ஊருக்குள் மொத்தமாக நான்கு சிவசம்புக்கள் இருந்தார்கள். மூன்று பேர் இந்த கதையுடன் தொடர்பற்றவர்கள். நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் சிவசம்பு என்பது ஸ்டைலீஷான பெயராக இருந்திருக்கலாம். அந்த ஒரு காரணத்தினால் மட்டும் மூன்று சிவசம்புக்கள் கதையுடன் தொடர்புடைய சிவசம்புவின் பெயரை பெற்றிருந்தார்கள். அதனால் இந்த புறோலொக் பந்தியுடன் அவர்கள் மூவரையும் விட்டு விடலாம்.
கதாநாயகன் சிவசம்பு இப்போதும் உயிருடன் தான் இருக்கின்றார். வருகின்ற மார்கழி இருபத்தியேழுடன் 93 வயது முடிகிறது. உற்றுப்பார்த்தால் முற்றாக நரைத்த, முடிகளினூடாக முன் நெற்றியில் சாதுவான சொட்டை விழுந்திருப்பது தெரியும். கன்னங்களில் கொழுப்பற்ற தொய்வு. கண்களில் பூ விழ ஆரம்பித்துள்ளது. பார்த்தால் 93.. ஆ ... என்கின்ற வயது. ஊருக்குள் சாதாரணமாக சிவசம்பு என்று கேட்டால் எந்த சிவசம்பு என்று திருப்பி கேட்பார்கள். அதனையே பிசினார் சம்பர் என்றால், கைக்குழந்தையும் கைகாட்டுமளவிற்கு பிரபலமான பெயர் சிவசம்புவினுடையது. அது சம்பராக மட்டும் மருவிக்கொள்வதற்கு அதிகபட்சமாக இங்கே ஒரு பந்தி அளவே தேவைப்பட்டது. ஆனால் சம்பரின் வாழ்க்கையில் அது ஒரு யுகத்திற்கு ஒப்பானது.
அண்மையில் குலதெய்வம் கோவிலில் சம்பரை சந்திக்க கிடைத்தது. பூஜைக்கு பின்னாரான ஒரு பொட்காஸ்ட்டாக, வசந்த மண்டபத்தை நோக்கிய தூணில் சம்பரும், மடப்பள்ளி நோக்கிய தூணில் பொட்காஸ்டருமாக சாய்ந்து கொள்ள, சில கதைகள், சில கணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் போய் கொள்ளுங்கள். ஏன் சொல்கிறேன் என்றால் சில சிவசம்புக்களை காணும் சந்தர்ப்பம் வேறு பெரிய கோவில்களில் கிடைப்பதில்லை.
ஊரின் எங்கேயோ ஒதுக்குபுறங்களில், ஆலமரங்களின் கீழ், வயற்கரையோரங்களில் என குலதெய்வங்கள், சாஸ்திர சம்பிதாயங்கள் இன்றி, நம்பிக்கைகளின் மீது ஏறி அமர்ந்திருக்கின்றன. பெரிய, பெரிய கோவில்களின் சிவப்பு மை அறிவுறுத்தல்களை பின்பற்றி வழிபாடு செய்து, "அமைதி பேணவும்" என்றெழுதிய கோவில் வாசலினூடாக வரும் போது கிடைக்கின்ற அமைதிக்கும், கட்டுப்பாடுகள் ஏதும் இன்றிய குல தெய்வ கோவில்களின் அமைதிக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. கட்டுப்பாடுகள் அற்ற அமைதி என்பது, சிவப்பு மையின் மேற்கோள் குறிகளிற்கு அப்பாற்பட்டது என பொருள்படும்.
சேர்ட் ஏதும் அணியாத கொழுப்பற்ற வெற்று மேலாக, வெற்றிலையை இரண்டாய் கிழித்து உள்ளே சீவலை வைத்து மடித்தவாறு சம்பர் பேச ஆரம்பித்த போது, கோவில் மாடப்புறாக்களின் குறுகுறுப்பு நின்றிருந்தது.
