About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Saturday, April 18, 2020

சாயாவின் கதைகள்

ஜீவிஎம்மின் படங்களில் காஃபி சொப், அதில் எதிரும் புதிருமாய் ஒரு ஹேமானிக்காவும் சத்தியதேவுமோ அல்லது ஜெர்ஸியும் கார்த்திக்குமோ இல்லை என்றால் அது தலைவரின் பெயரில் வேறு யாரோ படம் எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அது ஏன் கட்டாயம் ஒரு காஃபி சொப் சீன் என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன். அந்த சீனில் இருக்கும் பொஸ்ஸான மேஜிக்கை டீகோட் பண்ணுவதற்கு நிறைய தடவைகள் முயற்சித்து இருக்கிறேன். முடியவில்லை. எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்படிக்காத ஏதோ ஒரு எலிமன்ட் அந்த சீன்களில் சுற்றி சுற்றி மாயம் செய்து கொண்டு இருக்கும்.

காஃபி என்பதும் ஒரு வித போதைதான். என்ன கொஞ்சம் கலரான போதை. ஜிவிஎம் மேட் காஃபியின் கலவையைத்தான் கண்டு பிடிக்க முடியவில்லை. நம்மூர் சாயாவை போட்டு ஒரு ஆத்து ஆத்தியிருக்கிறேன். கீழே. சோ வாசித்துவிட்டு 'கப்'பென்று பிடித்துக்கொள்ளுங்கள்

டிரிங்கர்ஸ்

அண்ணர் கேத்திலின் வாயை பார்த்துக்கொண்டிருந்தார். ஆவி குபு,குபு என கொஞ்சம் வேகமாக வந்து கொண்டிருந்தது. அண்ணர் ஒரு பிளேன்ரீ அடிக்ரர். செயின் டிரிங்கர். ஒரு நாளைக்கு 10 தரம்  கொடுத்தாலும் குடிப்பார். இருந்தாலும் பாவம். குடுக்க யாரும் இல்லாத காரணத்தால் வீட்டில் இரண்டு தரம், வேலையிடத்தில் இரண்டு தரமுமாக ஒரு நாளைக்கு 4 தடவைகள் மட்டுமே கிடைக்கும். இப்போதைக்கு சமாளித்துக்கொள்கிறார். ஆனாலும் அதிலும் ஒரு பிரச்சினை இருந்தது. உரிய நேரத்தில் அது கிடைப்பதில்லை. 

அடிக்சன் லெவலில் இருப்பவர்களுக்கு அந்தந்த நேரத்தில் கிடைக்காவிட்டால் சைட் எபக்ட்ஸ் காட்டத்தொடங்கும், வேலை ஓடாது. சும்மா இருக்க சொல்லும்.இந்த நாட்களில் சும்மா இருப்பது சுலபமல்ல என்பது விளங்கியிருக்கும்.நித்திரை தூக்கி போடும்.மூளை இருந்தால் மந்துவது போல இருக்கும்.அட்மினிஸ்ரேசனில் டாப் லெவல் என்றால் கொதி வரும், அந்த கொதியில் சுட வைத்து  டீ போடலாம். வேர்க் புரம் கோமாயிருந்தால் கீ போர்டில் விரல்கள் எல்லாம் பட்டு பின்பக்கமாய் வளைவது போல ஒரு கலுசினேசன்,கை,காலுக்கு இரத்தம் ஓடாதது போல... ப்ளா ப்ளா ப்ளா... 

அண்ணர் பிளேன்டீக்கு அடிமையாகியது A/L படிக்கும் காலத்தில் விழித்திருப்பதற்காக என நினைக்கிறேன். அந்த நேரத்தில் இரவு 12 ஒரு மணிக்கெல்லாம்  குபுக், குபுக் என்று தண்ணி கொப்பளிக்கும் சத்தம்  கேட்கும். எலி பானைக்குள் விழுந்து தத்தளிக்கறதோ என்று போய் பார்த்தால் அண்ணர் குனிந்து அடுப்புக்கு ஆக்சிஜன் கொடுத்தபடி இருப்பார். அப்ப கொடுக்க ஆரம்பித்தது இப்பவும் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்.இடமும் காரணமும்தான் வேறு.

