About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Friday, February 13, 2015

ஐ நாளைக்கு.....


ஸ்டம்ப் எல்லாம் நட்டு எல்லைக்கோட்டுக்கு கசற் ரேப்பை கல்லில கட்டி கிறவுண்ட் எல்லாம் ரெடி பண்ணியாச்சு.

ஆனா இன்னும் தம்பாவோட ரீமைக்காணேல்ல.பெரியாச்சரியம் எங்கட ரீமுக்கு.ஏன் என்டா எங்கட ஏரியாக்குள்ளயே ஒரு கெத்தான ரீம் என்டா அது தம்பான்ர ரீம் மட்டும் தான்.பின் வாங்கி இருக்க மாட்டாங்கள்.

நிஐம்தான் தூரத்தில அவங்கட ரீம் வாறது தெரிந்தது.மட்ச் நடக்கும் போது பிளாஷ்பாக் போகட்டும்

#####

உண்மைல ஒரு இரண்டு வருசத்துக்கு முதல் "தம்பா" வின்ர ரீம் "கிச்சா" வின்ர ரீம் என்டெல்லாம் இல்லை.
அப்ப இந்த இரண்டு ரீமும் ஒண்டாத்தான் எங்கட ஏரியா முருகன் கோயிலுக்கு பின்னால கிடக்கிற பதினைஞ்சு பரப்பு காணிக்குள்ள விளையாட்றது.

ஆர் கண்ணு பட்டுச்சுதோ ஒரு பெரிய சண்டைல தான் இப்படி ஒண்ணாயிருந்தது உடைஞ்சு இரண்டாயிட்டுது.

நான் கிச்சாவின்ர ரீம்காரன்.அதால கதைல கூட எங்கட ரீமுக்குத்தான் சப்போட் பண்ணுவன்.

அந்த சண்டைல இருந்து சகலத்துக்கும் சண்டைதான்.கிரவுண்டுக்குத்தான் பெரிய ஆர்ப்பாட்டம்.உண்மைல தம்பா ன்ர ரீம்தான் பவரான ரீம் என்டு எங்கள் எல்லாருக்கும் தெரியும்.ஏன் என்டா அந்த ரீமில இருந்த இரண்டு பேர்.ஒண்ணு "குண்டுமணி" .அவனுக்கு  அப்படி ஒரு பேரை வச்சதுக்கு காரணம் நீங்க நினைக்கிற மாதிரியில்லை.

அவன் இருக்கிற நேரத்தில மணிவண்ணன் ஐ சுருக்கி "மணி" என்டும் இல்லாத நேரத்தில "முன்பாதியையும்" பயன்படுத்துவம்.

இவனை பற்றி சிறப்பா சொல்லணும்.இவன்தான் தம்பா ரீமோட தலை சிறந்த கீப்பர்.இவன்ர வரலாற்றில இவனைத்தாண்டி பந்து பின்னால போனதும் இல்லை.பந்தை கையால பிடிச்சதும் இல்லை.

விளையாடும் போது காற்சட்டைக்குள் புழுக்கொடியலோ இல்லை பனங்கிழங்கோ வைத்து சப்புவான்.பந்து இவனில் பட்டு உந்தத்தை காக்க தெறித்து ஸ்டம்பில் பட அந்த நேரம் பார்த்து பேட்ஸ்மானும் கிறிஸ் கோட்டை தாண்டி நிக்க அம்பியருக்கு பதிலாய் குண்டுமணியே புழுக்கொடியலை தூக்கி காட்டுவான்.அவுட்.

இரண்டாவது "விச்சுவா." குண்டுமணியோட தம்பியா? என்டு எல்லாரும் கேட்டாலும் அவன் இவனுக்கு அண்ணண் முறை.ஆனால் அப்படி ஒரு உருவ ஒற்றுமை.இவனுக்கு வாழ்க்கையில் இரண்டு விசயத்தில் மட்டும் அலாதிப்பிரியம்.முதலாவது வாயில் உள்ள பட்டாணிக்கடலை.இரண்டாவது கையில் உள்ள ப.கடலை.

இவங்களை சமாளிக்க எங்களோட ரீமில இருந்த ஒரே ஒரு ஜீவன் "கிச்சா". கோபமோ சந்தோசமோ எப்போதும் "கல்க்" போல இருப்பான்.சிரிக்கும் போது மட்டும் இரண்டு கன்னத்திலும் ஒரு ஸ்பூன் அளவு பள்ளம் விழும்.