இளமைக்கால சம்பரின் பரம்பரைத்தொழில் தேன் எடுத்தல். ஊருக்குள் வேறு நிறைய இடங்களில் தேன் வாங்க கூடியதாக இருந்தாலும், சம்பர் பரம்பரையின் கலப்படமில்லாத தேனுக்கு இருக்கும் கிராக்கி வேறு எவரின் தேனுக்கும் இருக்கவில்லை. வேறு இடங்களில் கிடைக்கும் தேன் என்பது சம்பர் பரம்பரை தேனுடன் 1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட சீனிப்பாணிகளாவே இருந்தது. வயது மூப்பான அனுபவஸ்தர்கள் தேனை மணந்து பார்த்து விட்டு சொல்லுவார்கள் அது கலப்படமா இல்லை தூய சம்பர் பரம்ரையா என.
பரம்பரை, பரம்பரையாக ஊரின் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த காலப்பகுதிளில் தேன் கிடைக்கும் என்ற இரகசியம், சம்பரின் கொள்ளுப்பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து செவிவழியாக கடத்தப்பட்டு, அதனையே அவர்கள் குலத்தொழிலும் ஆக்கி கொள்ள, அவர் தூய பரம்பரைக்கு ஊர் வைத்த அடைமொழி பெயர்தான் பிசினார். "பிசினார் பரம்பரைத்தேன் பிசின் போல" ஒட்டிக்கொள்ளும் என வெளியே மக்கள் பெருமையாக அர்த்தப்படுத்தி கொண்டாலும், உள்ளர்த்தம் அந்த பரம்பரையின் பிசினாரி தனத்தையே மறைமுகமாய் குறித்து நின்றது.
"பிசினார் வீட்டு கரண்டி கூட பிசினால் செய்தது" என பழமொழியாக சொல்லிக்கொள்ளுமளவிற்கு அந்த பரம்பரையின் பிசினாரி தனம் பிரபல்யமானது. சம்பர் பரம்பரை கால, காலமாக தேன் வழங்குவதற்கு ஒரு அளவுகோல் வைத்திருந்தது. மூன்று மணல் கடிகாரங்கள், சம்பர் வீட்டு முன் திண்ணையில் எப்போதும் உறங்கு நிலையில் இருக்கும். கால்போத்தல் கடிகாரம், அரைபோத்தல் கடிகாரம், முழுப்போத்தல் கடிகாரம். தேன் கேட்டு வருபவன் கால் போத்தல் கொண்டுவந்திருக்கும் பட்சத்தில், அதற்குரிய மணல் கடிகாரம் அவன் கண் முன்னாக தலை கீழாக குத்தி நிறுத்தப்படும். மணல் மேலிருந்து கீழாக கொட்ட ஆரம்பிக்கும். பிசினார் கரண்டியால் தேன் அண்டாவை ஒரு துழாவு, துழாவி எடுத்து போத்தலினுள் தேனை விட முயற்சிப்பார். ஈர்ப்பு விசை இளித்து கொள்ளுமளவிற்கு பிசினாரின் தேன் போத்தலினுள் வழியாது, பசை பிடித்தாற் போல கரண்டியுடன் ஒட்டி நிற்கும். பிசினார் தேன் வாங்க வந்தவனின் பரிதாப முகத்தை ஒருமுறை பார்த்தவாறு, மெதுவாக கரண்டி பின்பக்கத்தில் சுட்டுவிரல் சேர்த்து ஒரு சுண்டு வைக்க தேன் மெதுவாக இளகி போத்தலினுள் சேரும். மணல் கடிகாரம் கொட்டி முடிவதற்குள் ஒரு கால் போத்தலினுள் எவ்வளவு தேன் சேருகிறதோ அதுவே பிசினாரின் கால் போத்தல் தேன். அது சில வேளைகளில் கால் போத்தலின் மூடியளவிற்குதான் இருக்கும். எதிர்த்து யாரும் திருப்பி கேள்வி கேட்பதில்லை. கேட்ட யாரும் மறுபடியும் பிசினார் வீட்டு படலையினுள் கால் வைத்த சரித்திரமும் இதுவரை இல்லை. பிசினார் என்ற அடைமொழியை நியாயப்படுத்துவதற்கு இதை விட வேறு காரணமும் எவருக்கும் தேவைப்படவில்லை.
