About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Tuesday, August 6, 2019

கருவாட்டு காவியம்

சந்தைக்குள் அதிகம் நுழைவது கிடையாது. அதிலும் மீன் சந்தைப்பக்கம் மிக அரிது. இருந்தாலும் செங்கம்மாவிற்காக அதனுள் போக வேண்டிய சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்பட்டது. 

மீன்சந்தைக்குள் நுழைந்து வாசலின் இடது பக்கமாக திரும்பினால் செங்கம்மாவின் வியாபார ஸ்தலம் தெரியும். மொத்த வியாபாரிகள் வரிசையின் முதலாவது இடம். இடது பக்கம் திரும்பாமலே யாரும் நேரே பார்த்துக்கொண்டு செல்கிறார்கள் என்றால் இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று செங்கம்மாவிடம் கடன்பட்டவராக இருக்கலாம் இரண்டு செங்கம்மாவிற்கு கடன்கொடுத்தவராக  இருக்கலாம். இரு தரப்பும் செங்கம்மாவை நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது குறைவு. சொல்லப்போனால் செங்கம்மாவை யாரும் ஏறெடுத்து பார்ப்பது கிடையாது. வருகின்ற வாடிக்கையாளர்கள் குனிந்து அவளிடமிருக்கும் மீனையோ அல்லது கருவாட்டையோ பார்ப்பது வழமை. 

செங்கம்மாவை பற்றிக் கூறலாம்.
நல்ல முகவெட்டு.கீழ் முன் வரிசைப்பல்லில் இரண்டு பற்கள் புதிதாய் கட்டியிருந்தாள்.வித்தியாசம் தெரிந்தது. வாய்ப்புற்றுநோய் தொடர்பான ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டபின் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இதர பிற சேர்மானங்கள் போடுவதை நிறுத்தி இரண்டு வருடமாகிறது. 
கழுத்தில் எப்போதும் ஐந்து பவுணுக்கு குறையாத இரட்டைப்பட்டு சங்கிலி இருக்கும். இரண்டு பெரிய தோடுகள் அதன் பாரத்தில் காது இரண்டும் கீழ்பக்கமாக கொஞ்சம் இழுபடத்தொடங்கியிருந்தது. முக்கியமாக பச்சைக்கல் போட்ட பட்டாணி சைஸ் மூக்குத்தி. தவிர வலது கையில் ஒரு சோடி ஐம்பொன் காப்பு. வேறு ஆபரணங்கள் கிடையாது. அவ்வப்போது சுருட்டு அடிக்கும் பழக்கமுண்டு.ஆனால் வேலை நேரத்தில் கிடையாது. அனேகமாய் கறுப்புக்கலர் பருத்தி சேலைக்கு வெள்ளைக்கலர் பிளவுஸ் போட்டிருப்பாள். அதில் தெளிக்கும் வாசனைத்திரவியம் குடலைப்பிரட்டும் மீன் நாற்றத்திற்கு ஓரளவில் சாந்தி அளிக்ககூடியதாக இருக்கும்.
தலை நரைக்க தொடங்கி விட்டது. வயது கணிக்க முடியவில்லை. கல்யாணம் ஆகி விட்டதா ம்க்கும் தெரியவில்லை.. ஆனால் தன்னிடம் இல்லாத மீனை கேட்பவர்களுக்கு எதிர்பக்கம் கை காட்டி "மோளிட்ட வாங்கிட்டு போ" என்பாள். ஞாயிற்றுகிழமை தவிர்ந்த வாரத்தின் 6 நாட்களும் காலை 7.00 முதல் மாலை 4.00 வரை செங்கம்மாவிடம் மீன், கருவாடு முதலியன பெற்றுக்கொள்ளலாம்.