அவரின் அடிக்சன் சாதாரண லெவல் கிடையாது. இப்போதுதான் சகட்டு மேனிக்கு டீகப்பும் பிஸ்கட்டும் அல்லது மிக்சருமாக 

#மொபைல் போட்டோக்கிராபி 
#பிளாக்ரீ வித் பிஸ்கட்
#மாலை மங்கும் நேரம் 

வகையறா போஸ்ட்கள் எல்லாம் இன்ஸ்டாவிலும் எஃப் யிலும்  வண்டல் வண்டலாக கொட்டிக்கிடக்கிறதே. அதையெல்லாம் மொபைலில் ஸ்கிரீன்சொட் அடித்து ஒரு தனி போல்டரினுள் போட்டு வைத்திருக்கிறார். சாயா கிடைக்காத நேரங்களில் அதை ஓப்பன் பண்ணி ஓட்டோ ரொட்டேட் மோர்சனில் விட்டு ஏதும் வருகிறதா என சரித்து பார்த்துக்கொள்ளுவார். 

அண்ணரைப்போல ஒரு சிலர் மட்டும்தான் சுய தயாரிப்பில் குடிப்பவர்களாக இருப்பார்கள். எல்லாரும் ஜெஸ்ஸி பிங்மேன் கிடையாதே.  

பிங்மேனாய் இல்லாத டிரிங்கர்ஸ்க்கு இருக்கும் ஒரே பெரிய பிரச்சினை மேக்கிங். சொந்தமாக டீ போட்டுக்கொள்ள தெரியாது.நாகரீகமாய் ஆங்கிலத்தில் சொல்லிக்கொள்ளலாம்.இன்குளூடிங் மீ. 

"கடைசியாக அதை டிரை பண்ணும் போது சீனி கரையவில்லை. அப்புறம். அப்புறமென்ன பாலை விட்டு உப்பையும் போட்டு உப்புமா செய்து சாப்பிட்டேன்"

உலகின் மிக மோசமான பாவிகள் டீ போடத்தெரியதவர்கள்தான். அவர்களுக்காகவே...

 மேக்கர்ஸ்

வீடென்றால் காலை ஆறு மணி சூரியகதிர் யன்னலுக்குள்ளால் முகத்தில் அடிக்க மறுபக்கமாய் திரும்பி படுக்கும் போது ஈரக்கூந்தலை ஒரு கையால் துவட்டியபடி மறு கையில் கார்ட் சேப் பொறித்த  காஃபி மக்குடன் பட்டுப்புடவை சரசரப்பது தெரியும். பட்டு அருகில் வந்து  கூந்தலின் ஈரத்தை முகத்தில் உதறி விட்டு நித்திரையை குழப்பி  குட் மோர்னிங்குடன் கோப்பையை கையில் கொடுத்து எழுப்பும் போது  ....டாமிட்...

சோம்பேறிக்கழுதயே எழும்பி பல்ல மினுக்கிட்டு டீயை குடிக்ற வழியப்பாரு, எப்ப போட்டது பார், ஆறுது கிடந்து என்கின்ற அம்மாவின் டீ மேக்கிங் வகையறாவுக்குள்தான் இன்னும் இருப்பதால் முதல் பந்தியில் சொன்ன பெட் காஃபீ கான்சல். 

