About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Wednesday, February 25, 2015

அபூர்வா!




இந்தக்கதையின் இத்தனையாவது பந்தியில் பெயரருக்கேற்றாற் போல அபூர்வா  இறந்து போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
ஆனால்......

அதற்கு முதல் அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

இன்றோடு 365×7+45 நாட்கள் முடிகிறது.ஆண் குழந்தை பிறந்தால் அபூர்வன் என்று முடிவில் இருந்த போது. பெண் குழந்தை.பேர் மாறியது.

திருஷ்டிக்கு கடவுளே கன்னத்தில் சிறிதாய் பொட்டு வைத்து பூமிக்கு அவளை பொட்டலம் கட்டியிருந்தார்.

சற்று வளர்ந்த பின் உலக நடப்புக்கள்  தெ(பு)ரியவில்லை என்று பொருத்தமான டயப்ரரில் கண்ணாடி போட்டுக்கொண்டாள்.

அதிகம் சிரிப்பாள்.கொஞ்சமாய் அதையும் வித்தியாசமாய் பேசுவாள்.

அபூர்வா ஒரு வயது தாண்டிய பின்னும் "அம்மா" வை கூப்பிடாதது அபூர்வம்.இரண்டு வயது தாண்டிய பின் கூப்பிடதாது குறை.நாலு வயதில் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லாமல் போனது.

விபத்தின் இறுதி வினாடிகளின் போது மேரியின் அந்த கடைசிப்பார்வை அபூர்வாவை பார்த்திருந்தது.'அம்மா' என்று அவளை கூப்பிடச்சொல்லிய பார்வை.அவள் கூப்பிடவில்லை.கைகளை மட்டும் பிடித்துக்கொண்டிருந்தாள் கெட்டியாக.

இப்போது 7வது வயதில் கை விரல்களை உதடுகளாக்கி அப்பா என்கிற ஆத்மிகனுக்கு அவ்வப்போது நிறைய கற்றுக்கொடுக்கும் ஒரு சந்தோச குறை.

கோலிங் பெல் அடிக்க.......
கொலுசு சத்தம் அமோகமாய் கேட்டது.
அழைப்பு அபூர்வாவிடம் இருந்து.
எங்கிருந்து.விழுந்தாலும் அழ மாட்டாள்.காலை போட்டுத்தான் அடிப்பாள்.என்னவோ ஏதோ என்று
ஓடி,கதவு திறந்து

மூன்றடி உயரக்கதிரையில் ஆறடி உயரத்தில் கோலிங் பெல்லை விடாமல் அழுத்தியபடி,சிரித்தாள் கையில் தட்டு.தட்டில் தோசை.பிளஸ் தோசை சுட்ட ஈசம்மா- வேலைக்காரி.

என்ன தோசையா?அபூர்வாவை பார்த்தான்.
அவள் ஈசம்மாவை பார்த்தாள்

"காலைக்கு தோசைதான் பண்ணிணேண்.மத்தியானம்?? என்ன பண்றது?

"இண்டைக்கு மத்தியானம் வேணாம்.இரவுக்கு ஏதாவது பண்ணிணா போதும்"

தோசையோடு அவளை தூக்கி.

"அப்பாவும்,அபூவும் சேர்ந்து சாப்பிட்டு அப்புறமாய் கோயிலுக்கு போகலாம்.

"கழுத்திலிருந்த சிலுவையை தூக்கி காட்டினாள்."இதுவா?

"இது சேர்ச்"

"இது தான் கோயில்.அதே கழுத்திலிருந்த ஓம் பதக்கம்  பளபளத்தது."

"......" சிரிப்பு.
ஆத்மியும் சேர்ந்து சிரித்தான்.

"சிரிக்க வேண்டும்.இல்லா விட்டால் வழமையான அடுத்த கேள்வி.இரண்டையும் ஒன்றாய் தூக்கி என்ன வித்தியாசம் இரண்டுக்கும் என்பாள். பதில் சொல்வது கடினம்"

வயதுக்கு அதிகமாய் முடி வளர்த்திருந்தாள். இரண்டாய் பிரித்து பின்னி விட்டான்.
காதோரம் விழுந்த முடிகளை அணைத்து பூச்சிக் கிளிப் குத்தினான்.
மனைவியிடம் கற்றதை மகளுக்கு பிரயோகிப்பவன்.நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி சிவப்பு சட்டைக்கு சிவப்பிலே பாவடை போட்டு குட்டி தேவதை புறப்பட்டது.