பிசினார் வீட்டின் முன்னால் தினமும் ஒரு வரிசை தேனுக்காக எப்போதும் கால்கடுக்க நிற்பதனை காணலாம்.
அந்த வரிசையின் காரணகர்த்தா "ஊடு" துரை என அறியப்படுகின்ற ஆயுர்வேத சின்னத்துரை. துரைக்கு 55 வயதுக்கு மேலாகிறது. முற்றாக நரைத்த கண்புருவங்கள். வலது புருவத்திற்கு மேல் ஒரு வடு. தினமும் சவரம் செய்யப்பட்ட முகம். அதில் ஒரு +2 டயப்ரர் அளவில் மூக்கு கண்ணாடி. எப்போதும் மூக்கு கண்ணாடியின் பின்பகுதி இரண்டும் ஒரு தடித்த நூலால் இணைக்கப்பட்டு வழுக்கை விழுந்த தலையின் பின்பக்கத்தில் இறுக்கமாக கட்டப்பட்டிருக்கும்.
துரையிடம் தடிமன் என்று போகின்றவர்களிற்கும் சரி, நடக்க முடியாமல் தள்ளாடி போகின்றவர்களிற்கும் சரி, துரை கொடுப்பது ஒரே ஒரு சாம்பல் நிற கடதாசியில் சுற்றிய சரை மாத்திரமே. அதனுள் இருக்கும் பொடியை காலை மற்றும் மாலை சாப்பாட்டின் பின், ஒரு தீக்குச்சி அளவு எடுத்து தூய தேனோடு சாப்பிட்டால் மூன்று நாட்களில் முப்பிணியும் குணமாகும். வெல், ஊர் மக்கள் தூய தேனுக்கு எங்கே போவார்கள், பாவம், பிசினாரின் வீட்டு ஒழுங்கையில் தினமும் வரிசைகட்டுவார்கள்.
துரைக்கு வெளிச்சம், இருட்டு என இரண்டு வாழ்க்கை இருந்தது. காலை எட்டிலிருந்து, மாலை ஐந்து வரை வெளிச்சத்தில் துரையிடம் யாரும் மருந்து வாங்கி கொள்ளலாம். ஆறு மணிக்கு பிறகு சாதாரணமாய் யாரும் துரை வீட்டு பக்கம் கால் வைப்பதில்லை. இருட்டான சில அசாதாரணங்களினை மேற்கொள்ள விரும்புவர்கள் மட்டும் துரையின் முன்னனுமதியுடன் சந்தித்துக்கொள்ள வருவார்கள். இவையெல்லாம் துரையின் நிரூபிக்கப்படாத கறுப்பு பக்கங்கள். யாரும் அதனைப்பற்றி பேசிக்கொள்வதில்லை. அதனால் இங்கே விவரமாக எழுதிக்கொள்ளவும் முடியாது.
ஒரே ஒரு எளிய சம்பவம் வேண்டுமானால் உதாரணத்திற்கு சொல்லி கொள்ளலாம். துரை மருந்து வழங்க தாமதாகிய ஒரு நாளில், பொறுமை இழந்த ஒரு நடுத்தர வயதான், "ஊடு" துரை என முகத்திற்கு நேராகவே முரண்பட்டு ஏசிவிட, வெளிச்சத்திலிருந்த துரை ஏதும் அலட்டிகொள்ளவில்லை. ஆனால், அது நடந்த மறுநாளிலிருந்து அடுத்த ஏழு வாரங்கள், நடுத்தர வயதானின் தொண்டை கட்டி பேச முடியாமல், ஒருகால் இழுத்து படுத்த படுக்கையாகிவிட, குடும்பம் காரணமறிந்து துரையின் காலில் வந்து விழுந்தது. "பழி மன்னிக்கலாம், பகை மறக்க முடியாது" என துரை முறுவலித்தவாறு வழமையான சாம்பல் நிற சரையினை அவர்களிற்கு கொடுத்தனுப்பியதாகவும், அன்றிலிருந்து யாரும் ஊ... துரையினை மன்னிக்க "YOU KNOW WHO" துரையினை அவ்வாறு மனதினுள் கூட சொல்லிக்கொள்வதில்லை என்பதுமே ஊரறிந்த நிஜம்.
இது இவ்வாறிருக்க பிசினார் பரம்பரையில் காலம் உருண்டோடி சம்பரின் தந்தை தொழிலை கையில் எடுத்துக்கொண்ட போது ஊரினுள் இன்னுமொரு முக்கிய சம்பவம் நடந்தது.
"கேசு" என்ற கார்த்திகேசு பிசினாரிடம், அதாவது, சம்பரின் தந்தையிடம் தேன் வாங்கும்பொருட்டு மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து ஒரு முழுப்போத்தலை முன்னால் வைத்ததாகவும், பிசினார் தலையை நிமிர்ந்து கேசுவை ஒரு நோட்டம் விட்ட பின்னர், முழுப்போத்தல் கடிகாரத்தை தூக்கி முன்னால் குத்திவிட்டு தேன் அண்டாவை துழாவியவாறு வாயினுள் ஏதோ முணுமுணுத்து கொண்டாதாகவும் ...அது கலப்படக்காரனுக்கும், கள்ளனுக்கும், முழுப்போத்தல்.. என்று கேசுவின் குடும்ப மானத்தை கேவி இழுத்ததாகவும் பின்னைய நாட்களில் சம்பரினால் அறிய முடிந்தது. நீண்ட நாட்களாகவே ஊரினுள் கலப்படத்தேன் வியாபாரம் அதிகரித்ததன் தாக்கம். பிசினாரை அன்று அவ்வாறு பேச வைத்திருக்கலாம்.
ஆனால், கால் கடுக்க பல மணி நேரமாக முதலில் துரை வீடு, பின்னர் பிசினார் வீடு என நின்ற கேசுவிற்கு போத்தலின் அடிப்பகுதியில் தேன் என்று தெரியுமளவிற்கு, ஒரு இறையளவு தேன் சேர்ந்த போது கடிகார மணல் நின்று கொண்டதும், பிசினார் "ணங்" என்று கரண்டியினை மீளவும் அண்டாவினுள் போட்டு, போத்தலினை மூடி முகத்திற்கு நேராய் நீட்டியதும், அட்ரலின் அழுத்ததினை ஏற்றிவிட்டிருந்தது. விளைவு, போத்தலினை பிசினாரிடம் இழுத்து வாங்கி வீட்டு முன் முற்றத்தில் போட்டு உடைத்த பின்னர் கேசு கூறிய வார்த்தைகள் வருமாறு,
"பிசினாரி பிண்டமே, உன் குலத்தொழிலையே அழித்துக்காட்டுகிறேன் பார்"
சபதம் எடுத்து போன கேசு ஆறு மாதங்களில் தேன் வியாபாரம் செய்யத்தொடங்கினான். வயது மூப்பான அனுபவஸ்தர்கள் கேசுவின் தேனை மணந்து பார்த்து விட்டு ஒரிஜினல் என்று முத்திரை குத்தினார்கள். பிசினார் வீட்டு ஒழுங்கையில் கூட்டம் குறைய தொடங்கியது.
அதிரடி சலுகை,
"முழுப்போத்தல் கடிகார கால அளவில் கால்போத்தல் தேன் பெற்றுக்கொள்ளலாம்"
என பிசினார் வீட்டுப்படலையில், கரியால் கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்தும் பார்த்தார். கூட்டம் வரவில்லை. திடீரென்று எங்கிருந்து கேசுவிற்கு தேன் வந்தது. மிஞ்சி, மிஞ்சி போனால் ஓரிரு இடங்களில் கிடைத்திருக்காலாம். வியாபாரம் செய்யுமளவிற்கு எப்படி, என்று பிசினார் மண்டையை பிசைந்து கொண்ட போது, ஊர் வாயின் சத்தம் காற்றிலே கலந்து வந்தது.
கேசு வீட்டில் தேன் இல்லை, தேனீக்களின் வீட்டில்தான் இப்போது கேசு குடும்பமே இருப்பதாக.
ஆர்வம் தாளாத ஒரு நாளில் இருட்டிய பின்னர், கேசுவின் வீட்டு பின் வடலி வேலியை கிழித்து நோட்டம் விட்ட பிசினாருக்கு மண்டை கிறுகிறுத்து போனது. வீட்டைச்சுற்றியும் எல்லா மரங்களிலும் தேன் வதைகள் அங்கும் இங்குமாய் தொங்கியது. கேசு தேனீ பண்ணை போட்டிருந்தான். தேனீக்களின் "நொய்ங்.." என்ற ரீங்காரம் பிசினாரின் காதுக்குள் ஏதோ செய்தது.
காடு, மேடுகளாக திரிந்து, அமாவாசை இருட்டுக்களில், உயரிய மரங்களின் கிளைகள், பொந்துகள் என துழாவி புகை விட்டு சேகரித்த பிசினாரின் தேனுக்கான மதிப்பும், குலத்தொழிலும் கேசுவினால் கேள்விகுறியாக்கப்பட்டது. அந்த கவலையில் படுக்கையில் விழுந்த பிசினார், மூன்றே மாதங்களில் மூப்பெய்தினார்.
சாகும் தறுவாயில் சம்பரின் காதுக்கருகில் தந்தையார் சொன்னது இன்னும் சம்பருக்கு நினைவில் உள்ளது.
"வதையரை விட்டு விடாதே"
ஊர் சேர்ந்து முடிவெடுத்து, கேசு குடும்பத்திற்கு "வதையர்" என காலவோட்டத்தில் அடை மொழி வழங்கியது. அதே வேளையில் தந்தையின் இறுதி வார்த்தைகளை மனதில் ஒப்பித்துக்கொண்டு தொழிலை பொறுப்பெடுத்துக்கொண்ட சம்பருக்கு விதி கோதையாக வந்தது. கோதை கேசுவின் இளையமகள். கோதை என்ற பெயர் வைத்தவர்களை விவரிக்க வேண்டிய தேவையில்லை என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
ஒரு நாளின், அந்தி வேளையில் குலதெய்வ கோவில் பின்னாலுள்ள நாவல் மரத்தின் பதிவான ஒரு கிளையில் சம்பருடன் கைகோர்த்தபடி அமர்ந்திருந்த கோதை "நான் என்ன செய்ய முடியும்" என்ற போது சம்பர் "என் வீட்டுக்கு வந்து விடு", ராணி வந்தால் போதும், மொத்த பணியாளர்களும் பின்னாலயே வருவார்கள் என்று முணு முணுத்துக்கொண்டார்.