இரண்டு ரீமில் தலா ஆறு பேரளவில்தான் நிரந்தர பிளேயர்கள் மீதி நாலைந்து பேர் பாரளுமன்ற உறுப்பினர்கள் போல் பாய்வார்கள்.

பெரிய பிரச்சினை கிரவுண்ட்தான்.அதுக்காக மட்ச் போட்டு நாங்கள் வென்றாலும் மறுநாள் குண்டுமணியையும் விச்சுவாவையும் காவலுக்கு விட்டுவிட்டு அவர்கள் அந்த இடத்தை பயன்படுத்த கிச்சாவும் பொறுத்து பொறுத்து பார்த்து வேற ஒரு காணியை பிடித்தான்.
அந்த காணி முழுக்க நெருஞ்சி முள்ளு.எங்கட ரீம் இரவிரவா வாழைக்குத்தியளைப் போட்டு உருட்டி எடுத்து இடத்தை ரெடி பண்ணிட்டு அடுத்த நாள் வந்தா முதல் நாள் கிடந்ததை விட கூடவா கிடக்கு முள்ளு. கூடவே முறிச்சு எறிஞ்சு கிடந்த இரண்டு மூண்டு புழுக்கொடியலின் நுனிக்காம்புகள்.

இப்படி பல விசயங்களிலும் பல இடங்களிலும் இந்த புழுக்கொடியல் நுனி துண்டுகள் கிடக்கும்.எங்கெல்லாம் அது கிடக்கிறதோ அங்கெல்லாம் குண்டுமணியிண் அநியாயங்கள் நடைபெற்றிருக்கும்.

இருந்தாலும் பூமி விடாம சுத்தினதில கொஞ்சக்காலம் போக எங்கட ரீமில புதுசா  வந்து சேர்ந்தவன் ராகீ என்கிற ராகவன்.கண்ணாடி போட்டு நெற்றியில் ஓரிரு முடிகள்.ஐந்தடி இருப்பான்.எப்படி எறிந்தாலும் அவன் பேட்டில் பட்டுத்தான் பந்து பாதை மாறியது.அசப்பில் குட்டிக் கங்குலி போல இருப்பான்.
அவன் வந்ததின் பின் எங்கள் ரீம் ஆயிரம் யானை பலம் பெற்றது.
அந்த பீமனை தங்கள் பக்கம் இழுக்க தம்பா ரீம் எவ்ளோ வேலை பண்ணியும் பாண்டவர் பக்கம் ஒரு கர்ணன் மாதிரி நிரந்தரமாய் ஒட்டிக்கொண்டான்.எங்களோடு.

இந்த கர்ணன் லவ் பண்ணித் தொலைத்தான். விசித்திரா என்கிற புருசாலியை.இதில கொடுமை என்ன என்டா இந்த விசித்திரா விச்சுவாக்கு மச்சாள் முறை.
எங்களோடு சின்ன வயதில் சேர்ந்து விளையாடியவள்.பின் அவள் இனி விளையாட வர மாட்டாள் என்று வீட்டில் ஏதோ பங்கஷன்  வைத்து தகவல்  சொன்னார்கள்.

அதன் பின் அவளைக் காண்பது அரிதாகியது.

ராகீ வந்து சில மாதங்களின் பின் விசித்திரா பக்தியோடு அடிக்கடி மாலை வேளைகளில் முன்னால் இருந்த முருகன் கோயிலை சுற்றிக்கும்பிட்டது. எங்களுக்கு மட்டும் விசித்திரமாயிருந்தது.

அவள் அப்படி சுற்றி வரும் போது விச்சூ கடலையை வாயில் போட்டும் ராகீ அதை அவளிடம் போட்டதிலிருந்தும் புரிந்து போனது.

இது இப்படியே போய் கொண்டிருந்த கால கட்டத்தில் கிரவுண்ட்டுக்கான சண்டை நன்றாய் முத்தியதில் கடைசியாய் அதற்கான உரிமையை தீர்மானிப்பதற்காய்

போட்ட மேட்ச் தான் இப்போது நடந்து கொண்டிருப்பது.

