைக்கிறது.எல்லாம்தான்."

"இண்டையோட வெடியனின் வெடிக்கெல்லாம் ஒரு முடிவு"கறுவ.

"நிசமாலுமே பேயோட கதைச்சா.அவன் வீட்டு நம்பர் 13 ஆ இருக்குமோ.பார்த்த எல்லா பேய் பட சீனும் கண் முன் நின்றது.இறங்கி ஓட முடியாது முன் சைக்கிள் பாரிலிருந்து.

அவன் இருந்த தெருவுக்கு வந்து அவன் வீட்டைக்கண்டு பிடித்து.சாதரண நடுத்தர வீடு முன்னால் காரில்லை.எங்காவது கொண்டும் போயிருக்கலாம்.

வெடியனின் நிஜப்பேர் சொல்லிக்கூப்பிட 

"ஓம் "வீட்டுக்குளிருந்து கேட்டது.

நாற்பது வயதிருக்கும்.வீட்டு வேலைக்காரியா?இருக்கலாம்.

"....."இல்லையா?

இப்போதான் எங்கோ போகிறான்.நீஙகல்லாம் அவன் ப்ரெண்ஸா?

"ஆமா."

"உள்ளுக்குள்ள வந்திருங்க .வந்துடுவான்."

"படுபாவிகள் சட்டென்று வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்கள் வேவு பார்க்க.துவக்கோ இல்லை பேயோ.கூப்பிட்டவள் சாரி கூட கொஞ்சம் வெள்ளை.காலிருக்கிறது.பரவாயில்லை.மனுசிதான்.கடைசியாய் நானும் நுழைந்து... இருந்து... அலச சுற்றுப்புறத்தை.சாதரண வீடு.

"என்ன அது"

எனக்கு உறுத்தியது.எல்லாருக்கும் உறுத்த.

நீங்க "........யோட" அம்மாவா?

"இல்லை.இல்லை நான் அவனோட அத்தை.அவன் அம்மாவும்,அப்பாவும் அவன் ஐஞ்சு வயசாயிருக்கப்பவே வன்னி பிரச்சினைல செத்துட்டாங்க.அப்பல இருந்து நான்தான் வளர்க்கிறன்."

"அந்த போட்டோல இருக்கிறதுதான் அவனோட அம்மா.அப்பா"

திரும்பி வரும் போது யாருமே சொல்லவில்லை.

"உவன் வெடியனடா" என்று 

ஏன்??


      #####







அற்பபிறவி.

No comments:

Post a Comment