செங்கம்மாவுடன் சேர்த்து மொத்தம் 23 வியாபாரிகள் அந்த சந்தைக்குள் இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் கல்லா நிறைவது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான். நன்றாக வியாபாரம் நடக்கும் நாளில் ஏன் செங்கம்மா வியாபாரம் செய்ய வருவதில்லை. அவள் குடும்ப பிண்ணனி என்ன என்பதெல்லாம் விடை தெரியா மர்மங்கள். சிலர் அவள் ஞாயிறுகளில் கோயிலுக்கு செல்கிறாள் என்பார். சிலர் அவள் இந்து அல்ல ஆண்டவர் ஊழியத்திற்கு செல்கிறாள் என்பார். இருந்தாலும் யாராலும் எதனையும் உறுதிப்படுத்தமுடியவில்லை.

செங்கம்மாவிடம் செதில் படிந்த பிறவுன் கலர் மணிபர்ஸ் ஒன்று உண்டு. அதனுள் ஒரு 1110 நோக்யாவுடன் நூறு இருநூறுகளுக்கு மேல் பணம் இருப்பதில்லை.
அந்த மணிபர்ஸை சாரி பிளவுஸுக்குள் செருவி வைத்திருப்பாள்.

அந்த 1110 விளிம்பில் ஒரு மெலிதாய் கத்தி வெட்டிய அடையாளம் இருக்கும். அதன் பின்னால் கூட ஒரு கதை இருந்தது. 
ஒரு தடவை செங்கம்மா மீன் நிறுத்துக் கொடுக்கும் போது தட்டு விளிம்பில் இருந்த 1110 நோக்யாவும் நிறுத்த மீனோடு போய் விட்டது. மீனை வாங்கிய கனவான் வீட்டு சட்டிக்குள் எல்லா மீனையும் போட்டு கழுவி விட்டு கத்தியில் வைத்து குறுக்காய் வெட்டும் போதுதான் ஏன் துள்ளுமன்டி வெட்டுப்பட மாட்டேன்கிறது என புரட்டி பாத்திருக்கிறார். பார்த்தால் 1110 கைகளை கோர்த்த படி ஆஃப் ஆகுவது தெரிய, அல்லோகலபட்டு ஆன் பண்ணி அதிலிருந்து தன் நம்பருக்கு கோல் பண்ணி பார்த்தால்....
 கனவான் போன் மின்னியது..... செங்கம்மா கோலிங் என்று.

அடித்துப்பிடித்து திரும்பவும் மீன்சந்தைக்கு போய் இடதுபக்கமாய் திரும்பி  போனைக்கொடுக்க,
"கறுமத்த இவடம் முழுக்க தேடிட்டு இருந்தேன். கொண்டா இங்கே என்று விட்டு போன் எடைக்கு சமனான மீனை தூக்கி அந்த கனவானிடம் கொடுத்திருக்கிறாள் நீதி தவறாத செங்கம்மா.

இந்த சம்பவத்தில் ஒரு விடயம் உங்களுக்கு இடித்திருக்கலாம். ஒரு கனவானிடம் எதற்கு செங்கம்மாவின் போன் நம்பர் இருக்க வேண்டும். 

செங்கம்மாவின் மைன்டுக்குள் ஒரு பெரிய டேற்றா பேஸ் இருந்தது. தன் வாடிக்கையாளர்களின் பெயர்கள் எல்லாம்  நம்பர்களிலேயே அந்த பேசில் பதிவு செய்து வைத்திருந்தாள். அனேகமானவர்களிடம் விற்கும் மீனிற்கு காசு வாங்குவதில்லை. செங்கம்மாவிடம் கடன் கொடுக்க வேண்டியவர்களும் செங்கம்மாவிற்கு கடன் கொடுத்தவர்களும் அவளின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வார்கள்.  கணக்கு அவர்களுக்குள்ளேயே தீர்க்கப்படும். இடையில் ஏதும் வில்லங்கங்கள் ஏற்பட்டால் மட்டும் இடப்பக்கம் திரும்பி முறையிடுவார்கள். ஆயிரம் இரண்டாயிரங்களில் தொடங்கி
ஒரு லட்சம் வரைக்கும் உடன் பணமாக செங்கம்மாவின் ஏஜண்டுகளிடம் பெற்றுக்கொள்ள முடியும். இதர பிற செங்கம்மாவின் வட்டிப்பொலிசிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.  I agree பட்டனிற்கு பதிலாக அவர்களின் போன் நம்பரை மாத்திரம் 1110 ல் பதிவு செய்து கொண்டால் மட்டும் போதும்.