ஆனால் இந்த மட்ச்சில் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம் ராகீயை தம்பா ரீம் வாங்கி விட்டிருந்தது. பயமுறுத்தல் மூலமாக.
விச்சுவாக்கு விசித்திரா-ராகீயின் விசயம் தெரிந்து அதை அவள் வீட்டில் போய் சொல்லி விடுவேன் என்று வெருட்ட ராகீ திணற இறுதியில் மட்சில் அவன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று குழாயடியில் வைத்து ஒப்பந்தம் செய்து கொண்டான் விச்சூ.

இதை படங்களில் வருவது போல நான் ஒளிந்து நிண்டு கேட்டன் என்டு எழுதுறதுதான் சம்பிரதாயம் .ஆனா நிஜ சீன் அவனாவே இதை என்கிட்ட விசித்து விசித்து சொன்னதுதான்.

######

கொடுத்த வாக்குக்கமைய ராகீ மட்சில் நிறைய சொதப்பினான்.

இரண்டு ஓவருக்கு 28 ரன் கொடுத்து பத்து போலில் மூன்று ரன்னை எடுத்து எதிர்த்தாப்புறத்தில் நின்ற என்னைப் பார்த்தான்.

தம்பா வின் ரீம் 109 ரன் இலக்காக்கியது.
இன்னும் இரண்டு பந்தில் மூன்று ரன் எடுத்தால் வெற்றியும் கிரவுண்டும் எம் வசம்.
வந்த பந்தை தட்டி விட்டு நான் ஒன்று ஓட ராகீயின் முறை இப்போது.
ஒரு பந்து இரண்டு ரன்.

எந்த சலனமும் இல்லாமல் இப்போது நின்றான்.வந்த பந்தை தூக்கி அடித்தான்

பந்து பரவளைவு பாதையில் ஈர்ப்பார்முடுகலுடன் இயங்கியது .விச்சூ பந்தை பிடிக்க தயாராய் கையை உரசிக்கொண்டான்.
நான் ஓட தொடங்கினேன்.

பந்தைப்பிடித்தால் தோல்வி .
ராகீ காதலுக்காக நட்புக்கு செய்த துரோகம்.
கிரவுண்ட் போச்சு

பிடிக்கா விட்டால் வெற்றி.
நட்பை விட்டுக்கொடுக்கவில்லை.
கிரவுண்டும் எங்களுக்கே.அவன் காதல் ...???... ஆயிடும்.

இந்தக்கதைக்கு எப்படி முடிவு கொடுத்தாலும் ஒரு பக்கத்துக்கு அநியாயம் செய்யற போல போயிடும்.அதால முடிவு கடவுளுக்கு மட்டும் தெரியட்டும்.

அதெல்லாம் வேணாம் முடிவு வேணுமெண்டாக்கள் கொஞ்சூண்டு பொறுமை.பந்து கொஞ்சம் கீழ வரட்டுமே.

அது வரைக்கும் இந்த பதிவு எழுத காரணமான இரண்டு பகுதிகள்.

பகுதி - 1
காதல். வழக்கமான சமாச்சாரம் தான்.எல்லோருக்கும். தெரிஞ்ச விசயம் தான் என்று விடமுடியாது.காரணம் கடைசியாய் அண்மையில் நீயா நானா பார்த்த போது கோட் கோபிநாத் சார் காதல் என்றால் என்ன? என்று கேட்க வந்ததில் பாதி பேந்த பேந்த விழித்தது.

பாதி இஷ்டத்துக்கு

"சுய நலமற்ற அன்பு"
"ஒரு உணர்வு"

அது இது என்று ஏகத்துக்கும் வரைவிலக்கணங்களை அள்ளி வீசியது.

ஆதாம் ஏவாள் முதல் ஆண்டாள் அழகர் வரை அனேக காதல் கதைகள் பார்த்தாயிற்று இன்னும் நிறைய பார்க்க இருக்கிறது.
ஆனால் காதல் என்றால் என்ன? கேள்வி க்கு
விடை தெரியாது.

இவ்வளவு கதைக்கிறியே உனக்கு தெரியுமா என்டு கேட்டால் எனக்கும் தெரியாது.

அதால அதை தெரிஞ்சவங்கள் இந்த பகுதி ஒன்றை பூரணப்படுத்தவும்

பகுதி - 2
கிரிக்கெட்.இப்போது
ரியூசன்ல ஒரு பாடம் முடிந்து மற்ற பாட வாத்தியார் வருவதற்கிடையில் கலக்ஸியை நோண்டி கண்டிக்கிரஷில் இரண்டு லெவல் முடித்து ரெம்பிள் ரன்னில் குரங்குக்கு பயந்தோடும் குரங்குகளுக்கு மேலே கதையில் வந்த மாதிரியான ஒரு காலம் இருந்தது என்பது புரிய வேண்டும்.

1996 ஆம் ஆண்டு இலங்கை கப் அடித்த போது என்னால் அதைப்பார்க்க முடியாமல் போனதுக்கு இரண்டு காரணம்.ஒன்று நான் பிறந்தது அதுக்கு முதல் வருசம்.

இரண்டாவது அப்படியே வேளைக்கு பிறந்திருந்தாலும் 100 ஓவருக்கு டைனமோ சுத்த முடியாது தொடர்ந்து.அந்த ரைமில்.

கிரிக்கெட் என்பது புரிந்து அதன் மீது வெறியனாகி ஏழாம் ஆண்டுக்கு வரும் போது மீண்டும் இலங்கை இறுதிக்குள் நுழைந்தது 2007 ல்.
அப்போது வீட்டில் ரிவீ இல்லை.சூரியனில் விழுந்து கிடந்து இறுதியாட்ட ஸ்கோர் கேட்க மழை பெய்தது.கிரவுண்டில்.

96ல் வாங்கிய கப் வேண்டாம் என்று பொண்டிங்கிடமே கொடுத்து விட்டு வந்தார்கள்.சகிக்கவில்லை எனக்கு.

2011ல் ஓ எல் படிக்கையில் எக்ஸ்ஸாமை அப்புறம் பார்க்கலாம் மட்சை இப்பவே பார்க்கனும் என்று இறுதியைப்பார்க்க விட்ச்சில் எங்கே பேட்ஸ்மான் பேட்டைக்குத்த வேண்டும் என்பதைக்கூட நாட்டின் அரசியல் தீர்மானித்திருக்கலாம் என்று தோற்ற பின் கதைத்துக்கொண்டார்கள்.

இப்போது 2015
நாளை ஆட்டம் ஆரம்பம்.இதுவரை காலமும் இலங்கையை தாங்கிய இரு தூண்கள் மகேல.,சங்கா வின் சகாப்தம் இந்த உலக கிண்ணத்துடன் முடிகிறது.

இந்த முறையும் இறுதிக்கு வந்து அல்வா கிண்டினா ........
ஆமா சொல்லிப்புட்டேன்.

ஆக மொத்ததில் டபுள் கொண்டாட்டம் நாளைக்கு.
அதை அழகாய் கொண்டாட வாழ்த்துக்கள் கூறி விடை பெற

ஓவ்!!! பந்து விச்சூவின் பத்து விரல்களுக்குள்ளும் சரியாய் விழுந்து........

நிற்காமல் அப்படியே கீழே விழ

கூடவே விச்சூவும் விழுந்தான்.நிலத்தில்.
பட்டாணிக்கடலையெல்லாம் கொட்டுப்பட்டது அவன் பையிலிருந்து.

"அவனை தூக்கப்போனவர்களில் யாரோ கேட்டது, எனக்கு கேட்டது"

"ஏதுடா உனக்கு இவ்வளவு கடலை???"

எனக்குப் புரிந்தது. ராகீ கர்ணண் இல்லை கண்ணண்





அற்பப்பிறவி



3 comments:

  1. 1996 ஆம் ஆண்டு இலங்கை கப் அடித்த போது என்னால் அதைப்பார்க்க முடியாமல் போனதுக்கு இரண்டு காரணம்.ஒன்று நான் பிறந்தது அதுக்கு முதல் வருசம்.

    இரண்டாவது அப்படியே வேளைக்கு பிறந்திருந்தாலும் 100 ஓவருக்கு டைனமோ சுத்த முடியாது தொடர்ந்து.அந்த ரைமில்.

    ReplyDelete
  2. Hats off அற்பப்பிறவி

    ReplyDelete
  3. Great........
    I really enjoyed it..... ;D

    ReplyDelete