கோயிலில் கால் கழுவும் போது அவள் பார்வை மரத்தின் கீழிருந்த பிச்சைக்காரர்களை பார்த்தது.வரும் போதே அவளிடம் கை நீட்டியமை. அவர்களின் முதலாம் பட்ச தொழில் தந்திரம்

அவளை தூக்கிக்கொண்டு கோயிலுக்குள் சுற்றும் போது வழமையான சைகை கேள்விகள்.

"ஏன் பாம்புக்கு கீழ் அவர் படுத்திருக்கிறார்.பாம்பு கொத்தாதா?"

"இவருக்கு பக்கத்தில் மட்டும் ஏன் இரண்டு பேர்.?"

ஏன் சூலம்.ஏன் வேல்.ஏன் நாய். ஏன் நந்தி.நிறைய கேள்விகள் விடையில்லாமல். கைகளால் அபிநயம் பிடித்து கேட்க.

ஞாயிற்றுக் கிழமைகளில் மேரிக்காய் சேர்ச்சுக்கு போய் வெள்ளிக்கிழமைகளில்  கோயிலுக்கு வரும் ஆத்மியின் தற்போதைய ஒரே ஒரு கடவுள்  அபூர்வா.

கடவுளிடம் கூட பதில் சொல்லாமல் தப்பிக்கலாம்.ஆனால் இந்த அபூர்வாவிடம்...

கேள்விகளுக்கு விடையாய் அவளைக்காட்ட
மறுபடியும்.
"......"சிரிப்பு.

திரும்பும் போது.பிச்சைக்காரனை பார்த்துக்கைகாட்ட..

"என்ன?"
"காசு கொடு என்றாள் பேர்சை காட்டி"

முடியாது.கிருஷ்ணனுக்கு முன் தொடங்கி கி.பி வரை அபிவிருத்தி அடையாத ஒரே தொழில் இது.

"இவர்களுக்கு காசு கொடுத்தால் நமக்கு பாவம் வரும்மா"

"இல்லை கொடு"

"முடியாது"

"கையை இடறி ஓட"

"நில்!அபூ எங்க போறாய்?"

 பிச்சைக்காரனோடு போய் பக்கத்தில்  இருந்தாள்.

"அபூ. இப்போ எழும்பி வரப்போறியா இல்லையா?"
பிச்சைக்காரனோடு போய்...உடம்பு பதறியது.

அவன் வினோதமாய் ஆத்மீயை பார்த்து,அசந்தர்ப்பமாய் ஐயா!, கையை நீட்ட அந்த  கைக்கு மேல் தன் கையை வைத்தாள்.

அவளுக்கு பேர்சில் பெரிதாயிருந்த நோட்டை போட்டான்.பிச்சைக்காரியாகி விட்டாளே கடைசியில்.

போகும் போது தோளைப்பிடித்திருந்த அந்தக் குட்டிப்பிச்சைக்காரியை நினைக்க கோபம் கொந்தளித்தாலும் காட்டவில்லை.

நினைத்தை முடிப்பதற்காக எதையும் செய்ய தயங்காத பிடிவாதம்.பிறக்கும் போதே சேர்ந்து வந்திருக்க வேண்டும்.சின்ன வயதில் மறந்தும் நிலாக்காட்டி சோறூட்டவில்லை.நிலா வேண்டுமென்று கிணற்றில் குதிக்க தயாராகி இருப்பாள்.

இப்படியான ஒரு பிடிவாதத்தில்
நேற்று அவளோடு  குடித்த மூன்றாவது ஜஸ் கிறீமுக்கு
இன்று 39 பாகையில் அவனுக்கு சுட நாளைக்கு கொஸ்பிட்டல் போகலாம் என்று முடிவில் இருக்க.

நெற்றியில் கை வைத்து அவன் காய்ச்சலை பார்த்தபடியே உறங்கி போன அவளை கட்டிலில் படுக்கவைத்து,மறு நாள் கொஸ்பிட்டல் போனான்.
நேற்றை விட இன்று காய்சல் குறைந்திருந்தது.இருந்தாலும் கொஸ்பிட்டலுக்கு போய் சோதனை பண்ணிப் பார்க்க ஐந்து மில்லி இரத்தத்தை இழக்க வேண்டியிருந்தது.

சாதாரணகாய்சல்தான்.