சம்பருக்கும் கோதைக்குமான காதல் ஒரு கொம்புத்தேனில் ஆரம்பித்தது. கேசு பிசினாரின் முன் சபதம் எடுத்து சென்ற பின், இரண்டு மாதங்கள் படுக்கையில் கிடக்க நேரிட்டது. "பிசினாரை பகைத்தால் பிணி வந்து சேரும்" என்று சனம் அடுத்த பழமொழியினை உருவாக்கியிருந்த நேரமது. ஒரு நாள் கேசுவும், மகளுமாக பிசினாரிடம் மீண்டும் வந்திருந்தார்கள். அதுவும் கொம்புத்தேனிற்காக. அந்த நேரத்தில் கேசுவின் மனதில் போட்ட சபதம் கூட ஞாபகம் இன்றி, கதைக்க முடியாமல் நோயினால் முடங்கி போயிருந்தான். கோதைதான், பிசினாரிடம், தந்தையின் நோய் தீர்க்க கொம்புத்தேன் வேண்டும், துரையின் மருந்து அதற்கு மட்டும்தான் வேலை செய்யும் என்ற போது, பிசினார் மனதினுள் முறுவலித்து கொண்டார். பழைய வன்மத்தை புதுப்பித்தவாறு "படவா கொம்புத்தேன் வேணுமா" என கேசுவை பார்த்து சிரித்தவாறு கேட்டது, கேசுவின் காதில் "முடவா கொம்புத்தேன் வேணுமா" என்றதாய் விழுந்தது. கேசுவினால் பேசிக்கொள்ள முடியவில்லை.
கொம்புத்தேன் முடிந்து விட்டது, புதிதாய் சேகரித்து சம்பரிடம் கொடுத்தனுப்புவதாய் வாக்களித்து, இருவரையும் அனுப்பி வைத்தார். கொம்புதேன் போத்தலுடன் கோதையை சம்பர் சந்தித்ததே, முதல் சந்திப்பு. பார்வையில் தேன் ஒழுகும் என்பார்களே, சம்பர் அதை அன்றுதான் நேரில் கண்டார். சம்பரின் அடி வயிற்றில் வண்ணாத்துப்பூச்சிகள் பறந்தது. பறந்த வண்ணாத்துப்பூச்சிகள் கோதையை சுற்றிக்கொள்ள, இரண்டாவது, மூன்றாவது என நாவல் மரத்தடியில் தொடர்ச்சியாக சந்திப்புக்கள் ஏற்பட்டது.
அதே நேரத்தில் சம்பரின் வெளி உலகில் எல்லாமே தலை கீழாக மாறியது. பிசினார் குலம் அழிந்து, வதையர் குலம் தழைத்து என எல்லாமே. சம்பருக்கு அந்த உலகு மறந்து போனது. கோதைக்கும்தான்.
காதல் சம்பரை முற்றாகவே மாற்றி விட்டிருந்தது. சம்பர் பரம்பரை விதிகளை தகர்த்தெறிந்து, கால அளவின்றி, போத்தலில் தேன் கொடுக்க தொடங்கிய போது, சனம் மீண்டும் சம்பரிடம் வந்தது. வதையரின் தேன் ஒரிஜினல்தான் ஆனால் ஆர்டிபிசியல் என ஒரு கூட்டம் பேசாமல் பேசிக்கொண்டது.
இதெல்லாம் கேசுவின் கோபத்தை தொண்டை வரை ஏற்றி விட்டாலும் மூக்கு நுனிக்கு கொண்டு வந்தது என்னவோ, நாவல் கிளை காட்சிதான். வன்மத்திற்கு பெயர் போன வதையர், அடுத்ததாய் எடுத்த முடிவு கொஞ்சம் சில்லிட வைக்க கூடியது.
துரைக்கு நன்கு பழக்கமானவர் மூலமாக ஆறு மணிக்கு பிறகு ஒரு அப்பொயின்ட்மென்ட் எடுத்திருந்தார். துரை, வதையரை நேரில் கண்ட போது, "அட வதையரா" பல காலத்தின் பின் என ஆச்சரியப்பட்டுக்கொண்டார். இருட்டில் துரையின் முகம் மேலும் இருட்டாய் மாறிக்கொண்டது.
