About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Sunday, January 24, 2016

கறுப்பு பலகை கதைகள்

ஐஞ்சு இருக்கும் இல்லை நாலரை இருக்கும்.அந்த வயதிலேயே இழுத்துக்கொண்டு போய் அமத்திவிட்டார்கள்.முன்னால் மேசை,அதற்கு முன்னால் டீச்சர்,டீச்சருக்கு பின்னால் கரும்பலகை,வலக்கைப்பக்கமாயும் சுவரில் கருப்புபலகை,இடக்கைப்பக்கமாயும் கருப்புத்தான்.பத்தாததுக்கு மூலையில் குட்டியாய் ஒரு பலகை.வாசலுக்குள்ளால் வந்த வெளிச்சத்தை தவிர எல்லாமே இருட்டாயும் கருப்பாயும் இருந்தது எனக்கு.
"பயமா இருக்கா?"
அனுச்சித்ரா அறிமுகம்.கேள்விகுறி போட்டு ஒரு வியப்புக்குறி அறிமுகமமான மகத்தான கணப்பொழுது அதுதான்.
"ஆரம்பத்தில எனக்கும் அப்டித்தான் இருந்திது!'ப' வரிசை எழுதேக்க எல்லாம் 'ப்பூ' என்டு பறந்திட்டு.எல்லாம் டீச்சரே எழுதி விடுவாங்க,அத பாத்து கொப்பில எழுதினா போதும்.கரும் பலகையை மட்டும் வடிவா கவனி"
"அ,ஆ எழுத தெரியும்தானே"
"ம்,ம்"
"க்ளுக்"

பதினாலு வருச படிப்பு வாழ்க்கைல ஒருதன் அதிக நேரம் பார்த்த அசையாத பொருள் எது என்றால் கரும்பலகைதான்.கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பெயின்ட் அடித்திருந்தாலும் அதற்கு பேர் கரும்பலகைதான்,பிளாக் போட்தான்.பச்சைப்பலகை இல்லை.

பலகை என்டு சொன்னாலும் நேர்சரியில் பார்த்த அந்த குட்டி போட்டை தவிர ஸ்கூலில் நான் பார்த்த அத்தனையும் கரும் சுவர்தான்.எங்கே சும்மா சுவர் இருந்தாலும் கருப்பு பெயின்டை எடுத்து அடித்து விட்டிருப்பார்கள் எழுத,படிக்க பயன்படுமே என்று.கிணத்துக்கு பக்கத்தில் துலாவைத்தூக்கி வைக்க குட்டியாய் ஒரு சுவர் எழுப்பியிருந்தது,அதில் கூட பச்சைக்கலரை இழுத்து நற்சிந்தனை என்று எழுதியிருந்தது.அந்த பகுதி வகுப்பை விட்டு வேறு வகுப்புக்கு போகும் வரைக்கும் அதிலே நான் பார்த்த நற்சிந்தனை,நாலைந்து பேருடைய...டூப்ளிக்கட் நேம்ஸ்,இடது மூலையில் காக்கா,நடுவில் மாமா,அடியில் குண்டுக்குண்டு எழுத்தில் நிர்வாகம்- குண்டுமணி.மொத்ததில் அந்த கரும்பலகை கற்றுதந்த நற்சிந்தனை குண்டுமணியை மட்டுமில்லை அவன் பேரைக்கூட யாரும் தொடமுடியாது.

இந்த கருப்பு பலகைக்கும் எனக்கும் இடையில் ஒரு உறவுப்பாலமே இருந்தது.மூன்றாம் ஆண்டில் நெடும்பிரித்தல் கணக்கை போட்டில் போட்டுவிட்டு செய்யச்சொல்லி ஐஞ்சு பேரை பிடித்துவிட்டபோது வரிசையில் மூன்றாவதாய் நெத்தியை பிளாக் போட்டில் போட்டு தேய்த்துக்கொண்டு சோக்கை உருத்தியபடி யோசித்த போது பிரபஞ்சக்கருந்துளையெல்லாம் எனக்கு அந்தபோட்டில் தெரிந்தது.