சந்தை நிர்வாகம் எக்ஸ்செப்சன் லிஸ்டில் செங்கம்மாவை வைத்திருந்தது. அதற்கு சில பல காரணங்கள் இருந்தது. மரியாதையை கொடுத்து அதனை வாங்க வேண்டும் முக்கியமாக மீன் சந்தைக்குள். ஒரு தடவை போனால் அதனை மீள பெற முடியாது. செங்கம்மாவிற்கு தமிழில் தெரியாத வார்த்தைகள் என்று எதுவும் கிடையாது. ஆனால் எட்டாம் ஆண்டை தாண்டியிருப்பாள் என்பதே பெரிய சந்தேகம். 

ஒரு தடவை புதிதாய் வந்த வரி ரிக்கெட் செக்கர் விஷயம் தெரியாமல் "காட்டனை ரிக்கெட்டை" என்றிருக்கின்றார். 
அவள் மீன் அள்ளிய கையாய் இருக்கிறது, கழுவிவிட்டு காட்டுகிறேன் என்றிருக்கின்றாள். இவர் இல்லை இப்போதே காட்ட வேண்டும் என்று ஒற்றைக்காலை தூக்கி சொறிந்திருக்கிறார். செங்கம்மா அலட்சியமாய் முடியாது வேண்டுமானால் பர்ஸினுள் இருக்கிறது எடுத்து பார்த்துக்கொள் என்றிருக்கிறாள்.அன்றிலிருந்து செங்கம்மாவின் டிக்கெட்டுக்கள் செக் பண்ணப்படுவதில்லை. 

செங்கம்மாவிற்கு சந்தையினுள் ஓரிருவரை தவிர எதிரிகள் தொகையே கணிசமாக இருந்தது. 

மீன் சந்தைக்குள் இரண்டு கருவாட்டுக்கடைகள் இருந்தது. கருவாட்டுக்கடை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் கருவாடு விற்பதற்கு நிர்வாகம் திடீரென்று தடை உத்தரவு போட்ட போது அந்த வருடம்  கருவாட்டுக்கடை எடுத்த அன்ரனியும் தாஸும் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

செங்கம்மாவின் வியாபாரம் ஒரு மூலையால் ஆட்டம் கண்டது. பெரும்பாலானவர்கள் செங்கம்மாவின் கருவாட்டுக்காகவே அவளிடம் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். அவளிடம் வாங்கிய கருவாடுகள் குழம்புக்குள் போட்டதும் அன்று பிடித்த மீன்கள் போலாகிவிடும். செங்கம்மாவின் பாரைக்கருவாட்டுக்கென்று தனிச்சுவை இருந்தது. ஒரு தடவை உண்டு விட்டால் நாக்கு தினமும் அது வேண்டும் என்று உச்சுக்கொட்டும். அந்த பதத்தில் கருவாட்டை பக்குவப்படுத்திக்கொள்வதற்கு தேவையான உரிய உப்புக்கலவைமுறை செங்கம்மாவிற்கு மட்டுமே தெரிந்திருந்தது. அந்த இரகசியத்தை அறிந்து விட வேண்டும் என்ற அவாவில் அவளிடம் வேலைக்கு அமர்ந்து இறுதியில் மூக்குடைபட்டவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது.