வீட்டை விட்டு வெளியில் போனால்  ஒவ்வொருவருக்கும் வாடிக்கையான ஒரு நட்சத்திர டீக்கடை இருக்கும். அதற்குள் போனால் எரிநட்சத்திரம் போல தகிக்கும்.எங்கள் ஊரில் எல்லாம் அப்படி ஒரு கடையில் கூட வாடிக்கை பிடிப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது. ஆறேழு கடைகள் இருக்கிறது. எல்லாமே முதல் தரம்  போகின்றீர்கள் என்றால் ஆர்டர் எடுக்க யாரும் வர மாட்டானா, எழும்பி போகலாமா, விடலாமா என்று பத்தாவது நிமிசம் யோசிக்கும் போது "மாஸ்டருக்கு என்ன தருவம்" என கேட்கும் ரகக்கடைகள். ஆனால் அந்தக்கடைக்கு நீங்கள் வாடிக்கை என்பதை உணர்த்தி விட்டீர்கள் என்றால் பிறகு அது சொர்க்கம் போல. அப்போது யாரும் உடனேயே ஆர்டர் எடுக்க வருவானா என கேட்கிறீர்களா? அதுதான் இல்லை. நாங்களே எடுத்து சாப்பிட்டு கொள்ளலாம். சாப்பிடும் வடைக்கும், குடிக்கும் டீக்கும் ஒரு கொப்பியில் கணக்கு போட்டு மாதக்கடைசியில் மொத்தத்தை கூட்டி அரைவாசிக்காசை கொடுக்க கூடிய ஒரு சொர்க்கம்.

அந்த வாடிக்கையை பிடித்து கொடுப்பது யாரென்று தேடிப்பார்த்தால்.....

காலை ஆறுக்கு கடையை திறந்து பாயிலரை போட்டு தண்ணியை கொதிக்க வைத்து, இரவு பூட்டும் வரைக்கும் அதன் 100 பாகை சீயில் அவிந்த அரைவாசி முகத்தை மட்டும் மறைப்புக்குள்ளால் பார்க்கலாம். அவர்கள் பெரும்பாலும் மறைப்பை விட்டு வெளியில் வருவதில்லை. அதிகம் பேசுவதில்லை.அவர்களுக்கு என்றொரு தனிகலவை இருக்கும். இரண்டு கையிலும் கப்பை வைத்து இடம் வலமாக இழுத்து ஆத்துவது மட்டும் மறைப்பின் மேலால் தெரியும்.

பெரும்பாலான தேநீர்கடைகளையும் , கூல்பார்களையும் கவனித்துப்பாருங்கள். ஒரே ஒரு டீ மேக்கரைத்தான் நிரந்தரமாக வைத்திருப்பார்கள். மற்றவர்களை அடிக்கடி தூக்கினாலும் டீ மேக்கர்ஸை மட்டும் மாற்ற மாட்டார்கள். ஏனென்றால் ஒரு டீ மேக்கர் ஒரு கடையை விட்டு போகிறான் என்றால் சீதேவி அந்தக்கடையை விட்டு அவனுடனே போகிறது என்பது ஒரு மரபுவழி நம்பிக்கை.

நான் போகின்ற கடையில் மேலே சொன்ன அடையாளங்களில் ஒரு புள்ளி குறையாமல் ஒரு டீ மேக்கர் முழுப்பெயர் தெரியாது.. யோகு ஆ .. என்றால் போதும்,  யோகுவின் கதையை பின்னால் சொல்கிறேன்.

வாடிக்கையான கடையென்றால் நுழைந்து என்ன வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. டீயோ,பாலோ,பிளேன்ரி இஞ்சியா அல்லது சமஹனா , வித்  ஓ வித்தவுட் சுகர் இரண்டு நிமிடத்திற்குள் உங்கள் மேசையில் இருக்கும்.

அலுவலகங்கள் என்றால் குறைந்தது ஒரு டீ மேக்கரையாவது சொந்தமாக வைத்திருப்பார்கள். அந்த டீ மேக்கர்ஸ்களெல்லாம் கடவுள் போல. கடவுள்களுடன் யாரும் முரண்படுவது கிடையாது. அவர்களுக்கு ஒவ்வொருவரின் நாக்கு கிஸ்டரியும் அத்துப்படி. எந்த நேரத்தில் யாருக்கு என்ன டீ எந்த அளவில், என்ன கலவையில் கொடுக்க வேண்டும் என்ற அட்டவணையெல்லாம் மனப்பாடம்.
டிப்பார்ட்மென்ட் கெட் இடம் ஏதும் வேலை ஆக வேண்டியிருந்தால் கூட அந்த டீ மேக்கர்ஸ்தான் ஆகச்சிறந்த ஆபத்பாந்தவர்கள்.


டிரிங்கர்ஸ் மீட் மேக்கர்ஸ்

யோகுவின் கதைக்கு வரலாம். வயது ஒரு அறுபதுக்குள் இருக்கும். முடி காதுக்கு பக்கவாட்டில் நரைத்து உச்சியில் உதிர தொடங்கிவிட்டது. கிளீன்சேவ்.யோகுவின் கடைக்கு போகின்றவர்களில் யோகுவின் டீ யோ அல்லது பிளேன்ரீயோ குடிக்காமல் வெளியேறுவது கிடையாது. கடை முதலாளி யோகு என்று நினைப்பவர்கள்தான் அதிகம். ஆனால் அது உண்மை கிடையாது. கல்லாப்பெட்டிக்கு பக்கத்தில் ஐம்பொன் மோதிரத்தை விரலில் சுழட்டியபடி யாரும் தெரிந்தால் அவர்தான் கடை முதலாளி. முதலாளிக்கும் யோகுவுக்கும் நல்லதொரு அன்டர்ஸ்டாண்டிங் இருந்தது. மாத இறுதி என்றால் கொப்பியை தட்டி கடன் கணக்கை மண்டைக்குள் ஏற்றி கொண்டு காசு கொடுக்காவிட்டால் டீயில் உப்புத்தான் போடுவேன் எனச்சொல்லி சிரிக்கிற,  வியாபார தந்திரம் தெரிந்த நூற்றில் ஒரு ஆள் யோகு. 

காலை ஆறிலிருந்து மத்தியான சாப்பாடு வரைக்கும் யோகுவின் கை மேலும் கீழுமாய் டீ ஆற்றியபடியே இருக்கும். பிறகு மீண்டும் நான்கிற்குதான் கடை திறக்கும். சுற்றுவட்டாரத்தில் இருந்த கடைகளுக்குள் யோகுவின் கடையில் மட்டும்தான் எப்போதும் தண்ணி கொதித்தபடி இருக்கும். மற்ற கடைகளில் முதல் நாள் சுட வைத்த தண்ணியிலும் சில வேளைகளில் டீ போடுவார்கள். கேட்டால் அவர்கள் மட்டும் சுடுவார்கள். விஷயம் தெரியாமல் அந்த கடையின் டைம்லைனுக்குள் நுழைகின்ற டிராவலர்ஸ் எல்லாம் அதுதான் டீ என்று நினைத்து குடித்து கொள்வார்கள்.

கடை திறந்ததில் இருந்தே யோகுதான் அங்கு டீ மேக்கர். பத்து வருட அனுபவம். டீயின் எந்த புள்ளியில் எந்த சுவை இருக்கும் என யோகுவை கேட்டால் தெரியும். 

அந்தக்கடை அனேகமானவர்களுக்கு பிடித்து போக இரண்டு காரணங்கள். ஒன்று.யோகுவின் சுத்தம். அதற்கு உச்சரிப்பு கேட்டால்  சு...த்...த..ம் என்று அதைக்கூட எழுத்துக் 'கூட்டி' விட்டுத்தான் சொல்வார். தலைமுடி விழாமல் தலையை சுற்றிக்கட்டிய ஆரஞ்சுக்கலர் தேங்காய்ப்பூ துவாய். முக்கால் கை சேர்ட், பழுப்புக்கலர் வேட்டி ஆங்காங்கே தேயிலை கறைகள். அவ்வளவுதான் யோகுவின் தோற்ற உலகம்.

இரண்டாவது  காரணம், கடை திறந்தால் பூட்டும்வரைக்கும் யோகுவைப்போலவே தன் வேலையை செவ்வனே செய்கின்ற மிலேனியம் மேக்  பனசோனிக் எப்.எம்.ரேடியோ பெட்டி. யோகுவிற்கு எண்பது தொண்ணூறுகளின் பாடல்களில் பி.எச்.டி முடிக்கின்ற அளவு ஒரு நொலேட்ஜ் இருந்தது. ஆனால் இப்போது ரேடியோவைக்கேட்டாலே வெறித்தனமாக இருக்கிறது என்று யோகு அடிக்கடி புலம்புவதை காணலாம்.

அந்தக்கடையும்  யோகுவும் மெல்ல மெல்லமாய் அண்ணர் லெவலுக்கு என்னையும் அடிக்சன் லெவலிற்கு கொண்டு வந்தது. 

அண்ணைக்கு கடுஞ்சாயத்தில ஒரு டீ என்று யோகுவின் கை நீளும் போது நாக்கு அறியாமலேயே உச் கொட்டும். அங்கே பழகியது வீட்டில், ஆபிஸில் என்று எல்லா இடத்திலும் அதே கலவையில் டீ கேட்டது. கபெஃயின் லெவல் உடம்பெங்கும் கூடிக்கொண்டிருந்தது. ஒரு இரண்டு வருடம் அப்படியே யோகுவுடன் போயிருக்கும். திடீரென்று ஒரு நாள் பார்த்தால் கடை பூட்டியிருந்தது.

கடைவாசலில் 6*4 அளவில் ஐம்பொன் மோதிர முதலாளிக்கு பனர் அடித்துக்கட்டியிருந்தார்கள். அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் எல்லாம் ஆறிய பழைய தண்ணீரை கொண்டு வந்து வாசலில் ஊற்றிவிட்டு புதிதாய் சுட வைத்தார்கள். 

முப்பது நாட்கள் முடியும் வரை கடை திறக்கவில்லை. டீயை வெறுப்போடு குடித்த முப்பது நாட்கள் அவை.யோகுவின் டீ இல்லாமல் ஏதோ இழந்து விட்டது போல இருந்தது. அந்த கலவையில் எங்கேயுமே டீ கிடைக்கவில்லை. 

மீண்டும் கடையை திறந்தார்கள். ஐம்பொன்னின் மகன் வைரக்கல்லு மோதிரத்துடன் முதலாளி இடத்தினை  நிரப்பிக்கொள்ள.... யோகுவின் முகத்திலும் அன்றைய தினத்தின் டீயிலும் வழமையான உயிர்ப்பில்லை. கடைக்குள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பழைய முதலாளியை இழந்த கவலையாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். 

அன்றுதான் யோகுவிடம் கடைசியாக டீ குடித்தது.

மறுநாள் அதே நேரம், அதே இடத்தில் யோகு இல்லை. புதிதாய் நாலடி உயரத்தில் பிறவுன் கலரில்  நெஸ்கபே மிசின் வாங்கி போட்டிருந்தார்கள். காசு போட்டால்தான் டீயோ, காஃபியோ வரும்.ஊருக்குள் எங்கள் கடையில் மட்டும்தான் இருக்கிறது என்று வைரக்கல்லு ஏப்பம் விட்டது. கணக்கு கொப்பியை மெசின் ஆடாமல் இருக்க மேசைக்காலுக்கு அடியில் செருகியிருந்தார்கள்.

மெசினை எல்லா இடத்திலும்  வாங்கி கொள்ளலாம், யோகுவை எந்த இடத்திலும் வாங்க முடியாது என்பது அந்த மரமண்டைக்கு எப்போதுமே புரியபோவதில்லை. அன்றுதான் அந்தக்கடைக்குள் கடைசியாக கால் வைத்தது. 

ஊருக்குள் வேறு கடைகளில் எங்காவது யோகு வேலை செய்கிறதா என்று விசாரித்து பார்த்தேன்.ம்க்கும். எங்குமே இல்லை. ஒருவரின் வாழ்க்கை விபரம் என்று எதுவுமே தெரியாமல் அவரை தொலைத்து விட்டோமோ என்று உணர முடியுமா?. முடியும். யோகு அதற்கு உதாரணம். 

உஸ்தாட் ஹொட்டல் கரீம் பாய் போலவே யோகுவும் எங்கேயோ ஒரு இடத்தில், அதிகாலை பொழுதுகளில் தேநீர் தயாரித்து கொண்டுதானிருக்கும். நம்பிக்கை இருக்கிறது.

தேடிக்கொண்டிருக்கின்றேன்.

Subanallah.....



                                   ###########


#அற்பப்பிறவி

2 comments:

  1. அற்ப பிறவியின் அற்புதமான படையல். வாழ்த்துக்கள்.❤

    ReplyDelete