ஒவ்வோரு போட்டும் ஒரு ரகமாய் இருக்கும்.சிலது பெயிண்ட் எல்லாம் அள்ளுப்பட்டு கறுப்பில பிங் பவுடர் அடித்ததுப்போல சைனிங் பண்ணும்.அதில சோக்கை வச்சு எழுதேக்க  "கிறீச்" என்டு வாற அந்த சவுண்டுக்கு மயிரெல்லாம் குத்திட்டு உடம்பு கூசும்.பெட்டையள் எல்லாம் ஒருக்கா ஷ்ஷ்.. என்டுங்கள். வகுப்பு வாத்தியார் அதுக்கு ஒரு கதையை டபுள் மீனிங்கில அடிச்சு விடுவர்,விளங்கினவன் விழுந்து சிரிக்க விளங்காதவன் கணக்கை செய்வான்.சில போட்டுகளில எந்த டஸ்ரருக்குமே அழியாத சில வெள்ளைப்புள்ளிகள் கிடக்கும்.அது சில வேளைகளில டீச்சர் எழுதுற வசனங்களில குற்று போட்டு வேற லெவல்ல பொருள் தரும்.அத பாத்துட்டு எங்களுக்கென்றிருந்த மலர் டீச்சர் சிரித்து அதை அழிக்க டிரை பண்ணிணாலும் அது அழியாது,டீச்சரின் அந்த சிரிப்பும் மாறாது.
அப்டியான புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க நாங்கள் பாவித்த ஒரே ஒரு கிளீனர் செம்பருத்திப்பூ.ஒரு பை நிறைய பூ கொண்டு வந்து போட்டில உரஞ்சி அழிச்சு விட்டா அது சும்மா ஜகஜோதியா பிரகாசிக்கும்கொஞ்ச நாளுக்கு .இத தவிர போட் மெயின்ரெயினிங்கில மொனிட்டர் கிழமைக்கு ஒருக்கா என்டாலும் அத தண்ணி போட்டு அழிச்சுவிடுவான்.அதே நேரம் ஒரு வகுப்பில ஒரு டஸ்ரர் ஒருகிழமைக்கு மேல இருக்காது.நாய் புடுங்கின மாதிரி உள்ள அடைஞ்ச துணியெல்லாம் வெளில சிதறும் மட்டும் அதால எறிபடுவாங்கள்,பட்டிருக்கன்.

வகுப்பில இருக்கிற நாலு சுவர்ல குறைஞ்சது மூன்டு கறுப்பாவோ இல்லை பச்சையாவோ இருக்கும்.அதில ஒன்னில பாட டைம்டேபிள் எழுதியிருக்கும்,மற்றதில கலண்டர்,கணிப்பீடு,எக்செட்ரா. மெயின் பிளாக் போட்டில நடுவில 'உ',அதுக்கு கீழ திருக்குறள் இல்லை பொன்மொழி, ஒரு பக்க மேல் மூலைல தரம், திகதி,மாணவர் தொகை,வரவு எல்லாம் இருக்கும்.இத தாண்டி மற்ற மூலையைப்பாத்தா அதில நாலைஞ்சு இடம் எண்ணெய் பூசின மாதிரி சைன் பண்ணும்,அது உண்மைல மொனிட்டரின்ர தலைல கிடக்கிற எண்ணெய்.கதைத்தவர்கள் பேர் என்டு எழுதிட்டு அதுக்கு பக்கத்தில சிங்கன் தலையை சாய்ச்சுக்கொண்டு ஸ்டைலா நிப்பர்,அந்த நேரத்திலதான் அவற்ற கொழுப்பும்,தலை எண்ணெய்யும் போட்டில படியும்.அது பிறகு எந்த பூ வுக்கும் போகாது.அத போல பின்னால எழுதின டைம்டேபிளில எட்டாம் பாடம் எல்லாத்தையும் எங்கட தலை தின்டிருக்கும்.

இப்டி இருக்கிற இந்தக்கரும்பலகை வாழ்க்கைல படிப்பிச்ச வாத்திமார்,டீச்சர்மாருக்குள்ள ஒவ்வோருத்தருமே தங்களுக்கெண்டு ஒரு ஸ்டைல் வைத்திருந்தார்கள்.
கிஸ்டரி வாத்தியார் வகுப்புக்கு நடுவில நிப்பார்
"பராக்கிரம பாகு கோட்டையை ஆட்சி செய்த காலத்திலே மேற்கொண்ட சமய சேவைகள் ஆறு "
என்டுட்டு ஒவ்வொன்டையும் சொல்லிட்டு போய்  போட்டில  சரி போட்டிருப்பார்.எண்ணிப்பார்த்தால் எட்டு சரி இருக்கும் மொத்தமாய். கடைசிக்காலம் வரைக்கும் அவர் போட்டில் எழுதியது சரி,பிழை,ஸ்டார் இந்த மூன்றும்தான்.
அந்தாளாச்சும் பரவால்ல சமய வாத்தியார்,பாடத்தை வாசிப்பார்."சம்பந்தரின் தல யாத்திரை" போட்டில் சோக்கால் ஒரு குத்து,அவரின் "அற்புதங்கள்"... நாலு குத்து.போட்டை அதிகமாயும் அழகாயும் பயன்படுத்தியது கணித வாத்தியார்.அவருக்கு போட்டிலே இரண்டு கையாலும் எழுதுகின்ற ஒரு டலண்ட் இருந்தது.வலக்கையால் எழுதும் போது சேர் மறைக்குது 'இடக்கை' என்றால் டக்கென்று மாத்தி எழுதுவார்.இதெல்லாத்துக்கும் மேலால எங்கட மலர் டீச்சர்.நான் எதுவுமே சொல்ல தேவையில்லை...

அதே நேரம் பொடியள் நாங்கள் இந்தக் கரும்பலகையை சில கறுப்பு விசயங்களுக்கு பயன்படுத்தினம்.
வகுப்புக்குள் கிரிக்கெட் அடிக்கும் போது ஸ்கோர் போடவும்,எங்களுக்குள் இருந்த பிக்காசோ டாவின்சியை வெளியில் கொண்டுவரவும்,வைரமுத்துவுக்கு சவாலாய் கவிதை எழுதவும் தேவையான பேரை எழுதி ப்ளேம்ஸ் போட்டு பார்க்கவும் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.எல்லாம் எழுத முடியாது.

இதெல்லாத்துக்கும் மேலால டியூசன் சென்டர்களில இருக்கிற பிளாக் போட்டுக்கள் தனி ரகம்.
பயோ வகுப்பு ப்ளாக் போட்டின் கீழ் மூலையில் இரண்டு கையும் போககூடியளவு பெரிய ஓட்டை இருந்தது.அதற்குள்ளால் பார்த்தால் எதிர் வகுப்பில் இருக்கும் ஆகாயாவின் தலையும் இரட்டைப்பின்னலும் தெரியும்.அடிக்கடி ஒரு பக்க பின்னலை தூக்கி முன்னால் விட்டு கொள்வது தெரியும்.பின்னலில் செருவி இருக்கின்ற நித்திய கல்யாணி தெரியும்.அருகில் இருப்பவளோடு கதைக்க திரும்பும் போது ஒரு பாதிநிலா தெரியும்.இதெல்லாத்துக்கும் மேலால படிப்பது தெரிய கொஞ்சம் இல்லை நிறையவே கஸ்டமாய் தெரிந்தது.

இங்கே எங்கட தேவைகளை சொல்லுற கருவியாய் பயன்பட்டதும் இந்த கரும்பலகைகள்தான்.சேர்
"வகுப்பை இன்று வேளைக்கு விடவும்,ஐஞ்சு மணிக்குமேல் இருக்க முடியவில்லை நுளம்பு இரத்தமே இல்லாத எங்கள் உடம்பில் தோலை கடிச்சு உறிஞ்சுகிறது."
"சாப்பிடுவதற்கு ஒரு குட்டி பலாப்பழம் தரவும்+குட்டிப்பலாப்பழத்தின் படம்."
என்று ஏகப்பட்ட விசயங்களை மொட்டையாய் எழுதி வைக்க பயன்பட்டது இந்த போட்டுகள்தான்.