"பனடோல்" ஐ விளங்காத எழுத்தில் எழுதியிருந்தாலும் குளிசையின் வடிவத்தில் அதுதான் என்று புரிந்தது.வாசலுக்கு அருகில் வர.

யாரிவன் கை காட்டுகிறான்.
வைத்திய சாலைகளிலும் பிச்சை எடுக்க தொடங்கி விட்டார்களா.

பிச்சைதான் கேட்டான்.ஆனால் ஒரு விதமான பிச்சை.இரத்தம்..,இரத்தத்தை பிச்சையாய் கேட்டான்.

"சேர்!!. சேர் உங்களால பிளட் டொனேட் பண்ண முடியுமா?"
உங்க பிளட் குறூப் AB தானே.

இவனுக்கு எப்படி தெரியும். என் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்டை பக்கத்தில் நின்று ஒட்டுப்பாத்திருக்க வேண்டும்.

"இங்க இல்லையாம் ......சேர்.என் வைஃப் அன்ட் டோட்டர்.... வசனத்தை முடிக்காமல் மூச்சு விட்டான்.
பார்த்தான்.கொஞ்சம் அழுதிருந்தான்."

அவன் கையிலேயே நிறைய இரத்தம் காய்ந்து போய்.அவனுடையதா?இருக்கலாம்.

இரத்தம்..இரத்தம் ஏதோ செய்தது.தலையெல்லாம் கிறு கிறுத்தது அவனைப்பார்க்க.மூன்று வருசத்துக்கு முதல் அவனைப்போலவே இரத்....
அன்றிலிருந்து இரத்தத்தை பார்த்தாலே

"இல்லை.சொறி!.நான் இப்ப...போகனும்"

அப்பா நீ ? குடு. கையை பிடித்தாள்

அபூ! இது ஐந்து ரூபா பிச்சைக் காசில்லை .இரத்தம். எல்லாம் சிவப்பு நிறம் என்றாலும் ஒவ்வோன்றும் ஒவ்வோரு ரகம்.
ஒரு ரத்தம் களவு .மற்றது இரக்கம்.நேர்மை.துரோகம்.

அதுக்கு தக்கதாய் ஒவ்வோரு வரின் இரத்தமும் வேறு வேறு  வகையாய் கடைசில பிரிஞ்சுட்டுது.இப்ப A,B,AB,O+,O- இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது.

"வா போலாம்".
முடியாது. அதே திமிர் பார்வை.

கையை மீண்டும் இடறினாள்!

சுற்றி பார்த்து மதில் பக்கத்தில் இருந்த தகரத்தின் கீழ் கையை வைத்து

"சர்க்" கோடாய் இரக்க குறூப் இரத்தம் வடிய அதை இரத்தம் கேட்டவனிடம் கொண்டு சென்றாள்.

"Damn it  ... அபூ"

"விரோதப் பார்வை பார்த்தாள் ." ஏன் நீ இப்படி?

கட்டிலில் படுத்திருந்தான். AB   இரத்தம் துளித்துளியாய் கலனுக்குள் வடிந்து கொண்டிருக்க.ஒரு பக்கத்தில் ."அப்பா நோகுதா" என்று கண்ணாலே கேட்க தலையாட்டி "இல்லை" .
உனக்கு.காயம்?
"இல்லையே" என்று  கை காட்ட.இல்லைதான்
"......."சிரிப்பு

இரத்தம் கேட்டவன் கால்  பக்கத்தில் கைகட்டி நின்றான். கோயில் மூலஸ்தான மூர்த்தியை பார்ப்பது போல.


தலைக்கு பக்கத்தில்
டொக்ரரின் கேள்விகள்.

பெயர்:ஆத்மீகன்.
வயது:34

நல்ல காலம் உங்களால தான் இவங்க குழந்தை பிழைச்சுது.

உங்க குழந்தை பிழைக்க என் குழந்தை தான் காரணம்.

"அப்டியா யாரது?.எங்க இருக்காங்க.?"

இதோ இருக்கிறாள்.!!

                              அ..பூ ...ர்...வா..!!

"....." சிரிப்பு.




                 ######







அற்பபிறவியின் பிற்குறிப்பு ;
ஆரம்பத்தில் சொன்னது போல.
அபூர்வா இந்தக்கதையின் 8வது பந்தியில் இறந்து விட்டாள்.

ஆனால்
அபூர்வா ஆத்மியை பொறுத்தவரை இறக்க மாட்டாள். கடவுள்கள் மரிப்பதில்லை.


1 comment: