About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Saturday, August 17, 2024

Nod..du..ங்கள்

இன்ஸ்டா ரீல்ஸ்களை இடைவெளியேதுமின்றி ஸ்வப்பி கொண்டிருந்த போது, திரைகளில் வந்த தலை சிறந்த நொட்டுக்களின் தொகுப்பு  தட்டுப்பட்டது.  

என்னிடமும் ஒரு டஜன் நொட்டுக்களின் களஞ்சியம் இருந்தது. ஆங்காங்கே அதனை தூவி விட்ட பதிவே இது 

கடைசியாக ஏ/எல் முடிகின்ற நேரத்தில் அனுசித்திராவிடம் 

"பெஸ்ட் ஒவ் லக், டூ யுவர் எக்ஸாம் வெல்" 

என்ற போது சுழித்த சுழிப்போடு நொட்டிய நொட்டு - இந்த வாழ்க்கையில் இனி யாரும் என்னை பார்த்து நொட்டக்கூடாது என்ற முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. நொட்டுக்களின் மீதான ஒரு அவநம்பிக்கையும் உதித்தது.

ஒரு வன் சைட்டராய் எங்கேயும் யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்று நினைக்க வைத்த நொட் அது. 

ஆனால் அவநம்பிக்கைகள் மீதான விதிவிலக்குகளே நிலைத்திருத்தலுக்கு உதவுகின்றது. சில தருணங்களில் கிடைத்த சில நொட்டுக்கள், அந்த விதிவிலக்குகளுடன் சேர்ந்து கொண்டதுடன் மீண்டும் நொட்ட வேண்டும் என்ற நம்பிக்கையும் விதைத்தது. 

நொட்டுவதில் பெரிதாக என்ன இருந்து விடப்போகிறது என்பவர்களுக்கு... 

அது ஒரு யுனிவேர்சல் லாங்குவேஜ். மொழி தெரிந்த, தெரியாத அனைவருக்குமே பொதுமொழி. மெல்லச்சொன்னால் இன்ரோவட்களின் இதய மொழி.

பேசிக்கொள்ள தேவையில்லை. சோகம், சந்தோசம், கவலை எதனையும் காட்டிக்கொள்ள வேண்டியதில்லை. யஸ்ட் எ நொட். 

வாழ்க்கையை சிம்பிளாக வாழ்ந்து விடுகின்றவர்களின்  சட்டைப்பைகளை தட்டிப்பாருங்கள்,  முழுவதும் நொட்டுக்களால் நிரம்பி வழிந்திருக்கும். 

பாதையொன்றில் நடந்து போகும் போது உலகிலுள்ள அத்தனை பாரமும் தலையில் ஏறி அமர்ந்திருப்பதனை உணர முடிகிறது. எதிரே வருகின்ற அவனோ, அவளோ அல்லது யாரோ ஒரு ரோ... உங்களை பார்த்து ஒரு தலையசைப்பு. நீங்களும் பதிலுக்கு ஒரு நொட். யஸ்ட் எ நொட். அந்த மில்லி செக்கனில் தலைப்பாரத்திற்குரிய கிராவிட்டி இழந்து போனதாய் ஒரு உணர்வு. அது ஒரு சிறுபோதை - நொட்டிப்பாருங்கள் புரியும். 

புன்சிரிப்புக்களுடன் தலையசைத்து விட்டு கடந்து போகின்ற இனந்தெரியாத முகங்கள் எல்லாம் இலவச பிரசர் மாத்திரைகள்.  ஒரு கணத்திற்காயினும் டஜன் கணக்கில் கவலைகளை காணாமல் பண்ணிவிட்டு சென்று விடுகிறார்கள். அந்த ஒரு கணத்தில் பரிமாறப்படும் நொட்டில் நீயும் வாழ்கிறாய் நானும் வாழ்கிறேன் சரி வாழ்ந்துதான் பார்த்து விட்டுப்போவோமே என்பதாய் கடந்து போகின்றார்கள். நாளையும் அதே இடத்தில் சந்திக்கலாம், சந்தித்தால் நொட்டிக்கொள்ளலாம். 

காலை வேலைக்கு வரும்போது முதலாவது நொட்டு வைப்பது செக்குவுக்கு. செக்கு என்கின்ற செக்குயூரிட்டி. தங்கமான மனுசன். பேசினால் மட்டும் பேசிக்கொள்கின்ற ஒரு ப்ளட் குறூப். கார் போன்றவற்றிற்கு மட்டும் உருண்டு வந்து கேட் திறந்து விடுகிற ஒரு உருப்படி. பெரும்பாலும் இறங்கி போகும் போது ஒரு நொட்டு வைப்பார். பதிலுக்கு  ஒன்று வைத்துக்கொள்ளலாம். 

அதை தாண்டி பஸ் ஸ்டாண்டினுள் இறங்கினால், ஊரில் தக் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இங்கே வந்து சாதாரணமாக வாழ்க்கையை ஓ(ட்)டுகின்ற ஆட்டோ மாணிக்கங்கள். எப்போது பழக்கம், எப்படி பழக்கம் என்றெல்லாம் தெரியாது நொட்டிக்கொள்வார்கள், பதிலுக்கு நொட்டுவது சகஜமாகிவிட்டது. அவர்கள் அதுக்கு எக்ஸ்ராவாய் கேட்பதுமில்லை. கொடுப்பதுமில்லை. 

கடந்து போனால் வழமையாக காத்திருக்கும் பேரூந்து தரிப்பிடம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே பாதைக்காக காத்திருக்கும் ஒரு கூட்டத்தினூடே நிற்கும் போது, ஒரு பத்துவருடம் பழகிய உணர்வு தொற்றிக்கொள்ளும். பெரும்பாலும் நொட்டாலேயே பேசிக்கொள்வார்கள். 

சாம்பிளிற்கு ஒரு டீகோட்.... 

"எங்கே நேற்று காணேல்ல" (கொஞ்சம் நீளமான சுருங்கிய புருவத்துடனான நொட்டு) 

ஓ! சார்ஜ் போட்டு வளர்த்த அலாரம் துரோகம் பண்ணி விட்டது (வாய் பிதுங்கியவாறான ஒரு கவலையான நொட்டு.) 

பத்து பேர் ஒரு குறிப்பிட்ட கால எல்லையினுள் ஒரு இடத்தில் காத்திருக்கின்றார்கள் என்றால், அவர்கள் ஒரு பெயர் தெரியா, ஊர் அறியா பேசிக்கொள்ளாத குடும்பம் . 

அதே தரிப்பிடத்திற்கு அருகில், மூலையாக தூண் நிழலில் ஒரு  பிச்சைக்காரன். கால் கொஞ்சம் முடம். வாரக்கணக்கில் வாராத முடி, சவராத தாடி. வீதியை ஒரு வெறித்த பார்வை. அதிகமாய் கவனிக்க வேண்டியேற்பட்டதற்கான காரணம், யாரிடமும் கையை நீட்டி பிச்சை கேட்பதில்லை. அமைதியாக அதே இடத்தில் நாள் முழுவதும் இருப்பதை காணலாம். 

காத்திருப்பவர்களில் பலர் பேரூந்து வருவதற்கிடையில் ஏதோ கொஞ்சமாய் கொடுப்பார்கள். நிச்சயமாய் ஒரு நாள் வாழ்வதற்கு போதுமான தொகை. கொடுப்பதை வாங்கி பையினுள் வைத்து கொள்வதோடு சரி. பதிலாய் நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை. ஏதோ ஒன்று ஈர்த்தது. 

அடிக்கடி கையில் வரும் சில்லறைகளை குடும்பத்தில் ஒருவனாய் கொடுக்க தொடங்கினேன், ஒரு நாளாவது தலையை நிமிர்த்தி ஒரு நொட்டாவது வைப்பான் என்றொரு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. கிடைக்கவில்லை. பரவாயில்லை இருக்கட்டும். பார்த்துக்கொள்ளலாம்.

பிச்சைக்காரனிடம் போய் நொட்டை எதிர்பார்க்கலாமா, அட மட மனசே. 

நகரின் மூலைகள் எல்லாம் வகை வகையாக பிச்சை எடுக்கின்றார்கள். பூச்சி முட்டையுடன், சாம்பிராணி பெட்டிகளுடன், கை குழந்தைகளுடன். பெரிய வங்கி வாசல்கள், உணவகங்களின் ஓரங்கள், பேரூந்துகளின் பயணங்களில் எல்லாம் இப்போது குறைந்தது ஒருவரையாவது சந்திக்க முடியாமல் போவதில்லை. 

இரவின் பிற்காலப்பகுதிகளில் மழை பெய்தாலும் அரைப்பகுதி நனையாத அளவிற்கு வீதியோர கடை முகப்புகளினுள் தூங்குகின்றார்கள்.  அதிகாலையில் மீண்டும் எழுந்து கொள்கின்றார்கள். மினிமம் தொகையை கூட உயர்த்தி விட்டார்கள். சிலர் ஐந்து பத்தெல்லாம் கொடுத்தால் வாங்குவதே கிடையாது. இன்று டொலர் என்ன விலை தெரியுமா என்று பார்வையாலேயே கேட்கின்றார்கள். 

சரி. டிராக் வேறெங்கோ போய்விட்டது. நொட்டுக்கு வருவோம். பேரூந்தில் ஏறினால் கொண்டக்டர், டிரைவர் முகங்கள் மாறுவது குறைவு. அதே "ரூட்" டான முகங்கள். 

மாணிக்கங்களை தாண்டி ஒரே பஸ் பாதையில்  பிரயாணம் செய்பவர்கள் நோட்டுடன் பரிமாறிக்கொள்வது நொட்டுக்களை. போகுமிடம் தேவையில்லை. நோட்டைக்கொடுத்து ஒரு நொட்டை பாஸ் பண்ணிணாலே போதுமென்னும் அளவிற்கு முகங்கள் பரீட்சயமாகிருந்தது. பேரூந்தினுள்ளும் பெரும்பான்மை ஒரு கால எல்லை குடும்பங்களே. 

எல்லாம் கடந்து வேலையினுள் நுழைந்தால் கிடைக்கின்றவை எல்லாம் ஒரு வகை நொட்டு நொட்டுக்களே. இருந்தாலும் ஆங்காங்கே கிடைக்கின்ற அந்த புன்சிரிப்பு நொட்டுக்கள் அவற்றை மறந்து விடச்செய்யும். 

டீ டைமில் கண்டீன் போயாக வேண்டும். மூர்த்தி அங்கிளை சந்தித்து, ஒரு நொட்டுக்காகவேனும். 

Yess !! HE IS THE TEA MAKER OF THE CANTEEN. 

யோகுவிற்கு அடுத்ததாய் சந்திக்க கிடைத்த ஒரு ஜெம். தனியாக ஒரு பதிவு போட்டு பந்தி பந்தியாக நிறைய சொல்கின்றேன். இப்போதைக்கு தலையில் தொப்பி போட்டு கிளீன் சேவ் பண்ணிய ஐம்பதை தாண்டிய ஒரு முகத்தை கற்பனையாக்கி கொள்ளுங்கள். கிடைக்கும் உணவின் ருசியை தாண்டி, அதை பரிமாறுபவர்களிற்காக ஒரு கடைக்கோ அல்லது கண்டீனிற்கோ வாடிக்கையாகி இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் நான் எல்லாருமே ஒரே ரத்தம், அது யோகு, மூர்த்தி அங்கிள் போன்றவர்களிற்காகத்தான். கிடைப்பது அரிது. கிடைத்தால் மிஸ் பண்ணி விடாதீர்கள். 

வீடு, என்பதை அதிக அதிகமாகவே தள்ளி வைத்து ஒரு நாளில் 12 மணித்தியாலங்கள் மட்டும் இருக்கும் ஒரு கனதியான நகரத்தின் ஒவ்வொரு கணத்திலும் எத்தனை ஆயிரம் நொட்டுக்கள் பரிமாறப்படுகின்றது என்று கணக்கு பார்த்தால், எண்ணி முடியாது. ஆனால் அதை ரசிக்குமளவிற்காவது இருந்து விட வேண்டும். 

சில வேளைகளில் எதிர்பார்த்த நொட்டுக்கள் கிடைப்பதில்லை. சில கணங்களில் எதிர்பாரா நொட்டுக்கள் கிடைத்து விடுகின்றது. 

இன்னுமொரு நாளின் மாலையில் மறு முனையில் இன்னுமொரு காலக்கூட்டம். இன்னுமொரு பேரூந்து. அதில் ஒரு பெண், இடுப்பில் ஒரு குழந்தை. அழுதபடியே.. போச்சா. இன்னுமொரு அதே loop.... என்றால் இல்லை. அவர்கள் பிச்சை கேட்கவில்லை. தோற்றம்தான் தப்புக்கணக்கிற்கான காரணம். டிக்கெட் எடுத்து முன் சீட்டில் வந்து இருந்தார்கள். தோளினூடாக பின் சீட்டினை பார்த்தபடியே ஐந்து வயது சினுங்கியது. 

பின்சீட்டிலிருந்தவாறே "Peekaboo" பண்ணி பார்த்தேன். சிணுங்கலை நிறுத்திவிட்டு பார்த்தது. கொஞ்சத்தில் மறுபடியும் சிணுங்கல், மறுபடியும்  Peekaboo. மறுபடியும்... ஒரு கட்டத்தில் அழுகையை மறந்து, மறுபக்கத்திலிருந்தும் Peekaboo வரத்தொடங்கியது. தாயின் முகத்திற்கு பின்னால் ஒளிவதும், வெளிவருவதுமாய். தாய் என்னை திரும்பி பார்த்து வைத்த நொட்டிற்கு பதிலாய் ஒன்றை வைத்துக்கொண்டாலும் Peekaboo வே என் பிரதானமாயிருந்தது. 

ஒரு முப்பது நிமிடங்கள். ஒரு நாளின் ஒட்டு மொத்த அழுத்தங்களையும் விழுங்கக்கூடிய சிரிப்புக்கள் அந்த ஐந்து வயது உமிழ்ந்து கொண்டிருந்தது. சந்தோசங்கள் அதிகமாக கிடைக்கும்போதெல்லாம் பஸ் நிறுத்துமிடங்களும் விரைவாகவே வந்து விடுகின்றது. இறங்கும்போதுதான் பார்த்தேன் பின்னாலேயே இறங்கி வந்தார்கள். ஏதும் கேட்கக்கூடும். கேட்காவிட்டாலுமே கொடுக்கும் மனநிலை இருந்தது. இல்லை. கேட்வில்லை. கடந்து சென்றார்கள். மீண்டும் தூவானமான சிணுங்கல்களுடன். எல்லா எதிர்ப்பார்புக்களையும் உடைத்தெறிகின்றார்கள். சந்தித்தது முதலே. 

தூரத்தில் ஒரு காலையில் விவரித்த பேரூந்து தரிப்பிடமும் அதே பிச்சைக்காரனும், ஆனால் இந்த தடவை, அவன் கையில் அந்த ஐந்து வயது மறுபடியும் முத்துக்களை கொட்டிக்கொண்டிருந்தது. தாய்க்காரி புலம்பல்களுடன் அவனுக்கு சொந்தமாயிருந்த பை, ஒரு துணி என்பவற்றை மடித்து புறப்பட ஆயத்தமாகவும், அவர்களை கடக்கவும் சரியாக இருந்தது. 

அப்போதுதான் அது நடந்தது. 

அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான் ஒரு சிரித்த நொட்டுடன் ..... 


பிரியமுள்ள பிச்சைக்காரா !!!

#############




#அற்பபிறவி