வதையர் துரையிடம், சம்பரை இல்லாமலேயே ஆக்க வேண்டும் என கோபத்தில் கொந்தளித்த போது, துரை இருட்டில் விதிகளை மீண்டும் நினைவு படுத்தினார். ஈற்றில் கோதைக்கு "சம்பர்" யார் என்றே மறந்து போக செய்ய வேண்டும் என்று மனதிலுள்ளதை பட்டவர்த்தனமாய் கேட்ட போது, துரை சிரித்துக்கொண்டே சாம்பல் நிற சரையை கொடுத்து உன் வீட்டு பண்ணைதேன் இதற்கு பலனளிக்காது, அசல் கொம்புத்தேனுடன் மூன்று நாள் கலந்து கோதைக்கு கொடு, பிறகு பார்க்கலாம் என்றார்.
வதையர் அதனை வாங்கியவாறு வீடு நோக்கி நடக்க, கோதை வீட்டில், சம்பர் முதல் சந்திப்பில் கொடுத்த கொம்புத்தேன் மிகுதி, அந்த சாம்பல் நிற சரைக்காக காத்து கிடந்தது.
############
சம்பர் வசந்த மண்டபத் தூணை பிடித்தாவாறு எழுந்து கொண்டார். "நேராமாச்சு கோதை தேட வெளிக்கிடும். வாற கிழமை பார்ப்பம்." இன்னும் கன கதை கிடக்கு இப்டி.
நிற்க...அப்படி என்றால்...
பொட்காஸ்டருக்கு, மடப்பள்ளித்தூண் ஒரு தடவை அசைந்தது போல உணரமுடிந்தது.
என்ன நடந்திருக்க கூடும் என எல்லா நிகழ்தகவுகளும் மண்டையினுள் குறுக்கும் மறுக்குமாய் ஓடியது.
- "YOU KNOW WHO" துரையின் பலமான சாம்பல் சரையை தாண்டி, சம்பரும் கோதையும் சேர்வதற்கு இந்த கதையின் ஏதாவதொரு இடத்தில் மாயம் ஏதும் நிகழ்ந்திருக்க வேண்டும். துரை சம்பருக்கு உதவி செய்ய ஏதும் காரணம் உண்டா?
- இல்லை துரையின் இருட்டு வேலைகள் ஏதுமே உண்மை கிடையாது. எல்லாமே உல்டா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
- ஒரு வேளை அது தூய கொம்புத்தேன் கிடையாதா? சாம்பல் சரை அதனால்தான் பலனளிக்கவில்லையா?
- இவை எதுவும் இல்லை என்றால் அவர்களின் காதல் அவ்வளவு புனிதமானதா ?
சம்பர் கோவில் வாசலை தாண்டுவதற்கு இடையில், கடைசி ஒரே ஒரு கேள்வி கேட்க முடிந்தது.
"அது தூய கொம்புத்தேன் இல்லைதானே"
"அது சம்பர் பரம்பரை தூய கொம்புதேன்தான், இல்லாவிட்டால் அந்த நடுத்தர வயதான் கேசு பிழைத்திருக்கவே மாட்டான்."
நடுத்தர வயதான் கேசு.!!
துரை வீட்டிலும், பிசினார் வீட்டிலும் ஒரே நாளில் சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும். நோட்டில் பதிவான பொட்காஸ்டை இரண்டாவது தடவையாக வாசித்து, ஆராய்ந்த போது, மொத்த டைம்லைனும் நேராகியது.
அப்படி என்றால் "பழி மறந்தாலும், பகை மறக்காத துரை" தான் காலை வாரி விட்டதா?
அதனை கேட்பதற்கு இடையில், சம்பர் கோவில் தாண்டி தொலைவில் போய்கொண்டிருந்தார்.
டொட்.
############

No comments:
Post a Comment