ஏஎல்லுக்கு படித்த இடத்தில்
மணியம் சேர்,குகன் சேர்,செந்தில் சேர்.மூன்று பேரும் பிளாக்போட்டை பயன்படுத்தும் விதம் ஒரு தனிப்பாணியாக இருந்தது.

மணியம் சேர்: - போட்டை தேவைக்கு ஏற்ப இரண்டாய்,மூன்றாய்,நாலாய் கோடுபோட்டு பிரித்து எழுதுவார்.எப்ப வகுப்புகுள் வந்து இருந்தாலும் கதை விளங்கும்.எழுதிவிட்டு ஒரு கையை போட்டுக்கு மேல போட்டுக்கொண்டு தூண்ல சாஞ்சு நிப்பார்.இத்தனை வருசத்தில் கிட்டத்தட்ட ஒரு டன் கணக்கில் சோக்கால் போட்டில் எழுதியிருப்பார் எப்படியும்.

அதேநேரம் அங்கால
குகன் சேர்:- போடுங்கடா தலையங்கம் "சடத்தின் இயல்புகள்" என்டுட்டு ஒரு பெரிய 'ச' இடைல நெளிநெளியா இழுத்து ஒரு பெரிய 'இ' நெளி... நெளி.லேட்டா வர்றவன் அத பாத்து கொப்பில எழுதேக்கே ஒரு "சவத்தின் இயல்புகள்" என்டுதான் எழுதுவான்.அவர் கணக்கு செய்றதில இருந்து படம் கீர்ற வரைக்கும் அத்தனையும் ஸ்டைல்தான்.

எதிர்த்தாப்புறத்தில
செந்தில்சேர்:- வந்து எழுததொடங்குறதுக்கு முதல் போட்டை ஒரு கையால் தடவுவார்.பிறகுதான் எழுததொடங்குவார்.போட் இடைக்கிட கட்டவிழ்ந்து ஆடும்.அத முதலே பார்த்து இழுத்துக்கட்டி விடணும்.இல்லாட்டி முன் வாங்கில இருக்கிற ஆளுக்கு பல்லு ஆடுறது போல இருக்கும்.போட்டுக்கு பின்னாலயும் அப்பப்ப ஏதாவது எழுதி வைப்பார்.போகும் போது பார்த்தால் வெறும் நம்பர்தான் கிடக்கும்.சிலர் அது எத்தனை பேர் வரவு என்டு எழுதி கிடக்கு என்டும்,சிலர் அடுத்த எக்சாம் டேட் என்டும்,சிலர் அதொன்டுமில்ல அவர் சும்மா கணக்கு செய்து பாத்திருக்கார் என்டும் கதைச்சுக்கொண்டாலும் கடைசி வரைக்கும் அந்த நம்பர் எல்லாம் ஏலியன்ஸ் அனுப்பின சீக்ரெட் கோட் ஆவே இருந்திச்சு.டீக்கோட் பண்ணவே முடியவில்லை.

டஸ்ட் பறக்குது,சுவாசப்பிரச்சினைன்னு ப்ளாக்போட்டை வைட் போட்டாவும் சோக்கை மார்க்கராவும்
அப்டேட் பண்ணியது உலகம் இருக்கட்டும்...

இப்படி "கரும் பலகையை வடிவாய் கவனி" என்று ஆரம்பத்தில் அனு சொன்னதை அவ்வளவு காலமும் செய்து கொண்டிருந்துவிட்டு கடைசிநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வெளிக்கிடும் போது வகுப்பு பிளாக் போட்டில்
"GOOD BYE FRIENDS " என்று எழுதியிருந்தது.அருகில் நின்றவனிடம்
"யாருடா இதை எழுதினது என்றேன்?"
"நான்தான் என்றது போல இருந்தது"
"அட! உனக்கு உயிர் இருக்கா என்ன?"

                      #######











#அற்பபிறவி#

No comments:

Post a Comment