அவளிடம் கருவாட்டை மெயினாக வாங்கிவிட்டு  மீனை சைட்டாக வாங்குபவர்களே அதிகம். தடை உத்தரவின் பின்னர்
அந்த வருடத்தின் இறுதிப்பகுதிகளில் மேல் சாக்கில் சாதரண மீன்களைப்பரப்பி விட்டு கீழ் சாக்கிற்குள்  கருவாட்டை வைத்து விற்கவேண்டியிருந்தது. அனேகமானோருக்கு விடயம் தெரியாமல் செங்கம்மாவிடம் கருவாடு இல்லையே என்று முணுமுணுத்தவாறே அன்ரனி,தாஸின் கடைப்பக்கமாக நகரத் தொடங்கியிருந்தார்கள். நெருங்கிய வாடிக்கையாளர்கள் சிலருக்கு மட்டுமே செங்கம்மாவிடம் கருவாடு இருப்பது தெரிந்திருந்தது. அதைப்பெற்றுக்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கும் செங்கம்மாவிற்கும் இடையில் ஒரு இரகசிய வார்த்தை பரிமாறப்பட்டது.

"கண்ணில்லாத மீன் இருக்கா"

என்று கேட்டடால் செங்கம்மா எவ்வளவு வேண்டும் என்று கேட்டு விட்டு அக்கம் பக்கம் பார்த்து சாக்கிற்கு கீழ் துழாவி எடுத்து கொடுப்பாள். காலப்போக்கில் இரகசிய வார்த்தை நிறைய வாடிக்கையாளர்களுக்கு பரவ மீண்டும் செங்கம்மாவின் வியாபாரம் சூடு பிடிப்பதை அன்ரனியும் தாஸூம் கடைக்குள் இருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்கள்.

அன்றும் அப்படித்தான் கண்ணில்லாத மீனைக்கேட்டவனுக்கு ஒரு கிலோ நிறுத்துக்கொடுத்த மறு கணம் அவளின் இடம் நிர்வாகத்தால் ரெய்டு செய்யப்பட்டு சாக்கு கீழ் இருந்த கருவாடுகள் யாவும் மொத்தமாய் கைப்பற்றப்பட்டு மறு நாள் பத்திரிகையிலும் பிரசுரமாகியது. 

"சுகாதரத்திற்கு ஒவ்வாத விதத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கருவாடுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன."

இடப்பக்க மூலையில் செங்கம்மாவின் புளோர் பண்ணிய முகத்துடன் கருவாடு கைப்பற்றப்படும் புகைப்படம்.

செங்கம்மா ஆடிப்போய்விட்டாள். ரிக்கெட் செக்கர் திரும்பவும் அவள் இடத்திற்கு வரத்தொடங்கியிருந்தார். நடப்பவற்றை ஜீரணிக்க முடியாமல் இருந்தது. செங்கம்மாவின் வியாபாரம் மங்கி கொண்டு செல்வதை சந்தைக்குள் இருந்த அனைவரும் அவதானித்துக்கொண்டிருந்தார்கள். இதுதான் நேரம் என்று அவளின் கீழிருந்த சில ஏஜண்டுகள் சிலர் பணத்துடன் நழுவுவதும் பொய்க்கணக்குகள் ஒப்பிப்பதுமாய் இருக்க செங்கம்மாவின் டேற்றாபேசில் எரர் வரத்தொடங்கியிருந்தது. கைகளில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. முகங்களை முன்பு போல இனங்காண முடியவில்லை. 

அன்ரனியின் கடையிலும் தாஸின் கடையிலும் அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் அலை மோதத்தொடங்கியது. என்ன செங்கம்மா உன் கருவாட்டைப்போலவே இருக்கிறது என்று வேறு சிலர் அவளிடம் கேட்டார்கள். 

முதல் முதலாக சந்தேகம் முளை விட்டது. உண்மையிலேயே அவளிடம் கைப்பற்றிய கருவாட்டை அழித்தார்களா? என்று.எந்த ஆதாரமும் இல்லை. செங்கம்மா அமைதியாக இருந்தாள். அவ்வப்போது ஞாயிற்றுக்கிழமைகளிலும் வியாபாரத்திற்கு வரத்தொடங்கினாள். வருடம் முடிந்து கொண்டிருந்தது.

அடுத்த வருடத்திற்கு கருவாட்டுக்கடைகளை குத்தகைக்கு எடுப்பவர்கள் ஆரம்ப கேள்வித்தொகைக்கு மேலதிகமாய் தாங்கள் விரும்பும் கேள்வித்தொகையை எதிர்வரும் 31.12 ற்கு முன் பதிவுத்தபாலில் சமர்ப்பிக்குமாறு நிர்வாகம் பார்க்கும் இடமெல்லாம் விளம்பரம் ஒட்டியது. 

எப்படியும் அன்ரனி , தாஸ், செங்கம்மா மூவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்பது தெரிந்தது. இரண்டு கடையில் யாருக்கு எது போகுமென்று ஊகிக்க முடியவில்லை. அத்துடன் செங்கம்மா கடையை எடுத்தால் இன்னுமொரு பிரச்சனையும் இருந்தது அவள் கருவாட்டுக்கடைக்குள் வைத்து சாதாரண மீனை விற்பதற்கும் நிர்வாகம் அனுமதிக்க போவதில்லை. செங்கம்மா
என்ன செய்யப்போகிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை.

அதே நேரம் நிர்வாகத்தின் பின்பகுதிக்குள் செங்கம்மாவின் பெயரில் ஏதும் பதிவுத்தபால் வந்ததா என்று இறுதி நாள் வரை அலசப்பட்டது எந்த கடிதமும் வரவில்லை. அனைவரும் தலையை பிய்த்துக்கொண்டார்கள். தாஸும் அன்ரனியும் நாளை தமக்குத்தான் கடை என்று கொக்கரித்தார்கள். 

மறுநாள் பதிவுத்தபால்கள் உடைக்கப்பட்டது.  செங்கம்மாவைத்தவிர அனைவரும் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். முடிவுகள் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

அன்ரனிக்கோ அல்லது தாஸிற்கோ கடை கிடைக்கவில்லை.

அவர்களின் கேள்வித்தொகையிலும் பார்க்க ஒரு ரூபாய் அதிகம் கோரப்பட்டு இருந்த ஒரு பதிவுத்தபால் இருந்தது. 

மறுநாள் இரு கருவாட்டுக்கடைகளுக்குமுரிய புதிய உரிமையாளரின் திறப்பு விழா .  அது திறப்பு விழாவா? என்று சந்தேகப்படாத அளவிற்கு கடைக்கதவு திறந்திருந்தது . எட்டிப்பார்த்தால் விற்பதற்கு கருவாடு எதுவும் இல்லை. கருவாடு  வாங்க வந்தவர்களிற்கு உள்ளிருந்து பதில் மட்டும் வந்தது.

"அம்மாட்ட வாங்கிட்டு போங்கோ"


                                **************











#அற்பபிறவி

10 comments:

  1. Welcome back.அதுசரி இவ்வள அக்குவேறா செங்கம்மாவ சைட் அடிச்ச விசயம் அவாக்கு தெரியுமோ!!

    ReplyDelete
    Replies
    1. அது வந்து ...
      அத சைட் அடிச்ச என்டுறதிலும் பார்க்க ஐ லைக் கேர் சேர்வைவல் ஸ்டைல்.

      Delete
  2. இந்த கதை இன்னும் தொடர்ந்திருக்கலாமோ எண்டு தோணுது.
    Super da

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எல்லாத்தையும் கண் முன்னால நிறுத்திட்டிங்க செமை நண்பர் ❤😍

    ReplyDelete
  5. Replies
    1. கனவான்???? 🤔🤔🤔

      Delete
    2. ஆ கிடைச்த போனை திருப்பி கொடுத்தாரில்ல. அப்போ கனவான்தானே

      Delete